Monday, June 07, 2010

சினிமா பற்றினதொரு சிறந்த வலைப்பக்கம்

இணையத்தில் சினிமா பற்றி பல வலைப்பதிவுகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தாலும் அந்த ஊடகத்தை  மிக நெருக்கமாவும் நுணுக்கமாகவும் அணுகுவது சில வலைப்பக்கங்களே. அவ்வாறாக எழுதப்படும் ஒரு தளத்தை சமீபத்தில் அறிந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதை உங்களுக்கு அறிமுகப்படுத்தவும் விருப்பம்



திரைப்பட இயக்குநர் சார்லஸின் வலைப்பக்கம்தான் அது. அவர் தற்போது 'நஞ்சுபுரம்' என்கிறதொரு திரைப்படத்தை இயக்கி வருவதாக தெரிகிறது. மாத்திரமல்லாமல் பல்வேறு உலக திரைப்படங்களின் உருவாக்கங்களைப் பற்றியும் இயக்குநர்களையும் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவுகள் சுவாரசியமாகவும் உபயோகமாகவும் இருக்கின்றன. ஹிட்ச்காக் பற்றி எழுதப்பட்டிருந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது.

“கதாசிரியரும் நானும் சேர்ந்து திரைக்கதையின் மிகச் சிறிய விவரங்கள் உட்பட எல்லாவற்றையும் திட்டமிட்டுவிடுவோம், அதன்பிறகு மிச்சமிருப்பது படம்பிடிக்க வேண்டியது மட்டும்தான். உண்மையில் ஒருவர் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும்போதுதான் சமரசத்துக்குள் நுழைகிறார். நிஜமாகவே ஒரு கதாபாத்திர வார்ப்பை (casting) நாவலாசிரியர் மட்டுமே முழுமையாகச் செய்யமுடியும் ஏனெனில் அவருக்கு நடிகர்களையும் மற்றவைகளையும் சமாளிக்கவேண்டிய அவசியமில்லை.”

“என்னை ஒரு வகைப்படுத்தப்பட்ட இயக்குனராக ஆக்கிவிட்டார்கள். நான் ‘சிண்ட்ரல்லா’ கதையை எடுத்தால் கூட, ரசிகர்கள் உடனே, அந்தக் கூண்டு வண்டிக்குள் ஏதேனும் பிணம் இருக்கிறதா என்றுதான் தேடுவார்கள்”
போன்ற மேற்கோள்கள் சிறப்பு. ராம்கோபால் வர்மாவின் இந்த நேர்காணல், நாம் அறிந்து கொள்ள முடியாத சினிமா வணிகத்தைப் பற்றின நுணுக்கத்தைப் பற்றின கோட்டுச் சித்திரத்தை தெளிவாக விளக்குகிறது.



LONG TAKE  என்கிற ஒளிப்பதிவு தொடர்பான நுட்பத்தைப் பற்றி அவர் எழுதி வரும் தொடரை வாசித்த போது 'சத்யஜித்ரே'வின் 'சாருலதா'வில் வரும் அந்த ஊஞ்சல் ஷாட்டைப் பற்றி என் மனதில் நீண்ட நாட்களாக உறைந்து கிடந்த சந்தேகத்தை முன் வைக்க வேண்டுமென்று  தோன்றியது. வைத்தேன்.

அந்த ஷாட் உருவாக்கத்தைப் பற்றின பல்வேறு சாத்தியக் கூறுகளை அவர் சுவாரசியமாக விளக்கியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

நீங்களும் அதை வாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சார்லஸ் அவர்கள் இன்னும் பல உபயோகமான இடுகைகளை இட வேண்டுமென்கிற என் விருப்பத்தையும் இதன் மூலம் அவர் முன் வைக்கிறேன்.

தொடர்புடைய பதிவு: சாரு

suresh kannan

7 comments:

சென்ஷி said...

சமீபத்தில் திரைப்படங்களைப் பற்றிய தளங்களில் மிகவும் கவர்ந்த தளம் சார்லஸுடையது.. நேர்த்தியான எழுத்துக்கள்.

ஹிட்ச்காக் பற்றி எழுதிய பதிவு மிகவும் சிறப்பான மொழி வடிவம்.

பகிர்ந்தமைக்கு நன்றி சுரேஷ் கண்ணன்.

உண்மைத்தமிழன் said...

நானே அண்ணன் சார்லஸின் இந்தத் தளத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்..

நீங்கள் முந்திக் கொண்டீர்கள் சுரேஷ்..!

சுரேகா.. said...

அற்புதமான களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா!

ராம்ஜி_யாஹூ said...

Many thanks for sharing this. I have not seen his blog before.

இயக்குனர் சார்லஸ் said...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்

நன்றி
என் பதிவுகளைப் பற்றிச் சொன்ன நல்ல சொற்களுக்கும், உங்கள் வாசகர்களுக்கு எனது வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியதற்கும் மிக்க நன்றி

சார்லஸ்

BalHanuman said...

சார்லஸின் அற்புதமான தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

உங்கள் சேவை தொடரட்டும்.

Unknown said...

நன்றி நண்பரே ... பகிர்வுக்கு