Thursday, June 26, 2008

கன்னிமையை இழக்காத நூலகம்

நீண்ட நாட்களாக கன்னிமரா நூலகத்திற்கு செல்ல திட்டமிருந்தது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று அலுவலகப்பணிக்காக அந்தப்பக்கம் செல்ல வேண்டியிருந்ததால் திருப்பியளிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். நூலகம் அமைந்திருக்கிற பகுதியிலேயே மியூசியம் அமைந்திருந்ததாலும் இதுவரை அங்கே போனதில்லை. மியூசியம் தியேட்டரில் அபூர்வமாக நடக்கும் நவீன நாடகங்களுக்கு லிப்ஸ்டிக் பூசிய நங்கைகள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் வந்திறங்குவதை காணுவதுண்டு. என் மனைவி, மனைவியாக ஆவதற்கு முன்னால் இந்த வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது 'நேரமாகிவிட்டது' என்று காவலாளியால் துரத்தப்படுவோம். முன்பு அலங்கோலமாக இருந்த அந்தப்பகுதி இப்போது நன்றாக மரங்களும் செடிகளும் அழகாக அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டிருக்கிறது. நிரந்தர புத்தக கண்காட்சி நிலையமும் இங்கே இருக்கிறது. 10 சதவீத தள்ளுபடியில் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

நூலகத்தில் நிறைய மாற்றங்கள். ஆங்கில புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை, சீரமைக்கப்பட்டு குறிப்புகள் எடுப்பவர்களுக்கு வசதியாக நிறைய இருக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இண்டர்நெட் வசதியும் சமீபத்தில் செய்யப்பட்டிருக்கிறது. நூலக அடையாள அட்டைகளும் புத்தகங்களும் கணினிமயமாக்கப்பட்டு ஸ்கேனரின் ரத்தப்புள்ளியில் அடையாளம் காணப்படுகின்றன. முன்பெல்லாம் தடிமனான ஆங்கில புத்தகங்களை பந்தாவாக எடுத்துக் கொண்டு படிக்காமலேயே திருப்பியளிப்பேன். இப்போது அந்த பழக்கத்தை விட்டொழித்து விட்டேன். படிக்க இயலும் என்றால்தான் எடுப்பது. அப்படியும் குந்தர் கிராஸின் புதினமொன்றை படிக்க இயலாமலேயே திருப்பியளித்தேன்.

தமிழ் புத்தக அரங்கு இரண்டாம் மாடியில் இருக்கிறது. மர நாற்காலிகளில் அமர்ந்து ஜொள் வடிய மேஜை மீது தூங்கிக் கொண்டிருப்பவர்களை காண முடியவில்லை. இருக்கைகள் குஷன் வசதி செய்யப்பட்டு ஜோராக இருக்கின்றன. இங்கே பெரும்பாலும் அந்தந்த புத்தகங்களை அந்தந்த அடுக்குகளில் காணலாம். புத்தகங்கள் இடம் மாறி கிடப்பதின் சதவீதம் குறைவுதான். ரமணி சந்திரனின் நாவல் 'இலக்கிய திறனாய்வு' பிரிவில் இருப்பதும், 'மூப்பது நாளில் தையற்கலை' புத்தகம் உளவியல் பிரிவில் இருப்பதும் அபூர்வமானவைதான். ஊழியர்கள் அவ்வப்போது புத்தகங்களை தரம் பிரித்து அந்தந்த அடுக்குகளில் பொருத்தி வைத்துவிடுகிறார்கள்.

()

கிட்டத்தட்ட இரண்டு புத்தகங்களை வாங்கும் அளவிற்கான பணத்தை தாமத கட்டணத்திற்கு அழுது கொண்டே அளித்தேன். தமிழ் புத்தக அடுக்ககத்திற்கு வந்தேன். முன்பெல்லாம் பெரும்பாலும் புதினங்கள் தான் படிப்பேன். 20% fiction, 80% non-fiction என்று சுஜாதா வழிகாட்டியதைக் கூட சட்டை செய்யவில்லை. ஆனால் இப்போது பெரும்பாலும் அ-புதினங்கள்தான் படிப்பது. குறிப்பாக கட்டுரை நூல்களை. கவிதைப் புத்தகங்கள் இருக்கும் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன். பெரும்பாலும் புதிதாக இருக்கும் புத்தகங்களைத்தான் தேர்ந்தெடுப்பது.

புதினங்கள் பகுதியில் முதல் புத்தகமே - நல்ல சகுனமோ அல்லது கெட்ட சகுனமோ- 'இருள்வ மெளத்திகம்' கண்ணில்பட்டது. கொஞ்சம் படித்துப் பார்த்ததில் கண்ணை இருட்டிக் கொண்டு வந்ததில் அப்படியே வைத்துவிட்டேன். வெளியே நண்பர் காத்திருந்த காரணத்தினால் கிடைத்த சொற்ப நேரத்தில் எடுத்த புத்தகங்களின் தலைப்புகள் கீழே. இன்று எல்லாமே விருப்பமான புத்தகங்களாக கிடைத்து விட்டன.

Photobucket

1) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன் - நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த நாவல்.
2) க.நா.சு. மொழிபெயர்ப்புக் கதைகள் - ஜார்ஜ் ஆர்வெல் உட்பட இன்னபிற ஆங்கில புதினங்களை க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். எடை சுமார் 2 கிலோ இருக்கும்.
3) மரக்கால் - சோலைசுந்தரபெருமாள்.
4) நவீனன் டைரி - நகுலன் - மீள்வாசிப்பிற்கு
5) மரம் (நாவல்) -ஜீ.முருகன் - பிடித்த எழுத்தாளர் என்பதால்
6) லண்டனில் சிலுவைராஜ் - ராஜ்கெளதமன். - சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகிய புத்தகங்களை ஏற்கெனவே படித்திருப்பதால் ஏற்பட்ட ஆவலில் தேர்ந்தெடுத்தது.

()

எழும்பூர் பக்கம் வரநேர்ந்தால் நீங்களும் ஒரு முறை சென்று பாருங்கள்.

suresh kannan

3 comments:

மயிலாடுதுறை சிவா said...

இந்த பதிவை படிக்கும் பொழுது நிச்சயம் போக வேண்டும் என மனம் ஆசைப் படுகிறது! நிச்சயம் முயற்சிக்கிறேன்! நாவல்களை படித்துவிட்டு அவசியம் உங்கள் விமர்சனங்களை பதிய வையுங்கள்!
பதிவிற்கு நன்றி!

மயிலாடுதுறை சிவா...

சென்ஷி said...

நீண்ட பெருமூச்சுதான் விட முடிகிறது. தினமும் காலையில் நுங்கம்பாக்கத்தில் (ஜெமினி அருகே) 2 மணிக்கு கால் செண்டர் பணி முடிந்ததும் கீழே உள்ள கையேந்தி பவனில் எதையாவது கொறித்து விட்டு ஒரு சிகரெட்டுடன் நடந்தே கன்னிமாரா வரை சென்று மூன்று மணி நேரங்கள் வரை கழித்து வருவேன்.

எதை படிக்கவேண்டும் என்ற எந்த உந்துதலுமில்லாமல் பெரிய எழுத்து விக்கிரமாத்தித்தன் கதையிலிருந்து இலக்கிய தொகுப்பு கட்டுரை வரை அனைத்தையும் படித்து பார்த்து வந்திருக்கிறேன். எனது முதல் தேடுதல் சுஜாதாவாகத்தான் அங்கு இருந்தது. படிக்காத புத்தகம் ஏதும் கிடைத்தால் அதை படிக்க ஆரம்பித்து விடுவேன்.

ம்ஹ்ம். நிறைய்ய மிஸ் பண்ணிட்டேன் :(

லேகா said...

கன்னிமாரா நூலகத்திற்கு சென்று சில புத்தகங்களை படித்திருக்கின்றேன்....மேலும் அதன் அருகே அமைந்த புத்தக விற்பனை நிலையத்தில் இலக்கிய நூல்கள் (தி.ஜா,ஜெ.கே..) குறைந்த விலைக்கு கிடைக்கின்றது..நூலகங்கள் என்றுமே படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி தருபவை...புத்தக மணம் போல நூலக அனுபவமும் தேடலுடன் கூடிய அழகிய அனுபவம்.

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/