கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் தெலுங்கு திரைப்படத்தின், சில நிமிடங்கள் ஓடும் பாடல் டீஸர் ஒன்று இணையத்தில் வெளியானது. மலையாளத்தில் வெளியாகி அதிரிபுதிரியாக ஓடி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற ‘பிரேமம்’ திரைப்படத்தின் தெலுங்கு வடிவ முன்னோட்டக் காட்சிதான் அந்த டீஸர்.
இதன் ஹீரோ நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனாவிற்கு பிறந்த நாள் பரிசாக இந்த டீஸர் அந்தக் குறிப்பிட்ட நாளில் வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இணைய ரசிகர்களுக்கு இது விரும்பத்தக்க பரிசாக அமையவில்லை. ஏற்கெனவே எப்போதும் ரத்தபூமியாக கொந்தளித்துக் கொண்டிருக்கும் இணைய வெளியில் இந்த டீஸர் வெளியானவுடனே ஆவேசமான கிண்டல்களும், அதிருப்தியான எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்கத் துவங்கி விட்டன. இதன் நடிகர் தேர்வு, பாடல், இசை ஆகியவற்றை மலையாள வடிவத்துடன் ஒப்பிட்டு ரணகளமான எதிர்வினைகள் கிளம்பின.
குறிப்பாக ஒரிஜினல் படத்தில் மலர் டீச்சராக வந்த ‘சாய் பல்லவியின்’ வேடத்திற்கு ஸ்ருதிஹாசனை சிறிது கூட மகாஜனங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தெலுங்கு வடிவத்தில், ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி வெளியான நாள் முதற்கொண்டே அது சார்ந்த கிண்டல்கள் இணையத்தில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தன. இப்போது டீஸர் வெளியானவுடன் இது உச்சநிலையை அடைந்திருக்கிறது. முழுதிரைப்படம் வெளிவந்தவுடன் இன்னமும் என்னென்ன ஆகுமோ என்பது அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம். இதில் சிலபல எதிர்வினைகள் தரக்குறைவான வார்த்தைகளுடன் இருந்தன என்பது துரதிர்ஷ்டமானது.
இந்த ரணகளத்தின் இடையே ஒரு கொடுமையான கிளுகிளுப்பாக, ஓர் ஆங்கில இணைய தளம், மலையாளப் பாடலையும் சமீபத்திய தெலுங்குப் பாடலையும் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்குமாறு தன் பார்வையாளர்களைக் கேட்டுக் கொண்டிருந்தது. மலையாளப் பாடலான ‘மலரே’விற்கு ஆதரவாக 89.8 சதவீதத்தினரும் தெலுங்குப் பாடலுக்கு ஆதரவாக 10.13 சதவீதத்தினரும் வாக்களித்திருந்தனர். (ரொம்ப முக்கியம்).
‘நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது ஒரு திரைப்படத்திற்கு இத்தனை அக்கப் போரா?’ என்று சிலர் ஒருபுறம் சலித்துக் கொள்ள ‘ஒரிஜினல் பிரேமமே ஒரு சாதாரண படம்தான். அது எப்படி வந்து நாசமா போனா என்ன இப்ப?’ என்று இன்னொரு புறம் சிலர் வேறு விதமாக அலுத்துக் கொண்டார்கள். ‘இது ஆணாதிக்க மனதிலிருந்து உற்பத்தியாகும் பெண் வெறுப்பு’ என்று ஸ்ருதிஹாசனின் மீதான வசைகள் குறித்து கரடுமுரடான தமிழில் உணர்ச்சி பொங்க கட்டுரைகள் எழுத அதற்கும் லைக்குகள் பிய்த்துக் கொண்டு போனது.
தேர்தல் முடிவுகளைக் கூட சமயத்தில் சரியாக யூகித்து விட முடியும். ஆனால் இந்த இணைய மஹாஜனங்கள் எதற்கு எப்படி விதம் விதமாக பொங்குவார்கள் என்பது யூகிக்கவே முடியாத விஷயம்.
ஒரு திரைப்படத்திற்கு ஏன் இத்தனை கலாட்டா? ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’ என்கிற காமெடிக் காட்சி மாதிரி மலையாள ஒரிஜினல் மட்டும்தான் சிறந்தது என்று பிடிவாதம் பிடிக்க முடியுமா? இந்த எதிர்ப்பின் பின்னணியில் உள்ள வெகுசன உளவியல் என்ன?
சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
ஒரு புகழ்பெற்ற நாவல் திரைப்படமாக உருமாற்றம் ஆகப்போகிறது என்று வைத்துக் கொள்வோம். திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் அப்போதே உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அந்த நாவலைப் படித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் அதைப் பற்றி பல்வேறு கற்பனைகள் இருக்கும். தங்களின் அனுபவங்கள் மற்றும் ரசனை போன்றவைகளையொட்டி அதன் பிரதான பாத்திரங்கள், முக்கியமான சம்பவங்கள் இப்படி இருக்கும் என்று பலவிதமான கற்பனைகளை பல்வேறு விதமாக யோசித்து வைத்திருப்பார்கள்.
சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த பல்லாயிரக்கணக்கான விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை அத்திரைப்படத்தின் இயக்குநர் ஒரேயொரு வடிவத்திற்குள் கொண்டு வந்து அத்தனை பேரின் எதிர்பார்ப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டும். நடக்கின்ற காரியமா இது? இந்த எதிர்பார்ப்புகள் திரைப்படத்தின் வணிகரீதியான வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் விஷயமாகவும் அமையக்கூடும்.
இந்தச் சவாலை வெற்றிகரமாக கடந்த சில இயக்குநர்களும் இருக்கிறார்கள். சறுக்கி அதல பாதாளத்தில் விழுந்தவர்களும் இருக்கிறார்கள். இதைப் போலவேதான் ரீமேக்குகளின் கதியும்.
மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘திரிஷ்யம்’ இங்கே ‘பாபநாசமாக’ வந்த போது ‘எவருடைய நடிப்பு சிறந்தது, கமல்ஹாசனா, மோகன்லாலா’ என்று இணையத்தில் பெரிய குடுமிப்பிடி சண்டையே நிகழ்ந்தது. ‘மணிசித்ரதாழ்’ எனும் அருமையான மலையாளப்படம், இங்கே ‘சந்திரமுகி’யாகி சுமாரான ரீமேக்காக வந்தாலும் ரஜினிகாந்த் எனும் ஸ்டார் அடையாளத்திற்காகவும் வடிவேலு உள்ளிட்ட வணிகத்தனமான சுவாரசிய காரணங்களுக்காகவும் பேயோட்டம் ஓடி வெற்றி பெற்றது. ஒரிஜினல் வடிவத்தை நிறையப் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இவ்வாறான குருட்டு அதிர்ஷ்டங்களும் சமயங்களில் நிகழ்வதுண்டு.
**
ஆனால் பிரேமம் திரைப்படத்தின் விஷயம் அப்படியல்ல. இது கேரளத்தில் பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் 200 நாட்களைக் கடந்த முதல் மலையாளத் திரைப்படம் என்கிற பெருமையையும் கொண்டது. சேட்டன்களைப் போலவே தமிழர்களும் ‘மலர் டீச்சர், மலர் டீச்சர்’ என்று உருகத் துவங்கினார்கள். இத்திரைப்படம் வந்த புதிதில் இணையமெங்கும் மலர் டீச்சர் மகாத்மியம்தான். தங்களுக்கு சிறுவயதில் கல்வி சொல்லித்தந்த டீச்சர் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்காத பிரகஸ்பதிகள் கூட மலர் டீச்சரை தங்கள் மனதில் அழுத்தமாக பச்சை குத்திக் கொண்டார்கள்.
நான் கூட எரிச்சலாகி ‘யாருடா அந்த கபாலி?’ என்கிற ரேஞ்சிற்கு ஆத்திரப்பட்டு ‘பிரேமம்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு தன்னிச்சையாக ‘மலர் டீச்சர்’ என்று உருகி அந்த வழிபாட்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.
இத்தனைக்கும் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவி பேரழகி எல்லாம் இல்லை. சன்னமான உருவம் கொண்டவர். முகத்தில் பருக்கள் வேறு. (இந்தப் பருக்களுக்காகவே ஆராதிக்கிற கோஷ்டி ஒன்று தனியாக இயங்குகிறது). ஆனால் படத்தின் இயல்புத்தன்மையோடு இந்தப் பாத்திரம் மிக கச்சிதமாகப் பொருந்திப் போனது என்பதுதான் இதன் வெற்றியின் ரகசியம். விரித்த கூந்தலோடு அழகான காட்டன் சேலையில் எளிமையின் ஆடம்பரத்தோடு ‘தமிழ் பெண்’ பாத்திரமாக உலா வந்த இவரை மலையாள இளைஞர்கள் மட்டுமன்றி தமிழர்களும் கொண்டாடியதில் ஆச்சரியமில்லை.
இந்தச் சவாலை வெற்றிகரமாக கடந்த சில இயக்குநர்களும் இருக்கிறார்கள். சறுக்கி அதல பாதாளத்தில் விழுந்தவர்களும் இருக்கிறார்கள். இதைப் போலவேதான் ரீமேக்குகளின் கதியும்.
மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘திரிஷ்யம்’ இங்கே ‘பாபநாசமாக’ வந்த போது ‘எவருடைய நடிப்பு சிறந்தது, கமல்ஹாசனா, மோகன்லாலா’ என்று இணையத்தில் பெரிய குடுமிப்பிடி சண்டையே நிகழ்ந்தது. ‘மணிசித்ரதாழ்’ எனும் அருமையான மலையாளப்படம், இங்கே ‘சந்திரமுகி’யாகி சுமாரான ரீமேக்காக வந்தாலும் ரஜினிகாந்த் எனும் ஸ்டார் அடையாளத்திற்காகவும் வடிவேலு உள்ளிட்ட வணிகத்தனமான சுவாரசிய காரணங்களுக்காகவும் பேயோட்டம் ஓடி வெற்றி பெற்றது. ஒரிஜினல் வடிவத்தை நிறையப் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இவ்வாறான குருட்டு அதிர்ஷ்டங்களும் சமயங்களில் நிகழ்வதுண்டு.
**
ஆனால் பிரேமம் திரைப்படத்தின் விஷயம் அப்படியல்ல. இது கேரளத்தில் பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் 200 நாட்களைக் கடந்த முதல் மலையாளத் திரைப்படம் என்கிற பெருமையையும் கொண்டது. சேட்டன்களைப் போலவே தமிழர்களும் ‘மலர் டீச்சர், மலர் டீச்சர்’ என்று உருகத் துவங்கினார்கள். இத்திரைப்படம் வந்த புதிதில் இணையமெங்கும் மலர் டீச்சர் மகாத்மியம்தான். தங்களுக்கு சிறுவயதில் கல்வி சொல்லித்தந்த டீச்சர் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்காத பிரகஸ்பதிகள் கூட மலர் டீச்சரை தங்கள் மனதில் அழுத்தமாக பச்சை குத்திக் கொண்டார்கள்.
நான் கூட எரிச்சலாகி ‘யாருடா அந்த கபாலி?’ என்கிற ரேஞ்சிற்கு ஆத்திரப்பட்டு ‘பிரேமம்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு தன்னிச்சையாக ‘மலர் டீச்சர்’ என்று உருகி அந்த வழிபாட்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.
இத்தனைக்கும் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவி பேரழகி எல்லாம் இல்லை. சன்னமான உருவம் கொண்டவர். முகத்தில் பருக்கள் வேறு. (இந்தப் பருக்களுக்காகவே ஆராதிக்கிற கோஷ்டி ஒன்று தனியாக இயங்குகிறது). ஆனால் படத்தின் இயல்புத்தன்மையோடு இந்தப் பாத்திரம் மிக கச்சிதமாகப் பொருந்திப் போனது என்பதுதான் இதன் வெற்றியின் ரகசியம். விரித்த கூந்தலோடு அழகான காட்டன் சேலையில் எளிமையின் ஆடம்பரத்தோடு ‘தமிழ் பெண்’ பாத்திரமாக உலா வந்த இவரை மலையாள இளைஞர்கள் மட்டுமன்றி தமிழர்களும் கொண்டாடியதில் ஆச்சரியமில்லை.
