Saturday, November 22, 2014

ஜீவா - சாதிய அரசியலின் விளையாட்டு





"இப்பல்லாம் யாரு சார் ஜாதி பார்க்கறாங்க"  -

பாசாங்குடனோ அல்லது அறியாமையுடனோ நம் அன்றாட உரையாடல்களில் அடிக்கடி கேட்கக்கூடியது இது. ஒருவரின் சாதி குறித்து அறிய கிராமப்புறங்களிலும் சிறுநகரங்களிலும் நேரடியாகவோ அல்லது சுற்றி வளைத்தோ எப்படியோ கேட்டு விடுவார்கள்..'தம்பி எந்த ஊரு? எந்த ஆளுங்க?" என்று.  ஒருவரை பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவே  மதிப்பிடக்கூடிய பெருநகரங்களில் சாதி குறித்த பிரக்ஞையும் உரையாடலும் அதற்கான சாவகாசமும்  சற்று குறைவுதான் என்றாலும் இந்தக் கேள்வி பெரும்பாலும் வெளியே கேட்கப்படாவிட்டாலும் மனதிற்குள் ஊசலாடிக் கொண்டு நீறு பூத்த நெருப்பு போலதான் இருக்கும். நாசூக்கான செய்கைகளில் அது வெளிப்பட்டு விடும். சிறு பொறியில் கூட அதற்கான நெருப்பு பற்றிக் கொண்டு விடும். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல சாதிய உணர்வும் அது சார்ந்த பெருமிதமும் அல்லது தாழ்வுணர்வும் நிறைந்த சமூகமாகத்தான் இந்திய சமூகம் இருக்கிறது.சட்டைக்குள் பூணூல் தெரிகிறதா என்று படித்தவர்கள் பார்க்கும் நாசூக்கான பார்வை மிதமான முறை என்றால் வாயில் மலத்தைத் திணித்தல், தலையில் செருப்பால் அடித்தல், ஆட்களைக் கொன்று வீட்டைக் கொளுத்துதல் என்று பாமரர்கள் நிகழ்த்தும் உக்கிரமான முறையிலும் அது நீளும்.

பொதுவாக  மாணவப்பருவத்தில் எவரும் சகமாணவர்களுடன் சாதி பார்த்து பழகுவதில்லை. ஆனால் எந்தச் சமயத்தில் அந்த உணர்வு பெருமிருகம் போல் நம் மனதில்  நுழைகிறது என்று தெரியவில்லை. சமீபத்தில், விருதுநகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவனொருவன் கைகடிகாரம் கட்டி வந்தான் என்கிற காரணத்திற்காக அதைப் பொறுக்க முடியாத ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த சக மாணவர்கள் அவனுடைய கையை கத்தியால் தாக்கி காயப்படுத்தினார்கள் என்கிற செய்தியை வாசிக்கும் போது மனம் பதைக்கிறது. பெற்றோர் உள்ளிட்ட தங்களைச் சுற்றியுள்ளவர்கள் சாதியப் பெருமிதங்களுடன் உரையாடுவதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்களை இழிவாக நடத்துவதும் உரையாடுவதும் இளமனங்களில் பதிந்து அதுதான் சரியானது என்றும் இயல்பென்றும் தோன்றி விடுகிறது. எனவேதான் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பத்து வயது சிறுவன் கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எழுபது வயது மனிதரைக் கூட தன்னிச்சையாக  'டேய்' போட்டு அழைக்கும் துணிவைத் தருகிறது.

சுதந்திரத்திற்குப் பின் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம் உயாந்ததாலும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சாதியத்தின் கொடுமைகளைதொடர்ந்து உரையாடியதாலும் உயர்சாதி சமூகங்களில் அது குறித்த பெருமித உணர்வு மட்டுப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு அதற்கு மாறாக குற்றவுணர்வையும் தாழ்த்தப்பட்டவர்களை சரிசமமாக நடத்த வேண்டிய உணர்வையும் கட்டாயத்தையும் அவை ஏற்படுத்தின. பெயருக்குப் பின்னால் பெருமையாக போடப்பட்டிருந்த சாதியப் பெயர்கள் உதிர்ந்து போயின. ஆனால் இந்தியாவெங்கிலும் தேசிய அரசியலுக்கு மாற்றாக பிராந்தியக் கட்சிகள் தலைதூக்கிய போது அவை சாதியுணர்வை தங்களின் வலிமையான ஆயுதமாக முன்வைத்தன. சாதிக்கட்சி மாநாடுகள், அது சார்ந்த அரசியல் வன்மங்கள், மோதல்கள், வெற்றிகள் போன்றவைகளைக்குப் பிறகு கல்வியறிவு பெற்ற சமூகம் கூட 'தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன்' என்பதை பொதுவில் பெருமையாக உரையாடுமளவிற்கு மாறிப் போனதையும் சாதிய அரசியல் மெல்ல வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதையும் காண வேதனையாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள கல்விமுறை என்பது சுயசிந்தனை, பகுத்தறிவு, சமூக அரசியல் போன்றவைகளை ஒரு தனிநபரிடம் வளர்க்காமல் தன்னுடைய சமூக அந்தஸ்தையும் மதிப்பையும் செல்வத்தையும் பெற்றுக் கொள்ளும் ஒரு கருவியாக மாத்திரம் கல்வி பயன்படுத்தப்படும் அவலம் நீடிக்கிறது. எனவேதான் உயர்கல்வி கற்றவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், வருங்கால சந்ததிகளின் வளர்ச்சியையும் கனவுகளையும் தீர்மானிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட பிற்போக்குத்தனமான சிந்தனையுடையவர்களாகவும் சுயசாதி அபிமானத்திலும் இருப்பதாலும் அது சார்ந்த மனச்சாய்வுகளிலிருந்தும் பாரபட்சங்களில் இருந்தும் விலக முடிவதில்லை. முற்போக்கு சார்ந்த சிந்தனைகளுடன் கூடிய மனிதனாக மலர்வதற்கு அவர்கள் கற்ற கல்வி உதவுவதேயில்லை என்பதுதான் சோகம்.

***

ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுக்களில் இந்தியாவால் அதிகம் சாதிக்க முடியாத போது "ஏறத்தாழ 120 கோடி பேர் இருக்கோம். ஒரு தங்கம் கூட வாங்க முடியலையே சார்" என்கிற பெருமூச்சுக்களை இங்கு கேட்க முடியும். அதற்குக் காரணம் நம்மிடம் திறமையில்லை என்பது அர்த்தமில்லை. முன்பே குறிப்பிட்டது போல இங்குள்ள கல்விமுறையும் சமூக சூழலும் ஒரு நபரின் தனித்தன்மைகளையும் விருப்பங்களையும் அழித்து அல்லது புதைத்து 'எந்த துறை சார்ந்து கல்வி கற்றால்  நல்ல சம்பளத்துடன் வருங்காலத்தில் வசதியாக வாழலாம்' என்கிற தேடலுடன் அது சார்ந்து மாத்திரமே ஆட்டு மந்தைகளாக ஓட வைக்கிறது. பாடத்திட்டம் சார்ந்து கற்பதைத் தவிர ஒரு மாணவனின் வேறு எந்த விருப்பங்களும் கனவுகளும் அவனுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. வருங்கால வளம் குறித்த கவலையில்லாத செல்வந்தர்களுக்கே அது சாத்தியமாகிறது. 'ஒரு மாணவன் விளையாட்டுத் துறையிலோ அல்லது கலை சார்ந்த துறைகளிலோ ஆர்வம் கொண்டு அது சார்ந்து தொடர்ந்து இயங்க முடிவு செய்வானாயின், 'உருப்படாத அல்லது பிழைக்கத் தெரியாத' மாணவனாகவே பார்க்கப்பட்டு அது சார்ந்த அனுதாபப் பார்வைகளையும் ஏளனங்களையும்தான் சந்திக்க முடியும். 'தங்கம் வாங்கலையே சார்'  என்று பெருமூச்சு விட்ட அந்த நடுத்தர வர்க்க நபர், அவருடைய மகன் தன்னுடைய கனவை மறைத்து வைத்து விட்டு  பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான்' என்கிற உண்மையை அறியாமல் இருக்கக்கூடும். அல்லது அவரே அதற்கான தடைகளை இட்டவராக இருக்க்கூடும்.

இந்த நடைமுறை தடைகளைத் தாண்டி ஒருவன் தன்னுடைய கனவு சார்ந்த துறைகளுக்குச் செல்ல முயன்றால் கூட எங்கும் நிறைந்திருப்பதைப் போன்று அங்கும் நீண்டிருக்கும் பல்வேறு அரசியலையும் சமாளித்தால்தான் தன்னுடைய பயணத்தை தொடர முடியும். சாதிய அரசியலுக்கு பலியாகும் ஒரு விளையாட்டு வீரனின் துயரத்தையும் அவனுடைய நீண்ட கால கனவு நொறுங்கிப் போகும் பரிதாபத்தையும் தமிழ் சினிமாவுக்கேயுரிய சம்பிரதாயங்களுடன் விவரிக்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'ஜீவா' திரைப்படம். தமிழ்நாட்டு கிரிக்கெட் அமைப்பில் நிலவும் பிராமண சமூகத்தின் ஆதிக்கத்தையும் அது சார்ந்த அரசியல் இயங்குவதையும் மிக நேரடியான குறிப்புகளுடன் அப்பட்டமாக முன்வைக்கிறது இத்திரைப்படம்.

இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் கனவுகளுடன் வளர்கிறான் ஜீவா. தமிழ் சினிமாவில் ரஜினி போல கிரி்க்கெட்டின் உச்சநட்சத்திரம் சச்சின்தானே? எனவேதான் சச்சின்தான் அவனது லட்சியநாயகன். தேசிய அணியில் இணைந்து இந்தியாவிற்காக கிரிக்கெட் ஆடவேண்டுமென்பது அவனது ஆவல். அதற்காக கடுமையாக உழைக்கிறான். நடுத்தர வர்க்கத்தினருக்கேயுரிய நடைமுறை தடைகளைத் தாண்டி ரஞ்சி டிராபிக்கு தேர்வான செய்தி அவனுக்கு குறுகிய கால மகிழ்ச்சியைத் தான் வருகிறது. ஏனெனில் தமிழ்நாட்டு கிரிக்கெட் கிளப்பில் நீண்டகாலமாக நிலவும் சாதிய அரசியல். அங்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மாத்திரமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதர சமூகத்தைச் சார்ந்தவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் மறைமுகமாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இந்த அரசியலுக்குப் பலியாகும் ஜீவாவின் நண்பன் மனஉளைச்சலினால் தற்கொலை செய்து கொள்கிறான். ஜீவாவும் விரக்தியின் உச்சியை அடையும் போது 'கடுமையான உழைப்பாளிகளை எதுவும் தடைசெய்ய முடியாது. அவர்களது உழைப்பு நிச்சயம் ஒருநாள் பயனளிக்கும்' என்கிற தங்கவிதியின் காரணமாக அதிர்ஷ்டவசமாக அவனுக்கு இன்னொரு கதவு திறக்கிறது. அதன் மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்து தன் கனவை அடைகிறான் ஜீவா.

***

'இந்த இயக்குநரின் திரைப்படங்களுக்கு நம்பிச் செல்லலாம். மோசமாக இருக்காது' என்று பார்வையாளர்கள் முன்கூட்டியே நம்பிக்கை வைக்கிற இயக்குநர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் சுசீந்திரன். 'ராஜபாட்டை' தவிர அவரது அத்தனை திரைப்படங்களும் சுவாரசியமான திரைக்கதையையும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதாகவும் அமைந்திருக்கிறது. இவரது முதல் திரைப்படமான வெண்ணிலா கபடிக் குழுவில் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் மாத்திரமே இன்னமும் ஜீவிக்கும் கபடி விளையாட்டையும் இடைநிலை சாதியைச் சார்ந்தவர்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கபடி வீரனொருவன் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை நுட்பமாக தொட்டுச் சென்றிருப்பார். ஆனால் 'ஜீவா' திரைப்படத்தில் கிரிக்கெட்டில் நிலவும் பிராமண சமூகத்தின் அரசியலை அதற்குரிய அடையாளங்களுடன் தெளிவாகப் புரிவது போல நேரடியாகவே உரையாடியிருக்கிறார். ஒரே மாதிரியான விமர்சனத்தை ஒரு படத்தில் முணுமுணுக்கும் குரலிலும் இன்னொரு திரைப்படத்தில் உரத்த குரலிலும் அமைத்திருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இது இயக்குநரின் வளர்ச்சியைக் காட்டுகிறதா அல்லது பிராமண சமூகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களினால் பெரிய அளவில் எதிர்ப்பு வராது என்கிற நடைமுறை உண்மையை இயக்குநர் புரிந்து கொண்டிருக்கிறாரா என்கிற கேள்வியும் எழுகிறது.

சாதியம் தொடர்பான பல்வேறு சமூகப் போரட்டங்களுக்கும் விழிப்புணர்வுகளுக்கும் பின் பிராமண சமூகத்தின் ஒருகாலத்திய ஆதிக்கம் இன்று தளர்ந்து போயுள்ளது என்றாலும் கூட அதனுடைய சூட்சுமக் கயிறுகள் இன்னமும் அதிகாரத்தின் பின்னால் அமர்ந்து மறைமுகமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்கிற உண்மையை உரத்த குரலில் முழங்கியிருக்கும் இயக்குநரைப் பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் பிராமண சமூகம் விட்டுச் சென்றிருக்கும் அதிகாரத்தையும் துவேஷங்களையும் இன்று இடைநிலை சாதிகள் கைப்பற்றியிருக்கும் நடைமுறை உண்மையையும் தமிழ் திரை துணி்ச்சலாக பதிவு செய்ய வேண்டும்.

'ஒரு விளையாட்டு வீரனின் கனவை சாதிய அரசியல் எப்படிச் சிதைக்கிறது' என்பது இத்திரைப்படத்தின் மையம். எனவே அது தொடர்பான காட்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் தந்து அதை மையமாகக் கொண்டுதான் இத்திரைப்படம் பயணித்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத காதல், அது சார்ந்த கேளிக்கைப் பாடல்கள், இன்ன பிற அபத்தங்கள் ஆகியவற்றை இத்திரைப்படமும் கைக்கொண்டிருக்கிறது என்பதுதான் சோகம். மற்ற காட்சிகள் கூடாது என்பதல்ல. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டும் உருவாகும் ஹாலிவுட் திரைப்படங்களை உதாரணமாகக் கொண்டால் அவை திரைப்படத்தின் மையத்தை நோக்கி விரைவாக நகரும், அதற்கு முக்கியத்துவம் தரும் காட்சிகளை பிரதானமாகக் கொண்ட திரைக்கதையைக் கொண்டிருக்கும். இந்தியாவில் உருவான, ஷாரூக்கான் நடித்த 'சக்தே' திரைப்படத்தையும் உதாரணமாகக் கொள்ளலாம். விளையாட்டுப் போட்டி தொடர்பான காட்சிகள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்படி அதற்குரிய பரபரப்பான கோணங்களுடனும் சூழல்களுடனும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். 'ஜீவா' ஒரளவிற்கே இதை சாத்தியப்படுத்தியுள்ளது.

மேலும் 'கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் உள்ள சாதிய அரசியல்' என்கிற ஒற்றைத்தன்மையுடைய பார்வையைத்தான் இத்திரைப்படம் முன்வைக்கிறது. இந்த விளையாட்டு சமூகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் இதர ஆபத்துக்களைப் பற்றி உரையாடவேயில்லை. இந்தியாவிலுள்ள பல்வேறு பாரம்பரியமான விளையாட்டுக்களை விழுங்கி விட்டுதான் கிரிக்கெட் எனும் விளையாட்டு இன்று அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டே  இதை ஊதிப் பெருக்கி தங்களுக்கான வணிக வாய்ப்பை வளர்த்துக் கொள்கின்றன. ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் ஏறக்குறைய கடவுளுக்கு இணையாக இங்கு வழிபடப்படுகின்றனர். விளம்பரங்களில் தோன்றி தங்களின் முதலாளிகளுக்கு சாதகமாக இயங்குகின்றனர். இவர்கள் விளையாட்டில் சரியாக பங்களிக்காவிட்டால் கடந்த கால சாதனைகள் ஒரே நாளில் மறக்கப்பட்டு மறுநாளே இந்த கடவுள்கள் தூக்கி எறியப்படும் உணர்ச்சி சார்ந்த அபத்தங்களும் நிகழ்கின்றன. நீக்கவே முடியாத ஒரு மதமாக கிரிக்கெட் இந்தியச் சமூகத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த விளையாட்டிற்குப் பின் இயங்கும் பெரும் சூதாட்டமும் பணத்திற்காக நிகழ்த்தப்படும் முன்கூட்டியே திட்டமிட்ட நாடகங்களும் அம்பலமாகியும் கூட  இதன் மீதான பிரேமை குறையவில்லை என்பது நம்முடைய கண்மூடித்தனமான அறியாமையையே சுட்டிக் காட்டுகிறது. கிரிக்கெட் மீது 'ஏற்படுத்தப்பட்டிருக்கும்' பிரியம் அனைவரின் கண்களையும் மறைக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் நிகழும் விளையாட்டுப் போட்டிகள் ஏறக்குறைய போர் சார்ந்த பதட்டத்தையும் மதம் சார்ந்த துவேஷங்களையும் வெளிப்படுத்துகின்றன. வரவேற்பறைகளின் உரையாடலில் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஒரு அந்தஸ்திற்காக கிரிக்கெட்டைக் காணும் கூட்டமும் இருக்கிறது. எப்போதும் குளிரும் மழையும் நீடித்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து போன்ற பிரதேசங்களில் வெயில் காலம் என்பது அவர்கள் மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பு. எனவே வெயிலில் அதிக நேரம் நிற்கும்படியான ஒரு விளையாட்டை உருவாக்குவது தன்னிச்சையாகவே அங்கு  நிகழ்ந்திருக்கும். இதை உணராமல்  உச்சி வெயிலிலும் மண்டை காய்ந்து கொண்டு ஒரு அந்தஸ்திற்காக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களைக் காண வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

கிரிக்கெட் தவிர இன்னபிற விளையாட்டுக்களும் அது சார்ந்த வாய்ப்புகளும் இந்தியாவில் இருக்கிறதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும்படி இது அங்கிங்கெனாபடி எங்கும் நிறைந்துள்ளது. கிராமத்திலுள்ள சிறுவர்கள் கூட கில்லி, பம்பரம், காற்றாடி போன்றவைகளை தூக்கிப் போட்டு விட்டு சிறிய குச்சிகளை வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை பார்த்துப் பழகியே நீண்டகாலமாகி விட்டது. இதர விளையாட்டுக்களில் சாதிக்கும் வீரர்கள் ஊடகங்களாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு மெளன துயரத்துடன் கடந்து செல்கிறார்கள். 'மேரி கோம்' என்கிற திரைப்படம் வந்த பிறகுதான் அப்படியொரு குத்துச்சண்டை வீராங்கனை நம்மிடையே உள்ளார் என்கிற உண்மையே நமக்குத் தெரியவருகிறது.

