இயக்குநர் ராதா மோகனின் சமீீபத்திய திரைப்படம் 'உப்பு கருவாடு'.
பொதுவாகவே ஒரு தமிழ் சினிமா உருவாவதை அதற்குத் தொடர்பேயில்லாத பல அபத்தமான காரணிகளும் விதிகளும் தீர்மானிக்கின்றன. சினிமா என்கிற அற்புதமான ஊடகத்தின் தரத்தை மெல்ல உயர்த்த முயலும் கலைஞர்களுக்கு மத்தியில் அதன் அடிப்படையை அறியாத அதையொரு லாபமீட்டும் வணிகமாக மட்டும் பார்க்கும் இத்துறைக்கு சம்பந்தமேயில்லாத சில அசட்டு முதலாளிகள் இந்த விதிகளை உருவாக்குகிறார்கள். தமிழர்களின் ரத்தத்திலும் சுவாசத்திலும் வாழ்வியலோடும் அரசியலோடும் பின்னிப் பிணைந்த சினிமா என்கிற முக்கியமான பொழுதுபோக்கு வடிவம், அந்த முக்கியத்துவத்தின் பிரக்ஞையேதும் அல்லாமல் கல்யாணத்து சாம்பாரில் போடப்படும் உப்பைப் போல எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்கிற சூழலைக் கொண்டிருக்கிறது. இது சார்ந்த முரண்களையும் அபத்தங்களையும் உறுத்தாத மெல்லிய நகைச்சுவையுடனும் சுயபகடித்தன்மையுடன் சொல்லிச் செல்கிறது இத்திரைப்படம். மேற்பார்வைக்கு சாதாரணதொரு படைப்பாகத் தெரியும் இந்த திரைப்படத்தை இந்த நோக்கில் மையப்படுத்தி பார்க்கும் போது இதன் பரிமாணங்கள் அவல நகைச்சுவையுடன் விரிவதைப் பார்க்க முடிகிறது.
சினிமாவைத் தவிர வேறு எந்த ஊடகமும் தம்முடைய துறையில் உள்ள அபத்தங்களைப் பற்றி வெளிப்படையாக சுய பகடியோ சுய விமர்சனமோ செய்து கொள்வதில்லை. சினிமாவிலும் அவை உருவாவதின் ரகசியங்கள் ஒரு காலக்கட்டம் வரையில் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்பட்டிருந்தன. தன்னுடைய அபிமான நாயகன் தீயவர்களை பாய்ந்து பாய்ந்து தாக்கும் சண்டைக்காட்சிகளை உண்மை என்றே நம்பிய பாமரத்தனம் கூட முன்பு இருந்தது. நாயகர்கள் இந்த ரகசியங்களை பாதுகாப்பதின் மூலம் தங்கள் பிம்பங்களின் முகமூடி வெளியில் தெரியாமலிருப்பதற்காக மிகவும் மெனக்கெட்டார்கள். மேலும் ஒரு சினிமா உருவாவதைப் பற்றிய நடைமுறை ரகசியங்கள் வெளியில் தெரிந்து விட்டால் அவற்றின் மீதான சுவாரசியம் மக்களுக்கு போய் விடும் என்றும் பொதுவாக நம்பப்பட்டது. எனவே சினிமாத்துறை சார்ந்த நபர்களைத் தவிர வேறு எவரையும் படப்பிடிப்புத் தளத்திற்குள் அனுமதிக்காமலிருந்த சூழல் பொதுவாக இருந்தது. ஆனால் 'இன்டோர் ஷூட்டிங்' எனப்படும் மூடிய படப்பிடிப்புத் தளங்களில் சினிமா உருவாகும் வரையே இந்த ரகசியங்களைக் காப்பாற்ற முடிந்தது. அவற்றைத் தாண்டி காமிராக்கள் வெளியே பயணப்படத் துவங்கியவுடன் இதன் ரகசியங்களை பார்வையாளர்கள் மெல்ல அறிந்து கொள்ளத் துவங்கினார்கள். இன்று ஒரு சினிமா உருவாக்கப்படும் பல அடிப்படையான நுட்ப விஷயங்களையும் அதன் பின்னணிகளையும் ஒரு பொதுப்பார்வையாளன் கூட அறிந்திருக்கிறான். அவற்றைப் பற்றி விவாதிக்கிறான். அதிலுள்ள குறைகளை எள்ளலுடன் விமர்சிக்கத் துவங்கியிருக்கிறான்.
சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பல மூடநம்பிக்கைகளை விமர்சிக்கும் தமிழ் சினிமாத் துறையின் உள்ளேயே பல மூடநம்பிக்கைகளும் சென்ட்டிமென்ட்டுகளும் இருக்கின்றன என்பது ஒரு சுவாரசியமான முரண்நகை. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் கேமராவின் முன்னால் தேங்காய் உடைப்பது முதல் கடைசி நாளன்று பூசணிக்காய் உடைப்பது வரை பல அசட்டு நம்பிக்கைகள் இருக்கின்றன. பெரும் முதலீட்டோடு செய்யப்படும் வணிகம் என்பதால் அது சார்ந்த வேண்டுதல்களும் பதட்டங்களும் இயல்பாகவே அமைகின்றன. அறிவுசார் விஞ்ஞானிகள் புழங்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலேயே ஏவுகணைகளை வானில் ஏவுவதற்கு முன்னால் பூஜை நடக்கும் என்று சொல்லப்படும் போது இவை எம்மாத்திரம்? நாயகனுக்கோ நாயகிக்கோ படப்பிடிப்பில் சிறு விபத்து ஏற்பட்டால் அத்திரைப்படம் உறுதியான வெற்றி என்பது முதல் குறிப்பிட்ட நடிகர் படத்தில் இருந்தால் மிக அதிர்ஷ்டம் என்பது வரை முன்பு தற்செயலாக நடந்த விஷயங்கள் பின்பு அதிர்ஷ்ட விதிகளாக்கப்பட்டன. இதில் என்ன கூடுதல் நகைச்சுவை எனறால் பொதுவாக எந்தவொரு பணியையும் துவங்கும் போது மின்சார தடை ஏற்பட்டால் அது அபசகுனமாக கருதப்பட்ட சூழலானது, அதைப் போன்றதொரு தடையை தன்னுடைய முதல் தருணத்திலேயே எதிர்கொண்ட இளையராஜா அடைந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு அதிர்ஷ்டமாக மாறிவிட்டது.
திரைத்துறையில் நிலவும் இது போன்ற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர்களில் முக்கியமானவராக பாலச்சந்தரைச் சொல்லலாம். 'நீர்க்குமிழி' எனும் அவருடைய முதல் திரைப்படத்தின் தலைப்பு சென்ட்டிமென்டிற்கு எதிரானதாக கருதப்பட்டது. அதை மாற்றச் சொல்லி அவரை எச்சரித்தார்கள். என்றாலும் தன்னுடைய திறமையின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக பிடிவாதமாக அந்தத் தலைப்பையே வைத்து வெற்றியும் பெற்றார். சிவப்பான நிறத்தில் அழகாக உள்ளவர்கள் மட்டுமே சினிமாவில் நடிக்கத் தகுதியானவர்கள் என்கிற பொதுவான விதியை உடைத்து ரஜினிகாந்த், சரிதா போன்றவர்களை பிரதான பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற வைத்தவர். சினிமா உருவாகும் படப்பிடிப்புக்காட்சிகளை, பாடல்பதிவுக் காட்சிகளை தன் திரைப்படத்தின் உளளேயே வெளிப்படையாகக் காட்டியவர். 'சர்வர் சுந்தரம்' படத்தில் தமிழ் சினிமா ஹீரோவாக இருக்கும் நாகேஷ், குதிரையொன்றில் வேகமாக பயணிக்கும் காட்சியானது எப்படி Rear Projection Screen உத்தியின் மூலமாக அம்பலப்படுத்தியிருப்பார். இது போன்ற விஷயங்களை மக்கள் அறிந்து கொள்வதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இது போன்று தன்னுடைய திறமை மீது மட்டும் நம்பிக்கை வைக்கும் அரிதான சில படைப்பாளிகள் திரையுலகினுள் இருக்கிறார்கள். மணிரத்னம் கூட தன்னுடைய படப்பிடிப்புகளை துவக்கும் முன் பூஜைகள் ஏதும் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
***
தமிழ் சினிமாவில் உருவாகும் ஆபாசமும் அசட்டுத்தனமும் கலந்த பெரும்பாலான கசடுகளுக்கே இடையே கண்ணியமான முறையில் ஒரு திரைப்படத்தை தருவது கூட பெரிதில்லை, அதிலிருந்து விலகாமல் தொடர்ச்சியாக அதே போன்று நல்ல படங்களை இயக்குவதென்பது பெரிய சவால். இந்த வகையில் இயங்கும் இயக்குநர் ராதா மோகனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஏனெனில் சுசி கணேசன் என்ற இன்னொரு இயக்குநரின் முதல் திரைப்படமான 'ஃபைவ் ஸ்டார்' அருமையான திரைக்கதையுடன் கூடிய நல்ல முயற்சியாக இருந்தது. அடுத்த திரைப்படமான 'விரும்புகிறேன்' சுமாரான முயற்சி என்றாலும் மோசமானதில்லை. ஆனால் இந்த திரைப்படங்கள் அதிக அளவில் வெற்றி பெறாமல் போனதில் அவர் சோர்வடைந்திருக்கலாம். எனவே அடுத்தடுத்து அவர் உருவாக்கிய 'திருட்டுப் பயலே, கந்தசாமி' போன்ற திரைப்படங்கள் மோசமான மசாலா திரைப்படங்களின் வடிவமைப்பில் சிக்கிக் கொண்டு விட்டன. இந்த சூழலுக்கு அவர் மட்டுமே காரணமில்லை. நல்ல முயற்சிகளை பெரும்பாலும் கைவிடும் பார்வையாளர்களும்தான். இந்த நோக்கில்தான் ராதாமோகனின் தொடர்ச்சியான கண்ணியமான திரைப்படப் பங்களிப்பு கவனத்துக்குரியதாகிறது.
'மிஸ்ஸியம்மாவின்' திரைக்கதையை மெருகேற்றி உருவாக்கிய முதல் திரைப்படமான 'அழகிய தீயே', எழுத்திலும் சினிமாவிலும் தாயின் அன்பே பொதுவாக அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் போது தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள அன்பைச் சொன்ன 'அபியும் நானும்", மாற்றுத் திறனாளிகளின் நோக்கில் காதலுணர்வையும் அவை சார்ந்த அகச்சிக்கல்களையும் சொன்ன 'மொழி' போன்ற சிறப்பான திரைப்படங்களை உருவாக்கிய ராதாமோகனின் இந்த திரைப்படம் 'உப்பு கருவாடு'. தமிழ் இலக்கணப்படி நடுவில் வந்திருக்க வேண்டிய 'க்' என்கிற ஒற்றெழுத்து தவிர்க்கப்பட்டிருப்பதை, இலக்கணத்தை ஒதுக்கி நியூமரலாஜிப்படி தப்பும் தவறுமாக திரைப்படத்தின் தலைப்புகள் வைக்கப்படுவதின் மீதான கிண்டலாக கொள்ளலாமோ, என்னவோ.
உப்பு கருவாட்டின் கதைப் பின்னணி என்னவென்பதைப் பார்ப்போம்.
முதல் படம் தோல்வியிலும் இரண்டாவது படம் பாதியிலேயே நின்று போன சோகத்தில் இருக்கும் ஓர் இளம் இயக்குநரை அணுகிறார் ஒரு திரைப்பட மீடியேட்டர். அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதிலுள்ள முக்கியமான நிபந்தனை பணம் போடும் முதலாளியின் மகள்தான் கதாநாயகி. தன் கனவுகளைப் புதைத்து விட்டு வேறு வழியில்லாமல் நடிக்கவே வராத அந்தப் பெண்ணை வைத்து இயக்குநர் ஒத்திகை பார்ப்பதும் தன்னுடைய சில உதவாக்கரை உதவி இயக்குநர்களுடன் கதைவிவாதம் செய்வதும் அதில் ஏற்படும் ஒரு முக்கியமான சிக்கலும்தான் இத்திரைப்படம். வளரும் நகைச்சுவை நடிகராக இருக்கும் கருணாகரனை இத்திரைப்படத்தில் நாயகனாகியிருப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். கருணாகரனும் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து நகைச்சுவைக்கும் தீவிரத்தன்மைக்கும் இடையிலான ஒரு தன்மையை தன்னுடைய பாத்திரத்திற்கு வழங்கி இயக்குநரின் தேர்விற்கு நியாயம் செய்திருக்கிறார்.
