Friday, July 10, 2015

காக்கா முட்டை - விதைக்கப்படும் 'பீட்சா' கனவுகள்


அயல் சினிமா டிவிடிக்களின் தாராளமான புழக்கத்தினால் சமகால தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு அனுகூலமும் நெருக்கடியும் ஒருசேர இருப்பதை உணர முடிகிறது. அவைகளிலிருந்து தூண்டுதல்களைப் பெறலாம் அல்லது தொடர்பேதும் இல்லாமல் அப்படியே துண்டு துண்டாக நகலெடுக்கலாம் அல்லது தமிழ் சினிமாவின் மசாலாவில் போட்டு வறுத்தெடுப்பதற்கு தோதான துண்டுகளை அவைகளில் இருந்து அறுத்து பொறுக்கியெடுத்துக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட வசதிகள் அனுகூலமாக இருக்கின்றன.

ஹாலிவுட் சினிமாக்களின்  உயர்நுட்ப மெனக்கெடல்களையும் உலக சினிமாக்களின் உன்னத தரத்தையும் பார்த்து பரவசப்படுகிற தமிழ் சினிமா பார்வையாளர்கள், இங்கும் அவைகளை எதிர்பார்க்கத் துவங்கி விட்ட பிறகு அந்த  நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்  ஈடு கொடுக்க முயல்வது இயக்குநர்களுக்கு நெருக்கடியாக உள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஸ்டார் நடிகர்களின் பிம்பங்களையும் பாமர ரசிகர்களின் அறியாமையையும் ரசனையற்ற சூழலையும் நம்பி அரைத்த மாவையே அரைக்கும் வணிகமும் ஒருபுறம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு இடையில் இரானிய சினிமாக்களின் எளிமையான அழகியலோடும் உள்ளார்ந்த அரசியல் விமர்சனத்தோடும் தமிழில் ஒரே ஒரு திரைப்படம் கூட வராதா என்கிற ஏக்கத்தை Children of Heaven, The Colour of Paradise, The White Balloon போன்றவை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றன. இயற்கையின் காலக்கடிகாரத்தின் படி குறிஞ்சி மலராவது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை பூக்கும் என்று உறுதியாக கூறி விட முடியும். ஆனால் தமிழில் உயர்தரமுள்ள திரைப்படம் வெளிவரும் அதிசயம் எப்போது நிகழும் என்பதை யூகித்து விடவே முடியாது.

அந்த நீண்ட கால பெருமூச்சைப் போக்கும் வகையிலும் ஆறுதல் அளிக்கும் வகையிலும் தமிழில் ஒரு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அது 'காக்கா முட்டை' உலக சினிமா என்பது கலாசார வெளிகளை கடந்து நிற்கிற, நுண்ணுணர்வு சார்ந்த பொது ரசனையின் மீதான தர அடையாளத்திற்காக சுட்டப்படுகிற கற்பிதச் சொல் என்றாலும் அந்த தரத்தின் அடையாளத்துடனும் அல்லது அவற்றை நெருங்கி வரும் சாயலுடனும் தமிழிலும் சினிமா உருவாகிற அற்புதம் எப்போதாவதுதான் நிகழும். பாலுமகேந்திராவின் 'வீடு', 'சந்தியா ராகம்', ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் - அதன் போதாமைகளையும் தாண்டி - 'காக்கா முட்டை'யை நிச்சயம் குறிப்பிடலாம்.அந்த அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை தருகிறது அத்திரைப்படம்.  தமிழ் சினிமாவின் மேற்குறிப்பிட்ட மாற்று முயற்சிகளோடு ஒப்பிடும் போது 'காக்கா முட்டை'யில் உள்ள  முக்கியமான வேறுபாடு என்னவெனில் இந்தப் படம் பொதுச்சமூகத்தில் அடைந்திருக்கும் வணிகரீதியான வெற்றியும் வரவேற்பும். மேலே குறிப்பிட்ட திரைப்படங்கள் கலைத்தன்மையோடு கூடிய படைப்புகளை அணுகும் குறுகிய பார்வையாளர் வட்டத்தை கடந்திருக்காத  சூழலில் 'காக்கா முட்டை' வெகுசன சமூகத்தின் மூலம் வணிக வெற்றியையும் அடைந்திருப்பது முக்கியமான விஷயம். உலக சினிமா நுகர்ச்சியின் பரவலாக்கமும் அறிமுகமுமான சமகால சூழல் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

***

சேரியில் வாழும் இரு சகோதர சிறுவர்கள், தான் விரும்பும் நடிகர் பரிந்துரைப்பதாலும், தொலைக்காட்சியின் பீட்சா விளம்பரத்தினாலும் உந்தப்பட்டு அதை ஒருமுறையாவது உண்ண வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். உயர் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மிக எளிதாக சாத்தியப்படும் இந்த விஷயம் அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுவர்களுக்கு மலையைத் தாண்ட வேண்டிய கனவாக, ஏக்கமாக மாறுகிறது. அந்தக் கனவை நோக்கிய சிறுவர்களின் பயணம்தான் இந்த திரைப்படத்தின் மையம். ஒரு பீட்சா சாப்பிடுவது அத்தனை கடினமா, அது குறித்து ஒரு திரைப்படமா என்று சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நாவலில் குய்யன் என்கிற பிச்சைக்காரனுக்கு பருப்பு, பாயசத்துடன் ஒரு முழு சாப்பாடு சாப்பிடுவதென்பதுதான் வாழ்நாள் கனவாக இருக்கும். அவனது தீராத ஆவலைப் பார்த்து விட்டு ஒருமுறை சக பிச்சைக்காரர்கள் இணைந்து காசு போட்டு அவனுடைய நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். அவன் கனவிலும் கூட அந்த ருசியை சப்புக் கொட்டி நினைவுகூரும் வரியுடன்தான் அந்த நாவல் முடியும். வாழ்வின் அத்தனை அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகிருக்கிற அதையும் தாண்டி மேல்நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்களால் இது போன்ற பிரச்சினையின் உக்கிரத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இந்த திரைப்படம் பொதுவாக குழந்தைகளுக்கான திரைப்படமாக அறியப்பட்டாலும் அந்தப் பிரிவிலான தேசிய விருதைப் பெற்றிருந்தாலும்  கடுமையான அரசியல் சார்ந்த உள்ளார்ந்த விமர்சனங்களும், பகடிகளும், சில கிளைக்கதைகளும்  இதன் மையத்துடன் உறுத்தாமல் கலந்துள்ளன. தொலைக்காட்சியின் கவர்ச்சிகரமான மூளைச்சலவை விளம்பரங்களின் மூலம் குழந்தைகளின் மனதில் விதைக்கப்படும் நுகர்வுக்கலாசார வெறி, இதற்கு துணை புரியும் நட்சத்திர பிம்பங்கள், இயற்கை வளத்தை அழிப்பதின் மூலம் நுழையும் பன்னாட்டு வர்த்தகம், நிலக்கரி ஊழல், மக்களிடமுள்ள சினிமா மோகத்தை கச்சிதமாக  பயன்படுத்திக் கொள்ளும் அரசியல், அடிப்படைத் தேவைகளை விட ஆடம்பர பொருட்களை இலவசமாக தந்து அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் தந்திரம், சிறியு குற்ற சம்பவத்தை சுட்டிக் காட்டும் அறச்சீற்ற பாவனையில் அதை  ஊதிப் பெருக்கி தங்களின் செய்திப் பசிக்கு பயன்படுத்திக் கொள்ளும் ஊடகங்கள், அந்தப் பிரச்சினையை மையப்படுத்தி தங்களின் பண வேட்டையை நிகழ்த்தும் அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள், அதிகார அமைப்புகள், உதிரிக் குற்றவாளிகள் என பல்வேறு உள்ளிழைகள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. திரைமொழியின் இலக்கணங்களோடு பொருட்பொதிந்த காமிரா கோணங்களோடு காட்சியமைக்கும் இயக்குநராக மணிகண்டன் தோன்றியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

சிறுவர்கள் பீட்சாவை அடைய நினைப்பது குறியீட்டு அர்த்தத்திலான, ஒட்டு மொத்த மானுட குல தொடர் இயக்கத்தின் சுழற்சி அடையாளம்தான். இயற்கை வளத்திற்கு உரிமை கொண்டாட நினைக்கும் நிலவுடமைச் சமுதாயமாக மானுட குலம் பரிணமித்த பிறகு அதுசார்ந்த பிரிவுகளும் பிரச்சினைகளும் மோதல்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. சமூகத்தின் படிநிலைகளில் உள்ள குழுக்கள் தங்களின் மேலேயுள்ள குழுவை அடைவதையே தங்களின் வாழ்நாள் நோக்கமாக, கனவாக ஆக்கிக் கொள்கிறார்கள். எனவே சாத்தியமான எல்லைக்குள் அது சார்ந்த மேட்டிமை அடையாளங்களோடு தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். சாலையோரத்தில் வசிப்பனுக்கு வாடகை வீட்டில் வசிப்பது கனவாக இருக்கிறது, வாடகை வீட்டில் வசிக்கும் கீழ்நடுத்தர வர்க்க மனிதனுக்கு சொந்த வீட்டைக் கட்டிக் கொள்வது கனவாக இருக்கிறது. சொந்த வீட்டில் இருக்கும் உயர்நடுத்தர வர்க்க நபருக்கு செல்வந்தர்களின் வாழ்வுமுறையும் அதுசார்ந்த ஆடம்பரங்களும் கனவாக இருக்கிறது. எனவே தங்களின் கனவு சார்ந்த வேட்டையை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். உலகமயமாக்கலுக்குப் பிறகு இது போன்ற ஆசைகளும் அது சார்ந்த அழுத்தங்களும் கூடிக் கொண்டே செல்கின்றன.

இதில் சிறுவன் பீட்சா சாப்பிட நினைப்பது அவனுடைய உடல் சார்ந்த பசிக்காக அல்ல. அந்த பிம்பத்தின் கவர்ச்சி  சார்ந்த ஏக்கம் அவனுடைய கனவுகளுள் பிரதானமான ஒன்றாக உருவெடுக்கிறது. அவனுக்குப் பிடித்த நடிகர் மூலமாகவும் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாகவும் அந்த கனவிற்கான விதை அவனுக்குள் ஆழமாக விதைக்கப்படுகிறது. அந்த கனவிற்கு முந்தைய காட்சிகளில் அவன் ஒரு செல்போனிற்காக ஏங்கியபடியே இருக்கிறான். தந்தை சிறையில் இருக்கும் துயரத்தின் பிரக்ஞை ஏதும் இல்லாமல் 'வரும் போது செல்போன் வாங்கிட்டு வரியா?" என்று கேட்கிறான். "எனக்கு அப்பா வேணாம். பீட்சாதான் வேணும்" என்று சோற்றுத் தட்டை தள்ளிவிட்டு அவன் முரண்டு பிடிக்குமளவிற்கு அவனுடைய ஆடம்பரக் கனவு அவனை முழுவதுமாக ஆக்ரமிக்கிறது. பல சிரமங்களுக்குப் பிறகு அந்தக் கனவை அவன் யதார்த்தத்தில் அடையும் போது 'இவ்வளவுதானா?' என்று தோன்றிவிடுகிறது. சில காலத்திற்குப் பிறகு அவன் இன்னொரு கனவைத் துரத்த ஆரம்பித்துக் கொண்டிருப்பான். உலகத்தின் பேரியக்கம் அவசியமாகவோ அல்லது அவசியமற்ற வகையிலோ தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதின் ஒரு துளிதான் இந்த 'பீட்சா கனவு'.

உலகமயமாக்கல் நிலைக்குப் பிறகு இந்தக் கனவுகள் பல்வேறு விதமாக பெருகி விட்டிருக்கின்றன. பெற்றோர் ஐபோன் வாங்கித்தராததற்காக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடவும் துணிகின்றனர். போதைப் பொருட்களை உபயோகித்து பழகி விட்ட ஒருவன் அது கிடைக்காத வெறியில் அதற்காக எதையும் செய்யும் நிலையிலேயே இன்றைய நுகர்வோர்கள் இருக்கின்றனர். வாழ்வின் அடிப்படைக்குத் தேவையற்ற அநாவசியமான ஆடம்பரங்களை அடைவதற்கான கனவுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள், அதை நோக்கி பயணித்தபடியே இருக்கிறார்கள். அது அவசியமானதா, உடலுக்கோ மனதிற்கோ ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதா என்கிற எந்தச் சிந்தனையையும் ஏற்படுத்த விடாதவாறு பன்னாட்டு வர்த்தகர்கள் உருவாக்கும் நுகர்வுக் கலாசார வெறி அவர்களை ஆக்ரமித்திருக்கிறது.

***

குழந்தைகள் மனதில் விதைக்கப்படும் இந்த  நுகர்வுக்கலாசார வெறியின் அபாயத்தை அழுத்தமாக தமிழ் சினிமாவில் பதிவு செய்த வகையில் 'தங்க மீன்கள்' திரைப்படத்தின் ஒரு பகுதியை 'காக்கா முட்டை'யின் ஒரு முன்னோடி முயற்சியாக கருத முடியும். தமிழ் சமூகத்தில், உலகமயமாக்கம் ஏற்படுத்தும் விளைவுகளை, பொருளாதார சமநிலையின்மையை தமது முதல் திரைப்படத்தில் (கற்றது தமிழ்) கையாண்ட இயக்குநர் ராம், தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளின் மனதில் விளைவிக்கும் தாக்கத்தை தமது இரண்டாவது திரைப்படத்தின் ஒரு பகுதியாக (தங்க மீன்கள்) கையாண்டிருந்தார். உண்மையில் சொல்லப் போனால், இந்த விஷயத்தின் ஆபத்தை  'காக்கா முட்டை'யை விட 'தங்க மீன்கள்" மிகுந்த கலைத்தன்மையுடனும் அழுத்தமாகவும் பதிவு செய்திருந்தது. ஆனால் அத்திரைப்படத்தில் உள்ள பிரச்சினை என்னவெனில் பல சமகாலத்திய சமூகப் பிரச்சினைகளை ஒரே திரைப்படத்தில் சொல்ல முயன்று பார்வையாளர்களை குழப்பியதுதான்.

ஆனால் காக்கா முட்டை' திரைப்படமும் மையத்துடன் தொடர்புடைய சில கிளைக்கதைகளைக் கொண்டதுதான் என்றாலும் நேர்க்கோட்டு கதைச் சொல்லாடல் முறையில் பிரதானமாக சிறுவர்களுடனேயே பயணித்து அவர்களின் மொழியிலேயே உரையாடிய எளிமையின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்ததே இதன் வெற்றியின் காரணம். சிறுவர்கள் சார்ந்த சினிமா எனும் போது அது அனைத்து பிரிவனரின் அபிமானத்தைப் பெறுவது இயல்புதான். பொதுவாக தமிழில் குழந்தைகள் சினிமா என்றாலே அவர்கள் துடுக்குத்தனமாக பெரியவர்களின் உலகை பாவனை செய்வது என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு மாறாக யதார்த்தமான சிறுவர்களின் அகவுலகுப் பயணத்தை அதன் நோக்கிலேயெ உண்மையோடு பதிவு செய்ததால் 'காக்கா முட்டை' கவனத்துக்குரிய, பாராட்டப்பட வேண்டிய திரைப்படமாகிறது.

சேரி சிறுவர்களின் ஏழ்மையான சூழல், தந்தையை சிறையிலிருந்து மீட்க வேண்டிய துயரம், சிறுவர்களின் பீட்சா ஏக்கம், அது சார்ந்த பயணம், அதற்கான தவறுகள், பாட்டியின் மரணம், தாயின் தனிமை மற்றும் தத்தளிப்பு .. என்று பல விஷயங்கள் மெலொடிராமாவாக அல்லாமல் மிக இயல்பாக போகிற போக்கில் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்டாலும் கூட அதன் இடைவெளியை நிரப்பி பார்வையாளர்களால் அதன் ஆழத்தை உணர முடிவதே இயக்குநரின் திறமைக்குச் சான்று. ரேஷனில் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றிற்கு இரண்டாக எளிதில் கிடைத்தாலும் அடிப்படைத் தேவையான அரிசி அடுத்த வாரம்தான் கிடைக்கும் என்கிற வசனம், கவனக்குறைவாக இருந்தால் ஒரு நொடியில் தவறவிடக்கூடிய தன்மையின் அலட்சியத்தைக் கொண்டிருந்தாலும் அதில் உள்ள அரசியல் விமர்சனத்தை,  ஆழமான அபத்தத்தை பார்வையாளர்களால் எளிதில் உணர முடிகிறது. பீட்சா கடையில் சிறுவன் அடிவாங்கிய சம்பவத்தை வைத்து சில்லறை ரவுடியொருவன் சம்பாதிக்க முயல்வான். Night Crawler என்றொரு அமெரிக்கத் திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம் பெற்றது. இது போன்ற சிறிய அளவிலான குற்ற சம்பவங்களை வீடியோவாக எடுத்து தொலைக்காட்சிக்கு விற்றுப் பணம் செய்ய முடியும் என்பதை கண்டுகொள்வான் அதன் நாயகன். அதன் பின்னால் பெரும் வணிகச் சந்தை இருக்கும். இவற்றின் மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்களிமிருந்து உணர்வு ரீதியிலான சுரண்டலையும் பரபரப்பையும் ஊடகங்கள் நிகழ்த்தும். சமயங்களில் சம்பவங்கள் நிகழாமல் ஊடகங்களால் 'உருவாக்கப்படும்'. ஒரு நிலையில் தன்னுடைய உதவியாளன் விபத்தில் சிக்கி மரணமடைவதைக் கூட வீடியோ எடுத்து விற்குமளவிற்கு வணிக வெறி நாயகனின் கண்களை மறைக்கும்.

நம்முடைய ஊடகங்களும் இது போன்ற செய்திப்பசியிலும் வணிக நோக்த்திலும் இயங்குகின்றன என்பதையும் மிக நுட்பமாக நிறுவியுள்ளார் இயக்குநர். தொலைக்காட்சி செய்தியின் மூலம் பரபரப்பான தலைப்பிற்குச் சொந்தமாகி விட்ட அந்தச் சிறுவர்களை ஊரே தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு சமயத்தில் அவர்கள் செய்தியை பதிவு கொண்டிருக்கும் காமிராவை குறுக்கிட்டு நடந்து செல்வார்கள். அவர்களை அடையாளம் தெரியாத செய்தியாளர்கள் பதறி அவர்களை விலகி காமிராவின் பின்னால் நடக்கச் சொல்வார்கள். செய்தியின் உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையையும் கவனிக்காமல் அல்லது கவனிக்க விரும்பாமல் ஓரமாகத் தள்ளி விட்டு அவற்றை பரபரப்பாக்குவதில்தான் செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன என்பதை சில விநாடிகளில் கடந்து விடும் ஒரு காட்சியின் மூலம் அழுத்தமாக பதிவு செய்கிறார் இயக்குநர். இது போன்று இத்திரைப்படத்தில் பல உதாரணங்களை கூறமுடியும். ஏற்கெனவே குறிப்பிட்ட படி காட்சிகளின் பின்னணிகளையும் கோணங்களையும் பொருட்பொதிந்த விதத்தில் இயக்குநர் உபயோகித்திருப்பது அவருடைய கச்சிதமான திட்டமிடலைக் காட்டுகிறது.

ஏறத்தாழ நியோ ரியலிச பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் அசலான பின்னணியும் அங்கிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களும் காட்சிகளை உயிர்ப்புடன் மீட்டெடுக்கிறார்கள். இரண்டு சிறுவர்களின் இயல்பான உடல்மொழியும், சென்னையின் வட்டார வழக்கும். குறிப்பாக இளைய சிறுவனின் முகபாவங்கள் அதன் வெள்ளந்திதனத்துடன் அத்தனை அற்புதமாக பதிவாகியுள்ளது. பாட்டியாக நடித்தவரின் பங்களிப்பும் சிறப்பு.  இளம் நடிகையாக இருந்தாலும் இரண்டு பிள்ளைக்கு தாயாக நடிக்க முன்வந்த ஐஸ்வர்யா, அந்தப் பகுதியின் அசலான இல்லத்தரசியின் உடல்மொழியை அற்புதமாக எதிரொலிக்கிறார்.

சமீபத்தில் மறைந்த எடிட்டர் கிஷோர் இதன் படத்தொகுப்பை சர்வதேச தர திரைப்படங்களின் அடையாளங்களோடு தொகுத்துள்ளார். ஒரு நல்ல சிறுகதையின் முடிவைப் போல ஒரு காட்சிக் கோர்வையின் முடிவு சிறிய அளவிற்கான கச்சிதமான தருணத்தில் துண்டிக்கப்பட்டு அடுத்த காட்சிக்கோர்வையோடு மிக இலகுவாக பொருந்தி தொடர்கிறது. எந்த அளவிற்கு மெளனத்தை கடைப்பிடிக்கிறதோ, அதுவே சிறந்த பின்னணி இசை என்பார்கள். ஒரு காட்சியின் போதாமையை இட்டு நிரப்ப அல்லது சிறந்த காட்சியை அடிக்கோடிட்டு  உயர்த்தி கவனப்படுத்துவதற்கான தருணங்களில் மட்டுமே பின்னணி இசை தேவைப்படும் என்பார்கள். மாண்டேஜ் காட்சிகளுக்கானது என்றாலும் பாடல்கள் திணிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் வழக்கமான தமிழ் சினிமாக்கள் போல் அல்லாமல் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு பல காட்சிகள் அதன் இயற்கையான சப்தங்களோடு பதிவாகியிருந்தாலும் சில சமயங்களில் தேவையற்ற பின்னணியிசை கூடுதலாக ஒலித்து எரிச்சல் ஏற்படுத்துவதை 
தவிர்த்திருக்கலாம். இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் இருந்திருப்பதால், எண்ணப் பரிமாற்றங்களின் சிக்கலும் சேதமும் இன்றி  காட்சிகளை அதன் உண்மையான உணர்வுகளோடு பதிவாக்கியிருக்கிறார்.


இத்திரைப்படத்தைப் பற்றி மேலே அதன் போதாமைகளுடன் கூடிய சிறந்த திரைப்படம் என்றெழுதியிருப்பதை கவனித்திருக்கலாம். அப்படியென்ன போதாமைகள்? இதுவரையான தமிழ் சினிமாக்களோடு ஒப்பிடும் போது 'காக்கா முட்டை' முற்றிலும் மாறுபட்ட திரைப்படம், கவனப்படுத்தப்பட வேண்டிய திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லையென்றாலும் சர்வதேச தரம், கிளாசிக் சினிமாக்கள் என்று என்று மதிப்பிடப்படுகிற, கருதப்படுகிற அளவுகோலின் படி இதில் பாத்திரங்களின், சம்பவங்களின் வடிவமைப்பில் உள்ள தொடர்ச்சி்யின்மைகள், பிசிறுகள், தர்க்கப்பிழைகள் போன்றவை உள்ளதாகப் படுகிறது.

