Thursday, June 24, 2010

தருக்கப் பிழைகள் இல்லாமல் ஒரு திரைப்படம்

நான் எந்தவொரு திரைப்படத்தைப் பார்த்தாலும் அதில் கூடுமான அளவிற்கு தருக்கம் ஒழுங்காக அமைந்திருக்கிறதா என்பதை கவனிப்பது இயல்பானதொன்றாகி விட்டது. சினிமா என்பதே செயற்கையாக கட்டமைக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு என்றாலும் கூட அதில் ஏற்படும் எந்தவொரு தருக்கப் பிழைகளும் நெருடலை ஏற்படுத்தி காட்சியின் நம்பகத்தன்மையை குலைத்து விடும். நம்பியாரால் துன்புறுத்தப்படும் சரோஜாதேவி சைதாப்பேட்டையில் 'வீலென்று' கூக்குரலிட்ட மறுகணமே அரக்கோண்த்தில் இருக்கும் எம்.ஜி.ஆர், குதிரையிலோ எலெக்ட்ரிக் டிரெயின் மீதோ மரக்கிளைகளை பிடித்தபடியோ எப்படியோ அங்கு வந்து மிகச்சரியாக நாயகியின் கற்பு பறிபோகாமல் காப்பாற்றும், (இதே பணியை 'பிட் படக் காட்சியில் செய்வாராயின் பார்வையாளர்கள் கொலைவெறியின் உச்சத்திற்கே போய்விடுவார்கள்) 'லாஜிக்'  மாத்திரைக்குக்கூட இல்லாத அதீதமான காட்சிகளை பார்த்துப் பழகி வளர்ந்த சூழலைச் சேர்ந்தவன் என்றாலும் கூட இந்த கெட்ட வழக்கம் எப்படியோ படிந்து விட்டது.


 அப்படியாக நான் சமீபத்தில் பார்த்த எந்தவிதமான தருக்கப் பிழைகளும் இல்லாத திரைப்படம் என்று நான் கருதும் ஒன்றைப் பற்றி இங்கே பகிர உத்தேசம்.  TULPAN (2008).கஜகஸ்தான் நாட்டுத் திரைப்படம்.

பாலைவனப் புயல் அவ்வப்போது வீசிக் கொண்டிருக்கும் மிக வறண்ட நிலப்பரப்பு.  ஆட்களே அபூர்வமாக நடமாடும் உள்ளார்ந்த கிராமப்பகுதியில் ஆட்டு மந்தையை கூலிக்காக மேய்த்துப் பிழைக்கும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தைச் சார்ந்து நிற்கும் ஒரு இளைஞன். திருமணமாகியிருந்தால்தான் அவனுக்கென்று  தனியாக ஒர் ஆட்டு மந்தையை தரமுடியும் என்று உரிமையாளர் கூறிவிடுகிறார். அந்தக் கடுமையான நிலப்பரப்பின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒரே மணவயதுப் பெண் TULPAN. தான் முன்பு பணிபுரிந்து கொண்டிருந்த ராணுவ சாகசங்களை இளைஞன் கூறி அந்தக் குடும்பத்தை கவர முயன்றாலும், மிகப் பெரிய காதுகளையுடைய அவனை பெண்ணுக்கு பிடிக்காமல் போகிறது.

அந்த மந்தையின் ஆடுகள் பிரசவங்களின் போது மர்மமாக இறந்து போகின்றன. உரிமையாளர் கடிந்து கொள்வதால் மன உளைச்சலில் இருக்கும் குடும்பத்தலைவன், வீட்டின் கூடுதல் சுமையாக இருக்கும் தனது மச்சானை அவ்வப் போது கடிந்து கொள்கிறான். இருவருக்குமிடையில் ஏற்படும் மனக்கச்ப்பின் காரணமாக  இளைஞனின் சகோதரியான குடும்பத்தலைவி வருத்தமடைகிறாள். ஒரு உச்ச வாக்குவாதத்தில் இளைஞன் மனமுடைந்து நகரத்தை நோக்கி புறப்படுகிறான்.

()

தங்கள் வீட்டுப் பெண் மணமாகியிருக்கிற இடத்தில் தங்க நேர்வதைப் போன்ற சங்கடமான விஷயம் வேறு எதுவுமேயில்லை. கணவனைச் சார்ந்திருக்கிற பெண் தன்னுடைய சகோதரனின் சங்கடத்தைக் காணச் சகியாமலும் அதற்காக கணவனிடம் அதிகம் போராட முடியாமலிருக்கும்  சூழலும்  அதையும் விட கொடுமையானது. கடுமையான பணிக்குப் பிறகு திரும்பியிருக்கும்  கணவனை ஆற்றுப்படுத்த மனைவி இயல்பாக உடல்உறவிற்கு ஆயுத்தமாவதும், அந்தச் சமயத்தில் இளைஞன் வீட்டிற்குள் நுழைவதால் இருவரும் விலகுவதும், கூட்டுக்குடித்தனத்தில் வசித்த ஒவ்வொருவரும் இந்தச் சங்கடமான அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.

இந்தப் படத்தின் மிகச்சிறப்பானதாக நான் கருதுவது, அந்த வறண்ட நிலப்பரப்பின் உஷ்ணமு்ம் குளிரும் புழுதியும் பார்வையாளன் நெருக்கமாக உணருமளவிற்கு சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது. ஆட்டுக்குட்டியொன்று பிரசவத்தில் இறந்து போவதும், பின்னர் ஒரு சூழ்நிலையில் இளைஞன் தன்னந்தனியாக ஒரு ஆட்டின் பிரசவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் மிக சாவகாசமாக நேரடி ஒளிபரப்பு போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னுடைய நீண்ட காதுகளின் காரணமாக திருமணமாகவில்லையே என்று அந்த இளைஞன் வருத்தமடைவதும் ஆனால் சற்றும் மனம் தளராமல் மணப்பெண்ணை எப்படியாவது கவர முயல்வதும் சுவாரசியமான காட்சிகள். நகரத்தில் செட்டிலாகி விடுவதையே தன்னுடைய வாழ்க்கை லட்சியமாக கொண்டிருக்கும் இளைஞனின் நண்பன், பெரிய மார்புகள் கொண்ட நடிகைகளின் படங்களின் துணையுடன் அதற்கான கனவில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தின் கவாச்சி தரும் பிரமிப்பை எப்படியாவது சுகிக்க வேண்டும் என்று கனவு காணும் பெரும்பாலான கிராமத்து இளைஞர்களை அவனது பாத்திரம் எதிரொலிக்கிறது.ஒட்டகக் கடியினால் துன்புறும் மருத்துவரின் காட்சிகள் சொற்ப நேரமே என்றாலும் நகைச்சுவையாக இருக்கிறது.

இறுதிக் காட்சி மிக நெகிழ்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிதான மனக்கசப்புகளையும் குடும்பம் என்கிற நிறுவனமும் உறவுகள் எனும் கட்டமைப்பும் போக்கிவிடுகிறது என்பதை இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது.

இதில் வரும் குழந்தைகள் அதிகப்பிரசங்கத்தனமாக இல்லாமல் அவர்களுக்கேயுரிய பிரத்யேக அப்பாவித்தனங்களுடன் சித்தரிக்கப் பட்டுள்ளார்கள். 'பசங்க' திரைப்படத்தின ஒரு குறிப்பிடத்தக்க காட்சி (மாத்திரம்) நினைவுக்கு வருகிறது.  அந்த வீட்டுச் சிறுவன் ஏதோ பேசிக் கொண்டிருக்க,  மிக குறைந்த வயதுடைய அவனின் தம்பி, சிறுவனின் தலையில் அட்டை ஒன்றினால் விளையாட்டாக அடித்துக் கொண்டேயிருப்பான். செயற்கைத்தனமாக இயங்காமல் காட்சியை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்ல இந்த மாதிரியான உத்திகளை இயக்குநர் கையாள்வது நல்லது. இத்திரைப்படத்தில் அது போல் பல காட்சிகளை உணர்ந்தேன்.  படத்தின் துவக்கத்திலேயே நிகழும் அந்த நீளமான காட்சியமைப்பின் மூலம் ஒளிப்பதிவாளரை நாம் சிலாகிக்கலாம்.

குடும்பத்தலைவியின் பாத்திரத்தை தவிர மற்ற அனைவருமே முன்அனுபவம் இல்லாத நடிகர்கள் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. 2009 அகாதமி விருதுக்காக அந்த நாட்டின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட இத்திரைப்படத்தை மிக அழுத்தமாக பரிந்துரைக்கிறேன்.

 suresh kannan

20 comments:

Jegadeesh Kumar said...

அருமையான மதிப்புரை. இந்த மாதிரி படங்களெல்லாம் எப்படி பார்க்கிறீர்கள்?
(சப் டைட்டில் உடன்). நன் டவுன் லோடு செய்த சில படங்களில் சப் டைட்டில் இல்லாததால் சிரமாக இருக்கிறது.

Vidhoosh said...

தருக்கம் என்றால் editing-கா?

நல்ல திரைப்படம் போலத் தோன்றுகிறது. ஆங்கில sub-title-லோடு கிடைக்கிறதா?

//அந்த வறண்ட நிலப்பரப்பின் உஷ்ணமு்ம் குளிரும் புழுதியும் பார்வையாளன் நெருக்கமாக உணருமளவிற்கு சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது. //

இங்கே கொடுத்திருக்கும் ஸ்டில் ரொம்பவே apt ஆக இருக்கு இதற்கு. :)

geethappriyan said...

சுரேஷ் கண்ணன்,
படம் தரவிறக்க்கி உள்ளது,வீக்கெண்டில் பார்த்தும் விடுகிறேன்,நல்ல விமர்சனம்.இதுபோல யதார்த்தமான வாழிவியலை சொல்லும் படங்களை பற்றி நிறைய சொல்லுங்கள்.

Ashok D said...

//எத்தனை பெரிதான மனக்கசப்புகளையும் குடும்பம் என்கிற நிறுவனமும் உறவுகள் எனும் கட்டமைப்பும் போக்கிவிடுகிறது என்பதை இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது.//

நெகிழ்ச்சியா இருக்கு மொத்த பார்வையும்

பிச்சைப்பாத்திரம் said...

ஜெகதீஷ் குமார். பல படங்களின் ஆங்கில மொழி சப்-டைட்டில்கள் இணையத்திலேயே கிடைக்கிறது. பொருத்தமானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அல்லது சப்-டைட்டிலுடன் கிடைக்கும் படங்களை தேர்ந்தெடுக்கவும்.

விதூஷ்: தருக்கம் என்பதை LOGIC ஆங்கிலச் சொலலுக்கானதாக இங்கு உபயோகப்படுத்தியிருக்கிறன். இதன் தூய தமிழ் வார்த்தை 'ஏரணம்' என்கிறார் நண்பர் ஹரன்பிரசன்னா.

கீதப்பிரியன்: நிச்சயமாக.

அசோக்: நன்றி.

ஜெய் said...

// சிறுவனின் தலையில் அட்டை ஒன்றினால் விளையாட்டாக அடித்துக் கொண்டேயிருப்பான். செயற்கைத்தனமாக இயங்காமல் காட்சியை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்ல இந்த மாதிரியான உத்திகளை இயக்குநர் கையாள்வது நல்லது //

நல்ல உதாரணம் அது... நானும் கவனித்தேன்...

இன்னும் நிறைய நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்கள்...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

BalHanuman said...

அருமையான விமர்சனம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Subbaraman said...

Arimugathirku nandri, Sureshkannan..Baran parthu viteergala?

ஷங்கர் said...

சுக ,
ஆங்கில சப் டைட்டில் உடன் எங்கே வாங்குவீர்கள் ???நான் பல முறை பர்மா பஜாரில் வாங்கி பல்பு வந்கிஈருகிரேன்...,are you seen A MAN ESCAPED from Robert bresson Movie

உண்மைத்தமிழன் said...

அருமையான திரைப்படம் சுரேஷ்கண்ணன்..!

சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடத்தப்பட்ட சென்னை திரைப்பட விழாவில் முதல் நாள் இதைத்தான் திரையிட்டார்கள்..!

அந்தச் சிறுவர்களின் விளையாட்டு.. அதிலும் அந்த கடைசி வாண்டின் சேட்டை இன்னமும் மறக்க முடியாமல் உள்ளது..!

மிகுந்த பிரயாசைப்பட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது..!

சினிமா எடுப்பது என்பது ஒரு தவம் என்பதற்கு உதாரணமாக இதனை அடையாளப்படுத்தலாம்..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்கள்...

ராம்ஜி_யாஹூ said...

தர்க்கம், தருக்கம்- எது சரியான வார்த்தை

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி நண்பர்களே!

ஷங்கர்: பர்மா பஜாரில் வாங்கும் போது இம்மாதிரியான விபத்துக்கள் ஏற்படும்தான். நம்பகமான ஒருவரிடம் தொடர்ந்து வாங்குவதன் மூலம் இப்பிரச்சினையைத் தவிர்க்கலாம். நான் வேண்டுமானாலும் நான் முன்னர் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்த ஒரு பர்மா பஜார் வணிகரை அறிமுகப்படுத்துகிறேன். அவர் பெயர் வாசிம். 98417 61040. பாரிஸ் கார்னர் சிக்னல் அருகில் காவல் நிலையம் எதிரே இவர் கடை உள்ளது. வாங்கும் குறுந்தகட்டில் எந்தப் பிரச்சினை என்றாலும் முகஞ்சுளிக்காமல் மாற்றித்தருவார்.

ராபர்ட் பிரஸ்ஸானின் A MAN ESCAPED மிக அருமையான திரைப்படம். மெதுவாக நகரும் காட்சிகளால் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.

ராம்ஜி யாஹூ:

இரண்டுமே ஒன்றுதான். தருக்கம் என்கிற சொல்லின் அழுத்தமும் கவர்ச்சியும் தருகிற விருப்பத்தில் அதைப் பயன்படுத்துகிறேன்.

ஷங்கர் said...

சுக ,
தகவலுக்கு நன்றி ....,

வெடிகுண்டு வெங்கட் said...

மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:
வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

Unknown said...

பட அறிமுகத்திற்கு நன்றி.

Anonymous said...

subject: create an archive page as like writer marudhan:


http://marudhang.blogspot.com/p/archives.html

see this archive page(பதிவுகள்) of writer marudhan's blog. He has created this archive page by following my instructions. You have a blog archive in your side bar. It is not good to have very quick look of all post titles. so, create an archive page in your blog. It will enable readers to easily find all of the post titles quickly in a single page.

follow steps in this site http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html


(NOTE: if you create an archive page by following the instructions in the above site the archive page will not show all post titles immediately. you should wait upto 1 week. Then only the archive page will show all post titles in a single page itself with dates, year and month)

டிராகன் said...

சுக ,
The Bow பட விமர்சனம் எழுதி இருகீர்களா ?

vijayakumar said...

please link my website for your webpage please visit my site(http://www.allwayshere.weebly.com)