Wednesday, February 13, 2013

சமகால தமிழ் சினிமா – அவநம்பிக்கைகள், நம்பிக்கைகள்

இந்திய சினிமா நூற்றாண்டை கடந்து வரும் வேளையில் நமது தமிழ் சினிமாவின் முகம் எப்படியிருக்கிறது? அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர்த்தால் தமிழ் சினிமாவின் உள்ளடக்கமும் திரைமொழியும் முதிர்ச்சிக்கான எவ்வித அடையாளமுமி்ல்லாமல் இன்னமும் நாடக மரபிலேயே தேங்கிக் கிடக்கிறது. காட்சி ஊடகத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் இன்னமும் பக்கம் பக்கம் வசனம் பேசிக் கொண்டிருக்கிறது. அகரீதியான உணர்வுகளை பெளதீகப் பொருட்களை உதாரணம் காட்டி விளக்குவது போன்ற அபத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தன்னுடைய காதலியால் பாதிக்கப்பட்டதாக உணர்கிற இளைஞன் பாடுவதில் ஒரு வரி.. 'நெஞ்சம் ஒரு காத்தாடி'... இது காட்சிப்படுத்தப்படும் போது அந்த இளைஞனின் பின்னே காற்றாடி விடும் சிறுவர்கள் காட்டப்படுகிறார்கள். சமீபத்திய நீ தானே என் பொன் வசந்தம்சினிமாவில் வரும் காட்சி இது! எப்படி இருக்கிறது பாருங்கள்..இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் ஒரு snapshot. 

தமிழ் சினிமாவின் சமகால இயக்குநர்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதில் மாத்திரம் நவீனத்தை தேடுகிறார்கள். இந்த சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி யிருக்கிறோம், ‘இந்தக் கேமராவை பயன்படுத்தியிருக்கிறோம்'  'இந்த நடிகர் ஒப்பனைக்காக இத்தனை மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்திருந்தார்' போன்ற trivia-க்களே நேர்காணல்களில் புளகாங்கிதமாக சிலாகிக்கப்படுகினறன. தங்கள் படத்தின் சிறப்பம்சமாக இவற்றையே முன்னிறுத்துகிறார்கள். ஆனால் வெறும் தொழில்நுட்பமும் உழைப்பும் மாத்திரமா சினிமா? காட்சிகளின் அழகியல் மாத்திரமா?. தங்க நிப் கொண்ட பேனா கொண்டு எழுதினால் அது உலக இலக்கியமாகி விடுமா? 'வித்தியாசமாக' உருவாக்கியிருக்கிறோம் என்கிற பாவனையில் முன்வைக்கப்படும் இந்தத் திரைப்படங்களின் உள்ளடக்கமும் மையமும் என்னவென்று பார்த்தால் காலம் காலமாக  தமிழ் சினிமாவிற்கென்று பிரத்யேகமாக உள்ள அதே மசாலா வார்ப்புகள், சம்பிரதாயங்கள், வணிகச் சூத்திரங்கள். இதையே விதவிதமான லேபிள் ஒட்டி மார்க்கெட்டிங் செய்கிறார்கள். சர்வதேச தர அளவிலான சினிமாவுடன்  ஒப்பிடக்கூடிய அளவிற்கான தகுதியுடன் ஒரு சமகால சினிமா கூட இங்கு இல்லை. சமகால சமூகப் பிரச்சினையை வணிக நிர்ப்பந்தங்கள் ல்லாமல் யோக்கியமாக முன்வைக்கும் ஒரு வெகுஜன திரைப்படம் கூட இங்கு கிடையாது. இது ஒரு கசப்பான உண்மை. 

இதற்காக சினிமா இயக்குநர்களை மாத்திரமே குறை சொல்ல விரும்பவில்லை. இயக்குநர்களுக்குள் ஒளிந்திருக்கும் வணிகர்களும், இந்த வணிகர்களை பின்னாலிருந்து இயக்கும் தயாரிப்பாளர்களும் எது எளிதாக விற்குமோ அதையே உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள். இந்த நுகர்வுக் கலாச்சார சூழலில் நமது ரசனை மாறினாலொழிய இது மாறப் போவதில்லை. சினிமா ஒரு சமூகத்தை வலுவாக பாதிக்கும் காட்சி ஊடகம் என்பது நிரூபணமாகியிருக்கிறது.  நம்மை ஆள்பவர்களையே சினிமாவிலிருந்து தேர்ந்தெடுக்குமளவிற்கான அறியாமையுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம்.  ஒரு சினிமாவை எப்படி அணுக வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் என்பது பற்றிய புரிதலே நம்மிடமில்லை. அது ஏற்படுத்தும் பாதிப்பு தன்னிச்சையாக நம் ஆழ்மனங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல் அதை அலட்சியமாகப் பார்க்கும் மனோபாவம்தான் பொதுவாக இருக்கிறது. 'சினிமா ரசனையை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என்கிற பாலுமகேந்திராவின் குரல் இந்தச் சமயத்தில் முக்கியமானதாகத் தெரிகிறது. 

இந்த துர்ப்பாக்கியமான சூழலில் கடந்த ஆண்டில் வெளியான, ஒரளவுக்காவது கவனிக்கத்தக்க தமிழ் சினிமாக்களைப் பற்றி ஒரு பறவைப் பார்வையில் பார்க்கலாம். 

மாற்றான், தாண்டவம், பில்லா -2, சகுனி  போன்ற, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அபத்தமான சண்டைக்காட்சிகளாலும் பஞ்ச் டயலாக்குகளாலும் தங்களின் நாயக பிம்பத்தை தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டிருக்கும் ஹீரோக்களின் படங்கள் மண்ணைக் கவ்வியது நல்ல சகுனம். மாறாக குறைந்த பட்ஜெட், பரவலாக அறிமுகமாகாத நடிகர்கள், அடிப்படையான தொழில்நுட்பம் போன்றவற்றுடன் இருந்தாலும் சொல்கிற கதையை நேர்மையாக, சுவாரசியமாக சொன்னால் தங்களால் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சில புதுமுக இயக்குநர்கள்.

காதலில் சொதப்புவது எப்படி? (பாலாஜி மோகன்), பீட்சா (கார்த்திக் சுப்பராஜ்), அட்டகத்தி (ரஞ்ஜித்), நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் (பாலாஜி தரணீதரன்), மதுபானக்கடை (கமலக்கண்ணன்) போன்ற அறிமுக இயக்குநர்கள் தங்களின் பிரத்யேக திறமையால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

மேலும் திறமையான முறையில் உருவாக்கப்பட்ட சிறுமுதலீட்டுப் படங்கள் வரவேற்பினைப் பெறுவதும் ஸ்டார் நடிகர்கள் நடித்த மசாலாக்கள் தோற்றுப் போவதையும் வைத்து தமிழ் சினிமாவில் புரட்சி ஏதேனும் ஏற்பட்டு விட்டது என்று கருதுவதற்கு இடமில்லை. இது ஒரு தற்காநிலையாக இருக்கலாம். வருகிற வருடத்தில் பெரிய பட்ஜெட் படங்கள், பஞ்ச் டயலாக் நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் நிலைமை தலை கீழாக மாறலாம். 80களில் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றத்தை குழி தோண்டிப் புதைத்த 'சகலகலா வல்லவனை' நினைவு கூரவும்!
 
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் டிஜிட்டல் புரட்சி. பிலிம் சுருளுக்கு ஆகும் செலவை கணிசமாக குறைக்கிறது டிஜிட்டல் யுகம். வழக்கு எண்.18/9 என்கிற திரைப்படம் கேனான் 5D என்கிற ஸ்டில் கேமிராவினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு திரைப்படம்  உருவாவதற்கு பெரும் செலவை கோரி நிற்பதனால் சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் தயக்கத்தை டிஜிட்டல் வசதி குறைக்கிறது.

***

தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக "கேன்சர்' என்றொரு வியாதி படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது. இப்படி திடீரென்று ஏதாவது ஒரு வியாதியின் பெயர் தமிழ் சினிமாவிற்கு பிடிக்க ஆரம்பித்து விடும். உடனே நாயகர்களுக்கு அந்த வியாதி வந்து விடும். ஸ்கீஸோபெர்னியா, ஷார்ட் டைம் மெமரி லாஸ், அம்னீசியா என்று. இந்த வரிசையில் சமீபத்திய வியாதி Bipolar disorder. இந்தக் குறைபாட்டை கதையின் உள்ளீடாகக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. தனுஷ் நடித்த 3, தேவையற்ற பதின்ம காதல் காட்சிகளைத் தொடர்ந்தாவது நாயகன் இந்தக் குறைபாட்டில் அவதிப்படுவதைக் காட்டியது. லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஆரோகணம்' இன்னமும் மோசம். தொலைக்காட்சி சீரியல் போன்ற மெலோடிராமா காட்சிகளைத் தொடர்ந்து, திடீரென்று நினைத்துக் கொண்டதைப் போல வியாதியைப் பற்றிய மருத்துவரின் ஆங்கில உபன்யாசத்துடன் படம் முடிகிறது. அகரீதியான சிக்கல்களை தேவையற்ற விஷயங்கள் இல்லாமல் உளவியல் பார்வையில் தீவிரமாக அணுகிய ஒரு திரைப்படமாவது தமிழில் உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. இதே மாதிரியான குறைபாட்டை வேறு ஒரு நோக்கில் அணுகின ஒரு திரைப்படத்தைப் பற்றி கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.

பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி?' பதின்ம வயதுகளைத் தாண்டின காதலில் ஏற்படும் பிரச்சினைகளை எள்ளலோடும் ஒரு தீவிரமற்ற தன்மையிலும் முன்வைத்தது. குறும்பட உலகிலிருந்து திரைப்பட உலகிற்கு வந்து வெற்றி பெற்றதின் மூலம் ஒரு முன்மாதிரியையும் பல இளைஞர்களுக்கு நம்பிக்கையும் ஏற்படுத்தியது இத்திரைப்படம். குறும்படத்தையே இழுத்து நீளமாக்கியதின் மூலம் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வை ஒரு குறையாக இதில் காணலாம். மேலும் பிரதான பாத்திரம் திடீரென்று கேமிராவை நோக்கி பார்வையாளர்களிடம் உரையாடுவது, பெண்களின் மனவோட்டங்கள் குறித்து நாயகன் தொடர்ந்து உபன்யாசம் செய்தது போன்றவை சில தருணங்களில் சுவாரசியமானதாக இருந்தாலும் சலிப்பூட்டுவதாகவே இருந்தது. இதே மாதிரியான காதலில் ஏற்படும் ஆண்-பெண் உறவுச் சிக்கலை தீவிரமான பார்வையில் சொல்லிச் சென்றது கெளதமின் 'நீதானே என் பொன் வசந்தம்'.  இந்த இயக்குநரின் முந்தைய திரைப்படங்களில் ஒன்றான 'விண்ணைத் தாண்டி வருவாயா'வின் நீட்சி அல்லது இன்னொரு பரிமாணம் என 'நீதானே என் பொன் வசந்தத்தை சொல்லலாம். ஏறக்குறைய கடைசிக் காட்சி வரை இருவரின் ஈகோவும் சளைக்காமல் பயணம் செய்தது. சமந்தா இதில் அருமையாக நடித்திருந்தார். 

இந்தக் காதல் வரிசையில் முக்கியமானதொரு திரைப்படம் 'அட்டகத்தி'. காதல் என்கிற விஷயத்தை முக்கியமான கச்சாப்பொருளாக  எத்தனை ஆண்டுகளானாலும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டு பயணிக்கிறது தமிழ்சினிமா. ஆனால் இதை வைத்தாவாது உருப்படியான ஒரு சினிமாவையாவது உற்பத்தி செய்திருக்கிறதா என்றால் இல்லை. காதல் குறித்து அதுவரை தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கும் அத்தனை பிம்பங்களையும் அடித்துத் துவைத்திரு்க்கிறது 'அட்டகத்தி'.  'காதல் -ன்றது ஒருத்தனுக்கு ஒரு முறைதான் வரும்' என்று லாலாலா...பின்னணியுடன் வரும் அபத்தமான வசனங்களை எள்ளி நகையாடியிருக்கிறது 'அட்டகத்தி'. 

நாம் காலையில் உபயோகிக்கும் பற்பசை முதல் இரவில் உபயோகிக்கும் ஆணுறை வரை அனைத்தையும் தீர்மானிப்பது நம்மை ஆளும் அரசியல் என்பதை சொல்கிறது மதுபானக்கடை. இதிலும் கிளைக்கதையாக ஒரு காதல் உண்டு! மதுவிற்பனை மூலம் பெருமளவிற்கான வருவாயை ஈட்டும் இதே அரசு, 'மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு' என்று பிரச்சாரம் செய்வது முரண்நகைக்கு சிறந்த உதாரணம். இந்தப் பிரச்சாரத்தை இப்போது திரைப்படக் காட்சிகளிலும் போட்டுத் தொலைக்கிறார்கள். தமிழன் அருந்தி வந்த 'கள்'  இன்று காணாமற் போய் அந்த இடத்தை விஸ்கியும் பீரும் இட்டு நிரப்பியிருக்கின்றன. பொதுக் கழிவறை போன்ற இடங்கள்தான் இன்று தமிழகத்தின் மதுக்கூடங்களாக நுரைத்து வழிகின்றன. மது அருந்துபவனை இதற்கு மேலும் அவமானப்படுத்தி விட முடியாது. என்றாலும் எல்லாவற்றையும சகித்துக் கொள்வது போல இதையும் சகித்துக் கொண்டிருக்கிறான் தமிழன். கதை என்று எதுவுமில்லாமல் மதுபானக் கடையில் நிகழும் சம்பவங்களையே கோர்வையாக தொகுத்து 'மதுபானக் கடை'யாக உருவாக்கியிருக்கும் வகையில் முக்கியமானதொரு காட்சி ஊடக ஆவணமாக திகழ்கிறது 'மதுபானக்கடை'.

வழக்கு எண் 18/9 ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி என்றாலும் பெண்களின் மீதான வன்முறை, வர்க்க அரசியல், நகர்மயமாயதலின் துயரம், சமகால காதல் என்று பல விஷயங்களை ஒரே திரைப்படத்தின் மூலமாக உணர்த்த வந்ததில் ஓர் ஆவணப்படத்தின் வாசனையும் பிரச்சார தொனியும் வந்து விட்டன. 'காதல்' படம் தந்த வெற்றியினாலோ என்னவோ, 'Based on a True Story' என்கிற கிளிஷேவில் பாலாஜி சக்திவேல் மாட்டிக் கொண்டிருப்பதாக  தோன்றுகிறது. வசந்தபாலனின் 'அரவானும்' கவனிக்கத்தகுந்த முயற்சி. 18-ம் நூற்றாண்டின் தென்தமிழகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியலை  பதிவாக்கியிருந்தது. ஆனால் சொதப்பலான திரைக்கதையால் அத்தனையும் வீணாகியது. அதுவரை ஒரளவிற்கு சீராகச் சென்று கொண்டிருந்த திரைக்கதை 'வரிப்புலியின்' பிளாஷ் பேக்கினுள் நுழைந்தவுடன் 'சினிமாத்தனமாகி' விட்டது. மேலும் அந்தக் காலக்கட்ட சித்தரிப்புகளில் நம்பகத்தன்மையில்லை. காவல்கோட்டம்' என்கிற புதினத்தின் ஒரு பகுதியிலிருந்து திரைக்கதையை கட்டி எழுப்பியிருப்பதின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் தொடர்பு ஏற்படுத்தியிருக்கும் நல்ல முயற்சிகளில் இதுவொன்று. 

ஹாலிவுட் நீண்ட காலமாக மென்று துப்பிக் கொண்டிருக்கும் 'ஹாரர்' வகைமையிலான திரைக்கதையைக் கொண்டிருந்தது 'பீட்சா'. படத்தில் தர்க்க்ப பிழையும் நம்பகத்தன்மையற்ற தன்மையும் இருந்தாலும் படத்தைப் பார்த்து முடித்த பிறகுதான் அவற்றை பற்றி யோசிக்க வைக்குமளவிற்கு சுவாரசியமான திரைக்கதையின் மூலம் கவனத்தை ஈர்த்திருந்தார் கார்த்திக் சுப்பராஜ். இந்த வருடத்தில் வியாபார ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றது விஜய்யின் 'துப்பாக்கி'. வழக்கமான வணிகமசாலா திரைப்படமென்றாலும் ஆறுதலளிக்கும் வகையில் தனது அதிநாயக பிம்பத்தை பெருமளவிற்கு கைவிட்டிருந்தார் விஜய். நம்பகத்தன்மையற்று இருந்தாலும் வேகமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. 'இசுலாமியர்கள் தீவிரவாதிகள்' என்று பொதுப்புத்தியில் தொடர்ந்து கட்டமைக்கப்படும் அரசியலை இந்தப்படமும் கடைப்பிடித்து எதிர்ப்பைச் சம்பாதித்தது. 

தமிழக மீனவர் பிரச்சினையைப் பற்றி பேசும் படம் என்பதான சித்திரத்தை அது வெளிவருவதற்கு முன் அளித்திருந்தது 'நீர்ப்பறவை'. ஆனால் அது மிகப் பெரிய வதந்தியாக முடிந்து போனது சோகமான ஒன்று. மோசமான திரைக்கதை. காட்சிகள் நிகழ்வதான பிரதேசத்தையும் மொழியையும் சித்தரித்திருந்தில் உள்ள பிழைகள், காலக்குழப்பங்கள் போன்றவை படத்தை சிதைத்திருந்தன. சமூக நல்லிணத்திற்கான தேசிய விருதைப் பெறுவதற்கான முயற்சியோ என்கிற ஐயத்தை படம் ஏற்படுத்தியிருந்தது. என்றாலும் வணிகநோக்குத் திரைப்படங்களின் சம்பிரதாயங்களை இயக்குநர் தவிர்த்திருந்த காரணத்திற்காக பாராட்டுக்குரியவராகிறார். ஆனால் சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசுவதான பாவனையில் வழக்கமான காதல் படமாகவே 'நீர்ப்பறவை' அமைந்து போனது. 

தமிழ் சினிமாவில் இதுவரை ' இராமநாராயண' சர்க்கஸ் யானைகளையும் அதன் நாடகத்தனமான சாகசங்களையும் மாத்திரமே பார்த்து வந்திருக்கிறோம். முதன் முதலாக யானையையும் பாகனையும் பிரதான பாத்திரங்களாக அமைத்து வெளிவந்தது 'கும்கி'. அருமையான வாய்ப்பு. யானைகளுக்கும் பாகன்களுக்குமான உறவு, அதிலுள்ள நுண்தகவல்கள், யானைகளின் வழித்தடங்கள், வாழ்விடங்கள், நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் அவை ஊருக்குள் நுழைய வேண்டிய நிலை போன்றவற்றை படத்தின் ஊடாக சொல்லியிருக்கலாம். மாறாக இதையும் ஒரு காதல் படமாகவே அணுகியிருந்தார் இயக்குநர். அது மாத்திரமல்ல. 'காட்டு யானைகளின் அட்டகாசம், வெறிச்செயல்' என வெகுஜன ஊடகங்கள் சித்தரிக்கும் அதே விஷயத்தையே படத்திலும் அழுத்தமாக பதிவு செய்திருந்தார். விலங்குகளையும் பறவைகளையும் மனித குலத்திற்கு எதிரானவைகளாக கொடூரமானவைகளாக சித்தரிக்கும் ஹாலிவுட்தனத்தையே 'கும்கி'யும் பின்பற்றியது. 

யானை தோற்றுப் போன நிலையில் ஈ ஜெயித்திருப்பதுதான் முக்கியமான விஷயம். சூப்பர் ஸ்டார்கள், நடிகர்கள், புரட்சி தமிழர்கள், தளபதிகள் .. போன்ற ஊதிப்பெருக்கப்பட்ட அதிநாயக பிம்பங்களையே தமிழ் சினிமா நம்பியிருப்பதான மாயையை அடித்து நொறுக்கியிருக்கிறது நான் ஈ. தமிழ் சினிமாவில் கணினி நுட்பம் பொருத்தமற்ற முறையில் செயற்கையாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு ஈயை பிரதானமான பாத்திரமாக வைத்து சுவாரசியமாக கதை சொல்லியிருந்தார் ராஜமவுலி. குழந்தைக்கு கதை சொல்வதான பாவனையில் துவங்கும் இத்திரைப்படத்தை தர்க்கப்பிழைகள் பற்றிய பிரக்ஞையில்லாமல் நம்மை ஒப்படைத்துக் கொண்டால் ரசித்துப் பார்க்க முடியும். சினிமாவிற்கு பிரதான நடிகர்களோ, அவர்களின் பிம்பங்களோ தேவையில்லை, கணினி நுட்பத்தைக் கொண்டும் திரைக்கதை அமைக்கும் திறமையையும் கொண்டு வெற்றி பெற முடியும் என்கிற ஆரோக்கியமான விஷயத்தை துவக்கி வைத்திருக்கிறது நான் ஈ. 

சமகால கல்வித்துறையின் அபத்தங்களைப் பற்றி பேசுபவைகளாக மூன்று படங்களை சொல்லலாம். ஷங்கர் இயக்கிய 'நண்பன்'. ஒரு சமூகப் பிரச்சினையை முன்வைப்பதான பாவனையில் தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலாவை ஹை-டெக் முறையில் பரிமாறும் வித்தை தெரிந்தவர் ஷங்கர். இலியானாவின் இடுப்பையும் இன்ஜினியரிங் படிப்பையும் ஒரே புள்ளியில் இணைப்பவர். த்ரீ இடியட்ஸ் என்ற சுமாரான இந்திப்படத்தை தமது பாணியில் மோசமாக இயக்கியதே இவரது சாதனை. பிரகாஷ்ராஜ் இயக்கிய 'தோனி' , மதிப்பெண்தான் சிறந்த கல்வியின் அடையாளமா என்கிற கேள்வியை எழுப்பினாலும் கிரிக்கெட்டையும் ஊடாக முன்வைத்தது ஒரு நெருடல். 'சாட்டை'. இதிலும் காதல் உண்டு! அரசுப் பள்ளிகளின் ஆசிரி்யர்கள் கூலிக்காக மாரடிக்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கினால் அரசுப் பள்ளிகளும் சிறப்பான கல்வியை அளிக்க முடியும் என்பதை பிரச்சாரத் தொனியோடு சொல்கிறது.

*********

2012-
ன் சிறந்த சினிமா வாக 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' என்பதை முன்வைக்க விரும்புகிறேன். மிகச் சுமாராக உருவாக்கப்பட்ட, நாடகத்தனமான, வலுவான கதை ஏதுமில்லாத, நம்பகத்தன்மை போதாத, குறைந்தபட்சம் பிரமிக்க வைக்கும் தொழில் நுட்பம் கூட ஏதுமில்லாத 'நகொபகா' -வை ஏன் நான் சிறந்த சினிமாவாக கருதுகிறேன்?. 

தமிழ் சினிமாவில் காதல் என்கிற சமாச்சாரம் பல ஆண்டுகளாகவே முதிர்ச்சியற்ற தன்மையோடு சலிக்க சலிக்க உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. காதலை ஓர் ஒவ்வாமையாகவே மாற்றி விட்ட தமிழ் சினிமாவில் அதைப் பற்றி பேசாத காரணத்தினாலேயே 'நகொபகா' தனித்து நிற்கிறது. மணமகளாக வரும் பெண் பாத்திரம் கூட ஏறக்குறைய படம் முக்கால்வாசியைக் கடந்த பிறகுதான் வருகிறது. அது மாத்திரமல்ல, தமிழ் சினிமாவின் வழக்கமான சம்பிதாயங்களான பாடல்கள், சண்டைக்காட்சி, சென்டிமென்ட் போன்றவைகளை தவிர்த்திருப்பதாலும் - இதுவே மாற்று சினிமாவிற்கான அடையாளங்களல்ல என்றாலும் - இத்திரைப்படம் தனித்துத் தெரிகிறது. 

திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில் கிரிக்கெட் விளையாடச் செல்கிறான் ஓர் இளைஞன். தவறி கீழே விழும் நிலையில் தலையில் அடிபட்டு தற்காலிக ஞாபகக் குறைபாடு' ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடமாகவுள்ள நினைவு முற்றிலும் அழிந்து போகிறது. அவனது திருமணத்தையும் மறக்கிறான். அவனுடைய மூன்று நண்பர்கள் இந்த விஷயத்தை மற்றவர்களிடமிருந்து மறைத்து மிகச் சாமர்த்தியமாக திருமணத்தை நடத்துவதும் பின்பு அவனது நினைவு மீள்வதுமாக படம் நிறைவுபெறுகிறது. மெலோடிராமாவாக கண்ணீர்க் காட்சிகளுடன் சொல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் உள்ள இந்த உள்ளடக்கத்தை சிரிக்க சிரிக்கச் சொல்லியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தை வித்தியாசப்படுத்துகிறது. 

கிரிக்கெட் விளையாடுவதில் துவங்கும் திரைப்படம் எங்கும் திசை மாறாமல் இறுதி வரை அதே கால வரிசையில் பயணிக்கிறது. எங்குமே கிளைக்கதையாகவோ, பிளாஷ்பேக்காகவோ விலகவில்லை. மங்கலகரமான வசனம் மற்றும் காட்சிகளுடன் துவங்கும் ஆச்சாரமான தமிழ் சினிமாக்களுக்கு இடையில் 'நேரமே சரியில்லடா' என்கிற வசனத்துடன்தான் படம் துவங்குகிறது. 

இந்தப் படத்தின் முக்கியமான விஷயம் பாத்திரங்களுக்கான தேர்வு. எவருமே பிரபலமான, மக்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர்கள் கிடையாது. நமக்குப் பக்கத்தில் இயங்கும் மனிதர்களைப் போலவே இயல்பானவர்களாக இருக்கிறார்கள். அவரவர்களுக்கான தனித்தன்மையான குணாதியங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். சரஸ் என்கிற நண்பன் பொறுப்பானவனாக, பிரச்சினையை சாதுர்யமாக தீர்ப்பவனாக இருக்கிறான். பக்ஸ் என்கிற பகவதி 'எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக' இருக்கிறான். தனது ஈகோ சிறிது சீண்டப்பட்டாலும் கோபப்படுவனாக இருக்கிறான். பாஜி என்கிற பாலாஜி சற்று வெள்ளந்தியாக இருக்கிறான். பக்ஸூக்கும் பாலாஜிக்கும் படம் பூராவும் நிகழும் மெலிதான ஈகோ மோதலும் சீண்டலும் ரசிக்கத் தக்க வைக்கும் காட்சிகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இத்திரைப்படத்தை பார்க்கிற ஒவ்வொருமே தங்களின் நண்பர்களின் குழுவை நினைவு கூர்ந்து அதனோடு ஒப்பிட்டுப் பார்த்து புன்னகைக்கும் வகையில் காட்சிகள் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அடிநாதமாக இந்த நால்வருக்குள்ளும் இயங்கும் நட்பும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. கிரேசி மோகன் வசனங்களைப் போல செயற்கையானதாக அல்லாமல் இயல்பான உரையாடல்களிலேயே நகைச்சுவை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

பிரேமாக விஜய் சேதுபதி அருமையாக நடித்திருக்கிறார். 'என்னாச்சி.. கிரிக்கெட் விளையாடினோம்..'' என்று தமக்கு நிகழ்ந்த விபத்தைப் பற்றிய வசனத்தை மாத்திரமே படம் பூராவும் பேச வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. ஆனால் சலிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயமுள்ள  இந்த வசனமே வேறு வேறு சூழ்நிலைகளில் திறமையாக பயன்படுத்தப்பட்டு பார்வையாளர்களிடம் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. தற்காலிக ஞாபகக் குறைபாடுள்ளவனின் குழப்பமான எதிர்வினைகளை மற்றவர்களிடமிருந்து - அதுவும் ஒரு கல்யாண மேடையில் - எப்படி மறைக்க முடியும் என்கிற அடிப்படையான, தர்க்கபூர்வமான கேள்வியை பார்வையாளனிடம் எழுப்புகிறது இத்திரைப்படத்தின் கதை. இது தொடர்பான காட்சிகள் அமெச்சூராக இருந்தாலும் நகைச்சுவையால் அதை மழுப்பியிருக்கிறார்கள். ஆனால் படம் முடியும் போது இதற்கான விளக்கத்தை பார்வையாளர்களிடம் முன்வைக்கிறார் இயக்குநர். இதே போன்றதொரு சம்பவம் ஒரு தனிநபருக்கு ஏற்பட்டு - அது இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரே - இதே போன்று நண்பர்களால் அவருக்கு திருமணம் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஓர் உண்மைச் சம்பவத்தையே திரைப்படம் அடித்தளமாக கொண்டிருக்கிறது என்கிற செய்தியின் மூலம் இந்தக் கேள்விக்கு பதிலளித்து விடுகிறார் இயக்குநர் 

சரி. 2013-ல் தமிழ் சினிமா எப்படியிருக்கும்? வருடத்தின் துவக்கத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்றொரு திரைக்காவியம் வெளியாகியிருக்கிறது. அதைப் பார்த்தால் இதற்கான விடை நமக்கு கிடைத்து விடும். மக்களின் ரசனை மாற்றமும், திறமையான புதிய இயக்குநர்களுக்கான வணிக கட்டுப்பாடற்ற சுதந்திரமும்தான் தமிழ் சினிமாவின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்ச முடியும். .

- உயிர்மை - பிப்ரவரி 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Sunday, February 10, 2013

Kon-Tiki - நார்வே திரைப்படம் - வரலாற்றை நிறுவுதல்


Thor Heyerdahl என்கிற இனக்குழு ஆராய்ச்சியாளர், தம்முடைய ஆய்வொன்றை நிறுவ பெருவிற்கும் பொலினிசியாவிற்கும் இடையில் 1947-ல் சாகசமான கடற்பயணமொன்றை நிகழ்ததினார். தம்முடைய உயிரையும் பணயம் வைத்து வரலாற்றை நிறுவும் பிடிவாதத்திற்கர்கவே இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார். இதன் பின்னணி மிக சுவாரசியமானது. இந்தப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, Kon-Tiki  (2012) என்கிற நார்வே திரைப்படம்,

2012 அகாதமி விருதுகளில் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட' பிரிவில் இத்திரைப்படம் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கோல்டன் குளோப் விருதிலும் நாமினேஷனில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை. நார்வே நாட்டிலிருந்து இது போன்ற சர்வதேச  விருதுகளுக்காக நாமினேஷனில் தோந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. மாறாக இந்தப் பயணத்தைக் கொண்டு தோர் உருவாக்கிய ஆவணப்படம் (Documentary)1950-ல் அகாதமி விருதை வென்றிருக்கிறது.

மேற்கிலிருந்து வந்த மனிதர்கள் மூலமே பொலினிசியா உருவாகியிருக்க முடியும் என்று மனிதவியல் ஆராய்ச்சியாளர்கள் அதுவரை நம்பியும் எழுதியும் கொண்டிருந்தனர். தோர் இதற்கு மாற்றான ஓர் ஆய்வை முன்வைத்தார். இந்த ஆராய்ச்சிக்காக பத்து ஆண்டுகளை செலவழித்தார். தென்அமெரிக்காவிலிருந்து கடலின் மூலம் பொலினிசியாவிற்கு பசிபிக் பெருங்கடலின் மூலம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருக்க முடியும் என்பதை அவர் தீவிரமான நம்பினார். அவரது ஆராய்ச்சியை எந்த பதிப்பகமும் ஏற்கவில்லை. படகு என்கிற போக்குவரத்து சாதனம் அந்தக் காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்படாமலிருந்ததால் தோர் குறிப்பிடும் கடற்பயணம் நிகழ்ந்திருக்க சாத்தியமேயில்லை என்பது பதிப்பகத்தார்களின் வாதம். ஆனால் Raft எனப்படும் காற்றாடி மூலம் இயங்கும் அடிப்படையான படகைக் கொண்டு அந்தப் பயணம் நிகழ்ந்திருக்கும் என்று தோர் தீவிரமாக நம்பினார். பதிப்பத்தார் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புறக்கணிப்பு அவரை வருத்தம் கொள்ள வைத்தது.

தம்முடைய ஆய்வை அழுத்தமாக நிரூபிக்க விபரீதமான முடிவொன்றை எடுத்தார். 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக அவர் நம்பும் பயணத்தை அதே முறையில் 1947-ல் நிகழ்த்துவது. அதாவது நவீன படகையும சாதனங்களையும் உபயோகப்படுத்தாமல் முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியான காற்றாடிப் படகின் மூலம் பசிபிக் பெருங்கடலை கடப்பது. (என்றாலும் ரேடியோ கருவிகள், கத்திகள், வரைபடம் போன்ற நவீன உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் காற்றாடிப் படகின் மூலம் இந்தப் பயணம் நிகழ்ந்திருக்க முடியும் என்பதை நிறுவுவதே அவரது முதன்மையான நோக்கம்).

ஆட்கொல்லி சுறாக்களும் பெரிய படகுகள், கப்பல்களையே கவிழ்த்து வீசும் மோசமான வானிலை கொண்ட பெருங்கடலில் நிகழும் இந்த ஆபத்தான பயணத்திற்கான நிதியுதவி கிடைப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. மனைவியின் ஆட்சேபத்தையும் இரண்டு மகன்களின் பிரிவையும் தாங்கிக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய தனிப்பட்ட காரண்ஙகள் வேறு.

பழைய கால முறையிலான படகை இதற்காக உருவாக்கினார். இன்கா நாகரிகத்தில் சூரியக் கடவுளின் பெயர் Kon-Tiki. அதையே தம்முடைய படகிற்கு பெயராக வைத்தார் தோர்.

1947-ம் ஆண்டு ஏப்ரல்28-ம் தேதி இந்தப் பயணம் துவங்குகிறது. தோர் உள்ளிட்ட ஆறு நபர்கள். சுமார் 4300 மைல்கள்.101 நாட்கள். நிறைய சிரமங்களுக்கு இடையிலும் உயிராபத்திற்கு இடையில் ஆகஸ்டு 7, 1947 அன்று இந்த வரலாற்றுப் பயணம் நிறைவுறுகிறது.

Joachim Rønning இயக்கியுள்ள இத்திரைப்படம், பயணத்திற்கு முந்தைய காட்சிகளையும் பயணக் காட்சிகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது. சிறுவயதில் தோருக்கு ஏற்படும் விபத்துக் காட்சியோடுதான் படம் துவங்குகிறது. சிறுவன் தோர் விளையாட்டின் போது பனிப்பாறைக்கு அடியில் நீரில் மூழ்கி அவனுடைய நண்பனால் காப்பாற்றப்படுகிறான். இந்த விபத்து அவனுடைய ஆழ்மனதில் பதிந்து விடுவதால் நீச்சலை கற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தக் குறைபாட்டை மீறி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்ள தோர் முடிவு செய்வது அவரது மன உறுதிக்கு சான்றாக உள்ளது.



தோர் மற்றும் அவரது நண்பர்களுடன் படகில் பயணம் செய்யும் இன்னொரு நபராக (Herman Watzinger)  Anders Baasmo Christiansen அற்புதமாக நடித்துள்ளார். திரைப்படத்தின் படி குளிர்பதனப் பெட்டி விற்பனையாளராக உள்ள இவர், தோர் தம்முடைய நண்பர்களுடன் படகுப் பயணத்தைப் பற்றியும் அதற்கான நிராகரிப்புகளையும் பற்றி உரையாடுவதைக் கண்டு தோரை பின்தொடர்ந்து சென்று அந்தப் பயணத்தில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டுகிறார். தம்மை விட உற்சாகமாகவுள்ள ஹெர்மனை, தோர் பயணத்தில் இணைத்துக் கொள்கிறார். ஆனால் மற்றவர்கள் இவரைக் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். பயணத்தின் போது இவர் பதட்டமானவராகவே உள்ளார். படகின் அடிக்கட்டைகள் தளர்ந்து கொண்டே வருவதை கவலையுடன் கவனித்துக் கொண்டே வருகிறார். அது அபாயத்தை நெருங்கும் வேளையில் தோரிடம் அதை சுட்டிக் காட்டி "படகு உடைந்து நாம் அழிந்து விடுவோம். ஆகையால் படகிலுள்ள இரும்புக் கம்பியின் மூலம் சரி செய்து விடலாம்" என்று முறையிடுகிறார். ஆனால் நவீன உபகரணங்களை மறுத்து பயணம் செய்யும் தோர் அதை உறுதியாக மறுத்து இரும்புக் கம்பிகளை கடலில் எறிந்து விடுகிறார். ஹெர்மன் கடலில் தவறி விழுந்து சுறாக்களிடம் மாட்டிக் கொள்ளும் காட்சியும் அனைவரும் இணைந்து அவரைக் காப்பாற்றும் பதட்டமான காட்சிகள் சிறப்பாக உருவாக்கப் பட்டுள்ளன..

1950-ல் தோர் உருவாக்கின ஆவணப்படத்தைப் பார்க்கும் ஆவலை இந்தத் திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது. 

இயற்கையை முதலில் அஞ்சிய ஆதி மனிதன் அதன் ரகசியங்கள் மெல்ல புலப்பட்ட பின்னர் அதை வென்றுவிடக்கூடிய நிறைவேறாத கனவுடன் முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். மனித குலத்தின் பயணத்தில் இந்த நிகழ்வுகள் வரலாறாக பதியப்படுகின்றன. இந்தப் பதிவுகளில் எத்தனை உண்மையானது, எத்தனை உண்மையிலிருந்து விலகி சுயபெருமைகளுக்காக திரிக்கப்பட்டது, திரிக்கப்படுவதின் பின்னாலுள்ள அரசியல் போன்றவற்றை அறிவது அவசியம்.

இந்தப் படத்தைப் பற்றி ஜனரஞ்சகமாக ஒருவரியில் சொல்வதென்றால் "வரலாறு முக்கியம் அமைச்சரே".
 
suresh kannan

Saturday, February 09, 2013

கடல் படத்தில் நுண்ணரசியல்



கடல் படத்திற்காக எழுதப்பட்ட சில விமர்சனங்களில் அரசியல் சார்ந்த ஓர் ஆட்சேபத்தை கண்டேன். அர்ஜூன் பாத்திரம் ஒரு கொலையை செய்து விட்டு 'கடல்ல மீன்பிடிக்கப் போறவங்கள வெளியூர்க்காரங்க சுட்டுடறாங்க இல்ல' என்று பேசும் வசனம் குறித்தானது. பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுட்டு சாகடிக்கும் படுகொலைகள் குறித்து 'மணிரத்னம் உண்மைக்கு மாறான சித்திரத்தை அளிக்கிறார்' என்பது இந்த விமர்சகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

இது மிக அபத்தமானதொன்று என்பது என் பார்வை. ஏன் என்று சொல்கிறேன்.

ஒரு பிரதியில் ஒளிந்திருக்கும் மறைபொருளை, எதிர் அரசியலை, நுட்பமான அரசியலை, உண்மையை கட்டுடைத்து வெளிக்கொணர்வது காலங்காலமாக விமர்சகர்கள் செய்யும் பணி. பிரதியை பொதுப்புத்தியுடன் மேலோட்டமாக அணுகுபவருக்கு இம்மாதிரியான வெளிச்சங்கள் புதிய தரிசனத்தை தரும்; அவாகளின் புரிதலை வேறொரு தளத்திற்கு நகர்த்தும். அந்த வகையில் இம்மாதிரியான விமர்சனங்கள் தேவையானதே.

ஆனால் நாளடைவில் ஒவ்வொரு பிரதியிலும் இம்மாதிரியான நுண்ணரசியலை தேடுவதை சில் முழு நேரத் தொழிலாகக் கொண்டு விட்டார்களா என்ற சந்தேகம் வருமளவிற்கு நுண்ணரசியல் தேடுவதில் உள்ள அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது. திரைப்படங்களில், குறிப்பிடத்தக்க இயக்குநர்களின் படங்கள் மாத்திரமே இம்மாதிரியான விவாதங்களுக்கு உள்ளான காலம் போய் வெகுஜனப் படங்கள், சாதாரண படங்கள், பொருட்படுத்த தேவையேயில்லாத படங்கள் கூட இந்த விமர்சகாகளின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. இந்த 'கண்டுபிடிப்புகளில்' சில அபத்தமானவைகளாக இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட வசனத்தையோ காட்சியையோ வைத்து 'நுண்ணரசியல்' தேடாமல் அந்த காட்சிக் கோர்வையை படம் முழுவதிலுமான பின்னணியோடு பொருத்திப் பார்த்து இயக்குநர் உள்நோக்கத்துடனோ அல்லது தன்னிச்சையாகவோ தவறான கருத்தை முன் வைத்திருந்தால் அதை சுட்டிக் காட்டுவதோ கண்டிப்பதோ ஏற்றதாக இருக்கும்.

கடல் படத்தில் அர்ஜூன் பேசும் அந்த வசனத்தின் காட்சிக்கு தொடர்பான நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்.

பெர்க்மான்ஸ் (அர்ஜூன்) தன் பழைய விரோதி சாம் (அர்விந்த் சுவாமி) மீது பொய்ப்பழி சுமத்தி சிறைக்கு அனுப்பியவுடன் அவருடைய தத்துப் பிள்ளையாக அறியப்படும் தாமஸை அழைத்து வரச் செய்கிறார். தான் குருவாக மதிக்கும் நபர் சிறைக்குச்செல்ல காரணமாயிருந்தவன் என்பதால் தாமஸ், பெர்க்மான்ஸ் மீது கோபமாக இருக்கிறான். அதே சமயம் தன்னை அவமதிக்கும் ஊர் மக்களின் முன்னால் நிமிர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்கிற தாகமும் அவனுக்கு இருக்கிறது. அதனால் கடத்தல் தொழில் செய்யும் பெர்க்மான்ஸிடம் இணைகிறான். பெர்க்மான்ஸும் இதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறான். என்றாலும் தாமஸின் மீது ஒரு கண் வைத்திருக்கிறான். (இவன் பாம்புடே... எனக்கு நிம்மதியா இருக்கறத விட உஷாரா இருக்கறதுதான் பிடிக்கும்').

தாமஸ தன்னுடைய தகப்பன் என்று நம்பும் செட்டியிடம் துப்பாக்கிகள் தவறுதலாக சென்று சேருமாறு ஏற்பாடு செய்கிறான் பெர்க்மான்ஸ். செட்டி துப்பாக்கிகளை விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் அதை தானே கண்டுபிடித்தது போல் தாமஸின் முன்னிலையிலேயே செட்டியை விசாரித்து பின்பு சுட்டுக் கொள்கிறான். இதற்கு தாமஸின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை அவனுடைய கண்கள் கவனிக்கின்றன. அதன் மூலம் தாமஸை இனங்கண்டு கொள்ளலாம். சாமிற்கு மேலும் நெருக்கடி தரலாம் என்பது அவனுடைய எண்ணமாக இருக்கக்கூடும். கொலையை நிகழ்த்தியுடன் அந்த வசனத்தை கூறுகிறான்.

'கடல்ல மீன்பிடிக்கப் போறவங்கள வெளியூர்க்காரங்க சுட்டுடறாங்க இல்ல'

குற்றத் தொழில் செய்கிறவர்கள் தாங்கள் நிகழ்த்தும் கொலைகளை திசை திருப்ப  விபத்து போல சித்தரிப்பது வழக்கமானதொன்று.  ஒருவரை  தண்டவாளத்தில் போட்டு ரயிலில் ஏற்பட்ட விபத்து போல காவல் துறையினரை நம்ப வைப்பது ஓர் உதாரணம். இந்த நோக்கில்தான் பெர்மான்ஸூம் அந்த உபாயத்தை தன் ஆளிடம் கையாளச் சொல்கிறான்.

சென்சார் மற்றும் சர்ச்சை காரணமாக இலங்கை கடற்படை என்பதை நேரடியாக குறிப்பிட முடியாததால் மறைமுகமாக வெளியூர்க்காரங்க என்கிற வசனம் கூறப்பட்டிருக்கிறது.  மேலும் இலங்கை கடற்படை என்றும்  அழுத்திச் சொல்ல முடியாது. சமீபத்தில் இத்தாலியக் கப்பலிலிருந்த பாதுகாவலர்கள் தமிழக மற்றும் கேரள மீனவர்களை கொன்ற செய்தியையும் இத்துடன் இணைத்து வாசிக்கலாம்.

இன்னொரு புறம் பார்த்தால் மேற்கண்ட வசனம் மூலம் மீனவர்கள் கடலில் கொல்லப்படுகிறார்கள் என்கிற செய்தியையும் அந்த வசனம் கூறிச் செல்வதை பார்க்க முடியும்.

வணிக சினிமா, படம் வெளியாவதற்கு தடையை ஏற்படுத்தும் காரணங்களை தவிர்க்கவே முயலும். அது சமூகப் பிரச்சினையை துணிச்சலுடனும் பிரக்ஞையுடனும் பேசும் என்று எதிர்பார்க்க முடியாது. அதையும் தவிர காட்சிப் பின்னணியோடு பார்க்கும் போது விமர்சகர்களின் மேற்குறிப்பிட்ட ஆட்சேபம் பொருத்தமில்லாமல் போவதை உணர முடியும்.

தொடர்புடைய பதிவு : எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு
suresh kannan

Sunday, February 03, 2013

கடல் - மணிரத்னத்தின் Intellectual menopause ..


தீவிரவாதம்+காதல், நிஜ ஆளுமைகளின் நிழலுருவாக்கம் என்கிற வார்ப்புருக்களின் வரிசையில் மணிரத்னத்திற்கு பிடித்தமானது இதிகாச ரீமிக்ஸ். அவ்வகையில் விவிலியத்தின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு கிருத்துவப் பின்னணயில்உருவாக்க்கப்பட்டிருக்கும் 'கடல்', தமிழ் சினிமாவின் மகத்தான ஆளுமைகளுள் ஒருவராக இருந்த  மணிரத்னத்தின் தொடர்ந்த வீழ்ச்சிகளுள் ஒன்றின் அடையாளமாகியிருப்பது துரதிர்ஷ்டம். கடவுள் x சாத்தான் என்கிற மதங்கள் உருவாக்கின கற்பிதம்தான் இந்தப் படத்தின் தோராயமானதொரு மையம். இதன் இடையில் ஒரு காதலுடனும் மிகுகற்பனையான பாடல்களுடனும் மெலோடிராமாக்களுடனும் 'மணிரத்னத்தின்' பிராண்டுடனும் சொல்லியாக வேண்டும். சிரமம்தான்.

இறையியல் கல்வி மாணவர்களாக முதிர்இளைஞர்களான தோற்றத்துடன் அறிமுகமாகிறார்கள் அர்ஜூனும் அர்விந்த் சுவாமியும். விவிலியத்தில் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்கிற அர்ஜூன் சாத்தானாகவும், மீ்ன்,கறி உண்ணாத அர்விந்த் சுவாமி, தேவனின் உண்மையான ஊழியராக கடவுளின் நகலாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணுடன் அர்ஜூன் கொள்கிற கலவியை (கிறிஸ்துவ மடங்களில் பெண்ணுடனான கலவி அரிது) அர்விந்த், குருமார்களிடம் காட்டிக் கொடுக்க, அவரை தன் எதிரியாக வரித்துக் கொண்டு வெளியேறுகிறது சாத்தான்.

முழுக்க முழுக்க அவிசுவாசிமான பாவிகளால் நிரம்பியிருக்கிற ஒரு மீனவக் கிராமத்திற்கு செல்கிறார் அர்விந்த். கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவர் ஸ்தாபித்து விட்டு போன கையோடு மூடப்பட்டிருக்கும் தோற்றத்துடன் உள்ள ஒரு தேவாலயத்தை 'தூய்மைப்படுத்திவிட்டு' உள்ளே செல்கிறார். மந்தையிலிருந்து விலகிய ஆடுகளை நல்வழிப்படுத்த தேவாலயத்தை மீன் சந்தைக்கே கொண்டு செல்கிறார். (DTH சேவை மாதிரி). அங்கே பொறுக்கித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் மீது அவர் கவனம் குவிகிறது. அக்கிராமத்தின் வெறுப்பிற்கு ஆளாகிய ஒரு பாலியல் தொழிலாளியின் மகன். அவனும் அந்த ஊரின் புறக்கணிப்பிற்கு ஆளாகிறான். அவனை நல்வழிப்படுத்தி வளர்த்தாலும் கள்ளச்சாவி போட்ட வண்டியில் முட்டை பரோட்டா தின்னச் சென்று விடுகிறான் அவன். மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்கிற விநோதமாக நடந்து கொள்கிற ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதல் வந்து விடுகிறது. "அடியே.." என்று பேஷன் ஷோ உடைகளுடன் கடல் பின்னணியில் ஒரு பாடல்.

அம்னிஷியா நோயாலோ என்னவோ அதுவரை காணாமற் போயிருந்த சாத்தான், அர்விந்தின் வாழ்வில் திடீரென்று குறுக்கிடுகிறது. தொழில்போட்டியால் குண்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் சாத்தானை "ரொம்பவும் நல்லவரான" அர்விந்த் காப்பாற்றுகிறார். பதிலுக்கு அவர் கற்பின் மீது களங்கத்தை ஏற்படுத்தி சிறைக்கு அனுப்பச் செய்கிறது சாத்தான். அர்விந்த்தின் தத்துப் பிள்ளைக்கு எல்லாப் பாவங்களையும் கற்றுக் கொடுத்து சாத்தானின் வசமாக்கிக் கொள்கிறது. சிறையிலிருந்து வெளிவரும் அர்விந்த் மக்களை நல்வழிப்படுத்தும் பிடிவாதத்துடன் மீண்டும் அந்தக் கிராமத்திற்கே செல்கிறார். காதல் தந்த ஞானஸ்தானத்தால் பரிசுத்தமாகிற இளைஞனும் சாத்தானிடமிருந்து விலகி தேவனுடன் இணைகிறான். தேவனுக்கு சாத்தானுக்கும் கடலில் நிகழ்கிற 'பயங்கர சண்டைக்காட்சிளை' தொடர்ந்து காதலர்கள் இணைகிறார்கள். அர்விந்த் தேவனின் மகிமையை தொண்டை நரம்பு புடைக்க உச்சஸ்தாயியி்ல் கத்திச் செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது. படம் பார்த்த பார்வையாளன், தான்  கடவுளா சாத்தானா என்கிற குழப்பம் விலகாமலேயே திரையரங்கிலிருந்து வெளியேறுகிறான். 

தமிழ் சினிமாவின் திரைமொழயிலும் உருவாக்கத்திலும்  மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின 'நாயகன்' திரைப்படத்தை உருவாக்கிய அதே மணிரத்னம்தான் இதை உருவாக்கியிருக்கிறார் என்பதை நம்ப சிரமமாய் இருக்கிறது. பழைய மணிரத்னமாய் இருந்தால்  மிகச் சிறப்பான இழைகளால் நெய்யப்பட்டிருக்கும் இந்தக் கதையை அற்புதமாக இயக்கியிருப்பார் என்று தோன்றுகிறது. எந்தவொரு பாத்திரமும் காட்சிக்கோர்வைகளும் அழுத்தமாக வெளிப்படவில்லை என்பதுதான் இத்திரைப்படத்தின் பிரதான குறை. 

அர்விந்த் சுவாமிக்கும் அர்ஜூனுக்கும் ஏற்படும் பகைமைதான் இந்தப் படத்தின் முக்கியமான துவக்கப் புள்ளி. அந்தப் பகைமைதான் அதற்குப் பிறகான காட்சிகளை நம்பகத்தன்மையுடனும் ஒன்றியும் பார்வையாளன் உணர்வதற்கான தொடர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் போதுமான வலுவுடனும் அழுத்தமாகவும் உருவாக்கப்படவில்லை. 'உன்னைப் பாவத்தில் ஆழ்த்தப் போவதுதான் உனக்கு நான் அளிக்கப் போகும் தண்டனை' என்கிற சபதத்துடனும் விலகுகிற சாத்தான், அர்விந்த்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டுமா, வேண்டமா? மாறாக தேவன்தான் சாத்தானின் வாழ்வில் ஒரு விபத்தின் மூலம் குறுக்கிடுகிறார். குறிப்பாக தேவன் x சாத்தான் என்கிற மைய இழையில்தான் பிரதானமாக இத்திரைப்படம் பயணித்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு விலகுதல்களின் மூலம் தன்னுடைய பலத்தை இழந்து நிற்கிறது. (இதற்கு ஆய்த எழுத்துவில் சூர்யாவிற்கும் பாரதிராஜாவிற்கும் அடக்கி வாசிக்கப்பட்ட தொனியில் ஆனால் அழுத்தமாக படம் நெடுக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பகைமையே தேவலை).

படத்தின் முதல் பாதி நன்றாக அமைந்திருப்பதாக ஒரு கருத்து உலவுகிறது. இருகோடுகள் தத்துவம் போல பிற்பகுதி மோசமாக இருப்பதால்தான் முதல்பகுதி நன்றாக இருப்பதாக அவர்களுக்கு தோன்றுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவிசுவாசியான சாத்தானான எனக்கு முழுப்படத்தின் உருவாக்கமுமே திராபையாத்தான் தெரிகிறது.

படத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு பாத்திரம் பியாட்ரிஸ். இத்தாலியக் கவிஞரான தாந்தேவின் படைப்பூக்கத்திற்கு காரணமாக இருக்கிற பெண். தாந்தே, பியாட்ரிஸின் மீது சிறுவயது முதலே காதல் கொள்கிறார். ஆனால் நெருங்கிப் பழகியதில்லை. தாந்தேவின் படைப்புகளில் அவரை நல்வழிப்படுத்தும் ஒரு தேவதையாக பியாட்ரிஸ் உருவகப்படுத்தியிருக்கிறார்

 அர்விந்த்சாமியால் நல்வழிப் படுத்தப்பட்டிருந்தாலும் அங்கிருந்து விலகி சாத்தானின் வசப்பட்டு பாவங்களைச் செய்யும் தாமஸ் என்கிற இளைஞனை தன்னுடைய தூய அன்பாலும் சிசுவின் ரத்தத்தாலும் அவனுடைய பாவங்களை கழுவி விடுகிறாள் 'கடல்' படத்த்தின் பியாட்ரிஸ். படத்தின் இரண்டாம் பகுதியில் ஒரு கீற்று போலவே இது வெளிப்பட்டு மறைந்து விடுகிறது. தன்னுடைய தாய் கொல்லப்படும் காட்சியை ஐந்து வயதில் பார்த்து விக்கித்து அந்த வயதின் ஆளுமையுடனே உறைந்து போகும் இவள் மருத்துவம் செய்வதில் மேதமையைக் கொண்டிருக்கிறாள். படத்தின் முக்கியமான பாத்திரமான பியாட்ரிஸை தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகிகளைப் போலவே சித்தரித்திருக்கிறார் இயக்குநர். க்ளிவேஜ் நன்றாகத் தெரியும் படி ஓடிவரும் காட்சியும் மணிரத்னம் படைக்கும் அழுத்தமான முத்திரைகளுள் ஒன்று. (சர்ச்சைக்குள்ளான முத்தக்காட்சியும் இடம் பெற்றிருந்தால் மணிரத்னத்தின் நோக்கம் முழுமை பெற்றிருக்கும். ஐந்து வயதே ஆளுமையுள்ள சிறுமி தொடர்பான பாத்திரத்தில் எப்படி அந்த முத்தக்காட்சியை சிந்திக்க முடிந்தது என்று தெரியவில்லை).

சாத்தானுக்கு எதிரான பாத்திரத்தில் நேர்ந்து விட்டதால் அர்விந்த்சாமியும் முழுக்க முழுக்க நல்லவராக வருகிறார். குறும்புக்காரச் சிறுவன் ஒருவன வீட்டில் நுழைந்து சிறுநீர் கழித்து விட்டு பணத்தை திருடிச் சென்றதைக் கூட கவனிக்காமல் (அல்லது கவனித்து விடுகிறாரா) ஜெபத்தின் மூலம் கிறிஸ்துவிடம் ஆழ்ந்து உரையாடிக் கொண்டிருப்பவர். (பாம்பேயில் கஷ்மீர் தீவிரவாதி அர்ப்பணிப்புடன் தொழுகை நடத்தும் காட்சியை இங்கு நினைவு கூரலாம்) என்றாலும் இவருக்கும் சமயங்களில் கோபம் வருகிறது. தவறு செய்யும் சிறுவனை ஒரு கன்னத்தில் அறைந்து விட்டு மறு கணமே இன்னொரு கன்னத்திலும் அறைகிறார். (கிறிஸ்துவின் போதனையை இடது வலமாகச் செய்தாலும் பொருந்தித்தானே வருகிறது). கிளைமாக்ஸில் சாத்தானை கொல்லவும் துணிகிறார். ஆனால் காதலின் மூலம் பரிசுத்தமாகியிருக்கிற இளைஞன், தேவனை அந்தக் கொலைப்பாவத்திலிருந்து தடுத்து நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்கிறான்.

'கடவுளால் நல்வழிப்படுத்தாதவரையும் காதல் நல்வழிப்படுத்தும்' என்பதே மணிரத்னம் பார்வையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிற ஒன்லைனாக எடுத்துக் கொள்ளலாம். படத்தில் குன்றின் மீதேறி கடலை நோக்கி இவர் தியானம் செய்யும் காட்சிகள் படத்தின் கிறித்துவ குறியீடுகளை அழுத்தமாக மெய்ப்பிக்கிற காட்சிகளாகும். தேவாலயத்திலுள்ள நாய்களை விரட்டி (பாவங்களை நாய்களாக உருவகப்படுத்தியிருப்பது அருமை) செல்லும் காட்சியும் குறிப்பிடத்தகுந்தது.

சாத்தானின் உருவகமாக வருகிற அர்ஜூன். ஆனால் பார்வையாளர்களுக்கு இந்தப் பாத்திரத்தில் ஏதும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக i am bond.. james bond... என்பது போல அடிக்கடி தன்னை சாத்தான் என்று படம் பூராவும் பிரகடனப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கூடவே மலைப்பாம்பு ஒன்றை தந்து படம் பூராவும தடவிக் கொண்டேயிருப்பது மாதிரி தந்திருந்தால் பார்வையாளர்களுக்கு இன்னமும் தெளிவாகப் புரிந்திருக்கும். 

படத்தின் பல நம்பகத்தன்மையற்ற காட்சிகள் படத்துடன் ஒன்றவிடாதவாறு நெருடிக் கொண்டேயிருக்கின்றன. படத்தில் தாமஸாக வரும் சிறுவனின் துவக்கக்காட்சிகள் செயற்கையான மெலோடிராமாக்களோடு சொல்லப் படுகிறது. (அந்தச் சிறுவன் நன்றாக நடிக்க வைக்கப் பட்டிருக்கிறான்). கர்த்தரிடம் விசுவாசமில்லாத அந்தக் கிராமத்தில் விபச்சாரம் அத்தனை குரூரமாக வெறுக்கப்படுவது முரணாக இருக்கிறது. என்னதான் பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவள் இறந்த பிறகு பிணத்தை அத்தனை அவமரியாதையோடு கொண்டு சென்று பெட்டிக்குள் அடங்காத காலை வெட்டி போடுமளவிற்கு அத்தனை குரூரமான மக்களா அவர்கள்? பார்வையாளனை அதிர்ச்சிக்குள்ளாக்கிற நோக்கத்தில் செயற்கையான குரூரத்துடன் சித்தரி்க்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகள் எரிச்சலையே உண்டாக்குகிறது.

இன்னொன்று பியாட்ரிஸ் பிரசவம் பார்க்கச் செல்லும் காட்சி. கிராமத்து ஆண்களும் பெண்களும் வெளியே நின்றிருக்க உதவிக்காக இளைஞனை அந்த அறைக்குள் அழைத்துச் செல்கிறாள் அவள். எந்த தமிழக கிராமத்தில் இதை ஒப்புக் கொள்வார்கள்? ஒரு இக்கட்டான நேரத்தில் துணைக்கு யாருமில்லாத சமயத்தில் இந்தப் பிரசவம் நிகழ்வதாக சித்தரித்திருந்தால் காட்சியின் நம்பகத்தன்மை கூடியிருக்குமல்லவா?.

மணிரத்னத்தின் படங்களில் பாத்திரங்கள் முதல் சந்திப்பிலேயே அத்தனை அன்னியோன்யமாக உரையாடிக் கொள்கிறார்கள். ஒரு கிராமத்திற்குள் நுழைகிற அந்நியனிடம் அத்தனை உரிமையாக மீன் விற்கிற பெண்களை மணிரத்ன படங்களில் மாத்திரமே காண முடியும். அது போலவே தாமஸ், பியாவை பேருந்தில் சந்திக்கிற முதல் காட்சியிலேயே அன்னோன்யமாக உரையாடத் துவங்குகிறான்.

படத்தில் நான் ரசித்த இரண்டு காட்சிக் கோர்வைகள் உள்ளன. அவைதான் மணிரத்னம் எனும் படைப்பாளி இன்னமும் உயிர்ப்புட்ன் ஜீவிப்பதற்கான சாட்சியங்கள். ஒன்று...

தாமஸ், தான் மணக்கவிருக்கும் பியாட்ரிஸை தன்னுடைய குருவான சாமிடம் அறிமுகப்படுத்த அழைத்துச் செல்கிறான். அவர்கள் அன்னியோன்யமாக உரையாட பரவசத்துடன் வெளியே வருகிறான். அப்போது சிறுவயது முரட்டுத்தனத்தில் அவன் சாமை ஆபாச வார்த்தைகளால் வசைந்த, டேப்ரிகார்டரில் பதியப்பட்ட ஒலிகள் கேட்கின்றன. சாம், பியாவிற்கு அதை போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார். முரட்டுத்தனமானதாக இருந்தாலும் பொதுவாக குழந்தைகளின் சிறுவயது குறும்புகளை பிற்பாடு நினைவுகூரும் போது அவற்றை சிரிப்புடன் கடந்து போவோம். சிறுவனின் வசைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது காமிரா இளைஞனை நோக்கியே இருக்கிறது. அவன் உள்ளே செல்கிறான். காமிராவும் பயணித்து உள்ளேயிருக்கும் சாமையும் பியாவையும் காண்பிக்கிறது. அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம் என நான் யூகித்தேன். ஆனால் தீவிரமான முகபாவத்துடன்தான் அவர்கள் அமாந்திருக்கிறார்கள். 'என்னடே வேணும் உனக்கு' என்று சாம் கேட்பதற்கு 'எங்க அம்மா தான்யா வேணும்.. அம்மா...அம்மா... என்று சிறுவன் உரக்க ஆவேசத்துடன் கத்தும்  ஒலியின் பின்னணியில் பியா எழுந்து வந்து தாய்மை பொங்க தாமஸை ஆதரவாக அணைத்துக் கொள்கிறாள்.

இரண்டாவது, தாமஸ் தன்னுடைய பாவங்கள் குறித்த குற்றவுணர்வை பியாவிடம் முன்வைப்பது. ஆனால் அவளுக்கு பாவம் என்றாலே என்னவென்று தெரியவிலலை. தான் செய்த கொலைகளை பட்டியலிட்டும் அவளுக்குப் புரிவதில்லை. "சரி. இனிமே செய்யாதே என்ன, எல்லாம் சரியாய்ப் போச்சு" என்கிறாள். தன்னுடைய குழந்தைமையின் மூலம் பரிசுத்தத்தை அவனுக்குள் நிரப்புகிறாள். அற்புதமான காட்சிகளாக இது பதிவாகியிருக்கிறது.

தெளிவில்லாமல் ஒலிக்கிற படத்தின் வட்டார வழக்கு வசனங்களை புரிந்து கொள்ள சிரமேற்படுத்துகிறது. சில அற்புதமான தருணங்களைத் தவிர ஏஆர்ரகுமான் தொடர்ந்து தனது இருப்பை நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரம் பின்னணி இசை போதும் என்கிற முதிர்ச்சியை எப்போது தமிழ் சினிமா அடையும் என்று தெரியவில்லை. மேலும் தனிப்பாடல்களாக அற்புதமாக ஒலிக்கும் ரகுமானின் இசையை தூத்துக்குடி கிராமத்தின் பின்னணியோடு அந்நியமல்லாமல் ஒட்டி வைத்துப் பார்க்க அபாரமான கற்பனைத் திறன் வேண்டும். மணிரத்னம் தனது பாடல்களை காட்சிப்படுத்துவதில் அதிக மெனக்கெடுவார் என்பது உறுதியாகிறது. ராஜீவ்மேனனின் காமிரா மிகுந்த அழகியலுடன் காட்சிகளை பதிவாக்கியிருக்கிறது. தாமஸ் முதன்முதலில் கடலுக்குப் போகும் காட்சி சிறப்பாக பதிவாகியிருந்தாலும் கணினி நுட்பத்தின் மெருகேற்றல்கள் அந்நியமாகத் தொடர்பில்லாமல் தெரிகின்றன. (துருத்தலாக Rear Projection shot வேறு). காட்சிகளின் தொடர்பற்ற தன்மையில் எடிட்டரின் சிரத்தையின்மை. (கிளைமாக்ஸ் சீன் அத்தனை நீளம் தேவையில்லை).

அர்விந்த் சாமி தனது பாத்திரத்தை அற்புதமாக உணர்ந்து நடித்திருக்கிறார். அர்ஜூனின் சாத்தான் வேடம் அத்தனை வலிமையாக வெளிப்படவில்லை. ரொம்பவும் சோகையான சாத்தான். ஆரண்ய காண்டத்தில் (காளையன்) சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்த கூத்துப்பட்டறை நடிகர் குரு சோமசுந்தரம் இதில் சாதாரண துணை நடிகர் மாதிரி பிரதானமற்ற பாத்திரத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது ஏமாற்றம்.  எத்தனையோ திறமையான இளைஞர்கள் வாய்ப்பில்லாமல் இருக்க, பிரபல நடிகர்களின் வாரிசுகள் என்கிற காரணத்திற்காகவே அவர்களை பிரதான பாத்திரங்களில் தமிழ் இயக்குநர்கள் நடிக்க வைப்பதின் பின்னாலுள்ள வணிகத்தந்திரம் எதுவென யோசிக்க வேண்டும். மக்களை திரைப்படத்திற்குள் இழுப்பதற்கான ஒரு வாய்ப்பா அது? (ராதாவோட பொண்ணு நடிச்சிருக்காம்). அறிமுக நாயகன் கெளதம் சிறப்பாக உழைத்திருக்கிறார். சற்று போஷாக்காக இருக்கிறார் என்பதைத் தவிர பியாட்ரிஸின் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமான குழந்தைமையுடன் இருக்கிறது துளசியின் முகம். (ஏன் அத்தனை ஒப்பனை).

தமிழ் இலக்கியமும் சினிமாவும் இணைய வேண்டும் என்கிற நீண்ட கால மனக்குறை சமீப காலங்களில் சர்த்தியமாகிக் கொண்டிருக்கிறது என்றாலும் இலக்கியவாதிகளை வணிக சினிமா விழுங்கி விடும் சோகம் புதுமைப்பித்தன் காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. வணிக நிர்ப்பந்தப்பங்களை மீறித்தான் அவர்கள் பிரகாசிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவிற்காக இலக்கியவாதிகளை உபயோகப்படுத்தாமல் அவர்கள் எவ்வித கட்டுப்பாடுமில்லாமல் ஏற்கெனவே எழுதியுள்ள படைப்புகளை இயக்குநர்கள் திரைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும். மணிரத்னம் என்கிற வலுவான கலைஆளுமை ரோஜாவைத் தொடர்ந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்து வணிக நிர்ப்பந்தங்களில் காணாமற் போய் இப்போது காலாவாதியும் ஆகிக் கொண்டிருக்கிறது என்பது ராவணணைத் தொடர்ந்து கடலிலும் நிரூபணமாகியிருக்கிறது. வருத்தமான விஷயமிது.

சத்ரியன் படத்தில் அவர் எழுதிய வசனத்தைப் போலவே 'வரணும்.. பழைய மணிரத்னமா வரணும்' என்பதுதான் என் விருப்பம்.

suresh kannan