Thor Heyerdahl என்கிற இனக்குழு ஆராய்ச்சியாளர், தம்முடைய ஆய்வொன்றை நிறுவ பெருவிற்கும் பொலினிசியாவிற்கும் இடையில் 1947-ல் சாகசமான கடற்பயணமொன்றை நிகழ்ததினார். தம்முடைய உயிரையும் பணயம் வைத்து வரலாற்றை நிறுவும் பிடிவாதத்திற்கர்கவே இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார். இதன் பின்னணி மிக சுவாரசியமானது. இந்தப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, Kon-Tiki (2012) என்கிற நார்வே திரைப்படம்,
2012 அகாதமி விருதுகளில் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட' பிரிவில் இத்திரைப்படம் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கோல்டன் குளோப் விருதிலும் நாமினேஷனில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை. நார்வே நாட்டிலிருந்து இது போன்ற சர்வதேச விருதுகளுக்காக நாமினேஷனில் தோந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. மாறாக இந்தப் பயணத்தைக் கொண்டு தோர் உருவாக்கிய ஆவணப்படம் (Documentary)1950-ல் அகாதமி விருதை வென்றிருக்கிறது.
மேற்கிலிருந்து வந்த மனிதர்கள் மூலமே பொலினிசியா உருவாகியிருக்க முடியும் என்று மனிதவியல் ஆராய்ச்சியாளர்கள் அதுவரை நம்பியும் எழுதியும் கொண்டிருந்தனர். தோர் இதற்கு மாற்றான ஓர் ஆய்வை முன்வைத்தார். இந்த ஆராய்ச்சிக்காக பத்து ஆண்டுகளை செலவழித்தார். தென்அமெரிக்காவிலிருந்து கடலின் மூலம் பொலினிசியாவிற்கு பசிபிக் பெருங்கடலின் மூலம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருக்க முடியும் என்பதை அவர் தீவிரமான நம்பினார். அவரது ஆராய்ச்சியை எந்த பதிப்பகமும் ஏற்கவில்லை. படகு என்கிற போக்குவரத்து சாதனம் அந்தக் காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்படாமலிருந்ததால் தோர் குறிப்பிடும் கடற்பயணம் நிகழ்ந்திருக்க சாத்தியமேயில்லை என்பது பதிப்பகத்தார்களின் வாதம். ஆனால் Raft எனப்படும் காற்றாடி மூலம் இயங்கும் அடிப்படையான படகைக் கொண்டு அந்தப் பயணம் நிகழ்ந்திருக்கும் என்று தோர் தீவிரமாக நம்பினார். பதிப்பத்தார் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புறக்கணிப்பு அவரை வருத்தம் கொள்ள வைத்தது.
தம்முடைய ஆய்வை அழுத்தமாக நிரூபிக்க விபரீதமான முடிவொன்றை எடுத்தார். 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக அவர் நம்பும் பயணத்தை அதே முறையில் 1947-ல் நிகழ்த்துவது. அதாவது நவீன படகையும சாதனங்களையும் உபயோகப்படுத்தாமல் முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியான காற்றாடிப் படகின் மூலம் பசிபிக் பெருங்கடலை கடப்பது. (என்றாலும் ரேடியோ கருவிகள், கத்திகள், வரைபடம் போன்ற நவீன உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் காற்றாடிப் படகின் மூலம் இந்தப் பயணம் நிகழ்ந்திருக்க முடியும் என்பதை நிறுவுவதே அவரது முதன்மையான நோக்கம்).
ஆட்கொல்லி சுறாக்களும் பெரிய படகுகள், கப்பல்களையே கவிழ்த்து வீசும் மோசமான வானிலை கொண்ட பெருங்கடலில் நிகழும் இந்த ஆபத்தான பயணத்திற்கான நிதியுதவி கிடைப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. மனைவியின் ஆட்சேபத்தையும் இரண்டு மகன்களின் பிரிவையும் தாங்கிக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய தனிப்பட்ட காரண்ஙகள் வேறு.
பழைய கால முறையிலான படகை இதற்காக உருவாக்கினார். இன்கா நாகரிகத்தில் சூரியக் கடவுளின் பெயர் Kon-Tiki. அதையே தம்முடைய படகிற்கு பெயராக வைத்தார் தோர்.
1947-ம் ஆண்டு ஏப்ரல்28-ம் தேதி இந்தப் பயணம் துவங்குகிறது. தோர் உள்ளிட்ட ஆறு நபர்கள். சுமார் 4300 மைல்கள்.101 நாட்கள். நிறைய சிரமங்களுக்கு இடையிலும் உயிராபத்திற்கு இடையில் ஆகஸ்டு 7, 1947 அன்று இந்த வரலாற்றுப் பயணம் நிறைவுறுகிறது.
Joachim Rønning இயக்கியுள்ள இத்திரைப்படம், பயணத்திற்கு முந்தைய காட்சிகளையும் பயணக் காட்சிகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது. சிறுவயதில் தோருக்கு ஏற்படும் விபத்துக் காட்சியோடுதான் படம் துவங்குகிறது. சிறுவன் தோர் விளையாட்டின் போது பனிப்பாறைக்கு அடியில் நீரில் மூழ்கி அவனுடைய நண்பனால் காப்பாற்றப்படுகிறான். இந்த விபத்து அவனுடைய ஆழ்மனதில் பதிந்து விடுவதால் நீச்சலை கற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தக் குறைபாட்டை மீறி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்ள தோர் முடிவு செய்வது அவரது மன உறுதிக்கு சான்றாக உள்ளது.
தோர் மற்றும் அவரது நண்பர்களுடன் படகில் பயணம் செய்யும் இன்னொரு நபராக (Herman Watzinger) Anders Baasmo Christiansen அற்புதமாக நடித்துள்ளார். திரைப்படத்தின் படி குளிர்பதனப் பெட்டி விற்பனையாளராக உள்ள இவர், தோர் தம்முடைய நண்பர்களுடன் படகுப் பயணத்தைப் பற்றியும் அதற்கான நிராகரிப்புகளையும் பற்றி உரையாடுவதைக் கண்டு தோரை பின்தொடர்ந்து சென்று அந்தப் பயணத்தில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டுகிறார். தம்மை விட உற்சாகமாகவுள்ள ஹெர்மனை, தோர் பயணத்தில் இணைத்துக் கொள்கிறார். ஆனால் மற்றவர்கள் இவரைக் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். பயணத்தின் போது இவர் பதட்டமானவராகவே உள்ளார். படகின் அடிக்கட்டைகள் தளர்ந்து கொண்டே வருவதை கவலையுடன் கவனித்துக் கொண்டே வருகிறார். அது அபாயத்தை நெருங்கும் வேளையில் தோரிடம் அதை சுட்டிக் காட்டி "படகு உடைந்து நாம் அழிந்து விடுவோம். ஆகையால் படகிலுள்ள இரும்புக் கம்பியின் மூலம் சரி செய்து விடலாம்" என்று முறையிடுகிறார். ஆனால் நவீன உபகரணங்களை மறுத்து பயணம் செய்யும் தோர் அதை உறுதியாக மறுத்து இரும்புக் கம்பிகளை கடலில் எறிந்து விடுகிறார். ஹெர்மன் கடலில் தவறி விழுந்து சுறாக்களிடம் மாட்டிக் கொள்ளும் காட்சியும் அனைவரும் இணைந்து அவரைக் காப்பாற்றும் பதட்டமான காட்சிகள் சிறப்பாக உருவாக்கப் பட்டுள்ளன..
1950-ல் தோர் உருவாக்கின ஆவணப்படத்தைப் பார்க்கும் ஆவலை இந்தத் திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.
இயற்கையை முதலில் அஞ்சிய ஆதி மனிதன் அதன் ரகசியங்கள்
மெல்ல புலப்பட்ட பின்னர் அதை வென்றுவிடக்கூடிய நிறைவேறாத கனவுடன் முயற்சி
செய்து கொண்டே இருக்கிறான். மனித குலத்தின் பயணத்தில் இந்த நிகழ்வுகள்
வரலாறாக பதியப்படுகின்றன. இந்தப் பதிவுகளில் எத்தனை உண்மையானது, எத்தனை
உண்மையிலிருந்து விலகி சுயபெருமைகளுக்காக திரிக்கப்பட்டது,
திரிக்கப்படுவதின் பின்னாலுள்ள அரசியல் போன்றவற்றை அறிவது அவசியம்.
இந்தப் படத்தைப் பற்றி ஜனரஞ்சகமாக ஒருவரியில் சொல்வதென்றால் "வரலாறு முக்கியம் அமைச்சரே".
இந்தப் படத்தைப் பற்றி ஜனரஞ்சகமாக ஒருவரியில் சொல்வதென்றால் "வரலாறு முக்கியம் அமைச்சரே".
suresh kannan
6 comments:
அருமையான விமர்சனம்!
இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களது விமர்சனத்திற்கு நன்றி...
வள்ளலாரை பற்றி வேலாயுதனார் கொடுத்த வாக்குமூலம்
சென்னை மாகாணத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் அவதரித்தவர் வள்ளற்பெருமானார். அவர் தம் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து வெகுகாலம் வசித்திருந்தார்
வள்ளலார் தம் ஒன்பதாம் வயதிலேயே, ஆரியர்களாலும் திராவிடர்களாலும் சரிசமானமாய் அபிமானித்தவர். அகத்தியர் முதலிய முனிவர்களால் எழுதப்பெற்ற பாக்களை ஓதாமலேயே மனப்பாடமாய் பாடும் நாவளத்தைப் பெற்றிருந்தார்.
http://www.tamilkadal.com/?p=1205
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com
இந்த திரைப்படத்திற்க்கு இதைவிட அருமையான விமர்சனம் யாராலும் எழுத முடியாது!!!!!
மேலும் இந்த படத்தின் தெற்க்காசிய உரிமையை எனது நண்பர் வாங்கி உள்ளார். வரும் மாதங்களில் வெளியாகும் என்று நினைக்கிறேன்
உங்கள் பதிவைப்பற்றி அவருக்கு சொல்கிறேன்...மிகவும் மகிழ்ச்சி அடைவார்!!!!
நன்றி
ராஜராஜா
இந்த திரைப்படத்திற்க்கு இதைவிட அருமையான விமர்சனம் யாராலும் எழுத முடியாது!!!!!
மேலும் இந்த படத்தின் தெற்க்காசிய உரிமையை எனது நண்பர் வாங்கி உள்ளார். வரும் மாதங்களில் வெளியாகும் என்று நினைக்கிறேன்
உங்கள் பதிவைப்பற்றி அவருக்கு சொல்கிறேன்...மிகவும் மகிழ்ச்சி அடைவார்!!!!
நன்றி
ராஜராஜா
Post a Comment