Saturday, February 13, 2010

எழுத்தாளர் ஜெயந்தன் : அஞ்சலி

பிடித்தமான எழுத்தாளர் இறந்துவிடும் போது அவரை இதுவரை சந்தித்திருக்காவிட்டால் கூட நம்முடைய சுற்றங்களில் ஒருவரை இழந்துவிட்ட துக்கத்தையே நாம் அடைகிறோம் என்று தோன்றுகிறது. பலவிதமான எழுத்தாளர்களில் எப்படி ஒருசிலரை குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது என்று யோசித்துப் பார்த்தேன். அந்த எழுத்தாளனின் சிந்தனைகளும் எண்ணங்களும் வாசகனுடனான அதே அலைவரிசையோடு இணைந்து ஒத்துப்போகிற அந்தப் புள்ளிதான் அதனுடைய துவக்கமாக இருக்கக்கூடும்.

ஓர் உதாரணம். நெரிசலான பேருந்தில் பால் வித்தியாசங்களில்லாமல் மனித உடல்களுடன் கரைந்துப் போய் ஆக்டோபஸீக்கு சிக்கன்குனியா வந்த போஸில் எசகுபிசகாக எரிச்சலுடன் நின்று கொண்டிருப்போம் அல்லவா? சினிமா பாடல் காட்சிகளில் வருவது போல் திடீரென்று மற்ற அனைவரும் மறைந்து போய் நாம் மட்டும் காலியான பேருந்தில் அதே போஸில் நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நான் நினைத்து நினைத்து சிரிக்கும் என்னுடைய இந்த அபத்தமான நகைச்சுவையை எழில்வரதனின் ஏதோ ஒரு சிறுகதையில் அப்படியே சந்திக்கும் போது எனக்கு எழில்வரதனை அந்தக் கணமே பிடித்துப் போயிற்று. எனக்குப்பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் எழில்வரதனும் இயல்பாகவே இணைந்து விட்டார்.


ஜெயந்தனை நான் இணைத்துக் கொண்டதும் இதே மாதிரியான தருணமொன்றில்தான். 'வெள்ளம்' என்றொரு சிறுகதை. காமத்தைப் பற்றின நுட்பமான சித்திரங்களைக் கொண்ட சிறுகதையது. மனைவி ஊருக்குப் போயிருக்கும் ஒரு மதிய வேளையில் மழை பெய்ய ஆரம்பிக்க அதன் தொடர்ச்சியாக பாலுறவு கிளர்ந்த எண்ணங்களுடன் படுத்திருக்கும் ஒருவன், மழைக்கு வந்து ஒதுங்கும் வெவ்வேறு வயதுடைய மூன்று பெண்களைப் பார்க்கும் உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் சிறுகதை. அந்தக் கணமே ஜெயந்தனை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அவரது சிறுகதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடியதில் மிகச் சிரமப்பட்டே அடைய முடிந்தது. திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது ஜெயந்தனின் சிறுகதைத் தொகுதியான 'மனச்சாய்வு' கண்ணில்பட்டது. இன்ப அதிர்ச்சியுடன் அதை எடுக்க முனைவதற்குள் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு நபரும் அதே புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். அடுத்தவர் தேர்வு செய்திருப்பதை வாங்கத் துடிப்பதுதானே தமிழ் மரபு? அசுவாரசியமாக புரட்டிப் பார்த்து அவர் தூக்கிப் போட்ட அந்த நூலை கைப்பற்றியவுடன்தான் ஆசுவாசமாக இருந்தது. பின்னதான புத்தக கண்காட்சியின் போது அவருடைய மொத்த சிறுகதைகளையும் இரண்டு பாகங்களாக பதிப்பித்திருந்ததை (ராஜராஜன் பதிப்பகம்) கண்டு அவற்றை வாங்கின பிறகுதான் மற்ற சிறுகதைகளையும் வாசிக்க முடிந்தது. (இப்போது வம்சி பதிப்பகம் எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்).

()

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இலக்கியக்கூட்டம் ஒன்றில் ஜெயந்தனை சந்தித்தேன்.

புகைப்படத்தில் ஏற்கெனவே பார்த்திருந்தபடியால் அவரைப் பார்த்த போது உடனே அடையாளங்கண்டு கொள்ள முடிந்தது. இயல்பாகவே எனக்குள்ள கூச்ச சுபாவம் காரணமாக அவரை அணுகி உரையாடுவதற்கு தயக்கமிருந்தாலும் பிடித்த எழுத்தாளர் என்பதால் கூச்சத்தை உதறி பேச ஆரம்பித்தேன். அவரின் சிறுகதையொன்றை சிலாகித்து பேசினதை கேட்டுக் கொண்டார். இன்னொரு  சிறுகதையில் வந்திருந்த சம்பவமொன்று திரைப்படமொன்றில் பயன்படுத்தப்பட்டிருந்ததைப் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களே இந்த உரையாடல் நீடித்தது. பிறகு என்ன நினைத்தாரோ, உரையாடலிலிருந்து திடீரென்று விலகி என்னிடமிருந்து பிய்த்துக் கொண்டு இன்னொருவரிடம் பேச ஆரம்பித்தார். என்னை அவர் அவமானப்படுத்திவிட்டதாக உணர்ந்தேன். அப்போது இளைஞன்தானே? ஆத்திரம் பொங்கியது. 'இந்த எழுத்தாள மயிராண்டிகள் எல்லாம் இப்படித்தான்' என்று குரோதமாக எண்ணிக் கொண்டேன். பிறகு அவருடைய சிறுகதைகளை வாசிக்கும் போது 'இன்னாத்த கிழிச்சுட்டான். இந்த மாதிரி ஆயிரம் கதை நான் எழுதுவேன்' என்று நினைத்துக் கொண்டேன். 'ஒரு எழுத்தாளரின் மறுபக்கம்' என்கிறதோர் கட்டுரையை ஜெயந்தனின் பெயர் குறிப்பிடாமல் எழுதி அப்போது உறுப்பினராக இருந்த 'ராயர் காப்பி கிளப்' மடற்குழுமத்தில் இட்டேன்.

இப்போது யோசிக்கையில் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும் கிறுக்குத்தனமாகவும் தோன்றுகிறது. அப்போது இவை தோன்றாமைக்கு அந்த வயதுக்குரிய நியாயங்கள் இருக்கத்தான் செய்தன. ஒரு எழுத்தாளரிடம் ஏற்படும் தனிப்பட்ட கசப்புகள் அவருடைய படைப்புகளுடனான வாசிப்பனுபவத்தை பாதிப்பதின் அபத்தத்தைப் பற்றியும் மேற்சொன்ன  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த அஞ்சலிக் கட்டுரையை எழுதுவதை முன்னிட்டு மேலே குறிப்பிட்டிருந்த 'வெள்ளம்' சிறுகதையை தேடி வாசித்தேன். சில கதைகள் அப்போது ஏற்படும் பரவசத்தை சில வருடங்கள் கழித்து ஏற்படுத்துவதில்லை. ஆனால் 'வெள்ளம்' சிறுகதை இப்போதைய வாசிப்பிற்கும் அந்த உணர்ச்சியை பாதுகாப்பாக தருவதில் வெற்றி பெற்றது. 'மனச்சாய்வு' 'அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்' 'முனுசாமி' 'ஞானக்கிறுக்கன் கதைகள்' போன்ற சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்புகளாக உடனடி நினைவுக்கு வருகின்றன. தொகுதியை மீள்வாசிப்பு செய்துவிட்டு அவற்றைப் பற்றி எழுத முயல்கிறேன். இடதுசாரி சிந்தனைகளை உள்ளடக்கிய அவரது எழுத்து எந்தவித அலங்காரமுமில்லாத எளிமையானது. சாவசகாசமாக சம்பவங்களை விவரிப்பது. ஆனால் வாசிப்பின் நிறைவில் வலுவான பாதிப்பை ஏற்படுத்துவது.

ஜெயந்தனுக்கு என்னுடைய அஞ்சலி.

(ஜெயந்தனின் புகைப்படம் தொகுதியின் பின்னட்டையில் இருந்து எடுக்கப்பட்டது).


தொடர்புடைய பதிவுகள்:

தினமணி செய்திக் குறிப்பு

ஜெயந்தனின் சிறுகதையொன்றை வாசிக்க

இன்னொரு வாசக அனுபவமும் அஞ்சலியும்

ஜெயமோகனின் அஞ்சலி

ஜெயந்தனின் குறுநாவல் குறித்தான விமர்சனம்

suresh kannan

17 comments:

மணிஜி said...

மிக நெகிழ்ச்சியான அஞ்சலி சுரேஷ்!

சென்ஷி said...

:(

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களின் உணர்வுகள் புரிகிறது, அன்னாருக்கு அஞ்சலி.

sathishsangkavi.blogspot.com said...

அன்னாருக்கு அஞ்சலி....

லேகா said...

தினத்தந்தியில் இவரின் மரணம் குறித்த செய்தியை கண்டு வருந்தினேன்.

இவரின் "பகல் உறவுகள்" சிறுகதை எனக்கு விருப்பமான ஒன்று.
வம்சி வெளியீடான இவரின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பு வாசிக்க பட வேண்டிய நூல் வரிசையில் ஒன்று.

ரா.கிரிதரன் said...

எழுத்தாளர் ஜெயந்தனுக்கு அஞ்சலி!

நல்ல பதிவு சுரேஷ். நானும் ஜெயந்தனின் கதைத் தொகுப்பை முன்கணிப்பு இல்லாத நிலையில் சந்தித்தேன். பத்து வருடங்களுக்கு முன் படித்த அத்தொகுப்பு கூட மறந்து விட்டது.அற்புதமான கதைகளை அந்த ஒல்லியான தொகுப்பில் படித்தேன். கருக்கள் ஞாபகம் இருப்பது போல் கதைகளின் பெயரில்லை.
பின் தொடர்ச்சியாக அவர் படைப்புகளைத் தேடியிருக்க வேண்டும். செய்யவில்லை.
மிக நல்ல கதைசொல்லி.நீங்கள் எழுதியிருப்பது போல், மிக நுணுக்கமான உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்திய சிறுகதையாசிரியர்.(ஒரு பெண் குற்றவாளி கோர்ட்டில் தன் வழக்குக்கு வாதாடும் நாடகம் நன்றாக நினைவில் இருக்கிறது.பெயர் மறந்துவிட்டது)

தொகுப்பு அறிமுகங்களுக்கு நன்றி!

பொன் மாலை பொழுது said...

மிக்க வருத்தம் அடைந்தேன். அவர் எங்களின் இனிய நண்பரும் கூட

Anonymous said...

இந்த பதிவுக்கு கூட தமிழ்மணத்தில் ஓட்டு குத்துகிறார்கள்.

ஒரு ஆள் செத்துபோனதை பதிவா போட்டாகூட ஓட்டு குத்தும் இந்த வலைப்பதிவர் சமூகம் செத்த சமூகமாக மதிக்கபடட்டும்.

கோயிஞ்சாமி

குப்பன்.யாஹூ said...

nice and useful post

அகநாழிகை said...

ஞானக்கிறுக்கன் கதைகள் எனக்குப் பிடித்தவை.புதிய தலைமுறை வாசகர்கள் பலரால் அறியப்படாத ஜெயந்தன் நுட்பமான எழுத்தாளர்களில் ஒருவர்.

ஜெயந்தனுக்கு (நிராயுதபாணிக்கு) ஒரு அஞ்சலி

http://mrsdoubt.blogspot.com/2010/02/blog-post_12.html

இதையும் உங்கள் இணைப்போடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

நேசமித்ரன் said...

அன்னாருக்கு அஞ்சலி

:(

When it is high time said...

70களில் குமுத்ததில் வந்த் ஒரு சிறுகதை: ‘வாழ்க்கை ஓடும்’ ஆசிரியர்: ஜெய்ந்தன் என்பவர்.

நாங்கள் (நானும் என் அக்காளும்) கதையின் கரு, அதன் போக்கு, சொன்னவிதம் - கண்டு சொக்கினோம்.

பின்னர் இந்த எழுத்தாளர் பெரிய அளவில் தமிழகத்தில் தெரிவார் என நம்பினேன். அது நடக்கவில்லை.

ஏன் நடக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு இலக்கிய வாதியும் அல்ல; இலக்கிய ஆய்வாளனும் அல்ல.

மற்றவர்கள் இந்த் ஏன் என்ற கேள்விக்கு, ஜெயந்தனின் அஞ்சலியிலேயே பதிலையும் போடுவார்கள் என நான் நினைத்தேன். அப்படி இல்லை.

ஆங்கிலத்தில் ஒரு எழுத்தாளர் மரிக்கும்போது, அவரையும் அவர் வாழ்க்கையும் அவர் எழுத்துக்களையும் ஆழ்ந்து ஆராயப்பட்டவைகளே obituariies களாகப்போடப்படும்.

For eg. the obituaries of J.D.Salinger who died last week.

All of them analysed why he became a recluse and what is the legacy he has left behind.

www.myownquiver.blogspot.com

Anonymous said...

ஜெயந்த்னை முதன்முதலாக குமுத்த்தில் ’நினைக்கப்படும்’ நாடகத்தின் மூலம்தான் எனது முதல்
அறிமுகம். அதன் பின் வாழ்க்கை ஓட்டத்தில் இன்று உங்களின் பதிவின் மூலம் அவறின் நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.
மதி
சென்னை

Unknown said...

Top website designing company in India, Surat provding world class design and solutions.Surat Website Designing, Surat Webpage Design, Website Design Surat

BADRINATH said...

நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் படித்தவுடன் அவருடன் எனது அனுபவம் நினைவுக்கு வருகிறது. அவரது சிற்றிதழ் ஒன்றுக்கு நான் அளித்த ஒரு கதையை பிரசுரிக்கவில்லை. (பிறகு இதயம் பேசுகிறது இதழில் வெளியானது...) நேரில் என்னை வரச்சொல்லி அதை திருப்பிக் கொடுத்தார். காரணம் கேட்டேன். '' அட.. கதய பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்னு சம்பிரதாயமா நான் மற்ற பத்திரிகை போல எழத விரும்பல..'' என்றார். அதன் பின்னர் பல சமயங்களில் அவரை இலக்கியக் கூட்டத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். பல விசயங்களை அழகாக அலசுவார். சந்தோசமாக இருக்கும். ஒரு முறை எனக்கு இலக்கிய சிந்தனை மாதாந்திர பரிசு கிடைத்ததும் அதை அவரிடம் தெரிவித்தேன்.. கடிதம் எழுதி பாராட்டினார். நெகிழ்ச்சியாக இருந்தது.. அவர் மனறவு வருத்தமாக உள்ளது.. அவருக்கு எனது அஞ்சலி.
பத்ரிநாத்

Anonymous said...

ஜெயந்தனைப் பற்றிய நல்ல பதிவு. என் அஞ்சலி பதிவிலும் இந்த போஸ்டை லிங்க் செய்திருக்கிறேன். முடிந்தால் என் பதிவையும் படித்துப் பாருங்கள்.

http://koottanchoru.wordpress.com/2010/02/17/எழுத்தாளர்-ஜெயந்தன்-மறைவ/

எம்.ஏ.சுசீலா said...

நான் மதிக்கும் எழுத்தாளர்களில் ஜெயந்தன் குறிப்பிடத்தக்கவர்.
தங்கள் அஞ்சலி சிறப்பானது.
என் பதிவையும் காண்க.
http://masusila.blogspot.com/2010/02/blog-post_21.html
பி.கு; அவரது கிளி குறும் புதினம் எத்தொகுப்பிலுள்ளது..தெரியுமா.தெரிந்தால் சொல்லுங்கள்