கமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற்சி என்கிற அழுத்தமான குறிப்புடன் இந்தக் கட்டுரையை துவங்க விரும்புகிறேன். ஆனால் அந்த முயற்சியை அவர் எத்தனை தூரம் வெற்றிகரமாக சாத்தியமாக்கினார் என்கிற கேள்விகளும் உள்ளன.
தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களுள் முக்கியமானவராக குறிப்பிடப்படுபவர் கமல்ஹாசன் என்பது மிகையானதாக இருந்தாலும் அதில் உண்மையில்லாமலும் இல்லை. சமீபத்திய நுட்ப விஷயங்களின் அறிமுகம், ஒப்பனை சமாச்சாரங்கள், புதிய பாணி திரைக்கதை முயற்சிகள், வசனமே இல்லாத திரைப்படம், இளைஞர்களுக்கான பயிலரங்கம், சினிமா தயாரிப்பு, இயக்கம் என்று பலவிதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதோடு தமிழ் சினிமாவிற்கு புதிய விஷயங்களை பரிசோதனையாக அறிமுகப்படுத்துபவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் கமலிடம் இருக்கும் கலைஞரைக் காட்டிலும் அவருக்குள் இருக்கும் திறமையான வணிகரும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தன்மையும் அவரது முயற்சிகளை அரைகுறையானதாகவே ஆக்கி வைத்திருக்கின்றன.
***
'ஹாலிவுட் சினிமாவிற்கு நிகரானது' என்று விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் சுயபெருமையோடு சில வெகுசன தமிழ்திரைப்படங்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் அவை துண்டு துண்டான சுவாரசியங்களைக் கொண்டிருக்குமே ஒழிய வழக்கமான தமிழ் சினிமா உருவாக்க முறையிலிருந்து பெரிதும் விலகாதவை. இந்த நோக்கில் முழுக்க ஹாலிவுட் பாணி சினிமாவானது தமிழில் இதுவரை ஒன்று கூட உருவாகவில்லை என்பதே உண்மை. ஹாலிவுட் சினிமாதான் சிறந்த சினிமாவிற்கான அளவுகோல் என்பது இதன் பொருள் அல்ல. அவைகளிலும் பல தேய்வழக்கு அபத்தங்கள் உள்ளதுதான் என்றாலும் ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதன் மையத்திலிருந்து பெரிதும் விலகாமல் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நம்பகத்தன்மையுடனும் காட்சிக்கோர்வைகளை உருவாக்குவது ஹாலிவுட் சினிமாவின் பாணி. பொருந்தாத, தேவையற்ற இடைச்செருகல்கள் பொதுவாக அவைகளில் திணிக்கப்படும் அபத்தம் நிகழாது.
ஆனால் தமிழ் சினிமாவின் வரலாறு என்ன? சினிமா என்கிற நுட்பம் தமிழ் சூழலில் அறிமுகமாகிய போது இங்கு அப்போது பொழுதுபோக்கு வடிவங்களாக இருந்த கூத்து, புராண நாடகங்கள் போன்றவை அப்படியே எதுவும் மாறாமல் சினிமாவில் பதிவு செய்யப்பட்டன. எந்தவொரு புது நுட்பம், கண்டுபிடிப்பு அறிமுகமானாலும் அவற்றை தம் பழமைவாத அபத்தங்களுக்கேற்ப உருமாற்றம் செய்து கொள்வதில் தமிழர்கள் பிரத்யேகமான திறமை கொண்டவர்கள். கணினியின் பயன்பாடு இந்தியாவில் அறிமுகம் ஆனவுடனேயே 'கம்ப்யூட்டர் ஜாதகம்' எனும் விஷயமும் தமிழகத்தில் உடனே வந்து விட்டது.
எனவே தமிழ் சமூகத்தில் புதிதாக நுழைந்த சினிமா எனும் நுட்பத்தில் புராண நாடகங்கள் எவ்வித மாறுதலும் அல்லாமல் அப்படியே நுழைந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. இயல்பான விஷயம்தான். ஆனால் தமிழ் சினிமா உருவாகத் துவங்கி தனது நூற்றாண்டை நெருங்கப் போகும் சமயத்திலும் ஏறத்தாழ அதே நாடகத்தன்மையை இன்னமும் கைவிடாமலிருப்பதுதான் சங்கடமாக இருக்கிறது. இதை தமிழ் சினிமாவிற்கு என்று மட்டுமல்லலாமல் சில அரிதான விதிவிலக்குகளையும் கலைப்படங்களையும் தவிர்த்து ஏறத்தாழ அனைத்து இந்தியச் சினிமாக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். கட்டாயமாக திணிக்கப்படும் நான்கைந்து பாடல்கள், இரண்டு சென்ட்டிமென்ட் காட்சிகள், மூன்று சண்டைக் காட்சிகள், அபத்தமான நகைச்சுவை இணைப்புக் காட்சிகள், நாயக பிம்பங்களை ஊதிப்பெருக்கிக் காட்டுவதற்காக உருவாக்கப்படும் செயற்கையான கதை என்று குடுகுடுப்பைக் காரன் சட்டை போல பொருந்தாத பல விஷயங்களை ஒன்றிணைத்து தருவதுதான் இந்திய சினிமாவின் வடிவம் என்றாகியிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக நமக்கு பழகிப் போன காரணத்தினாலேயே இந்த அபத்தக் களஞ்சியத்தைதான் சினிமா என்று சக்கையைப் போல மென்று கொண்டிருக்கிறோம்.
***
நுட்ப ரீதியான விஷயத்தில் சில பாய்ச்சல்களை தமிழ் சினிமா நிகழ்த்தியிருந்தாலும் நுட்பம் என்பது சினிமாவை உருவாக்க உதவும் ஒரு கருவிதான். ஆனால் கதைகூறல் முறையில் இன்னமும் தமிழ்சினிமா பின்தங்கிதான் இருக்கிறது. நம்முடைய சமூகத்து தொன்மையான கதையாடல்களின் படி இந்த வடிவம்தான் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது, எனவே இதை விட்டு ஏன் மேற்கத்திய வடிவத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி எழலாம். எழுத்து இலக்கியத்தில் சிறுகதை, நாவல் போன்றவைகளும் மேற்கிலிருந்து இங்கு இறக்குமதியானவைதான். அவைகளுக்கென்று உள்ள பிரத்யேகமான வடிவத்தை நாம் பின்பற்றும் போது காட்சி ஊடகமான சினிமாவிற்கென்று உள்ள அடிப்படையான விஷயங்களை கைவிட்டு கூட்டுஅவியல் முறையையே ஏன் இன்னமும் பின்பற்ற வேண்டும்? ஓர் அந்நிய நுட்பத்தை நம்முடைய கலாசாரம் அதன் இயல்புக்கேற்ப உருமாற்றிக் கொண்டிருக்கிறது என்று வாதிடுபவர்களும் உண்டு. ஆனால் தமிழ் சினிமா அந்தச் சமூகத்தின் கலாசாரத்தையா பிரதிபலிக்கின்றது? வெகுசன தமிழ் சினிமாக்களில் உள்ள சிறப்புக்களை எப்படியோ தோண்டியெடுத்து கண்டுபிடித்து சிலாகிக்கும் அறிவுஜீீவி விமர்சகர்கள் உண்டு. உலகின் முதல் குரங்கு தமிழக்குரங்குதான் என்று நிரூபிப்பதில் அலாதியான இன்பவெறி காண்பவர்கள். நுட்ப நோக்கில், நடிகர்களின் பங்களிப்பு நோக்கில், இயக்குநர்களின் உருவாக்க நோக்கில் தமிழின் வெகுசன திரைப்படங்களில் துண்டு துண்டாக சில சிறப்பம்சங்கள் உண்டுதான் என்றாலும் அவைகள் தமிழ் சினிமா எனும் தேய்வழக்கு வடிவமைப்புக்குள் செயற்கையாக இணைக்கப்பட்டிருப்பதின் காரணமாக ஒட்டுமொத்த அனுபவத்தில் சலிப்பையே தருகின்றன.
அயல் சினிமாக்களை காணும் வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த சலிப்பு பன்மடங்காக பெருகுகிறது. நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று உலகின் பல சிறந்த திரைப்படங்களை காணும் வாய்ப்பிருக்கிற தமிழ் ரசிகர்கள் அவற்றை இங்கு உருவாகும் சினிமாவுடன் ஒப்பிட்டு தங்களின் அதிருப்தியை வெளியிட்டபடி இருக்கிறார்கள். ஏறத்தாழ தமிழ் திரைப்படங்களுக்கு இணையான வெற்றியை ஆங்கில மொழிமாற்ற திரைப்படங்கள் பெற்று தமிழ் சினிமாக்களுக்கு நெருக்கடியை தருகின்றன. இதை உணர்ந்து கொண்டு புதிய தலைமுறை இயக்குநர்களும் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகூறல் முறையிலிருந்து விலகி மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். என்றாலும் கூட சமரசங்கள் மற்றும் வணிக நெருக்கடிகள் காரணமாக அவர்களால் முற்றிலுமாக இதிலிருந்து விலக முடியவில்லை.
சமீபத்திய உதாரணத்திலிருந்து சொல்கிறேன். தனி ஒருவன் என்றொரு திரைப்படம். சுவாரசியமான திரைக்கதை காரணமாக வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. சாலையில் தூங்கிக் கொண்டிருப்பவனையும் எச்சில் துப்புவனையும் கொன்று விட்டால் இந்தியா வல்லரசாகி விடும் என்கிற ஷங்கர் திரைப்படத்தின் அபத்தமான கருத்தியலை முன்வைக்காமல் ஓர் அரசையே பின்நின்று இயக்கும் வணிக மாஃபியா வலையின் ஆணிவேரான நபரை அழிக்க முயலும் ஒரு காவல்துறை இளைஞனின் கதை. என்றாலும் இதில் பல தர்க்கப்பிழைகள், வழக்கமான இடைச் செருகல்கள். நாயகனின் உடலில் வேவு பார்க்கும் கருவியைப் பொருத்தி ஒலியின் மூலம் அவனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறான் வில்லன். தம்முடைய நடவடிக்கைகள் எல்லாம் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்படும் காரணம் தெரியாமல் அவதிப்படும் நாயகன் ஒரு கட்டத்தில் அதனைக் கண்டு பிடித்து விடுகிறான். அந்தச் சமயத்தில்தான் அவனுடைய காதலி வருகின்றாள். அவளிடம் தன்னுடைய காதலை சொல்லத்தான் அவன் வரச் சொல்லியிருக்கிறான். என்றாலும் நெருக்கடியான சூழல் காரணமாக அவளிடம் கோபப்படுவது போல கத்தி விட்டு பின்பு சைகையின் மூலம் தன்னுடைய பிரச்சினையைச் சொல்கிறான். இருவரும் மெளனமாக தங்களின் காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். 'வேவு பார்க்கும் கருவியை நீக்க மருத்துவர் வர இன்னமும் அரை மணி நேரம் இருக்கிறது, என்ன செய்யலாம்? என நாயகி எழுதிக் கேட்கிறாள்.
அடுத்து வருகிறது ஒரு டூயட் பாட்டு. ஒருவன் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்திலா காதல் செய்வார்கள்? இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தருணங்களை குரூரமாக நிறுத்தி தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா விஷயங்களை அபத்தமாக அதில் திணித்து ஒரு நுண்ணுணர்வுள்ள பார்வையாளனை செருப்பால் அடிப்பது போன்ற காரியங்களை ஏன் தமிழ் இயக்குநர்களால் கைவிட முடியவில்லை? குறுந்தகடுகளில் பார்க்கும் சமயத்திலாவது இதை தாண்டிச் சென்று விடலாம். திரையரங்கில் பார்க்கும் போது என்ன செய்வது? இப்படி பல இடைச்செருகல் உதாரணங்களை தமிழ் சினிமாவிலிருந்து தோண்டியெடுத்துக் கொண்டேயிருக்கலாம். இதனாலேயே தமிழ் சினிமாக்களின் அபத்தங்களை சகித்துக் கொள்ள இயலாமல் அயல் சினிமாக்களிடம் தஞ்சமடையும் பார்வையாளர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்.
இந்தச் சூழலில் வெளியாகியிருக்கும் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' திரைப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகூறல் முறையிலிருந்து முற்றிலும் விலகி ஏறத்தாழ ஹாலிவுட் சினிமா பாணியைக் கொண்டிருப்பது ஓர் ஆறுதலான விஷயமாக இருக்கிறது.
***
கமல்ஹாசனிடம் சமீப காலமாக சில ஆச்சரியமான மாற்றங்களை கவனிக்க முடிகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தை முடிக்க ஓர் ஆண்டிற்கும் மேலான காலத்தை அவர் எடுத்துக் கொள்வார். ஆனால் சமீபகாலமாக அவரது அடுத்தடுத்த திரைப்படத்தின் அறிவிப்புகள் குறுகிய நேரத்தில் தொடர்ந்து வெளியாகின்றன. விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏறத்தாழ முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் மெருகேற்றலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'உத்தம வில்லன்' வெளிவந்து துவக்க நாளின் சிக்கலோடு ஓடியோ ஓடாமலோ கடந்து சென்று விட்டது. அதற்குள்ளாக மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற திரிஷ்யம், தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் வந்து அதுவும் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது.
இந்தச் சூடு அடங்குவதற்குள்ளாக அவரது அடுத்த திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளிவந்தது. அந்த திரைப்படத்தின் பெயர் 'தூங்காவனம்'. இது Sleepless Night எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக். விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலமாக ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தாண்டி வரவே இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களை குறுகிய நேரத்தில் கமல் உருவாக்குகிறார் என்று சொல்லப்படுவதில் எத்தனை தூரம் உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. எனவே இதில் குறைந்தபட்ச வெற்றியை முதலிலேயே உறுதி செய்து கொள்ள, வெற்றி பெற்ற மற்ற மொழித் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால் என்னதான் ரீமேக்கிற்காக மாங்கு மாங்கென்று உழைத்தாலும் எழுத்திலக்கியத்தில் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்கும் சம்பிரதாயமான பாராட்டுதான் பொதுவாக இதற்கும் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் இது மறுஉருவாக்கம்தானே என்கிற எண்ணம் பார்வையாளர்களின் மனதில் உறைந்தபடி இருக்கும். கமல் போல அற்புதமான கலைஞனுக்கு ரீமேக்குகளில் நடிப்பது நிச்சயமான சவாலான விஷயமல்ல என்று தோன்றுகிறது. அவர் இதுவரை நடித்திருக்கும் ரீமேக் படங்களின் எண்ணிக்கையையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் வைத்து இதைச் சொல்லிவிடலாம்.
கமல்ஹாசன் இப்படி மறுஉருவாக்கப்படங்களாக அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பது ஒருவகையில் ஆச்சரியம் என்றால் 'தூங்காவனத்திற்காக' பிரெஞ்சு திரைப்படத்தை அதிகாரபூர்வமான முறையில் ரீமேக்காக உருவாக்குவது இன்னொரு ஆச்சரியம். Plagiarism தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத படைப்பாளிகளே இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து கதையை, காட்சியை உருவுவது ஏதோ சமீப காலத்திய விஷயம் என்பது போல் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இது பழக்கமான விஷயம்தான். சமயங்களில் முறையாக அனுமதி பெறப்பட்டும் (இந்தியாவிற்குள்ளாக) சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அது சொற்பமானது. அதிலும் அயல் தேசத்து திரைப்படங்கள் என்றால் கேள்வி கேட்பாரே கிடையாது. ஆளாளுக்கு உருவி சிதைத்து ஜாலியாக குழம்பு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் உருவாகும் தமிழ் சினிமாக்களின் கச்சாப் பொருளே கொரிய சினிமாக்கள்தான். இப்படியாக அயல் தேசத்து சினிமாக்களில் உருவும் தமிழ் படைப்பாளியாக கமலையே பொதுவாக பிரதானமாக சுட்டிக் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் அதிகமாக உருளுவது கமலின் தலையாகத்தான் இருக்கும். இவைகளில் பெரும்பாலும் உண்மையுண்டு. அவர் தமிழ் மசாலாவில் பொறித்தெடுத்துக் கெடுத்த அல்லது சுமாராக ஒப்பேற்றிய பல அயல் சினிமாக்களை ஒரு பட்டியலே இடலாம்.
இந்த நிலையில் அதிகாரபூர்வமான முறையில் ஓர் அயல்தேசத்து சினிமாவை மறுஉருவாக்கம் செய்வது கமலின் திரைப்பயணத்தில் இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். உலகமயமாக்கத்தின் விளைவாக அதன் சந்தை இன்னமும் விரிவடைந்து வரும் சூழலில் உலகிலேயே அதிகமான திரைப் பார்வையாளர்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதினால் இதுநாள் வரை அறியப்படாமல் அல்லது கண்டுகொள்ளப்படாமல் இருந்த வணிக மதிப்பை இப்போது தீவிரமாக சர்வதேச சினிமா நிறுவனங்கள் உணரத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் பிரபல திரைப்படங்களில் நேரடியான Plagiarism குற்றச்சாட்டு இருந்தால் உடனே அது சம்பந்தப்பட்ட படநிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையை எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். எனவே கமலின் இந்த மாற்றத்திற்கு இந்தச் சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம். சட்ட விதிகளுக்கு உட்படாத வகையில் அதன் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கும் விதமாக நாலைந்து அயல் சினிமாக்களிலிருந்து விஷயங்களை உருவி அவியல் செய்யும் சாமர்த்தியமான சமையல் இயக்குநர்களும் உண்டு.
***
ஹாலிவுட் சினிமாவும் 2015-ல் மறுஉருவாக்கம் செய்யப் போகும் பிரெஞ்சு திரைப்படமான 'Sleepless Night' (Nuit Blanche) திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். இதன் சுவாரசியத்திற்கு அடிப்படையே இதன் அபாரமான திரைக்கதைதான். மற்றபடி ஒரே இரவில் நிகழும் இதன் மையக்களன் வழக்கமானதொன்றுதான். போதைப் பொருள் கும்பலால் கடத்தப்பட்டிருக்கும் தன் மகனை மீட்பதற்காக ஒரு காவல்துறை அதிகாரி ஆவேசமாக செய்யும் சாகசங்கள் கொண்ட வழக்கமான கதைதான். ஆனால் படுவேகமான, அசத்தலான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.
வேகமான திரைக்கதை என்றாலே பொதுவாக பலரும் சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஸிட்பீல்ட் உபதேசித்திருக்கும் Three-act structure-ஐ ஏதோ கணிதசூத்திரம் போல அப்படியே பொருத்தினால் அது உணர்வுபூர்வமான படைப்பாக அல்லாமல் இயந்திரத்தனமான சக்கையாகத்தான் வெளிவரும். வேகமான திரைக்கதை என்பது அது மட்டுமேயல்ல. பார்வையாளனை கதாபாத்திரங்களோடும் சம்பவங்களோடும் அகரீதியாக ஒன்றச் செய்து அவனுடைய ஆவலையும் பதற்றத்தையும் தூண்டியபடியே இருப்பது. காதல் சார்ந்த கதையில் கூட இதை சாதிக்க முடியும். த்ரிஷ்யம் திரைப்படத்தில் கூட என்ன ஆக்ஷன் காட்சிகள் இருந்தது? ஆனால் பார்வையாளன் நகத்தைக் கடித்தபடி அதைப் பார்க்கவில்லையா?
எல்லாக் கதைகளும் ஏற்கெனவே சலிக்க சலிக்கச் சொல்லப்பட்டு விட்ட இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்திற்கு மிக மிக அடிப்படையானது திரைக்கதைதான். மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் அபாரமான உருவாக்கத்திற்கு காரணம் மூன்று விஷயங்கள்தான். ஒன்று, திரைக்கதை. இரண்டு, திரைக்கதை. மூன்றும் திரைக்கதையேதான். அப்படியெனில் கதை என்று இருக்க வேண்டாமா? நிச்சயமாக. இல்லையெனில் அது சவத்திற்கு செய்யப்பட்ட ஒப்பனைகள் போல எத்தனை சாமர்த்தியமான திரைக்கதையும் நுட்பங்களையும் கொண்டிருந்தாலும் ஜீவனேயில்லாமல் போய் விடும்.
கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கின் மறுஉருவாக்கத்திற்காக தேர்வு செய்தது சற்று ஆச்சரியத்தை தருகிறது. ஏனெனில் இது 'இந்தியத்தன்மை' அல்லாத ஹாலிவுட் ஆக்ஷன் வகையிலான திரைப்படம். புதியஅலை திரைப்படங்கள் தமிழில் தற்போது வெற்றி பெற்றுவரும் சூழலில் இந்த ஆக்ஷன் தன்மையை பெரிதும் மாற்றாமல் ரீமேக் செய்வாரா என்கிற ஐயம் 'தூங்காவனத்தை' பார்ப்பதற்கு முன்னால் இருந்தது. ஏனெனில் கமல் இதற்கு முன்பாக நகலெடுத்த அல்லது மறுஉருவாக்கம் செய்த திரைப்படங்களை தமிழ்ப் பார்வையாளர்களுக்கு நெருக்கம் ஏற்படுத்த அதன் மூலம் இங்கு திறமையாக சந்தைப்படுத்த செய்த மாற்றங்கள், இணைத்த விஷயங்கள் பெரும்பாலும் மூலப்படைப்பை சிதைப்பவையாக, கொச்சைப்படுத்துபவையாக அமைந்திருந்தன.
உலக சினிமாக்களை காணும், அவற்றை உள்ளூர் படைப்புகளோடு ஒப்பிட்டு சலிப்புறும் சமகால பார்வையாளனின் நவீன மனதை கமல்ஹாசன் ஒருவேளை சரியாக புரிந்து கொண்ட காரணத்தினால் பிரெஞ்சு திரைப்படத்தை ஏறத்தாழ காட்சிக்கு காட்சி அப்படியே பின்பற்றியிருந்தார். தமிழ் சினிமாவின் வழக்கமான இடைச்செருகல்களான பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், மிகையுணர்ச்சி அழுகைக் காட்சிகள் போன்றவை இதில் இல்லவே இல்லை. சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை.
இதில் சித்தரிக்கப்படும்படி காவல்துறையிடம் சாட்சி சொல்வதற்காக இத்தனை ஆர்வம் காட்டும் நடுத்தரவர்க்க மனிதர், அதிலும் படத்தில் காட்டப்பபடும் சமூகத்தைச் சார்ந்தவர் எவராவது யதார்த்தத்தில் இருக்கிறார்களா என தெரியவில்லை. இன்னொரு காட்சியில் உத்தம வில்லன் வெளியாவதில் துவக்க நாளில் ஏற்பட்ட சிக்கல் வேறு பெயரில் தொலைக்காட்சி செய்தியாக காட்டப்படுகிறது. திரையின் வெளியில் நிகழ்ந்த நடிகரின் தனிப்பட்ட விஷயம் அந்நியமாக இந்த திரைக்கதைக்குள் தேவையின்றி திணிக்கப்படுவது நெருடலை ஏற்படுத்துகிறது. நடிகர்களின் உடைகளும் உடல்மொழியும் ஏறத்தாழ பிரெஞ்சு திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல அப்படியே நகலெடுக்கப்பட்டதால் ஒரு டப்பிங் படத்தை பார்க்கும் உணர்வு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். முறையான அனுமதியில்லாமல் தலைமறைவு அடையாளத்தில் வாழும் புலம்பெயர் நபர்களின் வாழ்வியல் சிக்கலை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரம் மூலப்படத்திலிருந்து இங்கு வேறுவிதமாக சிதைக்கப்பட்டிருந்தது. மிக முக்கியமாக, பிரெஞ்சு திரைப்படத்தின் காவல்துறை அதிகாரி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக போதைப் பொருளை கடத்தி விற்கிறவனா அல்லது உண்மையிலேயே under cover ஆசாமியா என்பது சற்று பூடகமாக குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழில் இது சுத்திகரிக்கப்பட்டு 'நாயகன் என்றால் நல்லவன்தான்' என்கிற வழக்கமான பாணியாக மாற்றப்பட்டிருக்கிறது.
இப்படி சில பிசிறுகள் இருந்தாலும் படம் துவங்கிய நேரத்திலிருந்து எந்தவித இடைச்செருகலும் அல்லாமல் படத்தின் மையத்திற்கு தொடர்பான விஷயங்களுடன் மட்டுமே 'தூங்காவனம்' பயணித்தது ஆறுதலாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிகழும் இடம் இரவுநேர கேளிக்கை மையம் என்பதால் மல்லிகா ஷெராவத்தை அழைத்து வந்து ஒரு ஐட்டம் பாடலை நைசாக செருகி விடுவது போன்ற விஷயங்களை கமல் செய்துவிடுவாரோ என்று நினைத்து பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக அப்படி எந்தத விபத்தும் நிகழவில்லை
இவ்வகையான ஹாலிவுட் பாணி திரைக்கதைகள் தமிழிற்கு பழகும் போது அவற்றின் தேவையற்ற இடைச்செருகல்கள் மெல்ல மெல்ல உதிர்வதின் மூலம் ஆரோக்கியமான, சுவாரசியமான வெகுசன திரைப்படங்கள் தமிழில் உருவாகக்கூடிய சாத்தியத்தை ஒரு முன்னோடி முயற்சியாக நின்று உறுதிப்படுத்தியிருக்கிறது 'தூங்காவனம்'
- உயிர்மை - டிசம்பர் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
suresh kannan
1 comment:
அருமையான பதிவு. நீங்க சொல்லியிருக்குறத தாண்டி இன்னும் வணிக நோக்கத்தோடதான் பல படங்கள் வருது. கலைப்படைப்புனு சொல்ற வகையில indie movies அதிகம் வர்றதில்ல ... அதுலயும் நிறைய பேர் கவனம் செலுத்தணும்னு நான் நினைக்கிறேன்
Post a Comment