...சமீபத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய தமிழ் சினிமா பாடல் திரட்டைக் கண்ணுற்ற நண்பர் ஒருவர் அதிர்ந்து போனார். காரணம், சமகால இசையமைப்பாளர்களில் இடம் பெற்றிருந்தவர்கள், நான் தொடர்ந்து விமர்சித்து வரும் இளையராஜா (ஹே ராம் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, குணா : கண்மணி அன்போடு), ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா என்றுதான் இருந்ததே தவிர அதில் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இல்லை. ஏனென்றால், எனக்கு ரஹ்மானின் இந்திப் பாடல்கள்தான் பிடிக்கும் (உ-ம்: தில்லி 6). ...
இப்படியான அபத்தமான கருத்தை அவர் பிறிதொரு சமயங்களிலும் எழுதிய ஞாபகம். ஒருவரின் இசை இந்தியில் கேட்டால் பிடிக்கும்; தமிழில் கேட்டால் பிடிப்பதில்லை என்பதை எப்படி ஒருவரால் சொல்ல இயலும் என்பதே எனக்குப் புரியவில்லை. இசை மொழிகளைக் கடந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். மேலும் மொழியின் துணைகொண்டு அமையும் பாடல்கள் எல்லாம் ஒரு பாவ்லாதான். இசைதான் ஆதாரம். எனவேதான் என்னால் அட்சரம் கூடப் புரிந்து கொள்ள முடியாத இந்தித் திரைப்பட இசையை, இந்துஸ்தானி இசையை, ஸ்பானிய இசையை... ஏன் சாருவே சிபாரிசு செய்த நான்சி அஜ்ரத்தைக் கூட இசைக்காக மாத்திரமே ரசிக்க முடிகிறது. சமயங்களில் பிரபலமான தமிழ்ப்பாடல்களினால் அமைந்த instrumental தொகுப்புகளை அசலை விடவும் அதிகமாக ரசிக்க முடிகிறது. நண்பர் சாருவிற்கு ரகுமானின் இந்த தமிழ்ப்பாடலை பரிந்துரைக்க விரும்புகிறேன்.
கணினியின் சன்னலை சுருக்கி (minimise)வீடியோவை தவிர்த்து ஒலியை மாத்திரம் கேட்கவும். இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் ஏதோ ஒன்று உடைந்து போகின்றது. உள்ளுக்குள் இருக்கும் அத்தனை ரணங்களையும் கண்ணீரின் மூலம் வெளியே அடித்துத் தள்ள முயலும் மாயவித்தையை இந்தப் பாடல் செய்கிறது. இதே அனுபவம்தான் கேட்கும் அனைவருக்கும் (அது தமிழ் அறியாத அன்பர்களுக்கும் சேர்த்து) அமையும் என்று உறுதியாகச் சொல்ல இயலாவிட்டாலும் உங்களுக்குள் ஏதோவொரு சலனத்தை ஏற்படுத்தத் தவறாது என்பதை மாத்திரம் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் பாடலுக்காக ஸ்வர்ணலதாவிற்கு தேசிய விருது கிடைத்த ஞாபகம். பாடலை கேட்டு முடித்த ஒவ்வொரு முறையும் ஸ்வர்ணலதாவின் கையை முத்தமிட விரும்புகிறேன்.
suresh kannan
23 comments:
நல்ல பரிந்துரை சுரேஷ்.
//பாடலை கேட்டு முடித்த ஒவ்வொரு முறையும் ஸ்வர்ணலதாவின் கையை முத்தமிட விரும்புகிறேன். //
பாட்டுக்கும் கைக்கும் என்ன சம்பந்தம் ;- )?
அவரவர் ரசனை. அவரவர் கருத்து!
***
இசைக்கு மொழி தடையில்லை தான். தமிழ்ப்பட சிவாஜி(யின்) அல்லது அழகிய தமிழ் மகன் (ஹா ஹா ஹா) ரஹ்மானைவிட டில்லி6 ரஹ்மானை ரசிக்க முடிகிறது என்பதற்கான காரணம் மொழியல்ல...இசை தான்! அதைத் தான் சாரு கூறமுயன்றதாக நான் புரிந்து கொண்டேன்.
நன்றி.
நீங்கள் பரிந்துரைத்த அதே பாடலின் மெட்டைத் தான் Gurus of Peaceல் ரஹ்மான் இம்ப்ரூவைஸ் செய்திருப்பார். இதைவிட அது அருமை என்பது என் கருத்து. இந்தி தெரியாது என்றாலும் உஸ்தாத் நஸ்ரத் பத்தே அலிகானின் குரல் எனக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.
இசைக்கு மொழி தடையில்லை.
நஸ்ரத்தின் குரல் எப்பொழுதுமே கண்ணீரை(could be either way ;)) வரவழைக்கும் என்பது வேறு விடயம்
இசைக்கு நிச்சயம் மொழி தடையில்லை. அப்படி சாரு கூறியிருப்பாராயின் அவர் ரகுமானின் சிறந்த பல தமிழ்பாடல்களை கேட்டிருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.
saru our ara vekadu enpathi adikadi nirupipar....
suresh.... entha padal varikaluku vairamuthu vum... singer sornalatha vim natinal award vankinarkal... entha padal lil kathal in vali..varuami .. elamey erukum...
i like u r taste ...
What to do Mr. Suresh Kannan eppavum namma kayil irupathoda mathippu manithannukku eppavum purivathillai.
More to add, to so called writer always proclaim that every other literature is great, every other artis great.
He questions public if anyone sends a comment did you read my books this that. But I have a dobut did he lister or saw all our local treasures of excellence
Thanks for this post
இசைக்கு மொழி தடையில்லைதான். ஆனால் அர்த்தத்தை நீக்கிவிடின் வார்த்தைகள் கூட ஒரு கருவி உருவாக்கும் இசை போலத்தான்.வார்த்தைகளின் ஒலிநயம் இசையோடு ஒத்துப்போக வேண்டும்.
ரகுமானினுடைய இசை இந்துஸ்தானி அடிப்படையிலானது. அதில் இந்தி வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளைவிட நன்றாக பிணையும்.அதாவது இந்துஸ்தானி இசை is optimized for Hindi not Tamil. இதைத்தான் சாரு சொல்லியிருப்பார்.
ஒரு metal rock பாடலை தமிழ் வார்த்தைகளைப் வைத்து கேட்க இயலுமா?
நான் உங்கள் பதிவின் கருத்திற்கும் மெயின் சப்ஜெச்டிர்க்கும் போக விரும்ப வில்லை.
ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல், பாடகி பற்றி எழுதியது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள், பாராட்டுக்கள்.
ஸ்வர்ணலதா எனக்கு பிடித்த மிக சிறந்த பாடகி, அதுவும் இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும், இன்னொரு அற்புதமான பாடல், திருமண மலர்கள் தருவாயோ...
2 years back,
அவரது வீடு விலாசம் கிடைத்து நேரில் பார்க்க போனேன். எந்த வித பந்தாவோ பகட்டோ இல்லை.2 நிமிட காத்திருப்பிற்கு பிறகு என்னை பார்த்து பேச அனுமதி.. என்னுடம் சுமார் பத்து நிமிட உரையாடி இருப்பார்.
ஒரு சாமானிய ரசிகன் ஆன எனது வேண்டுகோளையும் ஏற்று திருமண மலர்கள் பாட்டு நான்கு வரிகள் பாடினார்.
ரஹ்மான் பாடல் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் வந்த பொழுது வெறும் நகரம் சார்ந்த மேற்கத்திய பாடல்கள் மட்டுமே இசை அமைக்க தெரியும் என்ற புகாரை தகர்த்து எறிந்தார் கிழக்கு சீமையிலே படத்தில். கத்தாலம் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி என்ற உடனேயே உசிலம்பட்டி திரை அரங்கில் விசில் பறந்ததே.
பதினைந்து வருடங்கள் ஆன பிறகும் எனக்கு கேட்க அலுக்காத பாடல்கள்:
ருக்குமணி ருக்குமணி, காதல் ரோஜாவே, உசிலம்பட்டி பெண்குட்டி, சிக்கு புக்கு ரயிலு, ஒருவன் ஒருவன் முதலாளி, அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, குளிச்சா குத்தாலம்,
ராசாத்தி என் உசிரு என்னுது இல்ல மஞ்சளை அரைக்கையிலே மனசை அரச்சவளே.
Also "Raasathi" song from "Thiruda thiruda"...Shahul Hameed has rendered it beautifully..One of my all time favorite!!
//இப்படியான அபத்தமான கருத்தை அவர் பிறிதொரு சமயங்களிலும் எழுதிய ஞாபகம்// ஒன்றா இரண்டா அபத்தங்கள் :-)? சாரு எழுத்து நடை அழகு, அதனால் இந்த மாதிரியான அபத்த கருத்துகளை தவிர்த்து படித்துக் கொள்ள வேண்டியதுதான். பரிந்துரை தந்தாலும் அவர் பிடிக்கும் முயலுக்கு மூன்று கால் அதுவும் காரணங்களுடன் ;-)
எனக்கு சுத்தமாகப் பிடிக்காத பாடலில் இதுவும் ஒன்று. இந்த பாடலுக்காகவே சுவர்ணலதாவையும் பிடிக்காமல் போனது. சாருவுக்குத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் பிரச்சினையில்லை. :-)
ரகுமானின் ஹிந்திப் பாடல்கள் பிடிக்கும், தமிழ்ப்பாடல்கள் பிடிக்காது என்று சாரு சொன்னதை நேரடியாக மொழியை வைத்துப் பிரித்துவிட்டீர்கள். அவர் சொல்ல வருவது, ஹிந்தியில் அவரது இசை தனித்தன்மை உடையதாக உள்ளது என்பதுதான் என நினைக்கிறேன். சில சமயங்களில் இப்படி சாருவுக்கு சப்போர்ட் செய்ய நேர்ந்துவிடுவது - நித்யானந்தரின் செயல்தான் என்றே நினைக்கிறேன்.
சாரு தமிழ்த் திரைப்படப்பாடல்கள் தனக்குப் பிடிக்காது என்கிறார், ஆனால் மலையாளப் பத்திரிகை ஒன்றிற்கு தமிழ்த் திரைப்படப்பாடல்கள் பற்றித் தொடர் எழுதப்போகின்றார். மலையாளிகள் தமிழ் சினிமாவைக் கேலி செய்ய இன்னொரு குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பாக சாரு மாறிவிட்டார். ஏதோ நல்ல மூடில் இருந்த நேரம் உன்னைப் போல் ஒருவன் பாடல்கள் கேட்டிருக்கின்றார் போலிருக்கின்றது. அதுதான் பாராட்டியிருக்கின்றார்.
i think U misunderstood charu's statement.
Charu likes more AR's hindi songs only means,he likes His works more in hindi than tamil.Me too.Because his works in Jodha akbar,Delli-6,Swades are masterpiece works.Its only charu's like and dislike..that doesnt means AR's tamil songs are bad.
If he only worked in tamil film industry,now he could become a steriotypical music machine.
சுரேஷ் சாரு ஒரு அறிவுஜீவி. நீங்க அறிவுஜீவி மாதிரி ஆக்ட்டு கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. இதை மனதில் வைத்து இனிமேல் பதிவு எழுதவும். மலையும் மடுவும் எந்த காலத்திலும் ஒன்றாக ஆகவே ஆகாது.
நண்பர்களுக்கு நன்றி. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். சில பின்னூட்டங்களுக்கான பதில்களை மொத்தமாக இணைத்து அளிக்க விரும்புகிறேன்.
(1) அவரவர் ரசனை, அவரவர் கருத்து என்பது மிகச்சரியானது. தனக்கு சரி என நம்புவனவற்றை சொல்ல ஒருவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இணையத்தின் பல இடங்களில் ராஜா-ரகுமான் இசை தொடர்பாக நடக்கும் குழாயடிச் சண்டை போல 'அது எப்படிச் சொல்லப் போகலாம். அறிவிருக்கிறதா?' என்றெல்லாம் தனிநபர் தாக்குதலுடன் ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது மிக அருவருப்பானது. ஆனால் சாரு சில விஷயங்களை என்ன காரணங்களினாலோயோ பொதுமைப்படுத்தி மூர்க்கமாக மறுக்கிறார். உதாரணம் ராஜாவின் இசையை முற்றிலுமாக புறக்கணிப்பது. (இப்போதுதான் சற்று இறங்கி இரண்டு பாடல்களுக்கு வந்திருக்கிறார்). இதைப் பற்றித்தான் நான் உரையாட விரும்புகிறேன். 'உலக இசையைப் பற்றின பரிச்சயமுள்ளவர்களுக்கு ராஜாவின் 'உள்ளுர் இசை' கிணற்றுத் தவளையின் ஓசையுடன்தான் ஒலிக்கும். அதைப் பற்றி விமர்சனம் செய்வதில் என்ன தவறிருக்கிறது?' என்றொரு கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்கு பின்னால் வருகிறேன். ஆனால் ராஜாவின் இசையை புறக்கணிப்பதற்கு அவர் 'கத்தாரை குப்பை' என்று சொல்லி விட்டார் என்றெல்லாம் காரணம் காட்டுவது சிறுபிள்ளைத்தனமாகவே எனக்குத் தோன்றுகிறது.
(2) ஒவ்வொரு பிராந்திய இசைக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. பல்வேறு கலாச்சார உருவாக்கங்களினால் இந்த தனித்தன்மை இயல்பாகவே உருவானது. எனவேதான் நம்மிடையே உள்ள இசையை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் ஆர்வம் பிற இசையை கேட்கும் போது அவ்வளவாக ஏற்படுவதில்லை. (உலக இசையை தொடர்ச்சியாக கேட்பதின் மூலம் இதைக் கடந்துவரலாம்). எனவேதான் இங்கிருந்து இந்திக்குச் செல்லும் இசையமைப்பாளர்களோ அல்லது அங்கிருந்து இங்கு வரும் இசையமைப்பாளர்களோ அவ்வளவாக வெற்றி பெற முடிவதில்லை. (இதனுள் இருக்கும் அரசியல்களையும் தொழிற்போட்டிகளையும் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை). ஆனால் ரகுமானால் இந்தப் பனிச்சுவரை மிகச் சுலபமாக உடைக்க முடிந்தது. இதற்குக் காரணம் பெரும்பான்மையான இசை மேதைகளின் படைப்புகளில் இருந்ததைப் போன்றதொரு சர்வதேசத்தன்மை ரகுமானின் இசையிலும் இருந்தது. எதனால் ரகுமானால் மாத்திரம் இந்தியில் மட்டுமல்லாது சர்வதேச மேடைகளிலும் வெற்றி பெற முடிகிறது என்பதாக எனக்குத் தோன்றுவது: அவர் இசையின் பாரம்பரியத்தோடு நவீன தொழில்நுட்பத்தையும் மிகத் திறமையாக பொருத்தியதுதான். இதுதான் ரகுமானுக்கும் மற்ற இந்திய இசையமைப்பாளர்களுக்கும் உள்ள முக்கியமானதொரு வித்தியாசமாக நான் கருதுகிறேன்.
(3) என்னதான் நாம் பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்திருந்தாலும் சில ஆதாரமான மனித உணர்ச்சிகளும் அந்தரங்கமான தருணங்களும் மிகப் பொதுவானவை. இந்த காரணத்தினாலேயே நாம் மொழி, கலாசாரத் தடைகளைத் தாண்டி சர்வதேச தரத்திலுள்ள பிற தேசத்து இசையையும் திரைப்படத்தையும் ரசிக்க முடிகிறது. இவ்வாறு எந்தவொரு மனித மனத்துடனும் அந்தரங்கமாக உரையாட இயலும் தரத்தில் உள்ளதே மிகச் சிறந்த இலக்கியமாக, திரைப்படமாக, இசையாக அமைகிறது. நார்வே நாட்டுக்காரர் ரகுமானின் 'வராக நதிக்கரையோரம் (சங்கமம்) பாடலை சிலாகித்துப் பேசுவதைப் பற்றி அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். இவ்வாறானதொரு சர்வதேசத் தன்மையை ராஜாவின், ரகுமானின் பெரும்பாலான தமிழ்ப் பாடல்களிலும் காண முடிகிறது. இவற்றையெல்லாம் சாருவால் எவ்வாறு கண்மூடித்தனமாக ஒதுக்கிவிட்டு ரகுமானின் இசையை 'தில்லி6-லிருந்து துவங்க முடிகிறது என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதிலுள்ள சூ·பி இசையைத்தான் சாருவால் ரசிக்க முடிகிறது என்பதாக ஒரு புரிதலை எடுத்துக் கொண்டாலும் நான் முன்னரே சொன்னது போல் அது எந்த இசையாக இருந்தாலும் அதிலுள்ள ஆதாரமான மதுரத்தை ஒரு நல்ல ரசிகனால் புறக்கணிக்கவே முடியாது. சாரு இந்த அபத்தத்தைத்தான் செய்துக் கொண்டிருக்கிறார்.
(4) மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசத்தைப் பற்றி ஒரு அனானி நண்பர் எழுதியிருந்தார். சாருவைப் பற்றி எழுதி அவரின் உயரத்திற்கு நான் எம்பிக் குதிக்க இயலவில்லை. அது என் விருப்பமும் அல்ல. என்னுடைய உயரத்தைப் பற்றி எனக்குத் தெரியும். பிறக்கும் போதே யாரும் அறிவுஜீவியாக பிறப்பதில்லை. ஆனால் அறிவுஜீவியாக நடிப்பதற்கு கூட சிறிதளவாவது அறிவு தேவைப்படுகிறது. இரண்டு வரிகளில் அபத்தமாக பின்னூட்டம் போட்டு விட்டு போவதற்கு அது கூட தேவையில்லை.
சுரேஸ், விரிவான உங்கள் பின்னூட்டம் பலரையும் தெளிவடையவைக்கும் என நம்புகிறேன்.
அனானிக்கு உங்க பதில் அறிவு சார்ந்த நல்ல பதில். by the way (இதற்கு தமிழில் என்ன சொல்வது?), நல்ல நேர்த்தியான பதிவு சுரேஷ்!
எனக்குபிடித்த பாட்டு
1. என்னாத்தா பொண்ணாத்தா - உழவன்
2. ஆத்தங்கர மரமே - கிழக்கு சீமையிலே
சாரு, சுரேஷ் கண்ணன், அரன் பிரசன்னா எல்லோரும் அறிவுஜீவிகள் தான். அறிவு ஜீவிகளின் அடிப்படைத் தன்மைகளில் ஒன்று பிறர் விரும்புவதை, நினைப்பதை, எதிர்பார்ப்பதை நிராகரித்துவிட்டு தடாலடியாக ஒரு மாற்றுக் கருத்தை உதிர்ப்பது. அதாவது கூட்டத்திலிருந்து விலகி சுயமாக சிந்திப்பதாக பாவனை பண்ணுவது. சாரு செய்ததும் அதுதான்; இங்கே சுரேஷ் கண்ணன் செய்திருப்பதும் அதுதான்; அவருக்குப் போட்டியாக அரன் பிரசன்னா உதிர்த்திருக்கும் முத்துவும் அதுதான். அறிவுஜீவிகள் சராசரிகள் மாதிரி சிந்திக்கமாட்டார்கள் என்பது மட்டுமில்லை. இன்னொரு அறிவுஜீவியின் சிந்தனையிலிருந்து மாறுபட்டு சிந்திப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும். இங்கே சுரேஷ் கண்ணன் "எனக்கு "போறாளே பொன்னுத்தாயி" பாட்டும் பிடிக்காது, அதைப் பாடிய சொர்ணலதாவின் குரலும் பிடிக்காது" என்று எழுதியிருந்தால், அரன் பிரசன்னாவின் பதில் என்னவாக இருந்திருக்கும் என்று கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களும் அறிவுஜீவி டெஸ்டில் பாஸ்.
- வேறொரு அனானி
||இசை மொழிகளைக் கடந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். மேலும் மொழியின் துணைகொண்டு அமையும் பாடல்கள் எல்லாம் ஒரு பாவ்லாதான்||
எப்படி இப்படி ஒரு கருத்தை சிந்திக்காமல் எழுத முடிந்தது எனத் தெரியவில்லை.
குழந்தைக்கு அப்பா பிடிக்குமா மாமா பிடிக்குமா என்ற கேள்விக்கும்,அப்பா பிடிக்குமா அல்லது அம்மா பிடிக்குமா என்ற கேள்விக்குமான விடை சாத்தியங்கள்தான் இசை மொழி பற்றிய விவரணங்களுக்கு சரியான பதிலாக இருக்கும்.
இசை மொழி கடந்ததுதான்;ஆனால் இசையில் தோய்வதற்கு மொழி அவசியம்.
நீங்கள் எடுத்துக்காட்டிய ஒளிப்படக்காட்சித் துண்டில் கூட,அதாவது உங்கள் கூற்றின் படி 'வீடியோவைத் தவிர்த்து ஒலியை'மட்டும் கேட்டாலும் உங்களை நெகிழ்த்துவது அந்தப் பாடல் வரிகளும் அவை சொல்லும் விவரணமும் சூழலும் சார்ந்த பொருள் உங்கள் மனக்கண்ணில் எழுவதுதான் உங்களை நெகிழ்த்துகிறது;வேண்டுமானால் இதே பாடலை கரோக்கியில் போட்டு இசையை மட்டும்-அதாவது பாடல் வரிகளின்றி-கேட்டுப் பாருங்களேன்,உங்களை அது நெகிழ்த்துகிறதா பார்க்கலாம்!
மொழியற்ற எந்த இசையும் ஆன்மாவைத் தொடுவதில்லை.புரியாத மொழியில் பாடலோடு அமைந்த இசையை ரசிக்க முடியாது என்பதில்லை;ஆனால் இசைக்கான ஜீவன் முழுமை பெறுவது மொழியின் ஆளுமை சேரும் போது அதுதான் நெகிழ்வனுபவம் தரும்.
இதைப் புரிந்து கொள்ளாமலா இந்தப் பத்தியை எழுதினீர்கள்?
அதே கருத்தம்மா படத்தின் பாடல்களில் "தென்மேற்கு பருவக்காற்று" என்ற பாடலில் வரும் beat டாக்டர் அல்பன் என்னும் ஆங்கில ஆல்பத்தில் வரும் பாடலின் அப்பட்டமான காபி. ஒலக சினிமாவுடன் கொஞ்சம் ஒலக இசையும் கேட்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பிழையிருந்தால் மன்னிக்கவும். கண்டிப்பாக கடுதாசி போடவும். நன்றி வணக்கம்.
paavam.. swarnalatha iranthuviddathu
Post a Comment