'இளகிய மனதுடையவர்கள் இதைப் பார்க்க வேண்டாம்' என்ற முன்னெச்சரிக்கையுடனே அந்த செய்தித் துணுக்கு சன் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டாலும் 'என்ன இப்படி பயமுறுத்துகிறார்கள்' என்ற அலட்சியத்துடன்தான் தொடர்ந்து கவனித்தேன். ஆனால் அந்தக் காட்சிகளை பார்த்த கணத்தில் உடம்பெல்லாம் வெலவெலத்துப் போய்விட்டது. சற்று நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல் அமர்ந்தேன்.
சென்னை சட்டக்கல்லூரியில் இருபிரிவு மாணவர்களிடையே இருந்த விரோதப் போக்கு நேற்று கலவரமாக வெடித்தது. மாணவன் ஒருவனை இன்னொரு மாணவர்கள் குழு தாக்கிக் கொண்டிருந்தது. அவனை மீட்க கத்தியுடன் வந்த இன்னொரு மாணவன் அந்தக் குழுவை தாக்க முயன்றான். அந்தக் குழு தனியாக மாட்டிக் கொண்ட அந்த மாணவனை உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக அடித்தனர். அவன் விழுந்த அடியை தாங்க முடியாமல் கல்லூரியின் கேட்டிற்கு அருகாமையில் கீழே சாய்ந்த போதும் கூட மிருகவெறி கொண்ட அவர்கள் பிரக்ஞையின்றி கிடந்த அவனை ஓங்கி ஓங்கி உருட்டுக்கட்டையால் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தனர். அருகாமையிலேயே இருந்த காவல்துறையினர் இதை ஒதுங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்களே ஒழிய ஒருவன் உயிரிழக்கும் அபாயம் நேரக்கூடிய அந்தச் செயலை தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பதைபதைத்துப்போன பொதுமக்களும் பத்திரிகையாளர்களும்தான் காவல்துறையின் இந்த அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர்.
விடுதியில் தங்கியிருக்கும் தலித் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே தேவர் ஜெயந்தி விழா போஸ்டரில் பெயர் போடாததற்காக விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கலவரம் ஏற்படக்கூடிய சூழல் குறித்து காவல்துறையினருக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் முன்னமே தெரியும் என்றும் கூறப்படுகிறது. என்றாலும் இந்தக் கொடூரத்தை முன்னமே தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் யாரும் எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. தேர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பயங்கர ஆயுதங்களுடன் உலவிக் கொண்டிருந்த மாணவர்களையும் ஏன் காவல்துறை முன்னமே கைது செய்யவில்லை என்பதும் புரியவில்லை.
செய்தகளில் பதிவாகாமல் போன இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் எத்தனையோ?
()
சென்னையில் இருக்கும் கல்லூரிகளில் வன்முறை கலாச்சாரத்திற்கு பெரிதும் பெயர் போனவை பச்சையப்பன் கல்லூரியும், மாநிலக் கல்லூரியும், சட்டக் கல்லூரியும். எந்தவொரு சிறுபிரச்சினைக்கும் சாலையை மறிப்பது, பேருந்துகளை சேதப்படுத்துவது, குழுவாக அடித்துக் கொள்வது, பெண்களை கிண்டல் செய்வது, பொதுமக்களுக்கு இடையுறான காரியங்களை செய்வது போன்ற செயல்களில் காலங்காலமாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர். இவை அனைவருக்கும் தெரிந்த செய்திதான். சாதாரணனாக இருக்கும் தனியொருவன் வன்முறைக் கூட்டத்துடன் இணையும் போது அவனும் அந்தக் கூட்டத்தின் ஒரு துளியாக உருமாறுவது mob psychologyயின் அடிப்படை.
ஆனால் நேற்றைய சம்பவத்தை தொலைக்காட்சியிலும் நேரிலும் பார்த்தவர்கள் கல்மனதுடையவர்களாக இருந்தாலும் நிச்சயம் பதறிப் போயிருப்பவர். வருங்காலத்தில் வழக்குறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் வரப்போகிறவர்களின் மனதில் இவ்வளவு வன்மமும் வன்முறையும் வெறுப்பும் கலந்திருப்பதைக் காணும் போது வருங்காலத்தில் பொதுமக்களுக்கு நீதி என்கிற சமாச்சாரம் கொஞ்சமேனும் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சட்டம் பயிற்றுவிக்க்ப்படுபவர்களே சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருப்பது நகைமுரணானது மாத்திரமல்ல கொடூரமாக செயலும் கூட.
காவல்துறையினர் தலையிடாமல் ஒதுங்கி நின்ற அரசியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்பவும் குழுவாக இணைந்து கலாட்டா செய்து தலைவலியாக இருக்கின்ற மாணவர்கள் எப்படியாவது தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று நினைத்தார்களா? எப்படியாவது இருக்கட்டும். கண்ணெதிரே நடக்கின்ற - அதிலும் தடுத்திருக்கக்கூடிய ஒரு கொடுமையை - தடுக்க காவல்துறையினரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. மனச்சாட்சி உள்ள ஒரு மனிதராக இருந்தால் கூட போதும். மிருகத்தனமாக அடித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் மீது கல்லையாவது விட்டெறிந்து அவன் கவனத்தை கலைக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தோன்றியது. ஆனால் நேரில் பார்த்திருந்தால் கையாலாகாதனமாக பார்த்துக் கொண்டிருப்பேனோ என்றும் தோன்றுகிறது.
()
இந்த விபரீதமான செயலுக்கு கருணாநிதி தலையிமலான திமுக அரசு நிச்சயம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
வீடியோவில் பதிவான காட்சிகளின் மூலம் வன்முறை கொலைவெறித்தாக்குதலை நடத்திய மாணவர்களை அடையாளங்கண்டு பயங்கரவாதிகள் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினரையும் முன்னமே தடுக்கத்தவறிய கல்லூரி நிர்வாகத்தினரையும் பதவிநீக்கம் செய்து கடமையை முறையாக செய்ய தவறியதற்காக வழக்குப்போட்டு சிறையில் தள்ள வேண்டும்.
வருங்காலத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க அனுமதி விண்ணப்பத்தில் இதுகுறித்து கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்தி மாணவர்களை முன்னரே எச்சரிக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் போல மாணவர்களின் இளம்பருவத்திலேயே இவ்வளவு வன்முறை சார்ந்த எண்ணங்கள் கொண்டிருப்பதும் அதை சிறிதும் மனச்சாட்சியின்றி செயல்படுத்துவதும் வருங்கால தேசம் குறித்தான கவலையை அளிக்கிறது. இதுபோன்ற வன்முறைகளை முன்னரே யூகித்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
இம்மாதிரியான வன்முறை கலாச்சாரத்திற்கு திரைப்பட ஊடகங்களின் பங்கும் பிரதானமாக இருக்கிறது. கல்லூரியில் பத்து பேரை அடித்து வீழ்த்தும் மாணவனை நாயகனாக சித்தரிப்பது, இயல்பான காட்சியமைப்பு என்ற பெயரில் அடிப்பதையும் குருதி வழிவதையும் குரூரமாக அமைப்பது போன்ற காட்சிகள் இள நெஞ்சங்களில் நஞ்சைக் கலக்கின்றன.
ஆனால் இந்த அரசு கடுமையானதொரு நடவடிக்கையை எடுக்கப் போகிறதா அல்லது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி இதை மழுப்பப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
()
போகிற போக்கில் செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் பார்க்காமல் புறக்கணிப்பதே மனநிலையை பாதிக்காமல் வைத்திருக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் பிரதானமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் படித்தவொரு காலை நேரத்தையே கலைத்துப் போட்டது. ஆர்.கே. சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த பைண்டிங் பிரஸ் தொழிலாளி ஒருவரை வாகனம் ஒன்று இடித்து தள்ளியிருக்கிறது. பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை பார்த்ததும் தள்ளியிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ சூழ்ந்து பாய்ந்து வந்திருக்கிறார்கள். வாகனத்தில் இருந்தவர்கள் 'நாங்களே இவரை மருத்துவனையில் சேர்த்து விடுகிறோம்' என்று கூறி ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் பயந்து போய் எங்கோ ஒரு பிளாட்பார்மில் கிடத்தி விட்டுச் சென்று விட்டார்கள். 'உடனே கொண்டு வந்திருந்தால் உயிர் பிழைக்க வைத்திருந்திருக்கலாம்' என்று கூறுகின்றனர் அவர் உடலை பிற்பாடு பரிசோதித்த மருத்துவர்கள்.
21-ம் நூற்றாண்டில் நாகரிகத்தின் உச்சியில் சென்று கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் நம்மிடம் இன்று நுட்பத்தின் எல்லா வசதிகளும் உண்டு. அடிப்படையான மனிதம்தான் இல்லை.
image courtesy: www.dailythanthi.com
suresh kannan
20 comments:
அரசு,சட்ட அமைச்சர், காவல்துறை எல்லாமும் நாக்கை பிடிங்கிக்கொண்டு செத்துவிடலாம்
கிருஷ்ணசாமியை கைது செய்தால் பஸ்களை எரிக்கிறார்கள்.மூன்று மாவட்டங்களில் பஸ்கள் ஒடுமா,
ஒடாதா என்று தெரியாது.அரசு
இரும்புக்கரம் கொண்டு இதை
அடக்க வேண்டும்.ஆனால் அதைச்
செய்யாது. ஏதாவது ஒரு
பிரச்சினை என்றால் முதலில் பஸ் எரிப்பு, பொதுசொத்திற்கு சேதம்,வன்முறை
என்று தமிழ்நாடெங்கும் பரவியுள்ள ‘கலாச்சாரத்தை'
கடுமையாக அடக்க வேண்டும்.
சாதி சங்கங்களை கல்லூரிகளில்
தடை செய்ய வேண்டும்.அதைச்
செய்தாலே மாணவர் வன்முறை
வெகுவாக குறையும்.ஆனால்
அம்பேத்கர் பேரில் ஒன்று, தேவர்
பேரில் ஒன்று இருக்கும் போது
தடை செய்ய யாருக்கு தைரியம்
வரும்.முதல்வர் தட்டிக்கேட்டால்
அவருக்குத்தான் ஆபத்து.அவர்
மீதே புகார் கொடுப்பார்கள்.சனநாயக
உரிமையை பறிக்காதே என்பார்கள்.
இதை பற்றி எந்த அறிவு சீவியும் பேசாது.அவர்களுக்கு ஆதரவாளர்கள் இங்கு உருவாகிறார்கள்.
கல்லூரிகளில், தலித்
vs தலித் அல்லாத என்று ஆரம்பித்து
ஒரு சாதி vs இன்னொரு சாதி என்று
சாதி அரசியல்,வன்முறை துவங்கி விடுகிறது.இத்துடன் உள்ளூர்,கட்சி,
கோஷ்டி அரசியல் சேரும் போது
என்ன ஆகும்? அதைத்தான்
அந்தக் காட்சியில் பார்த்தீர்கள்.
கிருஷ்ணசாமியை கைது செய்தால் பஸ்களை எரிக்கிறார்கள்.மூன்று மாவட்டங்களில் பஸ்கள் ஒடுமா,
ஒடாதா என்று தெரியாது.அரசு
இரும்புக்கரம் கொண்டு இதை
அடக்க வேண்டும்.ஆனால் அதைச்
செய்யாது. ஏதாவது ஒரு
பிரச்சினை என்றால் முதலில் பஸ் எரிப்பு, பொதுசொத்திற்கு சேதம்,வன்முறை
என்று தமிழ்நாடெங்கும் பரவியுள்ள ‘கலாச்சாரத்தை'
கடுமையாக அடக்க வேண்டும்.
சாதி சங்கங்களை கல்லூரிகளில்
தடை செய்ய வேண்டும்.அதைச்
செய்தாலே மாணவர் வன்முறை
வெகுவாக குறையும்.ஆனால்
அம்பேத்கர் பேரில் ஒன்று, தேவர்
பேரில் ஒன்று இருக்கும் போது
தடை செய்ய யாருக்கு தைரியம்
வரும்.முதல்வர் தட்டிக்கேட்டால்
அவருக்குத்தான் ஆபத்து.அவர்
மீதே புகார் கொடுப்பார்கள்.சனநாயக
உரிமையை பறிக்காதே என்பார்கள்.
இதை பற்றி எந்த அறிவு சீவியும் பேசாது.அவர்களுக்கு ஆதரவாளர்கள் இங்கு உருவாகிறார்கள்.
கல்லூரிகளில், தலித்
vs தலித் அல்லாத என்று ஆரம்பித்து
ஒரு சாதி vs இன்னொரு சாதி என்று
சாதி அரசியல்,வன்முறை துவங்கி விடுகிறது.இத்துடன் உள்ளூர்,கட்சி,
கோஷ்டி அரசியல் சேரும் போது
என்ன ஆகும்? அதைத்தான்
அந்தக் காட்சியில் பார்த்தீர்கள்.
நாம் இந்த செந்தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை நமீபியா அல்லது எத்தியோப்பியா போல் ஏதாவது நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. ஆமாம் இங்கு அரசாங்கம், போலீஸ் இவையெல்லாம் இருக்கின்றனவா. இந்த நிலையில் நாம் சிங்கள காடயரை காய்ந்து கொண்டு இருக்கிறோம்.
வன்முறையையும் வேடிக்கை பார்க்கும் போலீசையும் கிரிமினல் குற்றம் செய்ததாக கருதி தண்டிக்கும் சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும்
All of the students need to be booked in goondas act and all those guys admisiion to be cancelled. Their right for study needs to be forefeited by booking them under criminal cases. As long as so called political leaders are there this is what will happen if u support caste based politics. Ban all VC PT PMK FB which are responsible for this barbaric act.
ஒரு மாணவனை தெரு நாயைப் போட்டு அடிப்பது போல அடித்த விதம் தந்த பதட்டம் இன்னும் நீங்க மறுக்கிறது. யார் மேல் தவறு என்றாலும், இதுதான் முறையா?
ஆனால் இந்த அரசு கடுமையானதொரு நடவடிக்கையை எடுக்கப் போகிறதா அல்லது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி இதை மழுப்பப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
முரளிகண்ணன்
அரசு,சட்ட அமைச்சர், காவல்துறை எல்லாமும் நாக்கை பிடிங்கிக்கொண்டு செத்துவிடலாம்.
repeat
பழய குருகுல கல்வி முறையே நன்று போல் உள்ளது,
கொடுமையான நிகழ்ச்சி சுரேஷ் கண்ணன். அதை விடக் கொடுமை, அதைக் காரணம் காட்டி இன்றூ கோவை மற்றும் இதர பிற இடங்களில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள்....
உங்களுடைய பதிவை என் பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்....
நரேஷ்
http://nareshin.wordpress.com
ஒருத்தன் கத்தி எடுத்துக்கொண்டு பாய்வதும்., அவனை இழுத்துப்போட்டு மற்ற சிலர் சரமாரியாக தாக்குவதும்.. அதுவும் சென்னையின் பிரதான இடத்தில், சட்டக்கல்லூரி வளாகத்தின்..
அடி வாங்கியவன் மேல் பச்சாதாபம் வந்தாலும், அவனும் கத்தியை எடுத்துக்கொண்டு அடுத்தவன் மேல் பாய்ந்துள்ளான் என நினைக்கும் போது அவனையும் ஒரு மாணவனாக பார்க்க முடியவில்லை..
வேடிக்கை பார்த்த சட்டக்கல்லூரி மாணவர்கள்.. அடத்தூ நீங்களாடா படித்து முடித்து சட்டத்தை காப்பற்ற போகின்றீர்கள்?
காவல்துறை - கைக்கட்டி வேடிக்கை பார்த்த உங்களுக்கு மக்கள் ரத்தம் சிந்தி உழைத்து கொடுகும் வரியில் இருந்து சம்பளம் வாங்க கைக்கூசவில்லை?? த்தூ
வளைத்து வளைத்து போட்டோ எடுத்த பத்திரிக்கைதுறையே - நாளை காலை முதல் பக்கத்துக்கு நல்ல கலர் போட்டோ கிடைத்தது என்று எடுத்து தள்ளி, படம் வரைந்து பாகம் குறித்த உங்களுக்கு , உங்கள் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பரபரப்பை விட அந்த சம்பவம் மலிதாகிவிட்டதா?? நீங்கள் சமுதாயத்தின் நாண்கு தூண்களில் ஒரு தூண் என்றூ சொல்லிக்க வெக்கமாயில்லயா?
சட்ட கல்லூரியில் மட்டும் வருட வருடம் ஏதாவது சண்டை இதுப் போல் வந்து விடுகிறது!
சென்னை மற்றும் நெல்லையில் அடிக்கடி இதுப் போல் வருவதாக தோன்றுகிறது!
எப்படி இவர்களை கட்டுபடுத்துவது?
மயிலாடுதுறை சிவா...
Dear Tamilstudents don't do like this again...please...please. JOVE..Tamilnadu police your duty is so...shameful on that place...have you all one heart?...your body run with Tamilbloods??...so stupid duty you were do it that place...shameful Tamilnadu police.
//லித் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் // அப்படியா? அந்த மற்ற மாணவர்கள் என்ன தாய்லாந்தில் இருந்து வந்தார்களா?
சுரேஷ் கண்ணன்
சூப்பர் சார், தல, திருப்பாச்சி இவர்கள் படம் பார்த்து வளர்ந்து வாழும் சமூகத்திலே ஒருவர் இதைப் பார்த்து மாரடைத்துச் சாகமாட்டார்கள்.
கிடக்கட்டும். புரட்சிகரமான இப்பதிதலுக்கு அப்பாலே வீதியிலே இறங்கி வரும் வார இறுதியிலே தமிழ்நாட்டின் பதிவர்களெல்லாம் சந்திப்பு நிகழ்த்தி ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தவிருப்பதாக யாரோ எனக்கு இன்று சொன்னார்கள் (கனவிலேதான்). என் வாழ்த்து. இப்படியான நடைமுறைப்புரட்சிதான் வேண்டும். பதிவுப்புரட்சியிலே அ.மார்க்சைத் தட்டுவது ஜெயமோகனைத் திட்டுவதும் மிருங்கங்களை சொற்களால் சுட்டுத்தள்ளுவதும் சூடாக்குவதற்கப்பால் என்னத்தை ஆக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொண்டதற்கு வாழ்த்து. என் கனவிலே இந்தத்தெருப்புரட்சி பற்றித் தகவல் தந்த டோண்டு சாருக்கும் பக்கத்திலேயே கூடியிருந்து ஆமோதித்த திராவிடத்தோழருக்கும் நன்றி. சாருநிவேதிதாவும் ஒரு ஈரானியத்திரைப்பட டிவிடியுடன் பதிவர்புரட்சி செய்ய சட்டைக்கல்லூர்...அடச்சே சட்டக்கல்லூரி முன்னால் வருவார் என்றும் சொன்னார் ஒரு தமிழகத்தின் முன்னணிப்பின்நவீனத்துவக்கவிஞர். வாழ்த்துகள்.
/ஒரு மாணவனை தெரு நாயைப் போட்டு அடிப்பது போல அடித்த விதம் தந்த பதட்டம் இன்னும் நீங்க மறுக்கிறது. யார் மேல் தவறு என்றாலும், இதுதான் முறையா?/
இதென்ன பெரிசுங்க சார். இவுனுகள ரானுவத்துல சேத்துக்கிட்டீங்கன்னா சீக்கிரத்துல சொந்த முயற்சியிலே முன்னுக்கு வந்துடுவானுக. நீங்க வேற போற்றிப்பா விடுவீங்க. எதுக்கும் இன்னிக்கு முடிஞ்சா துக்ளக்குக்கு கண்டிச்சு ஒரு லெட்டர் போட்டிருங்களேன்.
Shocking state of affairs ! imagine these students becoming lawyers in few years, will they argue in court or settle scores physically ? State government is in a stupor, hope this jolts them into some action.
//ஒரு மாணவனை தெரு நாயைப் போட்டு அடிப்பது போல //
அப்ப தெரு நாயை அடிச்சா குத்தம் ஒண்ணுமில்லன்னு சொல்றீங்களா? மனுஷன அடிச்சாவாவது இத்தன பேரு வர்றீங்க. நாய அடிச்சா யாரு கேக்கப் போறா?
அடிக்கும் மாணவர்கள்(?) அடிபட்ட மாணவர்கள்(?) வேடிக்கை பார்த்த போலீசார் அனைவரும் பொம்மைகள் - ரெமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொம்மைகள். அந்த ரெமோட் கண்ட்ரோல் யார்? எங்கு இருக்கிறது? இதைத்தான் விசாரணைக் கமிஷன் கண்டுபிடிக்கவேண்டும்.
இது சட்டம் பயிலும் மாணவர்களே அல்ல, வேறு சமுக விரோத கும்பல் மாணவர்களை அடித்தனர், முறையான பாதுக்கப்பு, யார் வேண்டுமானாலும் சட்ட கல்லூரிக்குள் நுழைய முடியும் என்ற நிலை தான் இந்த நிலையை ஏற்படுத்தியது தவிர, சட்ட கல்லூரி மாணவர்களே அல்ல இந்த மிருகங்கள்,
//சாதி சங்கங்களை கல்லூரிகளில்
தடை செய்ய வேண்டும்.அதைச்
செய்தாலே மாணவர் வன்முறை
வெகுவாக குறையும்.ஆனால்
அம்பேத்கர் பேரில் ஒன்று// அம்பேத்கர் என்னும் பெயர் சாதிய அடையாளத்தை குறிப்பது அல்ல, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட தலித் மக்களை தான் குறிக்கும், அம்பேத்கர் என்பது, சாதிய அடையலாம் என்றல்லாமல், தேசிய தலைவர், அரசியல் அமைப்பை உருவாக்கியவர் என்ற எண்ணம் ஏன் உங்கள் மனதில் வராமல் அவர் ஒரு தலித் என்ற எண்ணமே வருகிறது.? இது தான் இப்படி பட்ட சாதிய அடையாளத்தை தங்கி இது போன்ற சண்டையின் விதைகளாகும். நான் சட்ட கல்லூரி மாணவி, எங்கள் கல்லூரியில் போராட்டம் நடக்கும், ஆர்பாட்டம் செய்வர், ஆனால் யாரும் பஸ்ஸை எரிப்பது போன்றவைகளை செய்ததில்லை, சமுக விரோத கும்பல் மட்டும் தான், சட்ட கலூரி ஏன் ஒழுங்க சீரமைக்க படவில்லை? இதில் என்ன நோக்கம், உள்ளது? மற்ற அரசு கல்லூரிகள் ஒழுங்காக சீரமைக்க படுகின்றன? ஏன் சட்ட கல்லூரி கைவிடப்பட்டது, இதை பற்றி நீங்கள் பேசி மாணவர்களின் நலம் கருதி இருந்தால் வாழ்த்தி இருப்பேன், அது அல்லாது குறையாய் எவனோ வைத்து கொண்டு எங்களை மிருகங்கள் என்று சொல்ல்வது கேவலம்.
Post a Comment