டாம் ஹாங்ஸ் எப்போதுமே எனக்கு பிடித்தமானதொரு நடிகர். எனவே கேப்டன் பிலிப்ஸ் பார்த்தேன். நல்லதொரு திரில்லர். சோமாலிய கடற்கொள்ளையர்கள் அமெரிக்க சரக்கு கப்பலொன்றை கடத்தும் முயற்சியின் தொடர்ச்சியில் அதன் கேப்டனை சிறைபிடிக்கின்றனர். அவரை மீட்கும் முயற்சியை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள். உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 'இந்தப் படத்தில் கப்பலின் கேப்டன் பாத்திரத்தில் நடித்த டாம் ஹாங்ஸை' ஒரு ஹீரோ போல் சித்தரித்திருக்கிறார்கள், உண்மைச் சம்பவங்கள் வேறு மாதிரியாக இருந்தன" என்று நிஜமான கடத்தலின் போது கப்பலில் இருந்த சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். என்றாலும் திரைப்படத்தில் டாம் ஹாங்ஸ், தமிழ்நாட்டு கேப்டன் விஜய்காந்த் போல் பாய்ந்து எட்டி உதைத்தெல்லாம் சண்டை போடாமல் அந்தச் சூழலில் ஒரு வயதானவர் என்ன செய்ய முடியுமோ அதை மாத்திரமே செய்திருக்கிறார்.
டாம் ஹாங்ஸ் ஏன் அற்புதமான நடிகர் என்பதற்கான நிரூபணம் படத்தின் இறுதிக்காட்சியில் இருக்கிறது. கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட பிறகு அந்த அதிர்ச்சியையும் திகைப்பையும் இத்தனை துல்லியமாக ஒருவரால் நடிப்பில் வெளிப்படு்த்த முடியுமா என ஆச்சரியமாக இருக்கிறது. காட்சிகளின் நம்பகத்தன்மையை உருவாக்க அவர்களின் யோக்கியமான மெனக்கெடல்களை பிரமித்தேன்.
டாம் ஹாங்ஸ் ஏன் அற்புதமான நடிகர் என்பதற்கான நிரூபணம் படத்தின் இறுதிக்காட்சியில் இருக்கிறது. கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட பிறகு அந்த அதிர்ச்சியையும் திகைப்பையும் இத்தனை துல்லியமாக ஒருவரால் நடிப்பில் வெளிப்படு்த்த முடியுமா என ஆச்சரியமாக இருக்கிறது. காட்சிகளின் நம்பகத்தன்மையை உருவாக்க அவர்களின் யோக்கியமான மெனக்கெடல்களை பிரமித்தேன்.
ஹாலிவுட்காரர்களுக்கு வில்லர்களாக சித்தரிக்க ஏதாவது ஒரு உருவகம் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ருஷ்யர்கள், இசுலாமியர்கள், எதிரி நாடுகளின் அதிபர்கள்.. இந்த விஷயத்தில் அவர்களுக்குப் பஞ்சமேயிருக்காது. உலக வரலாறு அவர்களுக்கான வாய்ப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டேயிருக்கும் அந்த வகையில் இப்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள். உலகத்தைக் காக்க வந்த பெரியண்ணன் அவதாரத்தை அமெரிக்கத் திரைப்படங்கள் தொடர்ச்சியாக கட்டமைப்பதை இந்த திரைப்படமும் பின்பற்றுகிறது.
அணுஉலைகளின் கழிவுகள் சோமாலியக் கடற்கரைகளில் கொட்டப்படுவது பற்றி, சர்வதேச கடல் எல்லையை மீறி பன்னாட்டு நிறுவனங்கள் பகாசுர கப்பல்கள் மீன்வளத்தை சுரண்டிச் செல்வதின் மூலம் ஏழை நாடுகளின் வயிற்றில் அடிப்பது பற்றி, வளர்ந்த நாடுகளின் ஆயுத வியாபாரிகள் தங்களின் விற்பனைக்காக இவ்வாறான அரசியல் குழப்பமுள்ள நாடுகளில் கலகத்தைப் பெருக்கும் அயோக்கியத்தனங்கள் பற்றி ஏதும் உரையாடமல் 'வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாண்டா' என்று கருப்பு வெள்ளையாக சம்பவங்களை சித்தரிக்கும் அதே முறையேயே இந்த ஹாலிவுட் திரைப்படமும் பின்பற்றுகிறது என்பதுதான் இதிலுள்ள அரசியல் ரீதியான குறைபாடு. (மீன்பிடித்தல் அராஜகம் பற்றிய ஒரே ஒரு சிறுவசனம் விதிவிலக்கு).
இந்தப் பிரச்சினைகளைப் பற்றி நமக்கென்ன? நல்ல திரில்லர். சுவாரசியமாக ரசிக்கலாம்.
suresh kannan
1 comment:
Suresh Kannan, I have not yet watched the movie. Probably will watch it when it comes on DVD. But there is a good documentary called "Somali Pirate Takedown: The Real Story". I watched it. More information on it can be found at, http://www.imdb.com/title/tt1459466/
- PK Sivakumar
Post a Comment