Saturday, October 25, 2014

பொறியாளன் - 'பொல்லாதவன் ரீமிக்ஸ்'இன்றைய தமிழ் சினிமாவின் புதிய அலை இளம் இயக்குநர்கள் மீது பொதுவானதொரு புகாரிருக்கிறது. 'ஒரு மூத்த இயக்குநரிடம் உதவி இயக்குநராக இணைந்து  எவ்வித அனுபவங்களையும் கற்றல்களையும் பெறாமல் திரைப்படக் கல்வியின் மூலமும் அயல் சினிமாவின் டிவிடிக்களின் மூலமும் பயின்று குறும்படம் உருவாக்கி அதையே தம்முடைய அடையாள வாய்ப்பாக கொண்டு நேரடியாக இயக்குநராகி விடுகிறார்கள் என்பதே அது. இதன் மூலம் ஒரு சினிமாவை உருவாக்குவதின் பின்னணியில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை அறியாமலும் தமக்கென்று ஒரு தனித்தன்மை ஏதும் அல்லாமலும் மேற்குலக படைப்புகளின் அசட்டு நகல்களாகவே இவர்கள் இருக்கின்றனர் என்பதான மனப்பதிவு உள்ளது. இதில் ஒரு பகுதி உண்மையுள்ளதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் அதே சமயத்தில் மூத்த இயக்குநர்களிடமிருந்து தொழில் கற்றுக் கொண்டு வெளிவரும் இயக்குநர்களிடமும் ஒரு பிரச்சினையுள்ளது. தங்கள் குருமாார்களின் பாசறைகளில் பயின்றதை தாமும் அப்படியே ஏறத்தாழ அதே பாணியில் இம்மி பிசகாது பிரதிபலிக்கிறார்கள். இதனால்தான் பாலச்சந்தரின், பாரதிராஜாவின், மணிரத்னத்தின் மோசமான பிம்பங்களும் வழித்தோன்றல்களும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தொடர்ச்சியாக இறைபட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த வாரிசு முறையிலுள்ள அபத்தத்தை முதன்முறையாக உடைத்தவர் இயக்குநர் பாலா. பாலுமகேந்திராவின் அழகியலில் இருந்தும் மென்மையிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டு வன்முறையும் இருண்மையும் கொண்ட உலகத்தை தம்முடைய பிரத்யேக பாணியில் தம் படைப்புகளில் வெளிப்படுத்தினார். பாலுமகேந்திராவின் இன்னொரு சீடரான வெற்றிமாறனும் குருவின் பாணியிலிருந்து மாறுபட்டு, வன்மம் சாாந்து இயங்கும் ஒரு மனதை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையுடன் 'ஆடுகளத்தை' உருவாக்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் 'பொல்லாதவன்'.  இத்தாலிய நியோ ரியலிசத்தின் துவக்க அடையாளமான 'பைசைக்கிள் தீவ்ஸ்' மற்றும் சீன திரைப்படமான 'பீஜிங் பைசைக்கிள்' ஆகியவற்றின் பாதிப்பில் உருவானது. ஆனால் அயல் சினிமாக்கள் அந்தந்த காலகட்டத்து அரசியல் பின்புலத்துடனும் அது சார்ந்த அழுத்தங்களுடனும் காரணங்களுடனும் உருவாக்கப்படும் போது அது ஏதுமில்லாமல் அதன் கதைப் போக்கை மாத்திரம் எடுத்துக் கொண்டு தமிழ் சினிமாவின் சம்பிரதாயமான விஷயங்களை இட்டு நிரப்பி உருவாக்கப்பட்டது 'பொல்லாதவன்'.

சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு திரைப்படம் 'பொறியாளன்'. இதன் தயாரிப்பாளர் வெற்றிமாறன். இவரிடம் உதவியாளர்களாக இருந்த மணிமாறன் எழுத தாணுகுமார் இயக்கியுள்ளார். ஏறத்தாழ பொல்லாதவனின் திரைக்கதையை அப்படியே தோசை மாதிரி திருப்பிப் போட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் 'பொறியாளன்'. குருமார்களை அப்படியே நகலெடுப்பதால் வரும் பிரச்சினையிது. ஆனால் பொல்லாதவனில் இருந்த சுவாரசியமோ உருவாக்குவதின் மெனக்கெடல்களோ 'பொறியாளனில்' ஏதுமில்லை என்பது துரதிர்ஷ்டமானது. திருடப்படும் பைக்குகளின் கதி என்னவாகிறது என்பதையும் அதற்குப் பின்னால் இயங்கும் சந்தையையும் பற்றிய நுண்தகவல்கள் பொல்லாதவனில் விவரமாக பதிவாகியிருக்கும். அது போன்று ரியல் எஸ்டேட் துறையில் நிகழும் தகிடுதத்தங்களைப் பற்றிய விவரங்களுடன் பயணிக்கிறது 'பொறியாளன்' திரைக்கதை. இது ஒன்றுதான் இரண்டிற்குமான வேறுபாடு.

***

இளம் வயதுக்கேயுரிய கனவுகளுடன் உத்வேகங்களுடன் ஒரு மிகச்சிறந்த பொறியாளனாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறான் சரவணன். 'ஒரு நகரை நாம் எப்படி நினைவு கொள்கிறோம்? அதனுள் இருக்கும் முக்கியமான கட்டிடங்களைக் கொண்டுதான். அவ்வாறு வருங்காலம் நினைவில் வைத்துக் கூடிய ஒரு சாதனை கட்டிடத்தை உருவாக்க வேண்டும்' என்பது சரவணனின் கனவு. ஆனால் நடைமுறையில் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அவனை கசப்படையச் செய்கின்றன. சுய முயற்சியில் ஒரு வீட்டுக்குடியிருப்பை உருவாக்க முனைகிறான். ஆனால் இருக்கிற பணம் போதவில்லை. அவனுடைய நண்பனொருவன் கந்து வட்டி தொழில் செய்யும் ரவுடியிடம் உதவியாளனாக இருக்கிறான். ஒரு கொலைவழக்கில் ரவுடி சிறைக்குப் போய்விட அந்தச் சந்தர்ப்பத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொண்டு கந்து வட்டிக்காக தம்மிடமுள்ள பணத்தை சரவணணுக்கு தர முன்வருகிறான். ரவுடி சிறையிலிருந்து திரும்புவதற்குள் பணத்தை திருப்பி விட வேண்டும் என்று ஏற்பாடு. அலைந்து திரிந்து நகருக்குள் ஒரு நிலத்தை தேர்ந்தெடுத்து வாங்கி தொழில் துவங்க நிமிரும் போதுதான் பிரச்சினை வெடிக்கிறது. வாங்கின நிலத்தில் சட்டச்சிக்கல். முதலீடாக போடப்பட்ட பெரும்பணத்தை மீட்கும் வழி தெரியவில்லை. இதற்குள் சிறைக்குச் சென்ற ரவுடியும் திரும்புகிறான். சரவணணும் அவனது நண்பனும் இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கின்றனர் என்பதாக இறுதிப்பகுதி.

பொல்லாதவனில் தனுஷ் பைக்கை இழக்கிறார் என்றால் இதில் சரவணன் பணத்தை இழக்கிறார். அதில் பைக்கை மீட்பதற்கான போராட்டங்களைில் மாஃபியா கும்பலை எதிர்கொள்ள நேர்வதைப் போலவேதான் இதிலும். இக்கட்டான தருணங்களில் நாயகியின் சென்ட்டிமென்டையும் ரொமான்ஸையும் எரிச்சலுடன் சமாளிக்க நேரும் சம்பவங்களில் கூட ஒற்றுமை. ஆனால் பொல்லாதவனில் இருந்த அழுத்தமும் சுவாரசியமும் பரபரப்பும் துல்லியமும் நம்பகத்தன்மையும் பொறியாளனில் பெரும்பாலும் இல்லை. 'இப்ப என்ன செய்யறது' என்று விழிக்கிற நாடகத்தனமான மொண்ணைத்தனத்துடன் காட்சிகள் நகர்கின்றன. அப்படியே திரைக்கதை சற்று பரபரப்பாகும் போது, ஸ்பீட் பிரேக்கரைக் கண்டு நாராசமான ஒலியுடன் போடப்படும் சடன் பிரேக்குகளைப் போல செயற்கையாகத் திணிக்கப்பட்ட பாடல்கள் இடையூறாகத் தோன்றி எரிச்சலூட்டுகின்றன. உலகத்தின் கடைசி மனிதனைக் கொண்ட திரைக்கதையாக இருந்தாலும் கூட அதிலும் கூட டூயட் பாடல்களையும் ஐட்டம் ஸாங்குகளையும் இணைத்து விடும் சாமர்த்தியத்தை தமிழ் சினிமாக்கள் கைவிடும் காலம் என்று மலருமோ என்று தெரியவில்லை.

பரபரப்பானதொரு பயணத்திற்கு பார்வையாளர்களை தயார்ப்படுத்துகிறோம் என்கிற நோக்கில் இணைக்கப்பட்ட அபத்தமான புள்ளியிலிருந்து படம் துவங்கினாலும் ரியல் எஸ்டேட் எனும் பிரம்மாண்ட சிலந்தி வலையின் ஒருபகுதியை அம்பலப்படுத்துவதில் 'பொறியாளன்' சற்று வெற்றி பெற்றிருக்கிறது. இதன் பின்னே நிகழும் பித்தலாட்டங்கள், வாய்ப்பந்தல் போடும் டுபாக்கூர் மனிதர்கள், கந்துவட்டி ரவுடிகள், குழப்பமான சட்ட நடைமுறைகள் ஆகியவை தொடர்பான காட்சிகள் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வீடோ நிலமோ வாங்குவதென்பது ஒவ்வொரு நடுத்தரவர்க்க மனிதனின் கனவு. அதற்காக அவன் எந்தவித தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறான். இந்த உணர்வை ரியல் எஸ்டேட் வியாபார மனிதர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்குப் பின்னணியில் இயங்கும் அதிகார வர்க்கம், மாஃபியா உலகம், போன்றவை தங்களின் இரையை 'சொந்த வீடு' கனவுகளின் மூலம் எளிதாகப் பிடிக்கின்றன. வாழ்நாள் முழுக்க சுமக்க நேரும் கடனைக் கொண்டு ஒரு வீட்டை அமைக்க நினைத்தாலும் குழப்பமான நடைமுறைகளின் மூலம் அதை சாத்தியப்படுத்துவது என்பது அத்தனை எளிதாக இல்லை. திரிசங்கு சொாக்கம் போல தாம் வாங்கிய நிலத்தை வேறு யாரும் சொந்தம் கொண்டாட மாட்டார்களே என்கிற பதட்டம் உள்ளுக்குள் நீடித்துக் கொண்டேயிருக்கிறது.

ஒரு பழைய மாணவர்கள் சந்திப்பில் தம்முடைய சக பொறியாள நண்பர்களைச் சந்திக்கிறான் சரவணன். தாம் பயின்ற துறையில் வசதியான எதிர்காலம் ஏதுமில்லாததால் வேறு துறைக்கு மாறி சம்பாதிப்பதில் அவனுடைய நண்பர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் குற்றவுணர்ச்சியும் இருப்பதில்லை. ஏறத்தாழ பங்குச் சந்தை உலகத்தைப் போன்றே கல்வித்துறை சார்ந்த உலகமும் இயங்குகிறது. அன்றைக்கு எது உச்சப் புள்ளியை நோக்கி நகர்கிறதோ அதன் பின்னேயே எல்லோரும் ஓடுகிறார்கள். ஒரு காலத்தில் உயர்நடுத்தர வர்க்க மனிதர்களுக்கு டாக்டராவது என்பது ஒரு கனவு. அதை எட்டிப்பிடிக்க முடியாதவர்கள் வங்கிப் பணிகளின் பின் ஓடினார்கள். பிறகு என்ஜினியரிங். இப்போது கணினித்துறை. ஒவ்வொரு தனிமனிதனும் தமக்கு விருப்பமான லட்சிய உலகை நோக்கி பயணிக்காமல் பொருளாதார நோக்கில் தங்களின் கனவுகளையும் தனித்தன்மைகளையும் கலைத்துக் கொண்டு ஓடுவதால் எதிலும் சாதிக்க முடியாத ஒரு மொண்ணைத்தனமான சமூகமாக மாறிக் கொண்டு வருகிறோம் என்பது பொறியாளன் போகிற போக்கில் சொல்லும் ஒரு நீதி. ஆனால் இப்படி எதையும் மையப்படுத்தாமல் தமிழ் சினிமாவின் பிரத்யேக விதிகளுக்குள் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்தினாலேயே இத்திரைப்படம் அதன் அந்தஸ்தை எட்டிப்பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது.

இத்திரைப்படத்தின் முக்கியமான பங்காக நடிகர் மோகன்ராமனை சொல்லலாம். மகாநதியில் இயக்குநர் ஹனீபா செய்திருக்கும் அபாரமான நடிப்பிற்கு ஈடானதொரு பாத்திரம். மோகன்ராமன் அற்புதமாக நடித்திருக்கிறார். இவர் நல்லவரா கெட்டவரா, இவர் சொல்வது உண்மையா, பொய்யா என்கிற குழப்பமான நிலையிலேயே திரைக்கதையை அமைத்திருப்பது சுவாரசியம்.

தன்னுடைய பொறியாளன் கனவை அடைவதற்குள் ஓர் இளைஞன் எத்தனை விதமான சிக்கல்களை இத்திரைப்படத்தில் சந்திக்க நேர்கிறதோ அதே விதமான சிக்கல்களை ஒரு இளம் தமிழ் சினிமா இயக்குநரும் எதிர்கொள்ள நேர்கிறது. அவ்வாறில்லாமல் அவனுக்கு முன்புள்ள நடைமுறைத் தடைகள் விலகி கைவிலங்குகள் கழற்றப்பட்டு சுதந்திரமாக தம் கனவுகளை நோக்கி இளைய தலைமுறை பயணிக்கக்கூடிய காலமும் சூழலும்  சாத்தியப்படும் போது சிறந்த கட்டிடங்களும் சினிமாக்களும் உருவாகும். 

(காட்சிப் பிழை, அக்டோபர்  2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)    

suresh kannan

No comments: