Tuesday, April 24, 2012

ரவுடிகள் விழித்தெழும் தருணம்


 லிங்குசாமி இயக்கிய 'வேட்டை' பார்த்தேன். என்ன சொல்ல... ரன், பையா... என்று அவர் மீது நான் வழக்கமாக வைக்கும் குற்றச்சாட்டையே இதிலும் இன்னமும் அழுத்தமாக வைக்க வேண்டியுள்ளது. வழக்கம் போலவே இந்தப் படத்திலும் புஜபராக்கிரம பான்பராக் சவுரிமுடி அதிபயங்கர ரவடிகளை எவ்வித வன்முறை பின்புலமுமில்லாத, குறைந்த பட்சம் கராத்தே கிளாஸ் போவதாக ஒரு காட்சியில் கூட காண்பிக்கப்படாத  பால்மணம் மாறா இளைஞனொருவன் கதறக் கதற அடித்து நொறுக்குகிறான். அவர்கள் ரடிவுகளா அல்லது நங்கநல்லூர் கோயிஞ்சாமிகளா என்கிற புகைமயக்கத்தை நமக்கு ஏற்படுத்தும் வண்ணம்,பஞ்ச் டயலாக் பேசும் போது உரக்க சற்று பயப்படும் படி கெத்தாக பேசினாலும் சண்டைக்காட்சிகளில் தேமேவென்று அடிவாங்கிக் கொண்டு பின்பு கிராபிக்ஸில் மாய்மாலமாக மறைக்கப்படப் போகும் ரோப் உபயத்தில் வானில் பறந்து கீழே எதையாவது சரியாக உடைத்துக் கொண்டு விழுகிறார்கள்.

இயக்குநர் லிங்குசாமி முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ரவடியாவது அத்தனை சுலபமல்ல. திடீரென்று ஒருவன் 'ஒரு கோடி வெல்லு்ஙகள் சூர்யா' புண்ணியத்தில் பணக்காரனாக கூட ஆகி விடலாம். அல்லது திடீரென்று நன்றாகப் படித்து (வசூல்ராஜா மாதிரி) டாக்டராக கூட ஆகி விடலாம். ஆனால் பாருங்கள். ஜீப்பில் ஏறுவது மாதிரி அல்லாமல் உண்மையிலேயே ரவுடியாவதற்கு நாய் படாத பாடு பட வேண்டியிருக்கிறது. உபநயனம் நடத்தி வைத்து உபதேசிக்கப்படும் வேதம் போல சிறுவயதிலேயே அந்த முரட்டு வன்முறையை பழக வேண்டும். அதற்கான சூழலும் துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக அமைய வேண்டும். தொழில் பழகும் வரை அண்ணன்மார்களிடம் அடிபட்டே சாக வேண்டும். பான்பராக் வாங்கி்த் தருதல், கட்டிங்கில் பாக்கெட் நீர் மிக்ஸ் செய்தல், கஸ்டமர் இல்லாத நேரத்து சரோஜா அக்காவை விசாரித்து அழைத்து வருதல், கான்ஸ்டபிள்களுக்கு லெக்பீஸ்ஸூடன் பிரியாணி வாங்கி வருதல் என்று இன்னபிற கச்சடா முறைவாசல் அடிப்படை வேலையெல்லாம் செய்த பின்புதான் குழுமத்தில் ஒரு ஆள் என்கிற அடிப்படைத் தேர்விலேயே முன்னேற முடிகிறது.

இந்த இழவுகளையும் தாண்டி டீக்கடைகளில் சில்லறை அல்டாப் பஞ்சாயத்துக்கள் செய்வதற்கு தோதாக தினமும் இரண்டு நாட்டுக்கோழி முட்டை, குஸ்கா, பீஃப் எல்லாம் சாப்பிட்டு பேரக்ஸில் பளு தூக்கி டைட்பனியன் போட்டு எல்லா டிராமாவும் செய்ய வேண்டியிருக்கிறது. குடுமியுடன் கிராஸ் செய்பவனை "போடாங்க....'என்று தட்டி தன் வீரத்தை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. கஞ்சாப் பொட்டலம், சரக்கு உறை, ரயில்வே கிராஸிங் என்று சிறிது சிறிதாக முன்னேற வேண்டியிருக்கிறது. 'தல'யின் அபிமானத்தைப் பெற இரவு பகலாக நாய் படாத பாடு பட வேண்டியிருக்கிறது. 'அஸ்வின் ஆயில்' பெண்கள் பொறாமைப்படுமளவிற்கு அத்தனை நீளமான தலைமுடியை முறையாக பராமரிக்க எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை குறைந்த பட்சம் நினைத்துப் பார்த்தாலாவது நம்மையுமறியாமல் கண்ணீர் பெருகும்.

ஒரு ரவுடியாவதற்கான அடிப்படையே இத்தனை சிரமமென்றால் படிப்படியாக முன்னேறி ஒரு சமஸ்தானத்தை கைப்பற்றி தாதாவாவதற்கு எத்தனை சிரமம் என்பதை அடிப்படை மனித நேயம் உள்ளவர்கள் சற்று யூகித்தாவதுக் கொள்வது நல்லது. இதையெல்லாம் இயக்குநர் லிங்குசாமி அவர்கள் மீது அனுதாபப்பட்டாவது கதையை உருவாக்கும் போது கவனத்தில் கொள்வது நல்லது. அவர் மீது குற்றமில்லை. ஏதோ கோயில் க்யூவில் சுண்டல் வாங்குவது போல வரிசையாக வந்து அடிவாங்கிப் போவது மாதிரி காட்டப்படும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இந்த அவலம் தொடர்வது காணச் சகியாதது.

காட்சி ஊடகத்தின் மிக வலிமையான சினிமாவில் தங்கள் சமூகம் தொடர்ந்து கேவலப்படுத்தப்படுவது குறித்த விழிப்புணர்வும் பிரக்ஞையும் ரவுடிகளுக்கும் தாதாக்களுக்கும் ஏற்பட வேண்டும். கல்விப் பின்புலமில்லாத காரணத்தினால் அறியாமையில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு அறிவுசார் குழுமமும் ஆதரவாக நின்று இயங்கி ஊக்கப்படுத்துவது இன்றியமையாதது. இனி தமிழ் சினிமாவில் எந்தவொரு காட்சியிலும் யதார்த்தத்திற்கு புறம்பாக ரவுடிகள் சித்தரி்க்கப்பட்டால் தொடர்பான இயக்குநர்களையும் சீன்பிடிக்கும் உதவிகளையும் சட்டத்தின் துணை கொண்டு (அதாவது இரும்புச் சட்டம்) நீதிமன்ற வாசலிலேயே பாடம் புகட்ட வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் பரிந்துரைக்கிறேன். 

suresh kannan

Sunday, April 15, 2012

காட்சிப் பிழைகள்



நீண்ட நாட்களுக்குப் பி்றகு 'கலைஞர்' தொலைக்காட்சியில் புதுமுக இயக்குநர்களுக்கான நடைபெறும் குறும்பட போட்டி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதைப் பற்றி் random ஆக எழுதத் தோன்றியது. குறிப்பாக நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்ட ஒரு விஷயம். ஒரு பாத்திரத்தை வடிவமைக்கும் போது எத்தனை நுட்பமாக கவனித்து வடிவமைக்க வேண்டும் என்பதை விளக்குவதாக இருந்தது. மேலும் விஷூவல் மீடியத்தை அதற்குண்டான பிரக்ஞையுடன் பயன்படுத்த வேண்டும் என்பதும்.

அதை இறுதியில் பார்ப்போம்.

முதல் குறும்படத்தை ஏறக்குறைய அது முடியும் போதுதான் கவனிக்க ஆரம்பித்தேன். 'காக்க காக்க' சூர்யா குழு போல் மூன்று கிராமத்து பெண்கள் லோ ஆங்கிளில் வாய்ஸ் ஒவருடன் அறிமுகமாகிறார்கள் போலிருக்கிறது. "எங்களுக்கு ஒரு ஆசை இருக்கிறது". ஆண்களைப் போல டீக்கடை பெஞ்சில் அமர்ந்து டீயை உறிஞ்சி சாப்பிட வேண்டும் என்பதுதான் அவர்களின் அந்த ஆசை என்பது படத்தின் இறுதியில் தெரிகிறது.

காட்சியாக காண்பிக்கும் விஷயத்தை பாத்திரங்களின் மூலமாக மீண்டும் வார்த்தைகளில் சொல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதை வெற்றிமாறன் தனது விமர்சனத்தின் போது அழுத்தமாக வலியுறுத்தினார். குறிப்பாக டப்பிங் பேசுபவர்கள் காட்சிகளின் இடைவெளியை நிரப்புவதாக நினைத்துக் கொண்டு (இதை ஃபில்லிங் என்கிறார்கள்) வசன உச்சரிப்பு காண்பிக்கப்படாத கோணங்களின் போது அந்த காட்சி நிகழ்வை வார்தைகளாக பார்வையாளர்களுக்கு விவரிப்பது. உதாரணமாக ஒருவர் நிலத்தில் விழுந்து கிடக்கும் காட்சி என்றால் அது தொடர்பான காட்சி சட்டகம் (frame) மாத்திரம் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுவது என்று வைத்துக் கொள்வோம். பி்ன்னணிக் குரலில் ஏதோ ஒரு பாத்திரம் அந்தக் காட்சியை "எப்படி விழுந்து கிடக்கிறான்?" என்ற வசனத்தின் மூலம் மீண்டும் அதை திரும்பச் சொல்வது காட்சி வடிவத்திற்கு செய்யும் நெருடலான அவமரியாதை. டப்பிங் பேசுபவர்கள் சற்று உரிமை எடுத்துக் கொண்டு சமயங்களில் ஸ்கிரிப்டில் இல்லாத வசனத்தைக் கூட இவ்வாறான இடைவெளிகளில் பயன்படுத்துவதை இயக்குநர் கவனித்து தவிர்க்க வேண்டும் என்பதாக வெற்றிமாறன் குறிப்பிட விரும்பினார் என்பதாக புரிந்து கொள்கிறேன்.

அடுத்த குறும்படம் ராஜேந்திரன் பிரதர்ஸ் என்கிற நகைச்சுவைப்படம். சில சுவாரசியங்களைத் தவிர்த்து அபத்தமான கிளிஷே நகைச்சுவையால் நிரம்பினது. (ஆனால் இதுதான் அந்த வாரத்து சிறந்த குறும்படமாக தேர்வு பெற்றது). பாட்டியின் பொக்கை வாயின் மூலமாக காண்பிக்கப்படுவதான ஒரு பார்வைக் கோணம் சிறப்பாக உபயோகப்பட்டிரு்நதது..

இன்னொரு குறும்படம் கால்பந்து விளையாட்டு தொடர்பானது. ஆரம்பக்கட்ட இயக்குநர்கள் இவ்வாறான பெரிய கான்வாஸ் காட்சிகள் அடங்கிய விஷயத்தை எடுப்பது சற்று ரிஸ்க்கான விஷயம். விளையாட்டின் பிரம்மாண்டம் காட்சிகளில் நிச்சயம் வெளிப்பட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் சொதப்பி விடும். குறிப்பாக இதற்கு திறமையாக ஷாட் கம்போஷிஷன் செய்யும் ஒளிப்பதிவாளர் தேவை. இந்தக் குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக இதை சமாளித்திருந்தார் என்றாலும் காட்சிகளின் நம்பகத்தன்மை பல்லிளித்தது. விளையாட்டுப் பயிற்சியின் போது பார்வையாளர்கள் யாருமில்லாதது கூட ஏற்றுக் கொள்ளலாம். பயிற்சி நாட்களை count down -ல் காண்பித்து விட்டு Tournament- இறுதி நாளில் கூட மொட்டை மைதானத்தில் விளையாடுவது காட்சியின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக குலைத்து விடுகிறது. என்றாலும் சில ஷாட்கள் சுவாரசியமாக இருந்தன. குறிப்பாக அந்தச் சிறுவன் அடிக்கும் back shoot coal ஷாட் சிறப்பாகவே பதிவாகியிருந்தது. விளையாட்டின் பரபரப்பைக் கூட்டுவதற்கு பார்வையாளர்களின் உணர்ச்சிகரகமான முகபாவங்களும் பின்னணி இசையும் முக்கியம். (சில்வஸ்டர் ஸ்டாலினின் ராக்கி சீரிஸை இங்கு நினைவு கூரலாம்). இந்தப் படத்தில் பார்வையாளர்கள் இல்லாதது மிகப் பெரிய குறை. சிறுவன் அடிக்கிற கோலுக்குக் கூட அந்தக் குழுவின் பயிற்சியாளர் உற்சாகமாக அல்லாமல் மிகச் சோகையான எதிர்வினையை தந்திருந்த காட்சிகள் இயக்குநர் கவனித்து சரி செய்ய வேண்டியவை.

சரி. இந்தப் படத்தில் வெற்றிமாறன் குறிப்பிட்டுச் சொன்ன பிழையை பற்றிப் பார்ப்போம். பாத்திரத்தின் வடிவமைப்புப்படி அந்தச் சிறுவனுக்கு பிறவியிலிருந்தே காது கேட்காது. இதை படத்தின் இறுதியில் சிறு அதிர்ச்சியாக பார்வையாளர்கள் உணரும் படி இயக்குநர் வடிவமைத்திருந்தாலும் ஒரு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டிருந்தததை வெற்றி மாறன் சுட்டிக் காட்டினார். அதாவது பிறவியிலிருந்தே காது கேட்காதவர்களுக்கு பேச்சும் வராது. அதாவது மொழி என்கிற ஒலியமைப்பை மற்றவர்களிடமிருந்து கேட்க வாய்ப்பில்லாத காரணத்தினால் பேச்சு என்பதும் இருக்காது. ஆனால் இந்தப் படத்தின் நிகழ்வுகள் சிறுவனின் வாய்ஸ் ஓவரில் வெளிப்படுவதாக இயக்குநர் காட்சிகளை நகர்த்தியிருந்தார். இந்த நடைமுறை முரணை வெற்றிமாறன் உன்னிப்பாக கவனித்து சுட்டிக் காண்பித்த போதுதான் ஒரு பாத்திரத்தை எத்தனை நுட்பமாக கவனித்து வடிவமைக்க வேண்டும் என்பது அதிகமாக உறைத்தது.

()

விஜய் டிவிக்கு சானலை திருப்பினேன். பாலாவின் 'அவன் இவன்' ஆரம்பக் காட்சி நடனம். பல படங்களில் கிராமத்து நடனத்தை கவனித்திருக்கிறேன். அத்தனை பேர் ஆடும் போதும் மண்ணிலிருக்கும் புழுதி கிளம்பாமலிருக்கும். காட்சியின் அழகியல் பின்னணி கருதி இதை தவிர்த்து விடுவார்கள் போலிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் அதைச் சரியாக கவனித்து நடனத்தின் போது புழுதி கிளம்புவதாக காட்டியிருப்பது (தொடர்ச்சி அறுபட்டாலும்) ஒரு காட்சி அதன் முழு யதார்த்தத்துடன் பதிவாக எத்தனை கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது என்பதை மறுமறுபடி உணர்த்துகிறது.

என்ன பிரச்சினையெனில் இவ்வாறான யதார்த்தப்பிழைகளை கூர்ந்து கவனிப்பது பழகி விட்டால் எந்தவொரு படைப்பையும் ரசிக்கும் அடிப்படை பாமரத்தனம் போய் விடும் என்பதுதான் இதிலுள்ள சோகம். 

suresh kannan