லோகேஷ் வெகுசன வார்ப்பில் உருவாகி வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர்தான் என்றாலும் அதில் சற்று தனித்து பிரகாசிக்கக் கூடியவர்களில் ஒருவராக இருந்தார். மாநகரம், கைதி போன்றவை அதற்கு சிறந்த சாட்சியங்களாக இருந்தன. ஆனால் இது போன்ற இயக்குநர்களுக்கு நேரும் விபத்து என்னவெனில், அவர்கள் முன்னணி நாயகர்களிடம் சென்று சரணடையும் போது கூடவே அவர்களின் வீழ்ச்சியும் தன்னிச்சையாக துவங்கி விடுகிறது. துரதிர்ஷ்டமாக லோகேஷிற்கு நேர்ந்ததும் இதுவே.
ரிடையர்ட் ஆன கமர்சியல் இயக்குநர்கள் சக்கையாகி ஓய்ந்த பிறகு அவர்களிடம் எதுவும் பெயராது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்னணி நடிகர்கள், தடம் மாறி இளம் இயக்குநர்களின் திறமைகளை உறிஞ்ச ஆரம்பிக்கிறார்கள். இந்த வரிசையில் ஒரு சமீபத்திய பலியாடு லோகேஷ்.
முன்னணி நாயகர்களுக்கு படம் செய்யும் போது இது போன்ற இளம் இயக்குநர்கள் எதிர்கொள்ளும் பெருங்குழப்பம் என்னவெனில், அது தன் படமாக இருக்க வேண்டுமா அல்லது சம்பந்தப்பட்ட ஹீரோவின் வணிக பிம்பத்திற்கு இணக்கமாக இருக்க வேண்டுமா என்பதுதான். ஏனெனில் இதன் பின்னால் உள்ள பெரும் வணிகம் அவர்களை குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் ஆழ்த்துவது இயல்புதான்.
ஏனெனில் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் அது தொடர்பான சமாச்சாரங்கள் இல்லாவிடில் அதை உத்தரவாதமாக எதிர்பார்த்து வரும் நடிகரின் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள். இது சார்ந்த அச்சமும் சங்கடமும் இந்த இயக்குநர்களிடம் உள்ளது.
*
ஆனால், வில்லனிடமிருந்து தன் கற்பைப் காப்பாற்றிக் கொள்ள போராடும் நாயகி போல, ‘மாஸ்டரில்’ தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள லோகேஷ் இயன்ற வரை போராடியுள்ளார். அதற்கான உழைப்பும் தடயமும் மாஸ்டரில் ஆங்காங்கே நிச்சயம் உள்ளது. ஆனால் இவை மட்டுமே போதுமா? ஒட்டு மொத்த அனுபவத்தில் இது ‘வழக்கமான’ விஜய் படமாகவும் இல்லாமல் லோகேஷின் படமாகவும் இல்லாமல் நடுவாந்திரத்தில் பரிதாபமாக தத்தளிக்கிறது.
குடிப்பழக்கமுள்ள ஹீரோ, அதற்கான பின்னணிக்காரணங்களை விளக்காமல் இருப்பது, ஆனால் அந்தக் காரணங்களை ஜாலியாக உருவாக்கியிருப்பது, வழக்கமான டூயட் பாடல்கள் இன்மை போன்றவை குறிப்பிடத்தக்க வித்தியாசமான அம்சங்கள்தான். இப்படியாக சம்பிரதாயமான தடயங்கள் இல்லாமல் தன் திரைக்கதையை உருவாக்க கடும் முயற்சி எடுத்திருக்கிறார் லோகேஷ். விஜய்யும் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம்.
போலவே வணிகமதிப்பு கொண்ட நாயகனாக இருந்தாலும் திரைக்கதையில் தன் பங்கு சிறப்பாக இருந்தால் அது என்ன வேடமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் விஜய் சேதுபதியின் ஈடுபாடும் பாராட்டத்தக்கது. இந்த அற்புதமான சந்தர்ப்பத்தையும் கலவையையும் லோகேஷ் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டாரா அல்லது வணிக நெருக்கடிகளால் தடுமாறி விட்டாரா என்று தெரியவில்லை. படம் ‘பரோட்டா மாஸ்டராகி’ விட்டது.
*
இளம் சிறார்களை குற்றவாளிகளாக வளர்த்தெடுத்து பயன்படுத்தும் மாஃபியா தொழில் என்பது நெடுங்காலமாகவே உள்ள சமூகக் குற்றம்தான். சமீபத்தில் வெளியான ‘திமிரு பிடிச்சவன்’ திரைப்படம் கூட இந்தப் பின்னணியை வழக்கமான சினிமா பாணியில் பயன்படுத்தியுள்ளது. ஏறத்தாழ லோகேஷூம் அதையே பயன்படுத்தியுள்ளார்.
இன்றைக்கு கொலையாளிகளாக ஊடகச் செய்திகளில் அடிபடுபவர்களின் புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும். அவர்களின் வயது என்பது ஏறத்தாழ இருபதுக்குள்தான் இருக்கும். இதுவொரு தீவிரமானதொரு சமூகப் பிரச்சினை.
காவல்நிலையங்களும் சிறைக்கூடங்களும் நீதிமன்றங்களும் குற்றத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அவற்றைப் பயிற்சி மையங்களாக மாற்றி வைத்திருக்கின்றன. ஏனெனில் சமூகத்தில் நிகழும் குற்றங்கள்தான் அவர்களின் முதலீடு. அவை தொடர்ந்து நிகழ்ந்தால்தான் அவர்கள் லாபம் சம்பாதிக்க முடியும்.
ஆனால் இப்படியொரு தீவிரமான பிரச்சினையை வழக்கமான சினிமா பாணியிலேயே லோகேஷ் கையாண்டிருப்பது துரதிர்ஷ்டமானது. கூர்நோக்கு பள்ளி கூடம் கூட சினிமா செட் என்று நன்றாகத் தெரியுமளவிற்கு அத்தனை போலித்தனமான காட்சிகளால் அவை நிறைந்துள்ளன. ‘மகாநதி’ திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சிறை மற்றும் அதன் காட்சிகளின் தீவிரத்தை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். ‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகள் எத்தனை அமெச்சூர் என்று.
*
வணிக சினிமாவின் எல்லைக்குள்ளேயே எவ்வளவோ செய்யலாம். ஆனால் நாயகனை முன்னிறுத்துவதிலேயே லோகேஷ் கவனமாக இருந்துள்ளது துரதிர்ஷ்டம்.
எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க, கமலின் ‘நம்மவர்’.. ஏன் சமீபத்திய ரஜினியின் ‘பேட்ட’ என்று பல திரைப்படங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. சிறார் சீர்திருத்த பள்ளியின் பின்னணியில் பாலகுமாரன் ஒரு நாவல் எழுதியுள்ளார். அதில் இருந்த நம்பகத்தன்மையும் விறுவிறுப்பும் கூட இதில் இல்லை.
இதர படங்களில் இருந்து காப்பியடிக்கும் சமாச்சாரத்தை படத்தின் உள்ளேயே நிறைய இடங்களில் கிண்டலடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. ஒருவகையில் இயக்குநரின் சுயவாக்குமூலம் என்று கூட இதைச் சொல்லலாம். மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசி விட்டார் போலிருக்கிறது.
அதற்காக விஜய் ஒவ்வொருமுறையும் தன் ‘காதல் கதை’யை – கிளைமாக்ஸ் முடிந்த பின்னரும் கூட – அவிழ்த்து விடுவது ஓவர். அதிலும் அந்த ‘வாடா என் மச்சி’ நடனம் – ஆகக் கொடூரம்.
‘இரும்புக்கை மாயாவி’யாக விஜய்சேதுபதி ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார். ஆனால் சிமெண்ட் மூட்டையை குத்துவது போல எதற்கெடுத்தாலும் அவர் கையை ஓங்கிக் கொண்டு வருவது காமெடியாக இருக்கிறது.
*
லோகேஷ் என்கிற இளம் திறமைசாலி, இப்படி ‘கொத்துப் பரோட்டா’ மாஸ்டராக பலியாகியிருப்பது காலத்தின் கோலம்.
suresh kannan
5 comments:
பெரும்பாலனவர் களின் மனத்தில்
உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள். இருந்தாலும் விஜயின் நடிப்பு அபாரம். அதையும் கொஞ்சம் பாராட்டி இருக்கலாம்.
சார்... அந்த பாலகுமாரன் நாவலின் பெயர் சொல்லுங்க சார்...
சார் அந்த பாலகுமாரன் நாவல் பெயர் சொல்லுங்கள் சார் நானும் படித்திருக்கிறேன் ஆனால் மறந்து விட்டது
பலா மரம்
ஆக மொத்தத்தில் இது மாஸ்டர் இல்லை பரோட்டா மாஸ்டர் என்ற உண்மையை ஊரறிய சொல்லிவிட்டீர்கள்...
Post a Comment