Sunday, February 03, 2013

கடல் - மணிரத்னத்தின் Intellectual menopause ..


தீவிரவாதம்+காதல், நிஜ ஆளுமைகளின் நிழலுருவாக்கம் என்கிற வார்ப்புருக்களின் வரிசையில் மணிரத்னத்திற்கு பிடித்தமானது இதிகாச ரீமிக்ஸ். அவ்வகையில் விவிலியத்தின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு கிருத்துவப் பின்னணயில்உருவாக்க்கப்பட்டிருக்கும் 'கடல்', தமிழ் சினிமாவின் மகத்தான ஆளுமைகளுள் ஒருவராக இருந்த  மணிரத்னத்தின் தொடர்ந்த வீழ்ச்சிகளுள் ஒன்றின் அடையாளமாகியிருப்பது துரதிர்ஷ்டம். கடவுள் x சாத்தான் என்கிற மதங்கள் உருவாக்கின கற்பிதம்தான் இந்தப் படத்தின் தோராயமானதொரு மையம். இதன் இடையில் ஒரு காதலுடனும் மிகுகற்பனையான பாடல்களுடனும் மெலோடிராமாக்களுடனும் 'மணிரத்னத்தின்' பிராண்டுடனும் சொல்லியாக வேண்டும். சிரமம்தான்.

இறையியல் கல்வி மாணவர்களாக முதிர்இளைஞர்களான தோற்றத்துடன் அறிமுகமாகிறார்கள் அர்ஜூனும் அர்விந்த் சுவாமியும். விவிலியத்தில் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்கிற அர்ஜூன் சாத்தானாகவும், மீ்ன்,கறி உண்ணாத அர்விந்த் சுவாமி, தேவனின் உண்மையான ஊழியராக கடவுளின் நகலாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணுடன் அர்ஜூன் கொள்கிற கலவியை (கிறிஸ்துவ மடங்களில் பெண்ணுடனான கலவி அரிது) அர்விந்த், குருமார்களிடம் காட்டிக் கொடுக்க, அவரை தன் எதிரியாக வரித்துக் கொண்டு வெளியேறுகிறது சாத்தான்.

முழுக்க முழுக்க அவிசுவாசிமான பாவிகளால் நிரம்பியிருக்கிற ஒரு மீனவக் கிராமத்திற்கு செல்கிறார் அர்விந்த். கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவர் ஸ்தாபித்து விட்டு போன கையோடு மூடப்பட்டிருக்கும் தோற்றத்துடன் உள்ள ஒரு தேவாலயத்தை 'தூய்மைப்படுத்திவிட்டு' உள்ளே செல்கிறார். மந்தையிலிருந்து விலகிய ஆடுகளை நல்வழிப்படுத்த தேவாலயத்தை மீன் சந்தைக்கே கொண்டு செல்கிறார். (DTH சேவை மாதிரி). அங்கே பொறுக்கித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் மீது அவர் கவனம் குவிகிறது. அக்கிராமத்தின் வெறுப்பிற்கு ஆளாகிய ஒரு பாலியல் தொழிலாளியின் மகன். அவனும் அந்த ஊரின் புறக்கணிப்பிற்கு ஆளாகிறான். அவனை நல்வழிப்படுத்தி வளர்த்தாலும் கள்ளச்சாவி போட்ட வண்டியில் முட்டை பரோட்டா தின்னச் சென்று விடுகிறான் அவன். மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்கிற விநோதமாக நடந்து கொள்கிற ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதல் வந்து விடுகிறது. "அடியே.." என்று பேஷன் ஷோ உடைகளுடன் கடல் பின்னணியில் ஒரு பாடல்.

அம்னிஷியா நோயாலோ என்னவோ அதுவரை காணாமற் போயிருந்த சாத்தான், அர்விந்தின் வாழ்வில் திடீரென்று குறுக்கிடுகிறது. தொழில்போட்டியால் குண்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் சாத்தானை "ரொம்பவும் நல்லவரான" அர்விந்த் காப்பாற்றுகிறார். பதிலுக்கு அவர் கற்பின் மீது களங்கத்தை ஏற்படுத்தி சிறைக்கு அனுப்பச் செய்கிறது சாத்தான். அர்விந்த்தின் தத்துப் பிள்ளைக்கு எல்லாப் பாவங்களையும் கற்றுக் கொடுத்து சாத்தானின் வசமாக்கிக் கொள்கிறது. சிறையிலிருந்து வெளிவரும் அர்விந்த் மக்களை நல்வழிப்படுத்தும் பிடிவாதத்துடன் மீண்டும் அந்தக் கிராமத்திற்கே செல்கிறார். காதல் தந்த ஞானஸ்தானத்தால் பரிசுத்தமாகிற இளைஞனும் சாத்தானிடமிருந்து விலகி தேவனுடன் இணைகிறான். தேவனுக்கு சாத்தானுக்கும் கடலில் நிகழ்கிற 'பயங்கர சண்டைக்காட்சிளை' தொடர்ந்து காதலர்கள் இணைகிறார்கள். அர்விந்த் தேவனின் மகிமையை தொண்டை நரம்பு புடைக்க உச்சஸ்தாயியி்ல் கத்திச் செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது. படம் பார்த்த பார்வையாளன், தான்  கடவுளா சாத்தானா என்கிற குழப்பம் விலகாமலேயே திரையரங்கிலிருந்து வெளியேறுகிறான். 

தமிழ் சினிமாவின் திரைமொழயிலும் உருவாக்கத்திலும்  மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின 'நாயகன்' திரைப்படத்தை உருவாக்கிய அதே மணிரத்னம்தான் இதை உருவாக்கியிருக்கிறார் என்பதை நம்ப சிரமமாய் இருக்கிறது. பழைய மணிரத்னமாய் இருந்தால்  மிகச் சிறப்பான இழைகளால் நெய்யப்பட்டிருக்கும் இந்தக் கதையை அற்புதமாக இயக்கியிருப்பார் என்று தோன்றுகிறது. எந்தவொரு பாத்திரமும் காட்சிக்கோர்வைகளும் அழுத்தமாக வெளிப்படவில்லை என்பதுதான் இத்திரைப்படத்தின் பிரதான குறை. 

அர்விந்த் சுவாமிக்கும் அர்ஜூனுக்கும் ஏற்படும் பகைமைதான் இந்தப் படத்தின் முக்கியமான துவக்கப் புள்ளி. அந்தப் பகைமைதான் அதற்குப் பிறகான காட்சிகளை நம்பகத்தன்மையுடனும் ஒன்றியும் பார்வையாளன் உணர்வதற்கான தொடர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் போதுமான வலுவுடனும் அழுத்தமாகவும் உருவாக்கப்படவில்லை. 'உன்னைப் பாவத்தில் ஆழ்த்தப் போவதுதான் உனக்கு நான் அளிக்கப் போகும் தண்டனை' என்கிற சபதத்துடனும் விலகுகிற சாத்தான், அர்விந்த்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டுமா, வேண்டமா? மாறாக தேவன்தான் சாத்தானின் வாழ்வில் ஒரு விபத்தின் மூலம் குறுக்கிடுகிறார். குறிப்பாக தேவன் x சாத்தான் என்கிற மைய இழையில்தான் பிரதானமாக இத்திரைப்படம் பயணித்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு விலகுதல்களின் மூலம் தன்னுடைய பலத்தை இழந்து நிற்கிறது. (இதற்கு ஆய்த எழுத்துவில் சூர்யாவிற்கும் பாரதிராஜாவிற்கும் அடக்கி வாசிக்கப்பட்ட தொனியில் ஆனால் அழுத்தமாக படம் நெடுக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பகைமையே தேவலை).

படத்தின் முதல் பாதி நன்றாக அமைந்திருப்பதாக ஒரு கருத்து உலவுகிறது. இருகோடுகள் தத்துவம் போல பிற்பகுதி மோசமாக இருப்பதால்தான் முதல்பகுதி நன்றாக இருப்பதாக அவர்களுக்கு தோன்றுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவிசுவாசியான சாத்தானான எனக்கு முழுப்படத்தின் உருவாக்கமுமே திராபையாத்தான் தெரிகிறது.

படத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு பாத்திரம் பியாட்ரிஸ். இத்தாலியக் கவிஞரான தாந்தேவின் படைப்பூக்கத்திற்கு காரணமாக இருக்கிற பெண். தாந்தே, பியாட்ரிஸின் மீது சிறுவயது முதலே காதல் கொள்கிறார். ஆனால் நெருங்கிப் பழகியதில்லை. தாந்தேவின் படைப்புகளில் அவரை நல்வழிப்படுத்தும் ஒரு தேவதையாக பியாட்ரிஸ் உருவகப்படுத்தியிருக்கிறார்

 அர்விந்த்சாமியால் நல்வழிப் படுத்தப்பட்டிருந்தாலும் அங்கிருந்து விலகி சாத்தானின் வசப்பட்டு பாவங்களைச் செய்யும் தாமஸ் என்கிற இளைஞனை தன்னுடைய தூய அன்பாலும் சிசுவின் ரத்தத்தாலும் அவனுடைய பாவங்களை கழுவி விடுகிறாள் 'கடல்' படத்த்தின் பியாட்ரிஸ். படத்தின் இரண்டாம் பகுதியில் ஒரு கீற்று போலவே இது வெளிப்பட்டு மறைந்து விடுகிறது. தன்னுடைய தாய் கொல்லப்படும் காட்சியை ஐந்து வயதில் பார்த்து விக்கித்து அந்த வயதின் ஆளுமையுடனே உறைந்து போகும் இவள் மருத்துவம் செய்வதில் மேதமையைக் கொண்டிருக்கிறாள். படத்தின் முக்கியமான பாத்திரமான பியாட்ரிஸை தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகிகளைப் போலவே சித்தரித்திருக்கிறார் இயக்குநர். க்ளிவேஜ் நன்றாகத் தெரியும் படி ஓடிவரும் காட்சியும் மணிரத்னம் படைக்கும் அழுத்தமான முத்திரைகளுள் ஒன்று. (சர்ச்சைக்குள்ளான முத்தக்காட்சியும் இடம் பெற்றிருந்தால் மணிரத்னத்தின் நோக்கம் முழுமை பெற்றிருக்கும். ஐந்து வயதே ஆளுமையுள்ள சிறுமி தொடர்பான பாத்திரத்தில் எப்படி அந்த முத்தக்காட்சியை சிந்திக்க முடிந்தது என்று தெரியவில்லை).

சாத்தானுக்கு எதிரான பாத்திரத்தில் நேர்ந்து விட்டதால் அர்விந்த்சாமியும் முழுக்க முழுக்க நல்லவராக வருகிறார். குறும்புக்காரச் சிறுவன் ஒருவன வீட்டில் நுழைந்து சிறுநீர் கழித்து விட்டு பணத்தை திருடிச் சென்றதைக் கூட கவனிக்காமல் (அல்லது கவனித்து விடுகிறாரா) ஜெபத்தின் மூலம் கிறிஸ்துவிடம் ஆழ்ந்து உரையாடிக் கொண்டிருப்பவர். (பாம்பேயில் கஷ்மீர் தீவிரவாதி அர்ப்பணிப்புடன் தொழுகை நடத்தும் காட்சியை இங்கு நினைவு கூரலாம்) என்றாலும் இவருக்கும் சமயங்களில் கோபம் வருகிறது. தவறு செய்யும் சிறுவனை ஒரு கன்னத்தில் அறைந்து விட்டு மறு கணமே இன்னொரு கன்னத்திலும் அறைகிறார். (கிறிஸ்துவின் போதனையை இடது வலமாகச் செய்தாலும் பொருந்தித்தானே வருகிறது). கிளைமாக்ஸில் சாத்தானை கொல்லவும் துணிகிறார். ஆனால் காதலின் மூலம் பரிசுத்தமாகியிருக்கிற இளைஞன், தேவனை அந்தக் கொலைப்பாவத்திலிருந்து தடுத்து நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்கிறான்.

'கடவுளால் நல்வழிப்படுத்தாதவரையும் காதல் நல்வழிப்படுத்தும்' என்பதே மணிரத்னம் பார்வையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிற ஒன்லைனாக எடுத்துக் கொள்ளலாம். படத்தில் குன்றின் மீதேறி கடலை நோக்கி இவர் தியானம் செய்யும் காட்சிகள் படத்தின் கிறித்துவ குறியீடுகளை அழுத்தமாக மெய்ப்பிக்கிற காட்சிகளாகும். தேவாலயத்திலுள்ள நாய்களை விரட்டி (பாவங்களை நாய்களாக உருவகப்படுத்தியிருப்பது அருமை) செல்லும் காட்சியும் குறிப்பிடத்தகுந்தது.

சாத்தானின் உருவகமாக வருகிற அர்ஜூன். ஆனால் பார்வையாளர்களுக்கு இந்தப் பாத்திரத்தில் ஏதும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக i am bond.. james bond... என்பது போல அடிக்கடி தன்னை சாத்தான் என்று படம் பூராவும் பிரகடனப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கூடவே மலைப்பாம்பு ஒன்றை தந்து படம் பூராவும தடவிக் கொண்டேயிருப்பது மாதிரி தந்திருந்தால் பார்வையாளர்களுக்கு இன்னமும் தெளிவாகப் புரிந்திருக்கும். 

படத்தின் பல நம்பகத்தன்மையற்ற காட்சிகள் படத்துடன் ஒன்றவிடாதவாறு நெருடிக் கொண்டேயிருக்கின்றன. படத்தில் தாமஸாக வரும் சிறுவனின் துவக்கக்காட்சிகள் செயற்கையான மெலோடிராமாக்களோடு சொல்லப் படுகிறது. (அந்தச் சிறுவன் நன்றாக நடிக்க வைக்கப் பட்டிருக்கிறான்). கர்த்தரிடம் விசுவாசமில்லாத அந்தக் கிராமத்தில் விபச்சாரம் அத்தனை குரூரமாக வெறுக்கப்படுவது முரணாக இருக்கிறது. என்னதான் பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவள் இறந்த பிறகு பிணத்தை அத்தனை அவமரியாதையோடு கொண்டு சென்று பெட்டிக்குள் அடங்காத காலை வெட்டி போடுமளவிற்கு அத்தனை குரூரமான மக்களா அவர்கள்? பார்வையாளனை அதிர்ச்சிக்குள்ளாக்கிற நோக்கத்தில் செயற்கையான குரூரத்துடன் சித்தரி்க்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகள் எரிச்சலையே உண்டாக்குகிறது.

இன்னொன்று பியாட்ரிஸ் பிரசவம் பார்க்கச் செல்லும் காட்சி. கிராமத்து ஆண்களும் பெண்களும் வெளியே நின்றிருக்க உதவிக்காக இளைஞனை அந்த அறைக்குள் அழைத்துச் செல்கிறாள் அவள். எந்த தமிழக கிராமத்தில் இதை ஒப்புக் கொள்வார்கள்? ஒரு இக்கட்டான நேரத்தில் துணைக்கு யாருமில்லாத சமயத்தில் இந்தப் பிரசவம் நிகழ்வதாக சித்தரித்திருந்தால் காட்சியின் நம்பகத்தன்மை கூடியிருக்குமல்லவா?.

மணிரத்னத்தின் படங்களில் பாத்திரங்கள் முதல் சந்திப்பிலேயே அத்தனை அன்னியோன்யமாக உரையாடிக் கொள்கிறார்கள். ஒரு கிராமத்திற்குள் நுழைகிற அந்நியனிடம் அத்தனை உரிமையாக மீன் விற்கிற பெண்களை மணிரத்ன படங்களில் மாத்திரமே காண முடியும். அது போலவே தாமஸ், பியாவை பேருந்தில் சந்திக்கிற முதல் காட்சியிலேயே அன்னோன்யமாக உரையாடத் துவங்குகிறான்.

படத்தில் நான் ரசித்த இரண்டு காட்சிக் கோர்வைகள் உள்ளன. அவைதான் மணிரத்னம் எனும் படைப்பாளி இன்னமும் உயிர்ப்புட்ன் ஜீவிப்பதற்கான சாட்சியங்கள். ஒன்று...

தாமஸ், தான் மணக்கவிருக்கும் பியாட்ரிஸை தன்னுடைய குருவான சாமிடம் அறிமுகப்படுத்த அழைத்துச் செல்கிறான். அவர்கள் அன்னியோன்யமாக உரையாட பரவசத்துடன் வெளியே வருகிறான். அப்போது சிறுவயது முரட்டுத்தனத்தில் அவன் சாமை ஆபாச வார்த்தைகளால் வசைந்த, டேப்ரிகார்டரில் பதியப்பட்ட ஒலிகள் கேட்கின்றன. சாம், பியாவிற்கு அதை போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார். முரட்டுத்தனமானதாக இருந்தாலும் பொதுவாக குழந்தைகளின் சிறுவயது குறும்புகளை பிற்பாடு நினைவுகூரும் போது அவற்றை சிரிப்புடன் கடந்து போவோம். சிறுவனின் வசைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது காமிரா இளைஞனை நோக்கியே இருக்கிறது. அவன் உள்ளே செல்கிறான். காமிராவும் பயணித்து உள்ளேயிருக்கும் சாமையும் பியாவையும் காண்பிக்கிறது. அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம் என நான் யூகித்தேன். ஆனால் தீவிரமான முகபாவத்துடன்தான் அவர்கள் அமாந்திருக்கிறார்கள். 'என்னடே வேணும் உனக்கு' என்று சாம் கேட்பதற்கு 'எங்க அம்மா தான்யா வேணும்.. அம்மா...அம்மா... என்று சிறுவன் உரக்க ஆவேசத்துடன் கத்தும்  ஒலியின் பின்னணியில் பியா எழுந்து வந்து தாய்மை பொங்க தாமஸை ஆதரவாக அணைத்துக் கொள்கிறாள்.

இரண்டாவது, தாமஸ் தன்னுடைய பாவங்கள் குறித்த குற்றவுணர்வை பியாவிடம் முன்வைப்பது. ஆனால் அவளுக்கு பாவம் என்றாலே என்னவென்று தெரியவிலலை. தான் செய்த கொலைகளை பட்டியலிட்டும் அவளுக்குப் புரிவதில்லை. "சரி. இனிமே செய்யாதே என்ன, எல்லாம் சரியாய்ப் போச்சு" என்கிறாள். தன்னுடைய குழந்தைமையின் மூலம் பரிசுத்தத்தை அவனுக்குள் நிரப்புகிறாள். அற்புதமான காட்சிகளாக இது பதிவாகியிருக்கிறது.

தெளிவில்லாமல் ஒலிக்கிற படத்தின் வட்டார வழக்கு வசனங்களை புரிந்து கொள்ள சிரமேற்படுத்துகிறது. சில அற்புதமான தருணங்களைத் தவிர ஏஆர்ரகுமான் தொடர்ந்து தனது இருப்பை நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரம் பின்னணி இசை போதும் என்கிற முதிர்ச்சியை எப்போது தமிழ் சினிமா அடையும் என்று தெரியவில்லை. மேலும் தனிப்பாடல்களாக அற்புதமாக ஒலிக்கும் ரகுமானின் இசையை தூத்துக்குடி கிராமத்தின் பின்னணியோடு அந்நியமல்லாமல் ஒட்டி வைத்துப் பார்க்க அபாரமான கற்பனைத் திறன் வேண்டும். மணிரத்னம் தனது பாடல்களை காட்சிப்படுத்துவதில் அதிக மெனக்கெடுவார் என்பது உறுதியாகிறது. ராஜீவ்மேனனின் காமிரா மிகுந்த அழகியலுடன் காட்சிகளை பதிவாக்கியிருக்கிறது. தாமஸ் முதன்முதலில் கடலுக்குப் போகும் காட்சி சிறப்பாக பதிவாகியிருந்தாலும் கணினி நுட்பத்தின் மெருகேற்றல்கள் அந்நியமாகத் தொடர்பில்லாமல் தெரிகின்றன. (துருத்தலாக Rear Projection shot வேறு). காட்சிகளின் தொடர்பற்ற தன்மையில் எடிட்டரின் சிரத்தையின்மை. (கிளைமாக்ஸ் சீன் அத்தனை நீளம் தேவையில்லை).

அர்விந்த் சாமி தனது பாத்திரத்தை அற்புதமாக உணர்ந்து நடித்திருக்கிறார். அர்ஜூனின் சாத்தான் வேடம் அத்தனை வலிமையாக வெளிப்படவில்லை. ரொம்பவும் சோகையான சாத்தான். ஆரண்ய காண்டத்தில் (காளையன்) சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்த கூத்துப்பட்டறை நடிகர் குரு சோமசுந்தரம் இதில் சாதாரண துணை நடிகர் மாதிரி பிரதானமற்ற பாத்திரத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது ஏமாற்றம்.  எத்தனையோ திறமையான இளைஞர்கள் வாய்ப்பில்லாமல் இருக்க, பிரபல நடிகர்களின் வாரிசுகள் என்கிற காரணத்திற்காகவே அவர்களை பிரதான பாத்திரங்களில் தமிழ் இயக்குநர்கள் நடிக்க வைப்பதின் பின்னாலுள்ள வணிகத்தந்திரம் எதுவென யோசிக்க வேண்டும். மக்களை திரைப்படத்திற்குள் இழுப்பதற்கான ஒரு வாய்ப்பா அது? (ராதாவோட பொண்ணு நடிச்சிருக்காம்). அறிமுக நாயகன் கெளதம் சிறப்பாக உழைத்திருக்கிறார். சற்று போஷாக்காக இருக்கிறார் என்பதைத் தவிர பியாட்ரிஸின் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமான குழந்தைமையுடன் இருக்கிறது துளசியின் முகம். (ஏன் அத்தனை ஒப்பனை).

தமிழ் இலக்கியமும் சினிமாவும் இணைய வேண்டும் என்கிற நீண்ட கால மனக்குறை சமீப காலங்களில் சர்த்தியமாகிக் கொண்டிருக்கிறது என்றாலும் இலக்கியவாதிகளை வணிக சினிமா விழுங்கி விடும் சோகம் புதுமைப்பித்தன் காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. வணிக நிர்ப்பந்தப்பங்களை மீறித்தான் அவர்கள் பிரகாசிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவிற்காக இலக்கியவாதிகளை உபயோகப்படுத்தாமல் அவர்கள் எவ்வித கட்டுப்பாடுமில்லாமல் ஏற்கெனவே எழுதியுள்ள படைப்புகளை இயக்குநர்கள் திரைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும். மணிரத்னம் என்கிற வலுவான கலைஆளுமை ரோஜாவைத் தொடர்ந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்து வணிக நிர்ப்பந்தங்களில் காணாமற் போய் இப்போது காலாவாதியும் ஆகிக் கொண்டிருக்கிறது என்பது ராவணணைத் தொடர்ந்து கடலிலும் நிரூபணமாகியிருக்கிறது. வருத்தமான விஷயமிது.

சத்ரியன் படத்தில் அவர் எழுதிய வசனத்தைப் போலவே 'வரணும்.. பழைய மணிரத்னமா வரணும்' என்பதுதான் என் விருப்பம்.

suresh kannan

6 comments:

rajasundararajan said...

அக்கறையோடு எழுதப்பட்ட ஒரே விமர்சனம் இந்தப் படத்துக்கு இதுதான்.

//தேவாலயத்திலுள்ள நாய்களை விரட்டி (பாவங்களை நாய்களாக உருவகப்படுத்தியிருப்பது அருமை)// இது ஓவர் அக்கறை. The dogs of Hades represent darkness and danger. ஆனால் இது கிரேக்கத் தொன்மம். இதற்கும் கிறிஸ்டியானிட்டிக்கும் சம்பந்தம் கிடையாது. In early Christianity, the dog was a symbol of guardianship (as in the sheepdog) and it was an allegory for the priest. The name Dominicans, an order of friars, literally means ‘dogs of the Lord’.

ezhil said...

ஏதோ கிறிஸ்துவ தேவாலயத்தில் பாதிரியார் கதை சொல்வது மாதிரி இருந்ததுங்க விமர்சனம். எப்படியோ எங்களைக் காப்பாத்தீட்டீங்க (பட்ம் பார்ப்பதில் இருந்துதான்)

Anonymous said...

(கிறிஸ்துவ மடங்களில் பெண்ணுடனான கலவி அரிது)////ஓவர் குசும்பு...புதுமைப்பித்தனே இது பற்றி ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பாரு...

Anonymous said...

'உன்னைப் பாவத்தில் ஆழ்த்தப் போவதுதான் உனக்கு நான் அளிக்கப் போகும் தண்டனை' என்கிற சபதத்துடனும் விலகுகிற சாத்தான், அர்விந்த்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டுமா, வேண்டமா?////

கரெக்டா சொன்னீங்க...சாத்தான் அப்பப்ப கொஞ்சநேரம் வந்து போறார்...நிறைய கட் பண்ணிட்டாங்க போலிருக்கு.சாத்தான் என் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை...சாத்தானின் பாதிப்பு இல்லாமல் தேவனின் பாதிப்பு எப்படி பார்வையாளனின் மனதில் நிகழும். அதுவும் 25 வருசமா கதாநாயகனாக நடித்த ஒருவர் சாத்தானாகிறார் என்றால் அவருக்கான காட்சிகள் எவ்வளவு வலுவானதான இருக்கவேண்டும்...

சின்னப்பையன் டேப்பில் பதிவு செய்கிற காட்சி பாதித்தது...நீங்கள் சொன்ன அந்த இரண்டு காட்சிகளும்தான்...காதல் காட்சிகள் என்பது வழக்கம்போல பாடல்கள் போதும் என்று முடிவுக்கு வந்துவிட்டார்... கதையும் வசனமும் சூப்பர்தான்..ஆனால் படம் தோல்வி.

பாவம் மணி ஸார் ரொம்ப கன்பீஸ் ஆயிருப்பார்...மறுபடி முதல்லேர்ந்து ஆரம்பிங்க சார்...

Anonymous said...

//பாம்பேயில் கஷ்மீர் தீவிரவாதி அர்ப்பணிப்புடன் தொழுகை நடத்தும் காட்சியை இங்கு நினைவு கூரலாம்//

ரோஜா திரைப்படமா அல்லது நான் தவறா?

Kannan said...

Reason for Gautam and Radha's daughter is financing.