Tuesday, July 21, 2009

கால் கட்டு

Photobucket

ஒருக்கால், எனக்கு ஒரு கால் மாத்திரம் இருந்தால் (தற்காலிகமாகத்தான்) எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பல சுயபச்சாதாபமான சமயங்களில் தோன்றியதுண்டு. தொடர்ச்சியான இயந்திரத்தனமான அலுவலக நாட்களை சலிப்புடன் கடந்துவரும் சூழ்நிலையில் மறுநாளும் அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டுமா? என்கிற கேள்வி பிரம்மாண்ட எரிச்சலாக காலையில் என் முன் நிற்கும் போது, படிக்காத புத்தகங்களும் பார்க்காத திரைப்படக் குறுந்தகடுகளும் அப்போதுதான் ஆசையாய் கண் முன்னால் வசீகரமாக நடனமாடும். அலுவலகத்திற்கு மட்டம் போட வலுவான காரணத்தை தேட வேண்டிய சூழ்நிலையிலும் குற்ற உணர்வோடு அந்த விடுமுறையை கழிக்க விரும்பாத சூழ்நிலையிலும் 'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் "நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்' என்று நினைத்துக் கொள்வேன். செயற்கையான புன்னகையும் பலவிதமான தந்திரங்களுடனும் பொய்களுடனும் செய்ய வேண்டிய அலுவலக வேலையை விட ஒரு காலைப் பயன்படுத்தாத முடியாத நிலை அப்படியொன்றும் அசெளகரியமானதாய் இருக்காது என்றும் தோன்றும். இப்படி நான் அவ்வப்போது முனகிக் கொண்டிருந்ததை அப்போது வானத்தில் உலவிக் கொண்டிருந்த ஏதோவொரு தேவதையின் காதில் விழுந்தததோ தெரியவில்லை, 'ததாஸ்து' என்று சொல்லி விட்டுப் போயிருக்க வேண்டும். ஆனால் என்னுடை முனகலைப் போலவே அந்த தேவதையும் வரத்தை (?!) முணுமுணுப்பாகச் சொல்லியிருக்க வேண்டும் போல. எலும்பு முறிவெல்லாம் ஏற்படாமல் 'மயிர்க்கோட்டு விரிசலோடு' (hair line crack-ஐ எப்படிச் சொல்வது) திருப்தியடைய வேண்டியிருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் இல்லாத சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை வேலை வெட்டி எதுவும் இல்லாத அன்பர்கள் மாத்திரம் தொடர்ந்து வாசிக்கவும்.

பொதுவாக வாகனங்களுக்கும் எனக்கும் ஜாதகக் கட்டங்களின் ஏதோவொரு விசித்திர மூலையில் மூர்க்கமான பகைமை இருந்திருக்க வேண்டும். எல்லோரையும் போலவே சிறுவயதுகளில் சைக்கிள் கற்றுக் கொள்ளச் சென்ற போது எசகு பிசகாக விழுந்து நிஜமாகவே முதுகுத் தோல் உரிந்துப் போய் அந்த ஆசை அப்படியே நின்று போனது. பின்பு இரண்டு கழுதைக்கான வயாசான போது பைக் ஓட்டக் கற்றுக் கொள்ள முயன்றதில் ஏதோ நான் புவியீர்ப்பு விசையில்லாத சந்திரனில் ஓட்டுவதைப் போன்ற சாகசங்களையெல்லாம் செய்த போது கற்றுத் தர வந்திருந்த நண்பன் வெறுத்துப் போய் விலகிப் போனான். பின்பு என்னுடைய இட நகர்வுகளுக்காக ரயில், பேருந்து, நண்பர்களின் பைக், அலுவலக கார் போன்றவைகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இதில் ரயில், பேருந்து வகையறாக்களுக்கும் எனக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். காலை வேளைகளில் பரபரப்பும் அவசரமும் படபடப்புமாக நான் நடையை எட்டிப் போட்டு நிலையத்தை அடையும் அந்த தருணத்தில்தான் அவை எனக்கு பழிப்பு காட்டி தன் பின்பக்கத்தை ஆட்டிக் கொண்டே புறப்பட்டுச் சென்று என்னை வெறுப்பேற்றும். சரி என்று நேரத்தை குறித்துக் கொண்டு மெனக்கெட்டு முன்னதாகவே சென்றால் அன்று அவை மிகத் தாமதமாக வந்து என்னைப் பழிவாங்கி தம்முடைய அடங்கா வெறியை தீர்த்துக் கொள்ளும். இவை எப்போதும் எனக்கு மாத்திரம்தான் நிகழ்கிறதா என்கிற பிரமை பல சமயங்களில் ஏற்படுவதுண்டு.

()

அன்றைக்கும் அப்படித்தான். கடற்கரை செல்லும் ரயில் வண்டியை பிடிப்பதற்காக அவசர அவசரமாய் ஓட்டமும் நடையுமாய் பரபரப்பும் பரவசமுமாய் (அடங்குடா!) நான் சென்ற போது மிக அதிசயமாய் நிலையத்தில் அந்த ரயில் சாதுவாய் காத்துக் கொண்டிருந்தது. வெடிகுண்டிற்கு தப்பி ஓடுபவர்கள் போல் அவரசமாய் இறங்கி ஓடுபவர்களுக்கு இணையாக ஏறுபவர்களும் முண்டியடிப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. (இப்படி நாம் ஓசியில் சுண்டல் வாங்குவதற்காக முண்டியடிக்கும் அதே சாகசத்தை ஏன் எல்லா அன்றாட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்பதை யாராவது ஆய்வு செய்தால் தேவலை. மாலை வேளைகளில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று கவனித்தால் நான் சொல்வது புரியும். சென்ட்ரல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து புறநகருக்கான வண்டியைப் பிடிப்பதற்காக முனைபவர்கள் கூட்டமாக ரயிலிலிருந்து இறங்கி ஓடும் காட்சி ஆங்கில போர்ப்படக் காட்சிகளுக்கு நிகரானதாக இருக்கும்). நான் எதிரே இறங்கி ஓடிக் கொண்டிருந்த ஒரு பரபரப்பானவரை நிறுத்தி "பீச் வண்டியா சார்"? என்றதற்கு அவர் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதிக்க இன்னும் பரபரப்பான உற்சாகத்தோடு படிகளை தாண்டி ஓட முயன்ற அந்தக் கணத்தில்தான் மேற்குறிப்பிட்ட தேவதை சோம்பல் முறித்தவாறே என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். திடீரென்று பூமிக்குள்ளிருந்து முழு விசையுடன் யாரோ என் காலை இழுத்ததைப் போல என்னுடைய இடது கால் சர்ரியலிச ஓவியத்தின் ஒரு விநோதமான கோடு போல இசகுபிசகான நிலையில் மடங்கியது. உச்சபட்ச வலி மண்டைக்குள் எகிறி என்னை பிரேக் போட வைத்தது. 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெறியுடன் ஓடிக் கொண்டிருந்தவனை யாரோ ஒருவர் நிறுத்தி 'டைம் என்னா சார்" என்று கேட்டதைப் போல் மிக அபத்தமாக இருந்தது அந்தச் சூழ்நிலை.

ஒருவாறான சமாளித்து ரயிலிற்குள் ஏறிவிட்டேன். படபடப்பிலும் அதிர்ச்சியிலும் வியர்த்துப் போய் தலை கிறுகிறுத்தது. அமர்வதற்கு இருக்கையில்லாத நிலையில் பிரசவ அவஸ்தையுடன் நின்று பயணித்து விந்தி விந்தி அலுவலகத்தை எப்படியோ அடைந்தேன். ஷ¥வை கழற்றிப் பார்த்ததில் வீங்கிப் போயிருந்தது. "எப்படி ஆச்சு?" என்று அலுவலகம் விசாரித்ததில் நடந்ததை சொல்வதில் தயக்கமிருந்தது. துரத்தும் ரவுடியிடமிருந்து ஒரு அபலைப் பெண்ணை காப்பாற்றுவதற்காக பைக்கை சுழற்றிச் சென்ற சாகசத்தில் ஏற்பட்ட விபத்து என்றாலும் ஒரு 'கெத்தாக' இருக்கும். ரயிலைப் பிடிக்க ஓடியதில் கால் பிசகியது என்று சொல்வதில் எனக்கே விருப்பமில்லை என்றாலும் அதையேதான் சொல்ல வேண்டியிருந்தது. 'பாருங்கள். அலுவலகத்திற்கு நேரத்திற்கு வர நான் எப்படியெல்லாம் சிரமப்படுகிறேன்' என்று மறைமுகமாகச் சொல்ல நான் விரும்பியிருக்க வேண்டும்.

'ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்' என்கிற அந்த தேவகானம் பொருந்திய வசனத்தை எலும்பு முறிவு மருத்துவர் சொன்ன போது இன்பமாக இருந்தாலும் பக்கத்தில் என்னுடைய மேலதிகாரி நின்றிருந்ததால் 'ஒரு வாரமா?" என்று பாவனையாக அலறினேன். "எக்ஸ்ரேல சரியா தெரியல. தசைநார் ஒருவேளை கிழிந்திருக்கலாம். ஸ்கேன் செஞ்சுப் பாத்ததான் தெரியும். ஆனா அதுக்கு அவசியமில்லன்னு நெனக்கறேன். சின்னதா ஒரு கிராக் ஏற்பட்டிருக்கு. கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தா போதும்" என்றார். கிராக்குக்கே ஒரு கிராக்கா என்று நிச்சயம் யாராவது கிண்டலடிப்பார்கள் என்று தோன்றியது.

()

அலுவலக ஊழியர்களின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்த போது என்னுடைய மனைவி பதறியதில் பாவனையோ சம்பிரதாயமோ இருந்ததாகத் தெரியவில்லை. மகள்கள் மாத்திரம் முதலில் மிரட்சியுடன் பார்த்தாலும் பின்னர் நான் பிளாஸ்டிக் நாற்காலி உதவியுடன் தவழ்ந்து நகர்வதை 'சட்டி சுட்டதடா' பின்னணி பாடலுடன் கிண்டலடிக்கத் துவங்கிவிட்டார்கள். பின்னதான ஆதரவான தொலைபேசி விசாரிப்புகள். "இந்த வயசுல ஓடறதெல்லாம் தேவையா?" என்ற சில உபதேசங்களும் கூடவே. 40 வயதில்தான் ஜெமினி கணேசன் கதாநாயகனாக முதல்படத்தில் நடித்தார் என்று இவர்களுக்குச் சொல்ல விரும்பினேன். அமர்ந்திருந்த இடத்திலேயே உணவும் கைகழுவும் வசதியுமான ராஜ உபச்சாரம் மகிழ்வாகவே இருந்தது. நான் நகரும் போது குடும்பமே பதறி விலகுவதைக் காண சற்று குருரமான திருப்தியாகத்தான் இருந்தது. வேளா வேளைக்கு ஞாபகமாக மாத்திரைகளை தந்த மனைவி, குழந்தைகள் மீது நெகிழ்ச்சியும் இன்னும் அதிக கனிவும் ஏற்பட்டது. எல்லோருமே மறந்துப் போன ஒரு சூழ்நிலையில் என் இரண்டரை வயது மகள் மருந்துக் கவரை கொண்டு வந்து நீட்டியதை அனைவருமே மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பாராட்டினோம்.

சற்று குணமான நிலையில் ஒரு காலை நொண்டி நொண்டி நகர வேண்டியிருந்தது. சிறு வயதுகளில் மிக விருப்பமாக விளையாடின ஒரு விளையாட்டை 80 கிலோ எடையை வைத்துக் கொண்டு நிகழ்த்துவதற்கு மிகச் சிரமமாக இருந்தது. கழிவறை சென்று வருவதுதான் மகா அவஸ்தையாய் இருந்தது. சாதாரண சமயங்களில் மிக இயல்பாய் செய்யும் ஒரு விஷயம், இப்போது ஏதோவொரு உலக சாதனையை நிகழ்த்துவதற்குச் சமமான சமாச்சாரமாய் ஆகிப் போனதை நினைத்த போதுதான் நிரந்தரமாகவே உடல் ஊனமுற்றிருப்பவர்களின் வலியையும் வேதனையையும் ஒரளவிற்காவது உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. நீண்ட வருடங்களாக படிக்க நினைத்து தள்ளிப் போன புத்தகங்களையெல்லாம் படுக்கையில் அடுக்கி வைத்து படித்துத் தீர்த்தேன். மார்க்வெஸ்ஸின் 'நூற்றாண்டுத் தனிமை'யின் ஆங்கில வடிவத்தை முக்கி முக்கிப் படித்து பாதியில் நிற்கிறது. இரண்டு மூன்று நல்ல திரைப்படங்களை சாவகாசமாக பார்க்க முடிந்தது. பாராவின் பதிவின் தூண்டுதலில் கள்ளனை தேடிப்பிடித்து பார்த்தேன்.

வலியைப் பொறுத்துக் கொண்ட சில சொற்ப அசெளகரியங்கள் தவிர அலுவலகச் சுமை முதுகில் அழுத்தாத இந்த நான்கைந்து நாட்கள் சுகமாகவே கழிந்ததாகவே தோன்றியது. ஆனால் கூடவே செய்து முடிக்க வேண்டிய அலுவலகப் பணியின் நினைவுகளும் கூடவே ஓடியது. ஒருநிலையில் இந்தச் சுகமும் அலுத்துப் போய் அலுவலக நுகத்தடியை மறுபடியும் மாற்றிக் கொள்ளும் ஆவல் பிறப்பதையும் குறிப்பிட வேண்டும். நாளை முதல் அதுவும் நிறைவேறும். மறுபடியும் அந்த பழைய முனகல் திரும்பவும் நிகழலாம். ஆனால் தேவதை மறுபடியும் வரம் (?!) தருமா எனத் தெரியவில்லை. :-)

suresh kannan

20 comments:

ஈரோடு கதிர் said...

//திடீரென்று பூமிக்குள்ளிருந்து முழு விசையுடன் யாரோ என் காலை இழுத்ததைப் போல //

அது எந்த இடம்னு சொன்னீங்கனா... நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும். நானும் ஒன்னாங்கிளாஸ் படிக்கறப்போ இருந்து யாராவது ததாஸ்து சொல்வாங்களானு பார்க்கிறேன்... ம்ம்ம்ஹூம்

அருமையான பதிவு... வார்த்தைகளை சுகமாக கோர்த்திருக்கிறீர்கள்

அனுபபித்துப் படித்தேன்

ஜோ/Joe said...

//'ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்' என்கிற அந்த தேவகானம் பொருந்திய வசனத்தை எலும்பு முறிவு மருத்துவர் சொன்ன போது இன்பமாக இருந்தாலும் பக்கத்தில் என்னுடைய மேலதிகாரி நின்றிருந்ததால் 'ஒரு வாரமா?" என்று பாவனையாக அலறினேன்.//
//மகள்கள் மாத்திரம் முதலில் மிரட்சியுடன் பார்த்தாலும் பின்னர் நான் பிளாஸ்டிக் நாற்காலி உதவியுடன் தவழ்ந்து நகர்வதை 'சட்டி சுட்டதடா' பின்னணி பாடலுடன் கிண்டலடிக்கத் துவங்கிவிட்டார்கள்.//

:)))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

12 வருடங்கள் முன்பு எனக்கு இந்த hair line crack எற்பட்டது. ஜூரத்திற்கு டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது சிகரெட் கங்கு கீழே விழுந்துவிட அதை ஒற்றி எடுக்கக் குனிந்தபோது இது நடந்துவிட்டது. 200 மீட்டர் தூரத்திலிருக்கும் என் வீட்டை அடைய அரை மணிநேரம் கால்களை இழுத்து இழுத்து நடந்தேன் :)

கழிவறை செல்வது மகா அவஸ்தை. அதைவிடக் கஷ்டமாய் எனக்குத் தெரிந்தது மது arrange செய்வது - அலுவலக நண்பர்கள் வாங்கிவந்து தரும் மது போத்தல்களை புத்தக அலமாரியின் நடுவில் வைத்துப் பாதுகாத்தேன் :) புத்தக அலமாரியின் நடுவில் அரை போத்தல் பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைக்கும் பழக்கும் இன்றளவும் தொடர்கிறது. யார் கண்ணிலும் படாமல் இருக்க இதைவிடச் சிறந்த இடம் உண்டா என்ன :) :)

சரவணகுமரன் said...

:-(

சரவணகுமரன் said...

:-))

Anonymous said...

Take care.
Rajkumar

Unknown said...

தலைப்பைப் பார்த்து பயந்து வந்தேன், அதே மாதிரியே நடந்திருக்கு (பின்னே இந்த வயசுக்கு பிறகு கல்யாணத்தைப் பத்தியா எழுதப்போறிங்க! அதுக்கும் ஜெமினி கனேசனை துணைக்கு அழைக்காதிங்க ;-) ). எழுத்தாளர்கள் உச்சத்தை (எழுத்தில்) எட்டும்போதெல்லாம் காலுக்கு எதாவது பாதிப்பு வருமோ (பாராவுக்கு போன வருஷம்).

//எலும்பு முறிவெல்லாம் ஏற்படாமல் 'மயிர்க்கோட்டு விரிசலோடு' (hair line crack-ஐ எப்படிச் சொல்வது) //

hairline escapeக்கு எப்படி சொல்விங்களோ அப்படி தான் :-)

Rajan said...

Get well soon!

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

அனுபவம் பேசுகிறது...அருமை

Beski said...

ஓ... இதான் மேட்டரா? சீக்கிரம் நல்லதைப் பெறுங்கள்.

குப்பன்.யாஹூ said...

நல்ல வேளை சிறிய அளவில் பொய் விட்டது, கவனமாக இருங்கள்.

ரயிலோ பேருந்தோ, அவசரம் வேண்டாம்.

ஓஷோ சொல்வது போல இந்த உலகத்தை தாண்டி நாம் எங்கும் போக போஅவது இல்லை.

குணமானத்தில் சந்தோஷம்.

குப்பன்_யாஹூ

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களின் அன்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

KARTHIK said...

இப்போ பரவாயில்லைங்களா :-))

நல்ல வர்னனையோட எழுதிருக்கீங்க

// என்னுடைய இடது கால் சர்ரியலிச ஓவியத்தின் ஒரு விநோதமான கோடு போல இசகுபிசகான நிலையில் மடங்கியது.//

இந்த வரிகள படிக்குரப்ப ஏனோ ஃபிரிடாதான் ஞாபகத்துல வந்து போகுது.

மயிலாடுதுறை சிவா said...

என்ன சுரேஷ்

உடம்பை பார்த்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரியுமா? தெரியாதா?

மயிலாடுதுறை சிவா...

Krishnan said...

Take care and get well soon.

goviselva said...

suresh in kalkattu vithiyasamana pathivu. naarthiyayana nadai.

சாணக்கியன் said...

/*'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் "நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்'*/

I had thought exactly the same. I have expressed this recently in umashakthi's post as well. The difference between other ailments like fever, etc and a bone crack is that we won't be very tired. So we can utilize the time in our favorite hobbies.... cheers

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,

வயசான காலத்துல இது தேவையா என்று கேட்கத் தோன்றினாலும், பெண் குழந்தைகளின் அருமையைப் நீங்கள் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இது அமைந்த காரணத்தால், கேட்கப்போவதில்லை :)

'ரெண்டு பொண்ணு' பெத்த மகராசனா நீங்களும் !!!! வாழ்க :)

விரைவில் பூரண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு விண்ணப்பம்: இடுகை இட்ட கையோடு, டிவிட்டரில் லிங்க் தரவும். நன்றி.

Anonymous said...

miga arumai sir

Anonymous said...

Very good article! We are linking to this great content on our site.

Keep up the good writing.

Have a look at my page - http://ingifts-berlin.blogspot.de/search/label/geschenkegrosshandel