"மசாலா சினிமாக்களே ஆதிக்கம் செய்யும் தமிழ் சூழலில் அபூர்வமாக இப்போதுதான் ஒரு நல்ல சினிமா 'குழந்தையின் மழலை நடையோடு' வந்து கொண்டிருக்கிறது. உங்கள் மேதாவித்தனங்களைக் காட்ட இதில் குறைகளைக் காண வேண்டுமா, இதுவே ஓர் அயல்மொழித் திரைப்படம் என்றால் கொண்டாடித் தீர்த்திருப்பீர்கள் அல்லவா?" என்று ஒரு நண்பர் கேட்டார். "அப்படியல்ல நண்பரே. ஒரு திரைப்படத்தின் சிறப்புகளைக் கொண்டாடும் அதே நேரத்தில், அது நம்முடைய பிரதேசத்தைச் சார்ந்தது என்பதற்காக அதன் போதாமைகளை மழுப்புவது அறிவார்ந்த செயல் ஆகாது. சர்வதேச தரத்திற்கு போட்டி போட வேண்டுமென்றால் அது சார்ந்த தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் தேசம் சார்ந்த கற்பித நேசங்கள் என்னிடம் கிடையாது. எல்லா மொழிகளிலும் தேசங்களிலும் ஒருபுறம் வணிகத் திரைப்படங்களும் அதன் இணைக் கோடாக மாற்று முயற்சிகள் இன்னொரு புறமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதில் நாம் கொண்டாடுவது அதன் சிறந்த திரைப்படங்களை மட்டுமே. இரானிலிருந்து வெளிவந்த காரணத்திற்காகவே ஒரு மோசமான திரைப்படத்தை யாரும் கொண்டாடுவதில்லை.  1916-ல் வெளிவந்த மெளன திரைப்படமான 'கீசக வதத்தை' முதல் தமிழ் திரைப்படமாகக் கொண்டாலும் கூட தமிழ் சினிமாவின் வயது ஏறக்குறைய நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தனை வருடம் கடந்தும் அது தவழும் நடையில் தத்திக் கொண்டிருந்தால் அதன் அடையாளம் மழலை அல்ல, பக்கவாதம்" என்று அவரிடம் விளக்கம் கூற வேண்டியிருந்தது.

கலைத்தன்மையுடன் கூடிய மாற்று சினிமா முயற்சிகள் என்றாலே அது சலிப்பேற்றுவது போல மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் என்கிற கற்பனையான வெறுப்பு, வணிக நோக்குத் திரைப்படங்களை மட்டும் பார்க்கிறவர்களுக்கு இருக்கும். இதையே குறிப்பிட்டு கிண்டலடிப்பார்கள்; புரியாமை ஏற்படுத்தும் தாழ்வுணர்வு காரணமாக அலட்சியப்படுத்த முயல்வர்கள் இதைப் போலவே நானும் சொல்லிக் கொண்டு அதை நம்பிய காலமும் உண்டு. அதை மெய்ப்பிப்பது போல வலிந்து திணிக்கப்பட்ட நிதானத்துடன் போலி முயற்சிகளும் உண்டுதான், மறுக்கவில்லை. ஆனால் 'பதேர் பாஞ்சாலி' என்னும் ஒரேயொரு திரைப்படம் என் அத்தனை வருட ரசனை முழுவதையுமே தலைகீழாக மாற்றிப் போட்டது. அது வரை எத்தனை குப்பைகளை சினிமா என்ற பெயரில் ரசித்துக் கொண்டிருந்தேன் என்று அதிர்ச்சியாக இருந்தது. எவ்வித மனச்சாய்வும் முன்தீர்மானமும் இல்லாமல் பார்த்தால் இன்று கூட 'பதேர் பாஞ்சாலி' சலிப்பை உண்டாக்கும் படமல்ல என்பதை உணர முடியும். ஏனெனில் அதில் உண்மையான வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருந்தது. மனித உணர்வுகளின் நெகிழ்ச்சி, துயரம், அன்பு, பிரிவு போன்றவை அதன் யோக்கியத்தன்மையுடன் பதிவு செய்யப்பட்டிருந்தன. கலைசார்ந்த திரைப்படங்களும் காணும் பயிற்சியோ, அனுபவமோ இல்லாமலிருந்தால் கூட அதன் ஆன்மாவை உடனே நாம் தீண்டி விட முடியும் அல்லது அத்திரைப்படம் தாமாக நம்மைத் தீண்டும் என்பதற்கு என்னுடைய அனுபவம் ஒரு சிறிய உதாரணம்.

காக்கா முட்டை திரைப்படமும் ஏறத்தாழ இதே விதத்தில் நம்மிடம் உரையாடுகிறது என்றாலும் - நான் உணர்கிற - அதன் போதாமைகளைக் கடந்திருந்தால் இன்னமும் முழுமையை நோக்கி நகர்ந்திருக்கிற சிறப்பான படமாகியிருக்கும் என்கிற ஆதங்கத்தில்தான் இவற்றை குறிப்பிடுகிறேன். குறைகளை வலிந்து 'கண்டுபிடிக்கும்' மேதாவித்தனத்திற்காக அல்ல.


***

காக்கா முட்டையின் திரைக்கதையிலும் உருவாக்கத்திலும் ஒரு நல்ல படத்தை தர வேண்டும் என்கிற இயக்குநரின் யோக்கியமான நோக்கத்தையும் ஆர்வத்தையும் கண்டுகொள்ள முடிந்தாலும் வணிகரீதியான சில அம்சங்களைத் தாண்டி வர முடியாத தயக்கங்களையும் சமரசங்களையும் அதில் கண்டுகொள்ள முடிகிறது. இங்குள்ள மோசமான ரசனை சார்ந்த சூழலும் அது சார்ந்த வணிகமும் தோல்விபயமும்தான் அவரைக் கட்டுப்படுத்துகிறது என்பதாகப் புரிந்து கொள்கிறேன். இந்தத் தளைகள் நீக்கப்பட்டால் மறுமலர்ச்சியானதொரு சூழல் அமைந்தால் தமிழிலும் சர்வதேச அளவிற்கான மிகச்சிறந்த திரைப்படங்கள் உருவாகக்கூடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த வலுவான அடையாளத்தை மணிகண்டன் உருவாக்கியிருக்கிறார் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது.

திரைப்படங்களில் பாடல்கள் திணிக்கப்படும் அபத்தங்களைப் பற்றி நிறையப் பேசி விட்டோம். 'யதார்த்தமாக' படம் எடுப்பதாக சொல்லிக் கொள்ளும் இயக்குநர்களால் கூட பாடல்களை கைவிட முடிவதில்லை. 'பாடல்கள் இல்லாத படம்' என்பது விதிவிலக்கான, அபூர்வமான திரைப்படங்களின்  பட்டியலில் சேர்க்கும் நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது. திரைக்கதையே அதன் இயல்பில் பாடல்களைக் கோரும் போது அதற்கேற்ப பாடல்களை இணைப்பது என்பது ஒருவகை. ஆனால் பல வருடப் பழக்கம் என்கிற காரணத்தினாலேயே அதை மீற முடியாத தயக்கத்துடன் வலுக்கட்டாயமாக பாடல்களை இணைப்பதை வணிகநோக்குத் திரைப்படங்களில் சகித்துக் கொள்ளலாம் என்றாலும் மாற்று முயற்சிகளிலும் ஏன் கைவிட முடியவில்லை என தெரியவில்லை. அப்படி இணைப்பது எத்தனை அபத்தமாக இருக்கும் என்பதற்கு 'காக்கா முட்டை' ஓர் உதாரணம். சர்வதேச திரைவிழாக்களில் இத்திரைப்படம் திரையிடப்பட்ட போது பாடல்காட்சிகளோடு திரையிடப்பட்டதா, அல்லது அல்லாமல் திரையிடப்பட்டதா என்பதில் இதற்கான பதில் உள்ளது. உயர்தர தேயிலைத் தூள்கள் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் போது அதிலிருந்து மிஞ்சும் சக்கைளே இங்கே வணிகம் செய்யப்படுவதற்கு என்ன காரணமோ ஏறத்தாழ அதே காரணம்தான் இதற்கும். நமக்குச் சக்கைகள் போதும் என்று வணிகர்கள் நினைக்கிறார்கள். சக்கைகள் நன்கு விற்கும் இடத்தில் அதுதான் பரவலாக கிடைக்கும்.

மாற்று முயற்சி திரைப்படங்கள் என்றாலே அது விளிம்புநிலை வாழ்வினை மையப்படுத்துவது, அடித்தட்டு மக்களின் துயரத்தை கொண்டாடுவதுதான் என்கிற தவறான மனப்பதிவும் வழக்கமும் உள்ளது. குடிசையின் முன்பு காமிராவை வைத்து விட்டால் அது விருதுப்படமாகி விடும் என்று நினைக்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. சமூகத்தின் எல்லா பிரிவு மனிதர்களிடமும் அவரவர்கள் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. அவற்றை கையாளும் திரைக்கதைகளையும் இயக்குநர்கள் யோசிக்கலாம்.  பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படம், நடுத்தரவர்க்கத்தினரின் சொந்த வீட்டுக் கனவையும் அது சிதைந்து போவதையும் பற்றிப் பேசுகிறது. 'சந்தியா ராகம்' முதியோர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்களாக, தேவையற்றவர்களாக நிராகரிக்கப்படும் அவலத்தை முன்வைக்கிறது. இது போன்று வேறு வேறு வகைமைகளில் முயன்று பார்க்கலாம். ஒருவகையில் மூன்றாம் உலக நாடுகளின் 'ஏழ்மையை' சித்தரிக்கப்படும் திரைப்படங்கள் என்பது வளர்ந்த நாடுகளின் ரசனைக்கான வணிகமாக பார்க்கப்படுகிறதோ என்கிற ஐயமும் உண்டு. இதன் மூலம் மூன்றாமுலகைப் பற்றிய  சில நிலையான கற்பனை சித்திரங்களை மேற்குலக நாடுகளில் நிறுவுவதற்கும் அது சார்ந்த வணிகத்திற்கும்  பயன்படுத்தப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது.

'காக்கா முட்டை' ஏழ்மை சார்ந்த மெலோடிராமா காட்சிகளையோ அது சார்ந்த செயற்கையான கதறல்களையோ பிரதானப்படுத்தவில்லை என்பதும் அடங்கிய குரலில் பார்வையாளர்கள் யூகித்துக் கொள்வதற்கான இடைவெளியுடன் பதிவாகியுள்ளது என்பது ஆறுதலாக உள்ளது.  சத்யஜித்ரேவின் 'பதேர் பாஞ்சாலி'யின் மீதும் இவ்வாறான குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. பதேர் பாஞ்சாலியும் வறுமையைப் பிரதானப்படுத்தவிலலை. அந்தக் குடும்பத்தின் ஏழ்மையுடன் கூடவே துர்கா மற்றும் அப்பு தொடர்பான நேசமும் மகிழ்ச்சியும் பிரிவும் அதற்கேயுரிய நெகிழ்ச்சியான, உண்மையான தருணங்களுடன் சொல்லப்பட்டிருக்கின்றன.

'காக்கா முட்டை'யை 'பதேர் பாஞ்சாலி'யோடு ஒப்பிட்டு மிகையுற்சாகமாக தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்தைப் பார்த்தேன். தந்தை இல்லாத வீடு, தாயின் கையறு நிலை, இரண்டு அறியாப் பிள்ளைகள், போக்கிடம் இல்லாத பாட்டி, அவரின் மரணம், வீட்டில் வளரும் நாய் என்று இரண்டிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதுதான். ஆனால் கதாபாத்திரங்களை அதன் யதார்த்தத்தோடு வடிவமைப்பதற்கும் சம்பவங்களை சித்தரிப்பதற்கும் 'சினிமாத்தனத்திற்கும்' அது அல்லாதவற்றிற்கும் வேறுபாடு உள்ளது. இந்த நோக்கில் ரேவின் படைப்பு மிக அற்புதமாக அமைந்திருப்பதை உணர முடியும். சில காட்சிகளை மட்டும் உதாரணங்களுடன் ஒப்பிட முயல்கிறேன்.

'காக்கா முட்டை'யில் பணக்கார சிறுவன் மிகுந்த அன்புடன் தரும் பீட்சா துண்டை, இளைய சிறுவன் ஏற்க விரும்பினாலும் பெரியவன் 'வரவழைக்கப்பட்ட' தன்மானத்துடன்' மறுக்கிறான். இது சிறுவர்களின் இயல்பான மனோபாவத்திற்கு எதிரானது என்று கருதுகிறேன். இவர்களின் பீட்சா மோகத்தைக் கண்டு தன்னிடமிருப்பதை பணக்காரத் திமிரோடு அல்லாமல் நண்பனின் மீதான மிகுந்த அன்போடு பகிரப்படும் பொருளை ஒரு சிறுவன் மறுப்பதை எப்படி புரிந்து கொள்வது? ஏனெனில் இறுதிக்காட்சியில்தான் அந்தச் சிறுவர்கள் பீட்சா சாப்பிட வேண்டும் என்பதை திரைக்கதையில் இயக்குநர் முன்னமே 'திட்டமிட்டு விட்டதால்'   நேரும் பிசகு இது.

பதேர் பாஞ்சாலியிலும் ஏறத்தாழ இதற்கு இணையான ஒரு காட்சி வருகிறது. இனிப்பு விற்கிறவன் வரும் போது துர்காவும் அப்புவும் ஆவலாக பாாக்கிறார்கள். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் வாங்க முடியாது. எனவே மிட்டாய்க்காரன் பக்கத்திலுள்ள அவர்களது பணக்கார உறவினர்கள் வீட்டிற்கு செல்கிறான். வாங்க முடியாவிட்டாலும் வேடிக்கை பார்க்கும் உத்தேசத்துடன்  இருவரும் ஆவலுடன் பின்னே செல்கிறார்கள். அந்த வீட்டிலிருக்கும் சிறுமி துர்காவின் தோழி. "அவளுக்கு இனிப்பு ஏதும் தந்து காசை வீணடிக்காதே" என்று அவளுடைய தாய் சீறுகிறாள். என்றாலும் இனிப்பை மறைத்து எடுத்து வந்து துர்காவின் வாயில் தோழி திணித்து விட்டுச் செல்லும் காட்சி கவித்துவத்துடன் கூடிய யதார்த்தமானதாக இருக்கும்.

வறுமையான சூழலிலும் அடித்தட்டு மக்கள் நேர்மையைக் காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது அல்லது அப்படியாக சித்தரிப்பது ஒருவகையான போலித்தனம். இதர சமூகங்களில் உள்ளவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள், சாமியார்கள்.. போன்றோர் அடிப்படைத் தேவைகளுக்கான  தன்னிறைவைக் கொண்டிருந்தாலும் அந்தந்த அளவுகளில், இயன்ற சாத்தியங்களில் நேர்மையின்மையும் ஊழலையும் கடைப்பிடிக்கும் போது ஏழை மக்கள் நேர்மையாக செயல்படுகிறார்கள் அல்லது அவ்வாறு செயல்பட வேண்டும் என்கிற பழைய சினிமா பாணி சித்தரிப்பு தமிழ் சினிமாவின் க்ளிஷேக்களில் ஒன்று.  சூழலின் நெருக்கடியும் அழுத்தமும்தான்  எந்தவொரு நபரையும் அதற்கேற்ப எதிர்வினை புரியச் செய்யும். சமூகவியல் கண்ணோட்டத்தில்தான் இந்தப் பிரச்சினையின் ஆணிவேரை அணுக முடியும். அடித்தட்டு மக்கள் உயிர்வாழும் ஆசைக்காக செய்யும் தவறுகளை தண்டிப்பதிலிருந்தோ அல்லது படைப்புகளில் அவர்களை 'நல்லவர்களாக' சித்தரிப்பதின் மூலம் திருத்துவதிலிருந்தோ அல்ல. பூகம்பத்தில் கட்டிட இடுக்குகளில் மாட்டிக் கொள்பவன், சிறுநீரை அருந்தியும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள முயல்வது எதற்காக? எது அவனை அந்த நிலைக்கு உந்தித் தள்ளுகிறது? கணவன் சிறையிலுக்கும் சமயத்தில், அவரை மீட்பதற்காக பணம் தேவைப்படும் நெருக்கடியில் இருக்கும் பெண், அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு காசு வாங்காத 'கொள்கையையும்', தேர்ந்தெடுத்த தவறுகளை செய்யும் பெரிய சிறுவனை, சமயங்களில் நேர்மையை கடைப்பிடிக்க வைப்பதின் மூலம் எதை இயக்குநர் பதிவு செய்ய விரும்புகிறார்? பீட்சா நிறுவனத்தை வைத்திருப்பவர்களைப் போன்ற பணக்கார்கள் லட்சக் கணக்கில் கொள்ளையடிக்கும் போது  ஒரு தட்டு பீட்சாவிற்காக கனவு காண்பவன் நேர்மையாக இருப்பதின் மூலம் சரிசெய்து விட முடியுமா? ஏன் இந்தக் கதாபாத்திரங்கள் இப்படிச் சமயங்களில் தொடர்பில்லாமல் செயற்கையாக இயங்க வேண்டும், அதற்கான தர்க்கம் என்ன?

மறுபடி பதேர் பாஞ்சாலிக்கு வருவோம். பக்கத்து வீட்டிலிருந்து கொய்யா பழத்தை துர்கா திருடிக் கொண்டு வந்து விட்டாள் என அந்த வீட்டுப் பெண்மணி, துர்காவின் தாயார் காதுபடவே தூற்றுவார். 'அதை கொண்டு போய் கொடுத்து விட்டு வா" என்பதுதான் துர்காவின் தாய் சொல்லும் முதல் வார்த்தையாக இருக்கும். இதைப் போலவே பக்கத்து வீட்டு சிறுமியின் மணிமாலை காணாமற் போனதென்று இன்னொரு புகார். துர்கா அதை எடுக்கவில்லையென்று சாதிக்க, கோபம் வரும் அவளது தாய் அடி வெளுத்து வாங்குவார். ஆனால் பொருளீட்டுவதற்காக கணவர் சென்று தகவல் வராமல் வறுமையின் அழுத்தம் தாங்காத சூழலில் ஒரு மழை நாளில் கீழே கிடைக்கும் தேங்காயை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு துர்காவின் தாய் எடுத்துச் செல்வார். படம் பார்க்கும் எந்தவொரு பார்வையாளருக்கும் அது திருட்டு என்றே தோன்றாது. துர்காவின் மரணத்திற்குப் பின்னான இறுதிக்காட்சியில் அவள் ஒளித்து வைத்திருக்கும் மணிமாலையை அப்பு கண்டுபிடிப்பதும் உடனே பிறர் அறிவதற்கு முன் குளத்தில் தூக்கியெறிவதும் அந்த உண்மையை குளம் தனக்குள் மூடி வைத்துக் கொள்வது போன்றதான காட்சிகளை ரே உருவாக்கியிருக்கும் விதத்தையும் இயல்பையும் பிரமித்துக் கொண்டேயிருக்கலாம்.


***

என்னளவில் கதாபாத்திரங்களின், சம்பவங்களின் வடிவமைப்பு சார்ந்து இத்திரைப்படத்தில் இன்னும் பல தர்க்கப் பிழைகள் இருப்பதாக தோன்றுகிறது. சொல்லிக் கொண்டே போனால் கட்டுரையில் இடம் போதாது. மற்ற சமூகத்து சிறுவர்களை விட அடித்தட்டு சமூகத்து சிறுவர்களும் மனிதர்களும் அடிப்படை வாழ்வியலுக்கு தேவையான பல விஷயங்களைப் பற்றி விவரமாக அறிந்திருப்பார்கள். அவர்களின் நெருக்கடி சார்ந்த சூழல் அனைத்தையும் கற்றுத் தேறும் நிலைக்கு இட்டுச் செல்லும். ஆனால் இதில் வரும் சிறுவர்கள், "பீட்சா கடைக்காரன் எப்படி எங்களை குப்பத்து பசங்க -ன்னு கண்டுபிடிச்சான்?" என்றும் நல்ல உடை வாங்குவதற்காக ஆடம்பரக் கடையை தேடிச் செல்லுமளவிற்கு அப்பாவிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏழைகள் என்றால் அப்பாவிகள் என்பது இன்னொரு தேய்வழக்கு. தங்களின் நிலை பற்றிய பிரக்ஞையும் குறைந்த செலவில் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சாமர்த்தியங்களை அறிந்தவர்களாக இருப்பதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன், சேரியின் அருகில் வாழ்ந்தவன் என்கிற முறையில் நானே அவற்றை பின்பற்றியிருக்கிறேன்.

பணத்திற்காக இத்தனை சிரமப்படும் வீட்டில் இரண்டு தொலைக்காட்சி வைத்திருப்பார்களா? பாட்டி சுட்டுத் தரும் தோசையை தின்னாதவர்கள் எப்படி அதுவே நன்றாக இருக்கிறதென்று இறுதியில் எப்படி சொல்லுவார்கள்? தொடர் பீட்சா கடைகளை வைத்திருக்கும் ஒரு முதலாளி இப்படியா அப்பாவி கோயிந்து மாதிரி இருப்பார்? என்று விளங்கிக் கொள்ள முடியாத பல பிசிறுகளுக்கான விடைகள் வேறெந்தக் காட்சிகளிலாவது இருக்கிறதா என தெரியாது. பாட்டியின் மரணத்திற்குப் பிறகு, சிறுவன் கசக்கி எறியும் பீட்சா விளம்பரத்தாள் சாக்கடையில் மிதந்து மறைவதும், அதனுடன் சிறுவனின் பீட்சா மோகமும் அதனோடு கரைவதான காட்சியோடு அதன் அளவில் படம் நிறைந்து விடுகிறது. அதற்குப் பிறகு நீளும் காட்சிகள், சில்லறை குற்றவாளிகளின் அபத்தமான நகைச்சுவைகள் எல்லாம் ஒரு சம்பிதாயமான தமிழ்ப்படத்திற்கான நீளத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் இழுக்கப்பட்டிருந்தாலும் முழுப்பிரதியை சீர்குலைத்து விடும் அபாயத்தையும் செய்திருக்கிறது. 'யாருக்காக அழுதான்' திரைப்படத்தையும் இவ்வாறே சில நெருக்கடிகளுக்காக இழுத்ததை ஜெயகாந்தன் தன் நூலில் ஒப்புக் கொண்டிருக்கிறார். முன்பே கூறியபடி இதை 'கலைப்படம்' என்று வெகுசன மக்கள் ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்கிற முன்கூட்டிய தயக்கத்தினால் 'வணிகப்படத்திற்கான' சூத்திரங்களை, சமரசங்களை இயக்குநர் கடைப்பிடித்ததினால் இந்த விபத்துக்கள் நேர்நதிருக்கலாம்.

மேலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் என்னளவில் பிழைகள் என்று நான் புரிந்து கொள்ளும் பகுதிகளுக்காக இயக்குநர் தர்கக ரீதியான விளக்கம் ஏதும் வைத்திருக்கலாம், அல்லது அதனோடு தொடர்பான காட்சிகள் நீளம் காரணமாக வெட்டப்பட்டிருக்கலாம். இந்தப் பிசிறுகளையும் கடந்து வந்திருந்தால் இத்திரைப்படம் இன்னும் கச்சிதமானதொரு பிரதியாக உருவாகியிருக்குமே என்கிற ஆதங்கத்தில்தான் இத்தனை விஸ்தாரமாக எழுதியிருக்கிறேன். மற்றபடி தமிழ் சினிமாவை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் தகுதியும் நுண்ணுணர்வும் கொண்ட இயக்குநராகத்தான் மணிகண்டன் தெரிகிறார். எவ்விதமான நடைமுறை இடையூறுகளும் அல்லாமல் அத்திசையில் அவர் சுதந்திரமாக பயணிக்கவும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ரசனை மாற்றத்தை ஏற்படுத்தவும் என்னுடைய வாழ்த்துகள். 

- உயிர்மை - ஜூன் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

No comments: