Thursday, April 29, 2021

ஓர் உன்னதமான சிறுகதை - பா.திருச்செந்தாழை


 

சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக இதைச் சொல்வேன்.

(கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கவும்)

விலாஸம்

 

ஜெயமோகனின் தளத்தின் வழியாகவே இந்தச் சிறுகதையை வந்து அடைந்தேன். இனி பா.திருச்செந்தாழையின் இதர சிறுகதைகளையும் தேடி வாசித்தேயாக வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தந்து விட்டது.

*

இனி கதையைப் பற்றிய என் கருத்துக்கள்:



கால மாற்றங்களில் பேரரசுகளே கவிழ்ந்து வேறு புதிய அரசுகள் அதிலிருந்து முளைக்கும் போது தனி மனிதர்களும் அவர்களின் சிறிய சாம்ராஜ்யங்களும் எம்மாத்திரம்?

ஒரு புதிய முதலாளி, நொடிந்து கொண்டிருக்கும் தன் பழைய முதலாளியைச் சந்திக்கச் செல்வதுதான் இந்தக் கதையின் மையம். இது ஒருவகையான சீண்டல். தன்னுடைய மகத்தான வளர்ச்சியை பழைய முதலாளிக்கு மீண்டும் நினைவுப்படுத்தும் ஒரு விளையாட்டு. ஏனெனில் புதிய முதலாளி அத்தகைய அவமதிப்புகளையும் சவால்களையும் கடந்துதான் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார். எனவே இதுவொரு மெல்லிய பழிவாங்கல். தன்னுடைய விழுப்புண்களை தன்னிச்சையாக தடவிப் பார்க்கும் மீறவியலாத உணர்வு.


ஆனால் இதை அவரால் மனநிறைவுடன் செய்ய முடிந்ததா என்பதில்தான் இந்தச் சிறுகதை உச்சம் பெறுகிறது.

*

பொதுவாகவே திறமையான வேலைக்காரர்களை நுண்ணுணர்வு கொண்ட முதலாளிகள் உள்ளுக்குள் அஞ்சுவார்கள். இன்னொரு பக்கம் அவனது திறமையை உள்ளே வியந்து கொண்டே இருப்பார்கள்.


‘இவன் ஒரு நாள் இங்கிருந்து வெளியேறி தனக்குப் போட்டியாகவோ அல்லது தன்னை மீறியோ செல்வான்’ என்கிற உணர்வும் அச்சமும் அவர்களுக்கு இருந்தபடியே இருக்கும். எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டியபடியே இருப்பார்கள்.  அவனது தன்னம்பிக்கையை குலைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவனது ‘வளமான’ வருங்காலம் குறித்த ஆசையையும் கூடவே காட்டியபடி இருப்பார்கள். குதிரைக்கு முன்னால் காரட் கட்டி தொங்க விட்டு வேகமாக ஓட வைக்கும் உத்தியைப் போல.

போலவே திறமையான தொழிலாளியும் ஒரு நல்ல முதலாளியை சரியாக அடையாளங்கண்டு கொள்வான். அவரது திறமையை உள்ளுக்குள் பிரமிப்பான். போலிப் பணிவுகளைக் கூட்டுவான். அங்கிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள முயல்வான். ஆனால் இன்னொரு பக்கம் தன்னுடைய உழைப்பின் பலனெல்லாம் முதலாளிக்குச் செல்கிறதே என்கிற மனஉளைச்சலும் ஏக்கமும் அவனுக்குள் இருந்தபடியே இருக்கும். இதுவே அவனது வருங்காலத் திட்டங்களுக்கு அடித்தளமாக இருக்கும்.

ஆக.. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருப்பது ஒருவகையான love & hate உறவு. எத்தனை காலம் ஆனாலும் இடம் மாறினாலும் இந்த விளையாட்டை அவர்கள் ஆடியபடியேதான் இருப்பார்கள்.

*

ஒரு திறமையான தொழிலாளியை தந்திரம் மிக்க முதலாளிகள் மட்டம் தட்டி தொடர்ந்து அடிமையாக்குவது என்பது எல்லா இடத்திலும் இல்லை. சில சமூகங்களில் – குறிப்பாக நாடார்.. மார்வாரி போன்வற்றில் – திறமையான தொழிலாளிகளைத் தட்டிக் கொடுத்து வளர்த்து ஒரு கட்டத்தில் அவன் சொந்தமாக இயங்குவதற்கான பாதையையும் அமைத்துத் தருவார்கள். ஆனால் அந்த தொழிலாளி சொந்த சாதியைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான தகுதியாக இருக்கும்.

*

கரைந்து கொண்டிருக்கும் பழைய முதலாளியின் பெருமிதங்கள், உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புது முதலாளியின் உளவியல் ஆட்டம் என்று இந்தச் சிறுகதை பல்வேறு நுட்பமான விவரணைகளைக் கொண்டுள்ளது.

… யாவாரம்னா போர்தான. காலென்ன தலை என்ன? பள்ளத்துக்குப் பக்கத்துலதான மேடுன்னு ஒன்னு உருவாகுது” என்றார். குழந்தையான சிரிப்பின் வெளிச்சம் சின்னச் சின்னச் சுடர்களாய் குறைந்துகொண்டிருக்க, “நல்ல தொழிலாளிக்கு திறமை எவ்வளவு முக்கியமோ அதை அவனோட மூளைக்குச் செல்லவிடாம தடுக்கிற சூட்சுமம் முதலாளிக்கு முக்கியம்னு அப்பா சொல்வாரு.”…

என்பது போன்ற அபாரமான வரிகள் இந்தச் சிறுகதையின் வாசிப்பனுபவத்தை உன்னதமாக்குகின்றன. சிறுகதை முடியும் இடம் அற்புதமானது. புதிய முதலாளி எத்தனைதான் உயர்ந்தாலும் அவனுக்குள் இருக்கும் ஆதாரமான தொழிலாளி சாகவே மாட்டான் என்பது கச்சிதமாக உணர்த்தப்படுகிறது.

இதைப் போலவே பழைய முதலாளியின் முன் தன் செல்வாக்கைக் காட்டி சீண்டலைச் செய்து முடித்து விட்டாலும் அவரின் வீழ்ச்சி புதிய முதலாளிக்குள் ஒரு நெருடலையும் இனம் புரியாத சோகத்தையும் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. ஏனெனில் இந்த வட்டமும் என்றேனும் திரும்பலாம்.

மிக அபாரமான சிறுகதை. கட்டாயம் வாசித்துப் பாருங்கள். 


ஜெயமோகனின் பதிவு

 


suresh kannan

No comments: