Tuesday, January 04, 2011
நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (1)
2010-ன் சாகித்ய அகாதமி விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நாஞ்சில் நாடனை பாராட்டும் விதமாக விழா ஒன்று சென்னை, ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ('சூடிய பூ சூடற்க' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது). விழா அமைப்பாளர்களில் ஒருவரான அரங்கசாமி இதற்காக மின்னஞ்சலில் என்னை அழைத்த போது 'நான் அழைக்கப்படாவிட்டால் கூட இந்த விழாவிற்கு வருவேன். அது நாஞ்சில் நாடன் என்கிற படைப்பாளிக்காக' என்று பதில் அனுப்பியிருந்தேன்.
நாஞ்சில் நாடனுக்கு விருது கிடைத்த செய்தியை முதன்முதலாக செல்வேந்திரனின் டிவிட்டர் செய்தியின் மூலம் அறிந்த போது ஏதோ எனக்கே விருது கிடைத்ததைப் போன்று அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தளவிற்கு என் மனதிற்கு நெருக்கமான படைப்பாளி அவர். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பழைய புத்தகக்கடையில் யதேச்சையாக கிடைத்த மேலட்டை பாதி கிழிந்து போன 'என்பிலதனை வெயில்காயும்' என்கிற புதினத்தோடு எனக்கு நாஞ்சில் நாடனின் அறிமுகம் ஆகியது. அப்போது அவரின் பெயரைக் கூட நான் அறிந்திருக்கவில்லை. அன்னம் பதிப்பகம் தரமான எழுத்தாளர்களின் நூற்களைத்தான் வெளியிடும் என்கிற தன்னுணர்வின் உந்துதலால்தான் அந்த நூலை வாங்கினேன். நாஞ்சில் நாட்டின் வட்டார வழக்குச் சொற்கள் முதலில் என்னை தடுமாற வைத்தாலும் நூலின் இயல்புத்தன்மையும் சுவாரசியமும் மொழியின் சிக்கல்களைக் கடந்து தரிசனம் தருகிற படைப்பாளியின் ஆன்மாவும் பின்பு என்னை வழிநடத்திச் சென்றன. பின்பு அவரது சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் என்று பலவற்றையும் தேடித் தேடி வாசித்தேன்.
அவரது புதினங்களுள் முதன்மையானது 'சதுரங்கக் குதிரை' என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். திருமணமாகாத ஒரு முதிர்இளைஞனின் புலம்பெயர் தனிமையை இத்தனை நுட்பத்துடன் சொன்ன வேறெந்த புதினத்தையும் இதுவரை நான் வாசிக்கவில்லை. அவரது அபுனைவுகளில் தென்படும் சமூகக் கோபங்களும் நையாண்டிகளும் நக்கல்களும் அவைகளை மீறி நிற்கும் ஆழமான விமர்சனங்களும் உணர்ந்து வாசிக்கத்தக்கவை. இவரது படைப்புகளைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் உரையாடுவோம்.
இனி விழா பற்றி.
தனிப்பட்ட வகையில் இந்த விழா எனக்கு பெருத்த மனவெழுச்சியை தந்தது. ஒட்டுமொத்த விழாவுமே மிக திருப்திகரமாகவும் ஆத்மார்த்தமாகவும் அமைந்திருந்ததை குறிப்பிட வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி குறித்த பாராட்டு விழா என்கிற காரணத்தைத் தாண்டி 'தரம் வாய்ந்த படைப்பாளன் இச்சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவன்' என்கிற செய்தி மீண்டுமொரு முறை நிறுவப்பட்டது. எந்தவொரு நிறுவன அமைப்பு பின்னணியல்லாமல் அரசியல் நுழையாமல் வாசகர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே இதை தாமாகவே முன்னெடுத்துச் சென்றது மிகச் சிறந்த முன்னுதாரணம்.
விழாவின் ஆகச் சிறந்த பேச்சு கண்மணி குணசேகரனுடையது என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதைத் தவற விட்டவர்கள் அபாக்கியவான்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (பத்ரி இந்த விழாவின் வீடியோவை வலையேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். கண்டிப்பாக அதைக் காணத் தவறாதீர்கள்). குணசேகரனின் பேச்சைப் பற்றி பின்வரும் பத்திகளில் எழுதுகிறேன்.
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அமைப்பு இளைஞர்கள் இந்த விழாவை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். நாஞ்சில் நாடன், ஜெயமோகன் உட்பட இந்த அமைப்பைச் சார்ந்தவர்களும் பெரும்பாலும் வேட்டி, சட்டையில் வந்திருந்தது, குடும்ப விழா ஒன்றினுள் அமாந்திருக்கும் உணர்வை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்த அரங்கசாமி என்னைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இந்த அமைப்பின் பெயர் குறித்த சங்கடத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 'ராஜாதி ராஜா ரஜினி ரசிகர் மன்றம் மாதிரி .. என்னங்க இப்படி ஒரு பேரு'.
இதே அமைப்பு இதற்கு முன்னதாக எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு விருது வழங்கின நிகழ்ச்சி குறித்து இணையத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. 'ஜெயமோகனின் நூலின் பெயரால் அமைந்த ஒரு விருதை ஓரு மூத்த படைப்பாளிக்குத் தருவது அவரை அவமானப்படுத்துவதற்கு ஒப்பானது' என்கிற ரீதியில் அது அமைந்திருந்தது. 'அலைபாயுதே' மாதவனைத்தவிர வேறு எவரையும் அறிந்திராத குளுவான்கள் கூட இது குறித்த தங்களின் பொன்னான கருத்துக்களை போகிற போக்கில் வீசிச் சென்றனர். இப்படி ஒரு விருது அறிவிக்கப்படும் வரைக்கும் இப்படியொரு எழுத்தாளர் இருப்பதே பல பேருக்குத் தெரிந்திருக்காது. மாத்திரமல்ல, ஆ.மாதவனுக்கு இதுவரை எந்தவொரு நூல் வெளியீடோ, பாராட்டு விழாவோ இதுவரை நடந்திருக்கவில்லை.
பிருஷ்டங்களை அசைக்காத சோம்பேறித்தனத்துடன் தானும் எந்தவோர் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை செய்யாமலிருப்பது ; அப்படிச் செய்யப்படும் பணிகளையும் அதே பிருஷ்டங்களை அசைக்காமல் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து வம்பு பேசும் மனோபாவத்துடன் நக்கலடிப்பது தமிழனின் பிரத்யேக குணங்களுள் ஒன்று.
என்னையே உதாரணமாகக் கொள்கிறேன். நாஞ்சில் நாடனின் படைப்புகளை பல வருடமாக வாசித்து வந்திருந்தாலும் அவரைப் பாராட்டி இதுவரை ஒரு கடிதம் கூட அவருக்கு போட்டதில்லை. சாருவின் நூல் வெளியீட்டு விழாவில் மூத்திரப்புரையின் முனையில் அவரை நேரில் சந்தித்த போது கூட 'சொல்ல மறந்த கதை' படமாக்கப்பட்ட விதத்தில் உங்களுக்கு திருப்தியுண்டா' என்கிற அபத்தமான கேள்வியோடு திரும்பி விட்டேன். என் பதிவிலியே கூட அவரின் படைப்புகளைப் பற்றி அதிகம் எழுதினதில்லை. 'எழுத்தாளனைக் கொண்டாடாத சமூகம் நடைப்பிணத்திற்குச் சமமானது' என்பதில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருக்கிற நானே இப்படி வாளாவிருக்கிற போது, அதைச் செய்கிறவர்களை - அதுவும் இளைஞர்களை - அவர்களது அமைப்பின் பெயரைக் காரணம் காட்டி குறை சொல்வது போன்றதோர் அநியாயம் எதுவும் இருக்க முடியாது.
இந்நிலையில் இந்த விழாவை ஏற்பாடு செய்த இந்த அமைப்பை மனப்பூர்வமாக பாராட்டுவதோடு, அரங்கசாமியிடம் முன்னர் தெரிவித்திருந்த என் கிண்டலையும் இதன் மூலம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
நாஞ்சில் நாடனின் இந்த பாராட்டு விழாவில் உரையாடியவர்களின் மையக் கருத்தாக இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
1) வழக்கமாக எந்தவொரு விருது அறிவிக்கப்படும் போதும் அதன் கூடவே அது குறித்தான சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து வரும். ஆனால் இம்முறை எந்தவொரு முணுமுணுப்புக் குரல் கூட கேட்கவில்லை. எனில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருப்பது குறித்து அனைவருக்கும் திருப்தியாகவே உள்ளது.
2) இம்மாதிரியான விருதுகள் ஓய்வு பெறும் வயதில் அல்லாமல் உரிய காலத்திலேயே அந்தப் படைப்பாளியை ஊக்குவிக்கும் விதமாக அவன் அதிக படைப்பூக்கத்துடன் இயங்கும் தருணத்திலேயே வழங்கப்பட வேண்டும். மேலும் விருதுகளின் பின்னால் உள்ள அரசியல் காரணமாக தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டும் மூத்த படைப்பாளிகள் கூட இன்னும் புறக்கணிக்கப்பட்டும் இருக்கிற அபத்தமான நிலை மாற வேண்டும்.
(இனி விழா உரையாடல் பற்றி சுருக்கமாக, நினைவிலிருந்து)
நாஞ்சிலின் படைப்புகளைப் பற்றி இலக்கிய வட்டத்தைச் சார்ந்த வாசகர் ராஜகோபாலன் பேசினார். இம்மாதிரியான மேடைகளை பொதுவாக எழுத்தாளர்களும் விஐபி என்கிற அந்தஸ்தில் எழுத்துக்குச் சம்பந்தமில்லாதவர்களுமே அடைத்துக் கொள்ளும் வழக்கமான காட்சிகளிலிருந்து விலகி எழுத்தாளன் அல்லாத வாசகனின் குரலும் மேடையில் ஒலிப்பது ஆரோக்கியமான முன்னுதாரணம்.
ஒரு மூத்த படைப்பாளிக்கு அளிக்க வேண்டிய மரியாதையோடும் அடக்கத்தோடும் எஸ்.ராமகிருஷ்ண்ன் சுருக்கமாக தன் உரையை முன்வைத்தார்.
"நாஞ்சில் நாடன் எங்கு சென்றாலும் அவரது நாஞ்சில் கலாச்சாரத்தை சுமந்துச் செல்வார். கோணங்கி ஒரு முறை மும்பையில் சென்று அவரை சந்தித்த போது 'அது மும்பையில் வசிக்கும் ஒருவருடான சந்திப்பாக இல்லாமல் நாகர்கோவிலில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற அனுபவத்தைத் தந்தது' என்று என்னிடம் கூறினார். அமெரிக்காவிற்குச் செல்லும் ஒரு ஆர்மெனியன் தன் நாட்டின் கலாச்சார குறியீடான மாதுளம்பழத்தையும் தன்னோடு எடுத்துச் செல்வான். ஆனால் அது விமானநிலையத்தில் மறுக்கப்படும். எனவே அதை அங்கேயே தின்று தன் உடம்போடு எடுத்துச் செல்வான். ஒரு திரைப்படத்தின் காட்சியிது. அதைப் போலவேதான் நாஞ்சில் நாடனும். மரபிலக்கியம் குறித்தான அவரது பண்பட்ட அறிவு வியப்பேற்படுத்துவது."
இயக்குநர் பாலுமகேந்திரா.
"ஓர் இலக்கிய உபாசகன்' என்கிற வகையில்தான் இந்த மேடையில் நிறகிறேன். சினிமா எனது மொழி. எந்தவொரு இலக்கியப்படைப்பையும் சினிமா மொழியில் மாற்றும் போது அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவத்தைத்தான் பிரதானமாக கணக்கில் எடுத்துக் கொள்வேன். நான் தொலைக்காடசியில் 'கதை நேரம்' இயக்கிய போது "ஏன் நீங்கள் நாஞ்சில் நாடன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளின் படைப்புகளை கையாளவில்லை?' என்று சிலர் அப்போது கேட்டார்கள். எத்தனை முயன்றாலும் சில படைப்புகளின் ஆன்மாவை திரையில் கொண்டு வர முடியாது. அதை தூர நின்று வணங்கவே விரும்புகிறேன். நாஞ்சில் நாடனின் படைப்புகளும் அவ்வாறானவை."
பத்திரிகையாளர் ஞாநி:
"நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்த நிகழ்வையும் தாண்டி சிலவற்றைப் பேச வேண்டியிருக்கிறது. அவருக்கு விருது கிடைத்ததை முன்னிட்டே இங்கு கூடியிருக்கிறோம். மரியாதை செய்கிறோம். எனில் விருதிற்கு முந்தைய நாஞ்சில் நாடன் பாராட்டப்படத் தேவையில்லாதவரா அல்லது மரியாதை செய்யப்படத் தேவையில்லாதவரா, விருதிற்கு தரப்படும் மரியாதையை விட படைப்பாளியே அதிகம் கொண்டாடப்பட வேண்டியவன். தனியார் அமைப்புகள் தரும் விருதுகளை விட அரசு அமைப்பு தரும் விருதுகள் அதிகம் கவனிக்கப்படுகின்றன. சாகித்ய அகாதமி அமைப்பை ஜவஹர்லால் நேருவும் அந்த நோக்கிலேயே துவங்கினார். ஆனால் இந்த அகாதமியின் தென்னிந்திய மண்டல அலுவலகம் முன்பு சென்னையில் இருந்த போது அரசியல் காரணமாக பெங்களூருக்கு துரத்தியடிக்கப்பட்டது. இப்போதிருக்கும் கிளை அலுவலமும் துரத்தியடிக்கப்படும் நிலையில்தான் சமகால் அரசியல் சூழல் நிலவுகிறது.எந்தவொரு எழுத்தாளனும் தன் சமகாலத்தின் அரசியல் குறித்த விமர்சனங்களைப் பற்றி எதுவும் உரையாடமலிருப்பது முறையற்றது.
மக்கள் அதிகம் புழங்கின இடங்களுக்கென்று தன்னிச்சையாக ஒரு மணமும் குணமும் ஏற்பட்டு விடும். சென்னையின் பல பகுதிகளில் வாழ்ந்திருக்கிறேன். திருவல்லிக்கேணி போன்ற பகுதிகள் அதன் பிரத்யேக கலாச்சாரத்தின் வாசனை கொண்டது. ஆனால் தற்போது நான் வாழும் புறநகர் அவ்வாறான எதுவுமில்லாமல் வெறுமையாக இருக்கும். நாஞ்சிலின் படைப்புகள் இதைப் போன்றே அவரது கலாச்சாரத்தின் பிரத்யேக மணத்தையும் பின்னணிகளையும் கொண்டது"
(மேலும்)
தொடர்புடைய பதிவு:
நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
நல்ல பகிர்வு. நிகழ்ச்சி மனதிற்கு மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
உங்களை முதல் முறை சந்தித்ததில் ஆனந்தம்.
அருமை. கண்மணி குணசேகரனுடைய பேச்சின் சுருக்கம் வாசிக்க காத்திருக்கிறேன்.
'எழுத்தாளனைக் கொண்டாத சமூகம் நடைப்பிணத்திற்குச் சமமானது'
கொண்டாடாத என்று சரி செய்யவும்
வழக்கம் போல் நல்ல பதிவு. விழாவை நேரில் பார்ப்பது போல் உள்ளது.
மிக்க நன்றி சுரேஷ் கண்ணன்....
நன்றி
மயிலாடுதுறை சிவா...
விழா பற்றிய விசாலமான பார்வையுடன் கூடிய பதிவு...
உன்னத எழுத்தாளனுக்கு . சிறு விழா... வைரமுத்து / பா. விஜய் எல்லாம் பெரிய மேடைக் கட்டும் நம் சமூகம். உன்னத எழுத்தாளனுக்கு இவைகள் போதுமா.....
விழியன்,உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
சிவா,வழிப்போக்கன்-யோகேஷ், ANKITA VARMA
நன்றி நண்பர்களே.
//கொண்டாடாத // சரி செய்து விட்டேன். நன்றி மோகன்குமார்.
லிங்க் கொடுக்க மறக்காதீர்கள் ....(க.கு)
அது குளுவான்களா? இல்லை சுளுவான்களா? (என்னே என் பற்று)
அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்... :)
நன்றி என்று சாதாரணமாக சொல்ல விரும்பவில்லை எனினும் நன்றி சு.க
விழாவிற்கு நேரடியாகச் செல்ல முடியாத குறையைப் போக்கி விட்டீர்கள்.
பகிர்விற்கு மிக்க நன்றி சுரேஷ் கண்ணன். இன்னும் கொஞ்சம் அதிகமாகப் படங்களைப் போட்டிருக்கலாம். கைவசம் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்களேன்!
நன்றி.
நாஞ்சில் நாடனுக்கு விழா என்பது நம்மை நாமே கொண்டாடும் செயல் என்பது முற்றிலும் சரி. நல்ல பதிவுக்கு நன்றி. வாசகர்களும், எழுத்தாளர்களும், எந்த கேலிக் கூத்தின் (சினிமா, அரசியல் தொடர்புகள்) இல்லாமல், தன்னிச்சையான, ஒரு சக்தியாக பரிணாமிக்கக் கூடும் என்ற நம்பிக்கையின் அடையாளம் தான் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது. இது வரவேற்கத் தகுந்தது.
அருமையான பதிவுக்கும், நாஞ்சில் நாடனின் இன்ன பிற புத்தகங்களை அடையாளம் காண்பித்ததற்கும் நன்றி!
கரிகாலனை வழிமொழிகிறேன்!
சில கருத்துக்களில் மாறு படுகின்றேன். விரிவாக பேச வேண்டும். மற்றபடி விழா பற்றி மகிழ்ச்சி. இரண்டாம் பகுதி எப்போ? கண்மணி குணசேகரன் ஆடியோ கேட்க முடியவில்லை, எழுதினால் நன்றாக இருக்கும்.
நன்றி சுரேஷ்கண்ணன் !
பத்ரி புண்ணியத்தில் எல்லோர் பேச்சுகளையும் பார்த்தாகி விட்டது.
http://www.youtube.com/results?search_query=Function+to+felicitate+Nanjil+Nadan&aq=f
ஒரு நல்ல இலக்கியம் ஒரு நல்ல அரசியலுக்கு முகவுரையாக எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் இருந்து வந்திருக்கிறது.அது போன்ற ந்ல்ல படைப்புக்களை ஊக்குவிக்கும் இலக்கிய அமைப்புக்கள் நிறைய தோன்றி நிறையப் பணிகளைச் செய்து வ்ந்து கொண்டிருப்பது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிதான் என்றாலும் இதில் நான் பெரிது நீ சிறிது என்று பெருமைகொள்ளாமலும் சிறுமை படுத்தாமலும் வளரும் இலக்கிய அமைப்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது இன்றைய அவசர அவசிய தேவையாகும்
இவண் தமிழ்பாலா
Post a Comment