Wednesday, December 20, 2017

A Man of Integrity - ஈரான் - சென்னை சர்வதேச திரைவிழா 2017


சென்னை சர்வதேச திரைவிழாவில் 19.12.2017 அன்று  மாலை பார்த்த ஈரானிய திரைப்படம் இது. 'இந்த சமூகத்தில் வாழ இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று ஒடுக்கப்பட்டவனாக இருக்க முடியும் அல்லது ஒடுக்குகிறவனாக. - என்பதுதான் இத்திரைப்படத்தின் மையம். 'அறத்திற்கும் கீழ்மைக்கும் இடையில் தத்தளிக்கும் ஒரு மனிதனைப் பற்றிய சித்திரம் இது. 

**

ஓர் ஈரானிய கிராமம். ரேஸா சிறிய அளவிலான மீன்பண்ணை தொழில் செய்கிறான். அவனுடைய மனைவி பள்ளியில் தலைமை ஆசிரியை. ரேஸா அடிப்படையில் நேர்மைக்குணம் படைத்தவன். 'கொஞ்சம் பணம் செலவு செஞ்சா உன் கடனை லேட்டா கட்ற மாதிரி மாத்தி தர்றேன்' என்று வங்கி அதிகாரி லஞ்சம் கேட்கும் போது முதலில் சற்று சஞ்சலப்பட்டு பிறகு உறுதியுடன் அதிக வட்டி செலுத்தினாலும் பரவாயில்லை என்று ஒழுங்கான வழியில் செல்கிறான்.

அவனுடைய நிலத்தை அபகரிப்பதற்காக அருகில் உள்ள தொழிற்சாலை நிறுவனம் ஒன்று பல்வேறு வழிகளில் இடைஞ்சல் செய்கிறது. ரேஸா நேர்மையாளனாக இருந்தாலும் அடிப்படையில் கோபக்காரன். தொழிற்சாலை ஊழியர் ஒருவருடன் நிகழும் கைகலப்பில் சிறைக்குச் செல்கிறான். பலமுள்ள எதிர் தரப்பு நிறைய பொய் சாட்சியங்களை வைத்திருக்கிறது. லஞ்சம் தர விரும்பாத ரேஸா நெருக்கடிகளை சந்திக்கிறான்.

அவனுடைய மனைவி உலக நடைமுறைகளை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளவள். எனவே தன் சகோதரனின் உதவியால் கணவனை வெளியே அழைத்து வருகிறாள். புற அழுத்தங்கள் வீட்டின் உள்ளேயும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குடும்ப உறவில் சில சிக்கல்களும்.

தொழிற்சாலை மறைமுகமாக தன் மீது நிகழ்த்தும் அநீதிகளை சட்டத்தின் வழியாக எதிர்கொள்ள எல்லா வழிகளையும் முயல்கிறான் ரேஸா. ஆனால் ஊழலும் லஞ்சமும் நிறைந்திருக்கிற அமைப்பின் கதவுகள் ரேஸாவிற்கு திறக்க மறுக்கின்றன. ஒரு கட்டத்தில் எதிராளியைப் பழிவாங்கும்  எண்ணம் இவனுக்குள் பெருகிக் கொண்டே போக, அறத்திற்குப் புறம்பான செய்கையில் ஈடுபடுகிறான். இவனுக்கு வெற்றி கிடைப்பது மட்டுமல்லாமல் அங்கீகாரமும் தேடி வருகிறது. ஆனால் அதை சுவைக்க முடியாமல் குற்றவுணர்வுடன் ரேஸா அழுவதுடன் படம் நிறைகிறது. 


**

படம் முழுவதும், இறுக்கமும் கோபமும் பொங்கி வழியும் முகமாக நடித்திருக்கும் Reza Akhlaghirad-ன் பங்களிப்பு அபாரமானது. இவரது மனைவியாக நடித்திருக்கும் Soudabeh Beizaee-ன் நடிப்பும் அற்புதம். ரேஜஸாவின் மனைவியும் நேர்மையானவர்தான். ஆனால் சூழல் அவரையும் தீமையின் பக்கம் நகரச் செய்கிறது. தன்னுடைய தலைமையாசிரியை பதவியைப் பயன்படுத்தி, கணவனின் எதிராளி மகளை அழைத்து மறைமுகமாக மிரட்டுகிறாள். அப்போது அவர் சொல்லும் வசனம் ஒன்று அபாரமானது. "ஆண்கள் தங்களின் பெருமிதம் காரணமாக நிகழ்த்தும் சச்சரவுகளையெல்லாம் பெண்கள்தான் தங்களின் நுண்ணறிவு கொண்டு போக்க முயல வேண்டும்"

பிடிவாத  நேர்மையுடன் இருக்கும் ரேஸா, மனம் மாறும் கட்டமும் நுட்பமானது. ஆட்சிக்கு எதிராக செயல்படும் அவனுடைய நண்பன் சில வருடங்களாக சிறையில் இருக்கிறான். அவனுடைய மனைவி சாலையில் உணவுப் பொருட்கள் விற்கும் பரிதாப நிலையைப் பார்க்கிறான் ரேஸா. 'என் கனவுகள் முழுவதும் கலைந்து விட்டன' என்று அழுகிறாள் அவள். ஆனால் தன் கணவனின் தியாகம் குறித்தான பெருமையும் அவளிடம் இருக்கிறது. 

கான் திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றிருக்கும் இத்திரைப்படம் மிக நிதானமாக ஆனால் அழுத்தத்துடன் தன்னுடைய மையத்தை நோக்கி நகர்கிறது. நேராக சித்தரிக்காமல் குறிப்பால் உணர்த்தும் பல நுட்பமான காட்சிகள் நிறைந்துள்ளன. எந்தப் பக்கம் திரும்பினாலும் லஞ்சத்தின் பக்கம் முட்டிக் கொள்ளுமளவிற்கு சமூக அமைப்பு கெட்டிருப்பது உலகளாவிய பிரச்சினைதான் போல.  இயக்கம்: Mohammad Rasoulof.

suresh kannan

No comments: