Thursday, March 31, 2005

பெருமாள் முருகனுக்கு சர்வதேச அங்கீகாரம்

Image hosted by Photobucket.com

கொங்கு நாட்டு எழுத்தாளர் பெருமாள்முருகனின் பெயர் இப்போது சர்வதேச இலக்கியப்பரிசு ஒன்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர் எழுதிய கூளமாதாரி நாவல் வ.கீதாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Seasons of the Palm என்ற பெயரில் தாரா வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த கிரியாமா இலக்கிய விருதுகள் வழங்கும் குழு தனது 9வது வருடாந்திர விருது வழங்கும் போட்டிக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பெருமாள் முருகனின் கூளமாதாரி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த நாவலின் முக்கிய பாத்திரங்கள் ஆடு மேய்க்கும் சிறுவர்கள். அவர்களின் உலகத்தை அழகுபட விவரிக்கும் இந்த நாவல், நடுவர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கிரியாமா இலக்கிய விருது குழு 40 வயதை எட்டுவதற்கு முன்பு பெருமாள் முருகன் படைத்திருக்கும் இந்த நாவல் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது. "இது பெருமாள் முருகனுக்கு கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம்" என்று குறிப்பிடுகிறார் இந்த நாவலை மொழிபெயர்த்த வ.கீதா.

(செய்தி: இந்தியாடுடே, மார்ச் 2005)

()

ஜெயகாந்தன் ஞானபீட விருதின் மூலம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் மற்றொரு தமிழ் படைப்பாளியும் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது உவப்பான செய்தியாகும்.
நவீன இலக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவர் பெருமாள் முருகன். மேற்குறிப்பிட்டுள்ள கூளமாதாரி நாவல் முழுக்க முழுக்க கூலிக்காக ஆடு மேய்க்கும் சிறுவர், சிறுமிகளின் உலகத்தினைப் பற்றியது. ஆட்டு புழுக்கைகளின் நாற்றத்தையும், அவற்றின் 'மே...' சத்தத்தையும் தவிர்க்க முடியாமல் இந்த நாவலை படிக்க முடியாது.

ஏறுவெயில் என்கிற இவரின் முதல் நாவலைத் தொடர்ந்து எழுதினது, 'நிழல் முற்றம்' என்கிற நாவல். முழுக்க சினிமாத் தியேட்டரை பின்னணி களமாக கொண்டு இதுவரை தமிழில் நாவல்கள் வந்திருக்கின்றனவா என அறியேன். அந்தக் குறையை போக்குகின்ற படைப்பு இது. தியேட்டரில், இடைவேளைகளில் முறுக்கு விற்கும் சிறுவனை முதன்மையான பாத்திரமாக கொண்டது. டிக்கெட்டுக்காக முண்டியடிக்கிறவர்களின் வியர்வை வாசனையும், தொப்பையன், கிழவன் என்று அந்தக் கால சூப்பர் ஸ்டார்களுக்கு ரசிகர்கள் வைத்திருந்த காரணப் பெயர்களும், குஷ்டரோகியான தன் அப்பன் பார்க்க வரும் போது அருவருப்போடு அந்தச் சிறுவன் விரட்டியடிப்பதுமாக மிகுந்த யதார்த்த உலகில் நகருகின்ற நாவலது.

சமீபத்தில் வந்திருக்கும் 'பீக்கதைகள்' (சிறுகதைத் தொகுதி) மலம் மற்றும் மலம் சார்ந்திருக்கின்ற இடங்களைப் பற்றினது (!?).

suresh kannan

9 comments:

Anonymous said...

சந்தோஷமான செய்தி! நன்றி!- ரோஸாவசந்த்.

இராதாகிருஷ்ணன் said...

மகிழ்ச்சியான செய்தி, நன்றி!
//(செய்தி: இந்தியாடுடே, மார்ச் 2003)// 2005?

Anonymous said...

நன்றி ராதாகிருஷ்ணன். இப்போது திருத்தி விட்டேன்.

சுரேஷ் கண்ணன்

By: Suresh Kannan

Anonymous said...

மகிழ்ச்சியான செய்தி. தகவலுக்கு நன்றி சுரேஷ்.

Anonymous said...

மகிழ்ச்சியான செய்தி. தகவலுக்கு நன்றி சுரேஷ்.
-பொடிச்சி

Anonymous said...

Perumal Muruganuku Vaazhthukal. Avar M.A. Tamil Payinra kaalathil avarai arivean. Avarin valarchiyum veechum paarata thakavai - Anbudan, PK Sivakumar

Anonymous said...

பெருமாள் முருகனை பற்றி எனக்கு தெரியாது. ஆனாலும், அவர் எழுதிய விசயங்களுக்கு விருது கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தகவலுக்கு நன்றிகள்.

Anonymous said...

கூளமாதாரி நான் மிகவும் இரசித்து வாசித்த ஒரு புத்தகம். சிறுவர்களின் உலகத்தை மிக இயல்பாய் வெளிப்படுத்தியிருந்த நாவல் (இதே போன்றுதான் யூமா வாசுகியின் ரத்தஉறவும் சிறுவர்களின் வாழ்வின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகின்றது). பெருமாள் முருகனுக்கு வாழ்த்துக்கள். அதேபோல படைப்புக்கு நிகர்த்தான உழைப்புடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் வ.கீதாவுக்கும் வாழ்த்துக்கள். மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினமென்று அந்த நாவலை வாசித்தவர்களுக்கு விளங்கியிருக்கும். முற்றுமுழுதாக வட்டாரமொழியில் எழுதப்பட்ட நாவலது. அதை வாசித்தபோது புதிய புதிய சொற்பிரயோகங்களை, அர்த்தங்களை அறிந்துகொண்டது ஒரு சுவாரசியமான வாசிப்பனுபவம்)

இளங்கோ-டிசே said...

Oops the previous post is mine.

DJ