Friday, October 10, 2008

தமிழ் சினிமாவும் சில கேள்விகளும்

நாகார்ஜீனனின் இந்தப் பதிவை வாசிக்கும் போதே கேள்விகளுக்கு பதிலளிக்கும் விருப்பம் எழுந்தது. சற்று தள்ளிப் போட்டேன். பாலாஜி உடனே எழுத வேண்டும் என்று அழைத்த போது எழுந்த ஒரு உத்வேகத்தில் ஒரே அமர்வில் பெருமளவில் பாசாங்குகளைத் தவிர்த்து எழுதியது.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

சரியாக நினைவில் இல்லை. ஒண்டுக் குடித்தன வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருப்பவரின் வீட்டில் படம் ஆரம்பிக்க இருப்பதற்கு சற்று முன்னரே வசதியான இடத்தில் இடம்பிடித்து விஞ்ஞானத்தின் முக்கிய பரிணாமமான டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பரவசத்துடன் ராஜேஷ்கண்ணா வகையறாக்கள் நடித்த மொழி புரியாத இந்திப்படங்களும் முணுக்கென்றால் பாடக்கிளம்பிவிடும் காவிய, சரித்திரப்படங்களும் பார்த்த வயது ஏழோ அல்லது எட்டோ இருக்கலாம். முழுப்பிரக்ஞையுடன் நினைவில் இருப்பதென்றால் திரிசூலம். சிவாஜி தொலைபேசியுடன் கோவென்று அழும் போது சுற்றி அமர்ந்திருந்தவர்கள் கண்கலங்க அப்போதே எனக்கு சற்று எரிச்சலாக இருந்தது உண்மை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

விஜய் நடித்த தரணியின் இயக்கத்தில் வெளிவந்த 'குருவி'. எட்டு வயது மகள் வலியுறுத்தியதின் பேரில் அவளுடைய மகிழ்ச்சிக்காக சென்றது என்றாலும் 'கில்லி'யில் முக்கால் படத்திற்கு தரணி அமைத்திருந்த சுவாரசியமான திரைக்கதையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையில் சென்றேன். மோசமில்லை. பல தமிழ்ப்படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எரிச்சலாக இருக்கும். குருவியை பார்த்து முடித்த பின்புதான் எரிச்சல் ஏற்பட்டது. கள்ள நகலெடுக்கப்பட்ட குறுந்தகடுகளும் இணைய தரவிறக்கங்களும் பழக்கமாகி விட்ட பிறகு அரங்கில் சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவம் குறைந்து போனது. (ஒரு நல்ல திரைப்படத்தை எப்படி அணுகுவது / பார்ப்பது என்பதைப் பற்றி தமிழ்ச் சமூகத்திற்கு யாராவது கற்றுத் தந்தால் தேவலை.)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஆச்சரியமாக இதுவும் ஒரு வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படம்தான். பேரரசுவின் பழனி. பொழுதைக் கொல்ல வேண்டிய ஒரு கணத்தில் வீட்டில் கேபிள் டி.வி.யில் பார்த்தேன். வரப்போகும் காட்சிகளை முன்கூட்டியே உடனுக்குடன் ஊகிக்க முடிந்தது. எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் பழைய படங்கள் போலவே இதிலும் முணுக்கென்றால் எரிச்சலூட்டும் பாடல் காட்சிகள். சினிமாவில் பாடல் என்கிற மகா அபத்தத்தை அன்புமணியோ, கவுண்டமணியோ யாராவது சட்டம் போட்டு தடை செய்தால் புண்ணியமாய்ப் போகும். அபத்தமான வணிகப்படம்தான் என்றாலும் முழுப்படத்தையும் பார்க்க வைத்த இயக்குநரின் திறமையை வியந்தேன். திரைக்கதையின் சூட்சுமத்தை ஒரளவிற்கு உணர்ந்த இவர்களின் வணிக சங்கிலிகளின் தடையை நீக்கினால் நிச்சயம் நல்ல படங்களை அவர்களால் தரமுடியும் என்ற நம்பிக்கையுண்டு.

கைக்குட்டை போன்ற இரான் தேசம் கூட மனிதச் சமூகத்தின் அக/புறச் சிக்கல்களை, அனுபவங்களை திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக மொழியில் பாசாங்குகள் தவிர்த்து காவியங்களாக பதிவு செய்து கொண்டிருக்கும் போது நம் தமிழ் சினிமா மாத்திரம் ஏன் இப்படி மலக்குழியில் அமிழ்ந்திருக்கிறது என்பதை எண்ணி வேதனையாக இருந்தது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்'

நாகார்ஜூனன் இதை எழுதியிருக்காவிட்டாலும் நான் இதைத்தான் சொல்லியிருப்பேன். ஏற்கெனவே இதை இணைய விவாதங்களில் பல முறை சொல்லியிருக்கிறேன். மென்மையும் குரூரமும் திமிரும் சுயபச்சாதாபமும் தவிப்பும் ஏக்கமும் வன்மமும் கொண்ட 'மஞ்சு' என்கிற அந்த கதாபாத்திரத்தை நிகழ்வுகளின் மூலமும் வசனங்களின் மூலமும் இவ்வளவு வலுவாக சித்தரிக்கப்பட்ட படத்தை முன்னரும் பின்னரும் கண்டதில்லை. தமிழிலேயே வந்த உருப்படியான ஒரே சினிமா என்று கூட அதிரடியாக என்னால் இதை வரையறை செய்ய முடியும். அந்தளவிற்கு என்னை தாக்கிய/பாதித்த தமிழ் சினிமா இது. உலக சினிமாவில் ஏற்பட்ட புதிய அலையின் பாதிப்பு தமிழில் எதிரொலித்த முக்கிய படங்களுள் இது ஒன்று.

ஆனால் ராஜநாயகம் குறிப்பிட்டது போல் இப்படியொரு அற்புதத்திற்குப் பிறகு எப்படி 'கிராமத்து அத்தியாயம்' என்கிற அபத்தத்தை ருத்ரைய்யாவால் தர முடிந்தது என்பதோர் ஆச்சரியம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்றும் தோன்றவில்லை. இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ரஜினி மக்களிடம் தொலைக்காட்சியில் அறிக்கை விட்ட சம்பவத்தை வேண்டுமானால் சொல்லலாம். அதுவும் கூட ஜெயலலிதாவிற்கு எதிரான மனநிலையுடன் ஒரு சாய்வு நிலையில் சொல்லப்பட்ட அறிக்கை அது. நம்மை ஆள்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கு கூட நடிகர்களின் மூளையை இரவல் வாங்குகிற அளவிற்கு ஆட்டு மந்தையாக தமிழ்ச்சமூகம் சினிமாப்பித்து கொண்டிருக்கிறதே என்று அப்போது வேதனையாக இருந்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஏ.ஆர். ரகுமானின் வருகையைச் சொல்லாம். மேம்படுத்தப்பட்ட நுட்பங்களின் மூலம் பாடல்களின் கேட்பனுபவத்தை இன்னும் உன்னதமாக்கியது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஓ நிறைய. அறந்தை மணியன் தொடங்கி தியோடர் பாஸ்கரன், யமுனா ராஜேந்திரன், அ.ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, விஸ்வாமித்திரன், செழியன் என்று யார் தமிழ்சினிமா பற்றி உருப்படியாக எழுதினாலும் வாசித்துவிடுவேன், பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகள் உட்பட. பள்ளிப்பருவத்திலேயே சினிமா passion ஆக என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தது. கேமிராவின் பின்னால் உள்ள துறையில் பணிசெய்வது, அதிகபட்சமாக இயக்குநராக ஆவது என்பதே என் வருங்கால கனவாக இருந்தது.

7. தமிழ்ச்சினிமா இசை?

தமிழச் சமூகத்திற்கே இசை என்றால் அது திரையிசைப்பாடல்கள்தான் என்று பெரும்பான்மையாக இருக்கும் போது நான் மட்டும் விதிவிலக்கல்ல. பள்ளிக்கு கிளம்புகிற அவசரத்திலும் விவிதபாரதியில் ஒலிக்கிற 'ஒரே நாள் உனை நான்' பாடலை கிறக்கத்துடன் கேட்கத்துவங்கியதில் ஆரம்பித்த பித்து இன்னும் அடங்கவில்லை. இளையராஜாதான் அப்போதைய ஒரே ஆதர்சம். எம்.எஸ். விஸ்வநாதன் கூட இரண்டாம்பட்சம்தான். இப்போதையப் பாடல்களில் விருப்பப்பாடலை தேர்வு செய்வது சிரமமாக இருந்தாலும் அப்படியொன்றும் மோசமாகிவிடவில்லை. நாம் விரும்பாவிட்டாலும் கூட தொலைக்காட்சிகளும் பண்பலை வானொலிகளும் அவைகளை தொடர்ந்து காதில் ஊற்றிக் கொண்டேதானே இருக்கின்றன?

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சத்யஜித்ரே உடல்நலம் குன்றி மருத்துவனையில் இருந்ததும் தொடர்ந்து அவருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதும், வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டதுமான நிகழ்வுகளைத் தொடர்ந்து ரேவின் முக்கிய படங்களை தேசிய தொலைக்காட்சி வரிசையாக ஒளிபரப்பியது. அதுவரை பார்த்திருந்த சினிமாவெல்லாம் ஒரே கணத்தில் அபத்தங்களாகிப் போக சினிமா என்கிற காட்சி ஊடகத்தை இவ்வளவு வலிமையாகவும் கலாஅனுபவத்துடனும் உபயோகிப்பது சாத்தியமா என்றொரு பரவச நிலையை எய்திய கணமது. பிறகான தேடல்களில் நிறைய உலக சினிமாக்களைப் பார்த்தாலும் பார்க்கிற ஒவ்வொரு முறையும் என்னை அலைக்கழிப்பது ரேவின் 'பதேர் பாஞ்சாலியும்' 'சாருலதாவும்'. இந்தியா ஒரே நாடு என்பதை virtual reality ஆக ஆக்கிக் கொண்டாலும் திரைப்படத்துறையிலும் கூட (தென்னிந்தியாவையும் இந்தி சினிமா உலகையும் தவிர) மற்ற மாநிலங்களில் என்ன நிகழ்கிறது என்பதே நமக்கு தெரியாமலிருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமான நிலைமை.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பில்லை. ஆனால் திரைத்துறையில் பணிபுரிய வேண்டுமென்கிற கனவு இன்னமும் அடங்காமல் இருக்கின்றது. அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாதது என்பதால் முயற்சிக்கத் துணியவில்லை. ஒருவேளை பணிபுரிய நேர்ந்தால் நேர்த்தியான ஒரு சினிமாவைத் தரமுடியும் என்று எல்லா உதவி இயக்குநர்கள் போலவும் எனக்கும் நம்பிக்கையுண்டு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஆஹா! கேட்கவே பரவசமாயிருக்கிறது. பெரும்பாலான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இணையப்பதிவுகளும் முதலில் ஸ்தம்பித்துப் போகும். மக்கள் தங்களுக்கான முதல்வர்களைத் தேட முடியாமல் பரிதவித்துப் போவார்கள். ஆனால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள். மெகா சீரியல்கள் இன்னும் நீளமாகும். மாத நாவல்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும். தமிழர்களையும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தையும் பிரிக்கவே முடியாது. ஏதாவதொரு மாற்று வழியை நிச்சயம் தேடிக் கொள்வார்கள்.

அதிகம் பேர்களை அழைக்க வேண்டுமென்கிற விருப்பமிருந்தாலும் தொடரின் சம்பிரதாயம் கருதி இவர்களும் பதிலளிக்க வேண்டும் என்று நான் விழையும் நபர்கள்:

எஸ்.ராமகிருஷ்ணன்

சுதேசமித்திரன்

டிசே தமிழன்

சன்னாசி

பிரசன்னா

suresh kannan

10 comments:

Anonymous said...

Niraya Blogars eluthuraanga!

Intha pathinoru kelivikal paadai paduthuthu!

http://www.luckylookonline.com/2008/10/blog-post_10.html

Nandri

Anonymous said...

Thanks Suresh for the quick & neat update. - balaji

Vasanthan said...

//சினிமாவில் பாடல் என்கிற மகா அபத்தத்தை அன்புமணியோ, கவுண்டமணியோ யாராவது சட்டம் போட்டு தடை செய்தால் புண்ணியமாய்ப் போகும்.//

:-)
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Anonymous said...

சுரேஷ் கண்ணன், அழைப்புக்கு நன்றி - தற்போது எழுத சந்தர்ப்பம் இல்லை; பின்பொரு முறை சந்தர்ப்பம் வாய்த்தால் நிச்சயம் எழுத முயல்கிறேன்... சுவாரஸ்யமான தொடர்; பிறர் தொடர்ந்து எழுதுவார்களென நம்புகிறேன்.

-சன்னாசி.

Anonymous said...

நல்ல பதிவு. அவள் அப்படித்தான் திரைப்படத்தின் dvd எங்கு கிடைக்கும்? நிண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

திரைப்படங்களன்றி தமிழர்தம் வாழ்வு இல்லை. வாழ்க தமிழர்.

R. பெஞ்சமின் பொன்னையா said...

எனது பதிவுகளில் "உண்மையாலுமே உண்மை இதுதானா????" வை வாசித்துப்பாருங்கள்.

Anonymous said...

அன்பின் சுரேஷ் கண்ணன்,
அழைப்புக்கு நன்றி. நீங்கள் எழுதிய அளவிற்குச் சுவாரசியமாக எழுத எனக்கு அவ்வளவாக கடந்தகால நினைவுகள் இருக்கவில்லை என்பதே உண்மை. எனக்கான அனுபவங்களை எழுதுவதைவிட இவ்வாறான உங்களைப் போன்ற நண்பர்களின் இழைகளைப் பின் தொடர்ந்து வாசிப்பது எனக்குச் சுவாரசியமாயிருக்கிறது. அழைப்புக்கு மீண்டும் நன்றியும், தொடரமுடியாமைக்கு மன்னிப்பும்.

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

//பின்பொரு முறை சந்தர்ப்பம் வாய்த்தால் நிச்சயம் எழுத முயல்கிறேன்... //

சன்னாசி,

நிச்சயம் எழுதுங்கள். இதுவொரு விளையாட்டு என்று நினைத்தாலும் அதன் மூலம் உங்கள் சினிமா நினைவுகளை மீட்டெடுப்பது நல்ல அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.

டிசே,

பரவாயில்லை.

//நீங்கள் எழுதிய அளவிற்குச் சுவாரசியமாக எழுத//

இது நிச்சயம் கிண்டல்தானே? :-)

Anonymous said...

எழுதியாயிற்று - அழைப்புக்கு நன்றி!

-சன்னாசி