சில இல்லத்தரசிகள் ‘கேட்டரிங்’ வகுப்பு போன்ற அலங்கார கற்றல்களுக்கு செல்வதில் அனுகூலங்களை விடவும் ஆபத்துக்கள்தான் அதிகம் உண்டு.
என் நண்பரின் அனுபவம் இது. (இப்படி அநாமதேயமாக எழுதுவது ஒரு சம்பிரதாயம்) அவருடைய வீட்டம்மணி இது போன்ற சமையல் வகுப்புகளுக்கு செல்வதில் இருந்து அடிப்படையான உணவுகளைச் செய்வதை பெரிதும் விட்டு விட்டாராம்.
ஆரஞ்சு பழத்தின் தோலில் இருந்து பொரியல், வெங்காயத் தோல் ரசம் என்று நாம் வழக்கமாக குப்பையில் எறியும் அனைத்துப் பொருட்களையும் வைத்து ‘ரீசைக்கிள் மெனு’ தயாரித்து தொடர்ந்து கொடுமைப் படுத்தியதில் மனிதர், ‘ஆபிஸ் டூர்’ என்று ஒரு வாரம் எஸ்கேப்.
*
அதே ஆசாமியின் இன்னொரு பரிதாப கதை.
அந்த ஆசாமி அன்றைய காலையில் கம்பெனியின் முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. கிளம்பத் தாமதம் ஆகி விட்டதால் பரபரத்துக் கொண்டிருந்தார். ‘டிபன் ஏதாவது இருக்கா?” என்று மனைவியிடம் அவசரமாக கேட்க, ‘ஓ.. இட்லி செஞ்சிருக்கேன்” என்று உடனே பதில் வந்தது.
ஆனால் பதில் வந்து அரை மணி நேரம் ஆகியும் மேஜைக்கு அந்த வஸ்து வந்து சேரவில்லை. மனிதர் டென்ஷன் ஆகி விட்டார். செல்லும் வழியில் அவசரத்திற்கு எதையும் சாப்பிட வழியில்லை. மேலும் வெளியுணவு அவருக்கு ஒத்துக் கொள்ளாது.
பொறுமையை இழந்து சமையல் அறைக்குள்ளேயே பாய்ந்து விட்டார் மனிதருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஓர் அழகான வெள்ளை நிற தட்டின் மையத்தில் இரண்டு இட்டிலிகள் மிக நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. வைக்கப்பட்டு அரைமணி நேரம் ஆகியிருக்கும் போல. அதன் மீது அழகான டிசைனில் கேரட் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன.
மனைவி இன்னமும் எதையோ தேடிக் கொண்டிருக்க “என்னதான் தேடுறே?” என்று கேட்டு அந்த அழகியல் சூழலில் கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார், இந்த அவசரக் குடுக்கை.
“கொஞ்சம் இருங்க.. தட்டு ரெண்டு பக்கமும் கொத்தமல்லி இலையை வெச்சா பார்க்க ரொம்ப அழகா இருக்கும். நேத்து கிளாஸ்ல சொல்லிக் கொடுத்தாங்க” என்றார் மனைவி சாவசாசமாக.
“மண்ணாங்கட்டி.. மனுஷன் இங்க அவசரத்துல பறந்துட்டு இருக்கான்.. நீ வேற…நேரம் காலம் தெரியாம. சரி.. தொட்டுக்க ஏதாவது சட்னி இருக்கா? டைம் ஆச்சு” என்று கேட்டிருக்கிறார் இந்த அப்பாவி.“
“அச்சச்சோ.. அதை மறந்துட்டனே” என்று நிதானமாக பதில் வந்தது.
‘சரி.. சரி… அந்த இட்லியையாவது கொடு. பிட்டுப் போட்டுக்கிட்டு கெளம்பறேன்” என்று பரபரத்த கணவனை நோக்கி கையமர்த்திய மனைவி சொன்னதாவது:
“என்ன அவசரம்?! ஒரே நிமிஷம் பொறுங்க.. தட்டோட என்னையும் சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்துட்டு தர்றேன். இன்ஸ்டால போடணும். எவ்ள அழகா இருக்குல்ல?”
suresh kannan