டைம்ஸின் வடிவமைப்பும் ஏறக்குறைய இந்தியாடுடே பதிப்புகளை ஒத்திருக்கிறது. விலைதான் சற்று அதிகம். ரூ.100/-. (பக்கத்திற்கு பக்கம் காணப்படுகிற வண்ணவிளம்பரங்களின் மூலம் ஈட்டியிருக்கும் வருவாயின் மூலம் இதழின் விலையை சற்று குறைத்திருக்கலாம் என்று எனக்குப் படுகிறது) ஆனால் இந்தியாடுடேவின் விலை ஏறக்குறைய ரூ.25/-ல் இருந்தது.

'என் எழுத்து வாழ்க்கையில் இதையும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறேன்' என்கிற தொகுப்பாளர் சுஜாதாவின் முன்னுரை (தொகுப்பில் உதவி: மனுஷ்யபுத்திரன்) 'தமிழுக்கு 2008 ஒரு நல்ல காலம்' என்று ஆருடம் கூறுகிறது.
சிறுகதைகளின் வரிசையில் சுஜாதா, நாஞ்சில் நாடன், உமா மகேஸ்வரி, எஸ்.ராமகிருஷ்ணன், தேசிகன் (அட!), சுரேஷ் குமார இந்திரஜித், வண்ணதாசன், பிரபஞ்சன், அசோகமித்திரன், இமையம், இந்திரா பார்த்தசாரதி, மனோஜ், ஆர்.உண்ணி (மலையாளம்; தமிழில்: சுகுமாரன்), யுவன் சந்திசேகர் ஆகியோர் பங்கேற்று இருக்கின்றனர்.
கட்டுரைகளின் வரிசையில் பாலுமகேந்திரா, வாஸந்தி, அ.முத்துலிங்கம், ஷாஜி, ஜெயமோகன், செழியன், கே.எஸ்.குமார், சாருநிவேதிதா, குமார் ராம நாதன், டிராட்ஸ்கி மருது, சுகுமாரன், எஸ்.கே.குமார் ஆகியோர்....
ஞானக்கூத்தன், வைரமுத்து, (கவிப்பேரரசு என்று குறிப்பிடாவிட்டால் தப்பாகிவிடுமோ?), .நா.முத்துக்குமார், கலாப்ரியா, அழகுநிலா, சுகுமாரன், மு.சுயம்புலிங்கம், எம்.யுவன், மனுஷ்யபுத்திரன், கனிமொழி, ரஞ்சனி, தேவதேவன், சங்கர ராமசுப்பிரமணியன், தமிழச்சி, செல்வி, வா.மணிகண்டன் ஆகியோரின் கவிதைகள்.
()
வெகுஜன பத்திரிகைகள் ஏற்படுத்தி வைத்திருந்த மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்துடன் பல இலக்கிய கோட்பாடுகளை/சர்வதேச எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி கனமான உள்ளடக்கங்களோடும் பல பேரின் தியாகங்களோடும் வெளியான பல சிற்றிதழ்கள் பெரும்பாலும் நின்று போய் அவற்றின் இடத்தை இடைநிலை இதழ்கள் பிடித்துக் கொண்டன. இவ்வாறான சிற்றிதழ்கள்/இடைநிலை இதழ்கள் ஆகியவற்றில் பங்கேற்கும் படைப்பாளர்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் போது சில பெயர்களே திரும்பத்திரும்ப தோன்றிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். ஒரு புது இதழை வாங்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு சில பிரபல பெயர்களை யூகித்தால் கட்டாயம் அவைகளில் பல இடம் பெற்றிருக்கும். இந்த பத்திருபது பேர்களை விட்டால் நவீன இலக்கியப் பரப்பில் யாருக்குமே இடமில்லையோ என்கிற பிரமையை இந்த இதழ்கள் எனக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. அல்லது இதழாசிரியர்கள் வியாபார நோக்கத்துடன் பிரபல இலக்கியவாதிகளையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. புதுரத்தம் பாய வேண்டிய தருணமிது என்பது மட்டும் தெளிவாகிறது.
ஆறுதலாக இந்தச் சிறப்பிதழில் சில புதுக்குரல்களை கேட்க முடிகிறது.
()
வாங்கின குளிர்ச்சியோடு சில படைப்புகளை உடனே படித்துப் பார்த்தேன். அவற்றைப் பற்றி:
'ஒரு என்.ஆர்.ஐ. திருமண ஏற்பாடு' என்கிற சுஜாதாவின் சிறுகதையோடு இதழ் துவங்குகிறது. சுஜாதாவின் சம்பிதாயமான, இறுதியில் வாசகனுக்கு செயற்கையான அதிர்ச்சியை ஏற்படுத்துவதான பாவனையில் எழுதப்பட்ட வழக்கமான சிறுகதை. நகரம், ·பிலிமோத்ஸவ்.... என்று பல ஆச்சரியங்களை நிகழ்த்தின சுஜாதாவின் சமீப கால படைப்புகள் ஏன் இப்படி நீர்த்துப் போயிருக்கின்றன என்று தெரியவில்லை.
My dear Sujatha, சிறிது காலத்திற்கு நீங்கள் சிறுகதை எழுதுவதை நிறுத்தி வைக்கலாம்.
'சுஜாதா' கேட்டுவிட்டாரே, சரி எழுதிக் கொடுத்துவிடுவோம் என்கிற பாலுமகேந்திராவின் சிறிய கட்டுரை.
சிறுகதை+கட்டுரை ஆகிய இரண்டு வடிவங்களையும் இணைத்தாற் போல் எழுதப்பட்ட நாஞ்சில் நாடனின் அற்புதமான சிறுகதை (கோம்பை). கதையின் சில வரிகளை உருவி விட்டால் நாஞ்சில் நாட்டு வழக்குடன் மீன்களைப் பற்றியும், மீன் விற்பவர்களைப் பற்றியுமான ஒரு ஆய்வுக்கட்டுரை போலிருக்கிறது. சிறுகதை என்கிற வடிவிலும் மிக அழகாகப் பொருந்தியிருக்கிறது.
'கவிதை எழுதுவதற்கு லைசன்ஸ்' என்கிற அ.முத்துலிங்கத்தின் கட்டுரை, புலம் பெயர் இலக்கியம் என்று தனியாக வகைமைப்படுத்துவதான அபத்தத்தின் காரணங்களை ஆராய்கிறது. (கட்டுரையின் ஒரிடத்தில் குறிப்பிட்டிருப்பது போல உரிமம் பெற்றவர்கள்தான் கவிதை எழுத முடியும் என்கிற சூழல் எழுந்தால் தமிழகத்தில் கவிஞர்களின் சதவீதம் எத்தனை குறையும் என்பதை கற்பனை செய்து பார்க்க சுவாரசியமாயிருக்கிறது)
இளையராஜாவைப் பற்றி இசை விமர்சகர் ஷாஜி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை. ராஜாவைப் பற்றி பெரும்பாலும் பரவலாக அறிந்திருக்கிற தகவல்களைக் கொண்டு இந்தச் சிறப்பிதழ் கட்டுரையை எழுத ஷாஜி தேவையில்லை என்றே எனக்குப் படுகிறது. தமிழகம் பெரிதும் அறிந்திராத திரையிசைப் பாடகர்கள்/பாடல்கள் ஆகியவற்றைப் பற்றின நுண்ணிய தகவல்கள் கொண்ட இவரின் கட்டுரைகளை உயிர்மையில் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். சலீல் செளத்ரியின் முறையான அறிமுகம் எனக்கு இவரின் மூலமாகத்தான் கிடைத்தது. இன்னும் ஆழமானதொரு கட்டுரையை எழுதியிருக்கலாம்.
புதிய குரல்கள், புதிய தடுமாற்றங்கள்: தமிழ்ச்சிறுகதை, இன்று.... என்ற, மிகுந்த உழைப்பை கோரியிருக்கும் கட்டுரையொன்றை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். சிறுகதை என்கிற வடிவத்தை உலகளாவிய அளவில் நோக்கும் கட்டுரையின் துவக்கம், பருந்துப் பார்வையில் தமிழ்ச்சிறுகதை உலகத்தை பல உதாரணங்களுடன்/எழுத்தாளர்களுடன் துல்லியமாக ஆராய்கிறது. சமகால இலக்கியத்தின் சில குறிப்பிடத்தக்க இளம் படைப்பாளிகளையும் இந்தக் கட்டுரை சுட்டுகிறது. நவீன தமிழ் இலக்கியம் தொடர்பாக சமீப காலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான கட்டுரையாக இதைப் பார்க்கிறேன்.
சொற்ப அளவிலான விதிவிலக்குகள் தவிர, எழுபத்தைந்து ஆண்டு கால தமிழ் சினிமா எவ்வாறு அபத்தங்களால் நிரம்பியிருக்கின்றது என்பதை சூடும் சுவையுமான மொழியில் கூறுகிறது செழியனின் கட்டுரை. (... அப்படிக் காதலையே எழுபத்தைந்து வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நாம் அந்த ஒரு துறையிலாவது பிறர் அணுக முடியாத புலமையைப் பெற்றிருக்கிறோமா? உலகின் மிகச் சிறந்த காதல் படங்களென எத்தனை தமிழப் படங்களைச் சொல்ல முடியும்) என்றாலும் நம்பிக்கைத் தொனியோடு நிறைகிறது.
சாருநிவேதிதாவின் கட்டுரையில் (எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை) அவரது வழக்கமான புலம்பல். பாரிஸைப் பாருங்கள்... சிங்கப்பூரைப் பாருங்கள்... இந்தியா எவ்வளவு கேவலமாக இருக்கிறது. அன்றாட வாழ்வியல் உதாரணங்களுடன் கூறும் அவரது கருத்துக்கள் எல்லாம் நிஜம்தான். நம்முடைய/அதிகாரத்தின் சொரணையில் உறைக்க வேண்டியதுதான். ஆனால் எத்தனை நாளைக்கு தொடர்ந்து இதையே கேட்டுக் கொண்டிருப்பது என்கிற சலிப்பை ஏற்படுத்துகிறது.
மகாபாரத பாத்திரமான கர்ணனின் மனைவியின் பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சுகுமாரன் தான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கவிதையில் இதை குறிப்பிட வேண்டி நீண்ட காலமாக தேடிக் கண்டுபிடித்ததை சுவையாக விவரிக்கிறார்.
தமிழ் ஊடகச் சூழல்: ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும் என்கிற எஸ்.கே.குமாரின் கட்டுரை இன்றைய தொலைக்காட்சி ஊடகத்தின் அசுரத்தனமான/வணிக நோக்கமான வளர்ச்சியை தூர்தர்ஷன் காலத்திலிருந்து துவங்கி webcasting வரைக்குமான இன்றைய காலகட்டம் வரை விரிவாக ஆராய்கிறது.
பிற படைப்புகளைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்.
பலப்பம் தின்ற காலத்திலிருந்தே கவிதை என்றால் அலர்ஜி என்பதால் அவற்றைப் பற்றி ஏதும் எழுதாமல் விடுகிறேன்.
()
இதழில் சொற்ப அளவில் காணப்படும் எழுத்துப் பிழைகளை பொருட்படுத்த தேவையில்லையெனினும், படைப்புகளின் இடையில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்துருவில் பொருளில்லாமல் நிறைய இடங்களில் அப்படியே பிரசுரமாகியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அ.முத்துலிங்கத்தின் கட்டுரையில் இவ்வாறு ஒரு பகுதி வருகிறது.
... கூகி வாதியோங்கோ என்பவர் ஆங்கிலத்தில் எழுதும் கென்யா நாட்டு எழுத்தாளர். இவருடைய பிரசித்தி பெற்ற இரண்டு நாவல்களான "நிளழிஸ்ரீ ஐலிமி ளீஜூஷ்யி, வீஜூள யூஷ்ஸள¦ஷ்யளமிழளலஐ" ஆகியவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை. இவை நாவல்களின் மொழிபெயர்க்கப்பட்ட கென்ய தலைப்புகளின் பெயர்களோ என்று நீங்கள் மயங்கக்கூடாது.
()
இலக்கியம் தொடர்பான சிறப்பிதழ்கள் என்னுடைய சேகரத்தில் தவறாமல் இடம் பெற வேண்டும் என்கிற நோக்கில் இந்தச் சிறப்பிதழை வாங்கினேன். சில குறிப்பிடத்தகுந்த படைப்புகளுக்காக இலக்கிய ஆர்வலர்களுக்கு பெரிதும் இதை பரிந்துரைக்கிறேன்.
ஜெயமோகனின் கட்டுரையை இந்தச் சுட்டியிலும், மனோஜின் சிறுகதையை இந்தச் சுட்டியிலும் சொடுக்கி வாசிக்கலாம்.