"'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் 'மூலப் படம்' இதுதான். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்" என்று நண்பர் dvd ஒன்றை தந்தார். - Memories of Murder (2003) என்பது அந்த தென்கொரிய படத்தின் title. பூசணிக்காய் முகமும் இடுங்கிய கண்களுமாய், பிரதான வேடத்தில் நடிப்பவன் போல் தோன்றியவனின் முகத்தை குறுந்தகட்டின் மேலட்டையில் பார்த்த கணத்திலேயே எனக்குப் பிடிக்காமல் போனது. மிகவும் அசுவாரசியத்துடன், தூக்கம் வரும்வரை சிறிது நேரம் பார்ப்போம் என்றுதான் பிளேயரை இயக்கினேன். ஆனால்.... படம் முடியும் வரை என்னால் படத்தை நிறுத்த முடியவில்லை.
சுஜாதாவின் நாவல்களில் எனக்குப் பிடித்தவற்றில், 'எதையும் ஒரு முறை' என்ற நாவலும் ஒன்று. வழக்கமான துப்பறியும் நாவல்களின் முடிவுகளிலிருந்து அந்த நாவல் விலகி நிற்கும். கொலையாளி யாரென்று நன்றாகத் தெரிந்தும் அவனை சட்டத்திற்கு முன்னால் நிறுத்த இயலாமல் நடைமுறை யதார்த்தமாக நிறைகிற நாவல் அது. பணக்கார சைக்கோ ஒருவன் உலகிலுள்ள 'எதையும் ஒரு முறை' முயன்று பார்ப்பவன். அவ்வாறு அவன் முயன்று பார்க்க விரும்பும் பட்டியலில் 'கொலையும்' உண்டு. ஏழ்மையான செக்ஸ் தொழிலாளி ஒருத்தியை வரவழைத்து கொன்று விடுவான். கணேஷ¥ம் வசந்த்தும் அவன்தான் கொலையாளி என்பதை தங்களுடைய பிரத்யேக உத்திகளின் மூலம் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அந்த சைக்கோ தன்னுடைய பணபலத்தின் மூலம் அனைத்து சாட்சியங்களையும் கலைத்து விடுவான். எனவே சட்டரீதியாக தண்டிக்க முடியாத நிலையிலேயே அந்த நாவல் முடியும்.
'எதையும் ஒரு முறை' முயலும் அவன் 'அதையும்' ஒரு முறை முயல்வான்" என்பான் கணேஷ். 'என்ன பாஸ்' என்ற வசந்தின் கேள்விக்கு "தற்கொலையை" என்று பதில் வரும்.
இந்தப்படமும் ஏறக்குறைய இதே போக்கில்தான் செல்கிறது என்றாலும் முடிவு எதிர்பாராதவிதமாக இருக்கிறது. தென் கொரியாவில் 1986 - 1991- கால கட்டத்தில் நிகழ்ந்த தொடர்கொலைகளின் அடிப்படையில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இரவில் தனியாகச் செல்லும் பெண்கள் கற்பழிக்கப்பட்டு அவர்களின் உள்ளாடைகளினாலேயே முகம் மூடப்பட்டும் கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்படும் தொடர் சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்தப் பகுதியில் இது மாதிரியான கொலைச் சம்பவங்கள் புதிதானது என்பதால் மக்களின் இடையே இது பீதியை உண்டாக்குகிறது. உள்ளுர் துப்பறிவாளனான Park Doo-man எப்படியாவது கொலையாளியை கண்டுபிடிப்பதில் துடிப்பாக இருக்கிறான். ஆனால் அவனின் அதிரடியான அணுகுமுறையால் இதை சாதிக்க முடியவில்லை. மன முதிர்ச்சிற்ற ஒரு இளைஞனை நையப்புடைத்து கொலைகளை ஒப்புக் கொள்ளச் சொல்கிறான். ஆனால் சந்தர்ப்ப, சூழ்நிலைகள் பொருந்தாமல் போவதால் அவன் வேறு வழியின்றி விடுவிக்கப்படுகிறான்.
இதனிடையே சியோலில் இருந்து சுயவிருப்பமாக Seo Tae-yoon என்பவன் இதை துப்பறிவதற்காக வருகிறான். இவன் Park Doo-man-ஐ போலன்றி தர்க்க ரீதியாக சிந்தித்து கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறான். இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு அவர்களின் உயரதிகாரியால் கண்டிக்கப்படுகிறார்கள். நடுஇரவில் பெண்களின் உள்ளாடைகளின் மேல் சுயஇன்பம் செய்பவன் ஒருவனை கண்டுபிடித்து அடித்து விசாரிக்கிறார்கள். நோயாளி மனைவியால் இல்லற சுகம் காண முடியாத அவன் pervert-ஆக மாறியிருப்பதும் அவனுக்கும் கொலைகளுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது. இதனிடையே பெண்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. துப்பறிவாளர்கள் அப்பாவிகளை துன்புறுத்துவதாக செய்தித்தாள்களின் வழி வெளிப்படும் செய்திகளால் பொதுமக்களுக்கு இவர்களின் மீது அதிருப்தி ஏற்படுகிறது. கொலைக்களத்தில் எந்தவித துப்பும் போதுமான தடயங்களும் கிடைக்காமல் துப்பறிவாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதனிடையே மழை பெய்கின்ற நாளில்தான் கொலைகள் நடைபெறுகின்றன என்பதையும் அந்த குறிப்பிட்ட நாளில் வானொலியில் குறிப்பிட்ட ஒரு பாடல் நேயர் விருப்பமாக ஒலிபரப்பப்படுவதையும் கண்டுபிடிக்கின்றனர். வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவனை விசாரிக்கின்றனர். ஆனால் அவனோ கல்லுளி மங்கனாக 'நான் அவனில்லை' என்று சாதிக்கிறான். துப்பறிவாளர்களுக்கு இவன்தான் என்ற சந்தேகம் வலுக்கிறது. பிறகு நடக்கின்ற கொலைச் சம்பவமொன்றில் பெண்ணின் உள்ளாடையில் படிந்திருக்கும் விந்தணுக்களோடு இவனின் விந்தணுக்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்கின்றனர். அந்த வசதி அந்தப்பகுதியில் இல்லாததால் அமெரிக்காவிற்கு அனுப்பி அதுவரை காத்திருக்க முடிவு செய்கின்றனர். தகுந்த சாட்சியம் இல்லாததால் அவனை அனுப்பிவிட்டு தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
மனமுதிர்ச்சியற்ற இளைஞன் கொலையாளியை நேரில் பார்த்திருக்கிறான் என்பதை அறிந்து அவனை விசாரிப்பதற்குள் ரயில் மோதி இறந்து போகிறான். இதனிடையே Seo Tae-yoon ஒரு சூழ்நிலையில் முதலுதவி செய்திருக்கும் ஒரு பள்ளிச்சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டவுடன் மிகுந்த ஆவேசம் கொள்கிறான். தொழிற்சாலை பணியாளனை தேடிப்பிடித்து கடுமையாக அடிக்கிறான். அப்போது சக துப்பறிவாளனான Park Doo-man அமெரிக்காவில் வந்திருக்கும் ரிப்போர்ட்டை காண்பிக்கிறான். அந்த ரிப்போர்ட்டின் படி தொழிற்சாலை பணியாளன் குற்றமற்றவன் என்பதாக தெரிகிறது. ஆவேசம் அடங்காத Seo Tae-yoon 'ரிப்போர்ட்டையெல்லாம் நம்ப மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கியால் சுடுகிறான். என்றாலும் தொழிற்சாலை பணியாளன் ஒருவழியாக தப்பிப் போகிறான்.
()
படம் உடனே சுமார் 13 வருடங்கள் தாவி 2003-ன் நிகழ்வுகள் காண்பிக்கப்படுகின்றன. Park Doo-man துப்பறியும் தொழிலில் இருந்து விலகி மா¡க்கெட்டிங் தொழில் செய்கிறான். ஒரு பயணத்தின் போது முதன் முதல் கொலை நடந்த இடத்திற்கு அவன் செல்ல நேர்கிறது. பிணமிருந்த இடத்தை பார்க்கப் போகிறான்.
பிறகு என்ன நடக்கிறது..... என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். :-)
எந்தவிதமான உயர்நிலை தொழில்நுட்ப சங்கதிகளும் பயன்படுத்தப்படாமலேயே இந்தத் திரைப்படம் பிரமாதான திரைக்கதையின் மூலம் பார்வையாளனுக்கு ஒரு திகிலான காண்பனுபவத்தை வழங்குகிறது. பெண்ணை பாய்ந்து பிடிக்கும் கொலையாளியின் முகம் சில மைக்ரோ செகண்டுகளே தெரிகிறது. Park Doo-man ஆக நடித்திருத்திருப்பவர் பிரமாதமாக நடித்திருக்கிறார். போலி தடயங்களை ஏற்படுத்தி குற்றவாளியை ஒப்புக்கொள்ள வைக்கும் ஆரம்ப நிலையிலும், புதிதாக வரும் Seo Tae-yoon மீது எரிச்சல் அடைவதிலும் தன் மனைவியிடம் புலம்புவதிலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் ஏற்படும் மன உளைச்சலையும், பின்பு Seo Tae-yoon-ன் நேர்த்தியான அணுகுமுறைகளை ஒப்புக் கொள்வதிலும் என பிரமாதப்படுத்துகிறார். இடுங்கிய கண்களை வைத்தே காட்சிகளின் உணர்வுகளுக்கேற்ப மிகத் திறமையாக இவர் நடித்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. Seo Tae-yoon-ஆக நடித்திருப்பவரும் நன்றாக செய்திருக்கிறார். பின்னணி இசை மிக நேர்த்தியாகவும் தேவையான காட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்துவதிலும் என பிரமாதமாக பதிவாகியிருக்கிறது.
Bong Joon-ho என்பவர் இயக்கிய இத்திரைப்படம் cannes film festival, tokyo film festival போன்ற பல விழாக்களில் திரையிடப்படும், விருதுகள் பெற்றதோடு அல்லாமல் கொரியாவில் "பார்வையாளர்களால் அதிகமுறை விரும்பிப் பார்க்கப்பட்ட படம்" என்கிற சிறப்பையும் பெற்றிருக்கிறது.
தொடர் கொலைகளும் துப்பறிபவர்களை முயற்சிகளை நெருக்கமாக அணுகுவது என்கிற ரீதியில்தான் "வேட்டையாடு விளையாடு" திரைப்படத்திற்கும் இதற்கும் ஒற்றுமைகள் இருக்கின்றனவே தவிர, தமிழ்ப்படங்களில் உள்ள கொடுமைகள் இதில் இல்லை.
suresh kannan
4 comments:
பட அறிமுகத்திற்கு நன்றி. உங்கள் பதிவு படத்தைப் பார்க்க தூண்டுகிறது.
சிறப்பாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் சுரேஷ் கண்ணன்.
பார்க்க முயற்சிக்கிறேன்.
நன்றி.
சுரேஷ்,
இம்முறையும் எனக்கு மிகவும் பிடித்த "எதையும் ஒரு முறை" நாவல் உங்களின் பிடித்த வரிசையில் உள்ளது..சுஜாதா வின் கணேஷ்-வசந்த் நாவல்களில் சிறந்தது எது என என்னை கேட்டால் யோசிக்காமல் "எதையும் ஒரு முறை" என்பேன்..யாரும் கண்டு கொள்ளாத ஒரு அநாதை வேசியின் மரணத்தை துப்பு துலக்கும் கணேஷ் - வசந்த் இறுதியில் குற்றவாளியை அறிந்தும் தண்டனை வாங்கிதர இயலாது திரும்புவதும்,மேலும் கதையின் முடிவை வாசகனோடு விட்டு செல்வது என சுஜாதா புதிய யுக்தியை பயன்படுத்தி இருப்பார்..
அந்த நாவலோடு முடிவில் ஒத்திருக்கும் இத்திரைப்படம் குறித்த உங்கள் விமர்சனம் நன்று..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..
பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/
மீதி வெள்ளித் திரையில் என்பது போல்
சொல்லி நல்ல படத்திற்கு(வேட்டையாடு விளையாடு-மூலம்) ஆர்வத்தை தூண்டும் அறிமுகம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Post a Comment