ஒரு தமிழ் சினிமாவை எடுப்பதற்கான அத்தனை மெலோடிராமா கூறுகளும் இந்த
ஸ்பானிய திரைப்படத்தில் உள்ளன. ஆனால் தமிழ் திரைப்படம் மாதிரி எடுக்கவில்லை
என்பதுதான் முக்கியமான செய்தியும் ஆறுதலும். ஓர் ஆணுக்கும் பெண்
குழந்தைக்கும் உள்ள அற்புதமான அன்பையும் உறவையும் சொல்லும் திரைப்படம்.
தந்தை என்று சொல்லாமல் ஏன் ஆண் என்று சொல்கிறேன் என்பது படத்தைப்
பார்த்தால்தான் தெரியும்.
வேலன்டின், பார்க்கிற
பெண்களிடம் எல்லாம் உறவு வைத்துக் கொள்கிறவன். (உடனே டவுன்லோட் லிங்க்கை
தேடாதீர்கள், இந்தக் காட்சிகள் துவக்கத்தில் மிக சொற்பமாகவே வரும்). ஒரு
நாள் திடீரென்று அவனுடைய அறையில் நுழைகிற ஒரு பெண் "இந்தக் குழந்தை உன்
மூலம்தான் பிறந்தது. வைத்திரு. இதோ வருகிறேன்" என்று சொல்லி காணாமற்
போகிறாள். பெண் குழந்தையை வைத்து அவதிப்படும் வேலன்டின் தாயிடம்
ஒப்படைக்க வேண்டி அவளைத் தேடி லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு வருகிறான்.
சந்தர்ப்பவசமாக அவனுக்கு சினிமாத் துறையில் ஸ்டன்ட்மேன் வேலை கிடைக்கிறது.
(இயற்கையில் பயந்த சுபாவமுள்ள அவனை, அவனது தந்தை எப்படி பயத்தைப்
போக்குகிறார் என்பது ஒரு சுவாரஸ்யமான ப்ளாஷ்பேக்). வேலன்டினும் பெண்
குழந்தையுமான மாகியும் ஒருவரோடு ஒருவர் அந்நியோன்யமாகிறார்கள். மிகுந்த
சிரமத்துடன் அவளை வளர்க்கிறான். தாயணைப்பின் ஏக்கத்தை அவள் உணரக்கூடாது
என்பதற்காக, அம்மா எழுதியது போலவே பல கடிதங்களை எழுதுகிறான். அவளுக்காக
போலியாக ஒரு பெண்ணை தாயாக நடிப்பதற்கு தயார் செய்யும்போது உண்மையான தாயான
ஜூலி திரும்ப வந்து விடுகிறாள்.
குழந்தையும் அம்மாவைக்
கண்டவுடன் ஒட்டிக் கொள்கிறது. ஆனால் அவள் தற்காலிகமாகத்தான்
வந்திருக்கிறாள். அவளிடம் ஓர் உண்மையை சொல்ல முயன்று தோற்றுப் போகிறான்
வேலன்டின்.(இந்த பூடகமான உண்மை என்ன என்பது கிளைமாக்சில்தான்
வெளிப்படுகிறது) ஒரு வாரம் கழித்து திரும்பப் போய்விடும் ஜூலி,
மறுபடியும் வக்கில் நோட்டிஸூடன் வருகிறாள், குழந்தையை அவளிடம் ஒப்படைக்கச்
சொல்லி. ஒருவார பழக்கத்தில் குழந்தையை மறக்க முடியவில்லை என்பது காரணம்.
வேலன்டின், ஸ்டண்ட்மேன் எனும் ஆபத்தான பணியில் இருப்பதால் எப்படி அவனால்
குழந்தையை தொடர்ந்து வளர்க்க முடியும் என்பது உப காரணம். வழக்கும் பாசப்
போராட்டங்களும் நிகழ்கின்றன.
தீர்ப்பு வேலன்டினுக்கு
சாதகமாக வந்தாலும் இன்னொரு காரணத்தினால் தோற்றுப் போகிறான். (அது என்ன
காரணம் என்பதும் சஸ்பென்ஸ்). தாயுடன் செல்ல மறுத்து மனம் மாறிய
குழந்தையுடன் சொந்த ஊருக்கு தப்பிப் போகிறான். அங்கும் வருகிறாள் ஜூலி.
இருவரும் ஒருமாதிரியான உடன்படிக்கைக்கு வரும் போதுதான் எதிர்பாராத (அல்லது
எதிர்பார்த்திருந்த) அந்த மரணம் நிகழ்கிறது.
()
()
இந்தத்
திரைப்படத்தின் திரைக்கதையில் அமைந்துள்ள இயல்பான நெருடாத திருப்பங்களும்,
வேலன்டின் தொடர்பான மென்நகைச்சுவைக்காட்சிகளும் இதை ஓர் அற்புதமான
அனுபவமாக்குகிறது. குறிப்பாக மாகியாக நடித்துள்ள அந்த பெண் குழந்தை
அசத்தியிருக்கிறாள். இயக்குநர் எப்படி காட்சிகளை அவளுக்கு விவரித்து வேலை
வாங்கியிருப்பார் என்பதை யூகித்தாலே பிரமிப்பாக இருக்கிறது. இது ஒருவேளை
கடத்தப்பட்டு தமிழில் வெளிவந்தால் அதில் நிச்சயம் இருக்கப் போகும்
பாடலுக்காக நான் யோசித்து வைத்திருக்கும் ஓர் அட்டகாசமான பல்லவி வரியை
இலவசமாக தருகிறேன் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.
வார இறுதிக்கேற்ற ஓர் அற்புதமான ஃபீல் குட் திரைப்படம்.
suresh kannan
2 comments:
தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் பாச உறவை பற்றி, சோகத்தை பிழியாமல், பொதுவுடமை பேசாமல் நல்ல நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார். (தங்கமீன்களை வறுத்தவர்கள் காண வேண்டிய படம்).
முதல் 5-10 நிமிடங்கள் தவிர்த்து, குழந்தைகளும் பார்க்க கூடிய படம்.
அப்பா அம்மாவுக்கு இந்த படத்தை ஆங்கில subtitleகளுடன் போட்டுக்கொடுத்தேன்.. மிகவும் இரசித்து பார்த்தார்கள்..
பரிந்துரைக்கும் நன்றி :-)
Post a Comment