இப்படி அசுரத்தனமாக வளர்க்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு சமூகத்தின் பல்வேறு கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் அவலத்தையும் அதன் பரிமாணங்களோடு இயக்குநர் இத்திரைப்படத்தில் சித்தரித்திருக்கலாம் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சாதிய அரசியலால் தன்னுடைய விளையாட்டுக் கனவு சிதைக்கப்பட விருந்த துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நாயகன், தன்னுடைய திருமணத்திற்காக தான் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்படும் ஒரு தருணத்தை, அது சார்ந்த மத அரசியலை மிக எளிமையானதொரு மேம்போக்கான உரையாடலில் தாண்டிச் செல்லும் முரணை புரிந்து கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் எனும் மதமே அவனை முழுவதுமாக ஆக்ரமித்திருக்கிறதா?

'பிறநாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகுதான் தோற்றுப் போகிறார்கள். ஆனால் இங்கு வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்றுப் போகிறார்கள்' என்று ஜீவா உச்சக்காட்சியில் முன்வைக்கும் வசனத்தில் உண்மையிருந்தாலும் இங்குள்ள மதம் மற்றும் சாதிய அரசியல் போலவே மேற்கத்திய நாடுகளில் நிற அரசியல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். இது தொடர்பாக பல அயல்சினிமாக்கள் உருவாகியுள்ளன. உதாரணமாக 42 என்கிற ஆங்கிலத் திரைப்படத்தை குறிப்பிடலாம். பேஸ்பால் எனும் விளையாட்டில் நிலவிய நிறவெறி அரசியலை உடைத்துக் கொண்டு சாதித்த கருப்பின இளைஞரான ஜாக்கி ராபின்சன் எனும் முன்னோடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவான திரைப்படமது.

பிரதேச அரசியலில் நிலவும் சாதிய தடைகளைத் தாண்டி ஜீவா, தேசிய கிரிக்கெட் அணியில் இணைந்து விடுவதோடு இத்திரைப்படம் நிறைவுறுகிறது. ஆனால் அங்கும் நிலவும் மத அரசியல், வர்க்க அரசியல் என்று உள்ளிட்ட பல அரசியல் தடைகளயும் அவர் தாண்ட வேண்டியிருக்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சச்சினின் பிரகாசத்திற்குப் பின்னால் கோடிக்கணக்கான சச்சின்கள் வாய்ப்புக் கூட கிடைக்காமல் பல்வேறு திசைகளின் இருளில் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர் என்கிற நிசர்சனத்தை முன்வைக்கும் ஒரு படைப்பை உருவாக்கினதற்காக இயக்குநர் சுசீந்திரனை மனமாரப் பாராட்டலாம்.

(காட்சிப் பிழை, நவம்பர் 2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)    

suresh kannan

2 comments:

kumar said...

*** ஆனால் 'ஜீவா' திரைப்படத்தில் கிரிக்கெட்டில் நிலவும் பிராமண சமூகத்தின் அரசியலை அதற்குரிய அடையாளங்களுடன் தெளிவாகப் புரிவது போல நேரடியாகவே உரையாடியிருக்கிறார். ஒரே மாதிரியான விமர்சனத்தை ஒரு படத்தில் முணுமுணுக்கும் குரலிலும் இன்னொரு திரைப்படத்தில் உரத்த குரலிலும் அமைத்திருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை.***

நீங்கள் தெரியவில்லை என்று சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.
நாலு ஹிட் கொடுத்த இயக்குனருக்கு கிடைக்கும் சுதந்திரம் அறிமுக இயக்குனருக்கு
கிடைத்து விடுமா என்ன?

யாத்ரீகன் said...

விமர்சித்தே ஆகவேண்டுமென்று எழுதப்பட்ட கட்டுரையா ? படத்தை தவிர, வலிந்து திணிக்கப்பட்ட எல்லாவற்றையும் பற்றிய விமர்சனம்