Tuesday, January 14, 2014

ஜில்லா - அழகியல் சினிமாவின் வசீகர கனவுப் பொய்கை



தலைப்பைக் கண்டு பயந்து விடாமல் மனத்துணிவுடன் வாசிக்க உள்ளே நுழைந்தைமைக்காக முதற்கண் பணிவுகலந்த என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நகைச்சுவை என்கிற tag-ல் போடப்பட்டால் கூட அது நகைச்சுவையாக இருக்காதோ என்கிற சந்தேக மனப்பான்மையுடன் அணுகுகிற நகைச்சுவை வறட்சி கொண்ட தமிழ் கூறும் நல்லுலகில் இந்தக் கட்டுரை எவ்வாறு புரிந்து கொள்ளப்படுமோ என்கிற திகிலுடன் தொடர்கிறேன்.

ஜில்லா திரைப்படம் கண்டு மகிழ்ந்தேன். நிற்க, இங்கே வணிக நோக்கு சினிமாக்களின் அபத்தங்களைப் பற்றியோ அதன் மூலம் பார்வையாளனாக எனக்கு நிகழும் மனத்துன்பியல்களையோ அல்லது விஜய்யையும் அவர் படங்களையும் பிரத்யேகமாக குறி வைத்து கிண்டலடிப்பதோ என் நோக்கமல்ல. ஒரு அப்பட்டமான வணிகமசாலா திரைப்படத்தில் குரசேவாவின் குறியீட்டு படிமங்களை தேடிப் பார்க்குமளவிற்கு புத்தி பேதலித்தவன் அல்ல நான். உடுப்பி ஹோட்டலில் நுழைந்து வெண்பொங்கல் ஆர்டர் செய்து விட்டு அதில் முந்திரிக்குப் பதிலாக லெக்பீஸ் இல்லையே என்று புகார் செய்வதற்கு சமமான அபத்தமது. நீண்ட காலம் கழித்து ஒரு தமிழ் சினிமாவைப் பற்றி ஜாலியாக ஒரு கட்டுரை எழுதுவதே உத்தேசம். எனவே விசய் ரசிகர்கள் உட்பட மற்ற அனைவருமே எவ்வித கலக்கமும் அன்றி இந்தக் கட்டுரையை வாசித்து மகிழலாம்.

ஜில்லா திரைப்படம் அதன் பிரத்யேக பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது. விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை குறைவில்லாமல் பூர்த்தி செய்திருக்கிறது. தங்களின் முயற்சியில் விஜய்யும் இதன் இயக்குநரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

 'இந்தப் பையன் தமிழ் சினிமாவில் பெரிய ஆளாக வருவான்' - என்று விஜய் நடிக்கத் துவங்கிய காலத்திலேயே மாண்புமிகு மாணவனின் ஒரு ஸ்டில்லை வைத்தே தீர்க்க தரிசனம் கூறிய சுந்தரராமசாமியின் கூற்றை, (நன்றி: நினைவின் நதியில்) விஜய் வருடத்திற்கு வருடம் மெய்ப்பித்துக் கொண்டே போகிறார். (புளியோதரையில் பட்டை லவங்க மசாலாக்களைப் போட்டு அதை பிரியாணியாக்க முயல்வது போல் இலக்கிய எழுத்தாளர்களின் சில பெயர்களை தூவி விட்டால் அது இலக்கிய கட்டுரையாக மலரக்கூடும் என்கிற நடைமுறை தந்திரத்தைத்தான் நானும் முயன்று பார்த்திருக்கிறேன், கலங்க வேண்டாம்).

()


80-களின் தமிழ் சினிமாக்கள் போலவே இந்த சமகால திரைப்படமும் நாயகனின் சிறுவயதுக் காட்சிகளுடன் துவங்குகிறது. தனது தந்தை காவல்துறை அதிகாரி ஒருவரால் படுகொலை செய்யப்படுவதை கண்ணெதிரே பார்த்ததின் காரணமாக காவல்துறை மீதும் காக்கி நிறத்தின் மீதும் வெஞ்சினமும் வெறுப்பும் கொள்கிறார் சிறுவிஜய். தமிழ் சினிமா நாயகர்களின் அடிப்படைத்தகுதியான 'அநாதை' என்கிற நிலையை விஜய் அடைவதால், தன் குடும்பத்தைக் காப்பாற்றிய சிறுவன் என்கிற காரணத்தின் மீது எழுந்த அபிமானத்தில் அந்த ஊரின் தாதாவான மோகன்லால் இவரை தத்தெடுத்துக் கொள்கிறார். எவ்வித குற்றவுணர்வுமில்லாமல் தாதாவின் தீயசெயல்களுக்கு ஜாலியாக துணைபோகிறார் விஜய். ரவா உப்புமாவின் மீது வெறுப்புற்று வீட்டை விட்டு வெளியேறி வேறு உணவு தேடிப் போகும் ஒருவன் செல்லுமிடமெல்லாம் ரவா உப்புமாவால் துரத்தப்பட்டு கடைசியில் வீட்டில் செய்யப்பட்ட உப்புமாவையே உண்ண நேரும் ஒரு கர்ணபரம்பரைக் கதை  போல் காவல்துறையின் மீதும் காக்கி நிறத்தின் மீது கடும் வெறுப்பு கொண்டிருக்கும் விஜய் சந்தர்ப்ப சூழ்நிலையால் உலகிலேயே மிகப் பெரிய காவல்துறை அதிகாரியாக ஆகும்படியான திடுக்கிடும் திருப்பத்துடன்  திரைக்கதை சிறப்பாக அமைந்திருக்கிறது.

பெருவிஜய் அறிமுகமாகும் துவக்க காட்சியே அமர்க்களம். கிருத்துவ சேவை அமைப்பொன்று (மத நுண்ணரசியல் தேடுபவர்களுக்கான வாய்ப்பு)  தங்களது மருத்துவமனையை ரவுடிகள் கைப்பற்றிக் கொள்ளுவதால் காவல்துறையிடம் புகார் தருகிறது. போலீஸ்காரர்கள் அனைவரையும் பொறிபறக்க துரத்தி விடுகிறார் ரவுடிசார். (எதற்கு வம்பு). சட்டரீதியான இந்த முயற்சி சரிவராமல் போகவே தாதா மோகன்லாலிடம் வந்து முறையிடுகிறது கிருத்துவ அமைப்பு. லால் 50 பேர்களை அனுப்புகிறார். அவர்களும் ரவுடிசாரிடம் தோற்றுப் போய் சுவர் உடைபட பறந்து வெளியே வந்து விழுகிறார்கள். அதன்பிறகுதான் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த முடிவுசெய்கிறார் மோகன்லால். அந்த பிரம்மாஸ்திரம்தான் விஜய்.

'கலெக்டராலயே சாதிக்க முடியலையாம். நம்ம கிட்ட வர்றாங்க...டைவர்ஸ் கேசெல்லாம் வருதுப்பா.. போனை எடுத்தாலே நச்சு நச்சு...ன்னு... என்கிற கவுண்டரின் வசனம் உடனடி நினைவிற்கு மனதில் தோன்றினாலும் அதை அழித்து விட்டு சராசரி மனநிலையோடு பார்க்கும் போது பரவசமாக இருக்கிறது.  சாமான்யர்கள் யாராலும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்துவதுதானே நாயகனுக்கு முன்னுள்ள சவால் என்கிற அடிப்படையை பூர்த்தி செய்யும் விதமாக அந்த ரவுடிக்கூட்டத்தை துரத்தி  அநீதியை நிலைநாட்டுகிறார் விஜய். (தப்பெல்லாம் அவர் மட்டும்தான் செய்வாராம்).

காக்கி நிறத்தின் மீது கடும் கடுப்பு கொண்டிருக்கும் கதாநாயகன், தன்னுடைய பால்ய நண்பனொருவன் காவல்துறையில் இணைந்து அதற்கான சீருடையை முதன்முதலில் இவரிடம் காண்பிக்க முன்வரும் போது கோபம் தாங்காமல் அவர் மீது பாய்ந்து சீருடையைக் கிழித்து முக்கால் நிர்வாணமாக்கி விடுகிறார். படத்தின் நாயகியான காஜல்அகர்வாலும் இது போன்றதொரு காக்கி சீருடையில் அறிமுகமாகும் போது, பால்ய நண்பனுக்கு நிகழ்ந்த அதே முக்கால் நிர்வாண விபத்து இவருக்கும் நிகழாதா என்று பாலியல் வறட்சிகொண்ட தமிழ் சமூகம் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, தான் ஒரு தமிழ் கலாசார வெளியில் திரையிடப்போகும் பிரதி ஒன்றினுள் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற தன்ணுணர்வு காரணமாக அந்த விபத்தை தவிர்த்து விடுகிறார் விஜய். வாழ்க. (அல்லது ஒழிக).

()

படத்தில் மோகன்லால் சிவனாகவும் விஜய் சார் சக்தியாகவுமான உருவகப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இந்தப் படத்தை எதிர்ப்பதற்கு இந்து அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு இந்தப் படத்தில் மறைமுகமாக உறைந்திருக்கிறது. இப்படியொரு டம்மியான சிவனை தமிழ் சினிமா உலகம் கண்டதேயில்லை. "நான் சிவன்டா.. அழிக்கப் பிறந்தவன்" என்று ஆக்ரோஷமாக முழங்கி விட்டு உடனேயே  தொண்டைக் கமறலுடன் ஒடுங்கும் ஹாலிவுட் சினிமா கம்பெனியின் சிங்கம்  போல அமைதியாக அமர்ந்து விடும் மோகன்லால் ஏன் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டார் என்றே தெரியவில்லை. சேட்டனுக்கு அப்படியென்ன பணப்பிரச்சினை? அப்படியே இருந்தாலும் அவரே பரிந்துரைக்கும் நகைக்கடன் நிறுவனம் இருக்கிறதே...

லாலேட்டன் ஏதோ சில திரைப்படங்களில் 'பாண்டிகளை' அவமதித்து வசனம் பேசியதால் அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவமானப்படுத்தி அனுப்புவதுதான் இயக்குநரின் நோக்கமென்றால் அதில் அவர் கடுமையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்றே பொருள். அந்தளவிற்கு லாலேட்டன் டம்மியாக இருக்க, அதை ஈடுசெய்யும் விதத்தில் ஆழிப்பேரலையாக அதகளம் செய்கிறார் விஜய் சார் அவர்கள். 'ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் முடிவெட்டும் போது தலைகுனிந்துதான் ஆக வேண்டும்' என்கிற மேற்கோளுக்கிணங்க உலகமே போற்றிப் புகழும் நடிகனாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்குள் வந்தால் அதன் பிரத்யேக கட்டமைப்பிற்குள் புழுங்கி நாறத்தான் வேண்டும். அத்தனை திறமையாக கட்டப்பட்டது அது.

விஜய் அதியிளமையாக சூப்பராக தோற்றமளிக்கிறார்.. நடனமாடுகிறார், சண்டையிடுகிறார், சவால் விடுகிறார். எந்தக்குறையும் வைக்கில்லை. காமெடிதான் சற்று மட்டாக இருக்கிறது. விஜய் படங்கள் என்றாலே காமெடிதானே என்று அவரைப் பிடிக்காதோர் சங்கம் வசைபாடினாலும் காமெடி ஏரியாவிலும் வெளுத்து வாங்கும் விஜய் இதில் சற்று அடக்கியே வாசிக்கிறார். தோற்றத்தின் விஷயத்தில் இவரின் சமகால போட்டியாளரான அஜித் அவர்கள் ஏன் இத்தனை அலட்சியமாக இருக்கிறார் என்பதுதான் தெரியில்லை. 'சால்ட் அண்ட் பெப்பர்' தலைமுடியுடன் 'ஜார்ஜ் க்ளூனி' மாதிரி இருக்கிறீர்கள் என்று அவரை நன்றாக ஏற்றி விட்டிருக்கிறார்கள் போல. தலையில் சால்ட் அதிகமாக இருப்பதுதான் பிரச்சினை. 'உங்கள் டூத்பேஸ்டில் உப்பிருக்கா?' என்பது பழகியிருந்தாலும் தலைமுடியிலும் சால்ட் அதிகமிருப்பது சரியில்லை. இவர் தமன்னாவுடன் டான்ஸ் ஆடும் காட்சியைப் பார்க்கும் போது 'இருவரையும் வைத்து தங்கமீன்கள் திரைப்படம் எடுத்திருக்கலாம்' என்று அஜித்தைப் பிடிக்காதோர் சங்கம் கூறுவதில் அவர்களுக்கிருக்கும் வன்மத்தையும் தாண்டி உண்மையிருப்பதையும் நமட்டுச் சிரிப்புடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

காவல்துறை சீருடைக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு பாரம்பரியமான மரியாதையும் கட்டுப்பாடும் இருக்கிறது. நாயகன், எதிர்நாயகனின் குணாதிசயத்தோடு நடிக்கும் திரைப்படங்களில்  போலீஸ் சீருடையில் வரும் நபருக்கு மதிப்பளித்து அது நீக்கப்பட்ட பிறகே சண்டையிடத் துணிவான். (தொப்பியைக் கழற்றினால் போதும்). போலவே அந்தச் சீருடையை அணியும் நாயகர்களுக்கு அதற்குப் பிறகு தன்னிச்சையாக துணிச்சலும் உடம்பு முறுக்கேறலும் தியாகவுணர்வும் நேர்மையும் பெருக்கெடுத்து ஓடும். இத்திரைப்படமும் அந்த பாரம்பரிய விதிகளுக்கு கட்டுப்பட்டே இயங்குகிறது.

அதுவரை தாதாவாகிய தன்னுடைய வளர்ப்புத்  தந்தையுடன் இணைந்து கடத்தல்களையும் அநீதிகளையும் செய்து வந்திருந்த நாயகன் (அவர் செய்வதால் அது நமக்கு நன்மையாகத்தான் தெரியும்) காவல்துறை சீருடை அணிந்தவுடன் ஒரு பெரிய விபத்தில் இழக்கும் மனித உயிர்களையும் அதற்குப் பின்னே புதைந்து போகும் ஆயிரம் கனவுகளையும் கண்டவுடன் மாமன்னர் அசோக சர்க்கவாத்தி போல மனம் வெதும்பி திருந்தி, தன் தாதா தந்தையையே எதிர்க்கத் துணிகிறார். முதல் காட்சியிலேயே மோகன்லாலும் விஜய்யும் இணைந்து வாஞ்சையோடு ஆடும் நடனக் காட்சியைக் கண்டவுடனேயே, பிறகு இருவரும் சண்டைக் கோழிகளாக சிலுப்பிக் கொள்ளப் போகிறார்கள் என்பதையும் கிளைமாக்சில் மீண்டும் இணைந்து விடப் போகிறார்கள் என்பதையும் நீங்கள் யூகிக்காவிட்டால், தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியில்லாத ஒரு நபராக மாறி விடுகிறீர்கள்.

எல்லாப் பாடல்களுமே கடுமையான ராக் இசையின் பின்னணியில் நூறு எல்.ஆர்,ஈஸ்வரி இணைந்து பாடுவது போன்ற அதிதீவிர கடுமைத்தன்மையுடன் இருக்கின்றன. காலம் காலமாக நூற்றிருபது வார்த்தைகளுக்குள் இயங்கும் தமிழ் சினிமாப் பாடல்களை வைத்து ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கிறாராம் வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி. அது போலவே சமகால இசையமைப்பாளர்களும் தான் விரும்புகிற நகலெடுக்கிற எல்லா ஒலிகளையும் மிக்சியில் போட்டு அரைத்து நாராசமான சங்கீதத்தை உருவாக்குவதில் பாண்டித்தியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிலும் டிஎஸ்பி என்கிற ஒருவர் ஒரே ஒரு டப்பாங்குத்து டியூனை வைத்துக் கொண்டு ஆந்திராவையே ஆட்டிப் படைக்கும் அதகளம் இருக்கிறதே.  சொல்லி மாளாது..குரங்கொன்று கைக்கு வந்தபடி டைப்படித்து தற்செயலாக அதில் ஒன்று நவகவிதையாக உருவாகி விடுகிறது என்று நவீன கவிஞரின் மீது சொல்லப்பட்ட புகாரைப் போலவே இதிலும் அப்படி ஏதாவது ஒரு சகிக்கக்கூடிய பாடல் வந்து விடுகிறது.


சரி போதும் நிறுத்திக் கொள்கிறேன். எனக்கு வெகுஜன சினிமாவின் மீது எவ்வித கோபமும் கிடையாது. ஆனால் அதில் ரசிக்க வைக்கிற மாதிரி ஏதாவது ஒரு அம்சம் இருந்தால் கூட போதும். சகித்துக் கொண்டு பாராட்டி விடலாம்.ஆனால் நீண்ட காலமாக சில குறிப்பிட்ட டெம்ப்ளேட் திரைக்கதைகளை வைத்துக் கொண்டு அந்தந்த நாயகர்களுக்கு ஏற்றாற் போல்  எக்ஸ்டரா பட்டன் வைத்து அல்லது நீக்கி ரெடிமேட் சட்டைகளை தொடர்ந்து சலிப்பில்லாமல் தயாரித்துக் கொண்டே இருக்கிறதே.. இவர்களுக்கெல்லாம் சலிப்பாகவே இருக்காதா? மனச்சாட்சியே உறுத்தாதா? வணிக வெற்றியும் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்வதுமான போராட்டமும்தான் பிரதானமானதா? நகலெடுப்பதற்காக பார்க்கும் ஹாலிவுட் மற்றும் கொரியத் திரைப்படங்களில் இருக்கும் சுவாரசியத்தைக் கூட நகலெடுக்க வேண்டும் என்று தோன்றாதா என்று வழக்கமான பல கேள்விகள் தோன்றுகின்றன. இதையே காலம் காலமாக நம் பார்வையாளர்களும் எப்படி ரசிக்கிறார்கள் என்கிற மர்மத்தின் உளவியலையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ் சினிமாவை திட்ட மாட்டேன் என்று சொல்லி விட்டு .. ஏன் இப்படி என்று சிலருக்குத் தோன்றலாம். ஒரு திரைப்படத்தில் அந்நியரான செந்திலை காரணமேயில்லாமலே தன்னிச்சையான உந்துததால் அடித்துக் கொண்டேயிருப்பார் கவுண்டமணி. சில பல தாக்குதல்களுக்குப் பிறகு பொறுக்க முடியாமல் செந்தில் குறித்து இது குறித்து பஞ்சாயத்து கூட்ட எல்லோரும் கவுண்டமணியை கண்டித்து அறிவுரைப்பார்கள்.... "என்னமோ தெரியல.. இவனைப் பார்த்தாலே எனக்கு அடிக்கணும்னே தோணுது...  சரி. இங்க வாடா... உன்னை இனிமே அடிக்க மாட்டேன். பயப்படாதே.. கிட்ட வா... என்று சொல்லும் கவுண்டமணி அவர் அருகே வந்தவுடன் தன்னையறியாமல் அடிக்க ஆரம்பித்து விடுவார்.

அப்படித்தான் தமிழ் சினிமாவைப் பற்றி எழுதுவதும்.


suresh kannan

11 comments:

Raaj Kumar said...

//ஜில்லா - அழகியல் சினிமாவின் வசீகர கனவுப் பொய்கை// என்னத்த சொல்லி ....

ரகுராமன் said...

இதை படித்தால் நேசன் மற்றும் விஜய் இருவரும் தூக்கு மாட்டி கொள்ளவேண்டும்.அனால் செய்ய மாட்டங்க்ய.எல்லம் விதி.

maithriim said...

ஹ்ஷ்ஷப்ப்பா :-)))

amas32

ILA (a) இளா said...

ஙொய்யால.. என்னும் ஒரு வார்த்தை மூலம், இந்தப் பதிவுக்கான என் விமர்சனத்தை இங்கே வைக்கிறேன்

manjoorraja said...

//லாலேட்டன் ஏதோ சில திரைப்படங்களில் 'பாண்டிகளை' அவமதித்து வசனம் பேசியதால் அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவமானப்படுத்தி அனுப்புவதுதான் இயக்குநரின் நோக்கமென்றால் அதில் அவர் கடுமையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்றே பொருள். அந்தளவிற்கு லாலேட்டன் டம்மியாக இருக்க, அதை ஈடுசெய்யும் விதத்தில் ஆழிப்பேரலையாக அதகளம் செய்கிறார் விஜய் சார் அவர்கள். 'ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் முடிவெட்டும் போது தலைகுனிந்துதான் ஆக வேண்டும்' என்கிற மேற்கோளுக்கிணங்க உலகமே போற்றிப் புகழும் நடிகனாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்குள் வந்தால் அதன் பிரத்யேக கட்டமைப்பிற்குள் புழுங்கி நாறத்தான் வேண்டும். அத்தனை திறமையாக கட்டப்பட்டது அது.// உண்மை.


இந்த மாதிரி படங்கள் ஓடுவது தான் வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும்.

பரிசல்காரன் said...

உண்மைத்தமிழனின் தளம் முடங்கவில்லை என்பதை இந்தப் பதிவின் நீளம் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

Unknown said...

அண்ணத்த ச்சும்மா கீகீகீகீகீ கீன்னு கீச்சுட்ட
எல்லாம் சரி எதுக்கு இடையில தல பற்றி விமர்சனம்

எங்க தல விமர்சனத்திற்ன்க்கும் அப்பாற்பட்டவர்

Kathasiriyar said...

ஜில்லா விமர்சனம்ஂ என்று படிக்கத்துவங்கினால் அதிலேயே வீரத்தின் விமர்சனத்தை நுழைத்த உங்களை எப்படி பாராட்டுவது? :)

Kathasiriyar said...

ஜில்லா விமர்சனத்திற்குள்ளேயே வீரத்தின் விமர்சனத்தை நுழைத்த பாங்கு அற்புதம். குறிப்பாக அந்த சால்ட் அதிகம் கமெண்ட்... :)

கார்த்திகேயன் said...

நல்லப் பதிவு...

//விஜய் படங்கள் என்றாலே காமெடிதானே என்று அவரைப் பிடிக்காதோர் சங்கம் வசைபாடினாலும்// நச்...

//இவர் தமன்னாவுடன் டான்ஸ் ஆடும் காட்சியைப் பார்க்கும் போது 'இருவரையும் வைத்து தங்கமீன்கள் திரைப்படம் எடுத்திருக்கலாம்'// நீங்க நல்லவரா கெட்டவரா...

www.writerkarthikeyan.blogspot.in

கார்த்திகேயன் said...

நல்லப் பதிவு...

//விஜய் படங்கள் என்றாலே காமெடிதானே என்று அவரைப் பிடிக்காதோர் சங்கம் வசைபாடினாலும்// நச்...

//இவர் தமன்னாவுடன் டான்ஸ் ஆடும் காட்சியைப் பார்க்கும் போது 'இருவரையும் வைத்து தங்கமீன்கள் திரைப்படம் எடுத்திருக்கலாம்'// நீங்க நல்லவரா கெட்டவரா...

www.writerkarthikeyan.blogspot.in