Monday, July 20, 2015

PIKU (2015) மல விசாரமும் மனித விசாரணையும்


 'ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது)'
எழுத்தாளர் சுஜாதா, தன்னுடைய எழுபதாவது பிறந்த நாளை நெருங்கும் போது  அந்த வயதுக்கேயுரிய உணர்வுகளுடன் எழுதிய அற்புதமான கட்டுரையின் ஒரு பகுதி இது. இதில் ஒரு திரைப்படத்திற்கான கதை இருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? இல்லை அல்லவா? ஆனால் இந்தி திரைப்பட இயக்குநர் Shoojit Sircar அதைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆம், விக்கி டோனர் என்றொரு திரைப்படத்தை எடுத்தாரல்லவா? அவரேதான். அவருடைய சமீபத்திய திரைப்படமான PIKU -வில் மலச்சிக்கலால் அவதிப்படும் எழுபது வயது முதியவர்தான் நாயகன். ஆச்சரியமாக இருக்கிறதா? 

மனித வாழ்வின் சில பிரத்யேகமான அன்றாட பிரச்சினைகளை ஒரு பகுதியாக அல்லது முழுத் திரைக்கதையாக வைத்து உருவாக்கப்படும் சில அயல் சினிமாக்களை பார்க்கும் போது, அட, இதுவெல்லாம் கூட ஒரு திரைப்படத்தின் கருக்களா, இப்படிக் கூட செய்யலாமா? ஏன் இந்தியத் திரைப்படங்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரே மாதிரியான ஸ்டீரியோடைப்பில் உழல்கின்றன? மக்களும் கூட ரசனை மாற்றம் ஏதுமில்லாமல் ஒரே மாதிரியான வணிக மசாலாவை வேறு வேறு வடிவில் வேறு வேறு நடிகர்களின் மூலம் சலிக்காமல் பார்த்துக் கொண்டாடுகிறார்களே என்று ஆதங்கமாகவே இருக்கும்.

சமீப காலங்களில் மலையாளத் திரைப்படங்களிலும் மிகச் சமீபமாக தமிழ்த் திரைப்படங்களிலும் புதிய அலை இயக்குநர்கள் புதுப்புதுப் பாணியில் படங்களை எடுத்து கலக்கத் துவங்கியிருக்கிறார்கள் அல்லவா? ஆச்சரியகரமாக இந்தியில் இந்த வகை மாற்றுத் திரைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பேயே உருவாகத் துவங்கி விட்டன. இன்னமும் சரியாகச் சொல்லப் போனால் பழைய ஒற்றைத் திரையரங்கங்கள் இடிக்கப்பட்டு  மல்டிபெக்ஸ் திரையரங்கங்கள் உருவாகத் துவங்கும் போது அதன் குறுகிய வட்ட பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு அதிக லாபமல்லாத சிறிய எதிர்பார்ப்புடன் அதற்கேற்ற பட்ஜெட்டுடன் சோதனை முயற்சிகள் வெளிவந்து அவற்றில் சில எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை ஈட்டித் தந்திருக்கின்றன. பிக்கு வும் அந்த வகையே.

***

அமிதாப் பச்சனை நினைத்தால்ஆச்சரியமாக இருக்கிறது. எளிமையாக தன் திரைவாழ்வை துவங்கி பிறகு பல ஆண்டுகளுக்கு சூப்பர் ஸ்டார் எனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து பின்பு கடனாளியாகி சில பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்த பிறகு தன் வயதையும் நிலையையும் உணர்ந்து அதற்கு ஏற்றாற் போன்ற பாத்திரங்களையும் திரைக்கதைகளையும் ஏற்கத் தயங்காத அந்த முதிர்ச்சியை எத்தனை பாராட்டினாலும் தகும். இத்திரைப்படத்தில் தன்னுடைய மலச்சிக்கல் உபாதையைப் பற்றியே எப்போதும் உரையாடிக் கொண்டு அது சார்ந்த சிடுசிடுப்புடனேயே எல்லோரிடமும் எரிச்சல்படும் எழுபது வயது முதியவராக நடித்திருக்கிறார். (ஏறத்தாழ அபிதாப்பின் உண்மையான வயதும் இதுவே). ஒரு காலத்திய சூப்பர் ஸ்டாரால் இப்படியொரு பாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும், அவ்வாறான திரைப்படங்கள் உருவாகக்கூடும், அதுவும் இவையெல்லாம் இந்தியாவில் நிகழும் என்பதே படு ஆச்சரியமாக இருக்கிறது. 

Cynical என்பதற்கு 'believing that people are motivated purely by self-interest; distrustful of human sincerity or integrity' என்றொரு வரையறையைச் சொல்கிறார்கள். இந்தக் குணாதிசயத்தை படத்தின் துவக்கப் புள்ளியிலிருந்து இறுதி வரைக்கும் மிக கச்சிதமாக பின்பற்றுகிறார் அமிதாப். ஒரு பிரத்யேக சிக்கலான கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அது எப்படியெல்லாம் தன் ஒழுங்கில் அல்லது அஒழுங்கிலிருந்து மீறாமல் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கெல்லாம் உதாரணமாக அமிதாப்பின் இந்த காரெக்ட்டரை எளிதாக உதாரணம் காட்டி விடலாம். போலவே தீபிகா படுகோன் இன்னொரு ஆச்சரியம். இந்தி வணிக சினிமாவில் பளபளப்பான அரங்குகளில் அதை விட அதிக பளபளப்பான உடைகளில் ஜிலுஜிலுப்பாக ஆடும் நாயகி, இத்தனை எளிமையான, ஆனால் கையாளத் தயங்குவதற்கு சிக்கலான பாத்திரத்தையெல்லாம் தேர்ந்தெடுப்பார் என்பதை யூகித்துக் கூட பார்க்க முடியவில்லை.  தாயை இழந்த காரணத்தினால் தந்தையின் நிழலிலேயே வளர்ந்த அவரின் மனப்பதிவுகளை தன்னிச்சையாக உள்ளுக்குள் படிய வைத்துக் கொண்டு ஏறத்தாழ அவரையே பிரதிபலிக்கும் ஒரு பெண். தீபிகா அசத்தியிருக்கிறார்.

இர்ஃபான் கான்.... ஓ... என்ன மாதிரியானதொரு நடிகன்? இந்தியாவில்தான் எத்தனை மாதிரியான விதவிதமான திறமைகள்?

டெல்லியில் வசித்தாலும் தங்களின் பூர்விக வங்காளித்தனத்தை விடாப்பிடியாமல் பிடித்துக் கொண்டிருக்கும் பாஸ்கோர் பானர்ஜியின் (பாஸ்கர் என்று எழுதி விடாதீர்கள்) குடும்பம். தந்தை மற்றும் மகளின் பிரத்யேகமான சிடுசிடுப்புத்தன்மைகளைக் கண்டு வேலையாட்களும் கால்டாக்சி டிரைவர்களும் பின்னங்கால் தெறிக்க பயந்து ஓடுகிறார்கள். 'My daughter is moody, like me. Also, she’s not virgin.” என்று தன் மகளிடம் உரையாட வருகிற இளைஞர்களிடம் அறிமுகப்படுத்தும் பாஸ்கோர் பானர்ஜி என்ன மாதிரியான தந்தை? தன்னைப் பராமரிப்பதற்காக அதீத சுயநலத்துடன் மகளின் திருமணத்தை தள்ளிப் போடும் பானர்ஜி வில்லனா? அல்லது சராசரி பெண்களைப் போலவே உடம்பு சார்ந்த தேவைகளுக்காக திருமணம் எனும் நிறுவனத்தில் விழும் Low IQ நபர்களைப் போல தன் மகளும் ஆகி விடக்கூடாது எனும் முற்போக்கு சிந்தனை சார்ந்த அக்கறையுள்ளவரா?

இப்படியொரு விநோதமான தந்தை மகள் கூட்டணியுடன் டெல்லியிலிருந்து கொல்கத்தா வரை சாலைவழிப் பயணத்தை மேற்கொண்டால் அவர்களுடன் செல்லும் நபருக்கு பைத்தியம் பிடிக்குமா, பிடிக்காதா? அப்படிப் போக நேரும் இர்ஃபான் அவர்களை, அவர்கள் தரும் விநோதமான பிரச்சினைகளையெல்லாம்  எவ்வாறு எதிர்கொள்கிறார்?

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, படம் உருவாகும் மூன்று பகுதிகளில் மூன்று விதமாக செயலாற்றுவதைக் கவனித்தேன். டெல்லி பெருநகரத்தின் பரபரப்பான வாழ்வியலை சட்சட்டென்று நகரும், மாறும், பதறும் (எடிட்டிங்க்குக்கும் ஒரு சபாஷ்) தருணங்களை சிறைப்பிடிக்கும் காமிரா, சாலைப் பயணத்தின் போதும் மேற்கு வங்கத்தின் நிதானமான பாரம்பரியான சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே பயணிப்பது ஆச்சரியம். அவ்வப்போது உறுத்தாத வகையில் மெலிதாக சிணுங்கிக் கொண்டே ஒலிக்கும் சித்தார் இசைதான் எத்தனை அழகு..

மனித உறவுகளில் நிகழும் போலித்தனங்கள், அதை சகித்துக் கொள்ள முடியாத சிடுக்குத்தனங்கள், இவற்றையெல்லாம் மீறி உறவின் அடிப்படையை முறித்துக் கொள்ள முடியாத நெகிழ்வூட்டும் அபூர்வமான தருணங்கள் என்று இத்திரைப்படம் மிகப்பூடமாக கையாண்டிருக்கும் உள்ளார்ந்த இழைகள்தான் எத்தனை உன்னதம்?

அடப் போங்கப்பா.. பொறாமையாக இருக்கிறது.


suresh kannan

No comments: