Thursday, January 13, 2011

2011 புத்தகக் காட்சி அனுபவம் (1)


எனது இந்த வலைப்பதிவு குறித்து நானே பெருமையாயும் ஆச்சரியமாயும் நினைக்குமளவிற்கு புத்தகக்காட்சியில் சில சம்பவங்கள் நடந்தேறின.(?!) 'நீங்கள் புத்தகக்காட்சி அனுபவம் குறித்து ஏன் இன்னும் எழுதவில்லை' என்றும்,  என் பெயரையும் வலைப்பதிவின் பெயரையும் சொன்ன மாத்திரமே "ஓ... நீங்கள்தானா அது? தொடர்ந்து வாசிக்கிறேன்" என்றும் அங்கு சுமார் 2000000 அல்லது 3000000 நபர்கள் விசாரி்த்தனர். (கபில் சிபிலின் ஸ்பெக்ட்ரம் தர்க்கத்தின் படி பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை என்பதால் தாராளமாக போட்டிருக்கிறேன். ஏறத்தாழ கூட்டி கழித்துக் கொண்டு வாசிக்கவும்).

ஒவ்வொரு வருடமும் ஏற்படுவது போல் இம்முறையும் புத்தகக்காட்சிக்கு செல்வதற்கு சில மனத்தடைகள் இருந்தன. நான் எப்போதுமே மந்தையிலிருந்து விலகி ஓட விரும்பும் ஆடு. இப்போது புத்தகக்காட்சிக்கு செல்வதென்பது, கடுமையான விதிகள் பல நீர்த்துப் போனதொரு சமகால சபரிமலை பயணம் போல் ஒரு பேஷனாகி விட்டதோ எனத் தோன்றுகிறது. ஆன்மீகத்திற்கு ஆன்மீகமும் ஆயிற்று, சுற்றுலாவிற்கு சுற்றுலாவும் ஆயிற்று, தான் ஒரு பக்திமான என்று சமூகத்திற்கு நிருபித்தது போலவும் ஆயிற்று என்பது போல் தன்னை வாசிப்பாளனாகவும் காட்டிக் கொண்டு சமையல், ஜோதிடம், போலி ஆன்மீக புத்தகங்களை வாங்கிக் கொண்டு கேண்டீனில் புத்தக பட்ஜெட்டுக்கு அதிகமான செலவில் ஒரு வெட்டு வெட்டி விட்டுத் திரும்பினால் முடிந்தது ஒரு சமூகக் கடமை. சமையலும் ஜோதிடமும் மாத்திரம் புத்தகங்களில்லையா என்ற கேள்வி வாசிப்பவருக்கு எழக்கூடும்.  தவறில்லை. ஆனால் நம்முடைய லெளதீகத் லெளகீகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விஷயங்கள் தொடர்பான எல்லையோடு நின்றுவிடும் அந்த மேலோட்டமான தேடல்தான் சலிப்பூட்டுகிறது. அதையும் தாண்டி பரந்து கிடக்கிற பல விஷயங்களை தாண்டிச் செல்லும் அந்த அலட்சியமும். இந்தக் கூட்டத்தோடு நாமும் சேர வேண்டுமா என்று உள்ளுக்குள் ஈகோ அதிகபட்ச டிகிரியில் அலறியது.  (இப்படியெல்லாம் இந்தப் பதிவில் எழுதாவிடில் வாசிக்கவரும் பல்ர் ஏமாந்து விடுகிறார்கள் என்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது).

கட்டாயம் செல்ல வேண்டும் என்கிற மனஉந்துதல் இல்லாததாலும் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களே 99.9% இன்னும் வாசிக்கப்படாமல் இருப்பதாலும் (வாங்கின புதிதில் புரட்டிப் பார்த்ததால் ஒரு 0.1சதவீதத்தை கழித்து விட்டேன்) முந்தைய வருடங்களைப் போல் எதை வாங்க வேண்டும் என்கிற கறாரான திட்டம் எதுவும் பெரிய அளவில் இல்லாமல் ஒர் அனுபவமாக இருக்கட்டுமே என்று கிளம்பினேன்.

()

புத்தகக்காட்சியின் வெளியே குறைந்த விலையில் இலக்கியச் சேவை செய்து கொண்டிருந்த விளிம்புநிலைக் கடைகளை (நடைபாதைமுனையில் கடைகள்) முதலில் பார்த்தேன். எது எடுத்தாலும் ரூ.20,30,50 என்று காப்பிரைட், ராயல்டி பிரச்சினையில்லாமல் கச்சாமுச்சாவென்று பல புத்தகங்கள். கீழ்கண்ட புத்தகங்களை  வாங்கினேன். 'பத்து பர்சென்ட் டிஸ்கவுண்ட் இருக்குன்னு சொன்னாங்களே' என்று கடைக்காரரை கலாய்க்க முயன்றால் 'தோ...டா' என்றார் அருமையான சென்னை வழக்கில்.

1) STARLIGHT STARBRIGHT - THE EARLY TAMIL CINEMA - RANDOR GUY
2) கநாசு 90 -  தொகுப்பு சா.கந்தசாமி
3) சென்னைச் சிறுகதைகள்


உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அபாயமாக சாலையைக் கடந்து புத்தகக் காடசிக்கு சென்று கொண்டிருந்த மக்களின் புத்தகார்வத்தை பார்க்க கண்ணீர் மல்கியது. 'எங்கடா தம்பி வந்த?" என்று பிளெக்சில் இருந்து எழுத்தாள பெருந்தகைகள் பெரிய சைஸில் வாசலிலேயே மிரட்டுகிறார்கள். உம்மாச்சியை வேண்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு  ஓடிச் சென்று அனுமதிச்சீட்டை வாங்கினேன். (அஞ்சு ரூபா சில்லறையா கொடுங்க' என்று பத்து பேரை நிறுத்தி வைத்திருந்தார்கள்).

இங்கிபிங்கிபாங்கி போட்டு இடது பக்கத்தை தேர்வு செய்து (நான் எப்போதுமே இடது சார்பாக்கும்) சென்றேன் துவக்கத்திலேயே தினத்தந்தி அரங்கம். தினத்தந்தி நாளிதழை வழக்கமாக இடது கையால் புரட்டிப் படிக்கும் நான் பா.ராகவனின் அழுத்தமான பரிந்துரை காரணமாக எந்த யோசிப்புமில்லாமல் 'வரலாற்றுச் சுவடுகள்' நூலை வாங்கினேன். பிரித்துப் பார்க்க முடியாதபடி 'சரோஜாதேவி புக்' பேக்கிங்.

என்னுடைய இரண்டு வயதில் பக்கத்து வீட்டிலிருந்த வெள்ளிக் கரண்டியை எடுத்து விழுங்கி விட்டேனாம். Born with neighbour's silver spoon. இந்த முக்கியமான வரலாற்றுத்தகவல் மாத்திரம் இந்த  நூலில் இல்லாவிட்டால் பாராவிடம்  சண்டை போட்டாவது ரூ.270/- ஐ திரும்ப வாங்க உத்தேசம். பெயர், முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுத்தார்கள். அதிர்ஷ்டமிருந்தால் அடுத்த பதிப்பில் என் வீட்டு முகவரியும் வரக்கூடும் போலிருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தை வாங்கத் திட்டமிடுபவர்கள் இதை கடைசியாக வைத்துக் கொள்வது உததமம். ஜீன்ஸ் பட காலத்து ஐஸ்வர்யாவை முதுகில் சுமந்துச் செல்வது போல் புத்தகத்தின் எடை இன்பச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம் அமெரிக்க நூலகத்தில் இருந்து இப்படிப்பட்ட தடிமனான புத்தகமாக தேடி எல்லோருக்கும் தெரியும்படி பேருந்தில் பெருமையாகச் செல்வேன். கைக்குழந்தை போல் இதைத் தூக்கிக் கொண்டே மற்ற அரங்குப் புத்தகங்களை பார்க்க இம்சை. வில்லன் பொன்னம்பலம் சைஸில் உதவியாள் அழைத்துச் செல்வது இன்னும் உத்தமம்.

ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் புரட்டிப் பார்த்தது முதலில் இதைத்தான். (மூடி வைத்திருந்தாலே அதீத ஆர்வம் வருவது இயற்கைதானே). அருமையான பைண்டிங்கில் வழவழ மேப்லித்தோ பேப்பரில் 864 பக்கங்களும் வண்ணமயம். இரண்டாம் உலகப் போரில் துவங்கி ரகுமான் இரண்டு ஆஸ்கர் வாங்கினது வரை தேதி வாரியாக. புரட்ட புரட்ட டைம் மெஷினில் பயணம் செய்யும் பரவச அனுபவம். ரூ.270/-க்கு விலை கொள்ளை மலிவு. இதுவே ஆங்கிலப் பதிப்பகங்களாக இருந்தால் ஆயிரத்திற்கு குறையாமல் விலை நிர்ணயித்திருப்பார்கள். இந்த நூலை மிக அழுத்தமாக பரிந்துரை செய்கிறேன். தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

உயிர்மை ஸ்டாலை கண்டவுடன் சந்தாவை புதுப்பித்துக் கொண்டேன். மனுஷ்யபுத்திரன் ஒரு வாசகரிடம் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தார். இயல்பிலேயே கூச்ச சுபாவமுடைய நான் (நம்புங்க) சுயஅறிமுகம் செய்து கொண்டு உரையாட விரும்பும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அவர்கள் என்னை ஆத்மார்த்தமாக ஈர்த்திருந்தால் ஒழிய அதைச் செய்ய மாட்டேன். கவிதை எனும் வடிவத்தை காலால் நடக்க ஆரம்பித்த பருவத்திலிருந்தே என்னால் விரும்பமுடியவில்லை என்றாலும் மனுஷயபுத்திரன் உரைநடை எனும் சமாச்சாரத்தை கையாளும் லாவகத்திற்கு ரசிகன் நான். உயிர்மையில் முதலில் நான் வாசிப்பது தலையங்கமே. வாக்கியங்களை அத்தனை கச்சிதமான சொற்களுட்ன் அவர் அமைப்பதை பல முறை வியந்திருக்கிறேன். பொதுவாக கவிஞர்களுக்கு கைவராத சமாச்சாரம் இது. உதாரணமாக வைரமுத்து எழுதும் உரைநடையைப் பார்த்தால் கவிதைக்கும் உரைநடைக்கும் நடந்த திருட்டுக் கல்யாணம் போலிருக்கும். எனவே மனுஷ்யபுத்திரனை அணுகி உரையாடுவதில் எனக்கு பெரிதளவில் தயக்கம் ஏற்படவில்லை. " சார் வணக்கம். நான்... இந்த பெயரில் எழுதுகிறேன்.."  "வாசிச்சிருக்கேன்" என்றார். "உங்க நூல் விழா பற்றியெல்லாம் திட்டி எழுதியிருக்கேங்க" " இருக்கட்டும் அப்படியும் இருந்தால்தானே ஒரு சுவாரசியமிருக்கும்".

முதலில் நான் அவரிடம் வியந்த உரைநடை அம்சம் பற்றியே கேட்டேன். பாரதி, லா.ச.ரா., சு.ரா., சுஜாதா ஆகியோர்களை ஆதர்சமாகக் கொண்டிருப்பதால் இது அமைந்திருக்கலாம் என்றார். "திரும்பத் திரும்ப எடிட் செய்வீர்களா?" என்றேன். " ஒரு விஷயம் உங்களை அதிகஅளவில் பாதித்தால் அதனை எழுதுகிற வடிவம் முழுதும் ஏறத்தாழ மனதிலேயே உருவாகி விடுகிறது. எனவே முதன் முறையிலேயே அதை எழுதி விடுவேன். பெரும்பாலும் மீண்டும் வாசித்து திருத்துவதில்லை" என்கிற ரீதியில் சொன்னார்.

அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு பதிப்பாளராக சாருவின் தேகம் நாவல் உங்களுக்கு திருப்தியை அளித்ததா?. கண்காட்சிக்கு கொண்டு வரவேண்டுமென்றே அவசர கதியில் அரையும் குறையுமாக உருவாக்கப்பட்ட பிரதியென்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

(வரும்)

image courtesy: original uploader

suresh kannan

17 comments:

Aranga said...

//ஈகோ அதிகபட்ச டிகிரியில்//

எதன் பாதிப்பு ?

வரவர குமத்தில் சுஜாதா தொடரும் போடுறாப்புல போடுறீங்களே அண்ணே

சக்தி கல்வி மையம் said...

சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லியிருக்கீங்க....

Krubhakaran said...

புத்தக கண்காட்சியில் வாலி பேசுரார் பாருங்க

http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html

THOPPITHOPPI said...

முன்புறத்தில் நாலு பெண்களின் புகைப்படம் எழுத்தாளர் புகைப்படம் இல்லாமல் இதற்க்கு பேர் புத்தக கண்காட்ச்சியா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்ன ஐயா இது. தொடர்கதையில் வருவது மாதிரி சுவாரசியமான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே :)

Kaarthik said...

//கபில் சிபிலின் ஸ்பெக்ட்ரம் தர்க்கத்தின் படி பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை என்பதால் தாராளமாக போட்டிருக்கிறேன். ஏறத்தாழ கூட்டி கழித்துக் கொண்டு வாசிக்கவும்.// - :-)

ம. பு என்ன சொன்னார் என்பதை வெள்ளிக்கிழமை சீரியல் மாதிரி சஸ்பென்ஸோட முடிச்சுட்டீங்க?!

ஒரு சந்தேகம் 'லௌதீகம்' 'லௌகீகம்' இரண்டில் எது சரி?

WordsBeyondBorders said...

கண்காட்சி ஒரு பேஷன் ஆகிவிட்டதென்பது உண்மை தான். இந்த முறையும் சுய முன்னேற்ற நூல்கள் தான் அதிகம் விற்பதாக இன்று பத்திரிக்கையில் வந்துள்ளது.

சென்னைச் சிறுகதைகள்- அ.மி. தொகுத்ததா?

நீங்கள் தேகம் பற்றி கேட்ட பொது சாரு அங்கில்லையே?

தர்ஷன் said...

//அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு பதிப்பாளராக சாருவின் தேகம் நாவல் உங்களுக்கு திருப்தியை அளித்ததா?//

பத்த வச்சுட்டியே பரட்ட.......

Thirumalai Kandasami said...

//அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு பதிப்பாளராக சாருவின் தேகம் நாவல் உங்களுக்கு திருப்தியை அளித்ததா?//

பத்த வச்சுட்டியே பரட்ட.......

Repeatu...

http://enathupayanangal.blogspot.com

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே பாஸ்.. சீக்கிரம் பார்ட்2 ரிலீஸ் பண்ணுங்க..

Anonymous said...

(தினத்தந்தி நாளிதழை வழக்கமாக இடது கையால் புரட்டிப் படிக்கும் நான் .......

பிரித்துப் பார்க்க முடியாதபடி 'சரோஜாதேவி புக்' பேக்கிங்.......)

இதற்கு என்ன அர்த்தம் .......

Ashok D said...

mmm... nice narration.. interesting

(no.. taameel fonts :)

Toto said...

STARLIGHT STARBRIGHT - RANDOR GUY

இந்த‌ ர‌த்தின‌த்தை நானும் பிளாட்பார‌த்தில் வாங்கினேன். ச‌ந்தையில் வாங்கிய‌ புத்த‌க‌ங்க‌ளை விட‌ ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ப் ப‌ட்ட‌து இந்த‌ புக்கிற்கு தான் :).

Sridhar Narayanan said...

ம்ஹும்ம்ம்... ‘தொடரும்’ போட்ட இடத்தில சர்ப்ரைஸ் ஒண்ணும் இல்லியே. உங்க கேள்விக்கு மனுஷ் என்ன பதில் சொல்லிருப்பார்னு தெரியாதாக்கும்... :)

bandhu said...

எவ்வளவு அழகாக, இயல்பாக எழுதுகிறீர்கள்! I am going green with envy!

உங்கள் வாசகன் said...

அன்புள்ள சுரேஷ்கண்ணன்,

பொங்கலைக் கொண்டாட ஊருக்குப் போய்விட்டதால் தாமதமான கமெண்ட். மன்னிக்கவும். பாருங்கள் உங்கள் வாசகனாக இருந்தும் இன்னும் பொங்கல் ஒரு கற்பிதம் என்று என்னால் தூக்கி உதற முடியவில்லை. கூடிய சீக்கிரம் இன்னும் ஒரு வருடத்திற்குள் வந்து சேர்ந்து விடுகிறேன். மன்னித்துவிடுங்கள்.

இந்தப் பதிவு நன்றாகத் தொடங்கியிருக்கிறது.

01. சுய வியப்பு இருக்கிறது... (என் பெயரையும் வலைப்பதிவின் பெயரையும் சொன்ன மாத்திரமே "ஓ... நீங்கள்தானா அது? தொடர்ந்து வாசிக்கிறேன்" என்றும் அங்கு சுமார் 2000000 அல்லது 3000000 நபர்கள் விசாரி்த்தனர்.) அந்த இயக்குநர் எழுதச் சொன்னார், இந்த எழுத்தாளர் எழுதச் சொன்னார் என்ற ரேஞ்சுக்கு இல்லையென்றாலும், இந்த அளவு ஓக்கேதான்.

02. அறிவுஜீவித்தனம் இருக்கிறது. (“இப்படியெல்லாம் இந்தப் பதிவில் எழுதாவிடில் வாசிக்கவரும் பல்ர் ஏமாந்து விடுகிறார்கள் என்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது.” என்று இதை மெனக்கெட்டு என் போன்ற வாசகர்களுக்காக நீங்கள் சேர்த்திருப்பது மகிழ்ச்சி. ஜெமோ, சாரு போன்றவர்களிடம் கூட இது காணக்கிடைக்காத ஒன்று).

03. அறிவுரை - இன்னும் இல்லை. அடுத்த பாகத்தில் மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கலாம். இருந்தாலும் இந்த பதிவில் இல்லாதது ஏமாற்றமே.

04. ஆண்குறி, மலம், யோனி, பிருஷ்டம், புட்டம், நிர்வாணப் பின்புறம் - இதில் எதுவுமே இல்லை. பெருத்த ஏமாற்றம் இதுதான். கேவலம் ஒரு ஆணுறை கூடவா கிடைக்கவில்லை?

வருத்தத்துடனும், அன்புடனும்,
உங்கள் வாசகன்.

Boston Bala said...

//சென்னைச் சிறுகதைகள்//

புத்தகத்திற்கு ஸ்பெசல் பதிவு இட முடியுமா?