Thursday, December 28, 2017

மாற்றுத் திறனாளிகளுக்கு அனுதாபம் காட்டாதீர்கள் - The Intouchables




நீங்கள் ஒரு நெரிசலான பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு நிறுத்தத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் அதில் ஏறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உடனே என்ன செய்வீர்கள்? வரவழைக்கப்பட்ட பதட்டத்துடன் எழுந்து மற்றவர்களை ஒதுக்கி அவரை கூவி அழைத்து உங்கள் இருக்கையில் அமரச் செய்வீர்கள் இல்லையா?

இதன் மூலம் 'நான் ஒரு நல்லவன்;  மனிதாபிமானி' என்கிற எண்ணம் உங்கள் மனதினுள் பரவும். அந்த இன்பத்தை நன்கு அனுபவிப்பீர்கள், இல்லையா?

ஒருவகையில் நீங்கள் செய்தது சரியென்றாலும் இன்னொரு வகையில் அது முறையற்ற காரியம் என்பதை அறிவீர்களா? அது ஏன் என்பதை அறிய நீங்கள் The Intouchables என்கிற 2011-ல் வெளிவந்த பிரெஞ்சு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.

ஒரு கூட்டத்தில்  மாற்றுத்திறனாளிக்கு அனுதாபம் காட்டுவதின் மூலம் அவரை நீங்கள் தனிமைப்படுத்துகிறீர்கள், அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அவருக்கும் மற்றவர்களுக்கும் மீண்டுமொருமுறை நினைவுப்படுத்துகிறீர்கள், சுட்டிக் காட்டுகிறீர்கள். அத்தகைய 'மனிதாபிமானத்தை' பொதுவாக மாற்றுத் திறனாளிகள் விரும்புவதில்லை. தங்கள் மீது காட்டப்படும்  இப்படிப்பட்ட இரக்கத்தை அவர்கள் உள்ளுற வெறுக்கிறார்கள். அந்தக் கருணையுணர்வு அவர்களின் உடற்குறையை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது என்பதால்.

மாறாக தான் ஒரு மாற்றுத் திறனாளி என்கிற நினைவையே எழச்செய்யாத, அது குறித்த எந்தவொரு சிறப்புக் கவனமும்  செலுத்தாத போலியான அனுதாபத்தைக் காட்டாமல்  இயல்பான தோழமையுடன் பழகும் நண்பர்களையே அவர்கள் விரும்புகிறார்கள். அந்தச்  செய்தி இத்திரைப்படத்தில் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளது.

***

உயர்ந்த ரக கார் ஒன்று அதிவேகமாக சாலையில் செல்கிறது. கருப்பின இளைஞன் ஒருவன் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான். பக்கத்தில் அமர்ந்திருப்பவர், 'இந்தப் போட்டியில் நீ தோற்று விடுவாய் என நினைக்கிறேன்' என்கிறார். அவன் உடனே காரை இன்னமும் வேகமாக செலுத்துகிறான். காவல்துறையினர் துரத்துகிறார்கள். இன்னமும் வேகம். ஒரு கட்டத்தில் மடக்கி அவன் கழுத்தின் மீது ஒன்று போட்டு விசாரிக்கிறார்கள். அச்சமயத்தில் அந்த இன்னொரு நபர் வலிப்பு நோய் வந்தவர் போல் நடிக்கிறார்.

'முட்டாள்களே, உங்களுக்குப் புரியவில்லையா? அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத்தான் இத்தனை வேகம். சரி. எனக்கென்ன?' என்று ஒதுங்கி நிற்கிறான் இளைஞன். சற்று பதறும் காவல்துறை, கார் செல்ல அனுமதி தருகிறது. கூடுதலாக மருத்துவனை வரை பாதுகாப்பாக வருகிறது. இளைஞன் வெற்றிகரமாக சிரிக்கிறான். அது அவன் பந்தயத்தில் 200 யூரோக்கள் ஜெயித்து விட்டதற்கான அடையாளம்.

இந்த 'பிளாஷ்பேக்' உடன் படம் துவங்குகிறது. இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள ஆவல் ஏற்படுகிறது அல்லவா?

***

நடுத்தர வயதுள்ள பிலிப் ஒரு பணக்காரர். எந்த அளவிற்கு பணக்காரர் என்றால் தான் ரசிக்கும் ஓர் ஓவியத்தை நாற்பதாயிரம் யூரோக்கள் அசால்ட்டாக தந்து வாங்குமளவிற்கு.

இவர் முன்னர் ஒரு சாகச விளையாட்டில் ஈடுபடும் போது ஏற்படுகிற விபத்தில் பாதிக்கப்பட்டு  கழுத்திற்கு கீழே உள்ள உறுப்புகளில் எந்தவொரு உணர்வும் அல்லாதவராாகி விடுகிறார்.  மற்றவர்களின் உதவி அல்லாமல் அவர்கள் எதையும் செய்ய முடியாது.  மருத்துவ மொழியில் இதை  quadriplegia என்கிறார்கள். இவருக்கு ஓர் ஆண் உதவியாளர் தேவை என்பதால் அதற்கான இண்டர்வியூ நடக்கிறது. அதற்கு வருகிறான் டிரிஸ்  என்கிற இளைஞன்.

அவனுடைய நோக்கம் பணியில் சேர்வதல்ல.  மேற்கத்திய நாடுகளில் பணியில் இல்லாத இளைஞர்களுக்கு அரசு உதவித் தொகை தரும். அதைப் பெற வேண்டுமானால் பணிகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்காத நிலை இருந்தால்தான் முடியும். எனவே திரிஸ், சும்மா லுல்லுவாயாக ..இம்மாதிரியான இண்டர்வியூகளுக்கு வருவான், அங்கு பணி மறுக்கப்பட்டதற்கான சான்றிதழை சந்தோஷமாக பெற்றுக் கொண்டு அரசின் உதவித் தொகையை பெற்றுக் கொண்டு உல்லாசமாக இருப்பான். எனவே அந்த நோக்கத்துடன்தான் இந்த இண்டர்வியூவிற்கும் வருகிறான்.

டிரிஸ் ஓர் உற்சாகப் பேர்வழி. அவனுடைய குறும்புகள் காரணமாக அவன் இருக்கும் இடமெல்லாம் துள்ளலான மூடுக்கு மாறி விடும். இறுக்கமான மனோபாவமுடைய பிலிப்பேவிற்கு இவனுடைய குறும்பு உள்ளுற பிடிக்கிறது. எனவே இவனை தற்காலிகமாக பணிக்கு அமர்த்துகிறார்.

அதுவரை பிலிப்பை கையாண்டவர்கள் எல்லாம்  அவருடைய உடற்குறை காரணமாகவே அவரை ஒரு கண்ணாடிப் பாத்திரம் போல பத்திரமாக கையாள்கிறார்கள். அதன் மூலம் அவரது குறையை அவர்கள் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர் செல்வந்தர் என்கிற காரணமாகவே அவரை போலியான மரியாதையுடன் நடத்துகிறார்கள்.

ஆனால் உற்சாகப் பேர்வழியான டிரிஸ், அவரை ஒரு  மாற்றுத்திறனாளியாகவே கருதுவதில்லை. அவருக்கு கழுத்தின் கீழே உண்மையிலேயே உணர்ச்சியில்லையா என்பதை அறிய அவர் கவனிக்காத சமயத்தில் அவருடைய காலின் மீது கொதிக்கும் நீரை ஊற்றி விளையாட்டாக சோதித்துப் பார்க்கிறான். அவருக்கு போன் வந்தால் வேறு ஏதோ நினைவில் 'உங்களுக்கு போன்' என்று ரீசிவரை தூரத்திலிருந்து நீட்டுகிறான். அவரை ஓரு சாதாரண நபரைப் போலவே கையாள்கிறான். இந்த மாற்று அணுகுமுறையே பிலிப்பிற்கு  மிகவும் பிடித்துப் போகிறது. அவனுடைய அதிக உற்சாகத்தின் மூலம் சுதந்திரக்காற்றை சுவாசிப்பது போல இருக்கிறது அவருக்கு.

இருவரின் ரசனையுமே வேறு வேறாக இருக்கிறது. பிலிப் ஓபரா நாடகத்தை ரசித்துப் பார்க்கிறார் என்றால் டிரிஸ், "தூ.. இந்தக் கருமத்திற்காக நூறு டாலர்?" என்று பரிகசித்து சிரிக்கிறான். இவர் உயர்ரசனையுடனான மேற்கத்திய சங்கீதத்தை ரசிக்கிறார் என்றால் டிரிஸ்ஸோ அதிரடியான, நடனமாட வைக்கும் இசையை விரும்புகிறான். ஆனால் இந்த எதிரெதிர் துருவங்களே ஒன்றையொன்று ஈர்த்து நெருங்குகின்றன. பிலிப், இலக்கியத்தரமான எழுத்துக்களின் வடிவில் கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணிடம், டிரிஸ் அதிரடியாக தொலைபேசியில் அழைத்து அவரிடம் பேச வைக்கிறான். அவன்  செய்யும் எல்லாமே பிலிப்பிற்கு பிடித்துப் போகிறது. மிக முக்கியமாக, அவர் ஒரு வீல்சேர் ஆசாமி என்கிற உணர்வையே மறக்குமளவிற்கு டிரிஸ்ஸின் உற்சாக வெள்ளம் அமைகிறது.

இருவருமே தங்களின் அந்தரங்கமான சோகங்களைப் பரிமாறி இன்னமும் நெருக்கமாகின்றனர். ஆனால் இடையில் டிரிஸ் பணியிலிருந்து விலக நேர்கிறது. அவனுடைய குடும்பத்தில் ஏற்படும் சில சிக்கல்களைக் களைய அவன் சென்றுதான் ஆக வேண்டும். உற்சாகப் புயல் போல் அங்கிருந்து விலகுகிறான் டிரிஸ். அந்தப் பிரிவு பிலிப்பை உலுக்கி விடுகிறது. வேறு எந்த பணியாளரின் சேவையையும் அவர் விரும்புவதில்லை. அவர்களை கத்தி துரத்தி விடுகிறார். காதல் சோகம் போல தாடி வேறு வளர்க்கத் துவங்கி விடுகிறார். இந்தக் கொடுமையை சகிக்காத பிலிப்பின் பெண் செயலாளர், திரிஸ்ஸிற்கு இதை தெரிவித்து அவனை வரச் சொல்கிறார்.

"என்ன தலைவா,.  இது.. ஏன் இந்தக் கோலம்?" என்று கிண்டலடிக்கும் டிரிஸ், சாகச விளையாட்டில் ஈடுபாடுள்ள அவரை காரில் வேகமாக அழைத்துச் செல்கிறான். அதுதான் படத்தின் துவக்கக் காட்சி. ஒரு மதிய விருந்தில் பிலிப் கடிதம் மூலம் மட்டுமே நெடுங்காலமாக தொடர்பு கொண்டிருக்கும் பெண் நண்பியை அவருக்கு இன்ப அதிர்ச்சியாக நேரில் அறிமுகம் செய்து விட்டு தூரத்திலிருந்து டிரிஸ் குறும்பாக கையசைப்பதுடன் படம் நிறைகிறது. உற்சாக இளைஞன் டிரிஸ்ஸாக, Omar Sy ரகளையாக நடித்திருக்கிறார். ஆனால் பிலிப்பாக நடித்திருக்கும் François Cluzet உண்மையான சவாலை வெற்றிகரமாக தாண்டியிருக்கிறார். மற்ற உடல் உறுப்புகளை துளியும் அசைக்காமல் கழுத்தை மட்டுமே உபயோகித்து படம் முழுவதும் நடிக்க வேண்டும். திரிஸ்ஸின் குறும்புகளைப் பார்த்து இவர் ரசித்து கண் மூடி சிரிக்கும் காட்சிகள் ரசனையாக உள்ளன. Olivier Nakache  மற்றும் Éric Toledano என்கிற இரட்டை இயக்குநர்கள் இத்திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கின்றன. பிரான்ஸ் திரைப்பட வரலாற்றில் வசூல் சாதனையைப் புரிந்த திரைப்படங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்த திரைப்படம்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தின் இறுதியில் உண்மையான பிலிப்பேவையும் திரிஸ்ஸையும் காண்பிக்கிறார்கள்.

***

எழுத்தாளர்கள் சாருநிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் ஒரு சமயத்தில் ஆரோக்கியம் தொடர்பாக எதையோ உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் வீல்சேரில் அமர்ந்திருக்கும் மனுஷ்யபுத்திரனிடம் சாரு தன்னிச்சையாக சொல்லும் பரிந்துரை இது. "நீங்கள் ஏன் வாக்கிங் போகக்கூடாது?"

ஒருவரின்  உடற்குறையை மனதிலிருந்து சுத்தமாக துடைத்து விட்டுஅவரை  தன்னைப் போலவே ஒரு சகஜீவியாக இயல்பாக கருதுபவர்களால்தான் இப்படி கேட்க முடியும்.

அதனால்தான் சொல்கிறேன்; மாற்றுத்திறனாளிகளிடம் அனுதாபம் காட்டாதீர்கள். அது சார்ந்த போலி உணர்வுகளை தூக்கியெறிந்து விட்டு அவரை இயல்பானதொரு நபராக மதியுங்கள்; அவரையும் அவ்வாறே உணரச் செய்யுங்கள்.

அது சரி. இத்திரைப்படத்தின் கதையைக் கேட்டவுடன், சமீபத்தில் இதை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றுகிறதா? ஆம். தமிழில் இது, நாகார்ஜூனா, கார்த்தி நடித்து 'தோழா' என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது. 

suresh kannan

Wednesday, December 27, 2017

‘நம்பிக்கையின் சம்பளம்' - Adam's Apples (2005)






நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்திற்கு அழிவேயில்லை. இந்தப் பிரபஞ்சம் உருவான முதல் கணத்திலிருந்தே இந்த தர்மயுத்தம் துவங்கியிருக்கக்கூடும். தேவனின் கருணைக்கும் சாத்தானின் வசீகரத்திற்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய திரைப்படம் இது. அறம் ஒருபோதும் தோற்பதில்லை என்கிற நீதியை வலுவாக சித்தரிக்கும் படைப்பு. மிக நுட்பமான திரைக்கதையைக் கொண்டது.

**

அதுவொரு புனர்வாழ்வு மையம். சிறையில் இருந்து பரோலில் வரும் கொடூரமான குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவது அதன் நோக்கம். அந்த மையத்தின் தலைவரும் மதகுருவுமான இவான், இறைவனிடத்தில் முழுமையான நம்பிக்கையைக் கொண்டவர். ‘சாத்தானின் சோதனையால்தான் நமக்கு தீமைகள் நேர்கின்றன. அவற்றை பொறுமையுடன் எதிர்கொண்டால் இறைவனின் அன்பை பெறலாம்’ என்பதில் தீவிரமான நம்பிக்கையுடையவர்.

நவ – நாஜி குழுவைச் சேர்ந்தவனான ஆதாம், சிறையில் இருந்து பரோலில் வெளியாகி அந்த இடத்திற்கு வருகிறான். சக மனிதர்கள் மீது இவான் காட்டும் அன்பும் பொறுமையும் ஆதாமை குழப்பத்தில் ஆழத்துகின்றன. ‘இம்பூட்டு நல்லவனா ஒருத்தன் இருக்கவே முடியாதே’ என்று சந்தேகப்படுகிறான். இவானின் நற்பண்புகள் அவனைக் குற்றவுணர்வில் ஆழ்த்துகின்றன. எனவே இவானின் மீது கடுமையான கோபம் கொள்கிறான்.

முன்னாள் குற்றவாளிகளான காலித்தும், குன்னாரும் இவானின் பேச்சைக் கேட்டு கட்டின பசுமாடு மாதிரி இருப்பது ஆதாமை மேலும் குழம்ப வைக்கிறது. “இங்கு வந்ததற்காக நீ ஏதாவது உருப்படியான வேலையைச் செய்ய வேண்டும்” என்கிறார் இவான். ‘சர்ச் வாசலில் இருக்கும் ஆப்பிள் மரத்திலுள்ள பழங்களை வைத்து கேக் செய்கிறேன்” என்று பதிலளிக்கிறான் ஆதாம். இந்தப் போட்டியில் வென்று இவானின் முகத்தில் கரி்யைப் பூச வேண்டும் என்கிற வெறி எழுகிறது ஆதாமிற்கு.

ஆனால் ஆப்பிள் மரத்தை பாதுகாப்பது அத்தனை எளிமையான வேலையாக இல்லை. பறவைகள் கூட்டமாக வந்து கொத்தித் தின்று பழங்களை சேதப்படுத்துகின்றன. என்ன முயன்றும் அவற்றைத் துரத்த முடியவில்லை. ‘சாத்தானின் சோதனை இது” என்கிறார் இவான். ஆதாம் அதை ஏற்கவில்லை. தன் கூட்டாளிகளின் மூலம் துப்பாக்கியைக் கொண்டு வருகிறான். ஆனால் அதற்குள் காலித் பறவைகளைச் சுட்டுக் கொல்கிறான்.

இவானின் அன்பான நடவடிக்கைகள் ஆதாமை எரிச்சல்பட வைக்கின்றன. அவருடைய நம்பிக்கையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்கிற வெறி ஏற்படுகிறது. ஒரு விவாதத்தின் போது இவானை கடுமையாகத் தாக்குகிறான் ஆதாம். ஆனால் சிறிது நேரம் கழித்து ரத்தக் களறியாக எழுந்து வரும் இவான், எதுவுமே நடக்காதது போல ஆதாம் உள்ளிட்ட மற்றவர்களிடம் உரையாடுகிறார். இதைக் கண்டு ஆதாமிற்கு வெறுப்பும் எரிச்சலும் அதிகமாகிறது.

