Saturday, November 15, 2008

கலவரங்களும் சம்பிரதாயங்களும்

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் தாக்குதல் விவகாரத்தை எதிர்பார்த்த படியே தமிழக அரசு தனது வழக்கமான சம்பிதாயங்களுடன் எதிர்கொண்டிருக்கிறது. காவல்துறை ஆணையர் மாற்றம், அதிகாரிகளின், கல்லூரி முதல்வரின் தற்காலிக பணிநீக்கம், விசாரணை கமிஷன் ஆகிறவற்றுடன் அடிபட்ட மாணவர்களுக்கான மருத்துவ வசதி என்ற தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் கண்ணுக்கெதிரே நடந்த மனித உரிமை மீறலை ஏன் காவல்துறையினர் தடுக்க முயற்சிக்கவில்லை என்பது பற்றியோ அவர்கள் செயல்படாததற்கு பின்னணயில் உள்ள சக்திகள் பற்றியோ (விசாரணை கமிஷன் அறிக்கை வெளிவந்தாலும் கூட) யாருக்கும் தெரியப்போவதில்லை. மேலும் இவ்வாறான சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்காக அரசு இயந்திரம் எடுக்கப்போகும் முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள், முயற்சிகள் குறித்தும் அரசு யோசிக்குமா அல்லது இவர்களேதான் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. அடுத்ததொரு பரபரப்பான சம்பவத்தில் மக்கள் இதை மறந்து போவார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் தற்காலிக நிவாரணங்களை வைத்து மழுப்பியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு 'இது ஒரு சிறிய சம்பவம்' என்று என்று சட்டசபையில் வருணித்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். குறைந்த பட்சம் இரண்டு பேராவது செத்திருந்தால்தான் அதை கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு விதிகள் ஏதாவது சொல்கிறதா என்பது பற்றி தெரியவில்லை.

Photobucket

இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிக கவனம் பெற்றதிற்கு தொலைக்காட்சி ஊடகங்கள்தான் பிரதான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தாக்குதலின் சலனக்காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்த அனைவருக்குமே ஏதோவதொரு பாதிப்பை அது ஏற்படுத்தியிருக்கும். இதை விடவும் எத்தனையோ கொடுமையான நிகழ்வுகள், மனித உரிமை மீறல்கள், தாக்குதல்கள், மரணங்கள்... போன்றவை வெளிஉலகத்தின் கவனத்தைப் பெறாமலேயே போயிருக்கும்தான். ஆனாலும் ஜெயா தொலைக்காட்சி குழுமம் இந்தக் காட்சிகளை மக்களிடம் திரும்பத் திரும்ப காட்டி ஊடக வன்புணர்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திவிட முடியும் என்ற வருங்கால திட்டத்துடன் இந்த மூளைச்சலவை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வன்முறைக் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஜெயா தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுவது குறித்து இப்போதைய ஆளுங்கட்சி ஆட்சேபிக்கிறது. ஆனால் கருணாநிதி கைதுக் காட்சிகள் சன்டிவியில் திரும்பத்திரும்ப காண்பிக்கப்படுவதை இப்போதைய எதிர்க்கட்சி அப்போது எதிர்த்தது. தனக்கென்று வரும்போது அறத்தை தலைகீழாக திருப்பிப் பிடித்து பார்ப்பது அரசியல் அநாகரிகங்களுள் ஒன்று.

இந்த மாதிரியான வன்முறை நிகழ்வுகளை கண்டிக்க தமிழகத்தின் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அருகதையோ தகுதியோ இல்லை. வன்முறையின் ஊற்றுக் கண்களே இந்த அரசியல் கட்சிகள்தான். மற்றவர்களை கைநீட்டி குற்றஞ்சாட்டுவதன் மூலம் தன்னை சுத்தமாக காட்டிக் கொள்ளும் யுக்தி இது என்பதை பொதுமக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

()

சட்டக்கல்லூரி மாணவர்கள் மாத்திரமல்ல, சட்டம் படித்து முடித்து வழக்கறிஞர்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களே பெரும்பான்மையான சம்பவங்களில் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு குற்றத்தில் கைது செய்யப்படும் வழக்கறிஞரை, சக வழக்கறிஞர் குழு வன்முறையில் ஈடுபடுவதின் மூலமும் தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கை வைத்து காவல்துறையினரை மிரட்டுவதின் மூலம் மீட்டுக் கொண்டு வருவது தொடர்ந்து நிகழும் விஷயமாகிவிட்டது. தொழில்தர்மம் என்ற அடிப்படையில் பெரும்பாலான ரவுடிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பை இவர்களே ஏற்படுத்தித் தருகிறார்கள்.

பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றின் உற்பத்திப்பிரிவில் பணியாற்றும் ஒருவர், சாவதானமாக பிஸ்கெட்டுகளை எடுத்து சாப்பிடும் உரிமையை தவறில்லை என்று தன்னிச்சையாக நினைக்கிறாரோ, அவ்வாறே சட்டரீதியான செயல்களில் புழங்கும் வழக்கறிஞர்கள் சட்டத்தை தாம் மதிக்கத் தேவையில்லை, அது மற்றவர்களுக்குத்தான் என்றான ஒரு மனப்பான்மையை தன்னிச்சையாக பெற்றிருக்கிறார்களோ என்ற கேள்வியையும் இம்மாதிரியான நிகழ்வுகள் எழுப்புகின்றன.

இது எல்லாத்துறையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே அதை மீறுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. ஹெல்மேட் அணிய வேண்டும், சாலைவிதிகளை மீறக்கூடாது என்று உபதேசிக்கும், மற்றவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள போக்குவரத்து காவல்துறையினரே அவற்றை மீறுவது நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் ஒன்று. இந்த மாதிரியான போக்குகளை தடுக்க பயிற்சிக்காலத்திலேயே அவர்களுக்கு தாம் பங்காற்றும் துறை பற்றின முக்கியத்துவத்தை அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும். பணிக்காலத்தில் அவர்களின் விதிமீறல்களில் ஈடுபடவொட்டாமல் கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

()

கல்லூரி மாணவர் மோதல் சம்பவத்தை ஏதோ கல்லூரி மாணவர்களின் தகராறு என்றோ அல்லது போஸ்டரில் அம்பேத்கரின் பெயரை போடாததற்காக ஏற்பட்ட சில்லறைத்தகராறு என்றோ எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் பின்னணியில் இயங்கக்கூடிய சாதீயக் கூறுகளையும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட பிரிவினர் தாங்கள் படுகிற அவமானத்தை தாங்குகிற சுயபச்சாதாபத்தை மீறி ஆதிக்க சாதியினர் மீது வன்மமும் வெறுப்புமாக சமூகக் கோபத்தோடு பொங்கி வரக்கூடிய தருணங்களும் அமையும்தான். அது இயற்கைதான். அப்படியானதொரு தருணமாகத்தான் இந்தச்சம்பவத்தை பார்க்க நேரிடுகிறது என்றாலும் அதையே காரணம் காட்டி வன்முறை கலாச்சாரத்தை நியாயப்படுத்த முடியாது. அடிபடுவது ஆதிக்க இனத்தைச் சேர்ந்தவனாலும் இருந்தாலும் சரி; தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவனாலும் சரி இரண்டுமே தவறுதான். அடிபட்ட கதாநாயகன் வில்லனை திருப்பி அடிப்பது போன்ற உணர்ச்சியோடு இதை அணுகக்கூடாது. நாம் இன்று நாகரிகத்தின் உச்சியில் நவீனத்தின் குறியீடான கணனி முன் அமர்ந்திருந்தாலும் நம் ஆழ்மனதில் ஒரு காட்டுமிராண்டி உயிர்ப்போடு அமர்ந்திருக்கிறான் என்பதைத்தான் இம்மாதிரியான சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

சில புத்திஜீவிகள் பொதுப்புத்தியின் மூலம் இப்பிரச்சினையை அணுகுவது குறித்து விமர்சிக்கின்றனர். சரியான பார்வையாக இருந்தாலும் அது பொதுப்புத்தியின் வெளிப்பாடு என்கிற காரணத்தினாலேயே அதிலிருந்து மாறுபட வேண்டும் இந்த புத்திஜீவிகள் செயற்கையான தங்கள் சிந்தனையோட்டத்தை தயாரிக்கின்றனர். "இத்தன நாளா அடிவாங்கிட்டு இருந்தவன், இன்னிக்கு திருப்பி அடிக்கறான். இதுல என்ன தப்பு" என்கிறார் புத்திஜீவி நண்பரொருவர். அவர் ஜாதிக்கலாச்சாரத்தை வெறுப்பவராக இருந்தாலும் பிறப்பால் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவரான அவருக்கு அந்த ஒரு காரணத்திற்காகவே அவர் மீது வன்முறை தாக்குதல் நேர்ந்தால் அப்போதும் இதே மாதிரியான புத்திஜீவித்தனத்தோடு பார்ப்பாரா என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. ஆக.. அரசியல்வாதிகளுக்கும் இம்மாதிரியான புத்திஜீவிகளுக்கும் வித்தியாசமில்லை. மற்றவர்களுக்கு என்றால் ஒருமாதிரியும் தனக்கு என்றால் வேறுமாதிரியும் யோசிப்பார்கள்.

()

நாடகத்தனமாக இருந்தாலும் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் என் முன் பிரம்மாண்டமாய் நின்றிருக்கும் இந்தக் கேள்வியை கேட்க விரும்புகிறேன். படிக்காதவர்களை விட்டுத்தள்ளுவோம். (சில சமயம் படிக்காதவர்களே புத்திஜீவிகளை விட முறையாய் யோசிக்கிறார்கள்.) நன்றாகப் படித்த, பல்வேறு சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட சான்றோர்களே ஏன் ஜாதி, இனம், தேசம் போன்ற கற்பிதங்களை கடந்து வரமுடியாமல் குறுகிய மனப்பான்மையோடு இருக்கிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது? அவர்கள் கற்ற கல்வி இவ்வாறான கற்பிதங்களின் அபத்தம் குறித்து சிந்திக்க தூண்டவில்லையா? அல்லது சம்பாதிக்கும் நோக்கங்களுக்காக மட்டும்தான் நாம் கல்வி கற்கிறோரோமா? நம் கல்விமுறையின் அடிப்படையே தவறா?.

ஒரு வங்கியில் உயர்அதிகாரியாக பணியாற்றும் ஒருவரை அலுவலக பணி நிமித்தமாக சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் கேட்கும் சிடுசிடுப்பான கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்தேன். என்னுடைய சார்பில் சொல்ல வேண்டிய விளக்கங்களை தெளிவாக எடுத்துரைத்தேன். என்னிடம் உள்ள எல்லா பொறுமையையும் செலவழித்து விட்ட கணத்தில் அவர் சொல்கிறார். "உங்க பாஸ் பிராமின்றதாலதான் இந்த ஆர்டரை உங்களுக்கு தர்றேன். நீங்களும் பிராமினா?"

அவர் முகத்தில் காறித்துப்பும் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகையுடன் பதில் சொன்னேன். "இல்ல". நான் சென்றது அலுவலகம் சார்பாக என்பதால் என்னுடைய வழமையான கோபத்தை மிகுந்த சிரமத்தோடு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்டர் பேப்பரை அவர் முகத்திலேயே விட்டெறிந்து வந்து விடலாமா என்று கூட பிற்பாடு தோன்றியது. ஆனால் சாவகாசமாக யோசித்துப் பா¡க்கும் போது 'அவர் சிறுவயதிலேயே தன்னுடைய ஜாதி குறித்த பெருமையோடும் பிற ஜாதிகள் குறித்த வெறுப்போடும் அருவருப்போடும் வளர்க்கப்பட்டிருக்கலாம்.' இன்னும் கூட அந்த குறுகிய மனப்பான்மையை விட்டு வெளியே வராத அல்லது வரவிரும்பாதவரைக் கண்டு பரிதாபமே ஏற்பட்டது. சில கொள்கைகளை நாம் தீர்மானமாக பின்பற்ற விரும்பினாலும் நடைமுறையில் அது அவ்வளவு சாத்தியமில்லை என்பதை உணாத்தியது இந்தச் சம்பவம்.

()

கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொண்ட வன்முறையின் மீதான சம்பவம் குறித்து சில புரிதல்களை ஏற்படுத்துவதற்காக இன்று நடக்கவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பை பயன்படுத்தப் போவதாக லக்கிலுக் பதிவு மூலம் தெரிகிறது. இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இணையத்தில் எழுத வந்த புதிதில் இம்மாதிரியான சந்திப்புகளை நானும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பெரும்பான்மையான சந்திப்புகள் போண்டாவில் ஆரம்பித்து போலி டோண்டு போன்ற அபத்தமான சமாச்சாரங்களைப் பற்றி உரையாடுவதே தங்களின் பிரதான அஜெண்டாவாக வைத்துக் கொண்டு முடிந்து போவதினால் ஏற்பட்ட சலிப்பில் வலைப்பதிவர் சந்திப்பு என்றாலே அலர்ஜி தரும் சமாச்சாரமாகிவிட்டது. சில முக்கியமான ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்களை பெற்றதை மாத்திரம் இணையத்தினால் ஏற்பட்ட நன்மையாக சொல்லலாம்.

ஆனால் இதிலிருந்து விடுபட்டு முக்கியமானதொரு topical பிரச்சினை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என்ற தொனி லக்கியின் பதிவில் காணப்படுவதால் அதில் கலந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

suresh kannan

8 comments:

TAMIZHAN said...

THERE ARE TOO MANY UNEMPLOYED LAWYERS IN TAMILNADU. THERE ARE ENOUGH LAWYERS OR LEGAL HELP AND THERE IS NO DRUGHT FOR LRGAL PROFESSIONALS IN THE WORLD. IT WOULD NOT HURT THE ECONONOMY, IF THE LAW COLEGES ARE CLOSED FOR FIVE YEARS. MOREOVER, THE POLICE OFFICIALS ARE THROWN INTO A DILLEMATIC SITUATION. IF THEY GO INTO THE COLLEGE AND TRY TO INTERFERE IN THE RIOTS, THE WHOLE STUDENT COMMUNITY WILL CREATE A RIOTS ALL OVER INDIA. MOREOVER, THE PRESS WERE INTERESTED IN RUNNING THEIR TV CAMERAS TO TAKE PICTURES. NOT EVEN ONE STEPPED IN TO PREVENT BRUTAL ATTACK. BOTH THE POLICE LAPSE AND INACTION BY THE PRESS CANNOT BE CONDONED.

அது சரி said...

//
சட்டக்கல்லூரி மாணவர்கள் மாத்திரமல்ல, சட்டம் படித்து முடித்து வழக்கறிஞர்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களே பெரும்பான்மையான சம்பவங்களில் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு குற்றத்தில் கைது செய்யப்படும் வழக்கறிஞரை, சக வழக்கறிஞர் குழு வன்முறையில் ஈடுபடுவதின் மூலமும் தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கை வைத்து காவல்துறையினரை மிரட்டுவதின் மூலம் மீட்டுக் கொண்டு வருவது தொடர்ந்து நிகழும் விஷயமாகிவிட்டது//

//
"இத்தன நாளா அடிவாங்கிட்டு இருந்தவன், இன்னிக்கு திருப்பி அடிக்கறான். இதுல என்ன தப்பு" என்கிறார் புத்திஜீவி நண்பரொருவர். அவர் ஜாதிக்கலாச்சாரத்தை வெறுப்பவராக இருந்தாலும் பிறப்பால் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவரான அவருக்கு அந்த ஒரு காரணத்திற்காகவே அவர் மீது வன்முறை தாக்குதல் நேர்ந்தால் அப்போதும் இதே மாதிரியான புத்திஜீவித்தனத்தோடு பார்ப்பாரா என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.
//

உங்கள் கருத்தே எனது கருத்தும்..

நானும் இது குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் என்னை விட தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

ஓகை said...

// "உங்க பாஸ் பிராமின்றதாலதான் இந்த ஆர்டரை உங்களுக்கு தர்றேன்.//

வணிக உலகில் தன் ஜாதிக்காரருக்கு அனுகூலமாக காரியங்கள் செய்வது என்பது ஏறக்குறைய எல்லா ஜாதிக்காரர்களும் செய்யக்கூடியதுதான். இதை நீங்கள் அறியாமலிருப்பது வியப்பாக இருக்கிறது.

//நீங்களும் பிராமினா?"//

இந்தக் கேள்வி உங்களை இம்சித்திருக்கலாம். தேவையில்லாமல் உங்களை நீங்கள் இம்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பாஸின் ஜாதியாக நீங்களும் இருப்பதற்கு சாத்தியகூறுகள் மிக அதிகம். சென்ற தலைமுறையில் வெகு இயல்பாகக் கேட்கப்பட்ட கேள்விகள் இவை. இந்த தலைமுறையின் மிச்ச சொச்சங்களாக இருப்பவற்றை இத்தனை பொருட்படுத்த வேண்டுமா?

லக்கிலுக் said...

//இத்தனை பொருட்படுத்த வேண்டுமா?//

ஓகை அவர்களின் இக்கேள்வி பலத்த அதிர்ச்சியை தருகிறது :-(

லக்கிலுக் said...

பதிவர் சந்திப்பு குறித்தும் எழுதியிருக்கிறீர்கள். சில விஷயங்களை இச்சந்திப்பில் சாத்தியமாக்கலாம் என்று நினைத்திருந்தோம். மழையாலும், வேறு சில இடையூறுகளாலும் அது சாத்தியப்படாமல் போய்விட்டது.

கிட்டத்தட்ட சொதப்பி விட்டது. ஆர்வத்தோடு பங்கேற்க வந்த சிலர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். இதற்காக வருந்துகிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

//வணிக உலகில் தன் ஜாதிக்காரருக்கு அனுகூலமாக காரியங்கள் செய்வது என்பது ஏறக்குறைய எல்லா ஜாதிக்காரர்களும் செய்யக்கூடியதுதான். இதை நீங்கள் அறியாமலிருப்பது வியப்பாக இருக்கிறது//

எனக்கு மாத்திரமல்ல இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். இலைமறை காயாக இது நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் என்னைப் பொறுத்த வரை என் முகத்திற்கு நேராக ஜாதியைப் பற்றி கேட்கப்பட்டது அந்த தருணத்தில் மாத்திரம்தான். எனவேதான் அந்த அதிர்ச்சியும் கோபமும்.


//இந்த தலைமுறையின் மிச்ச சொச்சங்களாக இருப்பவற்றை இத்தனை பொருட்படுத்த வேண்டுமா?
//

நடராஜன்,

உங்களின் மேலோட்டமான புரிதல் குறித்து ஆச்சரியமாக இருக்கிறது. நெருப்பு அணைந்து தணலாகத்தானே இருக்கிறது, இதில் கவலைப்பட என்ன இருக்கிறது என்பது போல் உள்ளது உங்களது கேள்வி. நெருப்பு மீண்டும் பெரிதாக பற்றிக் கொள்ள சிறு காற்றோ எண்ணையோ போதும்.

ஜாதிய எண்ணங்களை வெறியை கைவிட முடியாதவர்கள் தங்கள் வாரிசுகளின் மீதும் தங்கள் சிந்தனைகளை திணித்து வளர்ப்பார்கள். இதிலிருந்து வெளி வருபவர்கள் மிகச் சொற்பமே.

ஓகை said...

//உங்களின் மேலோட்டமான புரிதல் குறித்து ஆச்சரியமாக இருக்கிறது. நெருப்பு அணைந்து தணலாகத்தானே இருக்கிறது, இதில் கவலைப்பட என்ன இருக்கிறது என்பது போல் உள்ளது உங்களது கேள்வி. நெருப்பு மீண்டும் பெரிதாக பற்றிக் கொள்ள சிறு காற்றோ எண்ணையோ போதும்.//

இந்த விஷயத்தில் நான் சமுதாயத்தைப் பார்த்துக்கொண்டே வருகிறேன். என் புரிதல் மேலோட்டமானது என்று என்னால் உதாசீனப்படுத்திவிடமுடியாது. என் தாத்தாவின் தலைமுறையில் கொஞ்சமும் தந்தை மற்றும் என் தலைமுறையை முழுதும் இப்போதைய இளைய தலமுறையையும் எல்லோரும் கவனிப்பது போலல்லாமல் நான் கூர்ந்து நுணுகிக் கவனித்து வருகிறேன்.

ஜாதி உணர்வு என்பது சுற்றம் பேணுதலின் பெருவிரிவு. சுயம்புவான இந்திய நாகரிகம் இதனாலேயே இந்நாள் வரை நின்று நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. வலுவான குடும்ப அடித்தளத்தை உடைய இந்திய சமுதாயத்தில் நட்புணர்வும் புதிய தொழில் மற்றும் சந்தை சூழலும் கல்வியை முதன்மையாகக் கொண்ட தொழில் மற்றும் வணிகக் கட்டமைப்பும் ஜாதி உணர்வை ஓரங்கட்டிக் கொண்டிருக்கிறது. மந்தமான மாற்றம் என்றாலும் மாறாத மாற்றமாய் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ஜாதி உணர்வு என்பதை நெருப்புக்கு எடுத்துக்காட்டாகக் கொள்வது எனக்கு உடன்பாடில்லை. வேண்டுமானால் சிக்கிமுக்கி கல்லுக்கு ஒப்பாகச் சொல்லலாம். ஆனால் அழுத்தி உரசினால் எதுமே பற்றிக் கொள்ளும். இப்பிரச்சனையை உரசித் தீமூட்டி அதில் குளிர் காய்வது அரசியல் கட்சிகள்தான். சமுதாயம் மாறமாற இயல்பாகக் களைந்துவிடும் இத்தகைய வேறுபாடுகளை கலையவிடாமல் பொத்திப் பாதுகாப்பது அரசியல் கட்சிகள் அன்றி வேறு யாருமில்லை. மதத்தைப் பரப்புவது தொடர்பாகவே உருவாகும் மதக் கலவரங்களை உத்வேகப் படுத்துவது அரசியல் கட்சிகளே. அவர்கள் சும்மா இருந்தால் கலவரங்களுக்கு ஏது இடம்? ஜாதி உணர்வுகளைக் காத்துக் கொள்வதற்கு ஏற்படும் கலவரங்களுக்கு அரசியல் ஆதரவு இல்லையென்றால் எப்படி அவை பேயாட்டம் போட முடியும்?

என்னைப் பொருத்தவரையில் நம்நாட்டின் ஜாதிப்பாகுபாடுகள் சமுதாயம் தானாகவே செய்துகொண்டது. இது குறித்து தேவைக்கேற்ப சமுதாயமே தன்னை மாற்றிக் கொள்ளும். அதற்கு அரசியல் தடைகள் இருந்தால் இது தாமதமாகும். அவ்வளவுதான்.

நாலாம் தலைமுறையில் நாவிதனும் சித்தப்பனாகும் நடைமுறையைப் பற்றிய சிந்தனை 80 ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாகிவிட்டது. எல்லாம் தானாக சரியாகும்.

150 ஆண்டுகளுக்கு முன் கருப்பர்களை விற்றுக் கொண்டிருந்த சமுதாயம் இன்று எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

//ஜாதிய எண்ணங்களை வெறியை கைவிட முடியாதவர்கள் தங்கள் வாரிசுகளின் மீதும் தங்கள் சிந்தனைகளை திணித்து வளர்ப்பார்கள். இதிலிருந்து வெளி வருபவர்கள் மிகச் சொற்பமே.//

முக்கால்வாசி மனிதனை வீடு வளர்த்த காலம் போய் இப்போது முக்காலே மூனு வீச மனிதனை சமுதாயம் வளர்க்கிறது. உங்களுடைய பயம் கொஞ்சமும் சாத்தியக் கூறற்ற ஒரு பயம்.

அன்புடன்
நடராஜன்.

ஓகை said...

// //இத்தனை பொருட்படுத்த வேண்டுமா?//

ஓகை அவர்களின் இக்கேள்வி பலத்த அதிர்ச்சியை தருகிறது :-( //

நீங்களே அதிர்ந்து போகுமளவுக்கா நான் ஏதோ சொல்லிவிட்டேன்?