Tuesday, March 15, 2016

ஆஸ்கர் விருது 2016 - குமுதம் கட்டுரை - Uncut version



கேனஸ்,  பாஃப்டா, வெனிஸ் போன்று உலகெங்கிலும் வழங்கப்படும் பல சர்வதேச சினிமா விருதுகள் இருந்தாலும் கொட்டாம்பட்டியில் உள்ள ஆசாமி கூட  வாட்ஸ்-அப்பில் ஆவலாக கவனிக்கும் அளவிற்கு புகழ்பெற்றது ஆஸ்கர் விருது.

 'மாப்ள.. இந்த வருஷம் நிச்சயம்டா"  என்று சில பல சமயங்களில்  எதிர்பார்க்கப்பட்டு 'ஆஸ்கர் நாயகன்' என்கிற பட்டத்தோடு மட்டும் திருப்தியடைய வேண்டிய கமல் ரசிகனின்  நிலைமையைப் போலவே ஹாலிவுட்டில் உள்ள டிகாப்ரியோவின் ரசிகனுக்கும் ஆகியிருந்திருக்கும். 'இனிமே வயசுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன?' என்கிற அளவிற்கு சோர்ந்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். இந்த வருடமாவது   டிகாப்ரியோவிற்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

கடந்த வருடங்களில் சிறந்த நடிகருக்கான பிரிவில் இதுவரை நான்கு முறை நாமினேட் ஆகியும் அது கிடைக்காத வெறுப்பில் விருதுக் கமிட்டியை 'F***k you' என்று அவர் கெட்ட வார்த்தையால் திட்டிய ராசியோ என்னவோ இந்த ஐந்தாவது முறையில் விருதை வென்றே விட்டார் டிகாப்ரியோ. தி ரெவனெண்ட் திரைப்படத்திற்காக 'சிறந்த நடிகர்' பிரிவில் கிடைத்த விருது அது. அவருடைய தொடர்ந்த ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்பிற்குமான சரியான பரிசு என்றும் சொல்லலாம்.

தி ரெவனெண்ட் - 19-ம் நூற்றாண்டின் காலக்கட்டத்தில் நிகழும் கதை. மிருகங்களின் தோலுக்காக வேட்டையாடும் வெள்ளையர்களுக்கும் செவ்விந்திய பழங்குடி  இனத்தவருக்கும்  இடையிலான சண்டையின் பின்னணியில் ஒரு தனிமனிதனின் உயிர்வாழும் வேட்கையையும் துரோகத்திற்காக பழிவாங்கும் அவனின் இடைவிடாத துரத்துதலையும் கொண்ட உக்கிரமான பாத்திரத்தில் அசத்தியிருந்தார் டிகாப்ரியோ.

'அப்பாடா! இப்பவாவது கொடுத்தீங்களேடா... என்று விருதை வாங்கிக் கொண்டு நகர்ந்து விடாமல் சமகாலத்தின்  அரசியல் பிரச்சினை குறித்து ஏற்புரையில் டிகாப்ரியோ பேசியதுதான் முக்கியமான விஷயமே.

 'புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை.  சூழலை  மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர்களை,  புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்,  உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும்,  கோடான கோடி  ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர்களை, நாம் ஆதரித்து ஆக வேண்டும்.”

***

தி ரெவனெண்ட் திரைப்படம் 'சிறந்த இயக்குநர்' மற்றும் 'சிறந்த ஒளிப்பதிவு' ஆகிய பிரிவுகளிலான விருதையும்  வென்றது. இதன் இயக்குநரான அலெஹாந்த்ரோ கான்சலஸ் கடந்த ஆண்டும் ''The Birdman' என்கிற திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'Spot Light' வென்றது. கிறிஸ்துவ பாதிரிமார்கள் சிறார்களின் மீது நிகழ்த்தும் பாலியல் குற்றங்கள் நீண்ட காலமாக மறைத்து வைக்கப்பட்டிருக்க, புலனாய்வு பத்திரிகையின் குழு ஒன்று அந்தக் குற்றங்களை தோண்டி எடுக்கிறது. உண்மைச் சம்பவங்களையொட்டி உருவான  இத்திரைப்படம் ஆறு பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் 'சிறந்த திரைப்படம்' மற்றும் 'சிறந்த அசல் திரைக்கதை' ஆகியவற்றில் விருது பெற்றது.

டிகாப்ரியோவைத் தவிர இந்த வருடத்தில் விருது பெற்ற இன்னொரு மிக மிக முக்கியமான நபர் என்று இத்தாலிய இசையமைப்பாளர்  என்னியோ மாரிக்கோனைச் சொல்ல வேண்டும். 'A Fistful of Dollars' போன்ற வெஸ்டர்ன் திரைப்படங்களில் கேட்ட, புல்லாங்குழலின் உன்னதத்திற்கு இணையான மெல்லிய விசில் சப்தமும்  தூரத்தில் ஒலிக்கும் தேவாலய  மணியோசையும் உங்கள் நினைவுக்கு வருகிறதா? உலகத்திலுள்ள மிக முக்கியமான பின்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இவரைக் கொண்டாடுகிறார்கள்.  கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளராாக விளங்கினாலும், கடந்த வருடங்களில் ஐந்து முறை நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் திரைப்படத்திற்காக  இவர் வாங்கிய முதல் ஆஸ்கர் விருது இதுதான் எனும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இவருக்கு 2007-ல் கெளவர விருது வழங்கப்பட்டிருந்தது.

டோரண்ட்டினோவின் 'The Hateful Eight' திரைப்படத்தின் அபாரமான பின்னணி இசைக்காக மாரிக்கோன் இந்த விருதைப் பெற்றார். இத்திரைப்படம் மூன்று பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் பின்னணி இசைப் பிரிவில் மட்டுமே விருது வென்றது உலகமெங்கிலும் உள்ள டோரண்ட்டினோ ரசிகர்களுக்கு ஏமாற்றமாயிருந்திருக்கலாம். என்றாலும் மாரிக்கோன் பெற்ற விருது முழுமையான மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

***

இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான விருதுகளை தட்டிச் சென்றது Mad Max: Fury Road. ஆறு விருதுகள். அனைத்துமே நுட்பம் சார்ந்த துறையிலானது. ஆண் நாயகர்களே ஆதிக்கம் செலுத்தும் ஹாலிவுட்டில் ஒரு பெண் நாயகியாக நிகழ்த்தும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட திரைப்படம். பெண்ணிய அடையாளத்தை பிரதானமாகக் கொண்ட சாகச திரைப்படம் எனலாம். வருங்காலத்தில் நீர் ஆதாரங்களை கைப்பற்றுபவரே  வல்லரசாக இருக்க முடியும் என்கிற அரசியலை பரபரப்பான சாகசக் காட்சிகளோடு விவரிக்கிறது. பத்து பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தது.

சிறந்த நடிகைக்கான விருது பிரி லார்சனுக்கு 'தி ரூம்' என்கிற திரைப்படத்திற்காக கிடைத்தது. ஆணாதிக்க விளைவினால் உருவாகும் குடும்ப வன்முறையில் குழந்தைகள் பாதிக்கப்படும் துயரத்தை பதிவு செய்த திரைப்படம். தன்னுடைய இளம் வயது மகனுடன் சுமார் ஏழு ஆண்டுகள் ஓர் அறையில் அடைத்து வைக்கப்படுகிறார் ஜாய். அவளுடைய கணவன்தான் அந்தக் கொடுமையை செய்கிறார். அந்த துயரம் மகனை பாதித்து விடக்கூடாதே என்பதற்காக ''அந்த அறை'தான் உலகம் என்று அவனை நம்ப வைக்கிறார் ஜாய். பிறகு வெளியுலகைக் காண நேரும் அந்தச் சிறுவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களோடு படம் தொடர்கிறது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை மார்க் ரைலான்ஸ் பெற்றார். ஸ்பீல்பெர்க் இயக்கிய 'பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்' என்கிற திரைப்படத்தில் அமெரிக்காவில் சிக்கிக் கொள்ளும்  ரஷ்ய உளவாளியாக இவர் நடித்திருந்தார். உயிர்  பறிக்கப்படவிருக்கும் நெருக்கடியான நேரத்திலும் அந்தச் சூழலை தத்துவார்த்தமாக வெளிப்படுத்தும் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். சிறந்த துணை நடிகைக்கான விருது 'தி டானிஷ் கேர்ள்' படத்தில் நடித்த அலிசியா விக்காண்டருக்கு சென்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது  ‘தி பிக் ஷார்ட்’ படத்திற்கு வழங்கப்பட்டது.

***

பலரும் எதிர்பார்த்தபடி சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை டிஸ்னியின்  'இன்சைட் அவுட்' தட்டிப் பறித்தது. கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்கு உருவம் தந்து அவை சிறுமி ரைலியின் தலைக்குள் எப்படியெல்லாம் செயலாற்றுகின்றன என்பதை வேடிக்கையாகவும் அதே சமயத்தில் பொருள் பொதிந்ததாகவும் உருவாக்கியதற்காகவே இப்படத்தை வரவேற்கலாம். பெரியவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

சிறந்த அயல் நாட்டு திரைப்படமாக ஹங்கேரியின் ‘சன் ஆஃப் சால்’ விருது பெற்றது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது ‘எக்ஸ் மெஷினா’ படத்துக்கு கிடைத்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவராக நம்மூர் பாலிவுட்டின் தங்கத் தாரகையான பிரியங்கா சோப்ரா இருந்தார் என்கிற அளவோடு நாம் திருப்தியடைய வேண்டியதுதான்.

***


ஆஸ்கர் விருதுகளின் தேர்வில் நீண்டகாலமாக வெளிப்படும் நிறவெறி அரசியல் பற்றிய கண்டனங்கள் இந்த வருடமும் எழுந்தன. நடிகர் வில் ஸ்மித், சில்வஸ்டர் ஸ்டோலோன் நடித்த ''கிரீட்' திரைப்படத்தின் இயக்குநர் ரியான் கூக்ளர் போன்ற கறுப்பினக் கலைஞர்கள் இந்த வருட விழாவை புறக்கணித்தது நெருப்பில்லாமல் புகையாது என்பதை சுட்டிக் காட்டியது.

ஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட்ட மராத்திய திரைப்படமான 'கோர்ட்' , சிறந்த படமாக இருந்தாலும் நாமினேஷன் பட்டியலைக் கூட எட்டவில்லை. அடுத்த வருடமாவது நமக்கு ஆஸ்கர் வடை கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

(குமுதம் 06.03.2016 தேதியிட்ட இதழில் வெளியானது - நன்றி: குமுதம்)

suresh kannan

1 comment:

Sriram said...

ஆஸ்கார் நாயகனுக்கு ஆஸ்கார் விருது குடுத்தால் விருதுக்கே அழகு. (சொல்லிக்கவேண்டியது தானே, காசா பணமா)