Tuesday, May 31, 2016

என்னது... ஃபேஸ்புக்ல அக்கவுண்ட் இல்லையா?





ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதெல்லாம் எக்ஸ்பையர் ஆன பழமொழி. இன்றைய தேதியில் உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கிறதா அல்லது ஆதார் கார்டு இருக்கிறதா என்பதெல்லாம்  கூட அத்தனை முக்கியமில்லை. சோஷியல் நெட்வொர்க்கிங்கில் அக்கவுண்ட் இருக்கிறதா என்பதுதான் முக்கியமான மேட்டர். குறைந்தபட்சம் இமெயில் அக்கவுண்ட் கூட இல்லையென்றால் உங்களை வேற்றுக்கிரகத்து ஆசாமி போல அல்லது ஷாப்பிங் மாலில் மஞ்சப்பையுடன் நுழைந்து விட்ட கிராமப்புறத்து நபர் போல விநோதமாக பார்க்கும் நிலைமையாகி விட்டது.

சந்தித்து இரண்டு நிமிடங்களாகும் எந்தவொரு நண்பரும் 'உங்க வாட்ஸ்அப் நம்பர்' தாங்க என்கிறார். "என்னது வாட்சு ரிப்பேரா?" என்று அந்த நுட்பம் தெரியாமல் கோயிஞ்சாமி மாதிரி கேட்டு விட்டால் உங்கள் மானமே போய் விடும். நாட்டிலுள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கையை விட மொபைல் போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிற அடிப்படையான செய்தியை நினைவில் கொள்க.

நீங்கள் கற்காலத்திலிருந்து விடுபட்டு நவீன ஆசாமியாக ஆக வேண்டுமென்கிற விருப்பம் இருந்தால் உடனே எந்தவொரு சமூக வலைத்தளங்களிலாவது உறுப்பினர் ஆகி மொக்கையோ கடலையோ போடுவதில்தான் உங்கள் சமூக அந்தஸ்து உயர்கிறது என்கிற அடிப்படைய செய்தியையாவது அறிந்து உடனே அப்டேட் ஆகவும்.

***

நம்பகமான தகவலா என்று தெரியாது. எங்கேயோ படித்ததுதான். அந்தந்த பிரதேசத்து மக்களின் மனோபாவம் அங்கு வாழும் காக்கைகளுக்கும் படிந்து விடுமாம். உதாரணமாக மைலாப்பூர் காக்கா என்றால் அங்கு தயிர்சாதம் சாப்பிட்ட பழக்கத்தில் எவராவது ஒருவர் அருகில் வந்தாலே பயந்து பறந்தோடி விடுமாம். இதே காசிமேட்டில் கருவாடு தின்ற காக்கா என்றால் நீங்கள் குளோசப்பில் சென்றாலும்... "த்தோடா.... இன்னா'ன்ற மாதிரி கெத்தான திமிருடன் அசையாமல் பார்க்குமாம். உண்மையா என்று சோதித்துப் பார்க்கவில்லை.


இதைப் போலவே இண்டர்நெட்டிலும் ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்டாகிராம் என்று நிறைய வலைத்தளங்களில் புழங்கும் மக்களும் அந்தந்த தன்மையோடு ஆன டிராகுலாக்களாக மாறி விடுகிறார்களோ என்றொரு சந்தேகம் எனக்கு நெடுங்காலமாக உண்டு. உதாரணமாக அதிகம் குழாயடிச்சண்டைகள் நடக்குமிடம் என்று பார்த்தால் டிவிட்டர்தான். ஒபாமா முதல் ஓமக்குச்சி நரசிம்மன் வரை பல பிரபலங்களுக்கு டிவிட்டரில் அக்கவுண்ட் உண்டு. அந்த தருணத்தில் தாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்கிற அதிமுக்கியமாத தகவலை உலகத்திற்கு தெரிவித்து வைப்பது அதன் அடிப்படையான நோக்கம். கூடுதல் காரணம் அதன் எளிமையான வடிவம்.. 140 வார்த்தைகள்தான் அதன் சுருக்கமான எல்லை. 'நான் சாப்பிட்டேன் மசால்தோசை. அது நன்றாகயிருந்திருக்கலாம் என்பதென் ஆசை' என்று கவிதை மாதிரி எந்தவொரு கண்ணராவி செய்தியையும் எப்படி வேண்டுமானாலும் உளறி வைக்கலாம். ஆனால் 140 வார்த்தைகளுக்குள்.

சமந்தா முதல் சன்னிலியோனி வரை யாரை வேண்டுமானாலும்  அங்கு வம்புக்கு இழுக்கலாம். பாராட்டலாம், வசைபாடலாம். அவர்கள் கவனிப்பார்களா என்று தெரியாது. நிறைய பிரபலங்களின் அக்கவுண்ட்டுகளை அவர்களால் நியமிக்கப்பட்டவர்களே இயக்குகிறார்கள். ஆங்கிலத்தில் உள்ள நிறுத்தற்குறிகளையும் அடையாளக் குறிகளையும் கண்டபடிக்கு இறைத்து எஸ்எம்எஸ் மொழியில் எழுதுவதே அதன் ஆதாரமான அடையாளம். புதிதாக நுழைபவர்கள் அதை தேவநாகரி மொழி என்று கூட குழம்ப வாய்ப்புண்டு. பழக இரண்டு நாட்களாவது ஆகும். பழகி  விட்டால் நீங்களும் கூட "hi folks am @phoenix  mall. awesum exp." என்று கம்பு சுழற்றலாம்.

கூகுள் ப்ளஸ் என்றொரு இடம்.  நான் கவனித்த வரை அங்கே விக்ரமன் படத்தின் பாடல்கள் மாதிரி 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்று கண்கசிய, நெஞ்சொழுக எப்போதும்  'லாலாலா' பாடிக் கொண்டிருக்கிறார்கள். பிறந்த நாள் வாழ்த்து, பிரியாணி செய்ததற்கு சாப்பிட்டதற்கு வாழ்த்து, குழந்தை முதன்முதலாக சுச்சா போனதற்கு வாழ்த்து என்று எல்லாவற்றிற்குமே பரஸ்பரம் நெகிழ்ந்து வாழ்த்து சொல்லி கொண்டிடாடிக் கொண்டிருக்கிறார்கள். சண்டை என்பது அங்கே மருந்திற்கும் இல்லை. அப்படியே சண்டை நடப்பது போல ஒரு சூழல் வந்து பலர் ஆவலாக துண்டு போட்டு வந்து அமர்ந்தாலும் எவராவது ஒருவர் 'பசுபதி எட்ரா வண்டிய' என்று கிளம்பி நாட்டாமைத்தனம் செய்து தீயை ஆரம்பத்திலேயே அணைத்து விடுகிறார். பின்பு எப்படி விளங்கும்?

***

ஆக.. இணையத்தின் 'ரத்தபூமி' என்று  .ஃபேஸ்புக்கை சொல்லலாம். எந்தவொரு காண்டவர்ஷியலான விஷயத்தையும் எழுதிய அடுத்த நொடியிலேயே கற்பூரம் போல கப்பென்று பற்றிக் கொள்கிறது. வாதப் பிரதிவாதங்கள், வசைகள், சமாதானங்கள் ...அடிங்.. யாரைடா... என்று உடனே பிக்கப் ஆகி அனல் பறக்கிறது.

எனவே இந்தக் கட்டுரையில் ஃபேஸ்புக் எனும் இணைய வஸ்துவில் எப்படி துவங்குவது, அதன் பிரத்யேக குணாதியசங்கள் சிலவற்றை சுருக்கமாக பார்க்கப் போகிறோம்.

'எனக்கு இதில் ஏதும் எழுதத் தெரியாதே, நான் எதற்கு இதில் சேர வேண்டும், சேர்ந்துதான் என்ன செய்வது?' என்று எல்கேஜிக்கு முதல் நாள் கிளம்பும்  பள்ளிப் பிள்ளை போல் முதலில் குழப்பமும் பயமும் அழுகையும் வருவது சகஜம்தான்.. ஆனால் பொதுவாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமென்றால் சில அடிப்படை தயக்கங்களை கைவிடத்தானே வேண்டும்? உங்களுக்கு ஒன்றுமே எழுதத் தெரிய வேண்டாம் என்பதுதான் இதன் அடிப்படை தகுதியே.

துவக்கத்தில் பிள்ளையார் சுழி போடுவது போல, துவக்க பயன்பாட்டாளர்கள் ஜோதியில் உடனே ஐக்கியமாக எளிய வழி இருக்கிறது. இணையத்தில் தேடி ஒரு நல்ல பூ படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு பொன்மொழி. அது சேக்ஸ்பியர் சொல்லியதோ அல்லது ஷகிலா சொல்லியதோ அதெல்லாம் முக்கியமில்லை. அதன் நதிமூலத்தையெல்லாம் யாரும் ஆராயப் போவதில்லை. சந்தடி சாக்கில் நீங்களே கூட ஒன்றை அடித்து விடலாம். தேவை ஒரு பொன்மொழி. உருக்கமான உபதேசத்துடன்  நச்சென்று இருக்க வேண்டும். ஆச்சா?

இப்போது இரண்டையும் இணைத்து முதல் ஸ்டேட்டஸ்ஸை மங்கலகரமாக ஆரம்பியுங்கள். கூடவே காலை வணக்கம் என்கிற செய்தியையும் அழுத்தமாக தெரிவித்து விடுவது நல்லது. முதல் இரண்டு மணி நேரங்களுக்கு சற்று மயான அமைதியாக இருக்கலாம். உடனே அதற்காக மனம் தளரக்கூடாது. பொறுமை.. பொறுமை... பிறகு மெல்ல துவங்கும். நீங்கள் ஆண் நபராக இருந்தால் 'அற்புதம் ப்ரோ.. குட்மார்னிங்' என்றோ பெண்ணாக இருந்தால், 'உண்மைதான் தோழி' என்றோ மெல்ல கமெண்ட்ஸூம் லைக்கும் வர ஆரம்பிக்கும்.

நம் பதிவிற்கு எவராவது தானே வந்து லைக் போடுவார்கள் என்று திமிராகவும் மெத்தனமாகவும் அமர்ந்து விட்டால் நீங்கள் ஃபேஸ்புக்கிற்கு லாயக்கில்லை என்று அர்த்தம். பின்பு என்ன செய்வதாம்? நம் பழைய மரபை சற்று நினைத்துப் பாருங்கள். ஒரு திருமணத்திற்கு நீங்கள் ரூ.100 மொய் வைத்தால் உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அதே நூறு பதில் மொய்யாக திரும்ப வரும். இதற்காக  பதிவு  செய்யப்பட்ட ஆவணங்களை பரணிலிருந்து இறக்கி மொய் எழுதுவதற்கு முன் அதை தீர ஆராய்வது நம் வழக்கம் இல்லையா? ஆக அந்த மரபுப்படி  நாம் மொய் வைத்தால் பதில் மொய் வரும், வரவேண்டும் என்பதே தீர்மானிக்கப்பட்ட விதி. எனவே சும்மாயிருக்கும் நேரத்தில் ஃபேஸ்புக்கில் இருக்கும் சஹஹிருதயர்களுக்கு பிரெண்ட் ரிக்வெஸ்ட் தருவது, அவர்களது எந்தவொரு மொக்கை ஸ்டேட்டஸ்ஸிற்கும் முகமலர்ச்சியோடு லைக்களை அள்ளித்தருவது 'கலக்கிட்டிங்க ப்ரோ' 'செம போஸ்ட் தல'  என்று கமெண்ட்ஸ் போடுவது என்று சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

'யாரடா இவன், ராஜதந்திரத்தில் நம்மை மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே?' என்கிற ஆச்சரியத்துடன் அவர்களும் உங்கள் ஏரியாவிற்கு வருவார்கள்.  காலை வணக்கம் முடிந்ததா? இப்போது மதிய வணக்கம்.... இன்னொரு பூ, பொன்மொழி, .. இப்போதுதானே காலை வணக்கம் முடித்தோம், மதிய வணக்கத்திற்கு போய் எவராவது லைக் போடுவார்களா என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக யோசிக்கக்கூடாது. நீங்கள் மொய் வைக்கும் வேகத்திற்கு ஏற்ப, உங்களையே அசரடிக்கும் வகையில் பதில் மொய் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். பொன் வைத்த இடத்தில் பூ வைப்பது போல பொன்மொழி கிடைக்கவில்லையெனில் வெறும் பூ படத்தை மட்டும் கூட போடலாம். வரவேற்பு குறையாது.  பிறகு இரவு வணக்கம். இதை மாலை ஏழு மணிக்கே ஆரம்பித்து விட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு வந்து விழும் லைக்குகளின் எண்ணிக்கையை நினைத்து உல்லாசமாக, நிம்மதியாக தூங்க முடியும்.

பிறகென்ன, அப்படியே கியரை  மாற்றி வண்டியை பிக்கப் செய்து போய்க் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். பிறகு பாருங்கள். சொறி, சிரங்கு பிடித்தவன் கை சும்மாவே இருக்காது என்பது போல  நிமிடத்திற்கு ஒரு  முறை 'லைக் விழுகிறதா' உங்கள் டைம்லைனை  மொபைலில் சோதித்துப் பார்த்துக் கொண்டேயிருந்து கொண்டு நீங்களும் ஃபேஸ்புக்கும் நீங்களும் நகமும் சதையுமாக ஆகி விடுவீர்கள்.

சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் அதிகம் மெனக்கெடாமலேயே அதிகம் லைக் விழுவதற்கும் ஒரு வழியிருக்கிறது. அதற்கான அடிப்படை தகுதி பெண் ஃபுரொபைலாக இருக்க வேண்டும். இளம்பெண்ணோ, நடுத்தர வயதோ என்பதெல்லாம் கூட முக்கியமில்லை. பெண் ஃபுரொபைல் அது முக்கியம். பிறகு பாருங்கள். 'காலையில் வாக்கிங் போனேன்.. என்ன அழகான வெதர்' என்று நீங்கள் போடும் ஒற்றைவரி மொக்கை செய்திகளுக்கெல்லாம் கோயில் வாசலில் பொங்கலுக்காக அலை மோதுகிறவர்கள் மாதிரி கூட்டம் கூட்டமாக வந்து லைக் போடுவார்கள். நீங்களே பிரமித்துப் போய் விடுவீர்கள். அந்தளவிற்கான பாலியல் வறட்சியைக் கொண்டது நம் சமூகம். இதைப் போலவே அரை மணி நேரத்திற்கொரு முறை புகைப்படத்தை மாற்றிக் கொண்டே இருப்பது. 'தலை வாருவதற்கு முன் ஒரு போட்டோ.. பிறகு பேன் குத்தும் போது ஒன்று.. தலையை வாரிக் கொண்ட பின் ஒன்று.' இப்படி ஃபோட்டோக்களை போட்டுக் கொண்டே இருங்கள். இந்த பொங்கல் வரிசையாளர்கள் சளைக்காமல் லைக் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். 'awesome தோழி' 'செமயா இருக்கீங்க' என்று தொடர்ச்சியாக 'ஜொள்ளிக் கொண்டேயிருப்பார்கள்.

'சார்.. நான் ஆம்பளயா பொறந்துட்டனே... அது என் தப்பா.. நான் என்ன செய்யறது. லைக்கே விழ மாட்டேங்குதே' என்று புலம்பும் ஆசாமியா நீங்கள். கவலையை விடுங்கள். ஃபேக் ஐடியில் ஒரு பெண் ஃபுரொபைலை கிரியேட் செய்து கொள்ளுங்கள்.  என்னது ஃபேக் ஐடியா. அது தப்பாச்சே.. என்று அறச்சிந்தனையுடன் யோசித்தால் நீங்கள் இண்டர்நெட்டிற்கு லாயக்கில்லை. உங்களை ஒரிஜனல் ஐடியை நீங்களே மறைமுகமாக புகழ்ந்து போணி செய்வதற்கும் எவரையாவது திட்ட வேண்டுமென்று தோன்றினால்  அந்த உத்தம காரணத்திற்கும் உங்களுக்கு ஒரு அநாமதேய அடையாளம் நிச்சயம் இருந்தே ஆக வேண்டும்.

வீட்டில் செய்த கறிக்குழம்பை குளோசப்பில் புகைப்படம் எடுத்து மற்றவர்களை கதற வைப்பது, சமூக அநீதிகளுக்காக 24 மணி நேரமும்அறச்சீற்றத்துடன்  சீமான் மாதிரி முஷ்டியை ஆவேசமாக உயர்த்திக் கொண்டே பேசுவது, அனைத்தும் தெரிந்த அர்னால்ட் மாதிரி அரசியல் கருத்துக்களை பொழிந்து கொண்டே இருப்பது, மொக்கை ஜோக்குகளை சற்று டிங்கரிங் பார்த்து தன்னுடையதாக போட்டுக் கொள்வது, கார்ப்பரேஷன் கழிவறைக்கு சென்றாலும் அங்கிருந்து ஒரு ஷெல்பி எடுத்து அப்டேட் செய்து கொண்டேயிருப்பது... என்று இந்தப் புண்ணிய தளத்தில் பல தரப்பட்ட குரூப்கள் தாறுமாறாக இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. அவற்றையெல்லாம் நிதானமாக இன்னொரு சமயத்தில் பார்க்கலாம்.

வீட்டில் உள்ளவர்களுக்கு குட்மார்னிங் சொல்வது கூட முக்கியமில்லை, காலைக்கடன் முடிப்பதற்கு முன்னாலேயே கலிபோர்னியாவிலுள்ள ஃபேஸ்புக் நண்பனுக்கு 'hi bro' என்று வாழ்த்து சொல்வது சமூக வலைத்தளங்களின் ஆதாரமான விஷயம். ரயில்களில், பேருந்துகளில் சக பயணிகளை கவனித்துப் பாருங்கள். ஏறத்தாழ அனைவருமே தலை குனிந்து தங்களளின் மொபைல்  உலகங்களில் ஆழ்ந்திருப்பார்கள். 'கடவுளை மற, மனிதனை நினை' என்றார் பெரியார். 'மனிதனை மற; விர்ச்சுவல் நட்பை நினை' என்பது இணைய விதிகளில் முக்கியமானது.

போகிற சமயத்தில் இந்தப் பதிவுக்கும் அப்படியே லைக் போட்டுச் செல்ல மறக்காதீர்கள். மொய் மேட்டர் நினைவிருக்கட்டும்.

(குமுதம் - ஃபேஸ்புக் சிறப்பு இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)
 
suresh kannan

No comments: