Monday, July 21, 2008

எழுத்தாளரின் மனைவி

லோக்சபா சேனலில், கோவிந்த நிஹ்லானியின் 'Party' (1984) என்கிற திரைப்படத்தை காண நேர்ந்தது.

Photobucket

இங்கே இயக்குநரைப் பற்றின சிறு அறிமுகம். கோவிந்த் நிஹ்லானி அடிப்படையில் ஒர் ஒளிப்பதிவுக்காரர். ஆரம்பக் காலங்களில் ஷியாம் பெனகல், க்ரீஷ் கர்னாட், ரிச்சர்ட் அட்டன்பரோ (காந்தி) போன்றோரோரின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். பின்னர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராகின பிறகு இவரின் முதல்படமான 'ஆக்ரோஷ்', சினிமா பார்வையாளர்களையிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு இந்தியத் திரைப்பட விழாவில் Golden Peacock விருதைப் பெற்றது.

கோவிந்த் நிஹ்லானி இயக்கத்தில் வெளிவந்த, 'அர்த் சத்யா' என்கிற திரைப்படம் பாலுமகேந்திராவால் 'மறுபடியும்' என்றும் 'துரோக்கால்' என்கிற திரைப்படம், கமலால் 'குருதிப்புனல்' என்றும் தமிழில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தன.

Photobucket

இனி Party திரைப்படத்திற்கு வருவோம். இது இந்தியத் திரைப்படங்களின் வழக்கமான கதை சொல்லும் முறையிலிருந்து பெரிதும் விலகி நிற்கிறது. பாத்திரங்களின் உரையாடல்கள், முகபாவங்கள், அதன் மூலம் வெளிப்படும் அவர்களின் அகச்சிக்கல்கள் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுவதின் முலாமாக கதை நகர்த்தப்பட்டு ஒரு திருப்பமான புள்ளியில் நிறைகிறது. எந்தவொரு கறுப்பு மற்றும் வெள்ளையாக இல்லாமல் அவரவர்களின் நியாயங்களோடும் பார்வையோடும் வெளிப்பட்டிருக்கிறது.

திவாகர் பார்வே (மனோகர் சிங்) என்கிற எழுத்தாளருக்கு தேசிய விருது வழங்கப்படுவதையொட்டி அவரது ஆதரவாளரான மேல்தட்டு வர்க்க தமயந்தி (விஜயா மேத்தா) என்பவர் ஒரு 'பார்ட்டி' தருகிறார். நகரின் முக்கிய கலைஞர்கள் அதில் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து கொள்கிறவர்களின் அறிமுகம் பார்ட்டிக்கு முன்பாக சிறுசிறு காட்சிகளின் மூலம் பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு தனது நாடக நடிப்பை கைவிட்டு விட்ட ஆதங்கத்தோடும் கணவனின் அரவணைப்பின்றியும் இருக்கும் எழுத்தாளரின் மனைவியான மோகினிக்கு (ரோஹிணி அட்டங்காடி) இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள விருப்பமில்லை. கணவரின் கட்டாயத்தினால் கலந்து கொள்கிறார். நியூஸ் ஏஜென்சியில் பணிபுரியும் ஒரு பேரிளம்பெண் தனது இளவயது ஆண் நண்பனுடனும் பார்ட்டியில் கலந்து கொள்கிறார். ("அங்கிருக்கும் பெண்களை பார்த்து வழியாதே"). அங்கீகாரத்திற்கு ஏங்கும் ஒரு நடுத்தர வர்க்க கவிஞன், கம்யூனிஸம் பேசும், திருமணத்திற்கு ஏங்கும் ஒர் இளம் பெண், நாடக நடிகன் என்று பலதரப்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

()

எழுத்தாளரின் மனைவி மீது நடிகனுக்கு உள்ள காதல், பேரிளம் பெண்ணுடன் வந்த இளைஞனுக்கும் பார்ட்டிக்கு வரும் ஒரு திருமணமான பெண்ணுக்கும் ஏற்படும் காமம், அங்கீகாரத்திற்கு ஏங்கும் கவிஞனின் தாழ்வு மனப்பான்மை, அதைப் பயன்படுத்திக் கொள்ள முயலும் கம்யூனிஸப் பெண், பார்ட்டியை host செய்யும் தமயந்தியின் குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகள், திருமணமான பெண்ணை தொந்தரவு செய்யும் நாடக ஆசிரியன், தன்னுடைய கொண்டாடங்களை நிகழ்த்த இந்த விருந்தை பயன்படுத்திக் கொள்ளும் இளம் தலைமுறையினர் என்று அவர்களின் பாசாங்குகள் மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன. இவற்றோடு ஒட்டாத டாக்டராக அம்ரிஷ்புரி.

இவர்களின் உரையாடல்களின் ஊடே அம்ரித் என்பவனைப் பற்றின ஆளுமை வெளிப்படுகிறது. அவன் சிறந்த கவிஞனாக இருக்கிறான். பழங்குடியினரின் நிலமீட்பு போராட்டத்திற்கான களப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். நீண்டநாட்களாக அவனைப் பற்றின தகவல்கள் இல்லை. அவன் இந்த பார்ட்டிக்கு வருவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலோனோர் அவனைப் பற்றி விசாரிக்கின்றனர்.

இந்தப் பார்ட்டியில் பிரதானமாக வெளிப்படுவது எழுத்தாளருக்கும் அவனது மனைவிக்கும் உள்ள இடைவெளி. திருமணத்திற்கு பிறகு கணவருக்காக நாடக நடிப்பினை கைவிட்டு விடும் மோகினி, தன்னுடைய கலையாற்றளுக்கான வெளிப்பாடு நிகழ்த்தப்படாத மன உளைச்சலிலும் கணவரின் தேவையில்லாத அலட்டல்களினாலும், அரவணைப்பின்மையாலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். பா¡ட்டிக்கு வரும் மோகினியிடம் தமயந்தி 'இன்று நீ மிக அழகாக இருக்கிறாய்" என்னும் போது "அதுவா! நான் குடித்திருக்கிறேன்" என்று அதிரடியாக கூறுமளவிற்கு அவள் மனநிலை அமைந்துள்ளது. பார்ட்டியில் அதிகமாக குடித்துவிட்டு கீழே விழுந்து scene செய்வதிலும் தன்னுடைய அக மற்றும் புற பிரச்சினையை மோனாவிடம் புலம்பி கிளம்பும் போது "என்னுடைய தலைமுடி சரியாக இருக்கிறதல்லவா?" என்று இளம் பெண்களின் மீதான பொறாமையுடன் மிகையான ஒப்பனையுடன் வெளிவரும் தன்னுடைய பாத்திரத்தை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரோஹிணி அட்டங்காடி. Best Supporting actress-க்கான தேசிய விருது இந்தப்படத்தில் இவருக்கு கிடைத்தது.

தன்னுடைய எழுத்தினால் கிடைத்த விருதினால் கர்வம் கொண்டிருக்கிற எழுத்தாளர் போதை ஏறிய ஒரு கணத்தில் இயல்பாக வெளிப்படுகிறார். "ரயிலில் சென்று கொண்டிருக்கிறேன். பலத்த மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஒரு வயதான பழங்குடி மனிதன் மழையில் நனைந்து கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் எழுதும் எந்த இலக்கியமும், கலையும் அவனைச் சென்று சேர்வதில்லை. அப்போது நான் யாருக்காக எழுதுகிறேன்."

()

அம்ரித்தின் நண்பனான ஓம்புரி கையில் கட்டோடு பார்ட்டிக்கு வருகிறார், அம்ரித் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியோடு. அம்ருத்தைப் பற்றி துவங்குகிற உரையாடல் கலை x இலக்கியம் என்கிறதாக பயணிக்கிறது. "கலை என்பது வலிமையான ஆயதத்தை அரசியல் பிரச்சினைகளுக்காக பயன்படுத்துவதின் மூலமே ஒரு படைப்பாளி முழுமையாக தன்னுடைய கடமையை ஆற்றுகிறான்" என்கிறார் ஓம்புரி. "அப்போது கலை, கலைக்காகவென்று இயங்கக்கூடிய சுதந்திரம் இருக்கக்கூடாதா" என்று கேட்கிறார் இளம் கவிஞர். " அரசியலில் ஈடுபடாத கலையினால் எந்த பயனுமில்லை என்கிறார் டாக்டர்.

அப்போது ஒம்புரிக்கு தொலைபேசியின் வழியாக ஒரு செய்தி கிடைக்கிறது. ...

()

இந்தப்படத்தில் நான் பெரிதும் வியந்த அம்சம், படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே தொடங்கி விடுகிற பார்ட்டிதான் படத்தின் பிரதான களம். படம் முழுவதும் பார்ட்டி மனிதர்களைச் சுற்றியே இயங்குகிறது. கையில் மதுக்கோப்பையோடு மனிதர்கள் உரையாடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் படத்தின் எந்த இடத்திலும் தொய்வோ, ஜெர்க்கோ இல்லை. இரண்டு மணி நேரத்தில் கதை சொல்லப் போகிற ஒரு திரைப்பட இயக்குநருக்கு இது பெரிய சவால்தான். ஆனால் கோவிந்த் நிஹ்லானி தன்னுடைய இறுக்கமான திரைக்கதையின் மூலமும் சுவாரசியமான பாத்திரத் சித்தரிப்புகள், உரையாடல்களின் மூலமும் இந்த சவாலை மிக திறமையாக தாண்டி வருகிறார்.

படத்தின் நிறைவுக் காட்சியில் சில கணங்களில் மாத்திரம் நஸ்ருதீன் ஷா வருகிறார். தமயந்தியாக நடிக்கும் விஜயா மேத்தாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பார்ட்டி ஆரம்பிப்பதற்கு முன் அவர் காட்டுகிற பதட்டமும், மோனா தன்னை parasite என்று விமர்சிப்பதில் ஏற்படும் தடுமாற்றத்தையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

மாற்று சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத படம்.

suresh kannan

7 comments:

Anonymous said...

Hi

Arth Satya is not MARUBADIUM, it is Arth directed by Mahesh Bhatt based on his true life story (his relationship of Parveen Babi)

Anyway it is a good post. By the way where did you get CD or download for this movie ?

Regards,

Sudharsan

பிச்சைப்பாத்திரம் said...

//Arth Satya is not MARUBADIUM,//

நீங்கள் சொன்னது சரிதான். சற்று குழம்பி விட்டேன்.

//where did you get CD //

லோக்சபா சேனலில் பார்த்தாக ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொரு சனி இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரம்) NFDC WEEKEND CLASSIC என்று ஒளிபரப்புகிறார்கள்.

Anonymous said...

லோக்சபா சானலில் ஆபாச படம் காட்டுகிறார்கள் என்று பெரிதாகச் சொல்லப்பட்டதே. இதுதானா அது? :-)

writer S.Ramakrishnan said...

அன்பிற்குரிய சுரேஷ் கண்ணன்

கோவிந்த் நிகாலனியின் அர்த் சத்யா தமிழில் கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற பெயரில் சத்யராஜ் நடித்து கமல் தயாரிப்பில் வெளியானது. கோவிந்த் நிகாலனிக்கு சிறந்த பெயர் பெற்று தந்தது தமஸ் என்ற தொலைக்காட்சி தொடர். இந்தியப் பிரிவினையை முன்வைத்து நடக்கும் கதை. சிறப்பாக படமாக்கியிருப்பார்.

பார்ட்டி படத்தின் ஸ்கிரிப்ட் மகேஷ் எல்கஞ்வர் என்ற மராத்திய நாடக ஆசிரியருடையது. மகேஷ் எல்கஞ்வர் மராத்தியின் முக்கிய நாடகாசிரியர். இவரது நாடகமான பிரதிபிம்பம் என்பதை நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். மதுரையில் அது நாடகமாக நிகழ்த்தபட்டது.

கோவிந்தநிகாலனி தனது படங்களுக்கு சிறந்த நாடகாசிரியர்கள், எழுத்தாளர்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடியவர். குறிப்பாக இவரது அர்த் சத்யா மற்றும் ஆக்ரோஷ் இரண்டும் விஜய் டெண்டுல்கர் என்ற நாடக ஆசிரியருடையது. பார்ட்டி மகேஷ் எல்கஞ்வர். தேகம் மஞ்சுளா பத்மநாபனின் நாடகம், ஜசாரா இப்சனின் நாடகம், பிதா ஸ்டென்பெர்கின் எழுத்து. தமஸ் பிஷம் சகானியின் நாவல், இது போலவே மகேஸ்வதா தேவியின் நாவல் haazar chaurasi ki maa .

இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். உற்சாகமான மனிதர்.

மிக்க அன்புடன்
எஸ்.ராமகிருஷ்ணன்.

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள எஸ்.ரா,

தகவல் மழை பொழிந்திருக்கிறீர்்கள். மிக்க நன்றி.

//ஸ்கிரிப்ட் மகேஷ் எல்கஞ்வர் என்ற மராத்திய நாடக ஆசிரியருடையது.//

இதைப் பற்றி குறிப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். விடுபட்டுப் போய் விட்டது.

வருகைக்கு மீண்டும் நன்றி.

Anonymous said...

இவருடைய ”ருக்மாவதி கி ஹவேலி” திரைப்படம் ஸ்பானிஷ் கவிஞரும் நாடகாசிரியருமான Federico Garcia Lorca-வின் புகழ்பெற்ற நாடகமான “The House of Bernarda Alba"-வைத் தழுவியது.

மயிலாடுதுறை சிவா said...

நிச்சயம் பார்க்கிறேன் சுரேஷ் கண்ணன்

மயிலாடுதுறை சிவா