Thursday, February 18, 2010

லா ஸ்ராடா - துயரத்தின் காவியம்

உலகத்தின் சிறந்த 10 திரைப்படங்களை பட்டியலிடச் சொன்னால் என்னால் தயக்கமேயின்றி 1954-ல் வெளிவந்த இத்தாலிய நியோ ரியலிச வகைத் திரைப்படமான 'லா ஸ்டிராடா'வைச் அதில் சேர்க்க முடியும். ரேவின் 'பதேர் பாஞ்சாலி' டிசிகாவின் 'பை சைக்கிள் தீவ்ஸ்' போல பார்வையாளனின் நெஞ்சில் ஒரு நீங்காத துயரத்தின் வடுவாக பதிந்து விடும் திரைப்படங்களின் வரிசையில் லா ஸ்டிராடாவிற்கும் முக்கிய பங்குண்டு. அதிர்ச்சி தரும் திருப்பங்களைக் கொண்ட திரைக்கதையோ, பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பமோ எதுவுமே இத்திரைப்படத்தில் இல்லை. மாறாக மனித உணர்வுகளின் ஆதாரமான நுண்ணுர்வைப் பற்றி இப்படம் மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக உரையாடுகிறது. ·பெலினி முன்வைக்கும் உன்னதமான காட்சிக் கோர்வைகளின் மூலம் மிகச் சிறந்த அனுபவத்தை இத்திரைப்படத்தின் மூலமாக பெற முடிகிறது.

வறுமையின் காரணமாக ஜிப்சியான ஜாம்பனோவிற்கு விற்கப்படுகிறாள் ஜெல்சோமினா. சங்கிலியால் தன் மார்புகளை இறுகக்கட்டி பின்னர் அதை உடைத்துக் காட்டும் வித்தையின் மூலம் பிழைக்கும் ஜாம்பனோ ஒரு முரடன். குழந்தைமையும் அப்பாவித்தனமும் கொண்ட ஜெல்சோமினாவை அவன் ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை. டிரம்ப்பெட் ஊதச் சொல்லி அவளை அடிக்கிறான். சம்மதம் பெறாமலேயே அவளுடன் உறவு கொள்கிறான்.அவளை இரவெல்லாம் தெருவில் அமர வைத்துவிட்டு வேசையோடு சுற்றிக் களைத்துப் போய் எங்கோ விழுகிறான். அன்றாடம் கிடைக்கும் உணவுடன் திருப்தியடையும் அவன் ஜெல்சோமினாவின் உள்ளே மறைந்திருக்கும் கலைத்தன்மையைக் கண்டு கொள்வதேயில்லை. அவனுடைய நடவடிக்கையால் வெறுப்படையும் அவள் விலகிப் போகிறாள்.

கட்டிடங்களுக்கு இடையிலான கயிற்றில் வித்தை காட்டும் மேட்டோவை அப்போது  காண்கிறாள். எப்போதுமே மிக உற்சாகமாக இருக்கும் அவனை வியப்புடன் பார்க்கிறாள். இதற்கிடையில் அவளைத் தேடி வரும் ஜாம்பினோ வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறான்.

ஜாம்பினோவும் ஜெல்சோமினாவும் பணிக்குச் சேரும் அதே சர்க்கஸ் கம்பெனியில் மேட்டோவும் பணிபுரிகிறான். முரடனான ஜாம்பினோவை விளையாட்டாக தொடர்ந்து சீண்டிக்கொண்டேயிருக்கிறான் மேட்டோ. கோபமடையும் ஜாம்பினோ ஒரு சமயத்தில் கத்தியைக் கொண்டு அவனை துரத்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அநாதையாக நிற்கும் ஜெல்சோமினாவை சர்க்கஸ் கம்பெனியினர் தங்களுடன் வரும்படி அழைக்கின்றனர். ஆனால் மேட்டோவுடனான உரையாடலால் மனம் மாறும் ஜெல்சாமினோ, ஜாம்பினோவிற்காக காத்திருக்கிறாள். அவன் சிறையிலிருந்து வெளிவந்ததும் இருவரும் வழக்கம் போல் பயணம் மேற்கொள்கின்றனர். வழியில் மேட்டோவைக் காணும் ஜாம்பினோ, அவனைத் தண்டிக்க வேண்டி இரண்டு வலுவான குத்துக்களை விட எதிர்பாராதவிதமாக இறந்து போகிறான் மேட்டோ. திடுக்கிடும் ஜாம்பினோ அவனது உடலை மறைத்துவிட்டு அதிர்ச்சியடைந்து நின்றிருக்கும் ஜெல்சோமினாவை அழைத்துச் செல்கிறான்.

மேட்டோ கொலையுண்ட காட்சியைக் கண்ட ஜெல்சோமினா திக்பிரமையடைந்தவளைப் போல காணப்படுகிறாள். மேட்டோவுடனான உரையாடலின் வார்த்தைகளையே மறுபடியும் மறுபடியும் சொல்கிறாள். காவல் துறையினரிடம் மாட்டிக் கொள்வதற்கு இவளே காரணமாகிவிடக்கூடும் எனக் கருதும் ஜாம்பினோ அவளை நிராதராவாக சாலையில் விட்டு விட்டுச் செல்கிறான். வருடங்கள் கடக்கின்றன.

ஜாம்பினோ மிதமிஞ்சிய குடிப்பழக்கத்துடன் அதே முரட்டுத்தனத்துடன் இருக்கிறான். வழியில் சில குழந்தைகள் ஒரு பாடலை இசைப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். ஏனெனில் ஜெல்சோமினா அடிக்கடி இசைக்கும் பாட்டு அது. விசாரிக்கும் போது மனம் பிறழ்வுற்ற பெண்ணொருத்தி அங்கு சாலையில் சுற்றிக் கொண்டிருந்ததாகவும் அந்தக் குடும்பத்தினர் அழைத்து உணவளித்ததாகவும் பின்னர் உடல்நலம் குன்றிய அவள் கடற்கரைச் சாலையிலேயே இறந்த போனதாகவும் தகவல் கிடைக்கிறது. அளவிற்கதிகமாக குடிபோதையில் ஜெல்சோமினாவின் நினைவுகளுடன் ஜாம்பினோ குற்றவுணர்வில் வாய்விட்டு அழும் காட்சியுடன் படம் நிறைகிறது.


இந்தப் படத்தை மறக்கவியலாத ஒரு அனுபவமாக்கியது ஜெல்சோமினாவின் பிரமிப்பூட்டும் இயல்பான நடிப்பு. இத்திரைப்படத்தின் இயக்குநரான ·பெலினியின் மனைவியான குயிலிட்டா மசினா, அந்த அற்புதத்தை நிகழ்த்தியிருந்தார். அவருக்காகவே இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன். தமிழ் நடிகைகளில் இதே போன்றதொரு தோற்றத்தையும் நடிப்பையும் தருபவராக சாவித்திரியை ஒரளவிற்கு குறிப்பிடலாம்.

ஜெல்சோமினாவை முதலில் பார்க்கும் எவருக்கும் அவள் ஒரு பெண்ணாகத் தெரியாமல் வளர்ந்த குழந்தையைப் போலவே தெரிவார். குழந்தைகளின் கண்களைப் போல் ஆச்சரியத்தில் விரியும் அவரது பெரிதான கண்கள் சமயங்களில் அனுதாபத்தைக் கோருவதாகவும் உற்சாகத்தைப் பரப்புவதாகவும் இருக்கும். அப்பாவித்தனமான அந்த பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தார் மசினா. 'பெண் சாப்ளின்' என்று புகழப்படும் வகையில் பல திரைப்படங்களில் குறிப்பாக இவரது கணவரது படைப்புகளில் பல திறமையான பாத்திரங்களை கையாண்டார் இவர். பாலியல் தொழிலாளியாக நடித்த 'நைட்ஸ் ஆ·ப் கேப்ரியா' அதில் குறிப்பிடத்தகுந்தது.

ஜாம்பினோ குடித்து விட்டு விழுந்திருக்க காத்திருக்கும் நேரத்தில் அங்கிருக்கும் சாலையோரத்தில் தக்காளி விதைகளை பயிரிடுவதில் ஈடுபடுவாள் ஜெல்சோமினா. கண்விழிக்கும் ஜாம்பினோவிடம் அதைக் காண்பிக்க அவன் எரிச்சலுடன் 'அதை அறுவடை செய்யும் வரை காத்திருக்க முடியாது. புறப்படு' என்பான். முள்வேலியில் மாட்டிக் கொண்ட பறவை போன்றதொரு நிலைதான் அவர்களுக்கிடையேயான உறவு. அவளின் எதிரேயே ஒரு வேசையை அவன் கொஞ்சிக் கொண்டிருக்க சங்கடத்துடனும் குழந்தைமையுடனும் ஜெல்சோமினா தவிக்கும் காட்சி குறிப்பிடத்தகுந்தது.

சொற்ப காட்சிகளில் நடித்தாலும் 'முட்டாள்' மேட்டோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட் பேஸ்ஸார்ட்டின் நடிப்பு சிறப்பானது. ஜாம்பினோவின் சிடுமூஞ்சித்தனத்திற்கு நேர்மாறாக எப்போதுமே உற்சாகமாகவும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் சுதந்திர இயல்பினன். ஜாம்பினோ சிறைக்குச் சென்ற பிறகு அநாதையாக நிற்கும் ஜெல்சோமினாவிற்கும் இவனுக்குமான உரையாடல் முக்கியமானது. தன்னுடைய அழகற்ற தன்மைக்காகவும் நிராதரவான நிலைக்குமாக அழும் அவளிடம் "இந்த உலகத்தில் அனைத்துமே ஏதோவொரு இலக்குடன்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு கூழாங்கல்லுக்கான இடம் கூட இங்கு முக்கியமானது" என்று உபதேசிக்கிறான். ஜாம்பினோவிடமிருந்து பிரிந்துவிட யோசிக்கும் ஜெல்சோமினாவை இந்த வார்த்தைகள் ஆற்றுப்படுத்துவதுடன் மனமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. மேட்டோ கொல்லப்பட்டவுடன் இந்த வார்த்தைகள் மாத்திரமே அவளது அதிர்ச்சியுற்ற மனதினுள் சுழன்றடிக்கின்றன.



ஜாம்பினோவாக நடித்திருக்கும் ஆன்டனி குயினின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. ஜெல்சோமினாவை ஒரு மனித ஜென்மமாகவே மதிக்காமல் புறக்கணிக்கிறான். சிறையிலிருந்து வெளிவருவதற்காக காத்திருக்கும் ஜெல்சோமினாவை "ஏன் எங்காவது போய்த் தொலைவதுதானே"? என்று எரிச்சலுடன் கூறுகிறான். அவ்வாறு அவள் சென்றிருந்தாலும் அந்த அடிமையை விட்டிருக்க மாட்டான் என்றாலும் அவனது அப்போதையை மனநிலையையே அந்த வார்த்தைகளின் மூலம் உணர முடிகிறது.  மேட்டோ கொலையுண்ட அதிர்ச்சியில் தொடர்ந்து ஜெல்சோமினா புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான் அவளை ஒரு பொருட்டாக பயத்துடன் பார்க்கிறான். ஏதோ ஒரு ஆத்திரத்தில் நிகழ்ந்த கொலைக்காக பல வருடங்களை சிறையில் கழிக்க அவன் விரும்பவில்லை. ஆனால் பின்னாளில் அவளை சாலையில் அப்படியே விட்டுவிட்டு வந்ததற்காக குற்றவுணர்வில் அழும் காட்சியில் இவரது நடிப்பு சிறப்பானதாக இருந்தது.

()

சாலைப் பயண நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஹாலிவுட் படங்கள் அனேகம். இத் திரைப்படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். லா ஸ்ராடா எனும் இத்தாலிய மொழிச் சொல் 'சாலை' என்றுதான் பொருள் தருகிறது. 1956-ன் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படப் பிரிவின் 'அகாதமி' விருதை பெற்ற இத்திரைப்படம், உணர்வுப்பூர்வமான காட்சிக் கோர்வைகளின் காரணமாக 'சிறந்த படங்களின்' வரிசையில் வைத்து போற்றப்படுகிறது. 'அகாதமி' விருது தவிர பல திரைப்பட விருதுகளையும் இத் திரைப்படம் பெற்றுள்ளது.

ஜாம்பினோவின் பாத்திரமும் இந்தப் படமும்  ·பெலினிக்குள் உருவான விதம் சுவாரசியமானது. அவரது இளமைப் பருவத்தில் அங்கு வாழ்ந்த ஒரு பெண்பித்தன் பல பெண்களை படுக்கையில் வீழ்த்தி துன்புறுத்துவான். ஒரு முட்டாளான அப்பாவிப் பெண்ணையும் அதே போல் வீழ்த்துகிறான். பின்னாளில் ·பெலினி படப்பிடிப்பிற்காக கடுமையான சாலைகளையுடைய மலைப்பாங்கான இடத்தைக் கடக்கும் போது ஒருவன் வண்டியை ஓட்டிக் கொண்டு வர பின்னால் சிறிய உருவிலான பெண்ணொருத்தி அதைத் தள்ளிக் கொண்டு வரும் காட்சியைப் பா¡க்கிறார். இந்தக் காட்சியும் முன்னர் அறிந்திருந்த பெண்பித்தன் பாத்திரமும் அவருக்குள் இணைய 'லா ஸ்ராடா'வின் காட்சிகள் மனதிற்குள் விரிகின்றன. மகத்தான காவியங்கள் உருவாவதின் மூலம் ஒரு சிறிய துகளாக இருக்கலாம் என்பதற்கான சிறிய உதாரணமிது.

ஜெல்சோமினா சாலையில் தனித்துவிடப்படும் காட்சிதான் பார்வையாளன் அவளை கடைசியாக பார்ப்பது. பின்னர் அவள் இறந்து போகும் செய்தியை அறியும் போது ஜாம்பினோவைப் போல அவனும் அதிர்ச்சியும் துக்கமும் அடைகிறான். ஆண்களால் அலைக்கழிக்கப்படும் அப்பாவிப் பெண்களின் சிறந்த பிரதிநிதி ஜெல்சாமினோ. கனவுகளில் கூட அவளது குழந்தைத்தனமான முகம் வந்து என்னை துன்புறச் செய்கிறது. 

 suresh kannan

10 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த படத்தின் கதையை முன்னரே படித்திருக்கிறேன், சுவைபட கூறி இருக்கிறீர்கள்.

butterfly Surya said...

அருமையான பகிர்விற்கு நன்றி.

வாழ்த்துகள்.

நர்சிம் said...

நன்றி சுரேஷ் பகிர்விற்கு.

அயல்’ சினிமா அருமை.

லேகா said...

நன்றி சுரேஷ்

பார்க்கும் ஆவலை தூண்டுகின்றது உங்கள் பதிவு.

இப்படத்தின் நாயகி குயிலிட்டா மசினா குறித்த எஸ்.ரா வின் விரிவான பதிவு நினைவிற்கு வருகின்றது!!

Subbaraman said...

Nandri suresh kannan..Naan idha partha podhu azhudhen..abaramaana padaipu. blog title oru "ti" a vittuteenga.

Subbaraman said...

Innoru arpudhamana kaachi..andha madathil thangi irukum podhu Zambano thirudiyathai arindhu Gelsomina manasu kashtapaduvathu..

அய்யனார் said...

ஃபெலினியின் இவ்விரண்டு படங்களுமே மறக்க இயலாதது. நைட்ஸ் ஆஃப் கரீபியாவின் தெருவோரக் காட்சிகள் மிகவும் அழுத்தமானவை. இவரின் சர்ரியலிசப் படமான city of women felini யின் படங்களில் எனக்குப் பிடித்தமானது.

மாதவராஜ் said...

இந்தப் படம் நான் பார்த்ததில்லை. தங்களது விவரிப்பில், ஒரு நாவலைப் படித்த உணர்வோடு அந்தச் சாலையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

குப்பன்.யாஹூ said...

want to see this, thanks,

thanks for sharing

உண்மைத்தமிழன் said...

இந்த குயிலிட்டா மசினாவின் இன்னொரு பிரதியை, 'கை கொடுத்த தெய்வம்' படத்தில் சாவித்திரியிடம் பார்க்கலாம்..!