நான் பொதுவாகவே எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன். என்னை கோபப்படுத்துவதோ புன்னகைக்க வைப்பதோ மிக எளிது. வாழ்க்கையின் அடிப்படையான பாசாங்குகளை மிகவும் வெறுப்பவன் நான். ஆனால் வாய்விட்டு அழுவதென்பது எனக்கு சொற்பான சமயங்களில் மட்டுமே நிகழக்கூடியது. உணர்ச்சிகரமான சூழ்நிலைகளில் கூட சிரமப்பட்டு கண்ணீரை எனக்குள் விழுங்கிக் கொள்வேன். எனக்கு விவரம் தெரிந்து நான் வாய்விட்டு அழுத சம்பவங்கள் மிக சொற்ப எண்ணிக்கையில் அடங்கிவிடும். இப்படியான நான் சமீபத்தில் வாய்விட்டு அழக்கூடிய சம்பவமொன்று நடைபெற்றது.
பொதுவாகவே நம் தமிழ்க் கலாச்சாரத்தில் ஆண்கள் வாய்விட்டு அழுவது ஆண்மைக்கு இழுக்கான செயலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் கூட பெண்கள் கூடி வாய்விட்டு சம்பிரமாக அழும் சுதந்திரம் இருக்கும் போது, ஆண் மட்டும் மிகவும் இறுக்கத்துடன் துக்கத்தை மனதில் புதைத்துக் கொண்டு அடுத்து ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க வேண்டி வரும். என்னைப் பொறுத்த வரை மரணம் என்பது கொண்டாடப்படக்கூடியதே ஒழிய அழ வேண்டியது இல்லை. அது ஒரு விடுதலை.
மேற்கத்திய கலாச்சாரத்தில் இவ்வாறான அசட்டுத்தனமான கட்டுப்பாடுகள் இல்லை. விளையாட்டுப் போட்டியில் தோற்ற ஒருவர், ஒண்ணுவிட்ட சித்தப்பா செத்துவிட்டதைப் போன்று 'ஓ' வென்று எந்தவித வெட்கமுமில்லாமல் அழுதுவிடுகிறார். இது நல்லது. நம் துக்க உணர்வுகளை உள்ளுக்குள் அழுத்திக் கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவதைவிட, அந்த துக்கங்களை கண்ணீரின் மூலம் அப்போதைக்கப்பது கழுவிக்கொள்வது உசிதமான செயல்.
()
என் தந்தையாருக்கு தலையில் அடிபட்டு சரியாக கவனிக்காமல் போய் மூளைக்குள் செல்லும் நரம்பொன்றில் ரத்தம் கட்டிக் கொண்டு மெல்ல மெல்ல சுயநினைவை இழந்துக் கொண்டிருக்கிறார். துக்ககரமான அந்த ஒரு இரவில் எல்லோரும் அரைத்தூக்கத்தில் ஆழந்து கொண்டிருக்க குழந்தை போல் தவழந்து தவழந்து படுக்கையறைச் சுவரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறவரை கவனித்து பதட்டத்துடன் எழுந்து என்ன வேண்டுமென்று கேட்டதற்கு குழறலான மொழியில் பதில் வந்தது "பாத்ரூமுக்கு போயிட்டு இருக்§ன்". மூளையில் ஏற்படும் ஒரு சிறுபாதிப்பு ஒருவரை இவ்வளவு அப்நார்மலாக மாற்றுமா என்று எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. பிறகு அவரை ஒரு தனியார் மருத்துவமனையிலும், பிறகு அரசு மருத்துவமனையிலுமாக ஒரு வாரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அவரை மருத்துவமனையில் பார்த்துக் கொண்டிருக்கிற 'டூட்டியை' என் மூத்த சகோதரனுக்கு மாற்றிவிட்டு வீட்டில் வந்து படுத்துக் கொண்டிருக்கிறேன். சில நிமிடங்கள் பின்னாலேயே என் சகோதரனும் வந்துவிட்டான். அவன் வந்து நின்ற நிலையே எனக்கு சூழ்நிலையை விளக்கிவிட்டது. இருந்தாலும் மெல்ல, "என்ன ஆச்சு?" என்றேன். அவன் வார்த்தைகளில் அடக்கவியலாத ஒரு உணர்வுடன் தலையை அசைத்தான். நான் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு, சினிமா போல சட்டென்று அழாமல் என்னுடைய சட்டையை பேண்டில் இன் செய்துக் கொள்வதையும், கண்ணாடியைப் பார்த்து தலையை சீராக வாரிக் கொள்வதையும் அவன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். "போலாம்". பிறகு சிலபல வருடங்கள் கழித்து தந்தையின் நினைவில் சில மெளனமான இரவுகளை கண்ணீரில் நனைந்த தலையணைகளோடு கழித்தது நிஜம்.
()
இப்போது, வாய்விட்டு அழுத சமீபத்திய சம்பவத்திற்கு வருகிறேன்.
ஒரு காலை வேளையில், அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டி, என் சட்டையும் பேண்ட்டையும் அயர்ன் செய்து கொண்டிருந்தேன். உற்சாகமான காலைப் பொழுது. எந்தவித துக்கமான மனநிலையும் சமீப காலங்களில் இல்லை. ரேடியோ மிர்ச்சியில் சுசித்ராவின் அசட்டுத்தனமான காம்ப்பியரங்கை சகித்துக் கொள்ள இயலாமல், ஆடியோ சிடியை போடலாமென்று முடிவு செய்தேன். என்னுடைய சேகரிப்பில் இருந்து துழாவி கையில் கிடைத்த சிடியை செருகினேன். 'சிப்பிக்குள் முத்து' என்கிற விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளிவந்த கமல்ஹாசன் படமது. ராஜாவின் மிக அற்புதமான மென்மையான பாடல்களை ரசித்துக் கொண்டே துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது.
ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
"லாலி லாலி லாலி லாலி..
வரம் தந்த சாமிக்கு
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு
இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு.........
சுகமான லாலி
ஜகம் போற்றும் தேவனுக்கு
வகையான லாலி"
சுசிலாவின் சுகமான குரலில் ஒலித்த அந்த தாலாட்டுப் பாட்டு என்னுள்ளே எந்தவிதமான ரசவித்தை செய்ததோ அறியேன். எந்த காரணமுமில்லாமல், என்னையுமறியாமல் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். என் மனஅடுக்குகளில் பல்வேறு கால வரிசையில் அடுக்கப்பட்டிருக்கிற துக்கமான நினைவுகளில் ஏதோ ஒன்றை அந்தப்பாட்டு பலமாக அசைத்துப் பார்த்திருக்க வேண்டும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. ஒரளவு உளவியல் படித்திருந்தும் இந்த சம்பவத்தை என்னால் எந்தவகையாலும் வகைப்படுத்த இயலவில்லை. இது புதுவிதமான முதல் அனுபவம்.
நான் அழுகிற சத்தம் கேட்டு மனைவி பதட்டத்துடன் ஒடிவந்தாள். "என்னங்க ஆச்சு.."? விஷயத்தை கேள்விப்பட்டதும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள். " நான்தான் உங்களை அடிச்சிட்டு அழறீங்கன்னு பக்கத்து வீடுகள்ல நெனச்சிக்கப் போறாங்க" என்று கிண்டல் செய்யவும் ஆரம்பித்துவிட்டாள். விளையாடப் போயிருந்த என் மகள் வந்தவுடன் இருவரும் சேர்ந்து என்னை பயங்கரமாக ஓட்ட ஆரம்பித்து விட்டனர். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது, காரணமே இல்லாமல் அழுததற்காக. ஆனால் அழுது முடித்தவுடன் ஏற்பட்ட ஆசுவாச, உற்சாக உணர்ச்சியை எந்த காம்ப்ளானும், பூஸ்ட்டும் கொடுக்க முடியாது.
()
அப்போதெல்லாம் சன் டி.வியில் புதன் இரவுகளில் 8.30 மணிக்கு பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. (இந்தமாதிரியான அற்புதமான முயற்சிகள் தொடராமல் போவது துரதிர்ஷ்டம்) இந்த நிகழ்ச்சியின் டைட்டில் கார்டு ஓடும் போது பின்னணியில் சோகத்தைப் பிழிந்தெடுக்கிறாற் போலவும், ஆவி வருவதாக நம் சினிமாக்களில் ஒரு இசையை போடுவார்களே, இரண்டும் கலந்தாற் போன்றதொரு உணர்ச்சியில் திகிலாக ஒரு ஹம்மிங் வரும். அப்போது ஒரு வயதாகியிருந்த என் மகள், இந்த பின்னணி இசையை கேட்டவுடன் சுவிட்ச் போட்டாற் போல் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விடுவாள் (ஒரு வேளை பரம்பரை வியாதியாயிருக்குமோ?:-)) என்ன காரணமென்றே தெரியாது. இதற்காகவே அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதெல்லாம் அவள் தூங்கிக் கொண்டிருந்தால் கூட எழுப்பி உட்கார வைத்து, அவளையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்போம்.
இந்த மாதிரி குறிப்பிட்ட சில ஒலிகள் நம் மனதில் விசித்திரமானதொரு பிம்பங்களை ஏற்படுத்துகிறது. என் நண்பர் ஒருவருக்கு நடுநிசியில் நாய் அழுகிறாற் போல் ஒலிஎழுப்பினால் யாருக்கோ மரணம் நிகழப் போகிறது என்பார்.
சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே' நாவல் நினைவுக்கு வருகிறது. அயல்நாட்டு தூதுவர் ஒருவரை கொல்வதற்காக, அவர் கலந்து கொள்ளப் போகும் தொழிற்சாலை நிகழ்ச்சியன்றை பயன்படுத்திக் கொண்டு, அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மூளையில் மற்றொருவரின் நினைவுகளை விதைத்து சோதனை செய்து விட்டு, குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அயல்நாட்டு தேசிய கீதம் பாடப்பட்டவுடன் தொழிலாளி வெறிகொண்டு தூதுவரை கொலை செய்து விடுமாறு அவருடைய எண்ணங்களில் பதித்துவிடுவர். அதுவரை நார்மலாயிருக்கிற அந்த தொழிலாளி, தேசியகீதம் பாடப்பட்டவுடன் அவருக்குள் விதைத்து வைக்கப்பட்டிருக்கிற கொலை உணர்ச்சி விழித்துக் கொள்ளும். மிக அற்புதமான நாவல் அது.
()
இதை பதிவதால் சிலரின் கிண்டலுக்கு ஆளாவேன் என்று உள்மனது சொன்னாலும், ஏதோ ஒரு உள்ளுணர்வு இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. வெளியே நாம் பலவிதமான முகமூடிகளுடன் வீறாப்பாய்த் திரிந்தாலும் சில அடிப்படை மென்மையான அந்தரங்க உணர்வுகள் நம் எல்லோருக்கும் பொதுதானே?
உங்களுக்கு இந்த மாதிரி காரணமின்றி வாய்விட்டு அழுத சம்பவங்கள் ஏற்பட்டிருக்கிறதா?
9 comments:
The song which you have mentioned is really nice. But i was not cried, when i listened. :-)
- Balaji
suresh kannan,
suvArasiyamAna pathivu !!!
//இதை பதிவதால் சிலரின் கிண்டலுக்கு ஆளாவேன் என்று உள்மனது சொன்னாலும், ஏதோ ஒரு உள்ளுணர்வு இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.
//
You seem to read others' minds too, pretty well :-))
சுரேஷ்,மிகவும் இயல்பான பதிவு. இது போல் எனக்கு நிகழ்ந்த சம்பவம்.
நான் எனது அறையில் ரூட்ஸ் நாவலை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு காட்சி. தனது மகனை எசமான் வேறோரு இடத்திற்கு அனுப்ப முடிவெடுத்து விடுவார். அப்போது அந்த தாய், தன் மகன், மருமகள், பேரக்குழந்தைகள் அனைவரயும் ஒன்றாக உட்கார வைத்து அவளது ஆப்பிரிக்க பரம்பரையை பற்றி சொல்லும் ஒரு கட்டம்.
அதை படித்தவுடன் பொங்கி பொங்கி அழுதது நினைவுக்கு வருகின்றது.
"என் மனஅடுக்குகளில் பல்வேறு கால வரிசையில் அடுக்கப்பட்டிருக்கிற துக்கமான நினைவுகளில் ஏதோ ஒன்றை அந்தப்பாட்டு பலமாக அசைத்துப் பார்த்திருக்க வேண்டும்..."
மிகச் சரி சுரேஷ் கண்ணன்...உங்கள் மனதில் பட்டதை மிக அழகாக உங்கள் உணர்வுகளை பதிய வைத்து உள்ளீர்கள். இதுப் போல் இன்னும் நிறைய எழத வேண்டும். உங்கள் எழுத்துகளை படிக்கும் பொழுது மனம் ஒன்றிப் போய் படிக்க சொல்கிறது. மனப் பூர்வமான பாராட்டுகள்.
நன்றி.
மயிலாடுதுறை சிவா...
நன்றி நண்பர்களே,
இந்தப் பதிவை உணர்வுப்பூர்வமாக அணுகியதற்கு.
அருமையான பதிவு சுரேஸ். ஆண்கள் அழுவதால் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. (எதற்கெடுத்தாலும் அழுதால் அது வேறு அர்த்தம்). உணர்வுகள் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்று நினைப்பவன்.உணர்வில் அழுவது என்பது பெண்ணுக்கு மட்டுமே பாத்தியப்பட்டது, ஆண் கூடாது என்பது ஆணாதிக்க மனோநிலை. இன்பம் வந்தால் ஆனந்த கண்ணீர் சொரிவதும், மகிழ்ச்சியாய் இருக்கும் போது சிரிப்பதும், நெருக்கும் துன்ப உணர்வில் கண்ணீர் விடுவதும் மனிதனுக்கே அளிக்கப்பட்ட கொடையென நினைக்கிறேன். எல்லாவற்றையும் அடக்கி ஜடமென ஆண் இருக்கவேண்டுமென்பதில்லை.
அதற்காக பெந்தோகோஸ்தே மக்கள் செய்வது போல கூடி உட்கார்ந்து அழுவது சரியெனபடவில்லை.
சுரேச்,
இன்றுதான் படித்தேன் உங்கள் பதிவை.
அழுவதில் வெட்கப்பட தேவையில்லை. நல்ல இசையினால் அழ வைக்க முடியும்.
ஒருநாள் ஒரு கனவு படத்தின் காற்றில் வரும் கீதமே- கேட்டுப் பாருங்கள்
'சேது' படத்தைப் பார்த்து தியேட்டரிலிருந்து வரும்போது இந்த உணர்வு எனக்கும் ஏற்பட்டதுண்டு. அதே போல மகாநதி படத்தில், கமல் தன் பெண்ணை - கல்கத்தாவில் கண்டெடுத்து, ஹூக்ளி நதியில் ஓடத்தில் அழைத்து வரும்போதும்.
- அலெக்ஸ்
"Veedu" balu mahendra film la Archana azuvangale ithu pola...
antha thatha iranthvudan romba normal ah iruppanga.. konja naal kazithu avarudaya pettiya thrianthu parkum pothum than thatha iranthatharku azuvanga...
ithu pola azugai varavaiku innoru paatu undu... i think rajinium... mathavi um seen la
"naanurangum naal vendum
saainthu kolla thol vendum
en kannil neer vendum
sugamaga aza vendum...."
film may be "un kannil neer vazinthal"
kannan.
Post a Comment