Wednesday, January 20, 2016

இந்திய சினிமா குறித்த நூல் வெளியீடு

அன்புள்ள நண்பர்களே,

ஒரு மகிழ்ச்சியான தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஏறத்தாழ சுமார் பத்தாண்டுகளாக உலக சினிமா, தமிழ் உள்ளிட்ட பல இந்தியத் திரைப்படங்களைப் பற்றி இணையத்தில், என் வலைப்பக்கத்தில்  தொடர்ந்து எழுதி வருகிறேன்.

சமீபத்தில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, தி இந்து (சிறப்பு மலர்கள்) போன்ற அச்சு ஊடக இதழ்களிலும் எழுதி வருவதை நீங்கள் வாசித்திருக்கக்கூடும்.

பல நண்பர்கள் அது குறித்து தங்களின் கருத்துக்களை பாராட்டாகவும் விமர்சனப் பின்னூட்டங்களாகவும் தெரிவித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் கே.என்.சிவராமன், அருண் வைத்தியநாதன் உள்ளிட்ட  பல நண்பர்கள் நீண்ட காலமாக அன்புடன் கேள்வி கேட்கும் கேள்வி இதுவாக இருந்தது.

"இந்தப் பதிவுகளெல்லாம் எப்போது நூலாக வெளிவரும்?"

இவையெல்லாம் அச்சு வடிவில் வெளிவருவது குறித்து இது நாள் வரை  நான் எந்தவொரு முயற்சியையும் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அது தன்னிச்சையாக நடந்தால் நல்லது என்றே சும்மா இருந்தேன்..

***

சில நாட்கள் முன்பு கிழக்கு பதிப்பகத்திலிருந்து நண்பர் ஹரன் பிரசன்னா அழைத்து இவைகளை நூலாக்குவது குறித்து பேசினார்.  ஒருவேளை தாமதமாக நடக்கிறது என்றாலும் அது தன்னாலேயே நடைபெற்றது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.

எனவே இதன் முதல் கட்டமாக பல்வேறு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்கள் பற்றி இணையத்தில் எழுதப்பட்டவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளின் சிறப்புத் தொகுப்பு, கிழக்கு பதிப்பகத்தின் மூலமாக ஒரு நூலாக வெளிவருகிறது.

'இந்திய சினிமா - வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை' - என்பது நூலின் தலைப்பு.

கீழ்கண்ட சுட்டியில் நூல் பற்றிய விவரங்கள் உள்ளன.

http://www.nhm.in/shop/9789384149635.html

இது நாள்வரை என் வலைப்பதிவை வாசித்து அன்பும், ஆதரவும், ஊக்கமும் தந்து உதவிய நண்பர்கள், இந்த நூலையும் வாங்கி வாசித்து ஆதரவு தருவார்கள் என்கிற நம்பிக்கையுண்டு. என்றாலும் அதையே ஒரு வேண்டுகோளாகவும் உங்கள் முன் வைக்கிறேன்.

பொங்கல் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு ஸ்டால் எண் 107-ல் இப்புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த நூலை பதிப்பித்த கிழக்கு பதிப்பகத்தினருக்கும் குறிப்பாக இந்த முயற்சியை சாத்தியப்படுத்திய நண்பர் ஹரன் பிரசன்னாவிற்கும் நன்றி

இது போல் இன்னும் சில அறிவிப்புகள் வருங்காலத்தில் வெளிவரக்கூடும். அதற்கும் நண்பர்களின் ஆதரவு தேவை.

நன்றி

***

நூல் பற்றிய பதிப்பக குறிப்பு: 
 
நவீன கால இந்தியாவை ஒன்றிணைக்கும் பல்வேறு இழைகளில் மிகவும் முக்கியமானது திரைப்படம். மொழியால் பிரிந்திருந்தாலும் உணர்வால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்ட இந்தியாவின் ஆன்மாவைக் கோடிட்டுக் காட்டும் 26 திரைப்படங்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

ஜன ஆரண்யா, தி கோர்ட், நாயி நெருலு, தி குட் ரோடு போன்ற கனமான படங்களில் ஆரம்பித்து பி.கே., த்ருஷ்யம் போன்ற வணிக இடைநிலைப் படங்கள்வரை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், கன்னடம், மலையாளம், தமிழ் என ஏழு மொழிகளில் வெளியான படங்களினூடாக இந்தியச் சமூகம் குறித்த சித்திரத்தை இவை தீட்டுகின்றன.

திரைப்படத்தின் கதை பற்றிய சிறிய விவரணையாகச் சுருங்காமல், திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் பொருளை விரிவாக அலசியிருக்கிறார் நூலாசிரியர் சுரேஷ் கண்ணன். இது திரைப்படம் குறித்த பல்வேறு விவாதங்களைப் படிப்பவர்களின் மனத்தில் ஏற்படுத்தும்.

இத்தொகுப்பில் உள்ள படங்களை ஏற்கெனவே பார்த்தவர்-களை இக்கட்டுரைகள் மீண்டும் புதிய கோணத்தில் பார்க்கும்படிச் செய்யும். பார்க்காதவர்களை இப்புத்தகம் தேடிப் பார்க்கச் செய்யும்.suresh kannan

3 comments:

Jagan krishnan said...

வாழ்த்துக்கள் சார் ...

Anonymous said...

this is gud work.will buy for sure. NHM shop is nearby..will do

Rajmohan babu Mani said...

வாழ்த்துக்கள்,உலக சினிமா சில திரைப்பட அறிமுகங்கள் இதுவும் உங்களுடையதா?