இயக்குநர் பா.ரஞ்சித்தின்
‘நீலம்’ அமைப்பு, ‘THE CASTELESS COLLECTIVE’ என்றொரு இசை நிகழ்ச்சியை சென்னையில்
ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு செல்ல பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால்
அலுவலகப் பணியில் சிக்கிக் கொண்ட காரணத்தால் துரதி்ர்ஷ்டமாக செல்ல இயலவில்லை.
யூ-ட்யூபில் இந்நிகழ்ச்சியின்
காணொளிகள் இப்போது காணக் கிடைக்கின்றன. ராக், ராப் மற்றும் சென்னையின் பிரத்யேக இசைவடிவமான
கானா ஆகியவற்றின் கலவையில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
விளிம்பு நிலை
சமூகத்தைச் சேர்ந்த இளம்தலைமுறை இளைஞர்களின் சுயாதீன இசை முயற்சிகள் இந்த மேடையில்
அருமையாக வெளிப்பட்டதை காண முடிந்தது. இந்த இசைப்பாடல்களின் அடிநாதம், சமத்துவ சமூகம்,
சமூகநீதி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். ஜாஸ் இசையின் மூலம் கருப்பின சமூகத்தின்
இசைப்புலமையும் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஓலமும் வெளிப்பட்டது. அதைப் போலவே சென்னையின்
பிரத்யேகமான அடையாளங்களுள் ஒன்றான, கானா ஒரு குறிப்பிட்ட வெளியைத் தாண்டி மைய சமுகத்தை
நோக்கி நகர வைக்கும் இம்மாதிரியான முயற்சிகள் அவசியமானவை.
சினிமா என்பதைத்
தாண்டி ஓவியம், ஆவணப்படம், இசை என்று பல்வேறு வழிகளில் தன்னுடைய அரசியல் குரலை ஒலிக்க
வைக்கும் பா.ரஞ்சித்திற்கு மனம் உவந்த பாராட்டும் நன்றியும்.
இடஒதுக்கீடு குறித்தான
பாடல் ஒன்றிற்கான சுட்டி தரப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சென்றால்
இதர பாடல்களையும் கண்டு, கேட்டு மகிழலாம்.
suresh kannan
No comments:
Post a Comment