படமுதலாளியாக எம்.எஸ்.பாஸ்கர். மீன், கருவாடு வியாபாரத்தில் பணம் அமோகமாக வருவதால் சினிமாவில் முதலீடு செய்வதில் பிரச்சினையில்லை. தனது இரண்டாவது மனைவியின் மகளின் நடிப்பார்வத்திற்காக இரண்டு, மூன்று கோடியை தூக்கிப் போடுவது இவருக்குப் பெரிய விஷயமில்லை. போதாக்குறைக்கு இவரே ஒரு பார்ட்-டைம் கவிஞராகவும் இருக்கிறார். அவ்வப்போது சில அசட்டுத்தனமான கவிதைகளை (?!) சொல்லி பயமுறுத்துகிறார். இவருக்கு வலதுகரமாக ஒரு போலி சாமியார். சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது இவரது ரகசிய ஆசைகளில் ஒன்று. ஒரு தமிழ் திரைப்படம் உருவாவதை எத்தனை அபத்தான விதிகள் தீர்மானிக்கின்றன என்று முதல் வரியில் எழுதியிருந்தேன் அல்லவா? அதற்கான உதாரணங்களுடன் இது போன்ற பல ரகளைகளுடன் நகர்கிறது திரைப்படம்.
நடிகர் நாசர் ஒரு விழாவில் பேசும் போது ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஓர் இயக்குநருக்கு வாய்ப்பு தர விரும்பிய தயாரிப்பாளர், இயக்குநர் வரும் போது அவருடைய ஜாகத்தையும் எடுத்து வரச் சொன்னாராம். ஏன்? தயாரிப்பாளரின் ஜாதகமும் இயக்குநரின் ஜாதகமும் பொருந்தினால்தான் படம் தயாரிக்க ஒப்புக் கொள்வாராம். நடக்கப் போவது படப்பிடப்பா அல்லது இருவருக்குமான முதலிரவா என்று குழப்பமாக இருக்கிறது. முதலில் இந்தத் தகவலை கேட்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் சினிமாவில் நிகழும் பல சென்ட்டிமென்டுகளை அறியும் போது இதுவே பரவாயில்லை என்பதாக தோன்றியது.
இடைத்தரகராக மயில்சாமி. எந்தவொரு சகுனத்தையும் சூழலுக்கும் தனக்கும் ஏற்றபடி சரியாக்கிக் கொள்ளும் இவரது சாதுர்யமான பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது. கனவுத் தொழிற்சாலை நாவலை எழுதின சுஜாதா, அதில் கிட்டு என்கிற, பொய்யையும் புரட்டையும் மிக சகஜமாக செய்கிற ஒரு சினிமாவுலக இடைத்தரகரின் சித்திரத்தை மிக துல்லியமாக எழுதியிருப்பார். மயில்சாமியின் கதாபாத்திரம் அதற்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே தமிழ் ஹீரோயின்கள் ஏன் பெரும்பாலும் லூஸூகளாகவே சித்தரிக்கப்படுகிறார்கள் என்று எனக்கு குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை நாயகனின் பிம்பத்தை இன்னமும் ஊதிக்காட்ட நாயகியை ஒன்றும் தெரியாத அப்பாவியாக, வெள்ளந்தியாக, நாயகனால் காப்பாற்றப்படவிருக்கும் அபலையாக காட்டுகிறார்களோ என்று தோன்றியது. சாவித்திரி,, சரிதா, ரேவதி, சுஹாசினி போன்று தனித்த ஆளுமையையும் நடிப்பாற்றலையும் கொண்டு உருவாகிய நாயகிகள் ஏன் சமீபத்தில் எவருமே இல்லை என்று தோன்றியது. அதற்கான விடை ஒருவேளை இத்திரைப்படத்தில் இருப்பதாக கண்டு கொண்டேன். முன்பெல்லாம் சுமாரான பொருளாதாரப் பின்னணியில் உள்ள பெண்கள்தான் நடிக்க வருவார்கள். சினிமாவுலகம் பெண் பித்தர்கள் நிறைந்த கயவர்களின் உலகம் என்பதான ஒரு சித்திரம் பொதுவில் இருந்ததால் நடுத்தர மற்றும் பணக்காரப் பெண்கள் அதில் நுழைய தயங்கினார்கள். அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லாமலிருந்தது.
ஆனால் இப்போது நிலைமை நிறையவே மாறி விட்டது. தமிழ் தெரிந்த, நடிப்புத் திறமை இருக்கும் பெண்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்காது. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி சிவப்பான நிறத்தில், கொடியிடையாளாக இருந்தால் போதும். நடிப்புத் திறமைக்கான அவசியமே இல்லை. எனவேதான் மாடலிங் செய்யும் பெண்கள், உயர்வர்க்கத்து பெண்கள், படமுதலாளிகளின் உறவினர்களின் பெண்ககள் போன்றவர்கள்தான் இன்றைய நாயகிகள். தங்களின் பாக்கெட் மணிக்காக கூட சிலர் நடிக்க வருகிறார்கள். இரண்டு கவர்ச்சிப் பாடல்களுக்கும் மூன்று காட்சிக் கோர்வைகளில் மட்டும் வருவதற்கு நடிப்பாற்றல் எதற்கு? எனவே பெண்களின் சிறப்பை, அவர்களின் ஆளுமைக் குணங்களை பிரதானப்படுத்தும் திரைப்படங்கள் உருவாவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு உருவாகி வந்தாலும் இளைஞர்களே இன்றைய சினிமாவின் துவக்க வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பதால் அது போன்ற திரைப்படங்கள் ஓடுவதில்லை.
எனவே செல்வச் செழிப்பின் பினனணியில் இருந்து வருபவர்களுக்கு மெனக்கெட்டு நடிக்க வேண்டும் என்கிற அவசியமேதுமில்லை. அந்தச் சூழலில் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்ட கல்யாண குணங்களை நடிப்பிற்காக கூட அவர்களால் மாற்றிக் கொள்ள இயலவில்லை. எனவே நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணாக நடிக்க வேண்டி வந்தாலும் அந்த வறுமையுலகம் குறித்த அனுபவமோ கற்பனையோ அல்லாமல் கொஞ்சி கொஞ்சிப் பேசுகிறார்கள். இது போன்ற பெண்களின் இந்தப் பிரத்யேக குணாதியசங்களே நாளடைவில் தமிழ் சினிமா நாயகியின் குணாதிசயமாக எதிரொலித்து அதுவே நிலைபெற்று விட்டதோ என கருதத் தோன்றுகிறது.
இதில் கருவாடு வியாபாரியின் பணக்கார மகளாக வரும் நந்திதாவிற்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வருவதில்லை. அவரை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார் இயக்குநர். உண்மையில் இந்தப் பாத்திரத்திற்காக அவர் முதலில் யோசித்து வைத்திருந்தது நடிப்புத் திறமையுள்ள தனது தோழி ஒருவரை. ஆனால் அவரை இத்திரைப்படத்தில் உபயோகப்படுத்த முடியாதபடியான நெருக்கடி. தோழியின் தாயும் நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்து காத்திருந்து துணை நடிகையாகவே காலம் தள்ளும் தகவல் படத்தின் ஓரிடத்தில் வசனமாக சொல்லப்படுகிறது. நடிக்கத் திறமையிருந்தும் பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிற அபத்தமும் அந்த திறமை துளிக்கூட இல்லாதவர்களுக்கு வாய்ப்பு தங்கத் தட்டில் தேடி வருகிற அபத்தமும் என இரண்டிற்குமான முரணை இயக்குநர் மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறார். இது போல பல காட்சிகள் படம் பூராவும் வந்து தமிழ் சினிமா ஏன் பல காலமாகவே பூட்டகேஸாக இருக்கிறது என்பதை மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
படமுதலாளியின் உதவியாளர் ஒருவர் சினிமா ஆட்களுக்கு உதவுவதாக நியமிக்கப்படுகிறார். சினிமாவில் ஆர்வமுள்ள அவரும் தன்னுடைய யோசனைகளை இயக்குநருக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறார். இயக்குநருக்கு என்ன செய்வதென்றே தெரியாத தர்மசங்கடம். ஹாலிவுட்களில் ஒரு திரைக்கதையை பல முன் விவாதங்களுக்குப் பிறகு தயார் செய்து ஒரு கச்சிதமான திரைக்கதைப் புத்தகமாக மாற்றிக் கொள்வார்கள். மிக மிக அத்தியாவசியம் என்றால்தான் இடையில் இதை சில மாற்றங்களை செய்யத் துணிவார்கள். இந்தப் புத்தகத்தில் திரைக்கதை, காமிரா கோணங்கள், பாத்திரங்களின் வடிவமைப்புகள், அது சார்ந்த வசனங்கள், உடல்மொழிகள், அசைவுகள் என்று எல்லாமே முன்கூட்டிய திட்டமிடலுடன் கச்சிதமாக தீர்மானிக்க்பட்டிருக்கும். சீட்டுக்கட்டு மாளிகையிலிருந்து அடியில் ஒரு சீட்டை உருவினாலும் மொத்தமும் கவிழ்ந்து விடுவது போல பிறகு செய்யப்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த படைப்பையும் ஒழுங்கையும் பாதித்து விடும் என்கிற பிரக்ஞையும் ஜாக்கிரதையும் அவர்களுக்குண்டு.
ஆனால் துரதிர்ஷ்டமாக தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களே இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள்.மற்ற உருவாக்கங்கள் எல்லாம் முன்பே குறிப்பிட்டபடி கல்யாண சாம்பாரில் உப்பு போடும் கதைதான். பட முதலாளியின் மச்சினன், ஒன்று விட்ட சித்தப்பா, வீட்டு கூர்க்கா என்று எல்லோரும் சொல்லும் தங்கள் இஷ்டப்படி சொல்லும் ஆலோசனைகளை வேறு வழியில்லாத நெருக்கடியில் கேட்டு மோசமான கூட்டு அவியல் மாதிரி உருவாகி அசட்டுத்தனமாக நிற்பதுதான் தமி்ழ் சினிமா.
பயணம் என்கிற தனது முந்தைய திரைப்படத்தில் சூப்பர் ஹீரோக்களின் போலித்தன்மையை கதறக் கதற கிண்டலடித்த ராதா மோகன், இந்தத் திரைப்படத்தில் ஒரு தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் எப்படியெல்லாம் அபத்தங்களும் இடையூறுகளும் நிகழ்கின்றன என்பதை தனது பிரத்யேக நகைச்சுவையோடு சொல்கிறார். இது போன்ற spoof திரைப்படங்கள் தமிழிலேயே வரத் துவங்குவதும் ரசிகர்களின் மனநிலையும் அதையே வழிமொழிவதுமான சூழல் பெருகும் போது இது போன்ற அபத்தங்கள் வருங்காலத்தில் பெருமளவு தவிர்க்கப்படலாம். அதற்கு ராதாமோகனின் இத்திரைப்படமும் ஒரு துளி காரணமாக இருக்கும்.

அம்ருதா - ஜனவரி 2016-ல் வெளியான கட்டுரை (நன்றி: அம்ருதா)
suresh kannan
2 comments:
மொழி படத்தில் ஒரு காட்சி. பிரிதிவிராஜ் சொல்வார், "தமிழ் சினிமால வர நாட்டாமையோட பொண்ணுங்கதான் ரொம்ப பாவம். காலங்காலமா பிச்சைக்காரனயே காதலிச்சுட்டு இருக்காங்க"
அருமையான கட்டுரை.
Post a Comment