**
இத்தனை கொண்டாடப்படும் அளவிற்கு ‘பிரேமம்’ காவியப்படமா என்ன? அப்படியெல்லாம் எதுவுமில்லை. இதுவொரு Cult Film ஆக உருமாறியது என்பதுதான் இதன் சிறப்பு.
1970-80களில் மலையாள சினிமாவில் புதிய அலை தோன்றி அடுர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர், ஜான் ஆப்ரஹாம், K.R.மோகனன், G.S.பணிக்கர் போன்றவர்களின் பங்களிப்பின் மூலம் சிறந்த திரைப்படங்கள் உருவாகின. உலகமயமாக்கத்திற்குப் பிறகு வணிகமே பிரதானம் எனும் நோக்கில் தமிழ் மசாலா சினிமாக்களின் வணிக வெற்றியைப் பார்த்து மலையாள சினிமாக்களும் சூடு போட்டுக் கொண்டன. மம்முட்டிகளும் மோகன்லால்களும் மூச்சு வாங்க தமிழ் ஹீரோக்களைப் போலவே சண்டை போடப் பழகினார்கள்.
ஆனால் 2010-க்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் ஒரு நவீன அலை உருவானது. பல இளம் இயக்குநர்கள் உள்ளே வந்தார்கள். புத்துணர்வுடன் பல புதிய முயற்சிகள் வந்து வெற்றி பெற்றன. பார்வையாளர்களின் ரசனையும் மாறியிருந்தது ஒரு காரணம். இந்தப் புதிய அலையின் ஒரு அடையாளம்தான் ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன். குறும்பட உலகிலிருந்து வந்த இவரின் முதல் இருமொழிப் படமான ‘நேரம்’ என்கிற திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பரவலான கவனத்தைப் பெற்றது.
அடுத்த திரைப்படம்தான் ‘பிரேமம்’. ஒரு காலக்கட்டத்தில் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களாக வந்து கொண்டு பார்வையாளர்கள் சலித்துப் போயிருக்கும் சமயத்தில் அந்த டிரெண்டிலிருந்து விலகி ஒரு மென்மையான காதல் கதை மற்றும் நல்ல பாடல்களை கொண்ட ஒரு திரைப்படம் வந்தால், அது சாதாரணமானதாகவே இருந்தாலும் கூட சூழலில் ஒரு புத்துணர்வை உண்டாக்கிய காரணத்திற்காகவே பிய்த்துக் கொண்டு ஓடும்.
தமிழிலும் 80-களில் ‘ஒரு தலை ராகம்’ என்றொரு திரைப்படம் வந்தது. அது அந்தக் காலத்தில் எதற்காக அப்படி பேயோட்டம் ஓடியது என்கிற ரகசியம் இன்னமும் கூட எவருக்கும் பிடிபடவில்லை. இன்றைய இளைஞர்கள் பார்த்தால் ஒருவேளை விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய அந்த திரைப்படம் அக்கால இளைஞர்களுக்கு ஒரு காதல் காவியப் படமாக இருந்தது. இதன் எல்லாப்பாடல்களும் பயங்கர ஹிட். இன்றைய மொழியில் சொன்னால் தெறிமாஸ்.
காதலை வெளிப்படுத்தவும் ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிற, காவியச்சோகத்தோடு நிறைவுறுகிற திரைப்படம் அது.
ஓர் இளம் ஆண், சகவயது பெண்ணிடம் ‘டைம் என்னங்க ஆச்சு?’ என்று கேட்பது கூட ஒரு சாகசமான செயலாக கருதப்பட்ட காலத்தில் நாயகன், நாயகியிடம் தன் காதலை சொல்ல மென்று மென்று முழுங்குவதும் அவள் ஏற்கத் தயங்கியதும் அப்போதைய கலாச்சார சூழலை எதிரொலித்த படியாக இயங்கியது. பார்வையாளர்களும் ஏற்றுக் கொண்டார்கள். சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே ஃபேஸ்புக் பிரெண்டாகி ‘what’s ur plan tonight?’ என்று கேட்கிற பெருநகரத்தைச் சார்ந்த நவீன இளம் தலைமுறைக்கு இந்தப் படத்தின் வெற்றி ஆச்சரியத்தை தரக்கூடும்.
**
‘பிரேமம்’ திரைப்படமும் இப்படியான மெல்லுணர்வுகளைக் கொண்ட படைப்புதான். நம்ம ஊர் சேரன் நடித்து இயக்கிய ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தின் ஒற்றுமைகளைக் கொண்டது. (சேரனின் திரைப்படமும் இத்தாலிய இயக்குநர் Michelangelo Antonioni-ன் 1995- வெளிவந்த Beyond the Clouds –ன் பாதிப்பில் உருவானது).
ஓர் ஆணின் வளரிளம் பருவத்தில் துவங்கி வெவ்வேறு காலக்கட்டத்தில் அவன் எதிர்கொள்ளும் பெண்களைப் பற்றிய திரைப்படம். பிரதான ஆண் பாத்திரமாக நிவின் பாலி நடித்திருந்தார். அந்தந்த காலக்கட்டத்தின் வயதுக்குரிய உடல்மொழியை அற்புதமாக பிரதிபலித்திருந்தார். இத்திரைப்படத்தில் வரும் மூன்று பெண் பாத்திரங்களுமே ரசிகர்களின் இடையே புகழ் அடைந்தவைகளாக மாறின. இதன் சில காட்சிகளில் வரும் ரெட் வெல்வெட் கேக் கூட ஒரு நினைவுச் சின்னமாக, ரசிகர்களின் கவனத்திற்குரியதாக மாறியது.
என்றாலும் அனைத்தையும் விட ரசிகர்களின் மனதில் அழுத்தமாகப் படிந்தது ‘மலர் டீச்சர்’ பாத்திரம்தான். பிரேமம் என்கிற இந்த திரைப்படத்தின் பெயரைச் சொன்னவுடன் இணைக்கோடாக இந்தப் பாத்திரத்தின் பெயரும் சாய்பல்லவியின் உருவமும் சட்டென்று நினைவில் பெருகி வருமளவிற்கு அத்திரைப்படத்தின் மிக முக்கியமானதொரு அம்சமாய் மாறி விட்டார் ‘மலர் டீச்சர்’
நாயகியின் பாத்திரப் பெயரையொட்டி முதல் படத்திலேயே இத்தனை கொண்டாடப்பட்ட முன்உதாரண நடிகை வேறு எவரும் இருக்கிறார்களா என தெரியவில்லை. ‘சில்க்’ ஸ்மிதாவைச் சொல்லலாம். ஆனால் தனது வசீகரமான தோற்றத்திற்காக முதல் படத்திலேயே ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் நதியா முதல் ஆலயம் கட்டி வழிபடப்பட்ட குஷ்பு வரை பல முன்உதாரணங்கள் உண்டு.
**
ஆனால் இந்த திரைப்படம் தெலுங்கில் மறுஆக்கமாக உருவாக்கப்படும் போது ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தில் ஸ்ருதிஹாசனை ஏன் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
பிரேமம் திரைப்படத்தில் ‘மலர் டீச்சராக’ நடித்த சாய்பல்லவிக்கு அதுதான் முதல் திரைப்படம். ஓர் அழகான பாத்திரத்துடன் எளிமையான அழகில் மிளர்ந்த புதுமுகமாக அறிமுகமாகிய சாய்பல்லவியை அந்தப் பாத்திரத்துடன் எளிதில் இணைத்து ரசிகர்கள் எளிதில் ஏற்றுக் கொண்டார்கள். அவரின் இயல்பான நடிப்பும் இதற்குக் காரணமாக இருந்தது. புதுமுகம் என்கிற தகுதியே இதற்கான கூடுதல் பலமாக அமைந்தது.
ஆனால் ஸ்ருதிஹாசன் திரையுலகில் ஏற்கெனவே நிறுவப்பட்ட, பல திரைப்படங்களில் நடித்த ஒரு வணிகமுகம். புகழ் பெற்ற நடிகரின் மகள் என்கிற பின்னணியுடன் திரைத்துறையில் நுழைந்தாலும் தனது தனித்தன்மையான பங்களிப்பினால் குறுகிய காலத்திலேயே பல தென்னிந்திய படங்களில் நடிக்கும் அளவிற்கு முன்னேறியவர். இசையமைப்பாளர் என்கிற கூடுதல் தகுதியும் உண்டுதான். ஆனால் இவரது பிரபலமான அடையாளமே, ரசிகர்களுக்கு மனத்தடையை ஏற்படுத்தக்கூடிய தகுதியின்மையாக மாறி விடக்கூடிய ஆபத்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
வணிகக் காரணங்களுக்காக பிரபலமான நடிகை ஒருவரை இந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்க இதன் தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்திருப்பார்கள் என்றாலும் இது அந்தப் பாத்திரத்திற்கு செய்த துரோகமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அந்த அளவிற்கு ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு பொஸஸிவ்னஸ் இருக்கிறது. மட்டுமல்லாமல் வெளிவந்த டீஸர் பாடலில் ஸ்ருதிஹாசனின் ஆடம்பர உடல்மொழியானது, மலர் டீச்சரின் எளிமையான அழகிற்கு முன் பொருந்தவேயில்லை என்பதும் ரசிகர்களின் கருத்து. சில நிமிடங்கள் மட்டுமே வெளிவந்திருக்கும் இந்தப் பாடலை வைத்து மட்டும் முழு திரைப்படத்தை தீர்மானிக்க முடியாது என்றாலும் இந்த சில நிமிடங்களையே எங்களால் தாங்க முடியவில்லையே என்று அவர்கள் கதறுகிறார்கள்.
மலர் டீச்சர் பாத்திரத்தின் தெலுங்கு வடிவத்திற்கு எளிமையின் அழகியலைக் கொண்ட ஒரு புதுமுக நடிகையை ஒருவேளை அறிமுகப்படுத்தியிருந்தால் ரசிகர்கள் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். மற்ற இரு பெண் பாத்திரங்களுக்கும் மலையாளத்தில் நடித்த அதே நடிகைகளையே தெலுங்கிலும் பயன்படுத்த முடிவு செய்திருந்ததைப் போல ‘மலர் டீச்சரின்’ பாத்திரத்திற்கும் சாய்பல்லவியைப் பயன்படுத்தியிருக்கலாம்.
ஒரு திரைப்படத்தின் பாத்திரம்தான் என்றாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தங்களின் மனதில் பதிந்து விட்ட ஒரு சித்திரம் சற்று முரண்பட்டாலும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது நுண்ணுணர்வு சார்ந்த விஷயம். இதை தயாரிப்பாளர் தரப்பு சிந்தித்திருக்க வேண்டும்.
ஆனால் இந்தக் கலாட்டாக்களின் இடையில் ஆறுதலான ஒரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ஆண் ரசிகர்கள்தான் ‘மலர் டீச்சரின்’ உருவத்தில் சாய்பல்லவியைத் தவிர இன்னொரு நபரை ஏற்றுக் கொள்ளாமல் ரகளை செய்கிறார்கள். ஆனால் பெண் ரசிகர்கள் அப்படியல்ல. மலையாளத்தில் வந்த நிவின் பாலியையும் ரசித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் தெலுங்கில் வரும் நாக சைதன்யா பற்றியும் அவர்களுக்கு எவ்வித புகாரும் முணுமுணுப்பும் இல்லை. இது சார்ந்த கண்டனங்கள் எதையும் அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ‘ஆண்களின் காதல்களைச் சொல்லும் திரைப்படங்கள் மட்டும்தான் வரவேண்டுமா? எங்களுக்கும் அம்மாதிரியான காதல் கதைகள் இல்லையா?’ என்றெல்லாம் கேட்டும் ஆண்களைச் சங்கடத்திற்கு ஆளாக்கவில்லை.
என்ன இருந்தாலும் பெண்கள் பெருந்தன்மையானவர்கள்.
(ஜன்னல், செப் 15-30 இதழில் வெளியானது - நன்றி: ஜன்னல்)
suresh kannan
No comments:
Post a Comment