இவானுடைய பின்னணித் தகவல்களை அருகிலுள்ள ஒரு மருத்துவரின் மூலம் ஆதாம் அறிகிறான். மருத்துவருக்கும் இவானின் மீது இதே மாதிரியான எரிச்சல் உள்ளதால் ஆதாமைத் தூண்டி விடுவது போல தகவல்களைச் சொல்கிறார்.  இவானுடைய இளமைப்பருவம் இன்பகரமானதாக இல்லை. மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவருடைய மாற்றுத்திறனாளி மகன் சக்கர நாற்காலியில் உறைந்து கிடக்கிறான்.

இவானால் இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு எப்படி இயல்பாகவும் அன்பாகவும் இருக்க முடிகிறது என்கிற கேள்வி ஆதாமைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. உடல்ரீதியாக சித்திரவதை செய்தாலும் இவானை எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் உளரீதியான தாக்குதலைத் துவங்குகிறான் ஆதாம். “கடவுள் உன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதெல்லாம் பொய். அவர் உன்னை பயங்கரமாக வெறுக்கிறார். அதனால்தான் உனக்கு இத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றன” என்று தொடர்ந்து கூறுகிறான்.

ஒரு கட்டத்தில் இவான் இதை நம்ப ஆரம்பிக்கிறார். அவருடைய காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டேயிருக்கிறது. அப்போதும் மனம் இளகாத ஆதாம் அவரை கடுமையாக தாக்குகிறான். இவானின் மனம் கலைவது சக குற்றவாளிகளையும் பாதிக்கிறது. அதுவரை இயல்பாக இருந்த அவர்கள் தங்களின் குற்றவுலகிற்கு மறுபடியும் திரும்புகிறார்கள். காலித் ஒரு பெட்ரோல் பங்க்கை கொள்ளையடிக்க ஆவேசமாக கிளம்புகிறான். அதுவரை இவனிடம் பேசிக் கொண்டிருந்த குன்னார் மெளனமாகிறான்.

இந்த மாற்றங்கள் ஆதாமைக் குழப்புகின்றன. இவானின் அன்பும் கருணையும் உண்மையாகவே மனிதர்களிடம் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது. இவானின் மீது மெல்ல இரக்கம் சுரக்கிறது. அவரைத் தூக்கிப் போய் மருத்துவமனையில் சேர்க்கிறான். ஆனால் மருத்துவர் அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறார். ‘இவானுக்கு பெரிய அளவில் மூளைக்கட்டி இருக்கிறது. அதனால்தான் காதில் ரத்தம் வருகிறது. இன்னமும் சில நாட்களில் அவர் இறந்து விடுவார்”.

காலித்திற்கும் ஆதாமின் கூட்டாளிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது. அவர்களை துப்பாக்கியால் காயப்படுத்துகிறான் காலித். எனவே அவர்கள் ஆயுதங்களுடனும் ஆட்களுடனும் திரும்ப வருகிறார்கள். ஆதாம் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்கிறான். தலையில் கட்டோடு அங்கு வரும் இவான் அவர்களைத் தடுக்க முயல, குண்டு அவர் தலையில் பாய்கிறது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிகிறார் இவான்.

இவான் இறப்பதற்குள் ஆப்பிள் கேக்கை செய்து அவருடைய அன்பைப் பெற வேண்டும் என்கிற காரணத்திற்காக சேதமடைந்தது போக மீதமிருக்கும் ஒரேயொரு ஆப்பிளில் கேக் செய்து மருத்துவனைக்கு எடுத்துச் செல்கிறான் ஆதாம். இவானின் படுக்கை காலியாக இருக்கிறது. மருத்துவர் ஆச்சரியமான தகவலைச் சொல்கிறார். “குண்டு பாய்ந்ததில் தலையில் இருந்த புற்றுநோய் குணமாகி விட்டது. மருத்துவ அதிசயம் இது”

மருத்துவனையின் வெளியே அமர்ந்திருக்கும் இவானுடன் இணைந்து கேக்கை உண்கிறான் ஆதாம். சில மாதங்கள் கடக்கின்றன. பரோலில் இருந்து இரண்டு புதிய குற்றவாளிகள் அங்கு வருகிறார்கள். கோபத்துடன் இவானைத் தாக்குகிறார்கள். இவானைப் போலவே ஆதாமும் அவர்களைப் பொறுமையாக கையாள்வதோடு படம் நிறைகிறது. ஆம். இவான், ஆதாமை தன்னைப் போலவே மாற்றி விட்டார்.

இவான், ஆதாம், ஆப்பிள், கிறித்துவ தேவாலயம், Book of job எனும் பழைய ஏற்பாட்டு நூல்.. என்று படம் முழுவதும் விவிலிய உருவகங்கள் நிறைந்திருக்கின்றன. தேவாலயத்தின் மணி அடிக்கும் போதெல்லாம் அதன் அதிர்வு காரணமாக ஆதாமின் அறையில் மாட்டப்பட்டிருக்கும் ஹிட்லரின் படம் நழுவி விழுவது நல்ல குறியீடு.

இவானாக Mads Mikkelsen-ம் ஆதாமாக Ulrich Thomsen-ம் அருமையாக நடித்திருக்கிறார்கள். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Anders Thomas Jensen.



suresh kannan

Tuesday, December 26, 2017

American Made (2017) - ‘ஆகாயக் கோட்டை'






Barry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்க்கை, சர்வதேச கடத்தல்களில் ஈடுபட்டு வீழ்வதை திகிலும் பரபரப்புமாக விவரிக்கிறது.  சர்ரென்று உயரே பறந்து உற்சாகமாக பயணித்து தடாலென்று கீழே விழும் ஒரு விமானத்தைப் போலவே அவருடைய வாழ்க்கையும் அமைந்தது பரிதாபமான தற்செயல்.

**

வருடம் 1970. பேரி சீல் ஒரு திறமையான விமானி. குறைந்த வயதிலேயே கமாண்ட் பைலட் ஆன அளவிற்கான திறமை. விமான நிறுவனம் தரும் சம்பளம் அவனுக்கு போதுமானதாக இல்லை. எனவே பயணத்தின் இடையே சிகரெட் பெட்டிகளை கடத்தும் சிறிய குற்றத்தோடு துவங்குகிறது அவனுடைய சாகச வாழ்க்கை.

CIA அதிகாரி ஒருவர் அவனை அணுகுகிறார். “சின்ன விஷயங்களுக்காக உன் திறமையை வீணாக்காதே. நான் சொல்கிறபடி செய். நிறைய பணம்” என்கிறார். “என்ன வேலை?”.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் கம்னியூஸ்ட் படைகளுக்கு ரஷ்யா உதவி செய்து கொண்டிருந்தது. அமெரிக்கா இதை தடுக்க விரும்பியது. பேரி சீல் ஒரு சிறிய விமானத்தின் மூலம் அந்தப் பகுதிகளில் தாழ்வாக பறந்து புகைப்படங்கள் எடுக்க வேண்டும். இன்னொரு வகையில் அதற்குப் பெயர் உளவு பார்த்தல்.

கிடைக்கப் போகும் ஆதாயங்களுக்காக மிக ஆபத்தான இந்தப் பணியை பேரி ஒப்புக் கொள்கிறான். விமான நிறுவன பணியை தூக்கிப் போட்டு விட்டு இதில் இறங்குகிறான். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற விஷயத்தை அநாயசமாக கையாள்கிறான். இவனது திறமையான பணியைக் கண்டு CIA உற்சாகமாகிறது. அடுத்த பணியைத் தருகிறது. எதிரிப் பிரதேசங்களில் உள்ள ராணுவ அதிகாரிகளிடம் பணத்தைத் தந்து விட்டு ரகசியங்களைப் பெற்று வருவது. கூரியர் வேலை.

இந்தச் சமயத்தில்தான் இன்னொரு அதிர்ஷ்டம் அல்லது ஆபத்து பேரியைத் தேடி வருகிறது. கொலம்பியாவில் உள்ள மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் குழு இவனைத் தொடர்பு கொள்கிறது. “தோ… பாருப்பா.. ப்ளைட்ல சும்மாதானே திரும்பிப் போறே..  நாங்க தர்ற பாக்கெட்டுக்களை அமெரிக்காவிற்கு எடுத்துட்டுப் போ”. (இந்தக் குழுவின் தலைவனான பாப்லோ எஸ்கோபர் பற்றி தனியான திரைப்படமே இருக்கிறது).

முதலாளிக்குத் தெரியாமல் ரிடர்ன் டிரிப்பில் தக்காளி மூட்டைகளை ஏற்றிக் கொள்ளும் லாரி டிரைவர் மாதிரி, இதற்கும் பாரி சந்தோஷமாக ஒப்புக் கொள்கிறான். அவனே எதிர்பாராத அளவிற்கு பணம் கொட்டுகிறது. CIA இதைக் கண்டும் காணாமலும் இருந்தாலும் போதைமருந்து கடத்தலை கண்காணிக்கும் அதிகாரிகள் மோப்பம் பிடித்து விடுகிறார்கள். CIA அதிகாரியே இந்த தகவலைத் தருகிறார். “நான் சொல்கிற இடத்திற்கு குடும்பத்தோடு தப்பி ஓடு”.

தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் எழுப்பி பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு ‘மேனா’ என்கிற சிறிய மாகாணத்திற்கு விரைகிறான் பாரி. அங்குள்ள ஏர்போர்ட்டையே அவனுக்குத் தரும் CIA அடுத்து வேறு ஒரு பணியைத் தருகிறது. இந்த முறை துப்பாக்கிகள். கம்யூனிஸ்ட்களை எதிர்க்கும் வலதுசாரி குழுவொன்றிற்கு சப்ளை செய்ய வேண்டும். செய்கிறான். அடுத்து ஆட்கள். அதையும் உற்சாகமாக செய்கிறான் பேரி.

ஒரு புறம் CIA, மறுபுறம் போதையுலகம் என்று இருபுறமும் பணம் கொட்டுகிறது. வீட்டில் புதைத்து வைக்க இடமில்லாத அளவிற்கு பணம். வங்கியில் கொண்டு போய்க் கொட்டுகிறான். இவனுடைய பணத்தை வைப்பதற்காகவே தனி காப்பறை அமைக்கிறார்கள். அந்தளவிற்கு பணம்.

ஏறத்தாழ பணத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பேரியின் வாழ்க்கையில் மச்சானின் உருவில் ஆபத்து வருகிறது. “எனது தம்பிக்கு வேலை போட்டுக் கொடுங்கள்” என்கிறாள் மனைவி. உச்சநீதிமன்ற உத்தரவை மறுக்க முடியுமா? சும்மா வெட்டியாக ஒரு வேலையைத் தருகிறான். பேரி ஒளித்து வைத்திருக்கும் சூட்கேஸ்களில் ஒன்றை திருடிக் கொண்டு உற்சாகமாக ஷாப்பிங் கிளம்புகிறான் ஊதாரி மச்சான்.

காவல்துறை இதைக் கவனித்து மச்சானைக் கைது செய்கிறது. பேரி அப்போது புதிய டீல் ஒன்றிற்காக கடத்தல் குழுவுடன் கொலம்பியாவில் இருக்கிறான். “காப்பாத்துங்க” என்று மச்சான் கதறுகிறான். “அதை நாங்க பார்த்துக்கறோம். எங்க வேலையை முதல்ல முடி” என்கிறது கடத்தல்குழு. மச்சான் தப்பிப்பதற்காக பேரி உதவி செய்கிறான். ஆனால் அவன் திமிராகப் பேசி விட்டு கிளம்பும் போது கார் வெடித்து சிதறுகிறது. ‘நாங்க பார்த்துக்கறோம்” என்று கடத்தல் குழு சொன்னதின் அர்த்தம் இதுதான் போல.

பேரி ஆகாயத்தில் கட்டிய கோட்டை ஒருவழியாக வீழ்ச்சியடையத் துவங்குகிறது.  FBI அவனுடைய வீட்டைச் சோதனையிட்டு எல்லா பணத்தையும் கைப்பற்றுகிறது. CIA அவனை கைகழுவுகிறது. வசமாக சிக்குகிறான் பேரி. ஆனால் அவன் தப்பிக்க இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தனது அரசியல் எதிரிகளுக்கு போதை மருந்து கடத்தல் உலகத்துடன் தொடர்பிருக்கிறது என்பதை அமெரிக்கா நிரூபிக்க பேரியைப் பயன்படுத்துகிறது. தனது கூட்டாளிகளையே ரகசியமாகப் படம் எடுக்கிறான் பேரி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது பத்திரிகைகளில் வெளியாகி விடுகிறது. கடத்தல் குழு தன்னை உயிருடன் விடாது என்பது பேரிக்கு தெளிவாக தெரிந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் தன் மரணத்தை எதிர்பார்க்கிறான்.

அரசியல் காரணங்களால் நீதிமன்றத்திலிருந்து எளிதாக அவன் தப்பித்து விட்டாலும் கடத்தல் குழுவின் பழிவாங்கலில் இருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. சுடப்படுகிறான்.

**

எழுபதுகளின் காலக்கட்ட பின்னணியில், பேரி சீல் ஆக டாம் குரூஸ் அட்டகாசமாக நடித்திருக்கிறார். பணம் சேர சேர, ‘’மங்காத்தா’ அஜித் போல ‘மணி.. மணி..’ என்ற இவர் உற்சாகமாக சிரிப்பது கலக்கல். “கெட்டவங்களுக்கு ஆண்டவன் அள்ளித் தருவான். ஆனா கைவிட்டுடுவான்” என்கிற பாட்சா நீதியை சொல்லும் இந்தத் திரைப்படம், எதிரி நாடுகளில் அமெரிக்கா செய்யும் கலகங்களையும் குழப்பங்களையும் அம்பலப்படுத்துகிறது. ‘The Bourne Identity’ வரிசை திரைப்படங்களை இயக்கிய Doug Liman இத்திரைப்படத்தையும் அற்புதமாக உருவாக்கியுள்ளார். 

suresh kannan

Wednesday, December 20, 2017

A Man of Integrity - ஈரான் - சென்னை சர்வதேச திரைவிழா 2017


சென்னை சர்வதேச திரைவிழாவில் 19.12.2017 அன்று  மாலை பார்த்த ஈரானிய திரைப்படம் இது. 'இந்த சமூகத்தில் வாழ இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று ஒடுக்கப்பட்டவனாக இருக்க முடியும் அல்லது ஒடுக்குகிறவனாக. - என்பதுதான் இத்திரைப்படத்தின் மையம். 'அறத்திற்கும் கீழ்மைக்கும் இடையில் தத்தளிக்கும் ஒரு மனிதனைப் பற்றிய சித்திரம் இது. 

**

ஓர் ஈரானிய கிராமம். ரேஸா சிறிய அளவிலான மீன்பண்ணை தொழில் செய்கிறான். அவனுடைய மனைவி பள்ளியில் தலைமை ஆசிரியை. ரேஸா அடிப்படையில் நேர்மைக்குணம் படைத்தவன். 'கொஞ்சம் பணம் செலவு செஞ்சா உன் கடனை லேட்டா கட்ற மாதிரி மாத்தி தர்றேன்' என்று வங்கி அதிகாரி லஞ்சம் கேட்கும் போது முதலில் சற்று சஞ்சலப்பட்டு பிறகு உறுதியுடன் அதிக வட்டி செலுத்தினாலும் பரவாயில்லை என்று ஒழுங்கான வழியில் செல்கிறான்.

அவனுடைய நிலத்தை அபகரிப்பதற்காக அருகில் உள்ள தொழிற்சாலை நிறுவனம் ஒன்று பல்வேறு வழிகளில் இடைஞ்சல் செய்கிறது. ரேஸா நேர்மையாளனாக இருந்தாலும் அடிப்படையில் கோபக்காரன். தொழிற்சாலை ஊழியர் ஒருவருடன் நிகழும் கைகலப்பில் சிறைக்குச் செல்கிறான். பலமுள்ள எதிர் தரப்பு நிறைய பொய் சாட்சியங்களை வைத்திருக்கிறது. லஞ்சம் தர விரும்பாத ரேஸா நெருக்கடிகளை சந்திக்கிறான்.

அவனுடைய மனைவி உலக நடைமுறைகளை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளவள். எனவே தன் சகோதரனின் உதவியால் கணவனை வெளியே அழைத்து வருகிறாள். புற அழுத்தங்கள் வீட்டின் உள்ளேயும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குடும்ப உறவில் சில சிக்கல்களும்.

தொழிற்சாலை மறைமுகமாக தன் மீது நிகழ்த்தும் அநீதிகளை சட்டத்தின் வழியாக எதிர்கொள்ள எல்லா வழிகளையும் முயல்கிறான் ரேஸா. ஆனால் ஊழலும் லஞ்சமும் நிறைந்திருக்கிற அமைப்பின் கதவுகள் ரேஸாவிற்கு திறக்க மறுக்கின்றன. ஒரு கட்டத்தில் எதிராளியைப் பழிவாங்கும்  எண்ணம் இவனுக்குள் பெருகிக் கொண்டே போக, அறத்திற்குப் புறம்பான செய்கையில் ஈடுபடுகிறான். இவனுக்கு வெற்றி கிடைப்பது மட்டுமல்லாமல் அங்கீகாரமும் தேடி வருகிறது. ஆனால் அதை சுவைக்க முடியாமல் குற்றவுணர்வுடன் ரேஸா அழுவதுடன் படம் நிறைகிறது. 


**

படம் முழுவதும், இறுக்கமும் கோபமும் பொங்கி வழியும் முகமாக நடித்திருக்கும் Reza Akhlaghirad-ன் பங்களிப்பு அபாரமானது. இவரது மனைவியாக நடித்திருக்கும் Soudabeh Beizaee-ன் நடிப்பும் அற்புதம். ரேஜஸாவின் மனைவியும் நேர்மையானவர்தான். ஆனால் சூழல் அவரையும் தீமையின் பக்கம் நகரச் செய்கிறது. தன்னுடைய தலைமையாசிரியை பதவியைப் பயன்படுத்தி, கணவனின் எதிராளி மகளை அழைத்து மறைமுகமாக மிரட்டுகிறாள். அப்போது அவர் சொல்லும் வசனம் ஒன்று அபாரமானது. "ஆண்கள் தங்களின் பெருமிதம் காரணமாக நிகழ்த்தும் சச்சரவுகளையெல்லாம் பெண்கள்தான் தங்களின் நுண்ணறிவு கொண்டு போக்க முயல வேண்டும்"

பிடிவாத  நேர்மையுடன் இருக்கும் ரேஸா, மனம் மாறும் கட்டமும் நுட்பமானது. ஆட்சிக்கு எதிராக செயல்படும் அவனுடைய நண்பன் சில வருடங்களாக சிறையில் இருக்கிறான். அவனுடைய மனைவி சாலையில் உணவுப் பொருட்கள் விற்கும் பரிதாப நிலையைப் பார்க்கிறான் ரேஸா. 'என் கனவுகள் முழுவதும் கலைந்து விட்டன' என்று அழுகிறாள் அவள். ஆனால் தன் கணவனின் தியாகம் குறித்தான பெருமையும் அவளிடம் இருக்கிறது. 

கான் திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றிருக்கும் இத்திரைப்படம் மிக நிதானமாக ஆனால் அழுத்தத்துடன் தன்னுடைய மையத்தை நோக்கி நகர்கிறது. நேராக சித்தரிக்காமல் குறிப்பால் உணர்த்தும் பல நுட்பமான காட்சிகள் நிறைந்துள்ளன. எந்தப் பக்கம் திரும்பினாலும் லஞ்சத்தின் பக்கம் முட்டிக் கொள்ளுமளவிற்கு சமூக அமைப்பு கெட்டிருப்பது உலகளாவிய பிரச்சினைதான் போல.  இயக்கம்: Mohammad Rasoulof.

suresh kannan

Monday, December 18, 2017

Daybreak (அல்பேனியா) – சென்னை சர்வதேச திரைவிழா 2017


சில பல காரணங்களால் இவ்வருட விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று முன்பே முடிவெடுத்தேன். எனவே அது தொடர்பான செய்திகளை பார்ப்பதை கூடுமானவரை தவிர்த்தேன். என்றாலும் மனதின் ஒரு பகுதி தன்னிச்சையாக அதன் பக்கம் குவிந்து கிடந்தது. அலுவலகத்திலும் சற்று புலம்பிக் கொண்டேயிருந்தேன்.

ஒரு விஷயத்தின் மீது உங்களுக்கு ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்தால் அதுவாக உங்களைத் தேடி வரும் என்றொரு விதியும் பழமொழியும் இருக்கிறது. விழா துவங்கி நாலைந்து நாள் கழித்து நண்பர் கே.என்..சிவராமன் அழைத்தார். “ஏன் இவ்வருடம் செல்லவில்லையா? முன்பே சொல்லியிருக்கலாமே” என்று உரிமையாக கடிந்து கொண்டு அதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தந்தார்.

அதுவரை சோம்பியிருந்த மனமும் உடலும் மினஇணைப்பு தரப்பட்ட இயந்திரம் போல ‘விர்ரென்றாகியது. அலுவலகப் பணிகளை விரைவிரைவாக செய்து முடித்தேன். அதற்கு இடையில், மாலையில் திரையிடப்படவிருக்கிற படங்களைப் பற்றிய விவரங்களை தேடினேன். அவசரத்திற்கு IMDB-ஐ நம்பலாம்.

‘KATHIE SAYS GOODBYE’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் முன்னணியில் நின்றது. அதன் பிறகு ‘DAYBREAK’ என்கிற அல்பேனிய திரைப்படம். கதைச் சுருக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.  அல்பேனியா மெல்லுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ‘அழுகாச்சி’ டிராமாவாக இருக்குமோ என்று தோன்றியது. எனவே அமெரிக்காவை தேர்ந்தெடுத்தென்.

அலுவலகத்தில் உள்ளவர்களை நச்சரித்து சில வேலைகளை மற்றவர்களின் தலையில் தள்ளி விட்டு பாய்ந்து வெளியே வந்தேன். நேரம் சுருக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு சற்று சாவகாசமாகவும் அல்பேனியாவிற்கு உடனடியாகவும். முதல் நொடியிலிருந்து ஒரு திரைப்படத்தை பார்க்காவிட்டால் எனக்கு ‘என்னவோ’ போலிருக்கும்.

எனவே தீர்மானித்ததையொட்டி அமெரிக்காவை நோக்கி நகர்ந்தேன். ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சரியான போக்குவரத்து நெரிசல். ‘அமெரிக்காவா, அல்பேனியாவா’ என்று இரண்டிற்கும் இடையில் மனம் ஊசலாடிக் கொண்டேயிருந்தது. அனைத்து வாகனங்களும் உறைந்தது போல அப்படியே நிற்க, என் மனம் மட்டும் முன்னே விரைந்து கொண்டிருந்தது. பதட்டம் சற்று அதிகமாக “இது தேவையா’ என்றெழுந்த கேள்வியை புறந்தள்ளினேன்.

திடீரென ஓர் அசட்டு தர்க்கம். அமெரிக்கத் திரைப்படம் என்றால் இணையத்தில், டிவிடியில் என்ற பிற்பாடு எப்படியாவது பிடித்து விடலாம். அல்பேனியா என்றால் கிடைப்பது சிரமமாகி விடும் என்று தோன்ற சட்டென்று கட்சி மாறினேன். மனம் ஒரு monkey என்பது மற்றொருமுறை நிரூபணமாயிற்று. ஆனால் இந்த சங்கடமெல்லாம் முன்னே நின்றிருந்த கிங்கரர்களுக்கு தெரியவில்லை. கல்லுளி மங்கன்களாக நின்றிருந்தார்கள்.

ஏதோ ஒர் அதிர்ஷ்ட கணத்தில் மூக்கடைப்பு விலகியது போல நெரிசல் சற்று குறைந்து பேருந்து விரைந்த போதுதான் எனக்கும் மூச்சு வந்தது. திட்டமிட்ட படி சரியான நேரத்திற்கு முன்னதாகவே காஸினோ திரையரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். வாசலில் அனுமதிச்சீட்டை எவரும் கோரவில்லை என்பது ஏமாற்றமாகவே இருந்தது.

சரி, இன்று பார்த்த அல்பேனிய தேசத்து திரைப்படத்திற்கு வருவோம்.

**

DAYBREAK – இதுவொரு துயரச்சுவை கொண்ட நாடகம். Leta  என்கிற நடுத்தரவயதுப் பெண். கையில் சுமார் இரண்டு வயதுள்ள ஆண் குழந்தை. வீட்டு வாடகை தர முடியாமல் சிரமப்படுகிறாள். அவளது பொருளியல் துயரம் நிதானமாக, ஆனால் அழுத்தமாக சொல்லப்பட்டு விடுகிறது. செவிலியர் பணியில் இருந்தவள். ஆதரிக்க உற்றார்கள் இல்லாத சூழல்.

நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் ஒரு கிழவியைப் பார்த்துக் கொள்ளும் சலிப்பான பணி. என்றாலும் மிக பொறுப்பாய் அனைத்து பணிகளையும் கவனித்துக் கொள்கிறாள். சில சொந்த காரணங்களுக்காக கிழவியின் மகள், இவளிடம் சற்று பணம் தந்து விட்டு பிரான்ஸ் கிளம்பி விடுகிறாள்.

வீட்டின் உரிமையாளர் துரத்தியதும். வேறு வழியின்றி தன்னுடைய பணியிடத்திலேயே குழந்தையுடன் தங்கிக் கொள்கிறாள்.  கிழவிக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வருகிறது. எடுத்து வரும் தபால்காரன் 'அவள் உயிரோடு இருக்கிறாளா' என்று சோதித்து விட்டு பணத்தைத் தருகிறான். அதை வைத்துதான் செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலைமை.

ஊருக்குச் சென்ற மகள் திரும்பத் தாமதம் ஆக, இவளுக்கு நெருக்கடி அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் கிழவியின் மகளும் மருமகனும் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வர இடிந்து போகிறாள். தங்க இடமும் இல்லாமல், செலவிற்கு பணமும் இல்லாத நிலையில் பென்ஷன் பணம் மட்டுமே அவளுடைய ஆதாரம்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய இருப்பிற்காக அவள் எத்தனை கடினமானதொரு முடிவை எடுக்கிறாள் என்பதை பரபரப்பான இறுதிக்கட்ட காட்சிகள்  விவரிக்கின்றன. Survival Instinct-ம் வறுமையும் ஒருவரை எத்தனை நெருக்கடியை நோக்கி தள்ளிச் செல்லும் என்கிற ஆதாரமான செய்தி உறுத்தாமல் மிக மிக நிதானமாக சொல்லப்படுகிறது.

உதிரிப்பூக்கள் ‘அஸ்வினி’யை நினைவுப்படுத்துவது போல சோகம் ததும்பும் முகம் Ornela Kapetani –க்கு.  முழு திரைப்படத்திலும் இவளது முகம் ஒரேயொரு முறைதான் புன்னகைக்கிறது. பென்ஷன் பணம் எடுத்து வரும் தபால்காரனை வழிக்கு கொண்டு வருவதற்காக.

மிக நிதானமாக நகரும் திரைப்படத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை வெளிப்பட்டாலும் மிகையாக சிரித்து வைப்பது ‘பிலிம் பெஸ்டிவல்’ மரபு. இன்றும் அப்படியே ஆயிற்று. படுக்கை கிழவியாக நடித்திருந்தவரின் பங்களிப்பு அபாரம். வெளியே சென்று விட்டு கதவைத் திறந்து வருபவள், படுக்கையில் கிழவியைக் காணவில்லை என்பதும் பதறி விடுகிறாள். நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றுகிறது. ஆனால் கிழவி, இவளுடைய குழந்தையை வைத்துக் கொண்டு ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறாள்.

நிலவு நட்சத்திரங்களைப் பற்றி கிழவி பேசுவதும், ‘என்னைப் பற்றி ஒருமுறை கூட விசாரிக்கவில்லையா?” என்று தொலைபேசியில் மகள் விசாரிப்பதும் என படத்திற்குள் சில நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

அகாதமி விருதிற்காக அல்பேனியா தேசத்தின் சார்பில் தேர்வாகி அனுப்பப்பட்டிருக்கிற திரைப்படம்.  டிராமா பிரியர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

**

மிச்சமிருக்கிற நாட்களில் நேரத்தை பிழிந்து எப்படியாவது சில திரைப்படங்களை பார்க்கலாம் என உத்தேசம். இந்த முறை அண்ணாசாலையில், அருகருகிலேயே அரங்கங்கள் அமைந்திருப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கென்று கட்டப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கலைவாணர் அரங்கம் தயாராகியும் அது ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. என்ன அரசியலோ?

suresh kannan