Monday, November 24, 2008

முற்போக்கு பதிவு: சில விளக்கங்கள்

என்னுடைய பதிவுகளின் இயல்பிற்கு மாறாக தமிழ்மண பரிந்துரை பட்டியலில் பரமபதம் மாதிரி மேலும் கீழும் ஏறி இறங்கி பிறகு பெரிய பாம்பு வழியாக ஒரேடியாக கீழே இறங்கிய என்னுடய முந்தைய பதிவின் உள்ளடக்கம் குறித்து சில நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்; எரிச்சல் பட்டார்கள்; கோபப்பட்டார்கள்; தங்கள் எண்ணங்களை எதிரொலிப்பதாக பாராட்டினார்கள். இணையப் பரப்பில் இந்தப் பதிவு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அதுவல்ல என் நோக்கம். இது குறித்து இன்னும் உங்களுடன் நிறைய பேச வேண்டிய சூழலை பின்னூட்டங்களில் உள்ள சில கேள்விகள் எழுப்பியிருக்கின்றன. கோர்வையாகவோ இல்லாமலோ இருக்கும் இந்தப் பதிவை பொறுமையும் சாவகாசமான மனநிலையும் உள்ளவர்கள் மாத்திரம் வாசிக்கத் தொடர வேண்டுகிறேன். இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களின் கனவுகளில் நமீதாவும் ஜெயமாலினியும் இணைந்து நடனமாடும் வண்ணக்காட்சிகள் வர வேண்டுமென்று எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கிறேன்.

()

நாகரிகத்தின் உச்சியை நாம் அடைந்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் காலகட்டத்திலும் பல விதமான மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும், கொலைகளும், மனித உயிர் மீதுள்ள அலட்சியத்தின் காரணமாக பல்வேறு விபத்துகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் அவற்றை நாம் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் அவற்றில் சில நிகழ்வுகள்தான் நம் மனதிற்கு மிக நெருக்கமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை விளக்க தெளிவான பிரத்யேகமான காரணங்கள் எதையும் கூற முடியாது என்றே நம்புகிறேன். அவ்வாறு என்னுள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய சம்பவமாக சில வருடங்களுக்கு முன் கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்து போன கொடூரமான சம்பவத்தைச் சொல்லுவேன். மனித உடல்கள் போலன்றி ஏதோ தீயில் கருக்கப்பட்ட மரக்கட்டைகள் மாதிரி கிடந்த அந்தக் குழந்தைகளின் வண்ணப் புகைப்படங்களை செய்தித் தாள்களில் காண நேர்ந்த போது மனம் 'ஒ'வென்று கதறியது. நம் தோல் பரப்பின் மீது விழும் எரியும் மெழுகுவர்த்தியின் ஒற்றைத் துளியே நம்மை சிறிது விநாடிகளாவது துடிக்க வைக்கும் போது முழு உடலும் நெருப்பினுள் நனையும் கொடூரக் கணங்களை அந்த பிஞ்சுக் குழந்தைகள் எவ்வாறு எதிர்கொண்டிருக்கும் என்பதை கையாலாகத்தனமான கற்பனையுடன் யூகித்துப் பார்த்த போது அழுகைதான் வெடித்துச் சிதறியது.

அதற்கு அடுத்த சம்பவமாக சட்டக்கல்லூரியில் நிகழ்ந்த வன்முறையைச் சொல்லலாம். தொலைக்காட்சியில் மிக அலட்சியமாக பார்க்கத் துவங்கின அந்தக் கணங்கள் என்னுள் மிக பதட்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அந்த வன்முறையின் பின்னணி குறித்தெல்லாம் அப்போது 'அறிவுஜீவித்தனமாக' என்னால் யோசிக்க முடியவில்லை. யாராவது அந்த வன்முறையை உடனடியாக தடுக்க மாட்டார்களா என்ற எண்ணம்தான் என்னை முழுதாக அப்போது ஆக்ரமித்தது. அந்த பதட்டத்தின் வெளிப்பாடுதான் 'சட்டம் பயிலும் மிருகங்கள்' என்றெழுதிய அந்தப் பதிவு. (கண்ணுக்கே தெரியாத சாதி என்கிற ஒரு விஷயத்திற்காக ஒரு சகமனிதனை சாகடிக்கத் துடிக்கும் கேவலமான மனிதர்களோடு இயற்கையின் விதியின் ஒழுங்குப்படி இயங்கும் மிருகங்களை ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்தியது தலைப்பிட்டது தவறுதான்).

ஆனால் இணையத்தில் அந்த வன்முறையைச் சம்பவத்தின் சாதிய பின்னணிகளை விளக்கி 'இந்தச் சம்பவம் நிகழ்ந்தது நியாயமானதும் இயல்பானதும் ஆகும்' என்ற தொனியில் வன்முறையை நியாயப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட சில ' போலி அறிவுஜீவித்தனமான' பதிவுகளை வாசிக்க நேர்ந்த போது மகா எரிச்சல் ஏற்பட்டது. அபத்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் நம்முடைய அடுக்கடுக்கான சாதிய அமைப்பு காரணமாக அடுத்தடுத்த அடுக்கில் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மீது பல்வேறு விதமான வன்முறைத் தாக்குதல்களும், மனரீதியான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் ஆதிக்கச் சாதியினரால் பல ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் காரணம் சொல்லி இந்த வன்முறையை நியாயப்படுத்தி எழுதுவதை அடிப்படை மனச்சாட்சி உள்ளவர்கள் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவ்வாறான உடனடியான எண்ணங்களை வெளிப்படுத்தியவர்களை 'பொதுப்புத்தியினர்' என்று கிண்டலடித்தும் அவர்களை ஆதிக்க சாதியினர் என்ற வட்டத்திற்குள் தள்ள முயன்றும் எழுதப்பட்ட பதிவுகள் முறையற்ற செயலாக எனக்குத் தோன்றியது. 'வெற்று மனிதாபிமானக் கூச்சல்' என்று இந்த உணர்வை இடது கையால் தள்ளின ஒரு பதிவின் வரி எனக்குள் கடுப்பை ஏற்படுத்தியது.

இந்த போலி அறிவுஜீவிகளை நான் கேட்க விரும்புபவதெல்லாம் ஒன்றுதான்: "சம்பந்தப்பட்ட வன்முறைக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது உங்களின் சாதிய கற்பிதங்கள் கழன்று போய் சக மனிதனின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டு ஒரு கணமாவது உங்கள் மனம் பதறவில்லையா?" அப்படி பதறியதாக ஒப்புக்கொண்டால் இன்னும் நாம் இழந்திருக்காத மனிதத்தின் மீது நம்பிக்கை வருகிறது என்று ஆறுதல் கொள்ளலாம்.

()

நவீன அறிவின் குறியீடான கணினி நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளில் கலந்து விட்டிருந்தாலும் கூடவே ஆதிகால மூடநம்பிக்கைகளும் 'கம்ப்யூட்டர் ஜோசியம்' என்ற பரிணாமத்தில் நம்முடன் தொடர்வது எவ்வாறு அபத்தமானதாக இருக்கிறதோ, அப்படித்தான் இருக்கிறது இணையத்தில் சாதிய/மத/இன உணர்வுடன் மற்ற பிரிவுகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வெளிப்படும் பெரும்பாலான பதிவுகளும் உரையாடல்களும். அரசாங்க கழிவறைகளுக்கு நிகரான வாசனையுடன் பின்னூட்டப் பெட்டிகளில் உமிழப்படும் ஆபாசமான வார்த்தைகளும் தாக்குதல்களும் மிகுந்த அருவருப்பை ஏற்படுத்துகின்றன. நன்றாக கல்வி கற்று சுயசிந்தனைகளை வளர்த்துக் கொண்டு நாகரிக மனிதர்களாக உலவும் நம்மாலேயே இன்னமும் நம்முள் புதைந்திருக்கும் சாதிய உணர்வுகளை கைவிட முடியவில்லையெனில், கல்வியறிவு பெறாத ஒரு வட்டத்திற்கு மேல் சிந்திக்க இயலாமல் அருவாளை தூக்கி ஓடும் ஒரு கிராமத்தானின் செயலை ஆட்சேபிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆனால் இவ்வாறான சாதியக் கூச்சல்கள்தான் இணையத்தில் பரபரப்பாகவும் அதிகமாகவும் கவனிக்கப்படுகிறது. இவர்கள்தான் 'முற்போக்காளர்' என்ற அடையாளத்துடன் பலரால் சிலாகிக்கப்படுகின்றனர். இவர்களை ஆதரிக்கும் கும்பலால் எழுதப்படும் பின்னூட்டங்கள் இவர்களை இன்னமும் உற்சாகப்படுத்தி ஆவேசமாக கூச்சலிட வைக்கின்றன. மாறாக ஆக்கப்பூர்வமாக எழுதுகிறவர்களின் - சாதியப்பிரச்சினைகள் உட்பட்ட - பதிவுகள் சொற்பானமானவர்களாலேயே வாசிக்கப்படுகிறது. இவ்வாறான பாசாங்குத்தனமான முற்போக்காளர்களின் கூச்சல்களை வெகுநாட்களாகவே அருவருப்புடன் கவனித்து வருகிறேன். அவ்வாறான அருவருப்பை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றது சட்டக்கல்லூரி வன்முறை தொடர்பான ஒரு பக்கச் சார்பான பதிவுகள்.

மேற் குறிப்பிட்ட வன்முறைச் சம்பவத்தை கண்டிக்கும் போது இந்த 'அறிவுஜீவிகள்' அதை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் மீதான வன்முறைச் சம்பவங்களோடு ஒப்பிட்டு பட்டியலிட்டு "ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவன் தாக்கப்படும் போது மாத்திரம் கூவுகிறார்கள். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார்கள்' என்றதொரு செயற்கையாக கட்டமைக்கப்பட்ட உணர்ச்சி உருண்டையை மேலே எறிகின்றனர். அய்யா சாமிகளா! ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை மாத்திரம் யார் ஆதரித்தது? வன்முறை எந்த ரூபத்தில் நிகழ்ந்தாலும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அதை எதிர்ப்பதும் கண்டிப்பதும்தான் 'ஒரு மனிதனின்' இயல்பான செயலாக இருக்க முடியும். சட்டக்கல்லூரி வன்முறையில் தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருந்தாலும் அதையும் கண்டித்துதான் இணையத்தில் நடுநிலையானவர்களின் பதிவுகள் வெளிப்பட்டிருக்கும். மாறாக இந்த போலி முற்போக்குவாதிகள் முன்வைக்கிற மாதிரி அது கண்டுகொள்ளாமலோ நியாயப்படுத்தப்பட்டோ இருந்திருக்காது.

வன்முறை என்பது இயற்கையானது; அதை நாம் மறுதலிக்க முடியாது என்பதுதான் என்னுடைய தீர்மானமான எண்ணமாக இதுவரை இருந்தது. முன்னர் எழுதிய ஒரு பதிவில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.

"...........என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்........."


ஆங்கிலேயர்களிடம் போரிட்டுதான் நாம் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. அந்த காரணத்தினால்தான் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் எல்லாத் துறைகளிலும் நாம் பொறுப்பின்றியும் நமது தேசத்தின் மீதான பற்றுமின்றி இருக்கிறோமோ என்ற கேள்வி எனக்குண்டு. ஆனால் சட்டக் கல்லூரி சம்பவத்தை பார்த்த கணத்தில் வன்முறை என்கிற அம்சம் மனித நாகரிகத்தின் அடிப்படைக்கு எதிரானதோ என்று தோன்றுமளவிற்கு அந்தச் சம்பவம் என்னை அசைத்துப் போட்டது. நாடகத்தனமாக தோன்றினாலும் அதுதான் உண்மை. அபூர்வமான சமயங்களில் குடும்ப உறுப்பினர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் என்னுடைய பழக்கத்தை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் தோன்றியிருக்கிறது.

என்றாலும் மிக அவசியமான சந்தர்ப்பங்களில் வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள முடியும் என்பதும் நடைமுறையான உண்மை என்பதை மறுக்க முடியாது.

()

யாருமே தன்னுடைய மதத்தை/ஜாதியைக் கடந்து வரமுடியாது என்பது இவர்களின் தீர்மானமான அபிப்ராயம். சொல்லப்படும் கருத்தை விட அதை யார் சொல்கிறார்கள் என்றுதான் ஆராய்கிறார்கள். இதனால் நடக்கும் விவாதங்கள் கருத்து மோதல்களுடன் நின்றுவிடாமல் தனிப்பட்ட வகையிலும் அதையும் தாண்டி இதைப்பற்றி எதுவுமே அறியாத பதிவருடைய அப்பாவி குடும்ப உறுப்பினர்கள் மீதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சி பாய்கிறது. கருணாநிதியின் இறப்பைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஒரு பதிவில் எரிச்சலோடு குறிப்பிட்ட போது அதற்கு பழிவாங்கும் விதமாக என்னுடைய குழந்தைகளின் மரணத்தோடு அதை ஒப்பிட்டு ஒரு பின்னூட்டம் வந்தது. அடிப்படை மனித உணர்ச்சியைக் கூட இழக்குமளவிற்கு இவர்களின் மதமும் சாதிய உணர்வும், அரசியல் பக்தியும் கல்வி கற்ற இவர்களை ஆட்டிப் படைக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமும் பரிதாபமுமே வருகிறது.

அரசாங்கக் காகிதங்களில் இயலவில்லையெனினும் நான் மனதளவில் மத/ஜாதிய உணர்வுகளைக் கடந்து வந்துவிட்டேன் என்பதை ஆத்மசுத்தியோடு என்னால் சொல்ல முடியும்.

நகரத்தில் பிறந்த நான் சாதியக் கொடுமைகளை என்னுடைய அனுபவத்தில் துளி கூட அனுபவத்ததில்லை. ஆனால் அது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்துவதற்கும் அதிலிருந்து வெளியே வருவதற்கும் என்னுடைய தாயார் முக்கியமான ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார். கிராமத்தில் பிறந்த கல்வியறிவு இல்லாத அவருக்கு பார்ப்பனியர்களின் செயல்பாடுகள் குறித்து பிரமிப்பான மயக்கம் இருக்கும். தொலைக்காட்சியில் யாராவது ஒரு சிவப்பான சிறுமி நன்றாகப் பாடிக் கொண்டிருந்தால் " நிச்சயம் அது பாப்பாரப் பொண்ணாத்தான் இருக்கும்" என்பார். வறுமையான பிராமணர்கள் கூட நன்றாக படித்து நல்ல வேலைகளில் சேர்ந்துக் கொண்டிருப்பதை பாராட்டி பேசுவார். ஆனால் தலித்கள் குறித்து அவருக்கு நேர்மாறான அபிப்ராயம் இருந்தது. அவர்களின் சுத்தமில்லாத நடவடிக்கையும் வாழ்வுச் சூழலும் பேச்சும் அவருக்கு அருவருப்பை ஏற்படுத்தும். நான் இதை ஆட்சேபித்து, சமூகத்தின் பெரும்பாலான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக அவர்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழ்வுச் சூழலை விளக்கி, அவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மற்றவர்களை போல் செயல்பட முடியும் என்று விளக்க முற்படும் போதெல்லாம் அவர் சொல்வது 'அட போடா! நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்'.. என்கிற சொற்றொடரைத்தான். நான் வளர்ந்த வீடு சேரிக்கு அருகே அமர்ந்திருந்ததினால் எனக்கு அப்போது பல தலித் நண்பர்கள் இருந்தார்கள். உண்மையாகவும் பாசாங்கின்றி பழகும் விதத்தில் மற்ற பிரிவு நண்பர்களை விட தலித் நண்பர்களே சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பது என் தனிப்பட்ட அனுபவம். அவை எனக்கு நடைமுறை உண்மையை உணர்த்தியது.

என் தாயார், யாரென்றே தெரியாத ஒரு தொலைக்காட்சி சிறுமியை பாராட்டத் துணிவதும் அதே போல் இன்னொரு பிரிவினரை இகழத் துணிவதற்கும் 'சாதி' என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு நச்சுக்கிருமி காரணமாக இருப்பது குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை விளக்கினாலும் அவருக்கு புரியாததற்கு அவர்கள் வளர்க்கப்பட்ட முறையும் கல்வி இல்லாத சூழலும் காரணமாயிருப்பதை கண்டு பரிதாபமாக இருந்தது. ஆனால் முறையாக கல்வி பெற்ற நம் சமகாலத்து மனிதர்களே சாதிய மனோபாவத்திலிருந்து வெளிவராததைக் காணும் போது கல்விக்கும் சிந்தனைக்கும் பெரும்பாலும் சம்பந்தேமேயில்லையோ என்றும் தோன்றுகிறது. கணினி படித்தவர்கள் எல்லாம் தேவலோகத்திலிருந்து இறங்கியவர்கள் என்கிற மனோபாவம் பாமரர்களிடம் இருக்கிறது. ஆனால் கணினி படித்தவர்களும் இணையத்தில் பாமரர்களை விடவும் மோசமாக சாதிய உணர்வோடு மோதிக் கொள்வதை காணும் போது அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.

முற்போக்கான பார்வை என்றாலே அது ஒடுக்கப்பட்ட சாதிக்கு ஆதரவாக பேசுவதுதான் என்றிருக்கும் இவர்களது புரிதல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் ஆதிக்கச் சாதி என்றாலே அது பார்ப்பனர்கள் மாத்திரம்தான் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதி குறித்த எந்தவொரு பதிவுமே பார்ப்பனர்களைச் சாடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. அடுக்கடுக்காக அமைந்திருக்கும் நம் சாதிய அமைப்பை மிக வசதியாக அப்போது இவர்கள் மறந்து விடுகிறார்கள். எந்த வன்முறைச் சம்பவம் என்றாலும் அதனை நியாயமாக அணுகுவதை விட்டு விட்டு 'முயலுக்கு மூன்று கால்' என்பது போல தன்னுடைய வசதிக்கேற்ற சார்புப் பார்வையோடு வெளிப்படுத்துகிறார்கள். தலித் பிரிவினர் அனைவருமே அப்பாவிகள் போலவும் தொடர்ச்சியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிற பிம்பத்தை கட்டமைப்பதில் இவர்கள் காட்டும் அவசரம் நேர்மையானது அல்ல.

ஆதிக்க சாதி என்று குறிப்பிட்டு அந்தப் பிரிவில் உள்ள அனைத்து மனிதர்களையும் காழ்ப்புணர்ச்சியோடு பார்ப்பதும் அணுகுவதும் முறையானதல்ல. தலித் பிரிவிலும் ஆதிக்க மனோபாவத்தோடு செயல்பாடுகிறவர்கள் இருக்கிறார்கள். இதையும் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்ல முடியும்.

()

எல்லா சாதி மனிதர்களும் புழங்கும் ஒண்டுக்குடித்தனத்தில் அதிலுள்ள சங்கடங்களோடும் சண்டைகளோடும் மகிழ்ச்சிகளுடனும் இடையூறுகளுடன் வாழ்ந்தவன் நான். அப்போதைய உரிமையாளரிடமிருந்து நாங்கள் குடியிருந்த வீட்டை புதிதாக விலைக்கு வாங்கியவர் தலித் பிரிவைச் சார்ந்தவர். அப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவர் அந்த வட்ட அளவில் அதிகாரம் பொருந்திய பதவியில் இருந்தார். தொழிற்சங்கத்திலும் பெரிய பொறுப்பில் இருந்தார். வீட்டை வாங்கியவுடன் அவர் செய்த முதல் பணி எல்லோரையும் காலி செய்யச் சொல்லி மறைமுகமாகவும் நேரடியாகவும் தந்த கொடுமைகள். இவருடைய மிரட்டலுக்குப் பயந்த சில வீட்டினர் காலி செய்து விட்டனர். ஆனால் மிகுந்த வறுமையில் வாழ்ந்த என்னுடைய குடும்பத்தினரைப் போன்றவர்கள் மாத்திரம் உடனே வேறிடத்திற்கு செல்ல முடியாமல் அந்தக் கொடுமைகளை சகித்துக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை அந்த வீட்டுக் கட்டிடத்திற்குள் எதற்கோ அவசரமாய் நுழைந்த போது எதிரே வந்த அவரைக் கவனியாமல் முட்டிக் கொண்டேன். "எதிரே வருகிற என்னைக் கண்டு மரியாதையாக ஒதுங்கி நிற்காமல் இடிக்கிறாற் போல் வருகிறாயே" என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது சுமார் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்த எனக்கு 'என்ன தப்பு செய்தேன்' என்று அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் ஒரு முறை குடியிருந்தவர்கள் அனைவரையும் எதையும் விளக்காமல் ஏதோ ஒரு பத்திரத்தில் கையெழுத்திடச் சொன்னார். என்னுடைய வீட்டின் சார்பில் நான் ஒரளவிற்கு படித்தவன் என்பதால் என்னை அழைத்து கையெழுத்திடச் சொன்னார்கள். எதற்கென்று நான் தயக்கத்துடன் கேட்க முயன்ற போது கையில் பெரிய கல் ஒன்றை தூக்கி கொலை வெறியுடன் எறிய வந்தார். நான் பயந்து ஓடி வந்துவிட்டேன்.

நிற்க. தலித்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்பதை நிறுவுவதற்காக இதைச் சொல்ல வரவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு ஒரு பிரிவினரையே அபத்தமாக நான் பொதுமைப்படுத்த மாட்டேன். எல்லாப்பிரிவுகளிலும் மனிதாபிமானம் இல்லாமல் மற்றவர்களை கொடுமைப்படுத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. அதிகாரம் கையில் வரும் போது எந்தவொரு மனிதர்களுக்கும் மற்றவர்களை ஆதிக்கம் செய்யும் மனோபாவம் வந்துவிடுவதை குறிப்பிடுவதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே தலித்கள் எல்லோருமே அப்பாவிகள் அல்ல என்பதையும் மற்ற பிரிவுகளில் உள்ள அனைவருமே கொடுமைக்காரர்கள் அல்ல என்பதையும் (அவ்வாறான பிம்பத்தைத்தான் இணையத்தில் காண முடிகிறது) அழுத்திச் சொல்வதற்காகத்தான் என்னுடைய முந்தைய பதிவில் சில விஷயங்களை கிண்டலான தொனியில் சொல்ல வேண்டியிருந்தது.

ஆனால் இந்தப் பதிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 'வந்தாயா வழிக்கு' என்ற தொனியில் சிலர் எழுதும் பின்னூட்டமிட்டத்தை நான் ஏற்க மாட்டேன். இது அவர்களின் பிரச்சினைதானே ஒழிய, என்னுடையதில்லை. எவனொருவன் தன்னுடைய சாதிய/மத/இன கற்பிதங்களை பெருமிதமாக சொல்லிக் கொள்கிறானோ, அதன் காரணமாகவே மற்ற பிரிவினரை இகழ்வாக நோக்குகிறானோ அவன் என் கண்ணுக்கு மலத்தில் நெளியும் புழுவாகவே தெரிகிறான். (இது எல்லாப்பிரிவினருக்கும் பொருந்தும்).

()

மற்றபடி....

குறிப்பிட்ட சில பதிவர்களை நான் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக அவர்களின் பெயர்களை குறிப்பிட்டே சிலர் பின்னூட்டமிட்டிருக்கின்றனர். அதில் ஒரளவிற்குத்தான் உண்மையிருக்கிறது. செயற்கையான ஆவேசத்துடனும் மற்றவர்களை கவனத்தை கவர உபயோகப்படும் இகழ்வான உத்திகளுடன் அவர்களின் பதிவில் குறிப்பிடப்படும் ஆபாச வார்த்தைகளைப் பற்றின எரிச்சல் என்னிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அதைத்தான் சுட்ட விரும்பினேன். ஆனால் அவர்களைச் சுட்டிக்காட்டி என்னை ஏதோ ஒரு புனிதன் என்று காட்டிக் கொள்வது அல்ல என் நோக்கம். என்னுடைய பதிவிலும் அவ்வாறான வார்த்தைகள் சில சமயங்களில் இடம் பெற்றிருக்க்கூடும். இதைத் தவிர்த்து மற்ற சில விவாதங்களுக்காகவும் மாற்று எழுத்துக்களாகவும் அவர்களின் பதிவை தொடர்ந்து படித்துக் கொண்டுதானிருக்கிறேன். சினிமா பற்றிய வரிகளில் நான் குறிப்பிட்டது போல பிடிக்காவிடில் ஏன் தொடர்ந்து படிக்கிறாய் என்று அவர்களும் கேள்வி எழுப்ப முடியும்தானே?

()

(முந்தைய) பதிவின் ஆரம்பத்தில் கழிசடைகள், பன்றிக்குட்டிகள் என்று சக பதிவர்களைப் பற்றி எழுதியிருந்ததாக அதிஷா உள்ளிட்ட சில நண்பர்கள் பின்னூட்டத்தில் மறைமுகமாக வருத்தப்பட்டிருந்தனர். இந்தப் பதிவு முழுதுமே ஒரு போலி முற்போக்காளனின் குரல். அவன் பார்வையில் மற்ற பதிவர்களின் தோற்றம் பற்றித்தான் எழுத முயன்றிருந்தேன். அதை என்னுடைய பார்வை என்பது போல அவர்கள் புரிந்து கொண்டதற்கு நான் தெளிவற்ற முறையில் எழுதியதும் காரணமாக இருந்திருக்கலாம். பதிவின் இடையில் என்னைப் பற்றிய சுய எள்ளல் சார்ந்த தடங்களையும் அவர்கள் கண்டிருக்கக்கூடும். எந்தவொரு தனி மனிதரையும் நான் தாழ்ச்சியாக நினைப்பதில்லை. இதையும் மீறி அவர்கள் புண்பட்டிருந்தால் அதற்காக என் மன்னிப்பை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அந்தப் பதிவு பல பதிவர்களின் நடுநிலை சார்ந்த மனோநிலையை, எண்ணங்களை எதிரொலித்திருக்கின்றது என்பதை பல பின்னூட்டங்களின் மூலம் உணரும் போது 'நான் தனியனல்ல' என்கிற சந்தோஷம் ஏற்படுகிறது.

என்னுடைய அலைவரிசையில் இயங்குகிற நண்பர்களின் தோழமை கிடைக்காமல் நான் பல வருடங்கள் அவஸ்தைப் பட்ட போது அதைத் தீர்த்தது இணையம்தான் என்ற வகையில் இந்த ஊடகத்தின் மீது எனக்கு மிக நன்றியுண்டு. சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதில் ஏற்படும் சந்தோஷமும் அதனால் கிடைக்கும் பாராட்டின் காரணமாக இன்னும் நிறைய விஷயங்களை தேடிக் கண்டடைந்து பகிர வேண்டும் என்கிற உணர்வை ஊட்டி என்னுடைய தேடல் விரிவாக ஊக்கமளித்தது இணையம்தான்.

என்னுடைய பதிவை சராசரியாக தினமும் குறைந்தது முந்நூறு நபர்களிலிருந்து ஐந்நூறு நபர்களாவது வாசிக்கிறார்கள் என்பதை google analytics மூலம் அறிய முடிகிறது. ஒரு சிற்றிதழோ அல்லது இடைநிலை இதழுக்கோ சாத்தியப்படாத வாசக வட்டமிது. மேலும் எந்தவிதமான அரசியல் தலையீடோ, இடப்பிரச்சினையோ இல்லாமல் மிகச்சுதந்திரமாக என்னுடைய எண்ணங்களை இங்கே பகிர முடிகிறது. இணையத்தின் ஆக மிகப் பெரிய பலம் அது. அதுவே என் பொறுப்புணர்ச்சியை இன்னும் அதிகமாக்குகிறது. என்னுடைய பதிவுகளில் ஒரு சதவீத உருப்படியான விஷயத்தையாவது வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம்.

இந்த சக்தியை சாதிய/மத/இன உணர்வு சார்ந்த மோதல்களுடான சார்பு நிலை சார்ந்த விவாதங்களின்/வாசிப்புகளின் மூலம் வீணாக்க நான் விரும்பவில்லை. அவ்வளவுதான்.

suresh kannan

23 comments:

பாபு said...

மிக நன்றாக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
//அரசாங்க கழிவறைகளுக்கு நிகரான வாசனையுடன் பின்னூட்டப் பெட்டிகளில் உமிழப்படும் ஆபாசமான வார்த்தைகளும் தாக்குதல்களும் மிகுந்த அருவருப்பை ஏற்படுத்துகின்றன. நன்றாக கல்வி கற்று சுயசிந்தனைகளை வளர்த்துக் கொண்டு நாகரிக மனிதர்களாக உலவும் நம்மாலேயே இன்னமும் நம்முள் புதைந்திருக்கும் சாதிய உணர்வுகளை கைவிட முடியவில்லையெனில், கல்வியறிவு பெறாத ஒரு வட்டத்திற்கு மேல் சிந்திக்க இயலாமல் அருவாளை தூக்கி ஓடும் ஒரு கிராமத்தானின் செயலை ஆட்சேபிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?//

அருமையான வரிகள்

படித்தவர்களிடம் ஜாதி வெறி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது என்பதுதான் நடை முறை உண்மை

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

சிறந்த பதிவு.’ஒரு பால் கோடாமல்’ சரியான அணுகுமுறையில் எழுதப்பட்ட பதிவு.
வாழ்த்துகள்.

தமிழ் நாடன் said...

நன்கு சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள். உண்மையான கருத்துக்கள்.சக மனிதன் மீதான வன்முறை எந்த ரூபத்தில் இருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே! தற்காலத்தில் வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்பதே கசப்பான உண்மைதான். ஆனால் அதுவும் மாறவேண்டும்.அதுதான் மனிதத்தின் வெற்றி.
உங்கள் வார்த்தை பிரயோகங்கள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

Anonymous said...

//இணையத்தில் பாமரர்களை விடவும் மோசமாக சாதிய உணர்வோடு மோதிக் கொள்வதை காணும் போது அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை. //

உண்மைதான். இதனாலேயே இணையத்தை வாசிக்க தயக்கம் ஏற்படுகிறது. நடுநியலான பதிவு.

Krishnan said...

Balanced write up on Law College violence.

Anonymous said...

நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு. :-)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Kudos.
100 % acceptable one.
(Including your previous post)

Anonymous said...

'நான் நல்ல பையன்ப்பா,எனக்கு வேண்டாம் இந்த அசிங்கம்' என்கிற நல்லபிள்ளைத்தனம்தான் உங்கள் பதிவில் தெரிகிறது. இப்படி ஒதுங்காதீர்்கள். உங்களைப் போன்றவர்களால்தான் இதைப் பற்றி இன்னும் நன்றாக எழுத முடியும். இணையத்தில் மற்றவர்களை தாக்குவதற்கு என்றே அலையும் மிருக்ங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவைகளும் திருந்தும் காலம் வரும்.

//தமிழ்மண பரிந்துரை பட்டியலில் பரமபதம் மாதிரி //

சில கேடுகெட்ட ஜென்மங்கள் தொழில்நுட்ப ஓட்டைக்களைக் கொண்டு இதே வேளையாய் அலைந்து கொண்டிருக்கின்றன. பொருட்படுத்தாதீர்கள்.

- உங்கள் நண்பன்.

Anonymous said...

நீங்கள் என்னதான் கூப்பாடு போட்டாலும் ஜாதியத்தை ஒழிக்க முடியாது. அப்படியே ஜாதி ஒழிந்தாலும் வேறு எதற்காவது இவர்கள் அடித்துக் கொண்டுதானிருப்பார்கள். மிருகங்களே மேல்.

vall paiyen said...

அற்புதமான பதிவு, மிக சிறந்த ஒரு தன்னிலை விளக்கம். மனமார்ந்த பாராட்டுக்கள் திரு சுரேஷ் கண்ணன்.

"நவீன அறிவின் குறியீடான கணினி நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளில் கலந்து விட்டிருந்தாலும் கூடவே ஆதிகால மூடநம்பிக்கைகளும் 'கம்ப்யூட்டர் ஜோசியம்' என்ற பரிணாமத்தில் நம்முடன் தொடர்வது எவ்வாறு அபத்தமானதாக இருக்கிறதோ, அப்படித்தான் இருக்கிறது இணையத்தில் சாதிய/மத/இன உணர்வுடன் மற்ற பிரிவுகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வெளிப்படும் பெரும்பாலான பதிவுகளும் உரையாடல்களும்."
மறுக்க முடியாத உண்மை

"வன்முறை எந்த ரூபத்தில் நிகழ்ந்தாலும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அதை எதிர்ப்பதும் கண்டிப்பதும்தான் 'ஒரு மனிதனின்' இயல்பான செயலாக இருக்க முடியும். "
" அரசாங்கக் காகிதங்களில் இயலவில்லையெனினும் நான் மனதளவில் மத/ஜாதிய உணர்வுகளைக் கடந்து வந்துவிட்டேன் என்பதை ஆத்மசுத்தியோடு என்னால் சொல்ல முடியும். "

ஆத்மார்த்தமான வரிகள்

"ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்.........

அற்புதமான கருத்து

"முற்போக்கான பார்வை என்றாலே அது ஒடுக்கப்பட்ட சாதிக்கு ஆதரவாக பேசுவதுதான் என்றிருக்கும் இவர்களது புரிதல் எரிச்சலை ஏற்படுத்துகிறது"

சாட்டையடி வரிகள்

மேற்கண்ட தங்களின் கருத்துகளில் நான் இதயபூர்வமாக உடன் படுகிறேன்.

ஆனால் எனக்கு முரண்பாடான கருத்தும் உண்டு "இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களின் கனவுகளில் நமீதாவும் ஜெயமாலினியும் இணைந்து நடனமாடும் வண்ணக்காட்சிகள் வர வேண்டுமென்று எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கிறேன்" .
ஏன் நமீதாவும் குசேலன் சோனா வும் என்று சொன்னால் என்ன குறைந்த போய் விடுவீர்கள்

பரிசல்காரன் said...

கலக்கல். சூப்பர். உங்களை விமர்சிக்கும் @*(^#&@%$&^-க்கு நல்ல பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். நான் எப்போதும் உங்கள் பக்கம்தான்.!

ஆட்காட்டி said...

உங்களது சிந்தனைக்கு எதுவுமே தடையா இரா. நல்ல எண்ணம் கொண்டவர்கள் எப்போதும் நல்லவனவற்றிற்கு ஊன்றுகோலாக இருப்பார்கள். மற்றும் படி மனசு வருந்தும் படி எதுவுமே இல்லை. என்ன எழுதி இருக்கென்று பார்க்காமல் எப்படி எழுதினாய்? என்று கேட்பவர்களுக்கு பதில்கூற தேவையில்லை.

dondu(#11168674346665545885) said...

உயர்சாதீயம் என்னும் சொல் ரெடியாக இருக்கையில், பார்ப்பனியம் என்று ஒட்டுமொத்தமாகக் கூறுவதை நான் பல முறை கண்டு வருகிறேன். கூடவே போலியான ஒரு டிஸ்கி வேறு பார்ப்பனீயம் என்பது பார்ப்பனர்களை குறி வைத்தல்ல என்று வரும்.

நான் கேட்கிறேன், ஏனய்யா அப்படியாவது டிஸ்கி போட்டு கொண்டுதான் இந்த வார்த்தையை பாவித்தாக வேண்டுமென என்ன கட்டாயம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

உங்களது முன் பதிவை துணிச்சலோடும், இதய சுத்தியோடும் எழுதி விட்டு இப்போது ஏன் ஒரு வழ வழ கொழ கொழ தன்னிலை விளக்கம். எங்கே நம்மை தனிமை படுத்திவிடுவார்களோ என்று பயமா? உங்கள் எழுதி நேர்மை ஒளிர்கிறது. நீங்கள் எதற்கும் அச்சப்பட தேவைஇல்லை.

அத்திரி said...

//உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்........."//

அருமையான வரிகள்.

மிக நிதானமாக ஆழ்ந்து எழுதியுள்ளீர்கள்.உங்களின் பல கருத்துகளில் நான் உடன்படுகிறேன்.

Anonymous said...

முன்பதிவு சொன்ன கோபத்தை இது நீர்த்துப் போக வைத்து விட்டது:-((((((

முன்பதிவில் பின்னூட்டமிட்டவர்.

விலெகா said...

nice

Anonymous said...

//என்ன எழுதி இருக்கென்று பார்க்காமல் எப்படி எழுதினாய்? என்று கேட்பவர்களுக்கு பதில்கூற தேவையில்லை.//

என் கருத்தும் இதுவேதான்.

நட்புடன் ஜமால் said...

\\உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்........."\\

இப்படியும் கூட இதைச்சொல்லலாமோ.

உங்கள் எழுத்தில் சமுதாயச்சிந்தனை அழகாக உள்ளது.

சாதியோ மதமோ இவற்றை ஒழித்துவிட முடியாது.

படித்திருக்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் இதை முடுக்கிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

என் பார்வை - எப்பொழுதுமே தனி ஒரு சாராரை அவர்கள் மதத்தின் பெயராலோ, அல்லது அவர்கள் ஜாதியின் பெயர் கூறியோ குற்ற பத்திரிக்கை வாசிப்பது சரியல்ல. அல்லது அவர்களை மட்டம் தட்டி பேசுவதோ கூடாது. இவர்கள் எல்லாம் இப்படித்தான் சுயநலவாதிகள் என்று ஒரு பிரிவினரை நோக்கி கைநீட்டக்கூடாது.

இது போன்ற விஷயங்களில்லிருந்து முதலில் நான் என்னை தவிர்ந்து கொள்கிறேன்.

அனைவரும் முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.

முயற்சிப்போம் வாருங்கள்.

புதுகை.அப்துல்லா said...

படித்தவர்களிடம் ஜாதி வெறி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது என்பதுதான் நடை முறை உண்மை

//


சத்தியமா உண்மை :((

Anonymous said...

மனிதனும் ஒரு மிருகம் தான் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் ,
இவர்கள் படித்த மிருகங்கள் அவ்வளவுதான் ....
??!!!

எதாவுது ஒரு இடத்தில் இரண்டு பேர் இருந்தால் --- ஒரே சாதி என்றாலும் அடித்து கொள்வார்கள்..
அந்த இடத்தில் இன்னொரு சாதிக்காரன் வந்தால் இருவரும் சேர்த்து அவனை மிதிப்பார்கள்
அதே இடத்தில் இன்னொரு மொழிக்காரன் வந்தால் முவரும் சேர்ந்து அவனை மிதிப்பார்கள்...
அதே இடத்தில் இன்னொரு மதத்தை சேர்ந்தவன் வந்தால் நால்வரும் சேர்ந்து அவனை மிதிப்பார்கள்...

அதே இடத்தில் இன்னொரு நாட்டை சேர்ந்தவன் வந்தால் ஐவரும் சேர்ந்து அவனை மிதிப்பார்கள்...

அதே இடத்தில் இன்னொரு கிரகத்தை சேர்ந்தவன் வந்தால் ஆறுபேரும் சேர்ந்து அவனை மிதிப்பார்கள்...

இது ஒரு தொடர்கதை.. சாதிக்கு மட்டும் இல்லை .....

வன்முறையை துண்டுபவனும் ... செய்பவனும் .... மனித மிருகங்களே ....

மனித மிருகங்களுக்கு எதற்கு பகுத்தறிவு என்றெல்லாம் கேள்வி கேட்காதிர்கள் ...

ஏனென்றால் யார் சொன்னது மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு என்று ??!!!.....

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தது போல ...மனிதர்களாகிய நீங்களே உங்களுக்கு பகுத்தறிவு உண்டு என்றால்...!!! என்ன கொடுமைடா சாமி...!!!

ஒவ்வொருவரும் ஒரு சில நேரங்களிலவுது நாம் மனித மிருகமாகவே நடக்கின்றோம்..
சிலர் அதற்கு சாதி என்ற சாயத்தை புசிகொள்கிரர்கள் ... அவ்வளவே ....

நானும் கல்லூரியில் படிக்கும் போது எதற்காக சண்டை போடுகிரும் என்று தெரியாமல் செய்திருக்கிறேன் ( சாதிக்க அல்ல ...எவனோ யாரையு அடித்துவிட்டதற்கு...காரணம் பிறகுதான் தெரிந்தது அடுத்த வகுப்பு மாணவியை என்னோட வகுப்பு மாணவன் சைட் அடித்ததால் என்று .... நாங்கள் அடித்தவனை மறுநாள் போய் மருத்துவமனையில் சந்தித்து கதை ) .. அது ஒரு கனா காலம் ... இப்போது நினைத்தாலும்.... நாங்கள் பேசி சிரிப்போம் ....

ஆகவே மனிதன் மிருகம்தான் ... ...


உழவன் வெங்கட்

Anonymous said...

மனிதனும் ஒரு மிருகம் தான் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் ,
இவர்கள் படித்த மிருகங்கள் அவ்வளவுதான் ....
??!!!

எதாவுது ஒரு இடத்தில் இரண்டு பேர் இருந்தால் --- ஒரே சாதி என்றாலும் அடித்து கொள்வார்கள்..
அந்த இடத்தில் இன்னொரு சாதிக்காரன் வந்தால் இருவரும் சேர்த்து அவனை மிதிப்பார்கள்
அதே இடத்தில் இன்னொரு மொழிக்காரன் வந்தால் முவரும் சேர்ந்து அவனை மிதிப்பார்கள்...
அதே இடத்தில் இன்னொரு மதத்தை சேர்ந்தவன் வந்தால் நால்வரும் சேர்ந்து அவனை மிதிப்பார்கள்...

அதே இடத்தில் இன்னொரு நாட்டை சேர்ந்தவன் வந்தால் ஐவரும் சேர்ந்து அவனை மிதிப்பார்கள்...

அதே இடத்தில் இன்னொரு கிரகத்தை சேர்ந்தவன் வந்தால் ஆறுபேரும் சேர்ந்து அவனை மிதிப்பார்கள்...

இது ஒரு தொடர்கதை.. சாதிக்கு மட்டும் இல்லை .....

வன்முறையை துண்டுபவனும் ... செய்பவனும் .... மனித மிருகங்களே ....

மனித மிருகங்களுக்கு எதற்கு பகுத்தறிவு என்றெல்லாம் கேள்வி கேட்காதிர்கள் ...

ஏனென்றால் யார் சொன்னது மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு என்று ??!!!.....

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தது போல ...மனிதர்களாகிய நீங்களே உங்களுக்கு பகுத்தறிவு உண்டு என்றால்...!!! என்ன கொடுமைடா சாமி...!!!

ஒவ்வொருவரும் ஒரு சில நேரங்களிலவுது நாம் மனித மிருகமாகவே நடக்கின்றோம்..
சிலர் அதற்கு சாதி என்ற சாயத்தை புசிகொள்கிரர்கள் ... அவ்வளவே ....

நானும் கல்லூரியில் படிக்கும் போது எதற்காக சண்டை போடுகிரும் என்று தெரியாமல் செய்திருக்கிறேன் ( சாதிக்க அல்ல ...எவனோ யாரையு அடித்துவிட்டதற்கு...காரணம் பிறகுதான் தெரிந்தது அடுத்த வகுப்பு மாணவியை என்னோட வகுப்பு மாணவன் சைட் அடித்ததால் என்று .... நாங்கள் அடித்தவனை மறுநாள் போய் மருத்துவமனையில் சந்தித்து கதை ) .. அது ஒரு கனா காலம் ... இப்போது நினைத்தாலும்.... நாங்கள் பேசி சிரிப்போம் ....

ஆகவே மனிதன் மிருகம்தான் ... ...


உழவன் வெங்கட்

மயிலாடுதுறை சிவா said...

சூப்பர்! நல்ல தன்னிலை விளக்கம்.

தொடர்ந்து எழுதுங்கள்! உங்களுடைய பல திரை சம்மந்தப்பட்ட பதிவுகளை படித்து ரசித்து இருக்கிறேன். நீங்கள் சொன்ன பல படங்களை பார்த்தும் இருக்கிறேன்.

இந்த விளக்கம் ஏன் ஏதற்கு யாருக்கு என்று புரியவில்லை ;-))

மயிலாடுதுறை சிவா...