Sunday, May 28, 2017

குற்றம் 23: கருப்பையில் சிக்கியிருக்கும் பெண் விடுதலை

இந்தக் கட்டுரை சமீபத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் திரைப்படமான குற்றம் 23 பற்றியது.  என்றாலும் அந்த சினிமாவைப் பற்றி மட்டும் பிரத்யேகமாக உரையாடாமல் அதனுள் உட்பொருளாக அடங்கியிருக்கும் வேறு சில விஷயங்களைப் பற்றியும் பேசப் போகிறது. குறிப்பாக பெண்களின் கருப்பை அரசியல் பற்றி.  அதற்கு முன் திரைப்படத்தைப் பற்றி சிறிது பார்த்து விடலாம். 

***

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்கினாலும் பெரிய அளவிலான வெற்றியை ருசிக்காத துரதிர்ஷ்டசாலிகள் நிறைய பேர் உண்டு. நாயகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை அதுவொரு பெரிய பட்டியல். அவர்களில் சிலர் மட்டும் சளைக்காமல் நீந்திக் கொண்டேயிருப்பார்கள். சற்று ஆவேசமாக முன்னகரும் போது நீரின் மேற்பரப்பில் அவர்களின் முகம் சற்று நேரம் தெரியும். பின்பு மீண்டும் அமிழ்ந்து விடும். என்றாலும் அவர்கள் தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பார்கள். அவ்வகையான தொடர் முயற்சியாளர்களில்  ஒருவராக அருண் விஜய்யைச் சொல்லலாம்.  செல்வாக்கான பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் வெற்றி என்பது அவருக்கு அபூர்வமாகவே சாத்தியமாகியிருக்கிறது. சேரனின்  'பாண்டவர் பூமி' போன்ற சில திரைப்படங்கள் மூலமாக மட்டுமே அவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர முடிகிறது. மற்றபடி நிறைய தோல்வி மசாலாக்கள்.

கெளதம் மேனனின் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் எதிர்நாயகன் பாத்திரம் என்றாலும் அதிலுள்ள சவாலுக்காகவே ஏற்ற துணிச்சலின் பரிசை அருண் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார் . 'ஈரம்' என்கிற தனது முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்த  இயக்குநர் அறிவழகனிடம் தம்மை ஒப்படைத்துக் கொண்டது அவரது அடுத்த புத்திசாலித்தனம். கெளதம் உருவாக்கும் 'போலீஸ்' திரைப்படங்களின் நாயகத்தன்மை 'குற்றம் 23' திரைப்படத்திலும் எதிரொலிக்கிறது. நேர்மையான காவல் அதிகாரி, கண்ணியமான காதலன், சமூகக்குற்றங்களை செய்யும் வில்லன்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடுவது என்று தன் பாத்திரத்தை திறமையாக கையாண்டிருக்கிறார் அருண். 

சமூகப் பிரச்சினைகளை, தமிழ் சினிமா பெரும்பாலும் ஊறுகாயாகவே பயன்படுத்திக் கொள்ளும். அந்தச் சிக்கல்களை தீர்ப்பதின் மூலம் தன்னை அவதார நாயகனாக முன்நிறுத்திக் கொள்ளும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை பல நாயகர்கள் காலம் காலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் குளிர்பான விளம்பரத்தில் நடித்து சம்பாதிக்கும் அதே ஹீரோ, மறுபுறம் நீர் ஆதாரம் சுரண்டப்படும் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக திரையில் ஆவேசமாக வசனம் பேசும் அபத்தமும் நிகழத்தான் செய்கிறது.  

'ரமணா' திரைப்படத்தின் ஒரு பகுதியைப் போன்று  மருத்துவத் துறையில் நிகழும் மோசடிகளைப் பற்றி சில தமிழ் சினிமாக்கள் ஏற்கெனவே பேசியிருந்தாலும் அவைகளில் வணிக அம்சங்களே அதிகமிருந்தன. 'குற்றம் 23' திரைப்படத்திலும் அவ்வாறான  வணிக விஷயங்கள் கலந்திருந்தாலும் தன்னுடைய மையத்தை நோக்கி முன்னகர்வதில் பெரும்பாலும் நேர்மையைக் கடைப்பிடித்திருக்கிறது. இதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

சில அரிதான நேர்மை அடையாளங்களைத் தவிர்த்து விட்டு, காவல்துறை இயங்கும் லட்சணங்களை நாம் செய்திகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் பார்த்து வருகிறோம். ஆனால் தமிழ் சினிமா தனது வணிகத்திற்காக காவல்துறை அதிகாரிகளைப் பற்றிய மிகையான சி்த்திரங்களை முன்வைக்கிறது. சமூகத்தில் உருவாகும் குற்றங்களுக்கு சில தனிநபர்கள் மட்டுமே காரணம் என்பது போலவும் அவதார நாயகர்கள் அந்த தீயவர்களை வதம் செய்து விட்டால் குற்றங்கள் காணாமல் போய் விடும் என்பது போன்ற எளிய தீர்வுகளை முன்வைப்பதின் மூலம் குற்றங்களின் ஊற்றுக் கண்களை மழுப்பி மறைக்கும் வேலையையும் செய்கிறது. 

சமூகக் குற்றங்கள் உருவாவதற்குப் பின் இந்த அமைப்பின் பல்வேறு சிக்கலான கண்ணிகள் செயல்படுகின்றன. குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதிக்கும் அசுரர்கள் அல்ல. அவர்கள் இந்தச் சமூகத்தின் உள்ளிருந்துதான் உருவாகிறார்கள். அவர்கள் உருவாவதற்கு இந்தச் சமூகமும் காரணமாக இருக்கிறது. இது சார்ந்த பல்வேறு பரிமாணங்களைப் பற்றி உரையாடாமல் காவல்துறை என்கிற நிறுவனத்தின் மூலம் சில தனிநபர்களை சாகடித்து விடுவதாலும் சிறையில் தள்ளி விடுவதாலும் குற்றங்கள் மறைந்து விடும் என்பது அறியாமையே. 

இது சார்ந்த சில குறைகள் இந்த திரைப்படத்தில் இருந்தாலும் இத்திரைப்படம் பயணிக்கும் ஆதாரமான பிரச்சினையில் இருந்து சில கருத்துக்களை நாமாக விரித்து சிந்தனைகளுக்கு உள்ளாக்கும் அவசியத்தை உருவாக்குகிறது



***

இந்த திரைப்படத்தின் கதையும் சம்பவங்களும் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்.

கிறிஸ்துவ தேவாலாயத்தில் ஒரு பெண்ணும் பாதிரியாரும் கொல்லப்படுகிறார்கள். தொடர்ந்து வேறு சில மரணங்கள் நிகழ்கின்றன.  உதவி ஆணையர் வெற்றி (அருண் விஜய்)  இந்த தொடர் குற்றங்களைப் பற்றி விசாரிக்கிறார். இறந்தவர்கள் அனைவரும் பெண்கள். ஒவ்வொரு கண்ணியாக பற்றிக் கொண்டு முன்னகரும் போது இறந்தவர்கள் அனைவரும் கர்ப்பிணிப் பெண்கள் என்று தெரியவருகிறது. இந்த ஒற்றுமை அவரை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறது. இறந்து போனவர்களில் அவருடைய அண்ணியும் ஒருவர். எனவே இதை தனிப்பட்ட துயரமாகவும் எடுத்துக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்துகிறார் வெற்றி. இந்த மரணங்களுக்குப் பின்னேயுள்ள மருத்துவ மோசடிகளும் சதிகளும் துரோகங்களும் ஒவ்வொன்றாக தெரியவருகின்றன. 

ஆண்களிடமுள்ள குறைபாட்டால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்களுக்கு நவீன விஞ்ஞானம் செயற்கை முறை கருத்தரிப்பு எனும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறது. இதில் பல முறைகள் உள்ளன. இந்த திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் மருத்துவமனையானது அவற்றில் ஒரு முறையை தங்களை நாடி வரும் பெண்களுக்கு பரிந்துரைக்கிறது. அதன்படி கணவனின் உயிரணுக்களை எடுத்து மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி விடுவார்கள். இயற்கையான முறையில் நிகழும் பாலுறவின் வழியாக கர்ப்பம் தரிக்கவில்லை என்கிற விஷயத்தை தவிர தன் கணவனின் மூலமாக வாரிசு ஒன்றை அடைகிறோம் என்கிற திருப்தி சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படும். மலடி என்று சமூகத்தால் இகழப்படும் மனப்புழுக்கத்திலிருந்தும் அவர் வெளிவரலாம். 

 மருத்துவமனையானது, வணிக நோக்த்திற்காக  ஒரு மோசடியை செய்கிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருடைய உயிரணுக்கள் ஒரு குழந்தையை உருவாக்குவதற்கான போதுமான தகுதியோடு இல்லை என்றால் வேறொரு அநாமதேய ஆணின் உயிரணுக்களை பயன்படுத்தி கர்ப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் நடைமுறையில் உள்ளதுதான் என்றாலும்   சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இதை மறைப்பது குற்றம். தார்மீகமாக அநீதியும் கூட. இந்த உணர்வுரீதியான மோசடியையும் துரோகத்தையும் மருத்துவ நிலையம் செய்கிறது.  தங்களின் வழியாக உருவான வாரிசு என அந்த தம்பதியினர் நினைத்துக் கொண்டிருக்கும் போது அது அவ்வாறாக இல்லை என்றாகி விடுகிறது. முற்போக்கான எண்ணமுள்ளவர்கள் இந்த மாற்று ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொள்வர். மேலைய நாடுகளில் இது வழக்கத்தில் உள்ள நடைமுறைதான். ஆனால் கற்பு என்பது ஒழுக்க மதிப்பீடுகளோடு அழுத்தமாக பிணைக்கப்பட்டிருக்கும் இந்தியா போன்ற தேசங்களில் இதை ஏற்பதில் நிறைய கலாசார சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு மனச்சிக்கல்கள் இருக்கின்றன. 

இந்தப் பலவீனங்களைத்தான் இதில் வரும் வில்லன் பயன்படுத்திக் கொள்கிறான். மருத்துவமனை செய்யும் மோசடியின் உள்ளே நுழைந்து அதனினும் கூடுதலான துரோகத்தைச் செய்கிறான். அதற்கு அவனுடைய தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. தன் மூலமாக ஒரு வாரிசு உருவாக வேண்டும் என்பதில் வெறியாக உள்ளவன் அவன், இது குறித்து மனைவியுடன் ஏற்படும் சச்சரவு காரணமாக அவளைக் கொன்று விடுகிறான். தனது நோக்கம் தடைபட்டு விடுவதால் மருத்துவ நிலையத்தில் ரகசியமாக புகுந்து விந்து வங்கியில் தன்னுடைய உயிரணுக்களை சேர்த்து விடுகிறான். இதன் மூலம் தன்னுடைய வாரிசு பல பெண்களின் வழியாக உருவாகும் என்கிற குரூர திருப்தி அவனுக்கு. அவனுடைய நண்பர்கள் பணத்தாசை உள்ளவர்கள் என்பதால் சம்பந்தப்பட்ட பெண்களைத் தொடர்பு கொண்டு இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி பணம் பறிக்கத் துவங்குகிறார்கள். இந்த மோசடி தொடர்பாகத்தான் பெண்களின் மரணங்கள் நிகழ்கின்றன. 

மருத்துவமனையால் ஏமாற்றப்படும் பெண்களைத் தவிர இதிலுள்ள ஆபத்தான வேறு சில விதிவிலக்குகளையும் படம் சுட்டிக் காட்டுகிறது. கணவருக்கு தகுதியிருந்தாலும் சில காரணங்களுக்காக வேறொரு ஆணின் உயிரணுக்களின் மூலம் கர்ப்பம் ஈட்டிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். தமக்குப் பிடித்தமான வெற்றிகரமான கிரிக்கெட் வீரனைப் போலவே தன்னுடைய குழந்தையும் உருவாக வேண்டும் என நினைக்கும் ஒரு பணக்காரப் பெண், அந்த கிரிக்கெட் வீரனின் உயிரணுக்களை ரகசியமாக பெரும் பணம் கொடுத்து வாங்கி கர்ப்பத்தை உருவாக்கிக் கொள்கிறாள். தன் மகளுக்கே தெரியாமல் இந்த அநீதியைச் செய்யும் ஓர் அரசியல்வாதியின் குரூரமான செயலும் படத்தில் சித்தரிக்கப்படுகிறது. 



***

ஒரு குழந்தையை, தம் வாரிசை உருவாக்குவதில் ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் இணைவதுதான் அடிப்படைக் காரணமாக இருந்தாலும் இது சாத்தியப்படாத சூழலில் அதற்கான காரணங்கள் ஆராயப்படாமல்  பெண்ணின் மீதுதான் எல்லாப் பழிகளும் சுமத்தப்படுகின்றன. அவள் மலடி என்று சமூகத்தால் அவமதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறாள். "அண்ணியின் சாவிற்கு நீயும்தானே காரணம், எப்ப விசேஷம்' னு கேட்டு அவங்களை சாகடிச்சிட்டே  இருந்தே" என்று இத்திரைப்படத்தின் நாயகன் தன் தாயை நோக்கி கேட்கிறான். 

இந்தச் சிக்கலில் இருந்தும் மனப்புழுக்கத்தில் இருந்தும் வெளியேற பெண்ணுக்கு எவ்வித வாய்ப்பும் தரப்பட்டதேயில்லை. ஆணிடம் குறைபாடு இருந்தாலும் அந்தப் பழியையும் இணைத்து பெண்ணே ஏற்க வேண்டியிருக்கிறது. ஆனால் மறுபுறம் இதற்கான எவ்வித பழியையும் ஏற்க வேண்டியில்லாத சூழலில் வேறொரு திருமணத்தின் மூலம் ஆணுக்கு இன்னொரு வாய்ப்பையும் தர இச்சமூகம் தயாராக இருக்கிறது. 

ஆனால் நவீன மருத்துவம் இதற்கான மாற்றைக் கண்டுபிடித்திருப்பதின் மூலம் பெண்ணின்  துயரத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள பழமைவாத சிந்தனையில் ஊறிப் போன சமூகம் தயங்குகிறது. அப்போதும் பெண்ணே பலியாக வேண்டியிருக்கிறது. 

ஏன் பெண்ணைக் குறிவைத்தே இத்தனை சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன? மனித வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.


***


மனித குலம் உருவாகிய காலக்கட்டத்தில் வேட்டையாடும் சமூகமாக இருந்தது. அப்போதைக்கு தேவையான உணவிற்காக மிருகங்களை வேட்டையாடி உண்பதின் மூலம் ஓரிடத்தில் நிலையாக தங்காமல்  நாடோடிகளாகவே இருந்தனர். அவர்களுக்குள் நிறைய சண்டைகள் உருவாகிக் கொண்டே இருந்தன. குழுக்கள் உடைந்து மேலும் குழுக்களாக சிதறி பூமிப்பந்தின் பல்வேறு இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார்கள். அப்போது பெண்ணே குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தாள். குழுவை வழிநடத்தினாள். மனித உறவுகளும் ஒழுக்க மதிப்பீடுகளும் வரையறை செய்யப்படாத சூழலில் பாலின உறவு சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தது. எவரும் எவருடனும் உறவு கொள்ளலாம் என்கிற நிலைமை. 

உடல் ரீதியாக ஒரு பெண்ணை ஆணிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம், அவளுடைய உடலின் மூலமாகத்தான் குழந்தை உருவாகிறது.. இது ஆணிற்கு அச்சத்திற்கு ஏற்படுத்தியது. அவளை கடவுளின் அம்சம் கொண்டவளாக கருதி வழிபட வைத்தது. பெண்ணின் தலைமையை ஏற்க எவ்வித மனச்சிக்கலும் இல்லாத நிலைமையை உண்டாக்கியது. தாய்வழி சமூகமாக இருந்த காலக்கட்டம் அது. 

ஆனால் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு நிலத்தைச் சார்ந்த வாழ்வுமுறை உருவாகிய பிறகு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. நகர்ந்து கொண்டேயிருக்கும் நாடோடிகளாக அல்லாமல் நிலையான வாழ்வுமுறை உண்டாகியது. தாங்கள் விவசாயம் செய்யும் இடம் தங்களுக்குத்தான் சொந்தம் என்கிற நிலவுடமை சமூக எண்ணங்கள் உருவாகின. தனக்குப் பிறகு இந்தச் சொத்துக்களை அனுபவிக்க வேண்டிய உரிமை தன்னுடைய ரத்தத்தின் மூலமாக மட்டுமே உருவான வாரிசு தேவை என்று ஆண் கருதினான். இதற்காக அவன் பெண்ணின் கருப்பையை கட்டுப்படுத்தவும் கறாராகவும் கண்காணிக்கவும் வேண்டியிருந்தது. இதர ஆண்கள் அதை அணுகாதவாறான தடுப்புகளை ஏற்படுத்த வேண்டியிருந்தது. எனவே தன் உடல் வலிமையைக் கொண்டு பெண்ணின் அதிகாரத் தலைமையைக் கைப்பற்றினான். பெண்களின் மீதான கட்டுப்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமான பல்வேறு தந்திரங்களின் மூலமாகவும் ஆண்சமூகம் ஏற்படுத்தியது. 


பெண்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் இதர ஆண்களை பாலியல் நோக்கில் அணுகக்கூடாது என்பதற்காக கற்பு போன்ற கருதுகோள்கள் உருவாக்கப்பட்டன. தாலி என்கிற அடையாளத்தின் மூலம் அவள்  இன்னாரின் மனைவி மட்டுமே என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவள் மனதாலும் கூட தன் கணவரை மட்டுமே நினைத்திருந்தால் 'கற்புக்கரசி, பத்தினி' என்றெல்லாம் போற்றப்படுவாள். மாறாக இதிலிருந்து அவள் துளி தவறினால் கூட குடும்பப் பெண்ணாக கருதப்படாமல் ஒழுக்க வீழ்ச்சியின் அடையாளமாக கருதப்பட்டு இகழப்படுவாள். தன் கர்ப்பப்பையை தூய்மையாக வைத்திருந்து தன்னைக் கைப்பற்றிய ஆணின் மூலமாக மட்டும் குழந்தையை உருவாக்குவதும் அந்தக் குழந்தைகளை வளர்ப்பதும் மட்டுமே அவளின் அடிப்படையான கடமை என்கிற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. குடும்பம் என்கிற நிறுவனம் இப்படித்தான் உருவாகியது. பெண்ணின் எல்லா உரிமைகளும் சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு பெரும்பாலானவற்றை ஆண் சமூகம் கைப்பற்றியது. 

பெண்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமலிருந்தது. அவன் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம். ஓர் ஆணுக்கு குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடுகள் இருந்தாலும் அதற்கும் பெண்ணேதான் காரணமாக இருக்க முடியும் என்று சமூகம் அழுத்தமாக நம்பியது. அவனுக்கு வேறு வாய்ப்புகள் தரப்பட்டன. இந்த தந்திரங்களையெல்லாம் பெண்களையே நம்ப வைத்ததுதான் ஆண் சமூகத்தின்  சாதனை. 

இந்த வரலாற்றுச் சுமையையும் ஆண்களின் துரோகத்தையும் பெண் சமூகம் பன்னெடுங்காலமாக சுமந்து வருகிறது. 


***


பெருமாள் முருகன் என்கிற எழுத்தாளர் எழுதிய 'மாதொரு பாகன்' என்கிற நாவலின் மீது சில மாதங்களுக்கு முன் சர்ச்சை உண்டாகியது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை, சமூகத்தைச் சார்ந்தவர்கள் அந்த நாவல் தங்களை இழிவுபடுத்துகிறது என்று கூறி போராட்டங்களை ஏற்படுத்தினார்கள். அந்த நாவலின் உள்ளடக்கம் என்ன?


அன்பான தம்பதியொருவர் தங்களின் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தை இல்லை. கணவனின் குடும்பத்தாரும் சரி, ஊராரும் சரி, இது சார்ந்த பல்வேறு விதமான  அழுத்தங்களை அந்தப் பெண்ணுக்கு தருகிறார்கள். அவளால் எந்தவொரு மங்கல நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடிவதில்லை. கணவனுக்கும் இது வருத்தம்தான். இது சார்ந்த பரிகாரங்கள், சடங்குகள் அனைத்தையும் முயன்று பார்க்கிறார்கள். எவ்வித பலனும் இல்லை. இன்னொரு திருமணத்தை செய்து கொள் என்று சமூகம் அந்தக் கணவனுக்கு பரிந்துரைக்கிறது. தன் மனைவியின் மீதுள்ள அன்பால் அவன் அந்த ஏற்பாட்டிற்கு சம்மதிப்பதில்லை.

அந்த ஊரில் வருடந்தோறும் ஒரு திருவிழா நடைபெறும். அதன் இறுதிநாளில் ஒரு சடங்கு உள்ளது. அதன்படி குழந்தைப் பேறில்லாத பெண்கள் கணவர் அல்லாத வேற்று ஆண் ஒருவனுடன் கூடி அந்த வாய்ப்பை அடைவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படுகிறது. ஆண்களின் கூட்டத்தில் தனக்குப் பிடித்தமானவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு பெண்ணுக்கு அளிக்கப்படும். இவ்வாறு அடையும் குழந்தைகள் கடவுளின் வரமாக கருதப்படுவார்கள். அந்தச் சடங்கில் கலந்து கொள்ளும் ஆணும் கடவுளின் அம்சமாகவே கருதப்படுவான்.

எத்தனையோ வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்தச் சடங்கைப் பற்றி யோசித்துப் பார்த்தால் நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பான 'செயற்கை கருத்தரிப்பு' என்கிற முறையை இன்னொரு பாணியில் அந்தக் காலத்திலேயே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியம் உருவாகிறது. பழமைவாத சிந்தனைகளும் கடுமையான ஆச்சார சூழல்களும் நிலவிய காலக்கட்டத்தில் ஆன்மீகம் எனும் அமைப்பு வழியாக ஒரு சடங்காக இதை அமைத்திருப்பதில் முன்னோர்களின் சமயோசிதத்தையும் முற்போக்கு எண்ணத்தையும் பாராட்டத் தோன்றுகிறது. ஆணிடம் குறைபாடு இருந்தால் அது சார்ந்த பழியையும் துயரத்தையும் காலம்பூராவும் பெண்களே ஏற்றுக் கொண்டு புழுக்கத்தில் அவதியுறும் துயரத்திலிருந்து ஒரு விடுதலையை இந்தச் சடங்கு அளிக்கிறது. அதே சமயத்தில் இது சார்ந்த குற்றவுணர்வோ, ஒழுக்க  மதிப்பீடு சார்ந்த இகழ்ச்சியோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இதற்கு பக்தி முலாமும் பூசப்பட்டு விட்டது. எத்தனை அற்புதமான ஏற்பாடு?

அந்த நாவலில் வரும் நாயகி, தன் கணவன் அறியாமல் சடங்கில் கலந்து கொள்கிறாள். அவள் அதுவரை அனுபவித்த துயரங்கள் அந்த நிலைக்கு அவளைத் தள்ளுகிறது. இதை பின்னால் அறியும் கணவன் துயரமும் கோபமும் கொள்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது. 

நாவலாசிரியரான பெருமாள்முருகன், இதில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் பெயரை குறிப்பிட்டு விட்டதால் அந்த ஊரின் சமூகம் இது சார்ந்த கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. 'நாங்கள் என்ன, தந்தை யாரென்று அறியாத முறையற்ற வழியில் வந்த கூட்டமா?' என்று கொதிப்படைந்ததது. குழந்தைப் பேறு அடைய முடியாத பெண்களின் துயரத்தையும், அது சார்ந்து முன்னோர்கள் ஏற்படுத்திய அற்புதமான மாற்று ஏற்பாட்டின் அவசியத்தையும் ஆண்மைய சிந்தனை உலகத்தால் சிந்திக்கவோ, சகித்துக் கொள்ளவோ முடியவில்லை. இதுவொரு குறிப்பிட்ட பிரதேசத்தின், சமூகத்தின் பிரச்சினை மட்டுமல்ல. உலகளாவிய பிரச்சினை. பெண் சமூகம் பன்னெடுங்காலமாக எதிர்கொள்ளும் பிரச்சினை. 


***

குடும்பம் என்கிற அமைப்பு உங்களை சிறைப்படுத்துமானால், பெண்களே.... உங்களின் கர்ப்பப்பைகளை தூக்கியெறியுங்கள் என்கிற ஆவேசமான அறைகூவலை முன்வைத்தார் பெரியார்.  குழந்தையைப் பெற்று உருவாக்கி வளர்த்து தரும் இயந்திரங்களாகவே பெண்கள் ஆண்களால் பார்க்கப்படுகிறார்கள் என்பதால் அவர் அப்படிச் சொன்னார். கற்பு, தாய்மை, குடும்பம் போன்ற பல கருத்தாக்கங்களும் நிறுவனங்களும் அவர்களை தந்திரமாக சிறையினுள் வைத்திருக்கின்றன என்பதால் பெண்கள் விடுதலையை நோக்கி நகர்வதற்கான பல்வேறு சிந்தனைகளை முற்போக்காளர்கள் பரப்பி வருகிறார்கள்.  

பெரும்பாலான வரலாறுகளும் சாதனைகளும் ஆண்களின் பெயராலேயே உருவாக்கப்படுகின்றன. இதற்கான காரணம் மிக எளிது. ஏனெனில் பெண்களுக்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. ஆண்களின் சாதனை வெளிச்சத்திற்குப் பின்னால் உள்ள இருளில் நின்று கொண்டு பெண்கள் உதவி செய்து கொண்டிருந்தாலே போதும். இந்தக் கட்டுப்பாடுகளையும் தளைகளையும் மீறி தங்களுக்கான வரலாறுகளை தாங்களே உருவாக்கிக் கொண்ட பெண்கள் சிலரே. 

“உங்கள் குழந்தைகள் உங்கள் வழியாகப் பிறக்கிறார்களே தவிர உங்களிலிருந்து பிறக்கவில்லை” என்றார் கலீல் ஜீப்ரான். அடுத்த தலைமுறை உருவாதற்கான கருவிகள் மட்டுமே நாம்.  ஒவ்வொரு உயிருக்குமே அதனதன் வழியாக சுதந்திரமாக செயல்படுவதற்கான உரிமையுள்ளது. மனித குலத்தைத்தவிர இதர உயிரினங்கள் இயற்கையின் இந்த ஏற்பாட்டின் படிதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டுமே தங்களுக்கான பல சிக்கல்களைத் தானே உருவாக்கி வைத்துள்ளான். 

குழந்தைப் பேறு என்பது ஒரு பெண் கடந்து வரும் குறுகிய காலக்கட்டம் மட்டுமே. இயற்கை அந்த வாய்ப்பை அவளுக்கு தந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே அது.  அதுவே அவளுடைய முழுமையான வாழ்க்கையல்ல. அது சாத்தியப்படாததற்காக அவள் கூச்சப்படவோ எவ்வித அவதூறுகளுக்கும் மனம் புழுங்கவோ அவசியமேயில்லை. ஆணின் பழிகளையும் ஏற்றுக் கொண்டு அவதியுறத் தேவையேயில்லை. இயற்கையின் ஆதார நோக்கமே அடுத்தடுத்த உயிர்களை  உருவாக்கி அந்தச் சுழற்சியின் மூலம் பூமியின் உயிர்ப்பு இயக்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும் என்பதே. பாலின்பம் என்பது அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கண்ணி.

தாம் ஏற்படுத்திய தந்திரங்களின் மூலமாகத்தான் பெண் கட்டுப்பட்டு நடந்து கொண்டிருக்கிறாள் என்று பெரும்பாலான ஆணுலகம் நம்பிக் கொண்டிருப்பது அபத்தமானதொன்று. இந்த தளைகளை மீற வேண்டுமென்று ஒரு பெண் முடிவு செய்து விட்டால் ஆணின் தந்திரங்களை விடவும் பல மடங்கு தந்திரங்களை அவளால் மேற்கொள்ள முடியும். பெண்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் அவளது  துயரங்களிலும் பங்கெடுத்துக் கொள்வதே ஆண்களின் கண்ணியமான எதிர்வினையாக இருக்க முடியும்.

குழந்தைப் பேற்றிற்காக  திருமணம் எனும் நிறுவனத்தையோ கணவன் எனும் உறவையோ சார்ந்திருக்கத் தேவையில்லை என்கிற வாயப்பை நவீன விஞ்ஞானம் உருவாக்கித் தந்திருக்கிறது. ஆணுலகம் உருவாக்கி வைத்திருக்கும் பழமைவாத சிந்தனைகளாலும் கற்பிதங்களாலும் இனியும் பெண்கள் குழம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆணும் பெண்ணும் இணைந்து பாலின சமத்துவத்தோடு உருவாக்குவதே இனிமையான உலகமாக இருக்க முடியும். அதில் உருவாகும் சமநிலையற்ற தன்மைகளை, குறிப்பாக குழந்தைப் பேற்றினால் உருவாகும் சிக்கல்களை பெண்ணுலகம் இனியும் சகித்துக் கொள்ளத் தேவையில்லை என்கிற ஆதாரமான செய்தியை இத்திரைப்படம் நினைவுப்படுத்துவதாக தோன்றுகிறது. 

வணிக நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திரில்லர் திரைப்படமாக 'குற்றம் 23' அமைந்திருந்தாலும் பெண்ணுலகம் எதிர்கொள்ளும் ஒரு சிக்கலான விஷயத்தை மையப்படுத்தியாதாலேயே இது கவனிக்கத்தக்க படைப்பாக மாறியிருக்கிறது.

(ஜன்னல் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்)


suresh kannan

No comments: