Wednesday, October 18, 2006

ஒரு Corporate இலக்கியக் கூட்டம்

பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே செல்வதை தவிர்ப்பவன் நான். ஒரு அலுவலக இயந்திரமாக போலிப்புன்னகைளும், வெளிக்காட்ட முடியாமல் மென்று விழுங்கப்பட்ட எரிச்சலுமாக ஆறு நாட்களும் கழியும் போது மிகப் பெரிய விடுதலையாக ஒரு நாள் கிடைக்கும் போது அதன் ஒவ்வொரு கணத்தையும் சுதந்திரமாக என்னுடைய விருப்பப்படி எனக்காக மட்டுமே செலவு செய்யவே விரும்புவேன். பொதுவாக குளியலுக்கு கூட அன்று விடுமுறைதான். வாரப்படாத தலையும், அலட்சியமாகக் கட்டப்பட்ட லுங்கியுமாக (எனக்கே) சகிக்காத கோலத்தில்தான் ஞாயிறுகள் கழியும். பெரும்பாலும் புத்தகம், கொஞ்சம் இசை, கொஞ்சம் தொலைக்காட்சி என்பதாகவே அது இருக்கும். முழு நாளையும் செலவு செய்து விட்டு இரவு 10 மணிக்கு துணி துவைப்பவன் சென்னையிலேயே நானாகத்தான் இருக்க முடியும். சுருங்கக்கூறின் ஞாயிறுகளின் பொழுதுகளை தீர்மானிப்பவன் நானே. இதற்காகவே என்னுடைய திருமணம் நடந்த நாளைக்கூட ஞாயிறு அல்லாத தினத்தில் அமைத்துக் கொண்டேன் என்று சொன்னால் அது சற்று அதீதமாகவே உங்களுக்குத் தோன்றக்கூடும். பல நல்ல திரைப்பட விழாக்களை, நண்பர்களின் சந்திப்பை ஞாயிறு அன்று அமைந்ததாலேயே பல முறை தவற விட்டதுண்டு. அலுவலக நாள் போலவே அன்றும் குளித்து, ரெடியாகி, பேருந்து பிடித்து போக வேண்டியதை நினைத்து ஏற்படும் சோம்பேறித்தனம்தான் காரணம். (போதும்பா. விஷயத்துக்கு வா!)

உயிர்மை பதிப்பகம் வெளியிடும் சாருநிவேதிதாவின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பினை பார்த்ததிலிருந்து ஞாயிறன்று அது அமைந்ததில் செல்லலாமா, வேண்டாமா என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். சாருவின் எழுத்து குறித்து எனக்கும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பாசாங்குகளைக் களைந்து வெளிப்படையாக எழுதப்படுகிற மற்றும் உலக இலக்கியங்களை - சற்றே அலட்டலுடனும் என்றாலும் - சுவாரசியமாக அறிமுகப்படுத்துவது என்கிற வகையிலும் அவர் எழுத்துக்கள் மீது ஒரு ஆதாரமான விருப்பம் எனக்கு இருந்தது என்பதையும் சொல்லியாக வேண்டும். நேற்று எல்லாமே சரியாக அமைந்துவிட விழாவிற்கு செல்வதென்று முடிவெடுத்தேன். மேலும் பங்கேற்போர் பட்டியலில் ஆர்.பார்த்திபன், பிரகாஷ்ராஜ் போன்ற பெயர்களை பார்த்திருந்ததனால், என்னதான் அறிவுஜீவி வேடம் போட முயற்சித்தாலும், நடிகர்களை நேரில் பார்க்க வேண்டும் என்கிற உள்ளுக்குள் மறைத்திருக்கிற பாமர ஆசையும் போகும் எண்ணத்தை உசுப்பியிருக்கலாம். :-)

()

தியாகராய சாலையில் ரெஸிடென்ஸி டவர்ஸில் எம்பரர் ஹால். பொதுவாக இலக்கியக்கூட்டங்கள் என்றாலே வெற்றிலைப் பாக்கு கறைகளுடன் கூடிய இருட்டான மாடிப்படிகள் அமைந்த, கொட்டாவியை அடக்கிக் கொண்டு இருபது அல்லது முப்பது நபர்கள் அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருக்கிற, கதர்ச்சட்டையும் ஜோல்னா பையுமாக "இலக்கியவாதிகள்" என்று நெற்றியில் எழுதி ஒட்டி வைத்திருக்கிற சில நபர்களுமாக (அவர்களில் கட்டாயம் ஒருவர் தலை நிறைய முடியுடன் குடுமி வளர்த்திருப்பார்) டீயும் பிஸ்கெட்டும் கொடுப்பார்கள். வெளியே பழைய புத்தகக் கடைகளுமாக இருக்கும் ...... இப்படித்தான் அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனால் சாண்டலியர் விளக்குகள் இருளை துப்புரவாக துரத்தி வெளிச்சமாக்கி வைத்திருக்கிற, அஜாக்கிரதையாக நடந்தால் கால்வழுக்கி விடக்கூடிய மார்பிள் மாயாஜாலங்கள், குஷன் நாற்காலிகள், குளிர்பதன வசதியுட்ன கூடிய அரங்கத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தை பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் நடந்த விருந்து, முழு ப·பேயாக சைவம் மற்றும் அசைவ பதார்த்தங்களோடு இருந்தது. வணிக நிறுவனங்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்யும் பிரஸ் மீட் போன்றவைகளில்தான் இந்த மாதிரியான அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன.

()

சில வருடங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் என்றொரு பிரகஸ்பதி ஒரு பிரபல வங்கியின் சேர்மனாக இருந்தார். சென்னை நகரில் எது திறக்க வேண்டுமானாலும் இவரை கூப்பிட்டனுப்புவார்கள். (இந்த வாக்கியத்தை வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இவரும் திறந்து அடுத்த நாள் நாளிதழ் செய்திகளில் வாயெல்லாம் பல்லாக நிற்பார். நல்லி குப்புசாமி செட்டியாரையும், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜனையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது. பல நூல் வெளியீட்டு விழாக்களிலும் இவர்களைப் பார்க்கிறேன். சாருவின் "கோணல் புத்தகங்கள்" வெளியீட்டுவிழா உட்லண்ஸில் நடந்த போது கூட இவர்கள்தான் பிரதானமாக கலந்து கொண்டனர். எனவே பேச்சு என்கிற பெயரில் இவர்கள் ஆற்றினவைகளை தவிர்க்கிறேன்.

கூட்டத்தில் பேசியவர்களின் உரைகளிலிருந்து எனக்கு நினைவிலிருக்கும் பகுதியை என்னுடைய மொழியில் தருகிறேன். (கருத்துப்பிழை ஏதேனும் இருந்தால் அது என்னுடைய பிசகேயாகும்)

நாஞ்சில் நாடனின் பேச்சு வழக்கம் போல் ஆத்மார்த்தமாகவும் பாசாங்கில்லாமலும் கச்சிதமாக அமைந்தது.

.... என்னுடைய எழுத்துக்களின் மீது சாருவிற்கும் அவர் எழுத்துக்களின் மீது நானும் பொறாமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரை sex writer என்கிறார்கள். இன்றைக்கு சினிமாவில் இல்லாத செக்ஸா? முன்பெல்லாம் ஒரு நடிகை மாடிப்படியிலிருந்து இறங்கி வருவதை கேமராவை கீழே வைத்து படம் பிடித்ததையே பார்த்து அன்றைய ரசிகர்கள் கிறங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று அந்த மாதிரியான காட்சி அதே உணர்வைத் தருமா? அதையெல்லாம் தாண்டித்தானே தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது? .........

........ இன்றைக்கு இலக்கிய உலகில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. சக எழுத்தாளின் வீட்டுக்கு செல்லும் போது பருகத்தருகிற எதையும் குடிக்க பயமாயிருக்கிறது. ஒரு படைப்பை விமர்சனம் செய்ய அதைப் படித்தாக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லாத நிலையே இருக்கிறது. படிக்காமலேயே விமர்சனம் செய்யலாம். "இவன்தான் இப்படித்தான் எழுதுவான்" என்று முத்திரை குத்தி முன்தீர்மானத்துடனேயே அணுகுகிறார்கள். எதையும் படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். என் எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். செருப்பால் கூட அடியுங்கள். ஆனால் படித்து விட்டு செய்யுங்கள்......

......... இலக்கியம் என்பது வாசகனை பயமுறுத்தி விரட்டுவதாக இருக்கக்கூடாது. சிநேகித பாவத்துடன் இருக்க வேண்டும். சாருவின் எழுத்துக்கள் சுவாரசியமானது...

அடுத்து பேசிய கனிமொழியின் பேச்சு கனமில்லாமல் இயல்பாக இருந்தது.

...........சாரு என்னை தத்தெடுக்கிட்டவர்னு சொல்லுவேன். இந்து நாளிதழில் பணிபுரிந்த காலத்தில் எனக்கு சாரு உலக இலக்கியத்தை, இசையை அறிமுகப்படுத்தினார். பதே அலிகானெல்லாம் (Nusrat Fateh Ali Khan) அவர்தான் தெரியப்படுத்தினார். அப்பவே நெறைய விஷயம் தெரிஞ்சிருப்பார். நெஜமாவே விஷயம் தெரிஞ்சவரா..இல்ல.. கொஞ்சம் பெயர்களை தெரிஞ்சுக்கிட்டு பாவனை காட்றாரோன்னு சந்தேமாக இருக்கும். ஆனா அணுகிப் பார்க்கறப்போ ஒவ்வொண்ணைத்தையும் விவரமா சொல்வார். இப்ப இருக்கற மாதிரி இண்டர்நெட் வசதியெல்லாம் அப்ப கெடையாது. நெறைய படிச்சிருப்பார். திவ்வியப் பிரபந்தம் பத்தி கூட அவர் விவரமா சொன்னது ஆச்சரியமா இருந்தது. ..........அவர் இளைஞர்னு சொல்லிக்கறததான் சகிச்சிக்க முடியல....(சிரிப்பு)

டிராஸ்ட்கி மருதுவின் பேச்சு சீரியஸாகவும் விஷயபூர்வமாகவும் இருந்தது. (கொஞ்சம் போரடித்தது என்று கூட சொல்லலாம்)

..........சாருவின் புத்தகங்களை படிக்க முடியலைன்னாலும், அவர் ஹொடரோவ்ஸ்கி (Jodorowsky) பத்தி உயிர்மைல எழுதின கட்டுரை ஆச்சரியமா இருந்தது. அதனாலதான் இந்த கூட்டத்துக்கே வந்தேன். நெறைய பேருக்கு அந்த பெயரையே தெரியாது. பொதுவா உலக மக்களை ஹொடரோவ்ஸ்கி படங்களை பார்த்தவர்கள் / அல்லாதவர்கள்னு ரெண்டு பிரிவா பிரிக்கலாம். அந்தளவிற்கு அவருடைய படங்கள் முக்கியமானது. .............

........எனக்கு பிடிச்சது காமிக்ஸ். உலகத்திலேயே பிரான்சும், ஜப்பானும் காமிக்ஸ சீரியஸா இலக்கிய அளவுல பாக்கறாங்க. ஒரு சினிமா இயக்குநருக்கு காட்சியின் ஒவ்வோரு பிரேமும் ஒவியம் மாதிரி முக்கியமானதா இருக்கணும். ரெண்டு பேர் பிரேம்ல நிக்கறாங்கன்னா. எந்த இடத்துல நிக்கணும், எந்த இடத்துல லைட் இருக்கணும்னு எல்லாமே முன்கூட்டியே தீர்மானமா இருக்கணும். நாசரோட தேவதைங்கற படத்துல "ஒரு 300 வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்துல எந்த செட்டும் போடாம கணினி கொண்டே அமைச்சோம். இம்சை அரசன்ல கூட அந்த மாதிரி சில விஷயங்கள் செஞ்சிருக்கோம். ..........

சாருவின் எழுத்துக்களை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் ராமகிருஷ்ணன் மலையாளத்தில் பேசியதில் எனக்கு புரிந்த சில:

சாருவின் எழுத்துக்களை மலையாள இலக்கிய உலகில் மிகவும் மதிக்கிறார்கள். அவர் பெயரை வைத்து பெண் எழுத்தாளர் என்று கூட சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

()

பார்த்திபன் தனக்கேயுரிய வார்த்தை விளையாட்டுக்களோடு சபையை சிரிக்க வைத்தார் என்பதோடு வேறு எந்த விஷயமும் இல்லை. சில பிரபலங்களை எதிர்பாராத இடங்களில் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம். தனக்கு சாரு சமீபத்தில்தான் அறிமுகமானார் என்றாலும் 15 வருடமாக பழகியது போன்ற உணர்வு இருவருக்குமே ஏற்பட்டிருக்கிறது என்றார்.

எந்தவித சம்பிரதாயங்களுமில்லாமல் தன் உரையை ஆரம்பித்தார் சாரு.

.......... இன்றைய பதிப்பக சூழ்நிலையில் எந்தவொரு புத்தகமுமே முதல் பதிப்பில் 1000 பிரதிகளே அச்சடிக்கப்படுகின்றன. ரஜினிகாந்ந்த் போன்று எழுத்துலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிற சுஜாதாவிற்குமே இதே நிலைதான் என்று மனுஷ்யபுத்திரன் வாயிலாக தெரிகிறது. நம்மை விட ஏழை நாடான துருக்கயின் மொத்த மக்கள் தொகையே தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது. அங்கு ஒரு புத்தகம் முதல் பதிப்பாக 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்படுகின்றன. மத்தவங்களுக்கு எழுதறதுதான் பிரச்சினை. எனக்கு அதோட என் புத்தகங்களை நானே பதிப்பிக்கிற தொல்லை வேற இருக்கு. இப்பதான் மனுஷ்யபுத்திரன் என் புத்தகங்கள கொண்டு வர்றார்.

.......... எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருக்கார். எனக்கு சந்தோஷமாக இருக்கு. அவரை எவ்வளவோ விமரசித்து எழுதியிருக்கேன். ஆனா ignore பண்ணலையே. ஆனா நான் கடந்த 30 வருஷமா தொடர்ந்து புறக்கணிக்கப்படறேன். இது ரொம்ப முக்கியமானது. .........

......... நாலு புக்ல மத்த புத்தகங்களல வந்து மாணவர்களுக்கு பாடமாக கூட வைக்கலாம். ஆனா ராஸ லீலால நெறைய சர்ச்சையான விஷயங்கள எழுதியிருக்கேன். புத்தகமா போடறதுக்கு முன்னாடி மனுஷ்யபுத்திரன் கிட்ட "இதனால உங்களுக்கு தொல்லைகள் வரலாம். ஏன் ஜெயில்ல கூட போடலாம்"னேன். "நல்ல பாத்ரூம் மாத்திரம் இருந்தா போதும். நான் சமாளிச்சுக்குவேன்"றாரு அவரு.

.......அடுத்து காரைக்கால் அம்மையாரை பத்தி ஒரு நாவல் எழுதிக்கிட்டு இருக்கேன். செக்ஸே கிடையாது. (சிரிப்பு). ஆனா supression of body பத்தினது அது. இதுல கூட பாடி வருது பாருங்க. அப்புறம் "ஆஸ்பிட்டல்"னு ஒரு நாவல் எழுதறேன். இந்த நூல்களோட வெளியீட்டை பிரம்மாண்டமா cosmopolitan club-ல வைக்கலாம்னு ஒரு யோசனை. .... என்றவர் "வாழ்க்கைய கொண்டாடணும்ங்க" என்கிற செய்தியோடு முடித்துக் கொண்டார்.

()

சாருவின் முக்கிய அடையாளமே கலகம்தான். யதார்த்தவாத எழுத்துக்களால் தமிழ் இலக்கிய தேங்கிய நிலையிலிருக்கும் போது எல்லா மரபுகளையும் உடைத்துப் போட்டு எழுதின கலகக்கார எழுத்தாளர்களில் சாருவும் முக்கியமானவர். அவரின் நூல் வெளியீடு ஒரு வணிக நிறுவனத்தின் தயாரிப்பு அறிமுகத்திற்கு ஒப்பான சம்பிரதாயங்களுடன் நடைபெறுவது - என்னைப் பொறுத்தவரை - முரணாக தோன்றுகிறது. இந்த நூல்வெளியீட்டு விழா ஒரு பொதுக் கழிப்பறையின் முன்னால் நடைபெற்றிருந்தால் அது எனக்கு இயல்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பிற்பாடு சாருவுடன் ஒரிரு வார்த்தைகள் (பொதுவாக அறிமுகப்படுத்தப்படாமல் என்னால் யாரிடமும் உரையாட முடியாது. ஆனால் நிர்மலாவும் (ஒலிக்கும் கணங்கள்) கூட இருந்த காரணத்தினால் என் இயல்புக்கு மாறான நிலையில் உரையாடினேன்) பேசும் போது "உங்க நூல்வெளியீட்ல விஸ்கியோ, பியரோ வழங்கப்பட்டிருந்தா அது எனக்கு இயல்பா இருந்திருக்கும். இப்படி சாம்பார் வடைல்லாம் இருக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கு" என்றேன். புன்னகையோடு கேட்டுக் கொண்டார். "கிட்டத்தட்ட 600 பேருக்கும் மேல தமிழ்ல வலைப்பதியறாங்க. நீங்க எதையாச்சும் பாக்கறதுண்டா" என்றதற்கு "இல்லை" என்றார்.

சாப்பிடும் போது எஸ்.ராமகிருஷ்ணணுடன் சற்று உரையாட முடிந்தது. பேருந்து நிலையத்தில் பார்க்க நேர்ந்த ஒரு நிகழ்வைச் விவரித்து அதை எழுதவிருப்பதாகச் சொன்னார். அவரின் சமீபத்திய சிறுகதைகள் நிறம் மாறியிருப்பதை குறிப்பிட்ட போது 'மிகவும் திட்டமிட்டே ஆரம்ப நிலையில் எழுதின பாணியிலேயே' எழுதுவதாகச் சொன்னார்.

பிரகாஷ்ராஜ் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. நிறைய வாசிப்பவர் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ் இலக்கியம் படிக்க முயற்சிக்கிறாரா என்று தெரியவில்லை. "ராஸ லீலா" வை மாத்திரம் வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். சாப்பிட்டு விட்டு வருவதற்குள் விற்பனை மேஜை காலியாக கிடந்தது.

ஹொடரோவ்ஸ்கி (Jodorowsky) பற்றி சாருவின் கட்டுரை. ஒன்று இரண்டு


இந்த விழா பற்றிய நிர்மலாவின் கட்டுரை

Monday, September 25, 2006

சில முக்கிய(மற்ற) குறிப்புகள் - பகுதி 2

எம்.ஜி.சுரேஷ் எழுதிய நூலுக்கு "ஏலாதி" விருது

Post-modernism, Magical Realism, Cubism என்று மேற்கிலிருந்து இறக்குமதியான பல இலக்கிய வடிவங்களில் மாதிரிக்கு ஒன்றாக வைத்து புனைவுகள் எழுதியிருப்பவர் எம்.ஜி.சுரேஷ். இவை பரிசோதனை முயற்சிகள் என்ற அளவிலே ஏற்றுக் கொள்ளலாமே ஒழிய இவற்றிற்கான இலக்கிய தகுதிகள் எதுவுமில்லை என்பதுதான் என் அபிப்ராயம். ஆனால் மேற்குறிப்பிட்ட குழப்பமான இலக்கிய வடிவங்களை தமிழ் வாசகர்களுக்கு எளிமையான முறையில் விளக்கி கட்டுரைகள் எழுதியவர். அவர் எழுதிய நூலான "பின்நவீனத்துவம் என்றால் என்ன?" என்கிற முயற்சி எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்திருப்பதாக இலக்கிய வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. "பன்முகம்" என்கிற சிற்றிதழையும் இவர் நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தால், மேற்குறிப்பிட்ட நூலுக்கு "ஏலாதி" விருது கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடந்த விழாவொன்றில் வழங்கப்பட்டது. இந்நூலைப் பற்றி சுந்தர ராமாமி சொன்னது. "இந்த நூல் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்குமேயானால் தமிழ்ச் சிந்தனைச் சூழலே மாறியிருக்கும்." (நன்றி. இனிய உதயம்: செப்06)

இவர் எழுதிய இன்னொரு நூல் "இஸங்கள் ஆயிரம்". (மருதா பதிப்பகம், ரூ.120/-) "இஸங்களைப் பற்றிய போதிய புரிதல் தமிழ்நாட்டில் இல்லை என்பது வருந்தத்தக்கது. அதற்கான போதிய நூல்கள் தமிழில் வெளிவராததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே தமிழ்ச் சூழலில் இஸங்களைப் பற்றிய சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது." என்கிறது பதிப்பகத்தாரின் குறிப்பு.


உயிர்மையின் தலையங்கள் மற்றும் கட்டுரைகள்

மனுஷ்ய புத்திரனின் உரைநடையை கையாள்கிற விதத்தின் மீது என்க்கிருக்கிற பிரமிப்பை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். உயிர்மையில் அவர் எழுதும் தலையங்களைப் படிக்கும் பெரும்பான்மையான சமயங்களில் இது நிரூபணமாகியிருக்கிறது. செப்06 இதழில் இலங்கைப் பிரச்சினை குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சர்ச்சைக்குரிய குளிர்பானங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

.........'ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்ந்தால் இங்கு காஷ்மீர் போன்ற நிலை உருவாகும்' 'நாங்களும் துப்பாக்கி ஏந்திப் போராடுவோம்' என்பது போன்ற வெற்றுச் சவடால்களாலான 'காமெடி டிராக்குகள்' ஈழத் தமிழர்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. எந்த அரசியல் உள்ளீடும் அற்ற இந்தச் சவடால்களை மேடைகளில் முழங்குவதும் உடனே இவர்கள் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் செய்து விட்டார்கள், பிரிவினையை தூண்டுகிறார்கள் என்று சொல்லி கைது செய்யப்படுவதும் ஏதோ திருடன் போலீஸ் விளையாட்டைப் போல் மாறிவிட்டது. ......"

.....ஈழத் தமிழர்களை ஆதரிப்பவர்கள் என்றாலே அது புலிகளை ஆதரிப்பவர்கள் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஈழ மக்களை ஆதரிப்பதும் பிரபாகரனை ஆதரிப்பது இரண்டு வேறுபட்ட பிரச்சினைகள். ஈழத் தமிழர்கள்பால் நம்முன் இருப்பது உணர்வுபூர்வமான கடமைகள், அரசியல் நாடகங்கள் அல்ல. என்று மிக அறிவுப்பூர்வமாக இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

உண்மையில் இது குறித்த அக்கறை பெரும்பான்மயான அரசியல்வாதிகளுக்கோ, பொது மக்களுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் மீதான பார்வை தலைகீழாக திரும்பிவிட்டது துரதிர்ஷ்டவசமானது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வரும் அம்மக்கள், துப்பாக்கியைப் பிடித்து வருகிற சந்தேக பார்வையுடனேயே பார்க்கப்படுகிறார்கள். இது குறித்து உணர்ச்சி பொங்க எழுதும் மக்களில் எத்தனை பேர் அவர்களின் துயர் நீக்க களத்தில் இறங்கி போராடியிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அகதி முகாம்களுக்கு எத்தனை பேர் சென்று பார்த்திருப்பார்கள்? அல்லது ரவிகுமார் போல் ஆக்கப்பூர்வமான அறிக்கை ஒன்றை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பார்கள்?

மேலும் இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் காட்டுபவன்தான் உண்மையான தமிழன் என்று சில பேர்களால் ஒரு பிம்பம் கட்டப்படுகிறது. மனித நேயத்தின் எல்லையை ஏன் இப்படி எல்லைக் கோடுகளை கொண்டு குறுக்கிக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உலகம் முழுக்கவே போரினாலும் வன்முறைகளினாலும் பல அப்பாவிகளும், பெண்களும், குழந்தைகளும் சாகடிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் இஸ்ரேல்.

.... கோக், பெப்ஸி, போன்ற குளிர்பானங்கள் வெறும் குளிர்பானங்கள் மட்டும் அல்ல. அவை ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடுகள். இந்த பானங்களை அருந்துகிற ஒருவர் நாகரிக வாழ்வின் பிம்பங்களையும் அதனோடு சேர்ந்து அருந்துகிறார். இந்த பிம்பங்கள் ஊடகங்கள் வழியாகத் தொடர்ந்து பெருக்கப்படுகின்றன. .........

தாராளமயமாக்கலின் மோசமான எதிர்வினை உள்ளூர் தயாரிப்புகள் பன்னாட்டு நிறுவனங்களோடு ராட்சதத்தனங்களோடு மோத முடியாமல் முடங்கியதுதான். கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், நடிகர்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை பயன்படுத்திக் கொண்டு ப.நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்கின்றன. இவர்களின் தயாரிப்புகளுக்கு உள்ளூர் வளங்களும் மனிதசக்தியும் சுரண்டப்படுகின்றன. சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்துதல், குடிநீரை சுரண்டுதல், விளம்பரங்கள் மூலம் மக்களை மூளைச் சலவை செய்தல் போன்ற தீவினைகளில் ஈடுபடுகின்றன. மத்திய அரசு இவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களின் செயல்களை கட்டுப்படுத்துமாறு சட்ட மசோதா கொண்டு வந்தால் நல்லது. ஆனால் எளிய முறையில் விலைபோகும் நம் அரசியல்வாதிகள் அந்த பண முதலைகளின் கையூட்டுதல்களுக்கு மயங்காமல் இவற்றை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்செயலே.

()

எழுத்தாளர் திலகவதியை சிறப்பாசிரியராகக் கொண்டு "அம்ருதா" என்றொரு இடைநிலை இதழ் தொடங்கப்பட்டிருக்கிறது. திலகவதியின் படைப்புகள் குறித்து எனக்கு சிறப்பான அபிப்ராயம் ஏதுமில்லையென்றாலும், இந்தியாவின் மற்ற மாநில எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்து தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதின் மூலம் அவரின் பணி பாராட்டக்கூடியது. இந்த இதழின் செப்06 எனக்கு காணக்கிடைத்தது. பவித்ரா சீனிவாசனின் (இந்தப் பெயரில் வலைப்பதிபவரும் இவரும் ஒன்றுதான் என நம்புகிறேன்) சிறுகதை ஒன்றுடன் தொடங்கும் இவ்விதழில் பல சுவாரசியமான அம்சங்கள் உள்ளன. இன்றைய பெங்களூரை தன்னுடைய பழைய நாட்களோடு ஒப்பிட்டு வாஸந்தி எழுதியிருக்கும் கட்டுரை சுவை. அஸாமிய இலக்கியவாதியான இந்திரா கோஸ்வாமியன் நேர்காணல் சிறப்பாக பதிவாகியிருக்கிறது. மற்றவற்றை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

தொடர்பிற்கு: 5, ஐந்தாம் தெரு, சோமசுந்தரம் அவென்யூ, போரூர், சென்னை-600 116. போன்: 22522277. மின்னஞ்சல்: amruthamagazine@yahoo.com