Saturday, November 26, 2011

மயக்கம் என்ன ... செல்வா


இயக்குநர் செல்வராகவன் ஏறக்குறைய ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்ப தனது படைப்புகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.

பிரத்யேக திறமையிருந்தும் தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஓர் ஆணின் வாழ்க்கையில் நுழையும் பெண், அவனுக்கு தார்மீக ஆதரவாயும் உத்வேகமாகவும் அமைந்து அவனை வெற்றி பெறச் செய்கிறாள். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என்று தொடர்ந்து இந்த விஷயமே அந்தத் திரைப்படங்களின் ஆதார மையமாக இயங்குகிறது. 'மயக்கம் என்ன' திரைப்படத்திலும் அதுவே. துவக்கத்திலிருந்தே அல்லது ஆடி அடங்கின பிறகு தன்னிச்சையாக பெண்ணைச் சரணடைபவர்களால் (பொதுவாக மனைவியிடம்) இதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும்.

சர்வதேச தர புகைப்படக்காரனாய் ஆவதே தன் வாழ்வின் கனவாய்க் கொண்டு ஆனால் யதார்த்தத்தில் காதுகுத்து நிகழ்ச்சிகளே விதித்திருக்கும் கார்த்திக் விஸ்வநாதனை (தனுஷ்) பல சிரமங்களுக்கிடையில் அவனுடைய ஆதர்சப் புள்ளியை நோக்கி நகர்த்திச் செல்கிறாள் அவனது மனைவி யாமினி (ரிச்சா).

இந்த டெம்ப்ளேட் சமாச்சாரத்தை முந்தைய படங்களுக்கான அளவிற்கு அழுத்தமும் உழைப்புமில்லாமல் போகிற போக்கில் 'மயக்கம் என்ன?' திரைப்படம் இயங்குவதுதான் இந்த படத்திற்கான காண்பனுபவத்தில் சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது. மொண்ணையாக படமெடுத்துத் தொலைக்கும் பல தமிழ் இயக்குநர்கள் மத்தியில் தான் வடிவமைக்கும் காட்சிகளை பிரக்ஞைபூர்வமாக, நுண்ணுணர்வுடன் இயங்கும் அபூர்வமான இயக்குநர்களுள் செல்வராகவனும் ஒருவர்தான் என்பதுதான் அவர் படைப்புகளின் மீது பார்வையாளனுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. 'மயக்கம் என்ன?'வில் அவர் அந்த எதிர்பார்ப்பை போதுமான அளவிற்கு பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

தனுஷின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகிறது. இன்னும் பல நல்ல இயக்குநர்கள் கையில் கிடைத்தால் பல உயரங்களை அவரால் தொட முடியும். இந்தப் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை தனியாகவே தோளில் சுமந்துச் சென்றிருக்கிறார் என்று சொல்ல முடியும். அவரை ஓரளவிற்குச் சரியாக பயன்படுத்தியிருக்கும் இயக்குநருக்கும் இதில் பங்குண்டு. அபூர்வமாக நாயகி ரிச்சாவும் (குறிப்பாக இரண்டாவது பகுதியில்) தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் விதமாக உபயோகப்படுத்தியிருப்பதற்கு செல்வாவை பாராட்டத் தோன்றுகிறது. தனது சிசுசிதைவுக் குருதியை தானே துடைத்தெடுக்கும் காட்சியில் அவர் தனுஷிடம் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான உடல்மொழி யதார்த்திற்கு மிக அருகில் பயணிக்கிறது.

பொதுவாக செல்வராகவனின் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 'மயக்கம் என்ன'வில் ஜீவி பிரகாஷ் என்னதான் சிறப்பாக இசையமைத்திருந்தாலும் பொருத்தமேயில்லாத இடங்களில் பாடல் காட்சிகள் அதுவும் மொண்ணைத்தனமாக வருகின்றன. நண்பனின் நண்பி தன்னைக் காதலிப்பதாக சொல்லும் போது அதிர்ச்சியடைந்து 'நீ என் சிஸ்டர் மாதிரி' என்று அறைவாங்கி விட்டு தொடர்ச்சியேயில்லாமல் 'காதல் என் காதல் அது கண்ணீரிலே' என்று தனுஷ் பாடும் போது  எரிச்சல் வருகிறது. (ஆனால் பத்திருபது திமுசுக்கட்டைகள் வெள்ளைப்பாவாடை உடுத்தி பின்னணியில் ஆடுவதைக் காண ஒரு மாதிரி ஜிவ்வென்று இருப்பது வேறு விஷயம்). படம் பூரர்வுமே இம்மாதிரியான ஒரு தொடர்ச்சியின்மை நம்மை அசெளகரியப்படுத்துகிறது. அவசரமாக கிளறப்பட்ட உப்புமா போல் ஓர் அசட்டுச் சுவையை உணர முடிகிறது. மேலும் 'மயக்கம் என்ன' ஆல்பத்திலேயே எனக்கு மிகவும் பாடலான 'என்னென்ன செய்தோம் இங்கு' படத்தில் இடம்பெறவேயில்லை. டிரைலரில் பார்த்த சில காட்சிகளும்.

'நீ ஒரு சிறந்த புகைப்படக்காரனில்லை' என்று ரிச்சாவால் அலட்சியப்படுத்தப்படும் தனுஷ், ரோட்டில் அமர்ந்திருக்கும் ஒரு பாட்டியை புகைப்படமெடுத்து அவரை மகிழச்செய்யும் காட்சியை பார்வையாளர்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. படம் பூராவும் ஓவென்று சலிப்புக் கூச்சல்கள். நான் அபூர்வமாக முதல்நாளே ஒரு தமிழ்த்திரைப்படத்தை காண வேண்டுமென்று ஆசைப்பட்டதின் தண்டனையை திரையரங்கில் பெற்றுக் கொண்டேன்.

ஏற்கெனவே சர்வதேச அளவில் புகழ் பெற்றிருக்கும் இன்னொரு புகைப்படக் கலைஞரை வில்லனாய் சித்தரித்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. செயற்கைத்தனமான கிளிஷேவாக இருக்கிறது. மேலும் தனுஷ் சர்வதேச விருதுக் காட்சிகளெல்லாம் பரவசமாக அல்லாமல் காமெடியாகவே தோன்றுகிறது. செல்வா இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் கடும் உழைப்பு படம் பூராவும் தெரிகிறது. ஏறக்குறைய எல்லா பிரேம்களும் மிகுந்த அழகியல் உணர்வுடன் பதிவாகியிருக்கின்றன.

'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற பெரிய அளவிற்கான முயற்சியை எடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் செல்வராகவன்,விஐபி எழுத்தாளர்களின் தீபாவளி மலர் சிறுகதைகள் போல ஏனோதானோவென்று அவசர கதியில் தனது வழக்கமான டெம்ப்ளேட்டை உபயோகித்திருப்பது சலிப்பூட்டுகிறது. அடுத்த முயற்சியிலாவது தனது மயக்கத்திலிருந்து விடுபடுவது அவருக்கும் தமிழ்த்திரைக்கும் நலமூட்டும் விஷயம்.

தொடர்புடைய பதிவுகள்:




 suresh kannan

15 comments:

Anonymous said...

its true...

Anonymous said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

http://www.tamil10.com/

ஒட்டுப்பட்டை பெற



நன்றி

ராஜ் said...

நேர்மையான விமர்சனம்...
நிறைய காட்சிகளை பார்வையானால் யூகிக்க முடிந்தது..
ஏனோ செல்வாவின் எல்லா திரைப்படங்களிலும் (காதல் கொண்டேன், 7G, புதுபேட்டை) அவரது கதாநாயகர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவராக சித்திரிக்க படுவார்கள்....இந்த படமும் அதற்கு விதி விலக்கு இல்லை.....

Anonymous said...

செல்வா ராகவன் படத்தில் எல்லோரும் மேண்டலாகவே இருப்பதன் மர்மம் என்ன?மெண்டல் ராகவன் சொல்வாரா?

Vadakkupatti Raamsami said...

தனுசு பற்றி நான் சொன்னபோது ஆட்சேபித்தவர்கள் இதை படிக்கவும்!தனுசு படங்களும் அழுகிய சமூகமும் (நன்றி ஞானி)
http://vadakkupatti.blogspot.com/2011/11/blog-post.html

Anonymous said...

எவனோ ஒருவன் என்ற மொக்கை படத்தை கமலில் அடிமை என்ற காரணத்தால் ஆகா சூப்பர் என்று எழுதிய உங்களின் ஜால்ரா முகம் இன்னமும் மற்றக்கவில்லை. கூடவே அந்த படத்தின் பாடல்க்கள் உலக மகா மொக்கை என்ற போதிலும் கமல் என்ற காம வெறியனில் ரசிகன் என்ற ஒரே அடிமை காரணதால் ஆகா சூப்பர் சூப்பரோ சூப்பர் என்று பதிவு போட்ட ஆளுதானே நீங்கள்.

உங்கள் ரசனை ரசனை.

நெல்லை கபே said...

செல்வராகவன் மற்ற இயக்குநர்களோடு ஒப்பிடுகையில் வித்தியாசமானவர்தான். நீங்கள் சொன்னமாதிரி ஒண்ணு அடிதடி அல்லது சரணாகதி (பெண்களிடம்) என்ற இரண்டு extreme களுக்கு இடையே செல்வராகவன் ஆடிக் கொண்டே இருக்கிறார். தனுஷ் அருமையான நடிகன்.

இன்று என் வலையில் ;

யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!

Ashok D said...

வழக்கம்போல சுகானுபவம்..அனுபூதி... (என்ன ஆளைக்கானும்...வசதி வந்துடுச்சுன்னு or ஏறிடுச்சுன்னு நெனைக்கறன்... சரியா?)

:)

Vadakkupatti Raamsami said...

விக்ரமன் படத்தில் ஹீரோ ஒரு பாடலில் பணக்காரன் ஆவது போல இந்த படத்தில் தனுஷ் பின்னணி இசையில் சர்வதேச விருதை பெறுகிறார்!!அடங்கப்பா!!முடியல!

Anonymous said...

கொலவெறி பாடல் வெறும் தொடக்கம்தான்.அதே போல இப்போ அதிக ஹிட்ஸ் வாங்கிய ஒரு பாடல் கிளப்புல மப்புடா என்கிற தத்துவ(??!!) பாடல்.இனி இது போன்ற நாராசங்கள் தொடரும்!அதை தொடக்கி வைத்தவர் தனுஸ் என்பதையும் மறுக்க இயலாது

டிராகன் said...

மயக்கம் என்ன - A BEAUTIFUL MIND

தனுஷ் - RUSSEL CROWE

ரிச்சா - JENNIFER கனோல்லி

IPC அவார்ட் - NOBEL

PHOTOGRAPHY - MATHEMATICS

நடுவுல மூளை கோளாறு - அதுல ஆரம்பத்துலேயே

சுந்தர் , விந்தியா அண்ட் FREINDS - CLASS MATE

செல்வராகவன் - RON HOWARD

Sivakumar said...

தியேட்டர் காலியாக இருக்கையில் இப்படத்தை பார்த்திருந்தால் காட்சிகளை இன்னும் கொஞ்சம் உள்வாங்கிக்கொண்டிருக்கலாம் என்பது உண்மைதான்.

நெல்லை கபே said...

என் வலையில் ;

கருணாவும் ஜெயாவும் பாடும் 'கொலைவெறி' பாட்டு!
(வீடியோ)

Anonymous said...

தனுசின் க்ளோசப் ஸ்டில் பாத்து பயந்துட்டேன்!

Anonymous said...

நீயா நானா கோபிநாத் ஒரு டுபாகூர் என்று அந்நிகழ்ச்சிக்கு போய் வந்த என் அண்ணனின் நண்பன் அண்ணனிடம் சொல்லியுள்ளான். அந்த என் அண்ணனின் நண்பன் பேச எழுந்த போது உட்காரு உட்காரு என சொல்லி பேசவே அனுமதிக்கலையாம் கோபிநாத். அதில் பேசுகின்றவர்கள் கூட ஏற்கனவே இதை இதைத்தான் பேச வேண்டும் என சொல்லி அழைத்து வரப்படுகின்றார்களாம்.அந்நிகழ்ச்சியே ஒரு செட் அப்பாமே?


பொய் இல்லையென்றால் தொலைக்காட்சி சேனலை எல்லாம் இழுத்து மூடி விட வேண்டியதுதான் என்று சுஜாதா சொல்லியுள்ளது ஞாபகத்திற்கு வருகின்றது.

எது உண்மையோ?