Thursday, February 19, 2015

நூல்வேலி - விபத்தில் பிறழும் உறவு



தமிழ் திரையில் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா மிக அரிதாகவே பாடியுள்ள பாடல்களில் ஓர் அற்புதம் -  'மெளனத்தில் விளையாடும் மனச்சாட்சியே'. பொதுவாக இந்தப் பாடலின் வழியாகவே அதிகம்  நினைவுகூரப்படும் திரைப்படம் ஒன்றுண்டு.  இயக்குநர் பாலசந்தரின் உருவாக்கங்களில் பரவலாக கவனம் பெறாத அந்த திரைப்படம் - நூல்வேலி.

உறவுகளில் உள்ள சிக்கல்களையும் சிக்கலான உறவுகளையும் தமது திரைப்படங்களில் தொடர்ந்து கையாள்வதில் விருப்பம் கொண்டவர் இயக்குநர் பாலசந்தர். தந்தை வயதுள்ளவரின் மீது ஓர் இளம்பெண் கொள்கிற காதலையும் தாய் வயதுள்ளவரிடம் ஓர் இளைஞன் கொள்கிற மையலையும் மையமாக வைத்து உருவாக்கிய 'அபூர்வ ராகங்கள்' அந்தக் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதொரு திரைப்படம். ஏன், இந்தக் காலத்தில் இதைப் பார்க்கிற எந்தவொரு இளையதலைமுறை பார்வையாளனும் ஆச்சரியப்படக்கூடிய திரைப்படம்தான். இப்போதைய இயக்குநர்கள் கூட கையாளத்தயங்கும் சர்ச்சைக்குரிய விஷயங்களை கத்தி முனை நடனம் போன்ற கவனத்துடன் கையாண்டவர் பாலசந்தர்.

என்னவொன்று, தனது கதாபாத்திரங்களின் சர்ச்சைகள் ஒரு மையத்தில் குவிந்து அதன் உச்சநிலையை அடையும் சமயத்தில், இயக்குநர் என்ன செய்யப் போகிறாரோ என்று பார்வையாளன் பரபரப்பும் திகைப்பும் அடையும் சமயத்தில், தமிழ் சமூகத்தின் ஆச்சாரமான மனோபாவத்தின் மீதான தயக்கத்தினாலோ என்னவோ, ஒரு யூ டர்ன் அடித்து பாத்திரங்களை மீண்டும் பழைய இடத்தில் பொருத்தி அந்த சராசரி பார்வையாளன் ஆசுவாச பெருமூச்சையடையும் சமநிலைக்கு கொண்டு வந்து விடுவார். இதே போன்ற உத்தியை பாக்கியராஜ் தனது 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்திலும் உபயோகித்திருப்பதைக் காணலாம்.

அது மட்டுமல்லாமல் தனது திரைப்படங்களின் பிரதான பாத்திரங்களை மஸோக்கிஸ்ட்டுகளாக உலவ விடுவதில் இயக்குநர் இன்பம் காண்பவரோ என்றும் கூட தோன்றுகிறது. 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தை சற்று யோசித்துப் பார்க்கலாம். ஓர் உருக்கமான மெலோடிராமா படைப்பிற்கு மிக அத்தியாவசியமான கச்சாப் பொருட்களின் படி பொறுப்பில்லாமல் ஓடிப்போன தந்தை, குடிகார அண்ணன், விதவை தங்கை, திருமணமாகாத இன்னொரு தங்கை, கண்பார்வையற்ற தம்பி உட்பட இன்னபிற பாத்திரங்கள் அதில் உண்டு. (இதிலும் ஒரு பொருந்தா உறவு நிகழும் துணைக்கதையுண்டு).  தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு இயந்திரமாக மாறிவிடும் சுஜாதா, அதிலிருந்து மீள கிடைக்கும் குறுகிய இடைவெளிகளையெல்லாம் படைப்பாளிகளுக்கேயுரிய ஒரு சாடிஸ தன்மையோடு  அடைத்துக் கொண்டே வருவார் இயக்குநர்.

தன்னுடைய நீண்ட நாள் காதலனை விதவைத் தங்கைக்கு விட்டுக் கொடுத்து விடுவார் சுஜாதா.  இன்னும் பல சம்பவங்களைக் கடந்த பிறகு, தான் பணியாற்றும் நிறுவனத்தின் முதலாளியே தன்னைத் திருமணம் செய்து கொள்ள முன்வரும் சமயத்தில், அதுவரை குடிகாரனாக பொறுப்பில்லாமல் இருந்து திருந்திய அண்ணனின் திடீர் மரணத்தின் காரணமாக தன்னுடைய இன்னொரு தங்கையை முதலாளிக்கு திருமணம் செய்து வைத்து விட்டு மறுபடியும் இயந்திரமாக மாறிவிடுவார். தன்னுடைய திருமணம் நிறைவுற்ற நிலையிலும் குடும்பத்தினருக்கு உதவக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஏன் அதை சுஜாதா நிராகரிக்கிறார் என்கிற கேள்விக்கு அத்திரைப்படம் அதன் காவிய சோகத்துடன் நிறைவுறுவதுதான் சரியாக இருக்க முடியும் என்பது இயக்குநரின் பதிலாக இருக்கலாம். நூல்வேலி திரைப்படமும் இதே போன்றதொரு தேவையற்ற தற்கொலையுடன் இன்னொரு மெலோடிராமாவாக முடிகிறது.


***

ஷெரீப் எழுதிய கதையிலும் பாலசந்தரின் திரைக்கதை வசனத்திலும்  உருவான நூல்வேலியும் சர்ச்சையான உள்ளடக்கத்தை கொண்டதுதான். நடுத்தரவயதுள்ள மனிதரொருவர் ஏறத்தாழ மகள் வயதுடைய ஒரு பெண்ணுடன் பாலுறுவு கொள்வதினால் அவரின் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களே இத்திரைப்படத்தின் மையம். 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் - முத்தம் என்பது காமத்தில் சேர்ந்ததில்லை' என்கிற வரி சமீபத்திய ஒரு தமிழ் திரைப்படத்தின் டேக்லைன். புதினப்படுத்தப்பட்ட உறவுகளின் மீது அமைந்த கவிதை நயத்துடன் கூடின வரியாக இது இருக்கலாம். ஆனால் உளவியலோ இதற்கு எதிர்ப்புறமாக இயங்குகிறது. ஒரு தந்தை மகளுக்குத் தரும் முத்தத்தில் தன்னையறியாமலே அதில் மைக்ரோ உணர்வுடனான செக்ஸ் கலந்திருக்கும் என்கிறது அது. நம்முடைய ஆசார மனம் இந்த உண்மையைக் கண்டு  திடுக்கிடத்தான் செய்யும். என்ன செய்வது?

மனித குலம் தோன்றி மெல்ல மெல்ல நாகரிகத்திற்கு நகர்ந்து ஆண் xபெண் உடலாகவே அதுவரை அறியப்பட்ட உறவுகள் ஒழுங்குப்படுத்தப்படும் நோக்கில் திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களின் தோற்றங்களை வந்தடைந்தன. இதன்  மூலம் ஏற்பட்ட உறவுகளாகிய கற்பிதங்கள்  இன்று புறக்கணிக்க முடியாத ஒழுக்க மதிப்பீடுகளாக சமூகத்தில்  உறைந்து நிற்கின்றன. ஆனால் ஆழ்மன இச்சைகளினால் இவைகளில் இருந்து நிகழும் விதிவிலக்கான மீறல்கள் சமூகத்தால் மிக கடுமையான ஆட்சேபத்துக்குரியதாகவும் தண்டனைக்குரியதாகவும் பார்க்கப்படுகின்றன.

இத்திரைப்படம் வெளிவந்த காலக்கட்டத்தில், ஏன் இன்னமும் கூட, இது இயக்குநரின் வக்கிரமான பார்வையுடன் கூடிய படைப்பு என்பது போன்ற விமர்சனம் எழுவதால் இத்தனை விஸ்தாரமாக சொல்ல வேண்டியிருக்கிறது. புதையல் கிடைக்கும் என்கிற நம்பிக்கைக்காக மகளையே நரபலி கொடுத்த தந்தை, பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய், தெரியாமல் குடிபோதையிலோ அல்லது தெரிந்தே கூட மகளை வன்கலவி செய்த தந்தை போன்ற சமகால சமூகப் பிறழ்வுகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்?. இம்மாதிரியான விதிவிலக்குகளை நியாயப்படுத்துவதற்காக அல்ல, சமூகத்தில் நிகழாத எதையும் வக்கிர கற்பனையுடன் இயக்குநர் படைத்துவிடவில்லை என்பதற்காக இதைச் சொல்கிறேன்.  நம்முள் மறைந்திருக்கும் விகாரங்களை திரையில் பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சியும் குற்றவுணர்வுமே இம்மாதிரியான எதிர்ப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும் காரணமாகின்றன.

ஒழுக்க மதிப்பீடுகளை கடைப்பிடிப்பதற்கும் மீறுவதற்கும் இடையில் தத்தளிக்கும் பார்வையாள மனோபாவத்தின் சமநிலையை சமாளிக்கும் ஒரு சாமர்த்தியத்தையும் பாலசந்தர் திரைக்கதையில் நிகழும் ஒரு சம்பவத்தில் உருவாக்கி வைத்திருப்பார். சென்சார் போர்டு அதிகாரியாகவும் நாவலாசிரியையாகவும் இருக்கும் சுஜாதா, ஒரு படத்தை சென்சார் செய்யும் போது அதில் சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு பொருந்தா உறவைக் கண்டித்து 'இது விகாரமானதொரு கற்பனை, யதார்த்தமானது அல்ல' என்று விவாதித்து அத்திரைப்படத்திற்கு அனுமதி தர மறுத்து விடுவார். பின்னர் வீட்டிற்குத் திரும்பும் போது தன் கணவனே, மகள் வயதுள்ள பக்கத்து வீட்டு மாணவியிடம் பாலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மனம் நொந்து படஅதிபரிடம் தொலைபேசியில் உரையாடி அந்தப் படத்திற்கு அனுமதி தந்து விடுவார்.


மீள்நினைவாக நூல்வேலி திரைப்படத்தின் கதைப் போக்கை சற்று கோர்வையாக பார்த்து விடுவோம்.  ஆர்கிடெக்ட்டாக பணிபுரியும் சரத்பாபுவும் பிரபல நாவல் ஆசிரியையுமான சுஜாதாவும் தம்பதியினர். அவர்களுக்கு சுமார் பத்து வயதில் ஒரு பெண் வாரிசு. அவர்கள் புதிதாக குடியேறும் வீட்டுக்குப் பக்கத்தில் துறுதுறுவென திரியும் ஒரு மேல்நிலைப் பள்ளி மாணவி சரிதா. சரிதாவின் தாய் ஒரு முன்னாள் நடிகை. சரிதாவின் குறும்புத்தனங்கள் சரத்பாபு தம்பதியினருக்குப் பிடித்துப் போக அவளை தங்களின் மகள் போல பாவிக்கின்றனர். சரிதாவின் தாய் இறந்து விட வேறு உறவில்லாத அவளை தங்களின் வீட்டிலேயே தங்கி படிக்க அனுமதிக்கின்றனர். ஓர் அசந்தர்ப்பமான தனிமையான சூழலில் சரத்பாபுவும் சரிதாவும் பரஸ்பர இணக்கத்தோடு பாலுறவு கொள்ள நேர்ந்து விடுகிறது. இதை சுஜாதாவும் அவரது மகளும் பார்த்து விடுகின்றனர். அந்தக் குடும்பத்தில் மனப்புழுக்கமும் மெளனப்புயலும் நிலவுகிறது. மூவருமே ஆளுக்கொரு திசையில் பிரிந்து செல்கின்றனர். தமிழ் சினிமாவின் விநோதமான விதிகளின் படி ஒருமுறையான பாலுறவிலேயே பிறந்து விடும் குழந்தையை வளர்த்து வருகிறார் சரிதா. தன்னுடைய மகளும் மருமகனும் பிரிந்து வாழ்வதை எண்ணி வருத்தம் கொள்கிறார் சுஜாதாவின் தந்தை. 'இந்தக் குழப்பத்தை நீதான் சரிசெய்ய வேண்டும்' என்று அவர் சரிதாவிடம் பேச தன்னுடைய குழந்தையை அவர்களுக்கு பரிசாக அளித்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறார் சரிதா. தமிழ் சினிமாவின் சம்பிதாயப்படி சுபம்.

ஒரு திரைப்படத்தில் பின்னால் வரப்போகும் சில திருப்பங்களை அல்லது நிகழ்வுகளை முந்தைய காட்சிகளிலேயே பூடகமாக வெளிப்படுத்துவது ஒருவகையான திரைக்கதை உத்தி.

இத்திரைப்படத்தின் டைட்டில் காட்சிகளில் கைகளை வைத்து நிழல்களின் மூலம் விதவிதமான உருவங்களைக் காட்டும் Shadow play காண்பிக்கப்படுகிறது. பள்ளி நிகழ்ச்சியொன்றில் சரிதா இந்த திறமையைக் காண்பித்து பாராட்டு பெறுவது போல் இது அமைந்திருந்தது. டைட்டிலில் இது காண்பிக்கப்படுவதால் பின்னர் தொடரும் திரைக்கதையில் இதை எங்காவது  இயக்குநர் பொருத்திக் காட்டுவார் என்று யூகித்திருந்தேன். ஆனால் எங்கும் அவ்வாறு நிகழவில்லை. இத்திரைப்படத்தில் வெள்ளந்தியாக வரும் வீட்டுப் பணியாள் பாத்திரம் ஒன்றிருக்கிறது. நடிகர் அனுமந்து நடித்திருப்பார். அந்த வீட்டில் அவரால் புரிந்து கொள்ள முடியாத காரியத்தை எவராவது செய்தால் 'படிச்சவங்க இல்லையா" என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுவார். அவ்வாறே இதையும் 'இயக்குநர் சிகரம் இல்லையா?' காரணம் இல்லாமலா வைத்திருப்பார்' என்று சொல்லி விட்டு நகர வேண்டியதுதான். இல்லையெனில் இன்னொன்றும் செய்யலாம். 'திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட பின் ஏற்பட்ட கற்பிதங்களான மனித உறவுகள், நிழல்கள் போன்று உருமாறிக் கொள்ளக்கூடிய மாயத்தன்மையைக் கொண்டது என இயக்குநர் குறிப்பால் உணர்த்த விரும்புகிறார்' என்று சற்று ஜல்லியடித்துப் பார்க்கலாம்.

ஆனால் இன்னொரு இடத்தில்  இந்த உத்தியை இயக்குநர் சற்று சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் எனலாம். படத்தின் துவக்க காட்சிகளில் பக்கத்து வீட்டுப் பணியாளனை மறைந்திருந்து பேய் போல் விளையாட்டாக பயமுறுத்தி 'அந்த வீட்டில் ஒரு மோகினி பிசாசு இருக்கிறது' என்று நம்ப வைக்க முயல்வார் சரிதா. பின்னர்  வரும் காட்சியில் அந்த வீட்டில் நிகழும் குழப்பங்களுக்கும் உளைச்சல்களுக்கும் தான்தான் காரணம் என்கிற குற்றவுணர்ச்சியுடன்  'இந்த வீட்டில் நுழைந்திருக்கும் மோகினி பிசாசு நான்தான்' என்று பரிதாபமாக ஒப்புதல் வாக்குமூலம் தருவார்.

முன்னரே குறிப்பிட்டது போல் கத்தி மேல் நடக்க வேண்டிய சாதுர்யத்துடன் கையாள வேண்டிய கதையை தனது அற்புதமான திரைக்கதையால் (உதவி : அனந்து) சாத்தியமாக்கியிருப்பார் பாலசந்தர். சரத்பாவும் சுஜாதாவும் அந்நியோன்யமான தம்பதிகளாக இருந்தாலும் சரத்பாபுவின் உடல் சார்ந்த தேவை முழுவதும் பூர்த்தியாகவில்லை என்பது முந்தைய காட்சிகளில் நிறுவப்பட்டு விடும் இதன் மூலம் பின்னர் நடக்கவிருக்கும் அந்த விபத்திற்கு ஒரு காரணத்தை தர முயன்றிருப்பார் இயக்குநர். மூன்று பிரதான கதாபாத்திரங்களுமே கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சரிதாவை பள்ளி மாணவியாக காண்பதெற்கெல்லாம் அபாரமான கற்பனைத் திறனும் சகிப்புத்தன்மையும் வேண்டும். பாலசந்தரின் கதாபாத்திரங்கள் சில பொதுவாக ஏதாவதொரு தனிப்பழக்கத்தை (mannerism) கொண்டிருக்கும். சமயங்களில் அவை சுவாரசியமானதாகவும் எரிச்சலூட்டும்படியும் இருக்கும். இதிலும் அப்படியான மேனரிஸம் சரிதாவிற்கு உண்டு. என்றாலும் அந்த விபத்திற்கு பின்னதான காட்சிகளில் சரிதாவின் முதிர்ச்சியான நடிப்பு அற்புதமாக இருக்கும். 'அங்கிள் தன்னை பலவந்தம் செய்து விட்டார் என்றோ அல்லது உபயோகப்படுத்திக் கொண்டார் என்றோ அந்தப் பாத்திரம் கருதுவதில்லை. மாறாக தன் ஆழ்மனதிலுமே அங்கிள் மீது ஈர்ப்பிருந்திருக்கலாம்' என்பதை நியாயமாக ஒப்புக் கொள்கிறது.

சரத்பாபுவின் கதாபாத்திரமும் அப்படியே. தமிழ் சினிமாவின் பூடகமான வில்லன்கள் போலவே சரிதாவை மகள் போல பாவிப்பது மாதிரி நடித்து சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பது போல எல்லாம் அபத்தமாக சித்தரிக்கப்படவில்லை. மாறாக அவர் சரிதாவை தன்னுடைய மகள் போலத்தான் நினைக்கிறார். ஆனால் அந்த அசந்தர்ப்பமான சூழலில் அந்த விபத்தில் இடறி விழுவதை அவரால் தவிர்க்க முடிவதில்லை. இதற்கான குற்றவுணர்வை அவர் கொண்டிருந்தாலும் சுஜாதா தன்னிடம் இது குறித்து காத்திரமான கேள்விகள் கேட்கும் போது அதை எதிர்கொள்ள இயலாமல் இயல்பான ஆணாதிக்க மனோபாவத்தோடு கோபமும் எரிச்சலும் கொள்வார். இந்த மூன்று கதாபாத்திரங்களில் சுஜாதாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம்தான் இன்னமும் சிறப்பானது. அவர் ஒரு எழுத்தாளராக இருப்பதினால் தன்னுடைய கணவனாகிய ஒரு ஆண் செய்த தவறை பெண்ணிய சிந்தனையுடன் கண்டிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு சாதாரண மனைவியாக தன்னுடைய நிலைக்கு போட்டி வந்து விட்டதே என்று மனம் புழுங்கவும் கணவனை இழந்து விடுவோமோ என்கிற பதட்டமும் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு மனநிலைகளுக்குமான தத்தளிப்பை சுஜாதா மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

பாலசந்தரின் பெரும்பாலான திரைப்படங்களில் உள்ள தேய்வழக்கு காட்சியமைப்புகளும் கேமிராக் கோணங்களும் இதில் உண்டு. சுஜாதாவின் தந்தை பாத்திரம் திடீரென்று கேமிராவை நோக்கி பார்வையாளர்களிடம் உரையாட ஆரம்பித்து விடும். (தெலுங்கு நடிகரான சோமயாஜூலுவின் சகோதரரான ரமணமூர்த்தி சிறப்பாக நடித்திருப்பார்). கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட பாடலைத் தவிர வாணி ஜெயராம் பாடிய இன்னொரு அற்புதமான பாடலான 'நானா... பாடுவது ...நானா' மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய 'தேரோட்டம்...' ஆகியவை கேட்க இனிமையானவை. (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்).

சிறிது பிசகினாலும் ஒழுக்க மதிப்பீடுகள் அறுந்து விடக்கூடிய நுண்மையான தன்மையைக் கொண்டவை, கவனமாக கையாள வேண்டிய அவசியமுள்ளவை என்பதை திரைப்படத்தின் தலைப்பே மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. காமம் என்பது மிக கவனமாக கையாளப்பட வேண்டியதொரு விலங்கு என்பதையும் சொற்ப நேர இன்பமானது எத்தனை தனிநபர்களின் வாழ்வை கடுமையாக பாதிக்கிறது என்பதை அழுத்தமாக பதிவாக்கியிருக்கிற திரைப்படமிது. பெண்ணியவாதிகள் கோபம் கொள்ளக்கூடிய நியாயமான காரணங்களையும் கொண்டிருக்கிறது. இயல்பான இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டதைத் தவிர வேறெந்த பாவமும் செய்யாத அப்பாவியான சரிதாவின் அந்த அபத்தமான தற்கொலையை மாத்திரம் இத்திரைப்படம் தவிர்த்திருக்குமானால் சிறப்பான படைப்பென்று இன்னமும் உரத்த குரலில் சொல்லியிருக்க முடியும்.

காட்சிப்பிழை, பிப்ரவரி 2015 இதழில் பிரசுரமானது - நன்றி காட்சிப்பிழை
 
suresh kannan

1 comment:

சோ.சுப்புராஜ் said...

நானும் இத் திரைப்படத்தை அது திரைக்கு வந்த காலத்திலேயே பார்த்திருக்கிறேன்.

தற்போது டிவிடியிலும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

சரிதாவின் தற்கொலை அபத்தமானது தான். அதுவும் அவளை அவளுக்கு நடந்து விட்ட விபத்துக்குப் பின்னாலும் காதலிக்கவும் அவளை மணந்து கொள்ளவும் தயாராக இருக்கிற காதலனையும் புறக்கணித்து விட்டு.

பாலசந்தரிடமுள்ள பெரிய பிரச்னையே இது தான். வித்தியாசமான கதைகளை உருவாக்குவார். அற்புதமாக சித்தரித்துக் கொண்டு போவார். முடிவில் மட்டும் சொதப்பி விடுவார். அல்லது அவரின் பழைமையும் ஆணாதிக்க மனோபாவமும் விழித்துக் கொண்டு விடும்.

அவர்கள் படம் கூட அப்படிப்பட்ட வலிந்து உருவாக்கப் பட்ட அபத்தமான முடிவையே கொண்டிருக்கும்.

சோ.சுப்புராஜ்