கடல் படத்திற்காக எழுதப்பட்ட சில விமர்சனங்களில் அரசியல் சார்ந்த ஓர் ஆட்சேபத்தை கண்டேன். அர்ஜூன் பாத்திரம் ஒரு கொலையை செய்து விட்டு 'கடல்ல மீன்பிடிக்கப் போறவங்கள வெளியூர்க்காரங்க சுட்டுடறாங்க இல்ல' என்று பேசும் வசனம் குறித்தானது. பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுட்டு சாகடிக்கும் படுகொலைகள் குறித்து 'மணிரத்னம் உண்மைக்கு மாறான சித்திரத்தை அளிக்கிறார்' என்பது இந்த விமர்சகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.
இது மிக அபத்தமானதொன்று என்பது என் பார்வை. ஏன் என்று சொல்கிறேன்.
ஒரு பிரதியில் ஒளிந்திருக்கும் மறைபொருளை, எதிர் அரசியலை, நுட்பமான அரசியலை, உண்மையை கட்டுடைத்து வெளிக்கொணர்வது காலங்காலமாக விமர்சகர்கள் செய்யும் பணி. பிரதியை பொதுப்புத்தியுடன் மேலோட்டமாக அணுகுபவருக்கு இம்மாதிரியான வெளிச்சங்கள் புதிய தரிசனத்தை தரும்; அவாகளின் புரிதலை வேறொரு தளத்திற்கு நகர்த்தும். அந்த வகையில் இம்மாதிரியான விமர்சனங்கள் தேவையானதே.
ஆனால் நாளடைவில் ஒவ்வொரு பிரதியிலும் இம்மாதிரியான நுண்ணரசியலை தேடுவதை சில் முழு நேரத் தொழிலாகக் கொண்டு விட்டார்களா என்ற சந்தேகம் வருமளவிற்கு நுண்ணரசியல் தேடுவதில் உள்ள அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது. திரைப்படங்களில், குறிப்பிடத்தக்க இயக்குநர்களின் படங்கள் மாத்திரமே இம்மாதிரியான விவாதங்களுக்கு உள்ளான காலம் போய் வெகுஜனப் படங்கள், சாதாரண படங்கள், பொருட்படுத்த தேவையேயில்லாத படங்கள் கூட இந்த விமர்சகாகளின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. இந்த 'கண்டுபிடிப்புகளில்' சில அபத்தமானவைகளாக இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட வசனத்தையோ காட்சியையோ வைத்து 'நுண்ணரசியல்' தேடாமல் அந்த காட்சிக் கோர்வையை படம் முழுவதிலுமான பின்னணியோடு பொருத்திப் பார்த்து இயக்குநர் உள்நோக்கத்துடனோ அல்லது தன்னிச்சையாகவோ தவறான கருத்தை முன் வைத்திருந்தால் அதை சுட்டிக் காட்டுவதோ கண்டிப்பதோ ஏற்றதாக இருக்கும்.
கடல் படத்தில் அர்ஜூன் பேசும் அந்த வசனத்தின் காட்சிக்கு தொடர்பான நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்.
பெர்க்மான்ஸ் (அர்ஜூன்) தன் பழைய விரோதி சாம் (அர்விந்த் சுவாமி) மீது பொய்ப்பழி சுமத்தி சிறைக்கு அனுப்பியவுடன் அவருடைய தத்துப் பிள்ளையாக அறியப்படும் தாமஸை அழைத்து வரச் செய்கிறார். தான் குருவாக மதிக்கும் நபர் சிறைக்குச்செல்ல காரணமாயிருந்தவன் என்பதால் தாமஸ், பெர்க்மான்ஸ் மீது கோபமாக இருக்கிறான். அதே சமயம் தன்னை அவமதிக்கும் ஊர் மக்களின் முன்னால் நிமிர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்கிற தாகமும் அவனுக்கு இருக்கிறது. அதனால் கடத்தல் தொழில் செய்யும் பெர்க்மான்ஸிடம் இணைகிறான். பெர்க்மான்ஸும் இதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறான். என்றாலும் தாமஸின் மீது ஒரு கண் வைத்திருக்கிறான். (இவன் பாம்புடே... எனக்கு நிம்மதியா இருக்கறத விட உஷாரா இருக்கறதுதான் பிடிக்கும்').
தாமஸ தன்னுடைய தகப்பன் என்று நம்பும் செட்டியிடம் துப்பாக்கிகள் தவறுதலாக சென்று சேருமாறு ஏற்பாடு செய்கிறான் பெர்க்மான்ஸ். செட்டி துப்பாக்கிகளை விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் அதை தானே கண்டுபிடித்தது போல் தாமஸின் முன்னிலையிலேயே செட்டியை விசாரித்து பின்பு சுட்டுக் கொள்கிறான். இதற்கு தாமஸின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை அவனுடைய கண்கள் கவனிக்கின்றன. அதன் மூலம் தாமஸை இனங்கண்டு கொள்ளலாம். சாமிற்கு மேலும் நெருக்கடி தரலாம் என்பது அவனுடைய எண்ணமாக இருக்கக்கூடும். கொலையை நிகழ்த்தியுடன் அந்த வசனத்தை கூறுகிறான்.
'கடல்ல மீன்பிடிக்கப் போறவங்கள வெளியூர்க்காரங்க சுட்டுடறாங்க இல்ல'
குற்றத் தொழில் செய்கிறவர்கள் தாங்கள் நிகழ்த்தும் கொலைகளை திசை திருப்ப விபத்து போல சித்தரிப்பது வழக்கமானதொன்று. ஒருவரை தண்டவாளத்தில் போட்டு ரயிலில் ஏற்பட்ட விபத்து போல காவல் துறையினரை நம்ப வைப்பது ஓர் உதாரணம். இந்த நோக்கில்தான் பெர்மான்ஸூம் அந்த உபாயத்தை தன் ஆளிடம் கையாளச் சொல்கிறான்.
சென்சார் மற்றும் சர்ச்சை காரணமாக இலங்கை கடற்படை என்பதை நேரடியாக குறிப்பிட முடியாததால் மறைமுகமாக வெளியூர்க்காரங்க என்கிற வசனம் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இலங்கை கடற்படை என்றும் அழுத்திச் சொல்ல முடியாது. சமீபத்தில் இத்தாலியக் கப்பலிலிருந்த பாதுகாவலர்கள் தமிழக மற்றும் கேரள மீனவர்களை கொன்ற செய்தியையும் இத்துடன் இணைத்து வாசிக்கலாம்.
இன்னொரு புறம் பார்த்தால் மேற்கண்ட வசனம் மூலம் மீனவர்கள் கடலில் கொல்லப்படுகிறார்கள் என்கிற செய்தியையும் அந்த வசனம் கூறிச் செல்வதை பார்க்க முடியும்.
வணிக சினிமா, படம் வெளியாவதற்கு தடையை ஏற்படுத்தும் காரணங்களை தவிர்க்கவே முயலும். அது சமூகப் பிரச்சினையை துணிச்சலுடனும் பிரக்ஞையுடனும் பேசும் என்று எதிர்பார்க்க முடியாது. அதையும் தவிர காட்சிப் பின்னணியோடு பார்க்கும் போது விமர்சகர்களின் மேற்குறிப்பிட்ட ஆட்சேபம் பொருத்தமில்லாமல் போவதை உணர முடியும்.
தொடர்புடைய பதிவு : எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு
suresh kannan
3 comments:
அன்பு சுரேஷ்,
கடல் நேற்று பார்த்தேன். படத்தைவிட உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது. அந்த குறிப்பிட்ட காட்சியில் நுண்ணரசியல் இருப்பதாக சொல்லப்படுவது அபத்தமானது.தமிழ் மசாலா பட வில்லன்கள் பேசுவது போன்ற வசனமே அது.
ஜெ கதைக்கும் வசனத்துக்கும்தான் ஆர்வங்கொண்டு படம் பார்த்தேன். ஆனால் முழுப்படம் பார்த்து முடிக்கையில் ஆயாசமாக இருந்தது. அரவிந்த்சாமி தவிர ஒருவருமே மனதில் பதியவில்லை.
சுரேஷ் கண்ணன்,
"கடல் : மதநம்பிக்கையின் நுண்ணரசியல்"
"மறதியின் உலக அரசியல் : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்"
போன்ற தலைப்புகளில் நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள விமர்சனங்கள் வருவதை நீங்கள் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கே
நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன...
எமது வலைப்பகுதி
தமிழ் வாழ் வலைப்பகுதி
திருக்குறள்
Post a Comment