Wednesday, December 27, 2017

‘நம்பிக்கையின் சம்பளம்' - Adam's Apples (2005)






நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்திற்கு அழிவேயில்லை. இந்தப் பிரபஞ்சம் உருவான முதல் கணத்திலிருந்தே இந்த தர்மயுத்தம் துவங்கியிருக்கக்கூடும். தேவனின் கருணைக்கும் சாத்தானின் வசீகரத்திற்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய திரைப்படம் இது. அறம் ஒருபோதும் தோற்பதில்லை என்கிற நீதியை வலுவாக சித்தரிக்கும் படைப்பு. மிக நுட்பமான திரைக்கதையைக் கொண்டது.

**

அதுவொரு புனர்வாழ்வு மையம். சிறையில் இருந்து பரோலில் வரும் கொடூரமான குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவது அதன் நோக்கம். அந்த மையத்தின் தலைவரும் மதகுருவுமான இவான், இறைவனிடத்தில் முழுமையான நம்பிக்கையைக் கொண்டவர். ‘சாத்தானின் சோதனையால்தான் நமக்கு தீமைகள் நேர்கின்றன. அவற்றை பொறுமையுடன் எதிர்கொண்டால் இறைவனின் அன்பை பெறலாம்’ என்பதில் தீவிரமான நம்பிக்கையுடையவர்.

நவ – நாஜி குழுவைச் சேர்ந்தவனான ஆதாம், சிறையில் இருந்து பரோலில் வெளியாகி அந்த இடத்திற்கு வருகிறான். சக மனிதர்கள் மீது இவான் காட்டும் அன்பும் பொறுமையும் ஆதாமை குழப்பத்தில் ஆழத்துகின்றன. ‘இம்பூட்டு நல்லவனா ஒருத்தன் இருக்கவே முடியாதே’ என்று சந்தேகப்படுகிறான். இவானின் நற்பண்புகள் அவனைக் குற்றவுணர்வில் ஆழ்த்துகின்றன. எனவே இவானின் மீது கடுமையான கோபம் கொள்கிறான்.

முன்னாள் குற்றவாளிகளான காலித்தும், குன்னாரும் இவானின் பேச்சைக் கேட்டு கட்டின பசுமாடு மாதிரி இருப்பது ஆதாமை மேலும் குழம்ப வைக்கிறது. “இங்கு வந்ததற்காக நீ ஏதாவது உருப்படியான வேலையைச் செய்ய வேண்டும்” என்கிறார் இவான். ‘சர்ச் வாசலில் இருக்கும் ஆப்பிள் மரத்திலுள்ள பழங்களை வைத்து கேக் செய்கிறேன்” என்று பதிலளிக்கிறான் ஆதாம். இந்தப் போட்டியில் வென்று இவானின் முகத்தில் கரி்யைப் பூச வேண்டும் என்கிற வெறி எழுகிறது ஆதாமிற்கு.

ஆனால் ஆப்பிள் மரத்தை பாதுகாப்பது அத்தனை எளிமையான வேலையாக இல்லை. பறவைகள் கூட்டமாக வந்து கொத்தித் தின்று பழங்களை சேதப்படுத்துகின்றன. என்ன முயன்றும் அவற்றைத் துரத்த முடியவில்லை. ‘சாத்தானின் சோதனை இது” என்கிறார் இவான். ஆதாம் அதை ஏற்கவில்லை. தன் கூட்டாளிகளின் மூலம் துப்பாக்கியைக் கொண்டு வருகிறான். ஆனால் அதற்குள் காலித் பறவைகளைச் சுட்டுக் கொல்கிறான்.

இவானின் அன்பான நடவடிக்கைகள் ஆதாமை எரிச்சல்பட வைக்கின்றன. அவருடைய நம்பிக்கையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்கிற வெறி ஏற்படுகிறது. ஒரு விவாதத்தின் போது இவானை கடுமையாகத் தாக்குகிறான் ஆதாம். ஆனால் சிறிது நேரம் கழித்து ரத்தக் களறியாக எழுந்து வரும் இவான், எதுவுமே நடக்காதது போல ஆதாம் உள்ளிட்ட மற்றவர்களிடம் உரையாடுகிறார். இதைக் கண்டு ஆதாமிற்கு வெறுப்பும் எரிச்சலும் அதிகமாகிறது.

இவானுடைய பின்னணித் தகவல்களை அருகிலுள்ள ஒரு மருத்துவரின் மூலம் ஆதாம் அறிகிறான். மருத்துவருக்கும் இவானின் மீது இதே மாதிரியான எரிச்சல் உள்ளதால் ஆதாமைத் தூண்டி விடுவது போல தகவல்களைச் சொல்கிறார்.  இவானுடைய இளமைப்பருவம் இன்பகரமானதாக இல்லை. மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவருடைய மாற்றுத்திறனாளி மகன் சக்கர நாற்காலியில் உறைந்து கிடக்கிறான்.

இவானால் இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு எப்படி இயல்பாகவும் அன்பாகவும் இருக்க முடிகிறது என்கிற கேள்வி ஆதாமைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. உடல்ரீதியாக சித்திரவதை செய்தாலும் இவானை எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் உளரீதியான தாக்குதலைத் துவங்குகிறான் ஆதாம். “கடவுள் உன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதெல்லாம் பொய். அவர் உன்னை பயங்கரமாக வெறுக்கிறார். அதனால்தான் உனக்கு இத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றன” என்று தொடர்ந்து கூறுகிறான்.

ஒரு கட்டத்தில் இவான் இதை நம்ப ஆரம்பிக்கிறார். அவருடைய காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டேயிருக்கிறது. அப்போதும் மனம் இளகாத ஆதாம் அவரை கடுமையாக தாக்குகிறான். இவானின் மனம் கலைவது சக குற்றவாளிகளையும் பாதிக்கிறது. அதுவரை இயல்பாக இருந்த அவர்கள் தங்களின் குற்றவுலகிற்கு மறுபடியும் திரும்புகிறார்கள். காலித் ஒரு பெட்ரோல் பங்க்கை கொள்ளையடிக்க ஆவேசமாக கிளம்புகிறான். அதுவரை இவனிடம் பேசிக் கொண்டிருந்த குன்னார் மெளனமாகிறான்.

இந்த மாற்றங்கள் ஆதாமைக் குழப்புகின்றன. இவானின் அன்பும் கருணையும் உண்மையாகவே மனிதர்களிடம் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது. இவானின் மீது மெல்ல இரக்கம் சுரக்கிறது. அவரைத் தூக்கிப் போய் மருத்துவமனையில் சேர்க்கிறான். ஆனால் மருத்துவர் அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறார். ‘இவானுக்கு பெரிய அளவில் மூளைக்கட்டி இருக்கிறது. அதனால்தான் காதில் ரத்தம் வருகிறது. இன்னமும் சில நாட்களில் அவர் இறந்து விடுவார்”.

காலித்திற்கும் ஆதாமின் கூட்டாளிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது. அவர்களை துப்பாக்கியால் காயப்படுத்துகிறான் காலித். எனவே அவர்கள் ஆயுதங்களுடனும் ஆட்களுடனும் திரும்ப வருகிறார்கள். ஆதாம் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்கிறான். தலையில் கட்டோடு அங்கு வரும் இவான் அவர்களைத் தடுக்க முயல, குண்டு அவர் தலையில் பாய்கிறது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிகிறார் இவான்.

இவான் இறப்பதற்குள் ஆப்பிள் கேக்கை செய்து அவருடைய அன்பைப் பெற வேண்டும் என்கிற காரணத்திற்காக சேதமடைந்தது போக மீதமிருக்கும் ஒரேயொரு ஆப்பிளில் கேக் செய்து மருத்துவனைக்கு எடுத்துச் செல்கிறான் ஆதாம். இவானின் படுக்கை காலியாக இருக்கிறது. மருத்துவர் ஆச்சரியமான தகவலைச் சொல்கிறார். “குண்டு பாய்ந்ததில் தலையில் இருந்த புற்றுநோய் குணமாகி விட்டது. மருத்துவ அதிசயம் இது”

மருத்துவனையின் வெளியே அமர்ந்திருக்கும் இவானுடன் இணைந்து கேக்கை உண்கிறான் ஆதாம். சில மாதங்கள் கடக்கின்றன. பரோலில் இருந்து இரண்டு புதிய குற்றவாளிகள் அங்கு வருகிறார்கள். கோபத்துடன் இவானைத் தாக்குகிறார்கள். இவானைப் போலவே ஆதாமும் அவர்களைப் பொறுமையாக கையாள்வதோடு படம் நிறைகிறது. ஆம். இவான், ஆதாமை தன்னைப் போலவே மாற்றி விட்டார்.

இவான், ஆதாம், ஆப்பிள், கிறித்துவ தேவாலயம், Book of job எனும் பழைய ஏற்பாட்டு நூல்.. என்று படம் முழுவதும் விவிலிய உருவகங்கள் நிறைந்திருக்கின்றன. தேவாலயத்தின் மணி அடிக்கும் போதெல்லாம் அதன் அதிர்வு காரணமாக ஆதாமின் அறையில் மாட்டப்பட்டிருக்கும் ஹிட்லரின் படம் நழுவி விழுவது நல்ல குறியீடு.

இவானாக Mads Mikkelsen-ம் ஆதாமாக Ulrich Thomsen-ம் அருமையாக நடித்திருக்கிறார்கள். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Anders Thomas Jensen.



suresh kannan

No comments: