Monday, May 30, 2016

உலக சினிமா - சில திரைப்பட அறிமுகங்கள் - நூல் முன்னுரை





உலக சினிமா - சில திரைப்பட அறிமுகங்கள் என்கிற நூலிற்காக எழுதிய முன்னுரை இது. 

***

 
நண்பர்களே...

மானுட குலத்தின் மகத்தான விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் முக்கியமானது சினிமா. படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்துத் தரப்பினரையும் தன்னகத்தே ஈர்க்கும் முன்னணி ஊடகமாக உலகெங்கிலும் அது வளர்ந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் இந்த வலிமையான ஊடகம் ஏற்படுத்தியிருக்கும்  தாக்கம் அளப்பரியது. இச்சமூகத்தின் நனவிலி மனங்களில் நட்சத்திரங்களின் பிம்பங்கள் அழுத்தமாகவும் பிரம்மாண்டமாகவும் பதிந்திருக்கின்றன. புனைவிற்கும் யதார்த்தத்திற்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை உணர முடியாதவாறு சினிமாவின் தாக்கம் இங்கே ஆழமாக படிந்திருக்கிறது. திரையின் நிழலில்  ஊதிப்பெருக்கப்படும் நட்சத்திரங்களின் நல்லியல்புகளையும் அவதார சாகசங்களையும் உண்மையென நம்பி தங்களை ஆளும் அதிகாரத்தையே அவர்களிடம் ஒப்படைக்கத் துணியும் அளவிற்கு சினிமாவை அப்பாவித்தனமான ஆவேசத்துடன் நம்பி பின்பற்றுகிறது தமிழ்ச் சமூகம்.

ஒரு சினிமாவை எப்படி அணுகுவது என்பது பற்றிய பயிற்சியும் அது சார்ந்த ரசனையும் பெருமளவு அற்ற சூழல் நம்முடையது. உலக அளவில் சினிமாவை அதிகமாக உற்பத்தி செய்யும் ஒரு பிரதேசத்திலிருந்து,  நூறு ஆண்டுகளை கடக்கப் போகும் தமிழ் சினிமாவிலிருந்து சர்வதேச அளவில் ஒப்பிடுமளவிற்கு - சில அரிதான முயற்சிகளைத் தவிர்த்து - ஒரு நல்ல படைப்பு கூட இல்லை என்பது ஒரு முரண்நகை. இதற்கு படைப்பாளர்களை மட்டுமே குறைகூறுவது முறையல்ல. சினிமா என்பது அதன் உருவாக்கத்திற்கு பெரும் நிதியைக் கோரி நிற்கும் கலை என்பதால் அது சார்ந்த வணிகக் கட்டுப்பாடுகள்,  தடைகள் சில நல்ல படைப்பாளர்களையும் முடக்கி வைத்திருக்கின்றன. எனவே ஒட்டுமொத்த சமூகத்தில் இதற்கான மாற்றம் ஏற்பட வேண்டியிருக்கிறது;  பார்வையாளர்கள் தங்களின் ரசனையை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு காலக் கட்டத்தில் சினிமா சங்கங்கள் மூலம் ஒரு குறுகிய அறிவுஜீவி வட்டத்தால் மட்டுமே அணுகப்பட்டுக் கொண்டிருந்த உலக சினிமாவானது நுட்ப புரட்சியால் இன்று இணையத்தின் மூலமும் குறுந்தகடுகளின் மூலமும் வீட்டின் வாசலிலேயே எளிதில் அணுகக்கூடிய ஒரு சாதனமாகி விட்டது. இவற்றைக்  காணும் தமிழ் சினிமாவின் சராசரியான பார்வையாளர் கூட தான் காணும் உள்ளுர் வெகுசன சினிமாவோடு தன்னிச்சையாக இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து  அவற்றிக் காணக்கூடிய  மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடுகளை அதிருப்தியோடு ஒப்பிடும் சூழல் நேர்ந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் படைப்பாளர்களும் இந்த நெருக்கடியை இப்போது மெல்ல உணரத் துவங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் புதிய அலை இளம் இயக்குநர்களிடமிருந்து வெளிவரத் துவங்கியிருக்கும் குறிப்பிடத்தகுந்த முயற்சிகள் அந்த மாற்றத்தை நமக்கு உணர்த்துகின்றன. எனவே சினிமா குறித்த ரசனை அதிகமாகப் பரவும் போது அது ஒட்டுமொத்த சூழலிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற நடைமுறை உண்மையையே இதன் மூலம் காண்கிறோம்.


***

இந்த நூலில் நீங்கள் வாசிக்கவிருக்கும் உலக சினிமா குறித்தான இந்தக் கட்டுரைகள், என்னுடைய வலைப்பதிவில் [http://pitchaipathiram.blogspot.in] பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்டவை. எழுத்தாளர் சுஜாதாவை இந்தத் தருணத்தில் அன்புடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு கணையாழில் அவர் எழுதிய பத்திக் கட்டுரையொன்றில்  'பதேர் பாஞ்சாலி' எனும் அற்புதமான திரைப்படத்தையும் சத்யஜித்ரே எனும் உன்னதமான கலைஞனையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒரு சராசரி பார்வையாளனாக தமிழ் சினிமா எனும் அபத்தக் களஞ்சியத்தில் அதுவரை உழன்று கொண்டிருந்த என்னை  பல்வேறு நாட்டுத் திரைப்படங்களை காணும் உத்வேகத்தையும் ஆவலையும் அந்த ஒரு நுனி அறிமுகமே நகர்த்திச் சென்றது. தவிரவும் பிறகு உலக சினிமா குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், செழியன் ஆகியோரின எழுத்துக்களும் எனக்கு நல்ல சினிமாக்களை அறிமுகப்படுத்தின.

அவை தந்த மனவெழுச்சியில் உலகத் திரைப்படங்களைக் காணத் துவங்கி அந்த அனுபவங்களை மற்றவர்களுக்கும் எப்படியாவது கடத்தி விட வேண்டும் என்கிற ஆவலில் எழுதப்பட்டவைகளே இந்தக் கட்டுரைகள். அதற்கான துள்ளலான மனவுணர்வையும் கிளர்ச்சியையும் இந்தக் கட்டுரைகளில் நீங்கள் காண முடியும். விமர்சனம் எனும் சொல்லில் உள்ள கனத்தை நான் அறிவேன். எனவே இவை விமர்சனக் கட்டுரைகளோ அல்லது ஆய்வுக்கட்டுரைகளோ அல்ல. சிறந்த உலக சினிமாக்களை உங்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரைகளின் பிரதான நோக்கம். அதை இந்த நூலின் வழியாக நிறைவேற்றியிருக்கிறேன் என நம்புகிறேன்.

இந்தப் பதிவுகள் இணையத்தில் வெளியாகும் போது அவற்றை ஆவலுடன் வாசித்தும் பின்னூட்டமிட்டும் ஊக்குவித்த சக இணைய நண்பர்களின் அன்பை நெகிழ்ச்சியுடன் இந்தச் சமயத்தில் நினைவுகூர்கிறேன். சினிமா விமர்சனங்கள் குறித்து எழுதப்படும் வலைப்பதிவுகளுள் முக்கியமானவைகளுள் ஒன்றாக என்னுடைய வலைப்பதிவை எழுத்தாளர் ஜெயமோகன் தன் இணையத் தளத்தில் ஒரு முறை குறிப்பிட்டதை ஒரு மூத்த படைப்பாளியின்  ஆசியாகவே கருதுகிறேன்.

உலக சினிமா குறித்த ரசனை பொதுப் பார்வையாளர்களிடம் மேலதிமாக பரவுவதின் மூலம் அது தமிழ் சினிமாவின் உருவாக்கத்திலும் எதிரொலிக்கும் என்பதே என் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும். அந்தச் சூழல் சாத்தியமாக இந்த நூலின் பங்கு ஒரு துளியேனும் இருக்குமானால் அது எனக்கு மகிழ்ச்சியே.  இந்த நூலை பதிப்பிக்க முன்வந்த கிழக்கு பதிப்பகத்தினருக்கும், குறிப்பாக இந்த முயற்சியை முன்னெடுத்த நண்பர் ஹரன் பிரசன்னாவிற்கும் என் மனப்பூர்வமான நன்றி.


அன்புடன்

சுரேஷ் கண்ணன்

***

நூல் தொடர்பான கிழக்கு பதிப்பகத்தின் இணையச்சுட்டி. ஆர்டர் செய்து ஆன்லைனிலும் பெறலாம். 



 'இந்திய சினிமா - வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை' என்கிற இன்னொரு  நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரை.


suresh kannan

No comments: