Saturday, August 11, 2007

விநோதமான தேடல்கள்.......

ஒவ்வொரு ஞாயிறன்றும் இரவு 07.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கோலிவுட் கோர்ட்' என்கிற நிகழ்ச்சியில் கடந்த வாரம் திரையிசைப் பாடல்கள் சேகரிப்பாளரான 'அலிகான்' என்பவரது நேர்காணல் ஒளிபரப்பாகியது. இவரைப் பற்றி ஏற்கெனவே அச்சு ஊடகங்களில் படித்தறிந்துள்ளேன்.

உலகத்தில் வெவ்வேறு விதமான தேடல்கள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். சிலரின் தேடல்கள் மற்றவர்களின் பார்வையில் விநோதமாகவும் அநாவசியமாகவும் தோன்றக்கூடும். தபால்தலைகளை சேகரிப்பது பற்றி பள்ளிக்கூட பருவத்திலேயே அறிந்திருப்போம். விதவிதமான மதுபாட்டில்கள், பேனாக்கள், தொலைபேசிக் கருவிகள், காலணிகள் தேடுவோரும் உண்டு. பலவிதமாக வடிவமைக்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளை சேகரிக்கிற ஜெர்மனி தேசத்தவரைப் பற்றி எங்கோ படித்திருக்கிறேன். அன்றாட வாழ்க்கையின் சலிப்பிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளவும் மற்றவர்களிடமிருந்து விலகி உயர்ந்து நிற்க விரும்புகிற, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயல்பாக அமைந்திருக்கிற குணாதிசயமே இவ்வாறான தேடல்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறேன்.

என்னுடைய பதின்ம வயதில், ஒரளவு சம்பாதிக்க ஆரம்பித்த புதிதில் ஏற்படுகிற பிரத்யேக திமிரோடு விதவிதமான T-shirts, குறும்பான எழுத்துக்கள் அச்சிட்டிருக்கிற பனியன்கள் சேகரிக்கத் தொடங்கினேன். இது தினமும் புதிதான ஒரு உடை அணிய வேண்டுமென்கிற அளவிற்கு வெறியில் கொண்டு விட்டது. இதிலிருந்து ஒருவாறாக வெளியில் வந்த பிறகு எங்கோ படித்த கிரைம் நாவலின் விளைவாக, இவ்வாறான புத்தகங்கள் சேரிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. சென்னையின் பெரும்பாலான நடைபாதை புத்தகக் கடைகளில் என்னுடைய தேடல் விரிவடைந்தது. இலக்கியத்தின் பால் திரும்புவதற்கு இது ஒரு நல்ல காரணமாக அமைந்தாலும் அதற்குள் பல குப்பைப் புத்தகங்கள் என் வீட்டை நிறைந்திருந்தன. இந்தத் தேடல் இன்னும் (ஆனால் நவீன இலக்கியம் தொடர்பாக) தொடர்கிறது என்றாலும் இடையில் என்னுடைய தேடல் திரைப்பாடல்கள் பக்கம் திரும்பியது.

ஒலிநாடாக்கள், ஆடியோ குறுந்தகடுகள், MP3 தகடுகள் தவிர நண்பர்களிடமிருந்து இரவல் பெற்று பதிவு செய்த பாடல்கள் என்று பைத்தியமாக அலைந்தேன். இதற்காக செலவு செய்த பணத்தில் விட்டுப்போன என்னுடைய உளவியல் படிப்பை முடித்திருக்கலாம் என்கிற அளவிற்கு ஆகியது. இது திரைப்பட குறுந்தகடுகளின் வடிவில் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

()

அலிகானில் ஆரம்பித்து சுயதம்பட்டத்திற்குள் புகுந்த என்னை மன்னியுங்கள். தமிழின் முதல் பேசும்படமான காளிதாசில் தொடங்கி (கிளிஷேவாக எல்லா சினிமா கட்டுரைகளிலும் சொல்லப்படுகிற இந்த தகவல் உண்மையில்லை என்றும் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் இதற்கு முன்னரே பேசும் படத்தை தயாரித்து விட்டார் என்பதையும் ஒரு 'புதிய பார்வை' இதழில் படித்த நினைவு வருகிறது) பல பழைய திரையிசைப் பாடல்களின் LP ரெக்கார்டுகள், குறுந்தகடுகளின் அபூர்வமான தொகுப்பு இவரிடமிருக்கிறது. கிட்டத்தட்ட 3000 திரைப்படங்களின் பாட்டுப்புத்தகங்கள் (கடந்த காலங்களில் புதிய படங்களின் திரையிடல்களின் அரங்கின் வாசலில் விற்பார்களே, நினைவிருக்கிறதா?) இவரிடம் உள்ளன.

இவரின் தேடல்களின் தொடர் பயணத்தின் போது நிகழ்நத சம்பவங்களில் ஒன்றை நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

'திகம்பர சாமியார்' என்கிற திரைப்படத்தின் (இதில் எம்.என்.நம்பியார் பத்து வேடங்களில் நடித்திருக்கிறாராம்) பாடல்களை அலிகான் நெடுங்காலமாக தேடிக் கொண்டிருந்திருக்கிறார். தென்காசியில் ஒரு திருமண மண்டபத்தில் இந்தப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாக இவரின் நண்பரொருவர் தெரிவித்திருக்கிறார். உடனே தென்காசிக்கு பயணம். தென்காசியில் உள்ள எல்லா சவுண்டு சர்வீஸ் கடைகளிலுமான தேடல் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு மிராசுதாரரின் வீட்டில் அந்தப்படத்தின் ரெக்கார்டு இருப்பதான தகவல் கிடைத்திருக்கிறது. அங்கும் ஒடியிருக்கிறார் அலிகான். ஆனால் அந்த மிராசுதாரரோ இவரை வணிக நோக்கமுள்ள விற்பனையாளர் என்று கருதி பிடிகொடுக்காமல் திருப்பியனுப்பியுள்ளார். பின்பு உள்ளுர்காரர் ஒருவர், இவரின் சேகரிப்பு பழக்கத்தைப் பற்றி மிராசுதாரரிடம் எடுத்துச் சொல்லியதில், இவர் நிஜமாகவே சினிமாவில் ஆர்வமுள்ளரா என்பதை பல சோதனைகளுக்குப் பின்னர் (பாகவதரின் முதல்படம் எது? சொல்லுங்கள்) அறிந்து கொண்டு தன்னிடமிருந்த பல இசைத் தட்டுக்களை தந்துள்ளார்.

வருத்தப்பட வைத்த இன்னொரு சம்பவத்தையும் அலிகான் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். பிரபல திரைப்படமான 'பராசக்தி'யின் பொன்விழாவை கொண்டாட ஏவி.எம். முடிவு செய்தது. இது தொடர்பாக அந்தப்படத்தின் திரைப்பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள் யார் யார் என்பதில் ஏற்பட்ட குழப்பத்தை பிலிம்நியூஸ் ஆனந்தன், சென்னை தொலைக்காட்சி, இலங்கை வானொலி உட்பட யாராலும் தெளிவாக்க இயலவில்லை. விழா நெருக்கத்தில் தவித்துக் கொண்டிருந்த ஏவி.எம் நிறுவனத்தினருக்கு, கவிஞர் வைரமுத்து, அலிகானைப் பற்றி சொல்லி தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறார். அங்கிருந்து ஒருவர் தொடர்பு கொண்டதில், அலிகான் தொலைபேசியிலேயே அனைத்துப் பாடலாசிரியர்களின் பெயரைச் சொல்லி உதவியிருக்கிறார். ஆனால் பொன்விழாவின் அழைப்பிதழ் தனக்கு அனுப்பப்படவேயில்லை என்பது அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மிகுந்த சிரமத்திற்கிடையிலும் மிகுந்த பொருளாதார செலவில் சாத்தியமாகியிருக்கிற அலிகானின் சேமிப்பு பற்றி அவரின் குடும்பத்தாருக்கு பெருமைக்கு மாறாக அதிருப்தியே ஏற்பட்டிருக்கிறது. எனவே, தனக்குப் பிறகு தனது அபூர்வமான சேமிப்பின் நிலை குறித்து அவருக்கு கேள்வி எழுந்திருக்கிறது. பல தனிநபர்கள், நிறுவனங்கள் இவரின் சேமிப்பை பணம் செலுத்தி வாங்க முன்வந்தாலும், பலருக்கும் பயன்பட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் தமிழக அரசை இது தொடர்பாக அணுகியிருக்கிறார் அலிகான். ஆனால் அரசிடமிருந்து நீண்ட நாட்களாகியும் பதில் வரவில்லை.

()

இந்த மாதிரியாக உங்களுக்கிருக்கும் ஏதேனுமான விநோதமான சேகரிப்புப் பழக்கத்தைப் பற்றி இங்கு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

6 comments:

Boston Bala said...

பதிவுக்கு நன்றி சுரேஷ் :)

---உங்களுக்கிருக்கும் ஏதேனுமான விநோதமான சேகரிப்பு---

அமெரிக்காவில் குக்கிராமத்திற்கு விசிட் அடித்தாலும், அங்கே ஒரு அன்பளிப்பு அளிப்போருக்கான கடை வைத்திருப்பார்கள். சென்ற இடங்களின் ஞாபகார்த்தமாகவும், ஏற்கனவே அங்கு போயிருக்கிறேன் என்னும் 'படேல் வால்யூ' அடையாளமாகவும் சிலவற்றை சேர்த்து வருகிறேன்.

மணமாவதற்கு முன்பு தண்ணி அடிக்க தோதான 'ஷாட் க்ளாஸ்' எனப்படும் ஸ்மால் ஊத்தி டக்கென்று குடிக்க வசதிப்படும் கோப்பைகள். ஊர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். சிலதில் நகரத்தின் வரைபடமும் இருக்கும்.

வீட்டிற்கு வருபருக்குப் போட்டியும் நடத்தப்படும். ஐம்பது மாகாணங்களிலும் குடித்தவர் 'அனைத்து இடங்களுக்கு சென்று வந்த பலனைப் பெறுவார்' என்னும் ஐதீகத்துடன் வைபவம் தொடங்கும். இன்னும் யாரும் முழுதாக எல்லாவற்றையும் முடிக்கவில்லை ;)

மணத்திற்குப் பின் அந்தந்த ஊரின், நினைவுச் சின்னத்தின், சுற்றுலா தலங்களின் மேக்னெட்.

சாணக்கியன் said...

எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. இந்த அளவுக்கு தீவிரமானதல்ல. அது என்னவெனில் பத்திரிக்கைத் தொடராகவோ, அல்லது இரவல் வாங்கியோ அல்லது நூலகத்திலோ படித்த புத்தகங்கள் எனக்குப் பிடித்துவிடின் ஏற்கனவே படித்திருந்தும் அப்புத்தகங்களை வாங்கி சேமிப்பேன். அதோடு படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அவற்றை அறிமுகப் படுத்துவேன் !

அத said...

எனக்கு ஒரு விநோதமான பழக்கம் இருக்கிறது. எந்த பிராமனரைக் கண்டாலும் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டி பவ்யமாக வணக்கம் சொல்வது.

சேகரிப்பு என்றால் தபால் தலைகள்.

விதம் விதமான கீ ஜெயின்கள் எங்கே பார்த்தாலும் வாங்கி விடுவேன்.

தறுதலை said...

ஒன்று, பத்து ரூபாய், டாலர், வெள்ளி, ரிங்கிட், திர்ஹாம், ரியால், ஈரோ -இப்படி சேகரிப்பது.
சில்லறைத்தனமாக் காசுகள்.


-தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

பழூர் கார்த்தி said...

:-)

<<>>

எனக்கு இருக்கும் ஒரு விநோதமான பழக்கம் படிக்கிற எல்லா வலைப்பதிவுகளுக்கும் போய்
':-)' அப்படின்னு ஒரு ஸ்மைலி போடுவதுதான் :-)))))

Boston Bala said...

உங்களுக்காக :D

Cartoons from the Issue of August 13th, 2007: Issue Cartoons: The New Yorker: Just because....