இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் இதன் அபாரமான திரைக்கதை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மனோபாலாவின்' பிள்ளை நிலா என்றொரு ஷாலினி நடித்த படம் சக்கைப் போடு போட்டது. பின்னர்.. யார், 13-ம் நம்பர் வீடு, மைடியர் லிசா போன்ற அசட்டு திகில் படங்கள் தமிழில் வந்தாலும் உருப்படியான thriller எதுவும் தமிழில் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் ரசித்துப் பார்த்த திகில் படைப்பு தொலைக்காட்சியில்தான் வந்தது. அது 'நாகா'வின் மர்மதேசம். split personality பற்றி தமிழ்த் திரை பேசுவதற்கு முன்பே அந்த சமாச்சாரத்தை தொட்ட தொலைக்காட்சி தொடர் அது. திகில் படங்களின் ஆதார விதி, அதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதுதான் போல. பார்வையாளனை நகத்தைக் கடித்தபடி இருக்கையின் நுனியில் அமர வைப்பதுதான் இயக்குநரின் முக்கியமான நோக்கமாக இருக்கும்.
அந்த வகையில் 'யாவரும் நலம்' வெற்றி பெற்றிருக்கிறது எனலாம். புது அபார்ட்மெண்டில் குடியேறும் மாதவன் விசித்திரமான நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதன் தொடர்ச்சியாக அவர் வீட்டில் மாத்திரம் மதியம் 01.00 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரில் நிகழும் சம்பவங்கள் சற்றேறக்குறைய அவர் வீட்டிலும் அப்படியே நிஜத்தில் நிகழ்கின்றன. அதன் ஆணிவேரைத் தேடி மாதவன் பயணிப்பதுதான் மீதப்படம்.
மஹாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும் எடுத்து தீமைகளை ஒழிக்கும் சூப்பர்மேன் நாயகர்களுக்கு மத்தியில் சாதாரண மனிதர்களை நாயகர்களாக சித்தரிப்பதில் மோகன் வகையறாகளுக்குப் பிறகு தற்போது மாதவன் மாத்திரமே அம்மாதிரியான பாத்திரங்களை துணிந்து ஏற்கிறார் என்று நினைக்கிறேன். வழக்கமான திரைப்படங்கள் தவிர, அன்பே சிவம், நளதமயந்தி, எவனோ ஒருவன், குரு, ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால்... என்று அவர் தேர்ந்தெடுக்கும் படங்களே அலாதியாகத்தான் இருக்கிறது. இடையில் சீமான் போன்றோர்களிடம் மாட்டிக் கொள்ளும் அபாயமும் நேர்கிறது. தானே தனது குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்று பதைபதைக்கும் போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது.
அவ்வளவு பெரிய அபார்மெண்டில் மாதவன் குடும்பமும் கண்பார்வையற்ற ஒருவரும் நாயும் மாத்திரம்தான் இருக்கிறார்களா, மாதவனின் மொழியில் அவரின் அம்மாவிற்கு 'பாய் பிரண்டாக' இருக்கிற அந்த நபரின் வீட்டில் நிகழ்ந்த துர்மரணம் பற்றி இவர்கள் அறியாமலா இருப்பார்கள்? என்று நமக்குள் எழுகிற கேள்விகளையெல்லாம் நமக்குள்ளேயே புதைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
டிவி சீரியலில் நடிக்கவென்றே பிறந்தவர்களை இந்தப் படத்தில் பார்த்துத் தொலைக்க வேண்டிய சங்கடத்தைத் தவிர படம் மிக விறுவிறுப்பாகவே செல்கிறது. மண்டையோட்டுடன் மந்திரவாதி, இருட்டில் வெள்ளை சேலை போன்ற வழக்கமான அசட்டுத்தனங்ளை தவிர்த்துவிட்டு ஒரு ஹைடெக் திகில் படத்தைத் தருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார். ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமைப் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். பிரேமிற்குள் இருக்கிற அத்தனை பத்தாயிரம் வாட்ஸ் விளக்குகளையும் பயன்படுத்தி 'தெளிவாக' படம் எடுத்துக் கொண்டிருக்கிற தமிழ்த்திரையை இருளும் ஒளியுமான கலவையை நவீனமாக பயன்படுத்தி அதன் முகத்தை மாற்றியமைத்தவர்களில் முக்கியமானவர் பி.சி. அக்னி நட்சத்திர கிளைமேக்ஸ் போன்றவைகளை மாத்திரம் சற்று சகித்துக் கொள்ள வேண்டும். சங்கர் மகாதேவன் குழுவினரின் இசை சில சமயங்களில் இரைச்சலாக இருந்தாலும் பல சமயங்களில் திகிலை ஏற்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கிறது.
()
தொலைக்காட்சி தொடரில் வரும் சம்பவங்கள் protagonist-ன் நிஜ வாழ்விலும் நடைபெறும் காட்சித் தொடரை பார்த்தவுடன் என் மூளையில் மணியடித்தது. இதே போன்று எங்கோ பார்த்திருக்கிறோமே என்று. ஹாலிவுட்டின் பிரபல இந்திய தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ், sony pix தொலைக்காட்சியுடன் இணைந்து 'Gateway' என்றொரு ரியாலிட்டி நிகழ்ச்சியை தயாரித்தார். இந்தியாவில் உள்ள சினிமாவை தயாரிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியது. அதில் ஆரம்ப நிலை போட்டியில் பிஜோய் நம்பியார் என்ற போட்டியாளர் soap என்கிற குறும்படத்தை உருவாக்கினார்.
கல்லூரி பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் தோன்றும் சம்பவங்கள் உடனேயே தன் வீட்டில் நிகழ்வதை ஆச்சரியத்துடன் கவனிக்கிறார். உடனே ஆர்வமாகி அந்தத் தொடரை தொடர்ந்து கவனிக்கும் போது அதிலேயேயும் இவரைப் போன்றதொரு பேராசிரியர் பாத்திரம் சந்திக்கும் நிகழ்வுகளை பிற்பாடு இவரும் சந்திக்க நேரிடுகிறது. மனஉளைச்சலுக்கு ஆளாகும் பேராசிரியர், டிவி பேராசிரியர் ஒரு விபத்தை சந்தித்து இறப்பதை பார்க்கிறார். நிஜ வாழ்க்கையில் இவரும் அதே போன்றதொரு விபத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர் தப்பி விடுகிறார். சாலையில் செல்லும் இன்னொரு நபர் அதில் சிக்கி இறந்து விடுகிறார். அவர் யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம்?.
மிகச் சுவாரசியமாக உருவாக்கப்பட்டிருந்த அந்தக் குறும்படத்தில் கல்லூரி பேராசிரியராக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்திருந்தார். இறுதிப் போட்டியிலும் பிஜோய் நம்பியாரே வெற்றி பெற்றார். (rediff செய்தி)
இதே காட்சியமைப்புகளின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேற்கண்ட தொலைக்காட்சித் தொடரை 'யாவரும் நலம்' இயக்குநரும் பார்த்து அதே போன்று அதைத் திரையில் நிகழ்த்த விரும்பினாரா என்பது தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று ஒரு கதாசிரியர் புகார் செய்திருப்பதாகவும் அறிகிறேன். படத்தில் வெளிப்படும் சுவாரசியங்களை விட இவை இன்னும் சுவாரசியமாக இருக்குமோ என்னவோ?
()
எனது முந்தைய பதிவின் சில குறிப்புகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதை பின்னூட்டங்களின் மூலம் உணர முடிகிறது. என் நோக்கம் நிச்சயம் அதுவல்ல. பதிவை திறந்த மனத்துடன் படிக்கும் எவராலும் அதை உணர முடியும். அதற்கான தடங்கள் அந்தப் பதிவிலேயே உள்ளன. I was not trying to preach. 'அந்தப் படம் பாக்கறது வேஸ்டுப்பா' என்கிற ஒரு நண்பனின் குரல்தான் அது.
நான் பொழுதுபோக்கு சினிமாவின் எதிரி அல்ல. பல சமயங்களில் என்னை இளைப்பாற்றிக் கொள்ள நான் பார்ப்பது பொழுதுபோக்கு படங்களே. கலையின் ஆதாரத் துவக்கமே இளைப்பாறுதல்தான். ஆதிமனிதன் வேட்டையாடி, புணர்ந்து, இயற்கையுடன் போராடி சுற்றித் திரிந்து மீதமுள்ள தாராளமான பொழுதுகளைக் கழிக்க உருவாக்கின புனைவு, ஒவியம், நாடகம், இசை போன்றவற்றின் மிக நவீன வடிவங்கள் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருப்பது. அவற்றின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக அதிலுள்ள குறைகளை களைந்து மிகுந்த நுண்ணுணர்வுடன் அணுகும், வணிகத்துக்காக செய்து கொள்ளும் சமரசங்களை முற்றிலுமாக புறக்கணிக்கும் படைப்புகளே 'கலைத்தன்மை' வாய்ந்தவை.
ஆனால் 'பொழுது போக்குத் திரைப்பட' இயக்குநர்களுக்கு வாஷிங் மெஷினுக்கு உள்ள மூளையாவது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை. மேற்சொன்ன திரைப்படத்தை சுவாரசியமான திரைக்கதையுடன் அமைத்திருக்கும் இயக்குநரை நிச்சயம் பாராட்டுகிறேன். அம்மாதிரிப்படங்களை வரவேற்க வேண்டும். மாறாக என்ன நிகழ்கிறது. சுயமாக சிந்திக்கத் திராணியில்லாமல் பழைய திரைப்படங்களின் அடிப்படையை திருடிக் கொண்டு அதில் சதையையும் உதையையும் நாயகனின் பிம்பத்தையும் மிகையாக கலந்து சற்றும் சமூகச் சுரணையில்லாமல் பார்வையாளனை அந்தப் போதையிலேயே ஆழ்த்தி தன் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்ளும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இருந்தாலென்ன, நாசமாயப் போனாலென்ன?. சினிமாவை முதல்வர் நாற்காலிக்கான குறுக்குப் பாதையாக பயன்படுத்த நினைக்கும் கோமாளிகள் வேறு. இந்த அபத்தமான சூழ்நிலையை சகித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை வரவேற்கவும் ஆள் இருக்கிறது என்பதை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.
எப்படி சிலர் வியாபாரத்திற்காகவோ அறியாமையினாலோ வணிகப்படங்களை ஆதரிக்கும் நிலையை எடுப்பது போல அதை புறக்கணிக்கும் நிலையில் இருப்பவர்களின் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை வெளியை அமைத்துத் தருவதுதான் உண்மையான கருத்துச் சுதந்திரமாக இருக்க முடியும்.
suresh kannan
10 comments:
பார்ப்பனர்களுக்கு பிடிக்கிற படங்களே உங்களுக்கும் பிடிப்பதின் மர்மம்தான் என்ன சுரேஷ்கண்ணன். மாதவனை கொண்டாடுவதும் உங்கள் பார்ப்பன, மிடில்கிளாஸ் மாதவன் மனநிலையை தெள்ளதெளிவாய் எடுத்துகாட்டுகிறது.
வணிகபடங்கள் குறித்த உங்கள் நிலையை முழுமையாய் ஒப்புகொள்கிறேன்.
//'பொழுது போக்குத் திரைப்பட' இயக்குநர்களுக்கு வாஷிங் மெஷினுக்கு உள்ள மூளையாவது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை.//
I fully subscribe to most of your views. Iam a new comer to your blog.
Keep writing, more.
அய்யா... அருந்ததீ பார்த்துவிட்டு விமர்சனம் எழுதவும் :-)
உங்கள் விமர்சனத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
//அதிஷா said...
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
//
அவசரபட்டு வாழ்த்துக்களை ஏற்றுகொள்ள வேண்டாம் சு.க.
இந்த பயல்கள் பின்னூட்டம் போட்டாலே ஏதோ ஒரு பொறி இருக்கும் என்று அர்த்தம்.
படம் பார்க்கவில்லை. இருப்பினும் உங்கள் இயல்பான மொழி நடையில் எப்போது எனக்கு பிடித்தம் உண்டு. முற்போக்கு குறித்து நீங்கள் மிக அனாயாசமாய் எழுதிய பதிவிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ரசிப்பேன். இதையும் ரசித்தேன். படம் பார்க்க வேண்டும்.
நல்ல அலசல் நண்பரே!
//முந்தைய பதிவின் சில குறிப்புகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதை பின்னூட்டங்களின் மூலம் உணர முடிகிறது.//...
அந்த பதிவில் உங்களது பெரும்பான்மயான கருத்துகளுடன் நான் ஒத்துபோகிறேன். ஆனாலும்..
...//அதை புறக்கணிக்கும் நிலையில் இருப்பவர்களின் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை வெளியை அமைத்துத் தருவதுதான் உண்மையான கருத்துச் சுதந்திரமாக இருக்க முடியும். //
விரைவில் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள் நண்பரே.
படையாச்சிகளுக்கு,வெள்ளாள முதலியார்களுக்கு,24மனை தெலுங்கு செட்டியார்களுக்கு,கைகோளர்களுக்கு, பிடிக்கிற படங்களையும் கண்டுபிடித்து விமரிசனம் செய்யுங்கள் நண்பரே.மேலும் அப்பர் கிளாஸ்,லோயர்கிளாஸ்,மன நிலைகளிலும் அவதாரமாகி விமரிசிக்க முயலுங்கள்.
சே.வேங்கடசுப்ரமணியன். said...
படையாச்சிகளுக்கு,வெள்ளாள முதலியார்களுக்கு,24மனை தெலுங்கு செட்டியார்களுக்கு,கைகோளர்களுக்கு, பிடிக்கிற படங்களையும் கண்டுபிடித்து விமரிசனம் செய்யுங்கள் நண்பரே.மேலும் அப்பர் கிளாஸ்,லோயர்கிளாஸ்,மன நிலைகளிலும் அவதாரமாகி விமரிசிக்க முயலுங்கள்.
//
ஆமாம் அப்படியே செய்யவும். மாதவன் ஒரு சிறந்த நடிகர் இதில் சாதி மதம் எங்கே வந்தது.
Post a Comment